கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 4,774 
 
 

(1947ல் வெளியான தொடர்க்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9

4. வன்மம் வளர்ந்தது!

சோலைமலை சமஸ்தானத்துக்கு ஆங்கிலேயர்கள் வந்து சேர்ந்த சமயம், சோலைமலை மகாராஜாவுக்கும் அந்தச் சமஸ்தானத்தை அடுத்திருந்த மாறனேந்தல் மகாராஜாவுக்கும் கொஞ்சம் மனத்தாங்கல் ஏற்பட்டிருந்தது. எல்லைத் தகராறு காரணமாக ஏற்பட்ட மனத்தாங்கல் தான். மேற்படி தகராறில் இரண்டு மூன்று தடவை சோலைமலை வீரர்களை மாறனேந்தல் வீரர்கள் முறியடித்துத் துரத்தியடித்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் மாறனேந்தல் மகாராஜாவின் மூத்த புதல்வனான யுவ மகாராஜா உலக்நாத சுந்தர பாண்டியத் தேவனின் துடுக்கும் அகம்பாவமுந்தான் என்று தெரியவந்தது.

சோலைமலை மகாராஜா தமது ஏகபுதல்வியான பரிமள மாணிக்கவல்லித்தேவியை மாறனேந்தல் இளவரசனுக்குக் கல்யாணம் செய்விக்கலாம் என்று ஒருகாலத்தில் எண்ணி யிருந்ததுண்டு. மாறனேந்தல் வம்சம் அந்தஸ்திலும் பூர்வீகத்திலும் சோலைமலை வம்சத்துக்குக் கொஞ்சம் தாழ்ந்ததாயிருந்த போதிலும், பக்கத்து சமஸ்தானமா யிருப்பதால் தமது உயிருக்குவிரான அருமைப் புதல்வியை அடிக்கடி பார்ப்பதற்கு வசதியா யிருக்கும் என்ற அந்தரங்க ஆசையினால் மேற்கண்ட யோசனை அவர் மனதில் உதித்தது. ஆனால் அந்த எண்ண மெல்லாம் இப்போது அடியோடு மாறிவிட்டது. தமதி அருமை மகள் வாழ்நாள் எல்லாம் கன்னிகையாகவே இருக்க நேர்ந்து, சோலைமலை சமஸ்தானம் சந்ததியின்றி அழிந்து போனாலும்சரி, மாறனேந்தல் இளவரசனுக்கு அவளை மணம் செய்து கொடுப்பதில்லை யென்று தீர்மானித்தார். தம்மை அவமதித்த மாறனேந்தல் மகாராஜாவையும் அவருடைய மகனையும் பழிக்குப் பழி வாங்கி அந்த வம்சத்தையே பூண்டோடு அழித்து விட வேண்டும் என்ற வன்மம் அவர் மனதில் தோன்றி வைரம் பாய்ந்து நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது.


மாறனேந்தல் சமஸ்தானத்தைப் பற்றிச் சோலைமலை மகாராஜாவின் மனோ நிலையைத் தெரிந்து கொண்ட அவருடைய வெள்ளைக்காரச் சிநேகிதர்கள் கொஞ்சங் கொஞ்சமாக அந்த வன்மத்துக்குத் தூபம் போட்டு வளர்த்தார்கள். மாறனேந்தலைப் பழி தீர்க்கத் தங்களுடைய உதவியை அளிக்கவும் முன் வந்தார்கள். இதன் பேரில் சோலைமலை மகாராஜாவுக்கும் கும்பெனியாருக்கும் சிநேக உடன்படிக்கை ஏற்பட்டது. ஒருவருடைய சிநேகிதர்களும் பகைவர்களும் மற்றவருக்கும் சிநேகிதர்கள் பகைவர்கள் என்றும், யுத்தம் நேர்ந்தால் ஒருவருக் கொருவர் சகாயம் செய்து கொள்ள வேண்டும் என்றும், முக்கியமாக மாறனேந்தல் ஒன்றும் இல்லை. சோலைமலை மகாராஜா எப்படியும் இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்தவர். பழைய மறவர் பெருங்குடியைச் சேர்ந்தவர். தங்களையும் நமது குடும்பத்தாரையும் அனியர்களாகிய வெள்ளைக்காரர்கள் அவமதிப்பாக நடத்துவதற்கு அவர் சம்மதிக்க மாட்டார். நமக்கும் ஒரு காலம் கூடிய சீக்கிரத்தில் வந்தே தீரும். வட தேசத்திலே இந்த வெள்ளை மூஞ்சிகளை நாட்டை விட்டுத் துரத்துவதற்காக அநேக பெரிய பெரிய மகாராஜாக்களும் நவாப்புகளும் சேர்ந்து யோசனை செய்துவருகிறார்களாம். அவர்களிடம் போய் நானும் சேர்ந்து கொள்ளுகிறேன். பெரிய படை சேர்த்துக் கொண்டு திரும்பி வருகிறேன். அது வரையில் தாங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான். தந்தை அதற்குச் சரியான பதில் சொல்லாமல், “சமயோசிதம் போல் பார்த்துக் கொள்கிறேன். எங்களைப் பற்றிக் கவலைப் படாதே! நீ உடனே புறப்படு!” என்றார். வெளி நாட்டிலிருந்து வந்த பகைவர்களாவது தயவு தாட்சண்யம் காட்டுவார்கள், உள்ளூர்ப் பகைவர்களிடம் சிறிதும் கருணையை எதிர் பார்க்க முடியாது என்னும் உண்மையை வயது முதிர்ந்த மாறனேந்தல் மகாராஜா அறிந்திருந்தார். ஆனால் அந்தச் சமயம் அதைப்பற்றித் தம் குமாரனிடம் வாக்குவாதம் செய்ய அவர் விரும்பவில்லை.


மாறனேந்தல் இளவரசன் கோட்டையின் இரகசிய வழியாக அன்றிரவே வெளியேறினான். கோட்டையிலிருந்து இரண்டு காத தூரத்தில் இருந்த மேற்கு மலைத்தொடரை அடைந்து அங்குள்ள காடுகளில் சிலகாலம் ஒளிந்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் விரைந்து சென்றான். ஆனால் பொழுது புலரும் சமயத்தில் எதிர்ப் புறத்திலிருந்து மாறனேந்தல் முற்றுகையில் சேர்ந்து கொள்வதற்காக வந்த கும்பெனிப் படை வீரர்களில் ஒருவன் சாலை ஓரமாக ஒளிந்து சென்ற இளவரசனைப் பார்த்து விட்டான். யுத்த கால தர்மப்படி, “யாரடா அங்கே போகிறவன்?” என்று கேட்டான். அவனுக்கு மறுமொழி சொல்லாமல் இளவரசன் காட்டிலே புகுந்து ஓடினான். கும்பெனி வீரர்களின் சந்தேகம் அதிகமாயிற்று. படைத் தலைவன் அவனைத் துரத்திப் பிடித்துக் கொண்டு வரும்படி ஆறு வீரர்களை நிறுத்திவிட்டு மற்றவர்களுடன் மேலே சென்றான்.

தன்னைத் தொடர்ந்து ஆறு வீரர்கள் தான் வருகிறார்கள் என்பது இளவரசனுக்குத் தெரியாது. தான் மாறனேந்தல் இளவரசன் என்பதாகத் தெரிந்து கொண்டு ஒரு பெரிய படை தன்னைத் தொடர்ந்து வருவதாகவே நினைத்தான். அவர்களிடம் எப்படியும் அகப்படக் கூடாது என்று மனதை உறுதி செய்து கொண்டு அடர்ந்த காடுகளில் புகுந்து ஓடினான். கடைசியாக, சோலைமலையின் அடிவாரத்தை அடைந்தான். சற்றுத் தூரத்தில் சோலைமலைக் கோட்டை தென்பட்டது. அதன் சமீபத்தில் போவதற்கே அவனுக்கு இஷ்டமில்லாம லிருந்தாலும், வேறுவழி ஒன்றும் காணவில்லை. அந்தக் கோட்டையைக் கடந்து போனால்தான் அப்பால் மதிளின் ஓரமாகச் சென்று கோட்டை மலைமேல் ஏறுவதற்குச் சௌகரியமான சரிந்த பாதை இருந்தது. இளவரசன் அப்போது வந்து சேர்ந்திருந்த இடத்தில் பாறை செங்குத்தாகக் கிளம்பியது. சற்று நின்று யோசித்த பிறகு, பின்னால் சமீபத்தில் கேட்ட காலடிச் சத்தத்தினால் உந்தப்பட்டவனாய், இளவரசன் மேலும் விரைந்தான். அவனுடைய கால்கள் கெஞ்சின; தலை சுழன்றது; கண்கள் இருண்டு வந்தன. கோட்டை மதியை அடுத்திருந்த குறுகலான வழியில் அவன் போய்க்கொண்டிருந்தான். பின்னால் காலடிச்சத்தம் விநாடிக்கு விநாடி நெருங்கி வந்து கொண்டிருந்தது. மேலே ஓர் அடிகூட இனிமேல் நடக்க முடியாது என்று தோன்றியது. ஒரு பக்கம் கோட்டைச் சுவரும் மற்றொரு பக்கம் கிடுகிடு பள்ளமுமாக இருந்த அந்தக் குறுகிய பாதையில் அப்பால் இப்பால் நகர்ந்து தப்புவதற்கு வழியே யில்லை. வேட்டை நாய்களைப் போல் தன்னைத் துரத்திக் கொண்டு வரும் எதிரி வீரர்களிடம் அகப்பட்டுக் கொள்ளவேண்டியதுதான்

5. அந்தப்புர அடைக்கலம்

மாறனேந்தல் இளவரசன் அப்போது தான் அடைந்திருந்த நெருக்கடியான நிலைமையை நன்கு உணர்ந்தான். தன்னைத் துரத்திக் கொண்டு வந்த எதிரிகளிடம் அவ்வளவு எளிதாக அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் அந்தக் குறுகிய பாதையில் அவர்களை எதிர்த்து நின்று, ஒருவனுக் கொருவனாகப் போரிட்டு, தேசத் துரோகிகளில் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ அவ்வளவு பேரையும் கொன்றுவிட்டுத் தானும் உயிரை விடுவது மேல் அல்லவா?…

இவ்விதம் சிந்தித்துக் கொண்டே பாதையின் ஒரு முடுக்கில் திரும்பிய போது, எதிரில் அவன் கண்ட தோற்றம் அதிசயமான எண்ணம் ஒன்றை அவனுக்கு அளித்தது. பாதைக்கு அருகில் நெடிதோங்கி வளர்ந்திருந்த ஒரு மரம் எந்தக் காரணத்தினாலோ அடி வேர் பெயர்ந்து கோட்டை மதிளின் பக்கமாகச் சாய்ந்திருந்தது. இரண்டொரு தினங்களுக்குள்ளே தான் அந்தப் பெரிய மரம் அப்படிச் சாய்ந்திருக்க வேண்டும். அந்த மரத்திலே ஏறி உச்சாணிக் கிளையை அடைந்தால், அங்கிருந்து சுலபமாக மதிள் சுவரின்மேல் குதிக்கலாம். பிறகு மதிள் சுவரிலிருந்து கோட்டைக்குள்ளே குதிப்பதில் கஷ்டம் ஒன்று மிராது. ஏன் அப்படிச் செய்யக் கூடாது? தன்னைத் துரத்தி வந்தவர்களிடமிருந்து தப்புவதற்காக ஏன் சோலைமலைக் கோட்டைக்குள்ளேயே பிரவேசித்து அபாயம் நீங்கும் வரையில் அங்கு ஒளிந்திருக்கக் கூடாது? மகாராஜா அச்சமயம் சோலைமலை மாறனேந்தல் கோட்டை வாசலில் எப்போது கோட்டை வீழும் என்று காத்துக்கிடக்கிறார். ஆகையால் இங்கே கட்டுக்காவல் அதிகமாக இருக்க முடி யாது, தற்சமயம் பத்திரமாக ஒளிந்து கொண்டிருப்பதற்கு இதுதான் சரியான இடம். கோட்டைக்குள்ளே எத்தனையோ மூலை முடுக்குகள், யார் கண்ணிலும் அதிகமாகப் படாத இடங்கள் இருக்க வேண்டும். மேலும் மாறனேந்தல் இளவரசனைச் சோலை மலைக்கோட்டைக்குள்ளே யாரும் தேடமாட்டார்கள். கோட்டைக்குள் புகுவதற்கு வேண்டிய துணிச்சல் தன்னைத் தொடர்ந்து வரும் எதிரி வீரர்களுக்கு ஒரு நாளும் இராது. இன்றைக்கு ஒரு பகல் அங்கே ஒளிந்திருந்து இளைப்பாறினால் இரவு இருட்டியதும் வந்த வழி மூலமாகவே வெளியேறி மலையைக் கடந்து அப்பாலுள்ள பள்ளத்தாக்கை அடைந்து விடலாம்…

இப்படி எண்ணியபோது, பக்கத்துக் கிராமத்திலிருந்து “கொக்கரக்கோ!” என்று கோழி கூவும் சத்தம் கேட்டது. தன் மனதில் தோன்றிய யோசனையை ஆமோதிக்கும் நல்ல சகுனமாக இளவரசன் அதைக் கருதினான்.

தட்சணமே சாய்ந்திருந்த மரத்தின் மேல் சரசரவென்று ஏறினான், மரத்திலிருந்த பட்சிகள் ஏதோ மர நாயோ வேறு கொடிய மிருகமோ ஏறுகிறது என்று எண்ணிக்கொண்டு சிறகுகளை அடித்துக் கொண்டும் கீச்சுக் கீச்சு என்று கத்திக் கொண்டும் பறந்து ஓடின. அதை யெல்லாம் பொருட் படுத்தாமல் இளவரசன் மரத்தின் உச்சியை யடைந்து மதிளின் மேல் குதித்தான். மதிள்மேலிருந்து அவன் கோட்டைக்குள்ளே இறங்குவதற்கு அதிக நேரம் ஆகவில்லை.


கோட்டைக்குள் இளவரசன் குதித்து இறங்கிய இடம் அழகான உத்தியான வனமா யிருந்தது. உதய நேரத்தில் இதழ் விரிந்து மலரும் பல வகைப் புஷ்பங்களின் நறுமணம் கம்மென்று வந்து கொண்டிருந்தது. ஆனால் அதை யெல்லாம் அனுபவிக்கக் கூடிய மனோநிலை அச் சமயம் உலகநாதத் தேவனுக்கு இருக்கவில்லை. உடனே எங்கேயாவது சிறிது நேரம் படுத்தால் போதும் என்று தோன்றியது. உத்தியான வனத்துக்கு நடுவில் வஸந்த மண்டபமும் அதற்குச் சிறிது தூரத்துக் கப்பால் அரண்மனையின் ஒரு பகுதியும் தெரிந்தன. ஜன நடமாட்டமே இல்லாமல் எங்கும் நிச்சப்தமாக இருந்தது. இளவரசனுடைய களைப்புற்ற கால்கள் அவனை வஸந்த மண்டபத்தை நோக்கி இழுத்துச் சென்றன.

மண்டபத்தை நெருங்கியதும் அவனுக்கு எதிரே தோன்றிய காட்சியினால் இளவரசனுடைய மூச்சு சிறிது நேரம் நின்று போயிற்று. மண்டபத்தின் பின்புறத்து முனையிலே திரும்பிப் பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். கையில் அவள் புஷ்பக் கூடை வைத்திருந்தான். ஸ்திரீ சௌந்தரியத்தைப் பற்றி மாறனேந்தல் இளவரசன் எத்தனையோ களிகளிலும் காவியங்களிலும் படித்திருந்தான். ஆனால் இந்த மாதிரி அற்புத அழகை அது வரையில் அவன் கற்பனையும் செய்ததில்லை. சௌந்தரிய தேவதையே மானிடப் பெண் உருவம் கொண்டு அவன் முன்னால் வருவதுபோல் தோன்றியது. அந்தப் பெண்ணோ தன்னுடைய அகன்ற விசாலமான நயனங்களை இன்னும் அகலமாக விரியச் செய்துகொண்டு அளவில்லா அதிசயத்துடன் மாறனேந்தல் இளவரசனைப் பார்த்தாள்.

சிறிது நேரம் இப்படி ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு ஊமைகளாக நின்ற பிறகு இளவரசன் துணிச்சலை வருவித்துக் கொண்டு “நீ யார்?” என்றான்.

வீர மறவர் குலத்திலே பிறந்த மாணிக்கவல்லிக்கு அப்போது ரோஸம் பிறந்தது. பேசும் தைரியமும் வந்தது. “நீ யார் என்றா கேட்கிறாய்? அந்தக் கேள்வியை நானல்லவா கேட்க வேண்டும்? நீ யார்? கோட்டைக்குள் எப்படிப் புகுந்தாய்? அந்தப்புரத்து நந்தவனத்துக்குள் என்ன தைரியத்தினால் வந்தாய்?” என்று இராம பாணங்களைப் போன்ற கேள்விகளைப் போட்டாள்.

உலகநாதத் தேவன் அசந்து போய் விட்டான். அவள் சோலைமலை இளவரசியாகத்தான் இருக்க வேண்டும்! வேறு யாரும் இவ்வளவு அதிகார தோரணையுடன் பேச முடியாதென்று எண்ணினான். அவளுடைய கேள்விகளுக்கு மறுமொழியாக ஏதாவது சொல்ல வேண்டுமென்று ஆனமட்டும் முயன்றும் ஒரு வார்த்தைகூட அவனால் சொல்ல முடியவில்லை.

“ஏன் இப்படி விழித்துக்கொண்டு நிற்கிறாய்? அரண்மனையில் மகாராஜா இல்லாத சமயம் பார்த்து எதையாவது திருடிக்கொண்டு போகலாம் என்று வந்தாயா? இதோ காவற்காரர்களைக் கூப்பிடுகிறேன், பார்! வேட்டை நாயையும் கொண்டுவரச் சொல்லுகிறேன்…”

இவ்வாறு இளவரசி சொல்லிக் கொண்டிருந்தபோது, கோட்டை மதிளுக்கு அப்பால் சிலர் இரைந்து பேசிக் கொண்டு விரைவாக நடந்து செல்லும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்தை மாணிக்க வல்லி காது கொடுத்துக் கவனமாகக் கேட்டாள். பின்னர் தனக்கு எதிரில் நின்ற வாலிபனை உற்றுப் பார்த்தாள். அவன் முகத்திலே தோன்றிய பீதியின் அறிகுறியையும் கவனித்தாள். அவளுடைய பெண் உள்ளம் சிறிது இரக்கம் அடைந்தது.

கோட்டை மதிளுக்கு வெளியில் பேச்சுச்சத்தம் கேட்டவரையில் அதையே கவனித்துக் கொண்டிருந்த மாறனேந்தல் இளவரசன் அந்தச் சத்தம் ஒடுங்கி மறைந்ததும் மாணிக்கவல்லியைப் பார்த்து, “அம்மணி! ஏதோ தெரியாத் தனமாகத்தான் இங்கே வந்து விட்டேன். ஆனால் திருடுவதற்கு வரவில்லை. உங்கள் வீட்டில் திருடி எனக்கு ஒன்றும் ஆகவேண்டிய தில்லை!” என்றான்.

மீண்டும் மாணிக்கவல்லியின் ஆங்காரம் அதிகமாயிற்று. “ஓகோ! திருடுவதற்கு வரவில்லையா? அப்படி யானால் எதற்காக வந்தாயாம்? இதோ பார்!…” என்று சொல்லி விட்டு வலது பக்கம் திரும்பி, “சங்கிவித் தேவா!” என்று கூப்பிட்டாள்.

அப்போது இளவரசன் ஒரு நொடியில் அவள் அருகில் பாய்ந்து வந்து பலவந்தமாக அவளுடைய வாயைத் தன் கைகளினால் மூடினான். எதிர் பாராத இந்தக் காரியத்தினால் திகைத்துச் சிறிது நேரம் செயலற்று நின்ற இளவரசி சுய நினைவு வந்ததும் சட்டென்று அவனுடைய கைகளை அப்புறப்படுத்தி விட்டுக் கொஞ்ச தூரம் அப்பால் போய் நின்றாள். அவனைப் பார்வையினாலேயே எரித்து விடுபவள் போல் ஏறிட்டுப் பார்த்து, “என்ன துணிச்சல் உனக்கு?” என்று கேட்டாள். கோபத்தினாலும் ஆங்காரத்தினாலும் அவளுடைய உடல் நடுங்கியதுபோல் குரலும் நடுங்கிற்று.


உலகநாதத் தேவன் தான் பதட்டப்பட்டுச் செய்த காரியம் எவ்வளவு அடாதது என்பதை உணர்ந்திருந்தான். எனவே முன்னைக் காட்டிலும் பணிவுடன் இரக்கம் ததும்பிய குரலில், ”அம்மணி! உன்னை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன்; மன்னிக்க வேண்டும். என்னைத் தொடர்ந்து வரும் எதிரிகளிடம் அகப்படாமல் தப்புவதற்காக இங்கே வந்தேன். என்னை அவர்களிடம் காட்டிக் கொடுத்து விடாதே! அடைக்கலம் என்று வந்தவர்களைக் காட்டிக் கொடுப்பது தர்மமா? சோலைமலை இராஜகுமாரிக்கு அழகாகுமா?” என்றான். இந்த வார்த்தைகள் மாணிக்கவல்லியின் உள்ளக்கடலில் பெருங் கொந்தளிப்பை உண்டாக்கின. ஒரு பக்கம் ஆங்காரமும் இன்னொரு பக்கம் ஆனந்தமும் பொங்கி வந்தன.

”ஆகா! என்னை இன்னார் என்று தெரிந்துமா இப்படிச் செய்தாய்? உன்னை என்ன செய்கிறேன், பார்!” என்று அவள் கொதிப்புடன் கூறினாள் என்றாலும், குரலில் முன்னைப் போல் அவ்வளவு கடுமை தொனிக்கவில்லை.

“நீ என்னை என்ன செய்தாலும் சரிதான். உன் கையால் பெறுகிற தண்டனையைப் பெரிய பாக்கியமாகக் கருதுவேன்… ஆனால் என் பகைவர்களிடம் மட்டும் என்னைக் காட்டிக் கொடுக்க வேண்டாம். அப்படிச் செய்தால் அப்புறம் உன் ஆயுள் உள்ளவரைக்கும் வருத்தப்படுவாய்!” என்றான் இளவரசன்.

மாணிக்கவல்லி மேலும் சாந்தமடைந்து, “இவ்வள வெல்லாம் கருப்பங் கட்டியைப்போல் இனிக்க இனிக்கப் பேசுகிறாயே, ஆனால் நீ யார் என்று மட்டும் இன்னம் சொல்லவில்லை, பார்!” என்றாள்.

“நான் யாரா யிருந்தால் என்ன? தற்சமயம் ஒரு அநாதை; திக்கற்றவன்; சேலை உடுத்திய பெண்ணிடம் வந்து அடைக்கலம் கேட்பவன். இச்சமயம் எனக்கு அடைக்கலம் கொடுத்தால் என்றென்றைக்கும் நன்றி மறவாமல் உன்னை நினைத்துக் கொண்டிருப்பேன்.”

“மாறனேந்தல் மகாராஜாவின் மகனாகப் பிறந்துவிட்டு இப்படி யெல்லாம் கெஞ்சுவதற்கு வெட்கமா யில்லையா?” என்று மாணிக்கவல்லி கேட்டபோது, மாறனேந்தல் இளவரசனுக்குத் தூக்கிவாரிப் போட்டது என்றால், அது மிகவும் குறைத்துச் சொன்னதே யாகும்.

சிறிது நேரம் திறந்த வாய் மூடாமல் நின்ற பிறகு பெரு முயற்சி செய்து, “என்னை எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டான்.

“ஏன் தெரியாது? நன்றாகத் தெரியும். உன்னைப் போன்ற படம் ஒன்று எங்கள் அரண்மனையில் இருந்தது.”

“இருந்தது என்றால், இப்போது இல்லையா?”

“இப்போது இல்லை. ஆறு மாதத்துக்கு முன் ஒரு நாள் அதை அப்பா சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டுக் காலால் மீதி மிதி என்று மிதித்தார். ன் இப்படிச் செய்கிறீர்கள் என்று நான் கேட்டேன். அதற்குப் பதிலாக, நீ ஒரு நாள் அவர் கையில் சிக்கிக் கொள்வாய் என்றும், அப்போது பன்னிரண்டு வேட்டை நாயை உன் மேல் சேர்ந்தாற்போல் ஏவிவிடப் போவதாகவும் சொன்னார்!”

இதைக் கேட்ட இளவரசனுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. “அம்மம்மா! எவ்வளவு கொடுமையான மனிதர்!” என்றான்.

“அப்பா ஒன்றும் கொடுமையான மனிதர் அல்ல. நீ மட்டும் அவரைப் பற்றி அப்படி யெல்லாம் பரிகாசம் செய்து பேசலாமா? அதை நினைத்துப் பார்த்தால் எனக்கே உன்பேரில் பன்னிரண்டு வேட்டை நாய்களை ஏவி விடலாம் என்று தோன்றுகிறதே!”

“அம்மணி! உன் தகப்பனாரைப் பற்றி நான் சில சமயம் பரிகாசமாகப் பேசினது உண்மைதான். ஆனால், அதெல்லாம் அவர் அன்னியர்களாகிய வெள்ளைக்காரர்களுக்கு இடங்கொடுத்துத் தேசத்தைக் காட்டிக் கொடுக்கிறாரே என்ற வருத்தத்தினாலேதான். அவர் மட்டும் வெள்ளைக்காரர்களைச் சோலைமலை சமஸ்தானத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டு முன்போல் சுதந்திரமாய் இருக்கட்டும். நான் அவருடைய காலில் விழுந்து அவரைப் பற்றிக் கேலி பேசியதற் கெல்லாம் ஆயிரந்தடவை மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.”

“வெள்ளைக்காரர் மீது உனக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? உன்னை என்ன செய்தார்கள்? வெள்ளைக்காரச் சாதியார் எவ்வளவோ நல்லவர்கள் என்றும், கெட்டிக்காரர்கள் என்றும் அப்பா சொல்கிறார். நான் கூட அவர்களை நாலைந்து தடவை பார்த்திருக்கிறேன். ரொம்ப நல்லவர்களாய்த்தான் தோன்றினார்கள்.”

“எவ்வளவுதான் நல்லவர்களாயிருக்கட்டுமே? அதற்காக நமது தேசத்தையும் ஜனங்களையும் அன்னியர்களிடம் ஒப்படைத்து அவர்களுக்கு அடிமையாகி விடுவதா? வெள்ளைக்காரர்கள் நல்லவர்களாக இருப்பதெல்லாம் வெறும் நடிப்பு. இந்த தேசம் முழுவதையும் கைப்பற்றி அரசாண்டு இங்கே யுள்ள பணத்தை யெல்லாம் கொண்டு போக வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். அதற்காக முதலில் நல்லவர்கள் போல நடிக்கிறார்கள். போகப் போக அவர்களுடைய உண்மை சொரூபத்தைக் காட்டுவார்கள். நீ வேண்டுமானால் பார்த்துக் கொண்டே இரு. மாறனேந்தல் இராஜ்யத்தைக் கைப்பற்றியதும் கொஞ்ச நாளைக் கெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு சோலைமலை இராஜ்யத்தையும் கைப்பற்றுகிறார்களா இல்லையா என்று பார்!”

“இவ்வள வெல்லாம் பேசுகிறாயே, மாறனேந்தல் கோட்டையில் பெரிய சண்டை நடக்கும்போது நீ ஏன் இங்கே வந்து ஒளிந்து கொள்கிறாய்? சண்டைக்குப் பயந்து கொண்டு தானே? மறவர் குலத்தில் பிறந்த வீரன் இப்படிச் சண்டைக்குப் பயந்து கொண்டு ஓடலாமா?”

“அம்மணி ! நீ சொல்வது உண்மை தான். ஆனால் என்னுடைய சொந்த விருப்பத்தினால் நான் ஓடிவரவில்லை. சண்டைக்குப் பயந்து கொண்டும் ஓடி வரவில்லை. என் தந்தையின் விருப்பத்தைத் கட்ட முடியாமல் வெளியேறி வந்தேன். உனக்கும் எனக்கும், உன்னுடைய வம்சத்துக்கும் என்னுடைய வம்சத்துக்கும் இந்தப் பாரத தேசத்துக்குமே விரோதிகளான அன்னியர்களை எப்படியாவது விரட்டுவதற்கு வழி தேடுவதற்காகவே வந்தேன். அதற்காகத்தான் உன்னிடம் அடைக்கலம் கேட்கிறேன். அதற்காகவே எதிரிகளிடம் என்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம் என்று உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்!” என்று மாறனேந்தல் இளவரசன் உணர்ச்சி ததும்பப் பேசினான்.

அவனுடைய வார்த்தைகள் மாணிக்க வல்லியின் மனதைப் பெரிதும் கனியச் செய்து அவளுடைய கண்களில் கண்ணீர்த் துளிகளையும் வருவித்தன. ஆயினும் அதை அவள் ஒப்புக் கொள்ள விரும்ப வில்லை.

“உங்களுடைய விவகாரம் எல்லாம் எனக்குத் தெரியாது. பார்க்கப் போனால் நான் அந்தப்புரத்தில் அடைபட்டுக் கிடக்கும் பெண்தானே? இந்தக் கோட்டையின் மதிளுக்கு அப்பால் நான் சென்றதே இல்லை. அரண்மனை உப்பரிகையிலிருந்து பார்த்தால் தெரியும் மலையையும் காடுகளையும் தவிர வேறு எதுவும் பார்த்ததே இல்லை. தேசம், இராஜ்யம், சுதந்திரம், அடிமைத்தனம் என்பதை யெல்லாம் நான் என்ன கண்டேன்? உன் தகப்பனாருடைய வார்த்தை உனக்கு எப்படிப் பெரிதோ, அப்படியே என் தகப்பனாரின் விருப்பம் எனக்குப் பெரிது. நியாயமாகப் பார்த்தால் என் தகப்பனாரின் ஜன்ம விரோதியான உன்னை நான் உடனே காவற்காரர்களிடம் பிடித்துக் கொடுத்திருக்க வேண்டும். அதிலும் அந்தப்புரத்து நந்தவனத்துக்குள் வரத் துணிந்த உன்னிடம் துளிக்கூட தாட்சண்யம் பாராட்டக் கூடாது. ஆனலும் நீ ‘அடைக்கலம்’ என்றும், ‘காப்பாற்ற வேண்டும்’ என்றும் சொல்லு கிறபடியால் உன்னைக் காட்டிக் கொடுக்க எனக்கு மனம் வரவில்லை. உன்னிடம் மேலும் பேசிக் கொண்டு நிற்கவும் எனக்கு இஷ்டம் இல்லை. வந்த வழியாக உடனே புறப்பட்டுப் போய் விடு!”


இவ்விதம் இளவரசி மிகக் கடுமையாகச் செய்து கொண்ட குரலில் அதிகாரத் தொனியில் கூறினாள். அந்தப்புரத்துக்குள் அடைந்து கிடக்கும் உலகம் அறியாத இளம் பெண் ஆன போதிலும், அவளுடைய அறிவையும் பேச்சுத் திறமையையும் கண்டு உலகநாதத் தேவன் அதிசயித்தான். முன்னே பேச்சு நடந்தபடி இத்தகைய பெண்ணரசியை மணந்து கொள்ளும் பாக்கியம் தனக்கு இல்லாமற் போயிற்றே என்ற ஏக்கம் அப்படிப்பட்ட ஆபத்தான சமயத்தில் அவன் மனதில் தோன்றியது.

அவன் ஒன்றும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்திருப்பதைப் பார்த்த இளவரசி, “இப்படியே நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? நீயாகப் போகப்போகிறாயா? இல்லாவிட்டால் காவற்காரர்களையும் வேட்டை நாய்களையும் கூப்பிட்டுத்தான் ஆக வேண்டுமா?” என்று கேட்டாள்.

அவள் சொல்லுகிறபடி உடனே போய்விடலாம் என்று முதலில் இளவரசன் நினைத்தான். ஆனால் அவனுடைய உடம்பின் களைப்பும் கால்களின் சலிப்பும் தலையின் கிறுகிறுப்பும் அதற்குக் குறுக்கே நின்றன. முன் எப்போதையும் விட அதிக இரக்கமான குரலில், “அம்மணி! இராத்திரி முழுவதும் கண் விழித்தும் வழி நடந்தும் சொல்ல முடியாத களைப்பை அடைந்திருக்கிறேன். இந்த நிலையில் ஓர் அடிகூட என்னால் எடுத்து வைக்க முடியாது. இச்சமயம் நீ என்னை வெளியே அனுப்புவதும் எதிரிகளிடம் என்னைப் பிடித்துக் கொடுப்பதும் ஒன்றுதான். இந்த நந்தவனத் தில் எங்கேயாவது ஒரு இருண்ட மூலையில் சிறிது நேரம் படுத்துத் தூங்கி விட்டுப் போகிறேன். என்னால் உனக்கு ஒருவிதத் தொந்தரவும் நேராது; சத்தியமாய்ச் சொல்லுகிறேன். ஒருவேளை நான் அகப்பட்டுக் கொண்டால் அதன் பலனை அனுபவிக்கிறேன். என்னை பார்த்ததாகவோ பேசியதாகவோ காட்டிக் கொள்ள வேண்டாம். நானும் சொல்ல மாட்டேன். உண்மையில், இவ்வளவு அதிகாலை நேரத்தில் கந்தவனத்தில் பூப்பறிக்க வருவாய் என்று யார் நினைக்க முடியும்?”

இளவரசி மாணிக்கவல்லி சிறிது நேரம் சித்தனையில் ஆழ்ந்து நின்றாள். பரிதாபமான முகத்துடன் கனிந்த குரலில் பேசிய அந்த ராஜகுமாரன் விஷயத்தில் அவள் மனம் பெரிதும் இரக்க மடைந்திருந்தது. விதியை வெல்லுவதென்பது யாருக்கும் இயலாத காரிய மல்லவா?

“அப்படியானால் நான் சொல்லுகிறபடி கேள். இந்த வஸந்த மண்டபத்திலேயே படுத்துக் கொண்டு தூங்கு. இன்றைக்கு இங்கே யாரும் வரமாட்டார்கள். வந்தால், என்னுடைய வேலைக்காரிதான் வருவாள். அவள் வராதபடி கான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் தூக்கம் விழித்து எழுந்ததும் நீ பாட்டுக்குப் போய் விடக் கூடாது. என்னிடம் சொல்லிக் கொண்டுதான் போக வேண்டும். அபாயம் ஒன்றும் இல்லாத தக்க சமயம் பார்த்து உன்னை நான் அனுப்பி வைக்கிறேன். நான் மறுபடி வரும் வரையில் நீ இங்கேயே இருக்க வேண் டும்” என்று மாணிக்கவல்லி கண்டிப் பான அதிகார தோரணையில் கூறினாள்.

“அப்படியே ஆகட்டும், அம்மணி! ரொம்ப வந்தனம்” என்றான் இளவரசன். அவ்விடத்தை விட்டு மாணிக்கவல்லி திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டு சென்று மறைந்ததும், உலகநாதத் தேவன் வஸந்த மண்டபத்தின் ஓரத்தில் கையைத் தலையணையாக வைத்துக் கொண்டு படுத்தான். சிறிது நேரத்துக் கெல்லாம் ஆழ்ந்த நித்திரையின் வசமானான்.

6. மாலை வருகிறேன்!

நீண்ட நேரம் வரையில் மாறனேந்தல் இளவரசன் பிரக்ஞையே யில்லாமல் தூங்கினான். நேரமாக ஆகத் தூக்கத்தில் கனவுகள் தோன்ற ஆரம்பித்தன. சில சமயம் இன்பக் கனவுகள் கண்டபோது, தூங்குகின்ற முகத்தில் புன்னகை மலர்ந்தது. வேறு சில சமயம் பயங்கரமான கனவுகள் தோன்றி அவன் சுந்தரமுகத்தை விகாரப்படுத்தின.

கடைசியில் வேட்டை நாய் ஒன்று தன்னுடைய மூக்கைக் கடிப்பதாகக் கனவு கண்டு உலகநாதத் தேவன் உளறி அடித்துக்கொண்டு எழுந்தான். பார்த்தால், அவன் எதிரே வேட்டை நாய் எதுவும் இல்லை. சோலைமலை இளவரசிதான் நின்றுகொண்டிருந் தாள். நின்றதோடல்லாமல், முல்லை மொட்டுக்களை யொத்த அவளுடைய அழகிய பற்கள் தெரியும்படி சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டு மிருந்தாள்.

சற்று நிதானித்து யோசித்ததும் இளவரசனுக்குத் தன்னுடைய நிலமை இன்னதென்று ஞாபகம் வந்தது. இளவரசியின் தோற்றத்தையும், அவளுடைய கையில் வைத்திருந்த பூச் செடியின் காம்பையும் கவனித்து வீட்டு அவள் அந்தச் செடியின் காம்பினால் தன் மூக்கை நெரடி உறக்கத்திலிருந்து எழுப்பியிருக்க வேண்டு மென்று ஊகித்துக் கொண்டான்.

“ஐயா! கும்பகர்ணன் என்று இராமாயணக் கதையிலே கேட்டிருக்கிறேன். இப்போதுதான் முதன் முதலாக நேரிலே பார்த்தேன். உம்மைப் போல் தூங்குமூஞ்சியை நான் இத்தனை நாளும் கண்டதே யில்லை. எத்தனை நேரம் உம்மை எழுப்புவது? அதிலும் பட்டப் பகலில் இப்படியா தூங்குவார்கள்?” என்றாள் இளவரசி.

“அம்மணி! நேற்று இரவு முப்பது நாழிகை நேரத்தில் ஒருகண நேரம் கூட நான் கண்ணைக் கொட்டவில்லை. அதை நினைவில் வைத்துக் கொண்டால், என்னை இப்படி நீ ஏச மாட்டாய். போனால் போகட்டும். எதற்காக என்னை எழுப்பினாய்? ஏதாவது விசேஷம் உண்டா? இப்போதே நான் போய்விட வேண்டுமா? சூரியன் மலை வாயில் விழுந்ததும் கிளம்பலாம் என்று பார்த்தேன்!” என்றான் உலகநாதன்.

“இப்போதே உம்மைப் புறப்படச் சொல்லவில்லை. இருட்டிய பிறகு புறப்பட்டாலே போதும். காலையில் கூட ஒன்றும் நீர் வயிற்றுக்குச் சாப்பிட வில்லையே, நேரம் ரொம்ப ஆகிவிட்டதே என்று எழுப்பினேன். உமக்குப் பசிக்க வில்லையா? ஒரு வேளை பசியாத வரம் வாங்கி வந்திருக்கிறீரா?” என்றாள் மாணிக்கவல்லி. அப்போது உலகநாதத் தேவனுக்குத் தன்னுடைய வயிற்றின் நிலைமை நன்றாக ஞாபகத்துக்கு வந்தது. வயிற்றுக்குள்ளே ஏதோ ஒரு பெரிய பள்ளம் இருப்பது போலவும் அதை மேலும் ஆழமாக யாரோ தோண்டி எடுத்துக் கொண்டிருப்பது போலவும் தோன்றியது!

“பசியா வரம் வாங்கிய பாக்கியசாலி அல்ல நான். அசாத்தியமாகப் பசிக்கத்தான் செய்கிறது. தூங்குகிறவனை எழுப்பிப் பசியை நினைவூட்டியதனால் ஆவது என்ன? சாப்பாட்டுக்கு ஏதாவது வழி சொன்னால் அல்லவா தேவலை? இன்னும் சற்று நேரம் இப்படியே பசிக்கு ஒன்றும் கிடைக்காமலிருந்தால் உன்னையே சாப்பிட்டாலும் சாப்பிட்டு விடுவேன்! கும்பகர்ணன் அப்படித்தான் தூங்கி எழுந்ததும் மனிதர்களையும் மிருகங்களையும் அப்படியே விழுங்கிப் பசி தீர்ந்தானாம். தெரியுமல்லவா?” என்றான் உலகநாதன்.

மாணிக்கவல்லி அதைக் கேட்டு இளநகை புரிந்து கொண்டே, “அப்படி யெல்லாம் நீர் செய்ய வேண்டியதில்லை. உமக்குச் சாப்பாடு வந்திருக்கிறது!” என்றாள்.

இளவரசி நோக்கிய திசையை உலகநாதத் தேவனும் நோக்கியபோது, மண்டபத்தின் தூணுக்குப் பக்கத்தில் கூஜாவில் தண்ணீரும் தட்டிலே சாப்பாடும் வைத்திருப்பது தெரிந்தது.

அவ்வளவுதான் ; இளவரசன் ஒரு கணத்தில் குதித்து எழுந்து முகத்தையும் கழுவிக்கொண்டு, சாப்பாட்டுத் தட்டைத் தனக்கு அருகில் இழுத்துக் கொண்டான். அதில் இருந்த அரைப் படி அரிசிச் சோறு, கறி வகைகள், அதிரசம், பணியாரம் முதலியவற்றை யெல்லாம் அரைக்கால் நாழிகை நேரத்தில் தீர்த்துத் தட்டையும் காலி செய்தான்.

இடையிடையே தனக்கு இத்தகைய பேருதவி செய்த பெண் தெய்வத்தை நன்றியுடன் பார்த்துக் கொண்டே உணவை விழுங்கினான்.

இளவரசியோ அவன் ஆர்வத்துடன் உணவருந்தும் காட்சியை அடங்காத உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தக் காட்சியில் அதற்கு முன் என்று மறியாத மகிழ்ச்சி அவளுக்கு உண்டாகிக் கொண்டிருந்தது. மாணிக்கவல்லிக்கு நினைவு தெரிந்த காலம் முதல் இன்று வரையில், அவளுக்கு மற்றவர்கள் பணிவிடை செய்வதுதான் வழக்கமா யிருந்தது. தான் இன்னொருவருக்கு ஏதேனும் உதவி செய்வதில் எத்தகைய இன்பம் இருக்கிறது என்பதை நாளதுவரை அவள் அறிந்ததில்லை. இன்றுதான் முதன் முதலாக அவள் பிறருக்குத் தொண்டு புரிந்து அவர்களுடைய கஷ்டத்தைப் போக்குவதில் ஏற்படும் சந்தோஷத்தை அறிந்து அநுபவித்தாள். இந்த உள்ளக் கிளர்ச்சி அவளுடைய முகத்துக்கு ஒரு புதிய சோபையைக் கொடுத்திருந்தது.

இளவரசன் உணவருந்தி விட்டுக் கை கழுவி முடிந்ததும், “போதுமா? இன்னும் ஏதாவது வேண்டுமா?” என்று மாணிக்கவல்லி கேட்டாள்.

“இனிமேல் வேண்டியது உன்னுடைய தயவு ஒன்று மட்டுந்தான்! எனக்கு அடைக்கலம் அளித்து உயிரையும் கொடுத்தாயே? உனக்கு என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்? எந்த விதத்தில் என் நன்றியைச் செலுத்தப் போகிறேன்?” என்றான் உலகநாதன்.

“இவ்விடம் நீர் வந்ததுபோலவே ஒருவரும் அறியாதபடி திரும்பிப் போய்ச் சேர்ந்தால் அதுதான் எனக்கு நீர் செய்யும் பிரதி உபகாரம்!” என்றாள் மாணிக்கவல்லி.

“அந்த உபகாரம் அவசியம் செய்கிறேன், அம்மணி! என் உடம்பில் இப்போது தெம்பு இருக்கிறது; இடுப்பிலே கத்தி இருக்கிறது; அப்புறம் சோலைமலை முருகக் கடவுளும் இருக்கிறார்! இப்போதே வேணுமானாலும் கிளம்பி விடுகிறேன்” என்று சொல்லிக் கொண்டு எழுந்தான்.

”வேண்டாம்; இப்போது போனால் யாராவது கவனிப்பார்கள். ஏதாவது தொல்லை ஏற்படலாம். முதலில் சொன்னபடி இருட்டிய உடனே புறப்பட்டால் போதும்!” என்றாள் இளவரசி,

“அப்படியே ஆகட்டும் : இருட்டிய பிறகு ஒரு நொடிப் பொழுதுகூட இங்கே நான் நிற்கமாட்டேன்.”

“நான் மறுபடியும் வருவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்க வேண்டாம். தெரிகிறதா?”

“நன்றாய்த் தெரிகிறது. அந்த உத்தேசமே எனக்குக் கிடையாது. அதிர்ஷ்ட தேவதையின் கருணை இரண்டு தடவை கிடைத்து விட்டது. இன்னொரு தடவையும் கிடைக்கும் ன்று எதிர்பார்க்கலாமா? இருட்டியதும் கிளம்பி விடுகிறேன்.”

“இல்லை; வேண்டாம். ஒருவேளை இன்று சாயங்காலத்துக்குள் அப்பா திரும்பி வந்தாலும் வந்து விடுவார். எல்லாவற்றுக்கும் நான் இன்னொரு தடவை வந்து தகவல் சொல்கிறேன். அதுவரையில் நீர் இங்கேதான் இருக்க வேண்டும். மறுபடி நான் வந்து சொல்லும் வரையில் போகக்கூடாது. தெரிகிறதா?”

பெண்களின் சஞ்சல புத்தியை நினைத்துப் புன்னகை புரிந்த வண்ணம் இளவரசன், “ஆகா! தெரிகிறது! அப்படியானால் கொஞ்சம் சீக்கிரமே வத்துவிடு. இன்றைக்கு இரவு நாலு நாழிகைக்குச் சந்திரன் உதயமாகும். பளிச்சென்று அடிக்கும் நிலவில் கோட்டைச் சுவரைத் தாண்டிச் செல்வது கஷ்டமாயிருக்கும்” என்றான்.

“ஓகோ! நிலா வெளிச்சத்தை நினைத்தால் பயமா யிருக்கிறதா? சற்று முன்னால் ‘இடுப்பில் கத்தி இருக்கிறது; உயிருக்குப் பயமில்லை!’ என்று ஜம்பம் பேசினீரே?” என்று இளவரசி கேலி செய்தாள்.

“ஜம்பம் இல்லை, அம்மணி! நான் கூறியது உண்மைதான். என் உயிரைப் பற்றி எனக்குக் கவலையே யில்லை. என் காரணமாக உனக்கு ஒரு தொந்தரவும் ஏற்படக் கூடாதே என்றுதான் கவலைப் படுகிறேன்.”

“என்னைப் பற்றி நீர் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். நான் சோலைமலை இளவரசி, என் தந்தைக்குச் செல்லப் பெண். என்னை யார் என்ன சொல்லக் கிடக்கிறது? – நான் சீக்கிரமாக வந்தாலும் நேரங்கழித்து வந்தாலும் நான் வந்த பிறகுதான் நீர் போக வேண்டும். இல்லா விட்டால்…”

“இல்லா விட்டால் என்ன?”

“உடனே சங்கிலித் தேவனைக் கூப்பிட்டு உம்மை அவனிடம் ஓப்படைத்து விடுவேன்.”

“அவ்வளவு சிரமம் உனக்கு நான் வைக்கவில்லை. நீ மறுபடி வருகிற வரையில் இங்கேயே இருப்பேன். ஆனால் சீக்கிரமாக வந்து விட்டால் ரொம்ப உபகாரமாயிருக்கும். நான் செய்யவேண்டிய வேலை எவ்வளவோ இருக்கிறது.”

“சீக்கிரமாகவே வருவதற்குப் பார்க்கிறேன். ஆனால், நிஜமாகவே உமக்குப் பசி தீர்ந்து விட்டதல்லவா? நீர் சாப்பிடுவதைப் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் கொண்டுவர வில்லையே என்று இருந்தது.”

“அழகுதான்! இப்போது நான் சாப்பிட்டது இன்னும் மூன்று நாளைக்குப் போதும். இராத்திரி நிச்சயமாகச் சாப்பாடு கொண்டுவர வேண்டாம்.”

“ஆகா! சோலைமலை இளவரசி உமக்குச் சோறு படைக்கப் பிறந்தவள் என்று எண்ணி யிருக்கிறீரோ? ஏதோ பசித்திருக்கிறீரே என்று பரிதாபப்பட்டு ஒரு வேளை கொண்டு வந்தால் இராத்திரிக்கும் கொண்டு வா என்கிறீரே?”

“ஐயையோ! நான் அப்படிச் சொல்ல வில்லையே? வேண்டாம் என்றுதானே சொன்னேன்?”

“வேண்டாம் என்று சொல்வதற்கு அர்த்தம் என்ன வென்று எனக்குத் தெரியாதா? கட்டாயம் கொண்டு வா என்றுதான் அர்த்தம். ஆனால் அது முடியாத காரியம்.”

“வேண்டாம், அம்மணி, இராத்திரி எனக்கு ஒன்றும் வேண்டாம்!”

“நான் கொண்டு வருவதாக இருந்தால் அல்லவா நீர் வேண்டாம் என்று சொல்ல வேண்டும்?”

இளவரசன் ‘மௌனம் கலக நாஸ்தி’ என்ற பழமொழியை நினைவு கூர்ந்து சும்மா இருந்தான். இளவரசியும் போஜன பாத்திரங்களை எடுத்துக் கொண்டு சென்றாள்.


மாணிக்கவல்லி அவ்விட மிருந்து போன பிறகு மாறனேந்தல் இளவரசன் மாலைப் பொழுதின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவ்விதம் அவன் ஆவல் கொள்வதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருந்தன. உடம்பின் களைப்புத் தீர்ந்து விட்டபடியால் அவன் உடனே புறப்பட்டுச் செல்ல விரும்பினான். எத்தனையோ அவசர காரியங்கள் அவன் செய்வதற்கிருந்தன. சோலைமலைப் பிரதேசத்தை அன்று இரவுக் கிரவே எப்படியாவது தாண்டிப் போய்விட வேண்டும். தூர தூர தேசங்களுக்குச் சென்று அங்கங்கே கும்பெனி ஆட்சிக்கு விரோத மாயுள்ள ராஜாக்களையும் நவாபுகளை யும் சந்திக்க வேண்டும். பெரிய படை திரட்டிக் கொண்டு திரும்பி வரவேண்டும். வியாபாரம் செய்வதற்காக வந்து இராஜ்யங்களைக் கவர்ந்து கொண்டிருக்கும் வெள்ளை மூஞ்சிகளை நாட்டிலிருந்து துரத்தியடிக்க வேண்டும். மூட்டை முடிச்சுகளைச் சுருட்டி எடுத்துக் கொண்டு அவர்கள் கப்பல் ஏறி ஓடும்படி செய்ய வேண்டும். மாடு இல்லாமலும் குதிரை இல்லாமலும் ரயில் வண்டி விடுவதாகச் சொல்லி, தேசமெங்கும் இரும்புத் தண்டவாளங்களைப் போட்டல்லவா அவர்கள் இந்தப் புராதன பாரத தேசத்தைக் கட்டி ஆளப் பார்க்கிறார்கள்? இரும்புக் கம்பியால் வேலி எடுத்துத் தேசத்தையே யல்லவா சிறைச்சாலை யாக்கப் பார்க்கிறார்கள்? அப்படிப் பட்டவர்களைத் துரத்தி யடிப்பதற்கு வடக்கே டில்லி பாதுஷா என்ன, மராட்டிய மகா வீரர்கள் என்ன, ஜான்ஸி மகாராணி என்ன, இப்படி எத்தனையோ பேர் ஆயத்தம் செய்து கொண்டிருப்பதாக அவன் கேள்விப் பட்டிருந்தான். அவர்களோடு தானும் சேர்ந்துகொள்ள வேண்டும். பெரிய படை திரட்டிக்கொண்டு திரும்பி வந்து தமிழகத்திலிருந்தும் வெள்ளைக்காரர்களைத் துர்த்தி யடிக்கவேண்டும். பிறகு, முதற் காரியமாக அவர்கள் போட்ட ரயில் தண்டவாளங்களை யெல்லாம் பிடுங்கி எறிந்துவிட வேண்டும்!…

இப்படி யெல்லாம் மாறனேந்தல் இளவரசன் மனக் கோட்டைகள் கட்டிக்கொண்டிருந்தான். அந்த மனக் கோட்டைகளுக்கு இடை யிடையே மாறனேந்தல் கோட்டையின் கதி இதற்குள் என்ன ஆயிற்றோ, தன்னுடைய தாய் தந்தை தம்பி ஆகியவர்கள் என்ன கதியை அடைந்தார்களோ என்ற கவலையும் அவனைப் பிடுங்கித் தின்றுகொண்டிருந்தது.

எனவே, சூரியன் எப்போது அஸ்தமிக்கும் என்று அவன் பரபரப்புடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்ததில் வியப்பில்லை யல்லவா?

அந்தப் பரபரப்புக்கு இரண்டாவது சிறு காரணம் ஒன்றும் இருக்கத்தான் செய்தது. அது, இரவு வந்ததும் சோலைமலை இளவரசி அங்கு வருவாள் என்ற எண்ணந்தான். தான் அந்தக் கோட்டையை விட்டுப் போவதற்கு முன்னால் மாணிக்கவல்லியை மறுபடியும் ஒரு தடவை பார்க்கலாம் என்கிற நினைவு அவனுக்கு அதுவரையில் அனுபவித்து அறியாத ஒரு அதிசயமான உவகை உணர்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது. சிற்சில சமயம். காரியங்கள் வேறுவிதமாக நடந்திருந்தால் இந்த அபூர்வமான தேவகன்னிகையைத் தான் மணந்திருக்கலா மல்லவா என்ற எண்ணமும் உதித்தது. சோலைமலை ராஜாவைப் பற்றி அப்படியெல்லாம் தான் வாய்த் துடுக்காகப் பேசி யிராவிட்டால் அந்தப் பெண்ணுக்கும் தனக்கும் வைபோகமாகக் கலியாணம் நடந்திருக்கலா மல்லவா? ஆனால் உண்மையில் தன்பேரில் குற்றம் ஒன்றுமில்லை. சரா புரா வென்று மலைக் குறவர் பாஷை பேசும் வெள்ளைக்கார சாதியார் வந்ததனால் அல்லவா அவ்விதம் நடவாமல் போயிற்று? தான் கரம் பிடித்து மணத்திருக்கக் கூடிய பெண்ணிடம் அடைக்கலம் கேட்கும்படியும், அவள் அளித்த ஒருவேளை உணவுக்காக நன்றி செலுத்தும்படியும் நேரிட்டது?…

இவ்விதம் உள்ளம் அங்கு மிங்கும் அப்படியும் இப்படியும் ஊசலாட, உலகநாதன் ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகக் கழித்துக்கொண்டு அந்தப்புர நந்தவனத்து வஸந்த மண்டபத்தில் உட்கார்ந்திருந்தான்.

கடைசியாக, கழியாத நீள் பகலும் கழிந்தது. நாலு பக்கங்களிலும் இருள் சூழ்ந்து வந்தது. கோட்டை மதிளுக்கு அப்பால் சோலைமலைச் சிகரத்தின் உச்சியில் முருகன் கோயில் தீபம் ஒளிர்ந்தது. இனி, சீக்கிரத்திலேயே சோலைமலை இளவரசி தனக்கு விடை கொடுக்க வந்து விடுவாள் என்ற எண்ணத்தினால் இளவரசனின் நெஞ்சு தடக், தடக் என்று அடித்துக் கொண்டது.

பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவனுடைய கண்ணெதிரே தோன்றிய முருகன் கோயில் தீபம் பெரிதாகிக் கொண்டு வந்தது. கிட்டத் தட்ட மாலை வேளையில் உதிக்கும் பூரண சந்திரனுடைய வடிவை அது அடைந்தது. சட்டென்று அந்தப் பூரண சந்திரன் ரயில் வண்டியின் ஸர்ச் லைட்டாக மாறியது. ரயிலும் ஸர்ச் லைட்டும் அதி வேகமாக அவனை நெருங்கி நெருங்கி நெருங்கி வந்தன. ஸர்ச் லைட்டின் உஷ்ணமான வெளிச்சம் அவனுடைய முகத்தில் பளீரென்று விழுந்து மூடியிருந்த கண்களையும் கூசும்படி செய்தது.


குமாரலிங்கம் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு எழுந்து உட் கார்ந்தான். தான் சோலைமலை இளவரசன் அல்ல வென்பதையும், தேசத் தொண்டன் குமாரலிங்கம் என்பதையும் அவன் உணர்வதற்குச் சிறிது நேரம் பிடித்தது. கடைசியாக அவன் முகத்தில் அடித்த வெளிச்சம் ரயில் வண்டியின் ஸர்ச் லைட் வெளிச்சம் அல்ல, உச்சி வேளை சூரியனின் வெய்யில் வெளிச்சம் என்பதையும் தெரிந்து கொண்டான். உதய நேரத்தில் தான் அந்தப்பாழும் கோட்டைக்குள் பிரவேசித்து அதிகமாக இடியாமலிருந்த வஸந்த மண்டபத்தில் படுத்த விஷயமும் நினைவுக்கு வந்தது. ஆனால், அதுவரையில் அவன் கண்ட காட்சி, அடைந்த அநுபவம் எல்லாம், தூக்கத்திலே கண்ட மாயக் கனவா? இல்லை, இல்லை, ஒரு நாளும் இல்லை. ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு அநுபவமும், பிரத்யட்சமாகப் பார்த்து உணர்ந்து அநுபவித்ததாக வல்லவா தோன்றின? அவ்வளவும் வெறும் கனவாகவோ, குழம்பிப் போன மூளையின் விசித்திர கற்பனை யாகவோ இருக்க முடியுமா? அல்லது உண்மையிலேயே முன்னொரு பிறவியில் தன்னுடைய வாழ்க்கை அநுபவங்கள் தான் அவ்வளவு தெளிவாக நினைவுக்கு வந்தனவா?


இத்தகைய மனக் குழப்பத்துடன் குமாரலிங்கம் சுற்று முற்றும் பார்த்த போது, சற்றுத் தூரத்தில் அந்தப் பாழடைந்த கோட்டையில் மனிதர் நடந்து நடந்து ஏற்பட்டிருந்த ஒற்றையடிப் பாதை வழியாகத் தலையில் கூடையுடன் ஒரு இளம் பெண் வருவதைக் கண்டான். அந்தக் காட்சி அவனுடைய நெஞ்சின் ஆழத்தில் மகிழ்ச்சியையும் அடிவயிற்றில் திகிலையும் உண்டாக்கியது. எக்காரணத்தினாலோ, மகிழ்ச்சியைக் காட்டிலும் திகில் அதிகமாயிற்று. தன்னுடைய நிலைமையும் ஞாபகத்துக்கு வந்தது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தின் ஒற்றர்கள் தன்னை நாலா பக்கத்திலும் தேடிக் கொண்டிருப்பார்கள். இச் சமயம் தான் அந்தப் பாழும் கோட்டையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் அந்தப் பெண் ஏதாவது கேட்கக்கூடும். தான் ஏதாவது பதில் சொல்லவேண்டி யிருக்கும். அதனால் என்ன விளையுமோ என்னமோ? அவள் கண்ணில் படாமல் மறைந்து கொள்வதற்கும் அப்போது நேரமில்லை. பின்னே, வேறு என்ன செய்யலாம்? மறுபடியும் அங்கேயே படுத்துத் தூங்குவது போலப் பாசாங்கு செய்வதுதான் சரி. அந்தப் பெண் தான் தூங்குவதைப் பார்த்து விட்டுப் பேசாமல் தன் வழியே போய் விடுவாள். பிறகு எழுந்து மேலே தான் செய்ய வேண்டியது என்ன வென்பதைப் பற்றித் தீர்மானித்துக் கொள்ளலாம்.

இவ்விதம் முடிவு செய்து கொண்டு குமாரலிங்கம் மறுபடியும் அந்தப் பழைய வஸந்த மண்டபத்தின் குறட்டில் படுத்தான். இரண்டு கண்களையும் இறுக மூடிக்கொண்டான்.

– தொடரும்…

– கல்கி இதழிலிருந்து சேகரிக்கப்பட்டது.

– சோலைமலை இளவரசி (தொடர்கதை), வெளிவந்த ஆண்டு: 12-01-1947 – 13-04-1947, கல்கி இதழ்.

கல்கி (செப்டம்பர் 9, 1899 - டிசம்பர் 5, 1954) புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி. 35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *