ஞானோதயம்




(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அறிவுப் பசி எடுத்துத் திரிந்தான் அவன். அணு அணுவாக ஞானத்தைக் கிரகிக்க வேண்டியிருந்தது அந்த மனிதனின் நிலை.
மலர்தோறும் சென்று சென்று தேன் சேகரிக்கும் ஈயைப் போல், அவன் புத்தகம் புத்தகமாகக் கற்றாக வேண்டி யிருந்தது ஒன்றின்மேல் ஒன்றாகக் கற்களை அடுக்கிப் பலமான சுவர் எழுப்ப நேர்வது போலவே, றிது சிறிதாகச் சேர்த்துத்தான் அறிவைப் பலப்படுத்த வேண்டியிருந்தது. தேகத்தில் உறுத்தும் சிறு துளியின் வேதனையைச் சகித்துச் சகித்து நல் முத்தைப் பிறப்பிக்கிற சிப்பிப் புழுவைப் போல், அவன் ஞானமுத்தைப் பெறுவதற்காக எவ்வளவோ வேதனைப் பட்டாக வேண்டி யிருந்தது.
முத்துக்களைச் சேகரிக்க ஆழ்கடலினுள் முக் குளிக்கத் துணிகிறவர்களைப் போலவே, அறிஞர்களும், சிந்தனையாளர்களும், ஞானிகளும், முன்னோர்களும் சிதறி விட்டிருந்த அனுபவ மணிகளைப் பெற ஞானக் கடலிலே திளைக்க வேண்டியிருந்தது. கரும்பாறைகளிடை ஒளிக்கோடுகள் போல் நெளியும் தங்க ரேகைகளைக் கண்டு அங்கு பதுங்கிக் கிடக்கும் பொன்னைப் பெயர்த் தெடுக்கப் பாடுபடுகிற தொழிலாளிகளைப் போலத்தான், அவனும் ஞானச் சுரங்கத்திலே ஒவ்வொரு கணமும் ஓயாது உழைக்க வேண்டியிருந்தது.
ஞானக்கடல் மீது அறிவு யாத்திரை செய்யத் தவித்த அவன், எல்லையிலாக் கடலின் கரை ஓரத்திலே ல் நின்று அலைகள் எற்றுகிற சிப்பிகளைப் பொறுக்கி வீண் காலம் கழிப்பதாக எண்ணுவான்; பெருமூச்செறிவான்.
அவன் உள்ளம் சொல்லும்: இப்படி அணு அணு வாக ஞானம் பெற முயன்று வெற்றி காண்பது எப் போது? சிறு சிறு அனுபவங்கள் மூலமே அறிவு பெற முடியும் என்றிருப்பது ச சரியல்ல வரி வரியாகவும், பக்கம் பக்கமாகவும் படித்துத்தான் ஒரு புத்தகத்தின் சாரத்தைக் கிரகிக்க முடிகிறது. இப்படிப் புத்தகம் புத்தமாகப் படித்துத்தான்,முன்னேற்றப் பாதையி வெகுதூரம் சென்றுவிட்ட மனித அறிவின் ஞானக் களஞ்சியங்களைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொருவனும் இவ்விதம் தனித் தனியே ழைத்துத் தான் சுயம் பிரகாசம் அடைய முடியும். அறிவொளி சட்டென ஏற்படுமானால்! மனித மூளை ஞானம் முழு வதையும் ஒரேயடியாகக் கிரகித்துக் கொள்ள ஒரு வழி இருக்குமானால்?…….’
ஞானத்தின் எல்லையைக் கண்டுவிட ஆசைப்படும் அந்த மனிதன் பெருமூச்செறிவான்.
ஒரு நாள்….
அவன் இவ்விதம் எண்ணி முடித்தபோது, மென் சிரிப்பு ஒன்று காத்தருகிலே ஒலிக்கக் கேட்டான்.
புதுப்புது எண்ணங்களைச் சிந்தனைத் தறியிலே நெய்து பழகும் அவன், சில சமயம் எண்ணியதையே எண்ணிக் கொண்டிருப்பது இயல்பு. எனினும், ‘செவி அருகே சிறு சிரிப்பு என்பது அவனுக்கே விளங்கா.த புது விஷயம்தான்.
‘யாரது?…ஒருவரையும் காணவில்லையே!’ என்றது மனம்.
‘நீ என்னைப் பார்க்க முடியாது. நான்தான் ஞானம் என்ற ஒலி அவன் காதருகில் ஒலித்தது.
‘உன்னைப் பார்க்க முடியாவிட்டால், நீ என்னைக் கூப்பிட்டு என்ன பிரயோசனம்?’ என்றான் அவன்.
சதா நீ என்னை அடையப் பாடுபடுகிறாய். என்னை எண்ணி எண்ணி ஏங்குகிறாய். என் பூரணத்தை உணர்ந்து விடத் தவிக்கிறாய். அதனால் உனக்கு அருள்புரி வந்தேன்’ என்றது ஞானம்.
அவன் உள்ளம் சிலிர்த்தது; உடல் புல்லரித்தது ‘நான் என்ன செய்யவேண்டும்?’ என்று கேட்டான்.
‘உன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்துக் கொள், உனது அறிவிலே வைரத்தன்மை பிறந்துவிட்டதா?’ ஞானப் பேரொளியைத் தாங்கிக்கொள்ளும் மின்சக்தி உன் உள்ளத்தில் இருக்கிறதா? உன்னையே நீ கேட்டுக் கொள்!’
அவன் சிரித்தான். ‘மிரட்டுகிற செப்படி வித்தை பயின்ற ஏதோவொரு குறளி போலும்!’ என்று எண்ணி னான்.
ஞானம் நகைத்தது. ‘அற்ப மனிதனே! ஞான மெனும் கடலை உன் உள்ளங்கையினால் அள்ளிக் குடிக்க ஆசைப்படுகிறாய். அடிவாரத்தில் நின்றபடியே, விண் தொடும் நீள்முடி மலையின் உயரே போய்ச் சேர்ந்துவிட விரும்புகிறாய்…’
‘வழி தவறி வந்துவிட்ட பிரசங்கி போலும்!’ என்று நினைத்தான் ஞானத்தின் பக்தன்.
‘நான் ஞானம்’ என்றது அப் பண்பு.
“அப்படியானால், உன்னை உணரத் துடிக்கும் எனக்கு உன் பூரணப் பண்பையும் காட்டுவாயாக!’ என்று கூறி நகைத்தான் அவன். ‘வேண்டுமானால் பாடுகிறேன்.
‘புத்தகத் துள்ளுறை மாதே!
பூவில் அமர்ந்திடும் வாழ்வே!
வித்தகப் பெண்பிள்ளை நங்காய்!
வேதப் பொருளுக் கிறைவி!
மூத்தின் குடை உடையாளே!
மூவுலகும் தொழு தேவி !……..’
அப்புறம் அவன் பேசவில்லை. செயலற்றுப் போனான்.
வானத்துச் சூரியன் அந்த அறையினுள்ளே வந்துவிட்டது போல் ஒரே பிரகாசம்! ஓடி நெளிந்த விண்ணக ஒளிப்பாம்பு தன் மின்சக்தி முழுமை யும் சேர்த்துக்கொண்டு அந்த அறையினுள் நழுவி, அவ னது நெற்றியிலே வந்து தாக்கியது போலிருந்தது.
அவனால் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள இயலவில்லை. அவனால் அவனையே புரிந்துகொள்ள முடியவில்லை. ஞான தரிசனம் காண விரும்பிய அந்த மனிதன், ஞான ஒளி வெள்ளத்தை ஏற்றுக்கொள்ளத்திறம் அற்றவனாய், விழித்த கண் விழித்தபடி சிரித்த உதடுகள் சிரித்தபடி இருந்தான். நிரந்தரமாக அப்படியே மாறிப் போனான் அவன்.
‘அதிர்ச்சி காரணமாக மூளை சிதறிவிட்டது. அளவுக்கு அதிக கமான வேலையினால் சித்தம் பேதலித்து, இவ னுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!’ என்று தீர்ப்புக் கூறினார்கள் வைத்திய நிபுணர்கள்.
ஞானம் சிரித்தது. அதை அந்த மனிதன் கேட்டான். மற்றவர்கள் கேட்கவில்லை.
– வல்லிக்கண்ணன் கதைகள், முதல் பதிப்பு: ஜூன் 1954, கயிலைப் பதிப்பகம், சென்னை.