கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: கலைமகள் குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 22,940 
 
 

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நேற்றிரவு வெகு நேரம் படித்துக் கொண்டிருந்தேன். புஸ்தகம் முடிந்துவிட்டது. வாணி தரிசனம் முடிந்ததும் பிருகிருதி தேவியைக் காண வெளியே சென்றேன். ஆகாயம் ஓர் எல்லையற்ற மைக் கூண்டு. விளையாட்டுத்தனமாய் ஏதோ தெய்வீகக் குழந்தை அதைக் கவிழ்த்து விட்டது போலும்! ஒரே இருள் வெள்ளம்.

மரங்களெல்லாம் விண்ணைத் தாங்கும் கறுப்புத் தூண்கள். மின்னும் பொழுதெல்லாம் வானம் மூடிமூடித் திறந்தது. கண் சிமிட்டிற்று. நான் கண்ணாமூச்சி விளையாடினேனோ அல்லது மின்னலா?

திரும்பி வீட்டிற்குள் வந்து பாயைப் போட்டேன். துயில் திரை கண்களின் மேல் படர்ந்தது, ஆமைக் கால்களைப் போல், என் புலன்கள் சுருங்கி உறங்க ஆரம்பித்தன. மனத்தின் சுடர்விழி மட்டும் முழுதும் மூடவில்லை. வௌவால் முகத்தினருகில் அடித்தது. கண் திறந்தேன். எதிரில் ஆகாயமளாவி நின்றாள் சிவசக்தி. தலைமயிர் வெற்றிக் கொடிபோல் பறந்தது. கண்ணினின்று கொஞ்சும் அழகு. கையில் கொடி மின்னலைப் பழிக்கும் வைரவாள். என்னைப் பார்த்துச் சிரித்தாள். கலகலவென்ற சிரிப்பு உலகெங்கும் பரவியது. உடல் மயிர்க் கூச்செறிந்தது.

சிறிது நேரம் கழிந்தது. அலையோய்ந்த கடல்போல் சற்று நெஞ்சம் ஆறுதலடைந்தது. போர்வையை எடுத்தேன்; பளீரென்று ஒரு மின்னல் உலகை ஒளிரச் செய்தது. அவ்வொளிர் “சொக்கப்பனையில்” எதிரே கண்ணில் பட்டது. ஒரு மரம் – ஒரு வெறும் நெட்டைத் தென்னை! “என்ன ஆச்சர்யமென நினைத்தேன்”.

– கலைமகள் – ஜூன் 1960

– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *