தண்டனை
கதையாசிரியர்: நா.க.தங்கரத்தினம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 385
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“அத்தான்! உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. எப்பொழுது வருவீர்கள்?”
“அத்தான் ! உங்களுக்கு ஒரு மகன் பிறக்கப் போகிறான். திருமணமாகி ஐந்து மாதங்களாகின்றன. உங்களுக்கு என்னைப்பார்க்க ஆசை இல்லையா?”
“அத்தான்! நான் கடிதம் எழுதிக்கொண்டே இருக் கிறேன். நீங்களும் பதில் எழுதிக் கொண்டே இருக்கி றீர்கள். ஒரு முறையாவது என்னை வந்து பார்க்கக் கூடாதா? சண்டை தொடர்ந்து நடந்தால் லீவுதர மாட்டார்களா.?”
“அத்தான்! உங்கள் திருமுகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தாலே எனக்குப் பசிக்காது. இனிமேல் உங்கள் திருமுகத்தைப் பார்க்க எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்காதா ? ”
இவ்வாறெல்லாம் தனது மனைவி வசந்தி எழுதிய கடிதக் கட்டுகளை எடுத்து ஒவ்வொன்றாகத் திருப்பித் திருப்பி வாசித்துக்கொண்டிருந்தான் சொக்கன். எப் போது தன் மனைவியின் முன்னால் போய்த் திடீரெனக் குதித்து அவளைத் திகைப்பில் ஆழ்த்தலாம் என்று துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த அவனது உள் ளத்தை “உங்களுக்கு ஒரு மகன் பிறக்கப்போகிறான்” என்ற தடித்த எழுத்துச் சொற்கள் மேலும் உணர்ச்சி வைத் தட்டி எழுப்பின. அத்தான்! இனிமேல் உங் கள் அன்பு முகத்தைப் பார்க்க எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்காதா ? ” அவனை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த இச்சொற்கள்.
அப்போது, உனது மனைவிக்குச் சுகமில்லை. மூளாய் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்” என்ற தந்தி அவனது கைக்குக் கிடைத்தது. எல்லாவற்றை யும் பொறுத்திருந்த அவனுக்குத் தன் மனைவி சுகவீன மாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளாள் என்றதை மாத்திரம் பொறுக்கமுடியவில்லை. தந்தியை எடுத்துக் கொண்டு தன் தலைவனிடம் ஓடினான். தலைவனோ லீவு கொடுக்க மறுத்துவிட்டான்.
“சேர்! எனது மனைவிக்கு ‘சீரியஸ் கட்டாயம் எனக்கு ‘லீவு’ தரவேண்டும்.”
“சமாதானம் ஏற்படும்வரை ஒருவருக்குமே ‘லீவு ‘ தரமாட்டேன். கெட்டவுட்!”
“சேர்!….. ”
“பிளீஸ் கெட்டவுட்”
“சேர்! என்னுடைய ஐந்து வருட ஒப்பந்தமும் இன்றுடன் முடிவடைகிறது. இனிமேல் நான் தொடர்ந்து வேலைசெய்ய விரும்பவில்லை. இன்றுடன் எனது பதவியைவிட்டு விலகுகிறேன்.”
இராஜினாமாக் கடிதத்தை எழுதிக்கொடுத்துவிட்டுப் பூஞ்சணம் பிடித்திருந்த தனது புதிய சூட்கேசையும் எடுத்துக் கொண்டு யாழ்தேவியில் புறப்பட்டான் சொக்கன். சரியாக இரண்டு மணிக்கு ‘யாழ்ப்பாண ஸ்ரேச’னில் யாழ்தேவி நின்றது.
யாழ்ப்பாண பஸ்ராண்டில் அடுக்கப்பட்டிருந்த பஸ்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகப் பார்த்து விட்டு, வட்டு – சித்தன்கேணி பஸ்ஸில் ஏறினான்.
பஸ் ஒருக்கால் உறுமிவிட்டு ஓடத்தொடங்கியது. கல்லுண்டாய் வீதியால் ஓடி அராலியூர் ‘மொட்டைப் புளியடி ‘யை பஸ் அண்மியதும் டாங்கு டுக்குடு .. டாங்கு டுக்குடு ” என்ற பறையோசை அவன் காதுக்கு இலேசாகக் கேட்டது. தனது மனைவியைக் கண்டு அவளுக்குத் தனது ஆசை முத்தங்களை அவளது மாம் பழக் கன்னங்களில் கொடுக்கவேண்டுமென்ற ஆவ லால் அவன் தனது ஊரான மொட்டைப் புளியடியில் இறங்கவில்லை. பஸ் மேலேபோய் வட்டுக்கோட்டைச் சந்தியில் நின்றது.
வட்டுக்கோட்டையிலும் கிறிஸ்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவது யாழ்ப் பாணக் கல்லூரி. இக்கல்லூரிதான் யாழ்ப்பாணத்தில் முதன்முதல் ஆரம்பமானது. இலங்கையில் உள்ள தமி ழர், சிங்களவர், முஸ்லிம்கள், பறங்கியர், ஆங்கிலேயத் அனைவரும் ஒன்று சேர்ந்து படிக்கும் ஒரே ஒரு உயர் தரக் கல்லூரி இதுதான். இக்கல்லூரியின் வானளாவ உயர்ந்த கட்டடங்கள் கட்டடங்களுக்கருகே ஓங்கி வளர்ந்த அழகிய மரங்கள் – மரங்களுக்கு அடியிலே உல்லாசமாக உரையாடிக் கொண்டிருக்கும் மாணவச் சிறார் – அத்தனையும் மனத்தைக் கவரும் காட்சிகள். கல்லூரி மணி அடித்ததும் மாணவ மாணவியர் திரள் திரளாக ஓடிவந்து பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள். சீறி விட்டு ஓடத்தொடங்கியது பஸ்.
வட்டுக்கோட்டையிலிருந்து சித்தன்கேணியை நோக்கி ஓடிச்கொண்டிருந்த பஸ் ஒரு குலுக்குக் குலுக்கிவிட்டு மாவடிக் கடையில் நின்றது. ‘மா வடிக்கடை என்றால் எல்லோருக்கும் தெரியும். ஆனால், மூளாய்ச் சந்தி ‘ என்றால் அதிகமானவர்க ளுக்குத் தெரியாது. இப்பெயர் இன்று நேற்று வந்த தல்ல. பஸ் கொம்பனி ஆரம்பமான காலம் தொடக்கம் இப்பெயர் இருந்துகொண்டே வருகின்றது. இச்சந்தியில் மாமரத்துக்குக் கீழே ஒரு கடை இருப்பதால் தான் இப்பெயரை வைத்திருக்கிறார்கள். மாவடிக்கடை யில் பஸ் நின்றதும் சூட்கேசைத் தூக்கிக்கொண்டு இறங்கினான் சொக்கன்.
சொக்கன் மாவடிக்கடையில் ‘மூளாய் றோட்’ பஸ் ஸைப் பார்த்துக் கொண்டிருந்தான். இச்சந்தியில் நின்றால் எத்தனை எத்தனையோ காட்சிகளையெல்லாம் காணலாம். பெண்மணிகள் பலர் பழம், பாக்கு வெற் றிலை, தேங்காயுடன் தட்டங்களை ஏந்திக்கொண்டு சித் தன்கேணிப் பக்கமாகச்சென்று கொண்டிருந்தனர். “இவர்கள் எந்தக் கோவிலுக்குப் போகிறார்கள்” என்றான் சொக்கன்.
சித்தன்கேணிப் பிள்ளையார் கோவிலுக்கு. ‘நல்லூர்க் கந்தசுவாமி கோவிலைப்போல இதுவும் இப்ப பிரபல்யமாகிவிட்டது ” என்றார் அருகில் நின்ற சக பிரயாணி ஒருவர் பார்ப்போரை மயங்க வைக் கும் நல்ல தேகக்கட்டுள்ள ஆண்கள் பலர் பின்னே பறியும் முன்னே வலைகளும் தொங்க மரக்கோலைக் காவிக்கொண்டு வட்டுக்கோட்டைப் பக்கமாக தங்களுக்குள் பலதும் பேசிக்கொண்டும் சிலங்கிய வலைகளைச் சரிசெய்துகொண்டும் சென்றனர். இவர்கள் போகும் அராலித்துறை இங்கிருந்து நாலு மைல் தொலைவில் உள்ளது.
பஸ், மூளாய் ஆஸ்பத்திரிக்கு முன்னால் நின்றதும் விழுந்தடித்துக்கொண்டு இறங்கிய சொக்கன் ‘வெளியே’ என்று எழுதியிருப்பதையும் கவனியாமல் ஆஸ்பத்தி ரிக்கு உள்ளே சென்று அங்குமிங்குமாக ஓடினான். அவன் தட்டுத்தடுமாறி அலைந்து திரியும்போது, அவன் முன்னே வந்த நர்ஸ் ஒருத்தி “ஆரைத்தேடுறியள்?” என்றாள்.
“அராலி மொட்டைப் புளியடியிலிருந்து வந்திருக் கும் கர்ப்பிணி …” என்று இழுத்தான் சொக்கன்.
“அவவின் பெயரென்ன?”
“மிஸ்ஸிஸ் சொக்கன் ”
“ஓ! அவவா, அங்கே பாருங்கோ வைத்தியர் குமாரசாமி கட்டிக்கொடுத்த கட்டிடம் இருக்குதல்லோ அதுக்குப் பக்கத்திலை இருக்கிற ‘பில்டிங்கிலை ‘ இரண் டாவது ‘றூமிலை’ இருக்கினம். போய்ப் பாருங்கோ” இரண்டு நாட்கள் சுகவீன லீவில் இருந்துவிட்டு அன்று வேலைக்கு வந்திருந்த நர்ஸ் கூறிவிட்டு டொக்…. டொக்… என்ற ‘பூட்ஸ் ‘ சத்தத்துடன் நகர்ந்தாள்.
வைத்தியர் குமாரசுவாமி கட்டிக் கொடுத்த ‘பில்டிங்’ கைத் தாண்டிச் சென்றதும் ‘மிஸ் கலைமதி நேசிங் ஹோம்’ என்று எழுதப்பட்ட போர்ட்பலகை’ அறை யின் கதவில் தொங்கிக் கொண்டிருந்தது. சொக்கன் கதவைத் தட்டினான் அவசரத்துடன். ” யேஸ்! உள் ளுக்கு வேலை இருக்கிறது உந்த வாங்கிலை கொஞ்ச நேரம் இருங்கோ” என்ற சொற்கள் அவசரப்பட்டுக் கொண்டிருந்த சொக்கனுக்கு ஆத்திரத்தைக்கிளப்பியது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு வாங்கிலே அமர்ந்தான்: மீண்டும் மிஸ் கலைமதி நேசிங் ஹோம்’ அவன் கண்ணுக்குத் தெரிந்தது. ‘கலைமதி’ என்ற பெயர் அவ னுக்குக் கடந்த காலத்தை நினைவு படுத்தியது.
2
அராலியூர்… நெல்விளையும் பூமியால் சூழப்பட்டு உணவுக்கே குறைவற்ற செல்வம் கொழிக்கும் கிராம மாய்த் திகழ்வது. அக்கிராமத்தின் வடக்கே யாழ்ப்பா ணத்தையும் காரைநகரையும் இணைக்கும் கல்லுண்டாய் வீதி. அந்த வீதியிலே இருப்பதுதான் செட்டியாமடம். தெட்டியாமடம் என்று சொல்வதும் மொட்டைப் புளி டி என்று சொல்வதும் அந்த ஊரைத்தான். அந்த மொட்டைப் புளியடியில் இருந்து பார்த்தால் அக்கிரா மத்தின் சிறப்பினை; வெளியூரவர்களுக்கெல்லாம் பறை சாற்றிக்கொண்டிருக்கும் மாண்பு மிக்க மயிலியப்புலக் கந்தசுவாமியார் ஆலயத்தின் பிரமாண்டமான கோபு. ரம் காட்சியளிக்கும்.
அக்கிராமத்தில் படித்தவர்கள் இருக்கிறார்களா? என்று யாரையாவது கேட்டால் ஏன் படிப்பு ? எங்களைச் சுற்றி வயலிருக்கிறது. எங்கள் கையிருக்கிறது. படித்தால்தான் வாழலாம்; படிக்காவிட்டால் வாழ முடி யாதா? என்ற கேள்விகள் ஆயிரக் கணக்கில் எழும். ஆனால் படித்தவர்கள் ஒருவரும் இல்லையென்று சொல்ல முடியாது. அக்கிராமத்தில் படித்தவர்களும் இருக் கிறார்களென்று சொல்வதற்கு ஒரே ஒரு ஆணும் ஒரே ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். அவர்கள்தான் சொக்கன் கலைமதி.
சொக்கன் கிறிஸ்தவர்களின் உதவியுடன் எட்டாம் வகுப்பில் எட்டு வருடம் இருந்து விட்டுப் பாடசாலையை விட்டு வெளியேறியவன். அவ்வூரில் படித்தவன் காற் சட்டை போட்டவன் அவன்தான் என்றால். அவனைச் சுற்றி வளைக்கும் பெண்களைச் சொல்லவா வேண்டும் ?
இராணுவத்திற்கு ஆட்களைச் சேர்த்த காலம். சொக்கனுக்கும் இராணுவத்தில் வேலை கிடைத்துக் கொழும்புக்குப் போய்விட்டான். கொழும்பில் நாலு வருடங்களைக் கழித்துவிட்டுப் பெற்றோரைப் பார்க்கும் நோக்கமாக வீடு வந்து சேர்ந்தான். பெற்றோரைப் பார்க்க வந்தவனுக்குக் கன்னிகாதானம் செய்ய முன் வந்தனர் பலர். அதில் கலைமதியும் ஒருத்தி.
கலைமதி – சொக்கனின் முறைப்பெண். கலைமதிக் கும் சொக்கனுக்கும்தான் திருமணம் செய்வதென்று அவர்கள் சிறுவயதாக இருக்கும் பொழுதே முடிவு கட் டப்பட்டிருந்தது. கலைமதி பார்ப்போரைக் கவரும். பகட்டான பெண்ணல்ல, ஆனால் பண்புள்ளவள். கலைமதியைச் சொக்கனுக்குப் பிடிக்கவில்லை. எப்படியிருந்தும் அவளைத் தட்டிக்கழிக்க வேண்டுமென்று காத்திருந்தான்.
சொக்கன் அழகன். அவனுக்கும் அழகைத்தான் பிடிக்கும். தனக்குக் கிடைப்பவள் அழகியாக இருக்க வேண்டுமென்று கனவு கண்டான்.
“அண்ணை! என்ரை மனிசனுக்கும் வயதாகிவிட் டுது. அவர் இருக்கும்போதே கலைமதியின் திருமணத் தைச் செய்துவிடவேண்டுமென்பதுதான் எங்கள் எல் லோரது விருப்பமும். சொக்கனும் உத்தியோகமாகி பல வருடங்களாச்சு. இனித் திருமணத்தைச் செய்து, வைக்கலாமென எண்ணுகிறோம்” ஏன்றாள் கலைமதி யின் தாய் தங்கமணி.
“அதுக்கென்ன, நானும் அதைத்தான் எதிர்பார்த் துக்கொண்டிருக்கிறேன் ” என்றார் சொக்கனின் தந்தை சிவானந்தர்.
“எல்லாத்துக்கும் முதலில் சாத்திரியைக் கூப் பிட்டுச் சாதகப் பொருத்தத்தைப் பார்ப்போம் ” என்றாள் இந்திராணி.
“தங்கச்சி! உனக்கு விரும்பிய ஒரு சாத்திரி யைக் கொண்டு பார்ப்போம் ” என்றார் சிவானந்தர்.
“சாத்திரி செல்லமுத்தர் தான் கெட்டிக்காரர் எண்டு சொல்லுகினம். ஆனால் எனக்கோ சாத்திரத்திலை எள்ளளவும் நம்பிக்கையில்லை.”
எத்தனை பொய்யைச் சொன்னாலும் தனக்குக் காசு தான் முக்கியம் என்று தவியாத் தவிக்கும் சாத்திரி சரவணை வந்தான்.
“பெண்ணுக்கு செவ்வாய் தோஷம், சொக்கனைக் கட்டிக் கொடுத்தால்… சொக்கன் இறக்க நேரிடும் ” என்றான் சொக்கனிடம் முதலில் ‘அட்வான்ஸ்’ வாங்கிய சாத்திரி சரவணை.
“ஐயோ! எனக்கு இருப்பது ஒரே ஒரு மகன். உனக்கு இருப்பதும் ஒரே ஒரு மகள். இந்தக் கலியாணமே வேண்டாம்” என்று பிடியாய்ப் பிடித்தாள் இந்திராணி.
“மச்சி! உங்களுக்கும் எங்களுக்கும் இருக்கிற உறவு நீடிப்பதற்கு இந்தக் கலியாணம்தான், காரணமாக இருக்கும். கலைமதியை நீங்கள் ஏற்காவிட்டால் இனி நீங்கள் யாரோ! என்றுதான் வரும்” என்றாள் தன் மகளுக்குச் சொக்கனைக் கலியாணம் செய்து வைக்கவேண்டுமென்ற ஆவலால் தங்கமணி.
“என்னணை மச்சாள்! எங்கடை பிள்ளையள் இரண் டும் திருமணம் செய்து இறப்பதிலும் பார்க்க நாங்கள் பிரிந்திருப்பது கூடாதோ” என்றாள் இந்திராணி.
“எனக்கோ உந்தச் சாத்திரத்திலை எள்ளளவும் நம்பிக்கையில்லை ” என்றாள் தங்கமணி.
“சும்மா! இராத்தை போன வருசமெல்லாம் அவன் கந்தனைச் செய்யாதையடா, செய்யாதையடா என்று சாத்திரி சரவணை சொன்னதாமெல்லே, அவனோ சாத்திரியின் சொல்லைத் தட்டிப்போட்டுத் திருமணம் செய்தவனெல்லே, பிறகு என்ன நடந்தது?”
“சும்மா போணை! சாத்திரிமார் குருட்டுவாக்கிலை சொல்லுகிறது சிலவேளை சரி வந்து விடுகிது.”
“நீயேன் உன்ரை மகளைப் பற்றிக் கவலைப்படுகிறாய்? நாங்களெல்லோ ஆரையும் பிடிச்சுக் கலியாணம் செய்து வைப்போம்.”
“உதை மாத்திரம் சொல்லாதை மச்சாள் உன்ரை மேனைக் கட்டிக் கொடுக்க மாட்டேன். என்று சொல்லுறத்துக்கு இப்படிச் சுத்தி வளைக்காதை ” என்று சீறினாள் தங்கமணி.
“உண்மையைத்தானே சொல்லுறன்.”
“என்ரை மேள் உன்ரை மேனைச் செய்யாவிட் டால் வேறை கல்யாணம் செய்வாள் எண்டு நினைக்கிறியே. அதுதான் என்ரை மேளிட்டை முடியாது. அவள் உன்ரை மேனைச் செய்யாவிட்டால், தான் கன்னிப்பெண்ணாகவே இருப்பதாக எனக்கு முன்னமே சொல்லியிருக்கிறாள்.”
சொக்கன் – கலைமதியின் கலியாணம் பற்றி இந்தி ராணிக்கும் தங்கமணிக்குமிடையே பெரிய வாக்கு வாதம் ஏற்பட்டது. தங்கமணிக்கு இதை நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது. ஆத்திரத்தை அடக்கமுடி யாமல் “இவ்வளவுகாலமும் என்ரை மேளைச் செய்கிறனெண்டு போட்டு இப்ப ஏமாத்திப்போட்டியள். சரி சரி, எல்லாத்துக்கும் கடவுள் இருக்கிறார். முருகா! நீயொரு உண்மையான தெய்வமெண்டா இதுக்குச் சரியான தண்டனை கொடுக்கவேணும் ” என்று கூறிக் கொண்டு இந்திராணியின் வீட்டு முற்றத்தில் இருந்து மண்ணை அள்ளித்தூவிவிட்டு நழுவி இருந்த முந்தா னைச் சீலையைச் சரியாக இழுத்துச் சொருகிக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினாள் தங்கமணி.
“இந்தாடியாத்தை! இந்தத் தேத்தண்ணியைக் குடிச்சுவிட்டு நீ திட்டுற மாதிரித் திட்டிக்கொண்டு போ.”
“உன்ரை தேத்தண்ணியைக் கொண்டுபோய் நாய்க்கு ஊற்று” என்று கூறிக்கொண்டே வேகமாக நடந்தாள் தங்கமணி.
உலைவாயை மூடினாலும் மூடலாம் ஆனால் ஊர் வாயை மூடுவதென்றால் சாமானியமான காரியமா ?
இந்திராணிக்கும் தங்கமணிக்கும் இடையே நடந்த கலியாணப் பேச்சு வார்த்தைகளும் இனிமேல் கலை மதிக்கும் சொக்கனுக்கும் கலியாணம் நடக்காது என் பதும் காட்டுத்தீபோல் ஊராருக்கெல்லாம் தெரிந்து விட்டது. படித்தவன் காற்சட்டை போட்டவன் கொழும்பிலே உத்தியோகம் பார்ப்பவன் என்றால் பணக்காரர்கள் சும்மா இருப்பார்களா? என்ரை மேளைத் தாறன், உன்ரை மேளைத் தாறன் என்று பத்தாயிரம், பதினையாயிரம், இருபதினாயிரம் என்று சீதனத் தொகையை ஏற்றிக்கொண்டே போனார்கள்.
சரவணையர் … அராலியூரில் பேர்போன பணக்கா ரர். பத்திரிகை வாசிக்கும் அளவுக்குப் படித்தவர்க ‘ களுள் அவரும் ஒருவர். எந்த நேரமும் புதினப் பத்தி ரிகைகளை எடுத்து வாசித்துக்கொண்டு – மற்றவர்க் ளுக்கு வாசித்துக் காட்டிக்கொண்டே இருப்பார். ஊர்ப் புதினங்களோ உலகப் புதினங்களோ அவருக்குத் தெரி யாது இருப்பதென்றால் அது முயற்கொம்புதான்.
“சரவணையண்ணை ! சிவானந்தற்றை மேனுக் கெல்லே கலியாணப் பேச்சுக்கள் நடக்குது. நீங்களும் உங்கடை மேளுக்குக் கேட்டுப் பாருங்கோவன் என்றார். நாள்தோறும் சரவணையரிடம் வந்து புதினங்களை அறிபவர்களில் ஒருவர்.
“இஞ்சாரடா தம்பி! எனக்குந்தக் கவிண்மேந்து உத்தியோகமெண்டாப் பிடிக்காது. அதுவும் ஆமி யெண்டா அப்பப்பா!… அது ஆபத்துக்கே உதவாது” என்றார் சரவணையர்.
“நீங்களும் ஒரே ஒரு மகளைத்தான் வைச்சிருக்கிறி யள். அந்த மகளுக்கு ஒரு உத்தியோககாரனைச்செய்து கொடுக்க உங்களிட்டைக் காசு இல்லையோ ? ‘ என்றார் இன்னொருவர்.
“சும்மா போ மச்சாள் ! அவன் கந்தையன்ரை பெட்டையையல்லோ பேசியிருந்தது. அவன்ரை பெட்டை இன்னும் காத்திருக்கையில் நாங்கள் தலைப் போடுவது சரியாகுமோ?” என்றார் சரவணையர்.
“அந்தக் கலியாணம்தானே குழம்பிப்போச்சு.”
“மெய்யாய்த்தானோ? அப்பிடியெண்டா நாங்களு மொருக்காத் தட்டிப் பாப்பம். எப்படியென்றாலும் கூழைக் கஞ்சியைக் குடிச்சாலும் உந்த ஆமிக்கு. கட்டிக்குடுக்க மனம் ஒரு மாதிரிக் கிடக்கு” என்றார். சரவணையர்.
“சும்மா கதையை விட்டுவிட்டுப் போய்க்கேட்டுப் பாருங்கோ.”
“சரி. சரி! ஒருக்காத் தட்டிப் பாப்பம்.”
3
சரவணையருக்கும் – சிவானந்தருக்குமிடையே கல் யாணப் பேச்சுவார்த்தை நடந்து, இருபத்தையாயிரம் சீதனத்துடன் ஒப்பேறியது. அடுத்த வாரம்…… ‘உற் றார் உறவினர் புடைசூழ – மேள வாத்தியங்கள் முழங்க, வெகு கோலாகலமாகத் திருமணம் நடைபெற்று முடிந்தது. மாதம் ஒன்று கழிந்தபின், “லீவு முடிந்து விட்டது உடனே வரவும் ” என்று அவனுக்குத் தந்தி வந்திருந்தது. தன் அன்பு மனைவிக்கு ஆசை தீர முத்தங்கள் கொடுத்துவிட்டுக் கொழும்புக்குப் புறப்பட்டான்.
கொழும்புக்கு வந்தபின் அவனால் ஒருநாள்கூட வசந்தியைப் பிரிந்திருக்க முடியவில்லை. எதைப் பார்த் தாலும் எதை எடுத்தாலும் வசந்திதான் அவன் கண் ணுக்குத் தோன்றினாள். சாப்பிடும்பொழுது வசந்தி அருகிலிருந்து சாப்பாடு கொடுப்பதாகவே நினைப்பான். வானொலியில் பாட்டு நடந்தாலும் அப்பாட்டை வசந் தியே பாடுகிறாள் என்று பாட்டையே கேட்டுக்கொண் டிருப்பான். வீதியால் போகும் அழகான பெண்களை யெல்லாம் தன் மனைவி வசந்தியென்றே திரும்பித் திரும்பிப் பார்ப்பான். வசந்தியைக் கொழும்பில் கொண்டுவந்து வைத்திருப்பான்; ஆனால், அவனுக்கு’ வீடு கிடைக்கவில்லை. எப்படியும் வீடு ஒன்று எடுத்து வசந்தியைத் தன்னுடன் வைத்திருக்கவேண்டுமென்ற ஆவலால் வீடு எடுப்பதற்குத் தன் நண்பர்களுடன் மருதானைப் பக்கமெல்லாம் திரிந்தான். கொழும்பிலே வீடு எடுப்பதென்றால் சாமானியமான காரியமா? ஒரே ஒரு கார்க்கொட்டில்தான் இருந்தது. அந்தக்கொட்டி லையாவது எடுத்துவிடவேண்டுமென்ற நோக்கத்தோடு வாடகையைக் கேட்டான். வாடகை முப்பது ரூபா. கீமணி’ ஐஞ்நூறு. அட்வான்ஸ் ஆயிரம் … என்ற னர். அவனுக்குள் தண்ணீரே இல்லாமற்போய்விட்டது.
“அடுத்த கிழமை வருகிறோம் என்று சொல்லிவிட் டுக் கொட்டாஞ்சேனைப் பக்கமாகச் சென்றான். கொட் டாஞ்சேனையிலும் வீடு இல்லாமல் திரிவோரைப்பார்த்து விட்டு வீடு எடுக்கும் நோக்கத்தையே கைவிட்டுவிட்டான்,
“அத்தான்! என்னை எப்பொழுது கொழும்புக்குக் கூட்டிக்கொண்டு போவீர்கள் ? கொழும்பைப் பார்க்க வேணுமெண்டு ஒரே ஆசையாக இருக்கிறது. வீடு எடுத்துவிட்டீர்களா? உங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தால்தான் என் மனம் நிம்மதியடையும்”. அவள் எழுதிய கடிதம் அவனை ஊசலாடச் செய்தது.
“வசந்தி, உன்னைக் கூட்டிக்கொண்டு வந்து என் னோடு வைத்திருக்க வேண்டுமென்று எவ்வளவோ பாடு பட்டேன். வீடுதான் எடுக்கமுடியாமல் இருக்கிறது. எனக்கோ லீவும் தருகிறார்களில்லை. சண்டை சமாதானமானதும் லீவு எடுத்துக்கொண்டு ஓடோடி வந்து உன்னைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்” என்று அவள் எழுதிய கடிதத்திற்குப் பதில் எழுதியிருந்தான் சொக்கன்.
***
‘கிறீச்’ என்ற சத்தத்துடன் கதவைத் திறந்ததும் தன் கடந்தகால வாழ்க்கையை நினைத்துக்கொண்டி ருந்த சொக்கன் திடுக்குற்று எழுந்தான்.
‘அத்தான்!” என்றாள் கலைமதி.
“கலைமதி நீயா…?”
“ஆமாம் நான்தான் அத்தான்! உங்களுக்கு வசந்தி….” என்று இழுத்தாள் கலைமதி.
“என்ன….?”
“நீங்கள் வீட்டுக்குப் போகவில்லையா?”
“கொழும்பிலிருந்து நேரே இங்குதான்வருகிறேன்”
“அத்தான்!…” என்று அழுதாள் கலைமதி.
“ஏன் அழுகிறாய்?’
“நீங்கள் …… பறிகொடுத்துவிட்டீர்கள் அத்தான்!”
“யாரை…… ”
“உங்கள் மனைவி வசந்தியைத்தான்.”
“ஐயோ! என்மனைவி வசந்தியைப் பறிகொடுத்து விட்டேனா ? வசந்தி…… வசந்தி என்னைப் பார்க் காமல் போய்விட்டாயே! நான் என்ன பிழைசெய்தேன் உனக்கு…”
“அத்தான்!… அதோ உங்கள் பிள்ளை.”
“கலைமதி! என்னை மன்னித்துவிடு. உனக்கு நான் செய்த துரோகத்திற்குத் தகுந்த தண்டனை எனக்குக் கிடைத்துவிட்டது. நீ ஒரு கற்புக்கரசி. உனது. கண் ணீர்தான் எனது வாழ்வையே அழித்துவிட்டது” என்று அழுது அழுது மன்னிப்புக் கேட்டுவிட்டுத் தனது பிள் ளையைத் தூக்கி அவளது கையில் கொடுத்து இன்று முதல் இப்பிள்ளைக்கு நீதான் தாய் என்று சொல்லி விட்டுப் பறையோசை கேட்கும் திசையை நோக்கி ஓடினான் சொக்கன்
– 26-07-1964, ஈழநாடு.
– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.
![]() |
சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க... |
