தனிமரம்





வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்

மாதவியாகிய நான் தனித்திருந்தேன் நேற்றிரவு
கண் நிறைந்த கணவர் என் கண் அவர்
ஊரில் இல்லை என்பதால் தனித்திருந்தேன் நேற்றிரவு
பெற்றோர் மரணத்தின் காரணத்தால் அடியாளை விட்டுப் பிரிந்த பின்னர் ஒற்றையாகவே இருப்போம் திருமணமே வேண்டாம்
என்று இருந்த ஏந்திழை நான்
தனியாகவே நான் உண்டு என் வேலை உண்டு
விடுதி உண்டு என்றிருந்தவளைக் கவர்ந்து கொய்து
விட்டார் என் அவர் என் காதலர்
அதனால் இணைந்தோம் இல்லறத்தில்
நானும் அவரும் இதுதான் என் முன்கதைச் சுருக்கம்.
இன்று என்னுடைய விடுதித் தோழி ராதாவின் திருமணம்
மேற்கு மாம்பலத்தில் திருமண மண்டபம் தேடி
கல்யாணப் பரிசை அவளிடம் கொடுத்து வாழ்த்தி விட்டு
அலுவலகம் செல்ல வேண்டும்.
அடடா உறங்கி விட்டேனே … நாக்கைக் கடித்து எழுந்தேன்
கட்டிலை விட்டு . அவசரமாய்க் குளித்து அவசரமாய்த்
தயாரானேன். திருமண நிகழ்ச்சிக்குச் செல்ல பட்டுப் புடவை
அணிதல் என்றும் பிடித்ததில்லை எனக்கு. எனக்குப் பிடித்த
மஞ்சள் நிற சூடிதார் உடை அணிந்து கொஞ்சமாய் என்னை
அலங்கரித்துக் கொண்டு புறப்பட்டேன் வீட்டை அடைத்துக் கொண்டு.
பட்டுப் புடவைப் பெண்கள் புடை சூழ
தோழிக்கு அந்த மணமகன் தாலி பூட்டினார்
பூட்டினார் என்றா நினைத்தேன் நான்? அது சரியான
சொல்தானா என்ற எண்ணம் ஓட, மணமேடையில்
ஓரத்தில் நின்ற என் தலையுடன் மோதி நின்றாள் ஒரு பட்டுச் சேலை இளம்பெண்
அம்மா என்று அவளைப் பட்டுப் பாவாடை கட்டிய
சுட்டி நிலா அழைத்தது.
அந்த நிலா வாங்க டாடி என்று அழைத்துத்
திரும்பிப் பார்த்தது.
சுட்டிப் பாப்பாவின் அப்பாவைப் பார்த்து
அதிர்ந்து போனேன் நான்.
நிற்கும் நிலம் நழுவுவது போல் என் நெஞ்சுள் மயக்கம்
என் தலையுடன் மோதியவள் சினம் பொங்க என்னைப்
பார்த்தாள். பட்டுப் பாவாடைக் குழவியைத் தூக்கிக் கொண்டு
நகர்ந்து போனாள்.
நான் மணமேடையிலிருந்து கீழே இறங்கினேன் பைய பைய
கூட்டம் இல்லா இடத்தில் சிறிய நாற்காலியில் அமர்ந்தேன்
என்னை நானே தேற்றிக் கொண்டு விழிகளில் துளிர்த்த
கண்ணீரைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு
மீண்டும் மணமேடை ஏறி தோழிக்குப் பரிசுப் பொதியைக்
கொடுத்து புன்னகை பூக்க அவளுடன் கை குலுக்கி இறங்கினேன்.
அவளுடைய மணக் கோலத்தை மனமார வாழ்த்திய
அடியாளின் நெஞ்சம் என் மணக்கோலத்தை அழித்தது
தனியாகத் தான் வந்தேன் கல்யாண விசேடத்திற்கு
மீண்டும் தனி ஆளாகப் போகிறேன் வாழ்க்கைக்கு…
– கூண்டை விட்டு வெளியே வந்த பறவை, வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள்
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |