தந்தையை விஞ்சிய தனயன்




(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இன்று அவ்வீடும் ஊரோடு சேர்ந்து அதிகாலை யிலேயே விழித்துக் கொண்டது. கதிரவனின் ஒளிக் கதிர்கள் அவ்வீட்டின் திறந்து விடப்பட்டிருந்த கதவுகள், ஜன்னல்கள் வழியாக உள்ளே பிரவேசித்து இருளை மிரட்டிக்கொண்டிருந்தன.
“அல்லாஹு அக்பர் … அல்லாஹு அக்பர். லாயி லாஹ இல்லல் லாஹு அல்லாஹு அக்பர்” என்ற தக்பீர் முழக்கமும்,

“பட்..பட.. பட்.. படார். பட பட பட்.. படார்…” என்ற பட்டாசுகளின் முழக்கமும், அவ்வீட்டுக்குள் நுழைந்து இன்று ஹஜ்ஜூப் பெருநாள் என்பதை அங்கும் பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தன.
சல்கா உம்மா மகிழ்ச்சியில் தன்னை மறந்து போகா மல் வெகு நிதானமாக செயற்பட்டுக் கொண்டிருந்தாள்.
திடீரென்று, அவ்வீட்டின் முன் மண்டபத்துள் தனது மருமகனின் பக்கமாக அமர்ந்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்த தன் மகள் சரீனாவை அடுக்களைக்குள் அழைத்தாள். அவர்கள் இருவருக்காகவும் தயார் செய்து வைத்திருந்த காலைத் தேநீரைக் கொடுத்தனுப்பினாள். பின்னர், அங்கு தனது அருகே கிடந்த ஓர் இருக்கையிலே உட்கார்ந்து தானும் தேநீரைப் பருகிக் கொண்டாள்.
சற்று நேரந்தான் சென்றிருக்கும்.
“மகள் …” என்று கூறியவாறு அவளின் சம்பந்தன் இஸ்மாயில் வட்டானை அவ்வீட்டின் முற்றத்துள் அடி பதித்தார்.
மகளும், மருமகனும் அங்கு விரைந்தனர்.
“வாங்க மாமா உள்ளுக்க” என்று மகளும்,
“வாங்க வாப்பா உள்ளுக்க” என்று மருமகனும் அன்போடு வரவேற்றனர்.
சல்கா உம்மாவும் அடுக்களையின் பின்பக்கக் கதவு வழியால் வெளியே வந்து
“வாங்களன் உள்ளுக்க” என்று அவரின் மேல் தான் வைத்திருந்த மதிப்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தினாள்.
அவர்களின் அழைப்புக்குத் தலை சாய்க்க இஸ்மாயில் வட்டானைக்கும் விருப்பம் தான். என்றாலும், சந்தர்ப்பம் தான் சரியாக அமையவில்லை.
“நேரத்தோட பள்ளிக்கும் போகணும். இப்ப எனக்கு ரெண்டொரு வேலையுமிருக்கு. மறுகா வாறன். நான் இப்ப சுபஹுத் தொழுதிட்டு வரக்க சந்தைக்குள்ள ஆடறுத்துப் பங்கு போட்டாங்க. நானும் அதில ரெண்டு பங்குகள எடுத்தன். இன்னாங்க உங்களுக்கும் ஒண்டும் என்று வட் டானை தனது மருமகள் சரீனாவிடம் தான் வாங்கி வந் திருந்த இறைச்சிப் பங்குகளில் ஒன்றைக் கையளித்து விட்டு அங்கிருந்து வெளியேறினார். சரீனாவோ, அவ்விறைச்சிப் பங்கை தனது தாய் சல்கா உம்மாவிடம் ஒப்படைத்து விட்டு வீட்டின் நடு அறைக்குள் நுழைந்தாள்.
சல்கா உம்மா, அடுக்களைக்குள் வந்து இறைச்சியைச் சுற்றியிருந்த தாளை அகற்றி இறைச்சியைச் சட்டிக்குள் இட்டு மூடிவிட்டு, மீண்டும், அங்கே கிடந்த அவ்விருக்கை யிலே வந்தமர்ந்தாள்.
சல்கா உம்மா தனது மகளோடு இற்றைக்கு ஐந்து வருடங்களுக்கு முன்பு அகதியாக அக்கிராமத்துக்கு வந்து சேர்ந்தாள். அக்குடும்பத்தோடு சேர்ந்து இன்னும் சில குடும்பங்களும், அன்று அக்கிராமத்தைத் தஞ்சமடைந்தி ருந்தன. என்றாலும், மற்றவர்களையெல்லாம் மேவும் வகையிலே, அதிட்டவசமாக இஸ்மாயில் வட்டானையினால் கட்டப்பட்டு பூசாமல் கிடந்த ஒரு வீடு, சல்கா உம்மாவும், மகளும் வசிப்பதற்காக இலவசமாகக் கிடைத்தது. ஏற் கனவே, தலைவனை இழந்திருந்த அக் குடும்பத்தின் சுமை யைச் சல்கா உம்மாவே தாங்கிக் கொண்டாள். இங்கே வந்த நாள் முதல் தான் வைத்திருந்த சிறு தொகைப்பணத் தைக் கொண்டு பாய், பெட்டி இழைத்தல், அப்பம், பிட்டுச் சுடுதல் போன்ற தொழில்கள் செய்து தனது குடும்ப வண்டியை மெல்ல நகர்த்திக் கொண்டு வந்தாள்.
அடிக்கடி ஏற்படுகின்ற நெஞ்சு வருத்தம் அவளைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
இருபத்தாறு,இருபத்தேழு வயதை எட்டிக் கொண் டிருந்த தனது மகள் சரீனாவை ஒழுங்கான ஒருவரின் கையில் ஒப்புவித்துவிட வேண்டுமென்று எண்ணினாள்.
வீடு, வளவையும், காணி, பணம், பொருட்களை யுமே பெரிதாக எதிர்பார்க்கின்ற இந்தக்காலத்திலே, அவை எதுவுமேயின்றி அழகோடு நல்ல பண்புகளை மட்டுமே ஏக சொத்தாக வைத்துக்கொண்டு ஒழுங்கான ஒரு மாப்பிள் ளையைத் தேடிக்கொள்வது அவளுக்கு இயலாத காரியமா கவே தோன்றியது. மகளை எண்ணியெண்ணிக் கவலையில் மூழ்குவதைத் தவிர அவளுக்கு வேறு ஒரு வழியும் புலனாக வில்லை. இவ்வாறு மூன்று ஆண்டுகள் கடந்தே விட்டன.
நான்காவது ஆண்டு பிறந்து மெல்ல நடை பயின்று துல்கஃதா மாதம் என்ற பருவத்துள் பிரவேசம் செய்தி ருந்த காலப்பகுதியிலே, இஸ்மாயில் வட்டானை ஹஜ்ஜுக் குச் செல்ல ஆயத்தங்கள் செய்வதாக சல்கா உம்மா அறிந் தாள். அவளுக்கு, தனது எண்ணம் நிறைவேற இது ஒரு நல்ல சூழ்நிலையாகவும் பட்டது. கூடவே, ‘தானே நேரிற் சென்று தனது மகளின் நிலையை எடுத்துக்கூறி அவரிடம் உதவி கோரினால் என்ன?’ என்ற எண்ணமும் அவளிடம் முளை விட்டது. அத்தோடு, ‘வட்டானை நல்ல மனிசன். உங்கட மகள்ர கலியாணத்துக்கு அவர் உதவி செய்தாலும் செய்திருவார். அவருக்கிட்டப் போய் உங்கட நிலய எடுத்துச் சொல்லுங்க” என்று அவளோடு பழகுகின்ற அயல் வீட்டுப் பெண்கள் பலர் காணும் போதெல்லாம் ஊக்க ஊசி மருந் தைப் பாய்ச்சினர். இவற்றினால் வேகம் பெற்ற சல்கா உம்மா, ஒரு நாள் இஸ்மாயில் வட்டானையின் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றாள். அவ்வீட்டின் முன் மண்டபத்தில் மிகவும் ஆறுதலாக அளவளாவிக் கொண்டிருந்த வட்டா னையையும் மனைவியையும் சந்தித்தாள்.
அவ்விருவரும், அவளை தமக்கு எதிரேகிடந்த ஒரு கைக் கதிரையிலே உட்காரச் செய்து உபசரித்தனர்.
இப்போது அகதிகள் பற்றியும், ஊர் விஷயங்கள் பற்றியும் அங்கே உரையாடல் விரிந்தது.
தனது விடயத்திலே கண்ணும், கருத்துமாகவிருந்த சல்கா உம்மா இடையிலே அதனை அப்படியே பிட்டு வைத் தாள்:
“காக்கா. நான் நெஞ்சு வருத்தக்காரி. எப்ப என்ட சீவன் போகுமெண்டு சொல்ல ஏலாமலிருக்கு. இந்த உலகத்தில என்ன நம்பியிருக்கிற ஒரேயொரு ஜீவன் என்ட மகள் தான். நான் கண்ண மூர்ரத்துக்கு முதல்ல அவ்வ ஒருவனுக்கிட்ட ஒப்படச்சிட்டா நிம்மதியாப் போய்ரலாம். என்னோட இஞ்ச வந்திருக்கிற அகதிகள் குடும்பத்தில நல்ல நல்ல பிள்ளைகள்ளாம் இருக்காங்க, வீடு, வளவு, காணி இல்லாட்டியும், காசாவது இருந்தா அவர்கள்ள ஒருவர மாப்பிள்ளயா எடுக்கலாம் எனக்கு உதவி என்டு கேக்கிறத் துக்கும் வேறு எவருமேயில்ல. உங்களுக்கிட்டச் சொன்னாத் தான் இதற்கு ஏதாவது வழி பிறக்கும் என்டு எண்ணித்தான் நான் இஞ்ச வந்த என்றாள் சல்கா உம்மா.
அதனைச் செவிமடுத்த இஸ்மாயில் வட்டானை நெஞ்சம் நெகிழ்ந்து போனார்.
”சரி, பாப்பம் உங்கட மகள்ள கலியாணத்துக்கு, நான் ஏதோ ஒரு வகையில் உதவி செய்யிறன்” என்று நம்பிக்கையை ஊட்டினார்.
“நாங்க அகதிகளாக இஞ்ச வந்து சேர்ந்தவுடன் எங்கள ஆதரிச்சு, எதையும் யோசிக்காம நீங்க புதிசாக் கட்டிப் போட்டிருந்த ஒரு வீட்ட வாடக இல்லாம நாங்க இருக்கிறத்துக்கும் தந்திங்க. அதுக்கு உங்கட பொஞ்சாதி யும் மகனுங்கூட எவ்வளவோ ஆதரவா இருந்தாங்க.நல்ல மனம் படைச்ச உங்களுக்கும், உங்கட குடும்பத்துக்கும் நாங்க எவ்வளவோ நன்றியுடையவர்களாக விருக்கணும்” என்று சல்கா உம்மா தனது உரையை முடித்துக் கொண்டாள்.
இந்நிகழ்வு நடந்து பன்னிரண்டு பதின்மூன்று நாட்கள் கடந்திருக்கும்.
அன்று! இஸ்மாயில் வட்டானை தனது ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றுவதற்காக வீட்டிலிருந்து கொழும் புக்குப் புறப்பட்டுப் போகவிருந்த தினத்துக்கு முதல் நாள்.
இம்முறையோ, சல்கா உம்மா, இஸ்மாயில் வட்டா செல்பவர் னையை ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றச் என்ற வகையிலே பார்ப்பதற்காக அவரின் வீட்டுக்குச் சென்றி ருந்தாள். முற்றத்தில் நின்றிருந்த அவரும், அவரது மனைவி யும், அவளை, முகம் மலர்ந்து வரவேற்று அவ்வீட்டின் முன் ஹோலினுள் அழைத்துச் சென்றனர்.
அங்கு போடப்பட்டிருந்த ஆசனங்களிலே அம்மூவரும் அமர்ந்து கொண்டதும், சல்கா உம்மாவைப் பார்த்து இஸ் மாயில் வட்டானையே முதலில் பேச்சை ஆரம்பித்தார்.
“நாங்க, இன்டு ராவைக்கு உங்கட வீட்ட வரலாம் என்றுதான் யோசிச்சுக்கிட்டிருந்த. இப்ப நீங்க இஞ்ச வந்த தும் நல்லதாப் பேய்த்து. உங்கட மகள்ள விஷயமா நீங்க இஞ்ச வந்திட்டுப் போனத்துக்குப் பிறகு, அவ்விஷயத்த நானும் என்ட பொஞ்சாதியும் மகனும் கலந்து பேசி நல்ல தொரு முடிவும் செய்திருக்கம். நாங்க அவ்விஷயத்தக் கலந்து பேசிக்கிருக்கக்க நான் என்ட தீர்மானத்தத் திறந்து சொன்னன். எப்பிடிண்டா…நான் ஹஜ்ஜுக்குப் போறத்த உட்டுட்டு எனக்கு அதால ஏற்பார செலவுகள் எல்லாத் தையும் உங்கட மகள்ள கலியாணத்துக்காக உங்களுக்கிட் டயே கொடுக்கப் போறதாச் சொன்னன். நான் எப்படியோ ஹஜ்ஜுக்குப் போயே ஆகவேண்டுமென்பதில மிச்சம் உறுதி யாக இருந்த என்ட மகன், நான் திடீரென்று எடுத்த இந்த முடிவுக்குக் கடுமையான எதிர்ப்புக்காட்டியதோடு, அதுக்கு ஒரு மாற்று வழியாக அவனே உங்கட மகளக் கலியாணம் செய்து கொள்றத்துக்கும் முன்வந்தான். அதுக்குப் பிறகு நானும் யோசிச்சுப் பாத்தன்… அது, நான் செய்யவிருந்த செயலயும் விட சிறந்ததாகவே எனக்கும் பட்டிச்சு. அதையே என்ட பொஞ்சாதியும் மனப்பூர்வமா ஆதரிச்சா. ஆனபடியால, நானும் என்ட மகன்ட விருப்பப்படியே நடந்து கொள்றதாக வாக்களிச்சிட்டன்” என்று தனது பேச்சை இடை நிறுத்தினார்.
சல்கா உம்மாவோ, ‘அல்ஹம்துலில்லாஹ் …’ என்றவாறு முக்காட்டைச் சரி செய்து கொண்டாள்.
மீண்டும் இஸ்மாயில் வட்டானை, சல்கா உம்மாவைப் பார்த்தவாறு தனது உரையைத் தொடர்ந்தார்:
“என்ட மசன் படிச்சிக் கொடுக்கிற பள்ளிக்கொடத் துப் பிறின்சிப்பலும், ஊரில் நல்ல வசதியாரிக்கிற ரெண்டு மூண்டு பேரும் என்ட மகன மருமகனாக்கிக்கச் சரியான விருப்பம் வச்சிருந்தாங்க. நான் புகழுக்காகச் சொல்லல்ல. என்ட மகன எந்த வகையிலும் ஒதுக்கிவிட ஏலா.அப்படி யான ஒரு புள்ள. நான் அவர்ர பேரில நீங்க இருக்கிற அந்த வீடு வளவையும், சாளம்பைக்க நாலேக்கர் காணியை யும் எழுதியும் வச்சிருக்கன். நான் மக்காவுக்குப் போயிட்டு என்ட சீவன் கிடந்து வந்தா, வந்தவுடனேயே என்ட மகனுக் கும், உங்கட மகளுக்கும் நானே முன்னின்று கலியாணத்த நடத்தி வைப்பன். நான் மௌத்தாப் பேய்த்தண்டா என்ட பொஞ்சாதியே முன்னின்று இந்தக் கலியாணத்தச் செய்து வைப்பா. இந்த ஏற்பாட்டைப்பத்தி நீங்க என்ன நினைக்கிங்க” என்றார் வட்டானை.
அதற்குச் சல்கா உம்மா பின்வருமாறு கூறினாள்:
“இந்த உலகத்தில் இதைவிட ஒரு உயர்ந்த காரியம் நடக்கு மெண்டு நான் நினைக்கல்ல. உங்கட மகன என்ட மகள் புருசனாகப் பெறுவது நாங்க பெற்ற பெரும் பாக்கி யம் என்றே நான் கருதிறன். என்ட மகள்ள கலியாண விசயத்தில நான் ஓர் அளவுதான் உங்களிடமிருந்து எதிர் பார்த்தன். ஆனா… இப்ப பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலவும் காரியங்கள் நடந்திருக்கு. உங்களுக்கு என்ன சொல்ற தென்றே தெரியாமலிருக்கு. எல்லாத்துக்கும் உங்களுக்கு அல்லாதான் கூலி தரணும்’ என்று தனது உரையை நிறைவு செய்து கொண்டாள்.
நாட்கள் நகர்ந்தன.
இஸ்மாயில் வட்டானை ஹஜ்ஜுக் கடமையை முடித் துக் கொண்டு வீட்டுக்கு மீண்டார்.
சில தினங்களிலேயே அவர் சொல்லி வைத்தது போல சல்கா உம்மாவினது மகள் சரீனாவின் திருமணமும் இனி தாக நடந்தேறியது.
அன்று முதல் இன்றுவரை, அதாவது, ஒரு வருட காலமாக சரீனாவின் இல்லற வாழ்வு இன்ப மயமாகவே கழிகிறது. சல்கா உம்மாவும், தனது மகளின் நிழலிலே குடும்ப பாரம் எதுவுமே இன்றி வாழ்ந்து வருகிறாள்.
இன்று ஹஜ்ஜுப் பெருநாளாகையால் அதிகாலையிலி ருந்தே அவளது மனம் மிகவும் இரம்மியமான ஒரு நிலையிலே காணப்படுகிறது.
அடுக்களைக்குள் இறைச்சியை வைத்துவிட்டு அங்கே கிடந்த ஓர் இருக்கையிலே உட்கார்ந்திருந்த சல்கா உம்மா. திடீரென்று இரண்டு கரங்களையும் மேலே உயர்த்தி இறை வனிடம் பிரார்த்திக்கத் தொடங்கினாள்.
“அல்லாஹ் என்ட குடும்பம் சிறப்பாக வாழ்றத் துக்கு, முக்கியமாக என்ட மகள்ள வாழ்க்க இத்தனை சிறப்பாக அமைறத்துக்குக் காரணமாகவிருந்த இஸ்மாயில் வட்டானைக்கும், அவர்ர மகன். மனைவி ஆகியவர் களுக்கும் இவ்வுலகத்திலயும், மறுஉலகத்திலயும் சகல பாக் கியங்களையும் கொடு! இஸ்மாயில் வட்டானையினதும், அவர்ர மகனினதும் தியாக மனப்பான்மையை எங்கட சமூகத்தில் மிகவும் அதிகமானவர்களுக்கு, விஷேடமாக. நல்ல வசதி படைத்தவர்களிலே மிக மிக அதிகமானவர்களுக்குக் கொடு!” என்று சல்கா உம்மா பிரார்த்தித்து விட்டு அமைதியானாள்.
அப்போது அங்கு வந்த சரீனா, ”உம்மா,நானும் மச்சானும் குளிச்சிட்டம். நீங்களும் சொணங்காமப் போய் குளிச்சிக்கிட்டு வாங்க. நாம இன்டைக்கு நேரத்தோடயே தொழுகிறத்துக்குப் போவம்” என்றாள்.
அதனைச் செவிமடுத்த சல்கா உம்மா,தான் உட்கார்ந் திருந்த இருக்கையைவிட்டு விசுக்கென்று எழுந்தாள்.
“அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர் …லாயி லாஹ… இல்லல்லாஹு அல்லாஹு அக்பீர்…” என்ற தக்பீர் முழக்கமும்,
“பட்… படார்..பட பட..பட பட… பட்…படார்…” என்ற பட்டாசுகளின் முழக்கமும், இப்போது எங்கும் எதிரொலித்து இன்று ஹஜ்ஜூப் பெருநாள் என்பதைப் பகிரங்கப்படுத்திக் கொண்டிருந்தன.
– 1994 மே 10.
– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.
![]() |
உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க... |