தன்னோடு
(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த ஊரைப் பற்றிப் பத்து வருஷங்களுக்கு முன்னா லேயே பேராசிரியர் வகுப்பில் நிறையச் சொல்லியிருக் கிறார். வரலாறு இந்த ஊருக்கு ஒரு தனி இடத்தை ஒதுக்கித் தந்திருக்கிறது.
தந்திருக்கிறது. இதை ஆண்ட அந்தக் கால ராஜாக்கள் ஆட்சி பரிபாலனம், நகரமைப்பு, கட்டிடக் கலைகளில் சிறந்திருந்ததாய் நிறையப் படித்துத் தெரிந்திருக்கிறான்.
இந்த ஊருக்கு உத்தியோக மாற்றல் ஆணை வந்ததும் கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தது அவனுக்கு. பாண்டிச்சேரியில் போல நேர் கோடுகளில் சாலைகள்; அந்தக் கால ஐரோப்பிய நாடுகளைப் போல கட்டிடங் கள். பழைய வரலாற்றுச் சின்னங்கள். இவைகளை யெல்லாம் பார்க்கலாமென்று இங்கு புறப்பட்டு வரு முன் அப்பாவிடம் சொன்னான். அப்பா சொன்னார்; அதெல்லாம் சரிதான். ஒரு ஊர்ங்கிறது ரோடும் கட்டடமுமா? ஜனங்க தான் எந்த ஊர்லெயும் முக்கியம். அவுங்க எல்லா ஊர்லெயும் ஒரே மாதிரி மந்…துன்னு தான் இருக்காங்க.ஏன் ஆபீசும் அந்தக் காலத் துக்கட்டடம். ஜனங்களும்அந்தக்காலத்து ஜனங்கதான். போ. போய்ப்பாரு” என்றார்.
பெட்டி படுக்கையோடு வந்து அலுவலகத்தில் நுழை யும் போதே பார்த்தான். அந்தக் கட்டடமும் சுற்றுப் புறமும் பிரும்மாண்டமாகவும் வசீகரமாகவும் இருந் தன. சுற்றி பசேலென்று மரங்களும் நடுவே சிவப்புச் செங்கல் தெரிய ஆகாயத்திற்கு நின்ற கட்டடமுமான இந்தப் பிரதேசம் அவன் மனசுக்கு வியப்பாகவும் பிடித்தமாகவும் இருந்தது.
மாடியில் இவனுக்கு சீட். போய் ஃபைல்கள் ரிஜிஸ்தர் கள், மேசை ; நாற்காலி மரப்பெட்டி எல்லாவற்றையும் ஒப்புக் கொண்டான். இவனிடம் பொறுப்பைக் கொடுத்த கிளார்க் அவசரம் அவசரமாய் எல்லா வற்றையும் தள்ளி விட்டு வெகு தூரம் உள்ள ஊரில் சேரக் கிளம்பிப் போனார். ஆற அமர ஒரு நாள் கழித்து வேலைகளைத் துவங்குகிறாற்போன்ற இலாகா இல்லை அது. ரிலே ரேஸ் மாதிரி போன ஆள் விட்ட இடத்திலும் விநாடியிலும் வேலைகளைத் துவங்க வேண்டிய அலுவலகம்.
சாயங்காலம் வரை தொடர்ந்து பில்களைப் பாஸ் பண்ணுவதும் அவசர ஃபைல்களை எழுதிப் போடுவது மாயிருந்தான். அதற்கப்புறம் அவன் வயதுக் காரர் களைப் பார்த்துத் தங்கிக் கொள்ள அறைகிடைக்குமா என்று விசாரித்தான். உடனே கிடைப்பதாய்த் தெரிய வில்லை. ‘கொஞ்ச நாளைக்கு ஆபீஸில்தான் தங்கல்’ என்று இருட்டியதும் புலப்பட்டு விட்டது.
இரண்டு நாட்களுக்கு இந்தக் கட்டடத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். வளைந்த சிங்க உருவங்கள் வரை கோடுகளில் தெரிந்தன. சில இடங்களில் ஆலிவ் இலை யின் வடிவம் இருந்தது. செங்கல்லைச் சுண்டினால் அநேகமாய் உலோக சப்தம் வந்தது. இன்னும் எங்கும் பார்த்தறியாத பழையகாலப் புதுமைகளை ஏராள மாய் அந்த விஸ்தாரமான கட்டடமெங்கும் பார்த்தான்.
அலுவலகத்தில் யாரோடாவது இவைகளைப் பற்றிப் பேச நினைத்து ஒவ்வொருவரும் மற்றவருடன் என்ன பேசுகிறார்கள் என்று பார்த்தான். திருபத் திரும்ப குனிந்த தலை நிமிராமல் வேலை பார்த்தார்கள். மூளையையே தின்று விழுமளவு வேலைகளைப் பார்த் தார்கள். மிச்ச நேரங்களில் கடைகளுக்கு ஓடினார்கள். குடும்பங்களோடு ஆஸ்பத்திரிகளில் அலைந்தார்கள். கடைசாமான், ஆஸ்பத்திரி வைத்தியம் போக எப்போ தாவது மட்டமான ஒரு சினிமாவைப் பற்றியாவது நீர்த்துப் போன ஜோக்கையாவது சொன்னார்கள். நாலைந்து வருடங்களுக்கு முன்னால் இல்லாத முன்னேற்றம், சங்கத்தைப் பற்றியும் விலைவாசியைப் பற்றியும் கொஞ்சம் பேசிக் கொண்டது.
தான் வேலை பார்க்கும் – தங்கியிருக்கும் அலுவலகக் கட்டடம் கிரேக்கக் கட்டடக்கலை அம்சங்களோடு ஒட்டி வருகிறதென்பதையும் கட்டடத்திலுள்ள சின்னச் சின்ன வேலைப் பாடுகள் மெஸபடோமியா நாகரிக வகையினது என்பதையும் சொல்லிப் பார்க்கக் டந்த நாட்களில் அலுவலகத்திலும் வெளியிலும் ஒரு ஆளாவது தேறுமா என்று தேடிப் பார்த்தும் யாரும் தேறவில்லை.
ஜிப்பாப் போட்டு ஜோல்னாப்பை சகிதம் ஒருஆள் இருட்டும் நேரத்தில் அலுவலக வாசல் வழியாய்ப் போய்க் கொண்டிந்தான்.கவிஞனாகவோ அறிவாளி யாகவோ அவன் இருக்கக்கூடும் என்று கருதி வெகு தூரம் அவன் பின்னாலேயே போனான். எதிரில் வந்த ஒரு ஆள் ஜிப்பாவிடம் நின்றான்.இரண்டுபேரும் பேசத் துவங்கினார்கள். அவ்வளவும் மஹாக் கேவலமான சங்கதிகள். ஜிப்பாவும் ஜோல்னாப் பையும் இவனை ஏமாற்றி விட்டன. போன தூரம் பூராவையும் திரும்ப நடந்து தீர்த்தான்.
நாலைந்து நாள் கழித்து ஒரு நாள் காலையில் இருள் கலைந்து கொண்டிருந்தபோது இவனுக்குத் தூக்கம் கலைந்து அலுவலக மாடியில் படுத்திருந்த மேஜையை விட்டிறங்கி ஜன்னலைப் பார்த்தான். வட்டமாய் செக்கச் செவேலென்று நிற்கும் கட்டடத்தின் நடுவில் ஏராளமான மரங்கள்; மா.வேம்பு. மருது, புன்னை தேக்கு. புளி. பன்னீர்ப்பூ. நெட்டிலிங்கம், மஞ்சள் கொன்றை இன்னும் பெயர் தெரியாத அன்னிய தேசத்து மரங்கள் நின்றன. காம்பவுண்டு ஓரங்களில் அகல அகல இலைகளக் கொண்ட கொடி கள் அடர்ந்து படர்ந்திருந்தன, ரோஸ் நிறத்திலும் நீள் முக்கோணத்திலும் கொடிகள் காலையிலேயே பூத்துக் கிடந்தது மங்கலில் தெரிந்தது. திடீரென்று வனத்திற்குள் வந்து நின்றது போலிருந்தது இவனுக்கு.
கீச் கீச் சென்று பறவைகள் சப்தம் காதை நிறைத்தது. கீற்றுக் கீற்றாய்ப் பறவை ஒலிகள். அமைதியாயிருப் பதை விடவும் இப்படிப் பறவை ஒலியால் அமைதி குலைவது சுகமாய்த் தோன்றியது.
சற்று நேரத்தில் பறவைகளின் ஓசை கூடிக் கொண்டே போனது. ரகம் ரகமாய் ஓசைகள். இந்த ஒலிகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில் இவனுக்குச் சட்டென்று ஒன்று தோன்றியது. இந்தப் பறவைகள் எல்லாம் இங்கேயுள்ள பறவைகள் மட்டுமல்ல. இந்த ஊருக்கு வெகு அருகில் ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது ஞாபகத்தில் வந்தது. இவ்வளவு மரங்களும் தண்ணீர் ததும்பும் குளங்களும் இருக்கையில் இங்கேயும் கடல் கடந்து பறவைகள் வந்து தங்கியிருக்க வேண்டும் என்று நினைத்தான்.
ஒரு நாற்காலியைத் தூக்கி வந்து ஜன்னலோரமாய்ப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். தான் ஒரு விசேடமான பகுதிக்குள் உட்கார்ந்திருப்பதாய் உணர்ந் தான். ஆர்வத்தோடும் பெருமையோடும் நாற்காலி நுனியில் உட்கார்ந்து பறவைகள் சிறகை உதறி மரக் கிளைகளிலிருந்து வெளி வருவதும் மறுபடி உள்ளே போய் உட்கார்வதுமாயிருந்த அழகை ரஸித்துக் கொண்டிருந்தான்.
மாடிப் படிகளில் யாரோ ஏறி வரும் காலடிச் சத்தம் கேட்டது. மாடி வாசலைப் பார்த்தான். அவன் செக்ஷனைச் சேர்ந்த இரண்டு பேர் வந்து கொண்டிருந் தார்கள். மாதாந்திரக் கணக்குகளை அனுப்ப இன்னும் மூன்று நாட்கள் தானிருந்தன. அதிகாலையிலும் இரவிலும் வந்திருந்து வேலை பார்த்தால் தான் சரி யான சமயத்தில் அனுப்பலாம். வந்த இரண்டு பேருமே வயசாளிகள்.
“இங்கெ பத்து மணிக்கு மேலெ தானே ஆள் நட மாட்டம். இப்ப ஜன்னல்லெ யாரைப் பார்க்கி றீங்க?” என்றார் ஒருவர்.
“சும்மாமரங்களையும் பறவைகளையும் பார்த்துக்கிட்டிருக்கேன்” என்றான் இவன்.
“மரம்னா நிக்கும்; பறவைனா பறக்கும் அதிலெ புதுசா என்ன பாக்கிறீய?” என்றார் ஒருவர்.
பதில் சொல்லு முன்னெ அடுத்தவர் கேட்டார், “கணக்குப் போகணும். ஷெட்யூல் எழுதி முடிச்சிட்டியளா?”
“ராத்திரியே எழுதி முடிச்சுட்டேன்.” என்றான் இவன்.
வந்த ரெண்டு பேரும் ஷெட் யூல்களைப் பிரித்துத் தைக்க ஆரம்பித்தார்கள்.
இவன் ஜன்னல் கம்பிகளுக்குள் கண்ணை விரித்தான். பறவைகள் இன்னும் மரக்கிளைகளைப் பிய்த்துக் கொண்டு வருவது போல் படபட வென்று பாதி பறந்து வெளி வருவதும் மறுபடி கிளைகளுக்குள் அமுங்குவதுமாயிருந்தன.
“டொரிஸ் டிஸ் டிஸ்” மரங்களுக்குள்ளிருந்து உலகத்தில் இது வரை உண்டாகாத இசைக் கருவியின் ஒலி. வாழ்நாளில் கேட்டதில்லை; கேட்ட அத்தனை இனிமையான ஒலிகள் சேர்ந்தாலும் சற்று முன் கேட்டதற்கு இணையில்லை. “ஆ..ஆ..ஹ்…ஹா” என்று கத்தி விட்டான்.
ஷெட்யூல் பிரித்துக் கொண்டும் தைத்துக் கொண்டு மிருந்த ரெண்டு பேரும் நிமிர்ந்து பார்த்தார்கள். இரண்டு பேர் கண்களிலும் ஆச்சரியம், “இவன் எதற்காகக் கத்தினானென்று”.
இவனுக்கும்தான் கேட்டதை உடனடியாக யாருடனா வது பகிர்ந்து கொள்ள ஆசை. திரும்பி ரெண்டு பேரை யும் பார்த்துச் சொன்னான் இப்ப ஒரு பறவைச் சத்தங்கேட்டதே. கேட்டீங்களா? அடடா? நீங்க அடிக்கடி கேட்பீங்களா? இந்தப் பறவையெல்லாம் வெளிநாட்டிலெருந்து வருதா சார்?” என்றான்.
இரண்டு பேரும் பதில் சொல்ல வில்லை ஒரு அறியாச் றுவனைப் பார்ப்பது போல் பத்து விநாடிகளுக்குப் பார்த்தார்கள்.குனிந்து ஷெட்யூல்களை அடுக்க ஆரம் பித்து விட்டார்கள். இவனுக்கு வெட்கமாய் வந்தது. ஜன்னல் வழியாய் கண்களையும் காதுகளையும் மரங் களுக்குத் திருப்பினான்.
திரும்பத் திரும்ப அந்தப் பறவை இசையை ஞாபகத் திற்குக் கொண்டு வந்தான். காதுகளில் உருண்டு கொண்டிருந்த அந்த இசையொலியைத் தொண் டைக்குக் கொண்டு வரமுயன்றான். எவ்வளவு முயன் றும் அடியைக்கூடத் தொட முடியவில்லை.
இதற்கு முன்னும் பறவை இசையை அடிக்கடி இவன் கேட்பதுண்டு. செங்கல் பட்டில் வேலை பார்த்த போது செம்பூத்துக் கூவுவதைக் கேட்க என்று ஏரிக் கரை தாண்டி நடந்து போவான். எப்போதாவது செம்பூத்து கூவி விடும். மிதந்து வந்து சேர்ந்திருக் கிறான். தஞ்சாவூரில் வேலை பார்த்த போது கோயில் பக்கம் போய் எப்போதாவது குயில் கூவியதைக் கேட்டதுண்டு. அறையில் கூடத்தங்கியிருந்த ஆளைத் தூக்கத்திலிருந்து எழுப்பிச் சொல்வான் இதை.
இந்த ஊரின் கட்டடக் கலையைப் பெரிதாக நிை நினைத் துக்கொண்டு பறவை ஒலிகளை மறந்து போனது எவ்வளவு முட்டாள் தனம் என்று எண்ணிக் கொண் டான். திரும்ப “டொரிஸ் டிஸ் டிஸ்” என்று ஞாபகப் படுத்தி உதட்டில் இசைக்க முயன்றான். இந்த முறை யும் தோல்வி. ஆனால் அது அவன் காதுகளிலிருந்து மனசிலும் உடம்பின் எல்லாப் பகுதிகளுக்கும் இறங்கிக் கொண்டிருந்தது.
மறுபடி கேட்காதா என்று மனம் அலைந்தது. வெகு நேரம் வரை வேறு வேறு பறவை சப்தங்கள் கேட்டன. அந்த நாதம் மட்டும் திரும்பக் கேட்கவில்லை.
வெயில் வர ஆரம்பித்தது. மெல்ல ஜன்னலோரத்தி லிருந்து எழுந்தான். அந்த ரெண்டு பேரும் இன்னும் மேஜைகளில் குனிந்து ஷெட்யூல் பிரிப்பதில் மும்முர மாயிருந்தனர். இவர்களைப் பார்த்ததும் அப்பா அடிக்கடி சொல்கிற ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. “ராமேஸ்வரத்தில் குடியிருக்கிறவன். கடலிலெ ஸ்நானம் பண்றதில்லை. காசியிலெருந்து நாலு நாள் ரயிலேறி வர்ரவன் ஏழு தரம் கடலிலெ ஸ்நானம் பண்ணுவான்”
மறு நாள் அதே போல் பொழுது விடிந்து கொண்டி ருக்கும் போது எழுந்து போய் ஜன்னலருகில் நாற் காலியைத் தூக்கிப் போட்டு உட்கார்ந்து கொண் அந்த நாதத்திற்காகக் காத்திருக்கையில் அந்த ரெண்டு பேரும் வந்து உட்கார்ந்து எழுத ஆரம்பித்தார்கள்.
“என்ன ஸார் இந்த ஜன்னல் ஒங்களை விடாது போலிருக்கே என்று ஒருவர் சொல்ல இன்னொரு வர் இவனைப் பார்த்து சிரித்துக் கொண்டார். இவன் ஜன்னலோரமாய் வைத்த செவியை எடுக்க வில்லை. சுளீரென்று அது கேட்டது “டொரிஸ் டிஸ் டிஸ்” இவன் உணர்ச்சி வசப்பட்டு ஜன்னலி லிருந்து சட்டென்று திரும்பி ரெண்டு பேரையும் பார்த்து, “அதோ…அதோ கேட்டதே இப்பக்கேட்டதே” என்று கத்தினான். அந்த ரெண்டு பேருக்கு எதுவும் புரியவில்லை. கணக்கு மும்முரத்திலிருந்த ஆள்கள் திருதிருவென்று விழித்தார்கள்.
“என்ன ஸார்?” என்றார் ஒருவர்.
:அந்தப் பறவை சத்தம் ஸார், ஒங்க காதிலெ விழலியா” என்றான்.
“தேதி இண்ணைக்கு 15. நாளைக்குள்ளார ஏ.சி. முடிக்சு எஃப்ஸி பண்ணனும். நீங்க ராத்திரியே எல்லாத்தையும் முடிச்சுட்டீங்க போலிருக்கு காலைலெ கமுக்கமா ஒக்காந்து பறவை பாக்கிறீங்க. எங்களை விடுங்க ஸார். கணக்கை முடிக்கணும்.” என்றார். இதுவரை அலுவலக நேரத்தில் கூட அவ்வளவாய் அவனோடு பேசாத ஆள். அரை நிமிடம் தான் அவமானமாயிருந்தது. அப்புறம் காற்றில் கரைந்த அந்த நாதத் துளிகளை மறு படி மறு படி காதுகளில் தேடி எடுத்து மனசுக்குக் கொண்டு போய் ஆனந்தப்பட்டு எழுந்து போனான்.
அடுத்த நாள் காலையில் ஜன்னல் அருகில் உட்கார்ந் தான். அன்றைக்கு சீக்கிரமாகவே அந்த ரெண்டு ஆள் களும் வந்து விட்டார்கள். இவன் ஜன்னலோரமாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து ஒரு சிரிப்பு. சீட்டை இழுத்துப் போட்டு விறு விறு வென்று எழுத ஆரம் பித்தார்கள். இவன் காதை ஜன்னலருகில் வைத்துக் காத்துக் கொண்டிருந்தான். மற்றப் பறவைகளின் எல்லாச் சப்தங்களையும் தூக்கி விழுங்கி விட்டு அது திடீ டீரென்று வெகு அருகில் கேட்டது “டொரிஸ் டிஸ் டிஸ்”
இவன் ஆனந்த வயப்பட்டு அதில் அமிழ்ந்து போயி ருந்து விட்டுத் திரும்பிப் பார்த்தான். எழுதுவதை நிறுத்தியிருந்த ரெண்டு பேரும் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இவன் பேச ஆரம்பிக்கும் முன் ஒருவர் சொன்னார், “இண்ணைக்குத் தான் எங்க காதுலெ விழுந்திச்சு. கொஞ்ச நேரமா வேலை ஓடலை ஸார்.”
தன்னோடு ரெண்டு பேர் சேர்ந்ததில் இவனுக்கு சந்தோஷம் முட்டிக் கொண்டு வந்தது.
– சாசனம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1991, அன்னம் பி.லிட், சிவகங்கை.