தயக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 12, 2025
பார்வையிட்டோர்: 814 
 
 

(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆறுமுகம் சோகமாக அமர்ந்திருந்தார்.

“என்னண்ணே ஒரு மாதிரியா இருக்கிறீங்க?” என்று கேட்டேன்.

“ஒண்ணுமில்லையே…” என்றார்.

“ஒன்றுமில்லையா, நீங்க என்ன நினைக்கிறீங்கணு எனக்குத் தெரியும்”

அவர் வியப்பு மேலிட என்னைப் பார்த்தார்.

“எனக்குத் தெரியாதுணு தானே நினைக்கிறீங்க? ஊருல இருந்து உடனடியாக புறப்பட்டு வரச்சொல்லி கடிதம் வந்திடுச்சே. பயணத்தை வேற வச்சிட்டோமே என்றுதானே நினைக்கிறீங்க?”

அவர் சிரித்தார்.

“இம்…இன்னும் பத்து நாளைக்குள்ளே ஊர் போயி சேந்திடுவீங்க. அப்புறம் என்னப்பத்தி எங்கே நினைக்கப் போறீங்க? அதுவும் உங்க மனைவி பக்கத்துல இருக்கும் போது” என்று சிரித்தபடி சொன்னேன்.

அவர், “ச்சே அப்படி எல்லாம் நினைக்காதே” என்றார். சோகம் மறைந்து மகிழ்ச்சி அவர் உள்ளத்தில் ஏற்பட்டது. ஆனால் அது கொஞ்ச நேரந்தான் நீடித்தது. மறுநொடியே அவர் முகம் மாறியது “கப்பல் டிக்கட்டை விற்றுவிடுவோம். எனக்கு இப்ப ஊருக்குப் போகவே மனமில்லை” என்றார்.

“அண்ணே, உங்களுக்கும் நாற்பது வயதாகிவிட்டது. இந்தப் பயணம் நாலு வருசமா ஊருக்குவேற போகாம இருக்கிறீங்க; குழந்தைக் குட்டி இருந்தாலும் பரவா இல்லேனு இருக்கலாம். அதுவும் இல்லே. உங்க அம்மாவுக்கு வேற உடம்புக்குச் சரியில்லேணு எழுதியிருக்கிறாங்க! இந்த நேரத்திலே ஊருக்கும் புறப்பட்டு வரச் சொல்லி எழுதியிருக்கிறாங்க. நீங்களும் பயணத்தை வச்சுட்டீங்க. இனிமே மாத்துறது அவ்வளவு நல்லதில்லை” என்றேன்.

“மாத்திப்புடறதுதான் நல்லது. ஏன்னு கேட்டா கருப்பன் செட்டியாருக்கு இன்னும் ஒரு கிஸ்திகூடக் கொடுக்கலே. இதைவேற வாங்கி ஊருக்கு அனுப்பிப் புட்டேன். இப்படி எழுதுவாங்கணு தெரிஞ்சா அனுப்பி இருக்க மாட்டேன். அந்தக் கடன் முடியாம எப்படி போறது? செட்டியாருக்கிட்டே போயி ஊருக்குப் போய் விட்டு வந்து கட்டுறேணு சொன்னா ஒத்துக்கொள்ளு வாரா? நாணயமா நடந்துட்டு இந்த நேரத்திலே சொல் லாமக் கொள்ளாமல் ஊருக்குப் போறதும் சரியில்லே. ஏமாத்திட்டுப் போயிட்டான் என்று சொல்லுவாறு. எனக்கு மானந்தான் பெரிசு” என்றார்.

“அண்ணே இப்ப அவர் கடனை நீங்க எடுத்துக்கிற நினைச்சாத்தானே தப்பு. அப்படி நினைக்கலேயே. ஊருக்குப் போயிட்டு வந்துதான் கட்டப் போறீங்களே! அப்புறம் என்ன? அதுக்கிடையில இங்கு வந்தாருனா. என்னிடம் சொல்லச் சொல்லிட்டுப் போயிருக்காரு. வந்ததும் கட்டுறேனு சொன்னாரு என்று சொல்லி அவரைச் சமாதானப்படுத்தி விடுகிறேன்.”

என் கண்களில் கள்ளிப்பெட்டிபட்டது. அ தைப் பார்த்ததும் அவர் மனைவிக்கு வாங்கிய புடவைகள், மற்ற துணிமணிகளும், அறுபது வயதுத் தாய்க்கு வாங்கின சாமான்களும் நினைவுக்கு வந்தன. அவர்கள் ஆறுமுகத்தை வரச்சொல்லி நெஞ்சுருக எழுதியிருந்த கடிதமும் மனக்கண் முன் தோன்றியது.

“இவ்வளவு தூரம் ஏற்பாடு செய்த பிறகும் நாளைக்குக் கப்பல் என்பதையும் மறந்துவிட்டுப் பேசுறீங்களே! நீங்க தைரியமா புறப்பட்டுப் போங்க, எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கிறேன்” என்று எடுத்துச் சொன்னேன்.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவருக்கு மன நிறைவு ஏற்படவில்லை. “கருப்பன் செட்டியார் எனக்கு எவ்வளவோ உதவி செஞ்சிருக்காரு. அவர் செய்த உதவிய மறந்துட்டுச் சொல்லாமல் போறது நல்லதில்லே! அவருக்கு நான் ஊருக்குப் போறது தெரிஞ்சா, காசை வச்சுட்டு ஊருக்குப்போனு சொல்லுவாறு. அதுமட்டுமில்லே, பட்டை பட்டையாகத் திருநீறு பூசியது எனக்குப் பட்டை நாமம் போடத்தானா என்று நாலு கேள்வி நறுக்கு நறுக்குணு கேட்டாருனா அப்ப முகத்தே எங்கே வச்சுக்கிறது?” என்று கேட்டார்.

ஊர் பயணத்தைப் பற்றிப் பேசாமல் கருப்பன்செட் டியாரிடம் வாங்கிய கடனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கவே நேரம் சரியாக இருந்தது. இறுதியில் அவரைச் சமாதானப்படுத்தி தைரியத்தை வரவழைக்கப் போதும் போதும் என்றாகிவிட்டது.

அவரும் மனத்தை உறுதிப்படுத்திக்கொண்டு “சரி போயிட்டு வந்து கட்டலாம். இப்போ அவருக்குத் தெரியாமல் ஊருக்குப் போறதுதான் நல்லது” என்றார். என் மனம் குளிர்ந்தது. தூக்கமும் கண்ணைக் கொண்டுபோய் செருகியது. விடிந்தால் கப்பல்.


கிளிஃபொர்ட் துறைமுகம், சிறிய துறைமுகந்தான். அங்கு படகுகள்தாம் அணையும். ரிக்ஷா அந்தத் துறைமுக வாயிலில் போய் நின்றது. நானும் ஆறுமுகமும் ரிக்ஷாவை விட்டு இறங்கினோம்.

நான் கோரைப் பாயில் கட்டியிருந்த கயிற்றைப் பிடித்து படுக்கைகளை கீழே இறக்கி வைத்தேன். ஆறுமுகம் அரைக்கால் காக்கிச் சட்டைப் பைக்குள் கையை விட்டு காசுப்பையை எடுத்தார். ரிக்ஷாக்காரரிடம் நாங்கள் பேசிவந்தபடி ஒரு வெள்ளியைக் கொடுத்தபடி, “நன்றி” என்றார்.

ரிக்ஷாக்காரர், “நன்றிங்க” என்று முகத்தில் முல்லை மலரச் சொல்லிவிட்டு ரிக்ஷாவின் மிதிக்கட்டையை மிதித்தார். ரிக்ஷா நகர்ந்தது.

நான் இறக்கி வைத்த படுக்கையைத் தூக்கிக் கொண்டுபோய் உள்ளே ‘தக்’ என்று போட்டேன். எனக்கு ஆத்திரந்தான். பிறகு இருக்காதா என்ன?எனக்குப் பின்னால் வந்த ஆறுமுகம் என்னைப் பார்த்தும் பார்க்காதவரைப் போல் முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

எங்களுக்கு முன் அங்கு போய் நின்று கத்துங்கடலைப் பார்த்துக்கொண்டு நின்றவர்களும், பளிங்கு நீரில் தெரிந்த மீன்களைப் பார்த்துப்பேசிக்கொண்டு நின்றவர்களும் ‘தக்’ எனும் ஒலிகேட்டு என்னைப் பார்த்தனர்.

நான் அவர்களைச் சட்டை செய்யாமல் படுக்கையைப் போட்டுவிட்டு அங்குள்ள கடிகாரத்தைப் பார்த்தேன். மணி எட்டாக பத்து நிமிடம் இருந்தது; படகு வர இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது என்று எண்ணிய படி ஆறுமுகத்தைப் பார்த்தேன். அகத்தில் உள்ளது முகத்தில் தெரிந்தது. நான் அவரிடம் எதுவும் பேசாமல் பளிங்கு நீரில் திரிந்த மீன்களைப் பார்த்தேன். ஆறுமுகத் திடம் பேசிக்கொண்டிருப்பதைவிட மீனைப் பார்த்துக் கொண்டிருப்பது நல்லது என்று என் மனத்தில் ஓடியது.

“ட்ர்…” எனும் இரச்சல் கத்தும் கடல் ஒளியோடும் கடலோரச் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தின் இரைச்சலோடும் கலந்தொளித்தது. ஒளிவந்த பக்கம் பார்த்தேன். இயந்திரப் படகு எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது.

ஆறுமுகமும் தொங்கிய முகத்துடன் படகு வந்த திசையை ஏறிட்டுப் பார்த்தார். எனக்கு அவரைப் பார்கப் பார்க்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.

கொஞ்ச நேரத்தில் படகு கரையில் வந்து அணைந்தது. எல்லாரும் படுக்கையுடன் படகில் ஏறினர். நாங்ககளுந்தான்.

படகு பற்பல அலைவட்டங்களை உருவாக்கிவிட்டுத் திரும்பியது. திரும்பியதும் நீரை இருகூறாகக் கிழித்துக் கொண்டு விரைந்து சென்றது.

படகில் இருந்தவர்கள் மகிழ்ச்சியில் ஏதேதோ “காய் முய்” என்று இரைந்து பேசிக்கொண்டிருந்தனர்.

படகு நங்கூரம் இட்டு நின்ற கப்பலை அடைந்துவிட் டது. நாங்கள் படகிலிருந்து கப்பலுக்குச் சென்றோம்.

“பூங்…” கப்பலின் சங்கொலிதான் இது. கப்பலின் புகை பின்னே செல்ல கப்பல் பங்ரான் கல் அள்ளும் மலையை நோக்கிச் சென்றது.

“டும்… டுமார்…” வானமே இடிந்து விழுந்தது. பங்ரான் மலையில் கல் உடைக்கும் வெடியோசைதான் அப்படிக் கேட்டது.

பங்ரான் மலையை அடைந்ததும் நாங்கள் கப்பலை விட்டு இறங்கினோம்.

“கட்… கட…கட்… கட” கல் வாரியின் ஒலியும், “கட கட” கப்பல் ஓஞ்சியிலிருந்த கப்பிக் கட்டையின் ஒலியும் காதைத் துளைத்தன. நாங்கள் கண்ணாடி நாரில் செய்த தலைக்கவசத்தை அணிந்துகொண்டு வேலையில் ஈடுபட்டோம்.

மரமா, மட்டையா? ஊம்! அதெல்லாம் அங்கில்லை. கதிரவன் எங்களைச் சுட்டெரித்துக் கொண்டிருந்தான். எங்கள் உடம்பிலிருந்து வெளியே வந்தவியர்வைக்கடலை மேலும் நிரப்பிக்கொண்டிருத்தது. நெற்றி வியர்வை கல்லில் விழ, கற்களை அள்ளி கல் வாரியில் கொட்டினோம். கல்வாரி கப்பலை நெருங்கியதும் கல்வாரியிலிருந்த கற்களை கப்பலில் உள்ள ஓஞ்சி தூக்கித் தன் பெருத்த வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தது.

மாலை வேளை.

வெயில் சற்று தாழ்ந்திருந்தது. எங்கள் உடம்பெல்லாம் சாம்பல் பூத்தாற்போல் இருந்தது. நான் ஆறுமுகத்தைப் பார்த்தேன். அவர் சோர்ந்த மூகத்தோடு தான் வேலை செய்து கொண்டிருந்தார். களைப்பு வேறு. ஆளே அடையாளந் தெரியவில்லை என்றாலும் கல் இயந்திரத்தைப் போல் இயங்கிக் கொண்டுதான் இருந்தார்.

அவர் வேலை செய்யத் தொடங்கிவிட்டால் சொல்ல வேண்டியதே இல்லை. இரண்டு பேர் செய்யக்கூடிய வேலையை அவர் ஒருவர் செய்துவிடுவார்.

“இறைச்சி, மீனு, முட்டை அது இதுனு திங்கிறீங்களே. வெறும் மரக்கறி சாப்பிடுற எங்கூட உங்களாலே வேலை செய்ய முடியலேயே. எப்பப் பார்த்தாலும் மாத்திரைய வேறு போட்டு விழுங்கிறீங்க. நான் என்ன அப்படியா திங்கிறேன். நல்ல மரக்கறிதான் சாப்பிடுறேன். தெய்வத்தைக் கும்பிடுறேன். ஒழுக்கத்தோட இருக்கிறேன். இது மூனும் இருக்கிறவரைக்கும் என் உடம்பு இப்படித்தான்” என்று அடிக்கடி சொல்வது நினைவுக்கு வருகிறது.

நல்ல மனிதன்தான் இருந்தாலும் கப்பல் பயணத்தை வைத்துவிட்டு இப்படி வேலைக்கு வந்ததை நினைக்கும் போது அவர் மேல் எல்வளவு அன்பு இருந்ததோ அவ்வளவும் வெறுப்பாக மாறியது. கல்லை அள்ளி கல் வாரியில் கொட்டினேன். என் மனம் கல் அள்ளி அள்ளி காய்த்திருந்த கையைப்போல் இருந்தது.

அவர் என்னருகில் வந்தார். நான் பேசாமல் நின்றேன்.

“ஏந்தம்பி! என்னை வெறுக்கிறே. பேசமாட்டேங்கிறீயே. என் மனம் என்ன கல்லா? நீ பேசாதது எனக்கு என்னமோ மாதிரி இருக்கு. எனக்கென்னமோ கருப்பன் செட்டியாருக்கிட்ட வாங்கின கடனைக் கட்டாமே ஊருக்குப் போக மனமே இல்லை” என்றார்.

நான் எதுவுமே பேசாமல் அங்கிருந்து அகன்றேன். கொஞ்சத்தூரஞ் சென்றதும் அவர் சொல்லியது என் காதுகளில் விழவில்லை, ஓஞ்சியின் ஒலி காதைத் துளைத்தது.

பங்ரான் மலையில் இரண்டு மூன்று நாட்கள் பறந்தன.

ஏறத்தாழ பதினையாயிரம் டன் எடையுள்ள கற்களைக் கப்பலில் ஏற்றிவிட்டோம். ஏற்றியதும் கப்பல் கற்களை ஏற்றிக்கொண்டு ஜப்பானை நோக்கி புறப்பட்டது. திரும்பி வரும்போது அலுமினியப் பாத்திரங்களாகக் கொண்டு வரத்தான்.

நாங்கள் வீடுநோக்கிப் படகில் பறந்துகொண்டிருந்தோம். பலர் பதினையாயிரம் டன் எடையுள்ள கற்களைக் கணக்குப் போட்டு ஆளுக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று கூட்டிக்கழித்து வகுத்துக் கொண்டிருந்தனர். நானும் தெரிந்து கொள்ளும் ஆவலில் கணக்கைக்கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். வகுத்துப் பார்க்கும் போது ஆளுக்கு நூற்று ஏழு வெள்ளி இருபத்தைந்து காசு வந்தது.

எல்லோருக்கும் ஒரே மகிழ்ச்சி. இந்த மாதம் எப்படியும் மூனு கப்பல் வந்திடும் என்றனர். சிலர், “வந்தால் நல்லதுதானே” என்றனர். ஆனால் ஆறுமுகம் அந்த மகிழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அவர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். நான் அவரைப் பார்த்து விட்டுத் தெரியாதவனைப்போல் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். மூன்று நாள் பேசாத நோன்பு இருந்தும் எனக்கு அவர் மேல் உள்ள வெறுப்பு கொஞ்சமும் குறையவில்லை. இவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும் கேட்காமல் வேலைக்கு வந்துவிட்டாரே என்ற ஆத்திரத்தில் இருந்தேன்.

ட்ரீங்……அலாரம் அலறியது. படுக்கையைவிட்டு எழுந்தேன்.

ஆறுமுகம் எனக்கு முன் எழுந்து குளித்துவிட்டு தெய்வப் படத்திற்கு முன் ஈர உடையுடன் நின்றிருந்தார்.

நான் கண்களைக் கசக்கிக்கொண்டு பார்த்தேன். கும்பிட்டுவிட்டுத் திரும்பியவர் “சுருக்கா எழுந்திரு நேரமாச்சு” என்றார். அவரைப் பார்த்துவிட்டு கள்ளிப் பெட்டியைப் பார்த்தேன். அது என்னைப் பார்த்து “நீ கண்டது கனவு” என்று சொல்லிவிட்டுச் சிரிப்பதைப்போல் இருந்தது. “உன்னை இன்னும் கொஞ்ச நேரத்தில் கப்பல் ஏற்றிவிடுகிறேன்” என்று எண்ணியபடி பெட்டியைப் பார்த்துச் சிரித்துவிட்டு குளிக்க ஓடினேன்.

காலைக் கடன் முடிந்தது. ஆறுமுகம் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பயணம் சொல்லிக்கொண்டார். பிறகு வாடகை வண்டியை அமர்த்திக்கொண்டு கப்பலடிக்கு விரைந்தோம்.

அங்கு ஒரே கூட்டம்! மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக் கொண்டு கப்பல் ஏறுவோர் ஒரு பக்கம். லக்கேஜ் போட வேண்டிய சாமான்களை நிறுத்துக் கொண்டிருப்போர் இன்னொரு பக்கம். கை அசைத்து மகிழ்ச்சி பொங்க வழியனுப்புபோர் மற்றொரு பக்கம். விட்டுப் பிரிகிறோமே என்று மனம் வருந்த உறவினர்கள் அழுங்காட்சி வேறொரு பக்கம். இதற்கிடையில் ஆறுமுகத்தை நண்பர்கள் பலர் சூழ்ந்துகொண்டு நின்றனர். சிலர், “போய்க் கடிதம் போடுங்க” என்றனர். எல்லாரும் சும்மா பேச்சுக்கு அப்படிச் சொல்கின்றனர் என்பது ஆறுமுகத்துக்குத் தெரியும். தெரிந்திருந்தும் சரி போடுறேன் என்றார். அவர் நிற்பவர்களிடம் பேசிக்கொண்டிருந்தாலும் அவர் பார்வை கூடார வாயிலிலேயே இருந்தது. நான் அவர் அருகில் சென்று, “என்ன அங்கேயே பார்க்குறீங்க? என்றேன்.

”இல்லை…இந்த நேரத்தில் கருப்பன் செட்டியார் வந்துவிட்டால் என்ன செய்வது? என் மானமே கப்பலேறிவிடுமே” என்று என் காதில் மட்டும் விழும்படி தழு தழுத்த குரலில் சொன்னார்.

“வரமாட்டார்; வந்தாலும் இந்தக் கூட்டத்தில் உங்களைக் கண்டுபிடிக்கவும் முடியாது” என்றேன். பிறகு வழியனுப்ப வந்தவர்களிடமும் சொல்லிவிட்டு கப்பலில் ஏறினார். நான் அவருடன் கப்பலுக்குள் சென்றேன்.

ஆறுமுகம் தன் ‘பங்க்’எண்ணைப்பார்த்து அதில் பாய் விரித்துப் போட்டார். நான் பெட்டி, தட்டுமுட்டுச் சாமான்களைக் கீழே எடுத்து வைத்தேன்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. ஆறுமுகம் முகம் குப்பென்று வியர்த்துக் கொட்டியது. “கடைசி நேரத்தில் கருப்பன் செட்டியார் வந்துவிட்டால் என்ன செய்வது? இங்கே உள்ளவங்க என்னைப் பத்தி என்ன நினைப்பாங்க? இதுக்கு முன் நாகப்பன் என்பவனை இப்படித்தானே ஒருவர் ‘சம்மன்’ அனுப்பி ஊருக்குப் போகவிடாமல் தடுத்துவிட்டார்” என்று என் அருகில் வந்து தழுதழுத்த குரலில் சொன்னார். நான் பேசாமல் நின்றேன்.

கப்பலுக்குள்ளே அங்குமிங்குமாக நடப்பதும், கப்பல் சாரளம் அருகில் சென்று வெளியே பார்ப்பதும், படுக்கையில் வந்து அமர்வதுமாக இருந்தார்.

எனக்கும் கொஞ்சம் அச்சம் தலைதூக்கியது. ‘அவர் சொல்வது போல் இந்த நேரத்தில் கருப்பன் செட்டியார் வந்துவிட்டால் என்ன செய்வது?’ என்று மனத்திற்குள் கேள்வியை எழுப்பிக்கொண்டேன்.

அவர் என்னைப் பார்க்க நான் அவரைப் பார்க்கவுமாக இருந்தோம். நண்பகல் மணி ஒன்று. நான் வெளியே எட்டிப் பார்த்தேன். எனக்குத் ‘திக்’ என்றிருந்தது. பிறகு இருக்காதா என்ன? கருப்பன் செட்டியார் குடையைப் பிடித்துக்கொண்டு கப்பலை நோக்கி வந்துகொண்டிருந்தார்.

நான் பதற்றத்துடன் ஓடிப்போய் ஆறுமுகத்திடம் சொன்னேன். ஆறுமுகம், “ஆ…அப்படியா” என்று சொல்லிவிட்டு வியப்போடு ஓடிவந்தார். இருவரும் பார்த்தோம். ஏறுநடை போட்டுவந்த கருப்பன் செட்டியார் கப்பல் படிகளில் ஏறிவருவது தெரிந்தது. அவரைப் பார்த்ததும் ஆறுமுகம் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு “எப்படியோ உளவு கிடைச்சுத்தான் வருராரு” என்றார். இதைச் சொல்லி முடிப்பதற்குள் அவர் உடம்பு வியர்த்துவிட்டது. உடல் நடுநடுங்கியது.

நான், “ஆமா” என்று தலையை ஆட்டிக்கொண் டேன். அவர் தலைகுனிந்தபடி அமர்ந்தார். நேரம் விரைந்தது.

உள்ளே வந்த கருப்பன் செட்டியார் சொல்லிவைத்தாற்போல் நேராக ஆறுமுகத்தின் படுக்கைக்கே வந்து விட்டார்.

வந்ததும், “ஆமா ஊருக்குப் போறேனு ஒரு வார்த்தைகூடச் சொல்லிக்கிறாமே வந்திட்டீகளே. இப்படித் தான் வருறதா?” என்று கேட்டார்.

ஆறுமுகம் பேசவில்லை. அவருக்குத் தொண்டை அடைத்துக்கொண்டது. திருதிருவென்று விழித்தார். நான் அவரை இரக்கத்தோடு பார்த்தேன்.

“நேரே வர தோது இல்லேனா ஆள்விட்டாகிலும் சொல்லியிருக்கலாம்ல! சொல்லாமக் கொள்ளாம வந்திட்டீகளே!”

ஆறுமுகம் பேசவில்லை!

“எத்தனை மாத லீவுலே போறிக?” செட்டியார் கேட்டார்.

“மூனு மாதந்தான் லீவு. அதுக்குள்ளே திரும்பி வந்துடுவார்” என்றேன் நான்.

“அப்பச் சரி; பேசிக்கிட்ட இருக்கவும் நேரமில்லே நேரமாச்சு இந்தாங்க” என்றார் கருப்பன் செட்டியார்.

ஆறுமுகம் அவர் முகத்தைப் பார்த்தபடி கருப்பன் செட்டியார் கையிலிருந்த கடிதத்தை வாங்கினார். வாங்கும் போது அவர் கை நடுங்கியது. நெஞ்சம் பட்பட் என்று அடித்துக்கொண்டது.

“அறிவிப்பு… தயவு செய்து பயணிகள் அல்லாதோர் வெளியே செல்லவும்” கப்பலில் உள்ள ஒலிபெருக்கி ஒலித்தது.

“சரி நேரமாச்சு போய்க் கடிதம் போடுங்க” என்று சொல்லியபடி கை குவித்து வணக்கம் தெரிவித்துவிட்டுக் கருப்பன் செட்டியார் நடந்தார். ஆறுமுகம் கடிதத்தோடு கைகுவித்து வணக்கம் தெரிவித்துக் கொண்டார். தெரிவித்துக் கொண்டதும் நான் அவர் கையிலிருந்த கடிதத்தை வாங்கிப் பிரித்தேன். உறைக்குள் இருந்த பத்து வெள்ளிச் சிவப்புத்தாள் என்னைப் பார்த்துச் சிரித்தது. அந்தத் தாளை அவர் கையில் கொடுத்தேன். அவர் முகம் மலர்ந்தது. இனி எனக்கு அங்கு வேலை? கப்பல் புறப்பட்டுவிடுமே!

– குங்குமக் கன்னத்தில் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

Elangkannan 1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய  தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர்     (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *