கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2025
பார்வையிட்டோர்: 260 
 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தாத்தைய நாயக்கரை, கிராமத்து ஜனங்கள் ‘அப்பு ராணி நாயக்கர்’ என்று சொல்லுவார்கள்.

அவர் ஒரு விவசாயி. தான் உண்டு தன்பாடு உண்டு என்றுதான் இருப்பார். விவசாயத்தில் அவ்வளவு ‘கருக்கடை’ எதிலேயும் ஒரு ஒழுங்கு. முகத்தில் கோபம் வந்து ஒருவரும் பார்த்ததில்லை. சதா சிரித்த முகமும் சீதேவியுமாக இருப்பார். அறுபதுவயது கிழவர் என்று யாரா லும் சொல்லமுடியாது. யானையின் துதிக்கையைப் போன்ற பருத்த நீண்ட கைகள்; ஆஜானுபாகுவான உடல், நரைத்த தலை, அடிக்கடி வெற்றிலை போட்டுத் துப்புவதால் காவி ஏறிய நரைத்த கிருதா மீசை. எவ்வளவு தொலைப் பிரயாணமானாலும் நடந்தேதான் செல்லுவார். வருஷத்தில் இரண்டு அல்லது மூன்று முறைதான் வெளியூர் செல்லு வார். பத்துமைல் தொலைவிலுள்ள கோவில் பட்டிக்குப் போய், தன் குடும்பத்துக்கு வேண்டிய சாமான்களைத் தலைச்சுமையிலேயே கொண்டுவந்துவிடுவார்.

அன்றும் அவர், அப்படித்தான் கோவில்பட்டிக்குப் போயிருந்தார். ஊருக்குக் கடைசியில் ஒரு ஒதுக்குப்புறமுள்ள தனக்குத் தெரிந்த வீட்டில் சாமான்களையெல்லாம் வைத்துவிட்டு சினிமாவுக்குப் போய் வந்தார்.

நல்ல கோடைகாலம், நிலவு பால்போல் காய்ந்தது. வெளித் திண்ணையிலேயே துண்டை விரித்துப் படுத்துக்கொண்டார். தூக்கம் வரவில்லை. ‘மூட்டைப் பூச்சியும் கொசுவும்’ பிடுங்கித் தின்றன.

இந்த வேக்காட்டிலும் இந்த ஜனங்கள் எப்படித்தான் வீட்டை அடைத்து உள்ளே முடங்கிக்கொள்ளுகிறார்களோ; ஒரே ஆச்சரியம் நாயக்கருக்கு. தனக்குள் சிரித்துக்கொண்டார்.

வெகுநேரம் புரண்டு கொண்டிருந்த நாயக்கர் அப்பொழுதுதான் கொஞ்சம் கண் அயர்ந்திருப்பார். எங்கிருந்தோ ஒரு பெண்ணின் அபயக்குரல் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தார்.

“ஐயோ, அம்மா… இதைக் கேட்க நாதி இல்லையா? ஐயோ… ஐயோ…” என்ற ஓலம். தாத்தைய நாயக்கர் சட்டென்று எழுந்து உட்கார்ந்தார். காது கொடுத்துக் கவனமாகக் கேட்டார்.

“அட பாவிகளா.. நீங்கள் அக்கா தங்கையோடு பிறக்கவில் லையா?… உங்களுக்கு இது அடுக்குமா?.. ஐயோ.. இதைக் கேட்பார் இங்கு யாருமில்லையா?”

திண்ணையில் உட்கார்ந்திருந்த நாயக்கர் குபீரென்று பாய்ந்து தெருவில் குதித்து நின்றார். கீழே குனிந்து தேங்காய்ப் பருமனுள்ள

இரண்டு பெரிய கற்களை எடுத்துக் கைக்கு ஒன்றாக வைத்துக் கொண்டு, நிமிர்ந்து நின்று குரல் கொடுத்தார்.

“டேய் யாரங்கே?”

அவருடைய கனமான, ஆண்மை நிறைந்த குரல் எங்கோ மோதி எதிரொலித்தது.

“நில் அங்கே. நகர்ந்தாயானால் ஒரே எறிதான்; பனங்காயைப் போல் தலை கீழே விழும்.”

இவருடைய ஆவேசமான குரல் கேட்டு அந்த வீட்டுக்காரர் எழுந்து ஜன்னல் பக்கம் வந்தார்; ஆனால் கதவைத் திறக்கவில்லை.

“யோவ்…..யோவ்… நாய்க்கரே, உமக்கென்ன பைத்தியமா? பேசாமல் வந்து படும். ஊருக்குள்ளே நூறு நடக்கும். எவன் எப்படிப் போனால் நமக்கென்ன? நம்மபாடு உண்டு, நாம உண்டு என்று இருக்கணும். எதுக்கு விருதா வாய்ப்போட்டு தூக்கத்தைக் கெடுத்துக் கொள்கிறீர்? பேசாமல் வந்து படும்”.

நாயக்கருக்கு இது சரியென்று தோன்றவில்லை. அச்சமயம் அவரைப்பார்த்து ஓர் இளம்பெண் தலைவிரி கோலமாக ஓடிவந்தாள். அவருடைய கால்களைக் கட்டிக்கொண்டாள். நாயக்கர் கொஞ்சம் பின்வாங்கினார். ஆனால் அந்தப் பெண்ணோ பலமாக அவரது கால் களைக் கட்டிக்கொண்டாள்.

அவளைத் தொடர்ந்து நான்குபேர்கள் வேகமாக வந்தார்கள். நாயக்கரைக் கண்டதும் சிறிது தயங்கினார்கள். அவர்களில் இரண்டு பேர் ஒதுங்கி நின்றுகொண்டார்கள்.

“ஐயா நீங்க சும்மா இருங்க. இது புருஷன் மனைவி சண்டை; நீங்க ஒன்றும் இதில் தலையிடவேண்டாம்” என்றான் ஒருவன்.

“இல்லை, இது அநியாயம். நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்” என்று பலமாகத் தலையை அசைத்து, அவரது கால்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள்.

நாயக்கர் அவளைச் சமாதானப்படுத்தி குழந்தையைத் தூக்குவது போல் அவளுடைய இரண்டு கஷ்கங்களிலும் கைகளை நீட்டித் தூக்கி நிறுத்தினார்.

“தாயே பயப்படாதே, நான் இருக்கும்வரை உனக்கு ஒரு கெடுதலும் வராது. என்ன நடந்தது சொல்லு?” என்று ஆதரவோடு கேட்டார். அந்தப் பெண் நடந்ததை அப்படியே சொன்னாள்.

கோவில்பட்டிக்கு வடக்கே நாலுகல் தொலைவுள்ள ஓர் ஊரில் போலம்மாளைக் கட்டிக்கொடுத்திருந்தது.

அன்று மாலை அவளுக்கும் புருஷனுக்கும் சண்டை. ஒரு நாளும் அடிக்காதவன் அன்று அவளைப் பிடித்து நன்றாக மொத்தி’விட்டான். புருஷனோடு கோபித்துக்கொண்டு போலம்மாள் கோவில் பட்டிக்குத் தெற்கே உள்ள தாய் வீட்டுக்குப் புறப்பட்டு வந்தாள்.

இங்கு வந்ததும் இருட்டிவிட்டது. தனக்குத் தெரிந்த தூரபந்து ஒருவரின் வீட்டில் இரவு தங்கலாம் என்று நினைத்து நடந்தாள். ஆனால் அவர்கள் வீடு மாறிவிட்டதால், முன்பு இருந்த இடத்தில்

இல்லை. அவர்களைப்பற்றி விசாரித்துக்கொண்டு அலையும்போது தான் இந்த மனிதர்களை அவள் சந்திக்க நேர்ந்தது.

அந்த வீடு தங்களுக்குத் தெரியும் என்றும் தாங்களும் அந்த வீட்டுக் குப் பக்கத்தில்தான் குடியிருக்கிறார்கள் என்றும், இப்பொழுது அங்கே தான் போய்க்கொண்டிருக்கிறார்கள் என்றும் இவர்கள் சொன்னார் கள். போலம்மாள் அதை நம்பிவிட்டாள். அவள் வீட்டில் கோபித்துக் கொண்டு வந்த விவரங்களையும், அவளுடைய பெயரையும்கூட அவர்கள் மெதுவாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள்.

அந்திக் கடையில் பலகாரம் வாங்கிக்கொடுத்து அவளிடம் தின்னும்படி வற்புறுத்தினார்கள்.

“அந்த வீடு ரொம்பத்தொலைவில் இருக்கிறது; போய்ச் சேர நேரமாகும். நீ பசியோடு இருக்கிறாய்போல் தெரிகிறது. வெட்கப் படாதே; சும்மா சாப்பிடு” என்று பரிவோடு உபசரித்தார்கள்.

அவள் பலகாரத்தை தின்றுகொண்டிருக்கும்பொழுது அவளு டைய புருஷனை வாய்வலிக்கும்வரை திட்டித் தீர்த்தார்கள் அவர்கள். “நீ செத்தாலும் இனி அவன் முகத்தில் விழிக்காதே, சே! அவன் மனுஷன்தானா? மாட்டை அடிக்கிறமாதிரி அடித்திருக்கிறான்?

பாவம்”

இதைக் கேட்டதும் போலம்மாளுக்கு வீட்டின் நினைவு வந்தது. கண்ணீர் பொங்கியது. காப்பி கசந்தது; ஓங்கரிக்கவும் வந்தது. அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிட்டாள்.

“சீக்கிரம் போகணும் நேரமாகிறதே” என்று துடித்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தாள்.

அவர்கள் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவே அவளை அழைத்துக் கொண்டு வந்தார்கள். வரும்போதே அவளிடம் கேலிபேசிக் கொண்டும், நையாண்டி வார்த்தைகளாடிக்கொண்டும் வந்தார்கள்.

ஒருவன் அவள் முதுகைத் தடவி “பாவிப்பயல், இப்படி வீங்கும்படி அடித்திருக்கிறானே” என்றான்.

போலம்மாள் விழித்துக்கொண்டாள். அவள் பார்த்த பார்வையில் சரசமாடத் தொடங்கிய கை கீழே துவண்டு விழுந்தது. அடுத்த நிமிஷம் தன் ஏழ்மை நிலையை நினைத்து அவளுக்குக் கண்ணீர் வந்தது.

“அண்ணன்மார்களே, தனியாகப் போகிற பெண்களிடம் இப்படி யெல்லாம் நடந்துகொள்ளலாமா? பாபமில்லையா?” என்று பரிதாப மாகக் கேட்டு விசித்தாள்.

‘ஐயோ’ பாவி நான் எதற்காகத்தான் இப்படிப் புறப்பட்டு வந்தேனோ; இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? என்று பொருமினாள்.

ஏதோ ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாய், அவள் அதே இடத்தில் ஆணி அறைந்தாற்போல் நின்றுவிட்டாள். நகரமுடியாது என்று சாதித்துவிட்டாள்.

கிருதாவும் கேராவும், சுருட்டைத் தலையுமான ஒரு தடியன் அவளருகில் நெருங்கினான்.

“என்னைத் தொட்டையானால், சத்தம் போட்டு ஊரைக் கூட்டிவிடுவேன். உனக்குச் சரியான மரியாதை கிடைக்கும்” என்று சீறினாள்.

அப்பொழுது சிலர் தெருவோடு போனார்கள். இந்தச் சலசலப்பை உற்று நோக்கிய அவர்கள் போலம்மாளின் பக்கத்தில் நின்றவர்களிடம் “என்ன விஷயம்?” என்று கேட்டார்கள்.

“சும்மா; வேறொன்றுமில்லை! புருஷன் பெண்சாதி தகராறு. அவ்வளவுதான்.”

“பூ இவ்வளவுதானா-” என்று வேடிக்கை பார்த்தவர்கள் நகர்ந்துவிட்டார்கள்.

இதை வேடிக்கை பார்த்தவர்களே மற்றவர்களிடம் “புருஷன் பெண்சாதி தகராறு” “புருஷன் – பெண்சாதி தகராறு” என்று ஒலி பரப்பிக்கொண்டே சென்றார்கள்.

நேரம் ஆக ஆக அந்தப்பகுதியில் ஆள் நடமாட்டம் குறைந்து கொண்டே வந்தது.

அவர்கள் இப்பொழுது தைரியமாக போலம்மாளின கையைப் பிடித்து இழுத்துக்கொண்டே சென்றார்கள்.

அவள் கதறாத சொற்கள் இல்லை; வையாத வசவு இல்லை. வேண்டாத தெய்வமும் இல்லை. அவளுக்கு அபயமளிக்கவோ, அவள் கண்ணீரைத் துடைக்கவோ யாரும் இல்லை அங்கே.

தாத்தைய நாயக்கர் இந்த விவரம் கேட்டு உள்ளம் கொதித்தார். கோபம் கண்களைத் துருத்த அவர்களைப் பார்த்தார். ஆனால் அந்தச் சுருட்டைத் தலையன் நாயக்கரின் முன்பு பவ்யமாக வந்து வணங்கி நின்றான்.

“ஐயா! நான் சொல்கிறதையும் தயவுசெய்து கேட்கவேணும். நீங்கள் என்னுடைய தகப்பன்மாதிரி. இவள் என்னுடைய சொந்த மாமன் மகள். இவள் எனக்கு வாழ்க்கைப்பட்டு அஞ்சி வருஷமாகிறது. இந்த அஞ்சிவருஷமும் இவளோடு இந்தப் போராட்டம்தான். பகலெல்லாம் எலும்புமுறிய வேலை செய்துவிட்டு ராத்திரி வீட்டுக்கு வந்தால், வீட்டில் இருக்கமாட்டாள். விடியத்தான் வீட்டுக்கு வருவாள். இவளை நான் ராத்திரியெல்லாம் தேடிக்கொண்டு அலையவேண்டும். கட்டிய புருஷன் எத்தனை நாளைக்குத்தான் இதைச் சகித்துக்கொண்டு இருப்பான்?”

இந்தச் சமயத்தில் கதவைத் திறந்துகொண்டு நாயக்கர் தங்கியிருந்த வீட்டுக்காரச் சுந்தரம்செட்டியார் வெளியே வந்தார். பக்கத்து வீட்டுக் காரர்களும் வந்தார்கள்.

தூரத்தில் நின்றிருந்த சுருட்டைத் தலையனின் ஆட்களில் ஒருவன் இவர்களை நோக்கி வந்தான்.

அவன் சுருட்டைத்தலையனைப் பார்த்துச் சொன்னான். ‘என்ன… லச்சை’ பழையபடியும் தொடங்கியாச்சா. நானா இருந்தால் இவளை கட்டிகிட்டு அழுகிறதைவிட, பேசாமல் ஒரு தலைமுழுக்குப் போட்டுருவேன். கல்யாணம்பண்ணியும் பிரம்மச்சாரி என்கிறது உனக்குத்தான் அண்ணே பொருத்தம்!”

இவ்வாறு சொல்லிவிட்டு அவன் தாத்தைய நாயக்கரைப் பார்த்துச் சிரித்தான்.

அவன் மூஞ்சியில் காறி ‘தூ’ என்று துப்பினாள், போலம்மாள்.

“என்னைப் பார்த்துத் துப்பு; இந்த மானங்கெட்டவனைப் பார்த்துத் துப்பு. துப்பமாட்டையா பின்னே? தாயில்லாப் பிள்ளை யிண்ணு உன்னை வளர்த்து நான் கட்டிகிட்டேன் பாரு. காலாகாலத் தில் உன் கையைக் காலை ஒடித்து முடமாக்கிப் போட்டிருந்தால், இந்தத் திரிசல் திரியமாட்டாய். என் குத்தத்துக்கு அவன் என்ன பண்ணுவான். சிறுக்கி மகளே !” என்று அவள்மீது பாய்ந்தான் சுருட்டைத் தலையன்.

‘வீல்’ என்று அலறினாள் போலம்மாள்; வெட்டுண்ட பனைமரம் போல் தடார் என்று தரையில் சாய்ந்தாள்.

தாத்தைய நாயக்கரின் கையில் இருந்த கற்கள் தாமாகவே நழுவித் தரையை வந்து அடைந்தன; சோர்ந்துபோய் திண்ணையில் உட்கார்ந்து விட்டார்.

கோழிக்குஞ்சைப் பருந்து தூக்கிக்கொண்டுபோவதுபோல் அவளைத் தூக்கிக்கொண்டு போனார்கள்.

அந்தத் தெருவில் மழைபெய்து ஓய்ந்தது போலிருந்தது. எல்லோரும் வீட்டினுள் சென்று பத்திரமாய்ப் பூட்டிக்கொண்டு படுத்து விட்டார்கள்.

தாத்தைய நாயக்கருக்கு மட்டும் தூக்கம் வருவதாய் இல்லை.

சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்தப் பெண்ணின் அவலக் குரல் கேட்டது.

அவர் ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்தார். ‘அந்தப் பெண்ணை அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்’ என்று எண்ணி நடந்தார்.

குரல் வந்த திக்கை வைத்துப் பார்த்தால் அவர்கள் ஊருக்குள் போவதாகத் தெரியவில்லை.

நாயக்கரின் வேகமும், படபடப்பும் அதிகரித்தன. சிறிது தூரத் திலுள்ள சாலையில், ஒற்றைக்கண் பாலத்தின் அடியில் ஒரு தீனமான சோகக்குரல் கேட்டுக்கொண்டிருந்தது. சட்டென்று பாதியிலேயே அது நின்றுவிட்டது. தாத்தைய நாயக்கர் அங்கு ஒரே ஓட்டமாக ஓடினார். ‘உஷ்ஷ்’ என்று பலமான விசில் சப்தம் அந்த இடத்திலிருந்து கேட்டது. அதைத் தொடர்ந்து மூன்றுபேர் தாத்தைய நாயக்கரை நோக்கிப் பாய்ந்து ஓடிவந்தார்கள்.

“ஏய் கிட்டே வராதே; ஓடிப்போ! ஓடிப்போ!” என கத்திக் கொண்டே வந்தார்கள்.

தாத்தைய நாயக்கர் குனிந்து இரண்டு பெரிய கற்களை எடுத்தார். அவருடைய தோள்கள் பூரித்து நின்றன. மார்பு புடைத்து விம்மியது. அவருடைய உயரம் வளர்ந்தது; எட்டடி உயரமுள்ள கம்பீரமான தோற்றமாகப் பரிணமித்தது.

இடது காலைப் பிரித்து ஒரு எட்டு முன்வைத்து வலது கையைப் பின்வாங்கி கல்லை விட்டார் நாயக்கர். ‘உங்ங்’ என்று காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது கல்.

“ஐயோ அம்மா. . . செத்தேன்” என்று ஒருவன் கீழே விழுந்தான். இமை தட்டுவதற்குள். இடது கையிலிருந்து மற்றொரு கல்லும் வலதுக்கு வந்து ‘உங்ங்’ என்று இரைந்துகொண்டே சென்றது.

சடார் என்ற சப்தத்துடன் மரத்திலிருந்து ஒரு பெரிய கிளை முறிந்து விழுந்தது; குறி தவறிவிட்டது.

ஒருவன் சுருண்டு விழுந்ததும், முன்னேறி வருகிறவர்களைக் கண்டு ஒருகணம் திகைத்து நின்றார் நாயக்கர். மீண்டும் குனிந்து கற்களை எடுக்க நேரமில்லை; அவர்கள் அவ்வளவு நெருங்கிவிட்டார்கள்.

வலதுபுறம் பின்வாங்கி ஓடுபவரைப்போல் பாய்ச்சல்காட்டி, முன்புறமாக ஓடினார். கல் எறி வாங்கியவன் புரண்டு கொடுத்ததைக் கவனித்தார். இடதுபுறம் பின்வாங்கி ஓடுகிறவரைப்போல் பாய்ச்சல் காட்டி முன்புறமாக மேலும் ஓடினார். கீழே விழுந்து கிடந்தவனை அதிலாவகமாகத் தூக்கி இரண்டு கைகளாலும் ஆகாயத்தை நோக்கி உயர்த்தினார். தன் பலத்தை எல்லாம் கைகளுக்குக் கொண்டுவந்து தரையில் ஓங்கி அறைந்தார் அவனை.

“உஷ் உஷ்” என்று இரண்டு விசில் கிளம்பியது.

பாலத்திலிருந்து எமதர்மனைப்போல் சுருட்டைத் தலையன் வெளியே வந்தான். அவன் போலம்மாளைப் பலமாகப் பற்றி இருந்தான்.

போலம்மாள் ஆடையின்றி பிறந்தமேனியாய்க் காட்சி அளித்தாள். வாயினுள் திணித்திருந்த துணியின் ஒரு பகுதி வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

நாயக்கர் சுருட்டைத் தலையன்மீது ஆவேசத்துடன் பாய்ந்தார். ஓங்கி அவன் கன்னத்தில் ஓர் அறை கொடுத்து எட்டி உதைத்தார். அவற்றை அவனால் ஜீரணிக்க முடியவில்லை. மல்லாந்து விழுந்து கண்களை மூடித்திறந்தான். போலம்மாளின் வாய்த்துணி அகன்றது.

சுருட்டைத் தலையனின் ஆட்கள் பாய்ந்து வந்து நாயக்கரை வளைத்துக் கொண்டார்கள். அதில் ஒருவனிடம் நீண்ட வீச்சரிவாள் இருந்தது. அது நிலவின் ஒளி பட்டு மின்னியது.

தாத்தைய நாயக்கர் உடனே தமது முடிவைப்பற்றித் தெரிந்து கொண்டார். இவர் ஓடித் தப்பித்து இருக்கலாம்; ஆனால் அவ்வாறு

செய்யவில்லை.

“அம்மா போய்விடு இங்கிருந்து” என்று சப்தம் கொடுத்தார். “போ, உடனே ; ஓடு ” கத்தினார்.

போலம்மாள் பின்வாங்கி ஓடினாள். இரட்டையரில் ஒருவன் அவள் பின்னால் ஓடி அவள் கையைப் பிடித்துக்கொண்டான்; அவளால் திமிறி ஓட முடியவில்லை. இப்பொழுது இரண்டு எதிரிகள் இருந்தார்கள்.

நாயக்கர் அரிவாள் வைத்திருந்தவனுக்கு நேரே கையை நீட்டியாரையோ உதவிக்குக் கூப்பிடுவதுபோல் “ஓடி வாருங்கள் ஓடி வாருங்கள்!” என்று கூவினார்.

அரிவாள்காரன் பின்னால் திரும்பிப் பார்த்தான். நாயக்கர் ‘சடக்’ கென்று அவனைக் குப்புறத் தள்ளி அவனுடைய கையை ஒரு கையாலும் தலையை ஒரு கையாலும், பிடித்துக்கொண்டு இடுப்பில் ஒரு காலை மிதித்து முறித்தார்.

அரிவாள் கீழே விழுந்தது. நாயக்கர் அதை எடுப்பதற்குள் சுருட்டைத் தலையன் முந்திக்கொண்டான்.

பிடி கொஞ்சம் தளர்ந்தவுடன் கீழே கிடந்தவன் நாயக்கருடைய கால்களைப் பாம்புபோல் சுற்றிக்கொண்டான். தாத்தைய நாயக்கர் தடால் என்று கீழே விழுந்தார். ஒரு கையை ஊன்றிக்கொண்டு எழுந் திருக்க முயன்றார்; கை உயர்ந்தது.

‘சதக்’

உயர்ந்து நின்ற தாத்தைய நாயக்கரின் வலதுகை துண்டாக தரையில்போய் ‘சொத்’ என்று விழுந்தது. “ஐயோ. . ஐயோ. . .” என்று கதறினாள் போலம்மாள். கழுத்தில் வெட்டு விழாமல், கீழே விழுந்து கிடந்த நாயக்கர் இடது கையால் தடுத்தார். அந்தக் கையையும் வெட்டினான் சுருட்டைத் தலையன்.

தன் சக்தி எல்லாவற்றையும் திரட்டி தன் காலைச் சுற்றிக்கொண்டி ருப்பவனை உதைத்து தள்ளி விழுந்து புரண்டு எழுந்து ஆவேசமாகக் கத்திக் குனிந்து பாய்ந்து சுருட்டைத் தலையனின் வயிற்றில் முட்டித் தள்ளினார் நாயக்கர்.

சுருட்டைத் தலையன் இரண்டு கஜத்திற்கு அப்பால் போய் விழுந்தான்.

தாத்தைய நாயக்கர் ஒரு குறிக்கோளும் இல்லாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார். இரண்டு புஜங்கள் வெட்டுண்ட இடங் களிலிருந்தும் பீச்சாங்குழல் வைத்து அடிக்கிறமாதிரி ‘சர்ர்’ என்று இரத்தம் பீறிட்டுப் பாய்ந்தது.

கீழே விழுவதும் எழுந்து பாய்ந்து முட்டவருவதுமாக இருந்தார் நாயக்கர்.

“ஏ, நீச ஜாதிப் பயல்களே! பேடிப் பயல்களே? நியாயம் என்று ஒன்று இருக்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார்” என்று கர்ஜித்தார் நாயக்கர்.

‘ஐயோ, தாயே; உனக்கு நான் உதவமுடியாமல் போய்விட்டதே, இவர்களைக் கொன்று உன்னை மீட்க வல்லமை இல்லாமல் போய்விட்டதே?.. கடவுளே, நீ இருக்கிறாயா;’ என்று விம்மி, அந்த சரள்தரையில் முகத்தைப் பல தடவை பலமாக மோதிக்கொண்டார் தாத்தைய நாயக்கர்.

இன்னும் அந்த இடத்தில் தாமதிப்பது தங்களுக்கு நல்லதில்லை என்று தெரிந்துகொண்ட அவர்கள் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

போலம்மாளின். தலைமயிரைப் பிடித்து இழுத்துக்கொண்டே முன்னால் சென்றான் ஒருவன்.

போலம்மாளின் அரற்றல் சிறிது நேரம் வரை கேட்டுக்கொண்டே இருந்தது; அப்புறம் அதுவும் இல்லை. அமைதி; ஒரே அமைதி.

தாத்தைய நாயக்கர் அதிவேகமாகச் செத்துக்கொண்டே வந்தார். அவருடைய நிலைத்த விழிகளின் பார்வையிலிருந்து பொருள்கள் மங்குவதும், தெளிவு பெறுவதுமாய் இருந்தன.

அவருக்குப் பிரக்ஞை இருந்தபோது முதலில் ஞாபகம் வந்தது அவருடைய வீட்டின் அரங்கு வீட்டிற்குள் தெற்கு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த கனமான வேல்கம்புதான். அதையடுத்து தன்னுடைய ஒரே மகளான வெங்கடம்மாளின் சிரித்த முகம் நினைவுக்கு வந்தது. தன்னுடைய பேரன் சீனிவாசனின் பால்வடியும் முகமும் ஞாபகத்துக்கு வந்தது.

நாயக்கர் புரண்டு கொடுத்தார் தன் சக்தியை எல்லாம் ஒருமித்துக் கூட்டி “சுந்தரஞ் செட்டியார், சுந்தரஞ் செட்டியார்” என்று சப்தமிட்டு அழைத்தார். அவருடைய குரலுக்கு பதிலுரைப்பார் அங்கு யாருமில்லை.

அவருடைய குரல் கதிரேசன் கோவில் மலையில் போய் மோதி திரும்பி வந்தது; சுந்தரஞ் செட்டியார்..சுந்தரஞ் செட்டியார்!” என்றது. அவருடைய வாயிலிருந்து வந்த கடைசி வார்த்தைகள் இதுதான். “தண்ணீர். தண்ணீர்”

கீழ்வானம் வெள்ளென்று வெளுத்தது. சுகமாகவும் வீசிக்கொண்டிருந்தது.

.

காற்று அமைதியாகவும்

எங்கிருந்தோ ஒரு காகம் பறந்துவந்து அருகிலுள்ள மொட்டை மரத்தில் உட்கார்ந்து தன் தலையைச் சாய்த்து தாத்தைய நாயக்கரின் பிரேதத்தைப் பார்த்தது. நாயக்கரின் தலைமீது வட்டமிட்டு, ‘கார்ர் கார்ர்… கார்ர். . .’ என்று மூன்று தடவை கத்தியது.

தரையில் தயிர்க்குடத்துடன் அவ்வழியே இரண்டு இடையர் குலப் பெண்கள் வந்தார்கள்.

கைகள் துண்டாடப்பட்டு இரத்த வெள்ளத்தில் மூழ்கிக்கிடந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்டுக் கூக்குரலிட்டார்கள்.

தாத்தைய நாயக்கரின் சடலத்தைச் சுற்றி இருந்த கூட்டத்தில் தலையில் தயிர்க்குடத்துடன் இருந்த ஒரு வயோதிக அன்னை தன் முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு புறப்பட்டாள்.

“பாவம், யார் பெற்ற பிள்ளையோ…எந்தப் பாவி செய்த வேலையோ?.” என்று சொல்லிக்கொண்டே நடந்தாள்.

– தாமரை, ஏப்ரல் 1959.

கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். 1923-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16-ம் தேதி பிறந்தார். ஸ்ரீகிருஷ்ண ராமானுஜம், லட்சுமி அம்மாள் தம்பதியரின் ஐந்தாவது பிள்ளை கி.ரா.[1] 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *