கதையாசிரியர்: ,
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 26, 2024
பார்வையிட்டோர்: 1,476 
 
 

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கேலிக்கும் கிண்டலுக்குமென்றே தோட்டங்களில் போ எடுத்துக் கொண்டவர்கள் மச்சான் மாமன் முறைக் காரர்கள் தான்!– 

இதில் பழனி மாமன் தான் ஆகப் பிரசித்தி பெற்ற மனிதர்…….! 

ஒரு நாள் அந்தி நேரம்… 

பழனி மாமன் அர்ச்சுனன் வீட்டுக்குள் நுழைந்து அவரது பாணியிலேயே கதையைத் தொடங்கினார். 

‘ஏண்டா அர்ச்சுனா……? என்னமோ எனக்கு விருந்து போட போறேன்னு கேள்வி பட்டேன்….. உண்மையா…….? ஒன் ஊட்டுல சாப்பிட்டு ரொம்ப நாளாச்சி’ என்றார். 

பழனி மாமன் அர்த்தமில்லாமல் எதையும் கதைக்க மாட்டார் என்று அர்ச்சுனனுக்குத் தெரியும். அவர் கஷ்டவாதியாக இருந்தாலும் அவனுக்கு உதவி செய்வதற்கு முன் நிற்பார். 

‘இந்த கலி காலத்துல நம்ம சனங்க …… எவ்வளவோ நடத்த வேண்டிய காரியங்களயெல்லாம் மறந்து போறாங்க……. சம்பிரதாய சமாச்சாரங்கள் கூட அவங்களுக்கு ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு ஏம்பா.. அர்ச்சுனா…….! ஒம் பொண்ணுக்கு காது குத்தினா என்னா இப்போ வயசு சரிதானே…….?’ என்றார். 

‘ஆமாங்க மாமு……! ஆமாங்க மாமு…….! புள்ளக்கி இப்போ வயசு ஆறு முடிஞ்சிரிச்சி. சம்பளம் போட்டதும் காரியத்த ஒடனே நடத்திவிடுவோம்’ என்றான் அர்ச்சுனன். 

‘அப்படி செய்யக்கூடாது! மொதலாவது பண்டாரத்த சந்திச்சி’ ஒரு நல்ல நாள் பாத்திட்டு அப்புறம் தேதி வைய்யி…….!’என்றார். 


அந்த இரவு……. அர்ச்சுனனும் பாஞ்சாலியும் அடுப்பங்கரையில் திட்டம் தீட்டினார்கள். குடும்பத்தில் இதுதான் முதல் காரியம் ……. பாஞ்சாலி ஆடம்பரமாகக் காது குத்துக் கல்யாணம் செய்ய விரும்பினாள். அர்ச்சுனன் சிக்கனமாகச் சாதாரண நிகழ்ச்சியாக நடத்த விரும்பினான். 

இருவரும் முரண்படாமல் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்தார்கள். முழுக் காரியத்தையும் முடிப்பதற்கு முந்நூறு ரூபாய் ‘பட்ஜெட்’ போட்டார்கள். பாதிக் 60……. கங்காணியிடம் கடன் கேட்கும் நிலையில் இருந்தார்கள். 

நவம்பர் 16ம் திகதி நல்ல முகூர்த்தம் என்று பண்டாரம் திகதி குறித்துக் கொடுத்தார். அர்ச்சுனன் பழைய முறையிலும் காலத்திற் கேற்றபடியும் அழைப்பிதழ்களை ஏற்பாடு செய்தான். 

சொந்தக்காரர்களுக்கும் – தோட்டத்துக்குள்ளேயிருக்கும் நண்பர்களுக்கும் – தெரிந்தவர்களுக்கும் பழைய சம்பிரதாயப்படி ‘வெத்தல பாக்கு’ வைப்பதற்கு தன் மச்சானை அனுப்பினான். 

தூரத்துத் தோட்டங்களுக்கும் வேறு இடங்களுக்கும் அச்சுக் கந்தோரில் ‘காட்’ அடித்து அனுப்பினான்……. 

காரியம் நடப்பதற்கு முன்பே வீட்டைச் சுத்தம் செய்வதற்கு முனைந்தான். எல்லா சுவர்களுக்கும் ‘வெள்ள மண்ணு’ ‘தீத்தி’னார்கள். வீடு வெளிச்சமாகப் பளபளத்தது…… சுவர்களில் சிவப்பு, மஞ்சள், மண் நிறத்தில் வகை வகையாக கோலங்கள் வரைந்தார்கள். 

லயத்து வாசலில் மீனா புல்லிலும் பச்சைக் குழைகளிலும் பந்தல் கட்டி அலங்காரம் செய்தனர். பந்தலின் நான்கு மூலைகளிலும் குலை வாழை மரங்கள் நாட்டி பந்தலைச் சுற்றி மாவிலைத் தோரணங்கள் கட்டினார்கள். 

பந்தலின் நடுவில்……. சடங்கு செய்வதற்கு மண் திண்ணை போட்டு வைத்தார்கள். 

சாங்கியம் செய்யும் அந்த முதல் நாள் காலையில் வண்ணான் சேலை பல நிறங்களில் வந்தது. சேலைகளைக் கட்டி பந்தலை அலங்கரித்தனர். வருகின்ற விருந்தினர்கள் அமர்வதற்கு டோபி ‘மாத்து’ விரித்தான். 

ஆசாரியும் பரியாரியும் வந்திருந்தார்கள். பந்தலின் ஒரு புறத்தில்…… மேளம் அடிப்பவர் உறுமிகாரர்கள், நாதஸ்வரம் வாசிப்பவர்கள், ஆர்மோனியம், தப்லா, பஜா கோஷ்டி யாவரும் ரெடியாக அமர்ந்திருந்தார்கள். 

திண்ணைக்குப் பின்புறத்தில் பளபளக்கும் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. பழம், பாக்கு, வெற்றிலை நிறைந்த பித்தளைத்தட்டுக்கள் குவிந்திருந்தன. ஒரு கிண்ணத்தில் விளக்குக்கு அருகில்……. சந்தனம் குங்குமம் குழைத்து வைத்திருந்தார்கள். 

அர்ச்சுனன், அவனது மச்சான் நடேசன், நடேசனின் சகேரதரங்கள் யாவரும் வாசலில் நின்று விருந்தினர்களை வரவேற்றனர். 

ஜானகிக்கு ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் மூன்று கொத்து அரிசியும்…… மரக்கறிகளும்……. புது துணிகளும் கொண்டு வந்திருந்தார்கள். 

இந்த பரிசில்கள் யாவும் ‘சீர் வரிசை’ என்று வர்ணிக்கப்பட்டது. 

சீர்வரிசை கொண்டு வந்தவர்களின் பெயர், விலாசம், சீர் விபரங்கள் யாவற்றையும் ஒருவர் எழுதிக் கொண்டிருந்தார். 

அவர்கள் வீடுகளில் இப்படியான நிகழ்வுகள் நடை பெறும்போது கைம்மாறாக அர்ச்சுனன் அவர்களுக்கு இரட்டிப்பாகச் செய்வான் ……..! 


இப்போது……சடங்கு நடைபெறுவதற்கு முகூர்த்தம் நெறுங்கியது. ஆண்கள் கூட்டமாக குவிந்து அந்தச் சின்னப் பிள்ளையிடம் கேலி பேசினார்கள். பிள்ளையின் மச்சான் முறைப் பையன்கள்……. பல்லைக் காட்டிக் கிண்டல் பண்ணினார்கள். 

பழனி மாமன்……. நிகழ்ச்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அவரவர் காரியங்களைச் செய்வதற்குக் கட்டளையிட்டார். 

பழனி மாமனுக்கு பெண்கள் மத்தியில் அலாதிக் கெளரவம் இருந்தது. அவர் வயதில் கிட்டத் தட்ட நூறு கலியாணங்களை முடித்து வைத்துள்ளார் என்று பெருமை பேசினார்கள். 

அவர் சொல்படிதான் நிகழ்ச்சி இப்போது ஆரம்பமாகவிருக்கின்றது. 

‘மேளம்’ அடிப்பவர்களைப் பார்த்து ‘மொழக்கு’ வாசிக்கச் சொன்னார். 

அடுத்து உறுமியும் தமுறும் ஒன்றாகச் சேர்ந்து காதுகளை செவிடாக்கிக் கொண்டிருந்தன. 

அந்தச் சிறுமி……. ஜானகியை அவளது தகப்பன் திண்ணையருகே அழைத்து வந்தான். அருகில் நின்ற பாஞ்சாலி ‘மெல்ல…….! பாத்து’ என்று பவ்வியமாக மகளிடம் கூறித் தன் கலங்கிய கண்களைத் துடைத்தாள். 

“என்னா புள்ள…… ! சிணுங்குற……? ஓம் புள்ள கல்கண்டா கரஞ்சி போரதுக்கு…….? இந்த நேரத்துல கண்ண தேக்காத..!’ என்று அதட்டிய பழனிமாமன்…….ஆண்களின் பக்கம் திரும்பி……. ‘ஏய் இங்க பாரு…….! தாய் மாமன் நடேசா ……! என்னடா மாப்புள மாதிரி நாணி கோணிக்கிட்டு நிக்காதே…….! புள்ளய திண்ணயில ஒக்கார வைய்யி? விவூதி பூசி கெழக்கு பக்கம் திருப்பு…….! அப்புரம் ஒன் ‘ஜோலிய’ கவனி! ஏய் பண்டாரம்…….! ஓன் வேலைய ‘ரெடி’ பண்ணு…….” 

பண்டாரம் வேலையைக் கவனித்தார். 

வெற்றிலை, பாக்கு, பழம், சூடம், சாம்பிராணி, பத்தி யாவற்றையும் ஒழுங்காக வைத்தார். 

தேங்காய் உடைத்து விபூதி தட்டில் சூடத்தைக் கொளுத்தினார். மணியடித்துக் கற்பூரம் காட்டினார். இந்த நேரத்தில்….. பழனி நடேசனுக்குச் சைகை காட்டினார்………! அர்ச்சுனனும் மச்சானும் ஜானகி கைகளை தமாஷாக பிடித்தார்கள்…….! ஒரு நொடிக்குள் நடேசன் ‘நறுக்’ என்று காதைக் குத்தி நகையை மாட்டினான். மறு காதிற்கும் அப்படியே செய்தான். 

‘ஐயோ அம்மா. அந்த சின்னப் பொண்ணு வீறிட்டு கத்தினாள். 

“ஏய் சின்ன வாண்டு! ‘ஐயோ’ன்னு சொல்லாதே…….!’ பழனி அதட்டினார். ‘ஏய் மேளம், நாதஸ்வரம்…….! எங்க வாய பாக்கிறீங்க……? வாசிங்கடா…..! வாசி…….!’ 

திடீரென்று இசை முழங்கியது. 

ஆர்மோனியம்……. தப்லா… என்று பஜா கோஷ்டி கைவரிசையைக் காட்டியது. 

சின்னவள் வேடிக்கைப் பார்த்து அழுகையை மறந்தாள். 

மச்சான்மார்கள் கைதட்டிச் சிரித்தார்கள். 

பஞ்சாலி ஆனந்தக் கண்ணீரோடு ஜானகிக் குட்டியை வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள். 

‘அர்ச்சுனா சாப்பாட்ட ரெடி பண்ணு …….!’ பழனி அவசரப்பட்டார். இஸ்தோப்பு சுவரோரமாக பாயை விரித்துப் போட்டார்கள். ஆண்கள் கொஞ்சம். தொண்டையை நனைத்துக் கொள்வதற்கு உள்ளே போய் ஒரு ‘பெக்’ போட்டு வந்தார்கள்.! 

மீண்டும் பழனி மாமனின் உரத்தக் குரல் கேட்டது. 

‘சம்பந்தி பங்காளி வூட்டு ஆம்பிளைங்கள்……. அதாவது மச்சான்…… மாமன்……. சகபாடி……. எல்லாரும் வந்து ஒக்காரு…….!’ சாஸ்திரம் சம்பிரதாயம் பாத்துக்கிட்டு நிக்காத….. இது ஒங்க வூடு… 

உறவு முறைகள்படி எல்லாரும் வரிசையாக வந்து அமர்ந்தார்கள். ஒருவன் இலை விரித்தான். மற்றொருவன் கறி வகைகள் வைக்கச் சோறு பரிமாறப்பட்டது. 

விருந்து ஒரு மணித்தியாலம் வரை நடந்து முடிந்தது. 

பண்டாரம், ஆசாரி, டோபி, பாபர் எல்லோரும் தங்களுடைய பணத்தையும் ஏனைய பொருட்களையும் பெற்றுக் கொண்டார்கள். 


சாப்பாட்டுக்குப் பிறகு ஆண்கள் பந்தலில் ஒன்று கூடினார்கள். 

அன்பளிப்பு என்னும் ‘மொய்’ பிடிக்கும் நிகழ்வு ஆரம்பமாகியது. பழனி மாமன் ‘மொய் மணக்குது…….. மொய் மணக்குது…….’ என்று நிகழ்ச்சிக்கு உரமூட்டினார். சம்பந்தியும் பங்காளியும் குறைந்தது 51 ரூபாய் முதல் 21 ரூபாய் வரை வழங்க வேண்டும். 

பழனி அந்த அறிவித்தலை எல்லோரும் விளங்கிக் கொள்ளும்படியாக ராகம் போட்டு சொன்னார். 

சம்பிரதாய ஒழுங்கு முறைகளில் ஏதாவது குழறுபடிகள் நடந்துவிட்டால் பாதிக்கப்பட்ட உறவினர்கள் போர்க்குரல் எழுப்பிவிடுவார்கள். 

ஏதோ……. எங்கோ தவறு நடந்துவிட்டது! 

தம்பீ உங்களையெல்லாம் கவனமாகத்தான் கவனிச்சேன் ……. எப்படியோ ஒரு சின்னத் தவறு…… இந்தச் சின்னப்பொண்ணு காரியத்துல நடந்துப்போச்சு…….! இத மனசுக்கு எடுத்துக்காதீங்க……..! இது நீங்களும் நாங்களும் சேர்ந்து செஞ்ச காரியம். இது நம்ம காரியம்……… என்றார் பழனி. அவர் மீண்டும் தன் பிழையைத் திருத்தி ‘பங்காளி ராமையா மொய் 11 ரூவா… பங்காளி ராமையா மொய் 11 ரூவா…’ என்றார். 

அன்பளிப்புகள் உறவினர்களின் முறைப்படி வரவேண்டும். அன்பளிப்பு வழங்கியவர்களின் விபரங்கள் வழமைப்போல் எழுதப்பட்டன. 

பழனி மாமன் நடப்பவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார். வெற்றிலைத் தாம்பூலம் வலம் வந்து கொண்டிருந்தது…….. 

காதுக் குத்துக் கலியாணத்துக்கு வந்த விருந்தினர்கள் கலைந்து போகும் போது நடுச் சாமம் முடிந்தது. 

பழனிமாமன் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு பெருமையோடு வீட்டக்குத் திரும்பினார். 

– ஆங்கில தொகுதி: Golden earrings, Born to labour [by] C.V.Velupillai, Publisher: M.D.Gunasena & Co., 1970.

– தேயிலை தேசம், ஆங்கில மூலம்: சி.வி.வேலுப்பிள்ளை, தமிழில்: மு.சிவலிங்கம், முதற் பதிப்பு: பெப்ரவரி 2003, துரைவி பதிப்பகம், கொழும்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *