தமிழ்ச் சட்டம்பி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதந்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 302 
 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“வதனி! வதனி!! இஞ்சை ஒருக்கா ஓடியா”

“ஏனணை அம்மா கூப்பிடுகிறியள்?”

“உன்ரை கொத்தானெல்லே பெண்சாதியோடைபோறார்.ஓடியந்து பாரன்”

“உண்ணாணைப் போறார்?”

“உண்ணாணைப் போறார் பிள்ளை” என்று பார்வதி சத்தியம் செய்து கூறியதும் வீட்டு விறாந்தையைக் கூட்டிக்கொண்டு நின்ற வதனி கூட்டுமாறையும் அப்படியே விட்டு விட்டு ஓடினாள் தெருப்படலையடிக்கு.

“பாத்தியே உன்ரை கொத்தானை. எங்கண்டை வீட் டுக்கே வராமல் போறார். அவருக்கு நாங்கள் என்ன செய்தனாங்கள்?”

“என்ன செய்தனீங்களோ? அவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் நினைத்தால்……”

“என்னத்தைச் செய்தனாங்கள்? நாங்கள் சொன்ன படிச்சிருந்தால் ஏன்? இப்படியெல்லாம் வருகுது”

“நீங்கள் சொன்ன மாதிரிப் படிச்சாப்போலை ஏதோ பெரிய மனிசனா விடுவாரே? இப்ப மாத்திரம் ஏதோ குறைவே?”

“இப்ப குறைவில்லைத்தான். இருந்தாலும்….”

“என்ன? என்ன இருந்தாலும் என்று இழுத்துப் பேசிறியள், இப்பதானமே அவருக்குச் சரியான சம்பளம். வேலையும் சொந்த ஊரிலையாம். அவருக்கு இன்னும் சம்பளம் ஏறப் போகுதாம்”.

“ஆர் சொன்னது?”

“பேப்பர்தான் சொல்லுது. சுயபாஷைக்காரருக்கு இன்னும் சம்பளத்தைக் கூட்டப் போறாங்களாம்”.

“உண்ணாணை எண்டு சொல்லு”

“உண்ணாணை”

“நாங்களெல்லே கொத்தான்ரை சம்பளம் பிச்சைக் காரச் சம்பளம், குடும்பத்தைக் கொண்டு நடத்த முடியாதெண்டெல்லே நினைச்சு உன்னை……”

“என்னை அவருக்குச் செய்து கொடுக்காமை விட் டாப்போலை அவர் குறைஞ்சு போனாரே? என்னைக் கலியாணம் செய்ய வேணுமெண்டு அவர் பட்ட பாடு. பாவம்” என்று வதனி சொன்னதும் கடந்த காலச் சம்பவங்கள் யாவும் பார்வதியின் நினைவுக்கு வந்தன.

***

ஆனந்தன் பார்வதியின் அண்ணன் மகன். அவன் பிறந்து ஐந்து ஆண்டுகளால் தகப்பன் இறந்துவிட் டார். சின்னஞ் சிறு வயதிலே தகப்பனை இழந்த ஆனந்தன் அவ்வூர்த் தமிழ்ப் பாடசாலை ஒன்றில் படித்தான். ஆனந்தன் படிக்கும் காலத்தில் ஆங்கிலத் திற்கு நல்ல மதிப்பு இருந்தது. ஆங்கிலம் படித்தவர் களுக்கே அரசாங்கத்தில் உத்தியோகங்கள் கிடைத்தன. உத்தியோகத்திற்காக ஆங்கிலத்தில் மோகங்கொண்ட தமிழர்கள் பலர் தமிழை வெறுத்து ஆங்கிலக் கல்லூரி களில் ஆங்கிலம் படிக்கத் தொடங்கினர்.

ஒரு நாள் =

“தம்பி ஆனந்தன்! இந்தக் காலத்திலை இங்கிலீசு படிக்காமை ஒண்டும் செய்ய முடியாது. நீயும் இங்கிலீசுப் பள்ளிக்கூடத்திலை போய்ப் படியன்”.

“எனக்கேன் இங்கிலீசை? எங்கண்டை தமிழ் இருக்கையுக்கை தமிழை விட்டுவிட்டு இங்கிலீசு படிக்கிறதே?”

“பின்னை உனக்கு உத்தியோகம் வேண்டாமே?”

“உத்தியோகத்துக்காகத் தாய்மொழியை விடச் சொல்லுறியளே? தமிழ் படிச்சவை உத்தியோகம் பாக்கயில்லையே? பண்டைத் தமிழர்கள் எல்லாம் தியோகம் பாத்தவையே?”

“தமிழ் படிச்சவைக்கு என்ன உத்தியோகம் கிடக் குது, ஆக அந்த வாத்தி வேலைதான் கிடக்குது. அது வும் பிச்சைக்காரச் சம்பளம்”.

“அந்தக் காலத்து வாத்திமாரெல்லாம் சம்பளத்துக் காகவே படிப்பிச்சவை. என்ன இருந்தாலும் நான் தமிழ்தான் படிக்கப் போறன். தமிழிலை இருக்கிற இலக்கண இலக்கியம் வேறை எந்த மொழியிலை இருக்குது?”

“ஆர் சொன்னது உப்பிடி? நானும் தமிழ் படிச்ச னான்தான்!”

“ஓ! நீங்களும் தமிழ் படிச்சிருக்கலாம். ஆனால், அங்கினை ஒண்டையும் இங்கினை ஒண்டையும் படிச்சிருப்பியள். முற்றும் ஆராய்ந்து படித்தவனுக்குத்தான் அதன் பெருமையும் சிறப்பும் தெரியும்!”

“சரி சரி, உன்னோடை கதைச்சு வேலையில்லை. உன்ரை கொம்மாவை ஒருக்கா வந்துவிட்டுப் போகச் சொல்லு” என்று பார்வதி சொன்னதும் ஆனந்தன் சிரித்துக்கொண்டே எழுந்து வீட்டுக்குப் போனன்.

***

“வதனி! மச்சாள் இருக்கிறாவே?”

“என்ன மாமி! அம்மாவையே கேக்கிறியள்? அவ கோலுக்கை இருக்கிறா. வாருங்கோவன் உள்ளுக்கு!” என்று கூறித் துள்ளிக் குதித்துக்கொண்டு மான் போல் ஓடி மறைந்தாள் வதனி. வதனியைப் பின்தொடர்ந்து சென்றாள் பாக்கியம்.

“உதார் எங்கண்டை பாக்கிய மச்சாளே? வா மச்சாள் வா”.

“வரச்சொல்லிச் சொல்லி அனுப்பினனீங்களாம். அதுதான் வந்தனான்”.

“ஏனணை மச்சாள். நிண்டுகொண்டு கதைக்கிறியள்? உதிலை இரன், உன்ரை மேனைப் பற்றித்தான் கதைக்க வேணும்” என்று பார்வதி சொன்னதும் சேலைத் தலைப்பைச் சரி செய்துகொண்டே நாற்காலியில் அமர்ந்தாள் பாக்கியம்.

”நேற்றைக்கு மேன் என்ன சொன்னவர்?”

“அவன் எல்லா விஷயமும் சொன்னவன்தான். என்ன இருந்தாலும் தமிழ்தானாம் படிக்கப் போறான். வருங்காலத்திலை தமிழுக்குத்தானாம் மதிப்பு வரும்”.

“உந்த எம்.பி. மார் சும்மா சொல்லுவாங்கள். பிறகு என்ன நடக்குதெண்டு பாருங்கோவன்”.

“மச்சாள்! என்னை என்னணை செய்யச் சொல்லுறாய்?”

*மேனை இங்கிலீசு படிக்கச் சொல்லு. கண்டவன் நிண்டவனெலாம் இங்கிலீசு படிக்கையுக்கை இவர் மாத்திரம் தமிழ் படிக்கப் போறாராமே?”

“நான் தமிழ்தான் படிக்கப் போறேனெண்டு ஒற்றை காலிலை நிற்கிறான்”

“பிடியெண்டா உன்ரை மேனுக்கும் என்ரை மேளும் ஒத்துவராது. அவளை நாங்கள் இங்கிலீசு படிப்பிக்கப் போறம்”.

“நான் என்ன செய்யிறது? நீங்கள். என்னத்தை எண்டாயென்ன செய்யுங்கோ” என்று சொல்லிக் கொண்டே நழுவியிருந்த முந்தானைச் சேலையைச் சொருகிக்கொண்டு போனாள் பாக்கியம்.

***

ஐந்து வருடங்களுக்குப் பின்:

“என்ன மச்சாள்! இண்டைக்கு உறவினர்களோடு வந்திருக்கிறாய்? என்ன விஷேசம்?”

“ஒண்டுமில்லை, என்ரை மேன்ரை விஷயமாகத்தான் வந்தனாங்கள்”.

“என்ன விஷயம்?”

“கலியாண விஷயமாகத்தான்”.

“ஆருக்குச் செய்ய?”

“என்ரை ஆனந்தனுக்கும் வதனிக்கும்……”

“என்ன… நான்தானே படிக்கையுக்கை சொன்னனான்”…

“போனதை விடு மச்சாள். அவன்தானே இப்ப உத்தியோகமாகி விட்டான்”.

“என்ன உத்தியோகம்? தமிழ்ச் சட்டம்பிதானே?”

“ஓமணை மச்சாள்”.

“அது ஒத்துவராது. வேறை யாரையும் பார்த்துச் செய்யுங்கோ”

“உருத்துக்காகவோ உத்தியோகத்துக்காகவோ கலியாணம் செய்யப் போறியள்?”

“எல்லாற்றை பெட்டையளும் காற்சட்டை போட்ட வங்களோடை இங்கிலீசு பேசிக்கொண்டு போக, என்ரை பெட்டையை மாத்திரம் வேட்டி உடுத்தவ ரோடை தமிழ் பேசிக்கொண்டு போகச் சொல்லுறியளே?”

“ஏன் தமிழ்ச் சட்டம்பி உத்தியோகம் உத்தியோகம் சரி’யில்லையே?”

“சரியெண்டு வை. சம்பளம் என்ன தெரியுமே?”

“இஞ்சை பார் மச்சாள்! சம்பளம் குறைஞ்சாப் போலை தமிழ்ச் சட்டம்பியைத் தள்ளி வைக்காதை யுங்கோ. ஒரு காலத்திலை தமிழ்ச் சட்டம்பிமாருக்கும் நல்ல காலம் வரும்”.

“அது வந்த காலத்திலே காலத்திலே பாப்பம். இனிமேல் இதைப் பற்றிக் கதைக்காமல்.. உன்ரை மேனுக்கு எங்கையாலும் பார்த்துக் கலியாணத்தைக் கட்டி வை”

“அது எனக்குத் தெரியும். இனிமேல் இந்த விஷய மாக உன்ரை வீட்டுக்கு வந்தால் உன்ரை காலுச் செருப்பாலை அடி” என்று சொல்லிக்கொண்டே விறு விறென்று நடந்தாள் பாக்கியம்.

ஆனந்தனுக்கும் அவ்வூரைச் சேர்ந்த பிரபல விவ சாயி ஒருவரின் மகள் ரோகினிக்கும் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ரோகினி வறுமைப்பட்டவள். அதிகம் படிக்காதவள். ஆனால் பண்புள்ளவள். ரோகினியின் சிறந்த பண்பு ஆனந்தனைக் கவர்ந்தது. ஆ னந்தன் ரோகினியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டதையிட்டுப் பெருமைப்பட்டான்.

***

“என்ன பார்வதி! றோட்டையே பார்த்துக் கொண்டு நிக்கிறியள்? என்ன விஷேசம்?” என்று அந்த வீதி யால் வந்த தம்பித்துரை மாஸ்ரர் கேட்டதும் பார்வதி சுய நினைவுக்கு வந்தாள்.

“ஒண்டுமில்லை மாஸ்ரர். எங்கண்டை மருமேனும் பெண்சாதியும் போகினம். அதுதான் என்ரை மேளுக் குக் காட்டினனான்”

“இப்ப காட்டினாப் போலை என்ன. அந்தப் பொடியன் கேட்ட நேரம் செய்து கொடுத்திருந்தா உன்ரை மேள் ஏன் உப்பிடி இருக்குது”

“அதுக்கென்ன மாஸ்ரர் செய்யிறது. மருமேனுக்குப் பேசியிருந்ததெண்டெல்லே ஒருத்தரும் மாட்ட வெண்ணுறாங்கள்”.

“பார்வதி! இப்பவெல்லே மருமேனுக்குச் சம்ப்ளம் கூட்டிப் போட்டாங்கள். அவன்ரை சம்பளத்துக்கும். மதிப்புக்கும் ஆரும் கிட்ட நிக்க முடியுமே?*

“நானென்ன செய்யிறது. காலம் செய்யிற வேலை மாஸ்ரர். அல்லாட்டித் தமிழ்ச் சட்டம்பியை வேண்டா மெண்டு தள்ளியிருப்பேனே? தமிழை வேம்பென வெறுத்துவிட்டு இங்கிலீசைக் கரும்பென நினைத்தது என் தவறுதான். அதுக்கினி என்ன செய்யிறது?”

04-10-1964, சுதந்திரன்.

– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.

நா.க.தங்கரத்தினம் சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *