சொர்க்க மலர்களின் நரகப் பிரவேசம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2024
பார்வையிட்டோர்: 1,009 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பொய் எங்களை விழுங்கித்தான் இருக்கிறது. அதனால்தான் நிஜங்களை விட்டும் நாங்கள் விலகி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுவும் எங்கள் வீடுகளிலேயே. சதா கற்பனா வாதத்தில் உருகிக் கழியும் டீவீ யிலேயே வீட்டின் முக்காற் பொழுதையும் வீணாக்கிக் கொண்டிருக்கிறோமே, அதைத்தான் சொல்கிறேன். 

அப்போதும் அப்படித்தான், டீவீ மந்திரவாதியின் கட்டுப்பாட்டில் சோபாக்களில் கிடந்தோம். சத்தியம் என்றொரு சினிமா அசத்தியம். 

என் முழங்கால்கள் மீது விரிந்த கைகளில் தன் தலையைப் படர்த்தி மகிழ்ந்து நெளியும் பிறந்தமேனிப் பேரன். ஐந்தே மாதங்களும் ஐந்நூறு வகை மழலைமைகளும்! சின்னத்திரையில் கால்வாசிக் கண்ணும் மடிகிடந்த பொன்னுத்துரையில் முக்கால்வாசிக் கண்ணுமாக நானும். 

குழந்தைகள் எமது பல்கலைக் கழகங்கள் அல்லவோ! அதனால் என் மனதிற்குள் ஒரு பகுத்தறிவுப் பாடம் அப்போதும் படிந்துகொண்டிருந்தது. 

…..முன்னைய இத்தகு சொர்க்க மலர்கள்தாமே இன்று நரகக் காய், கனிகளாகி இம்சித்தும் அடிமைப்படுத்தியும் கொன்றும் ஆதிக்கம் நடத்துகின்றன? அல்லது இம்சைப்பட்டும் அடிமைப்பட்டும் கொலையும் படுகின்றன? நாடு பிறகேன் நரகமாகாது? 

எதிர்வீடு மனதில் எழுந்தது. தாய், தகப்பன், மகன், மகள் மட்டுமேயான குடும்பக் கட்டுப்பாட்டின் வீடு. மகன் கில்லாடித்தனத்தில் மகான். திருத்தப்படவே முடியாத கேஸ் என்று ஆண்டவனாலேயே கைவிடப்பட்டவன் மாதிரி. சகல எதிர்காலங்களையும் யோசித்துப் பார்த்தவர்களாக அவனை எப்படியோ இராணுவத்தில், அதாவது இன்றைய உடனடிப் பென்ஷன் தொழிலில் சேர்த்து விட்டார்கள் குடும்பத்தவர்கள் ஊரே கையெழுப்பிக் கும்பிட. 

திட்டிக் கொண்டிருந்த ஊர் திடுதிப்பென்று அவனை மண்ணின் மைந்த னென்று புகழத் தொடங்கிவிட்டது. பெற்றவர்களும் ஆகாய வேந்தர்கள் மாதிரி மிதக்கத் தொடங்கினார்கள். 

அவர்களுக்குப் பலவகை மகிழ்ச்சிகள். இந்த நரகக் காய், வவுனியா விலிருந்து திரும்பவே திரும்பாது என்பதுதான் முதல் மகிழ்ச்சி. மண் காக்கும் வீரன் எனச் சொல் மாலைகள் வீதி தோறும் வீசப்படுவதைப் பொறுக்கிக் கொள்வது நாளாந்த மகிழ்ச்சி. எப்படியாவது செத்துப்போனால் கிடைக்கும் வீர விருதுப் பணத்தில் வறுமை வியர்வையைத் துடைத்துக் கொள்ளலாம் என்பது அடிப்படையான அந்தரங்க மகிழ்ச்சி. 

எவ்வளவு கொச்சைப்படுத்துகிறார்கள் வறுமைச் செல்வத்தைச் சிலர்!..

அவனும் அணுப் பிசகாமல் செத்துத்தான் போனான். மூடி திறவாத பெட்டியைத் தேசியத் துணி வேறு மூடியிருந்தது. என்ன இருந்தாலும் எனக்கும் துக்கம்தான் யார் யாரோ செய்திருக்கும் பாவங்களுக்காக இவனும் பலியானானே என்று. பாவப்பட்ட ஜென்மம்! 

ஐந்தாறு நாட்கள் வரை குடும்பம் ஒருவகை முகமூடி அழுகையில் இருந்தது. பிறகு விருதுப்பணம் சதாநிம்மதியைக் கொண்டு வந்ததோடு சகலமுமே சுபம்! 

புலியைக் கொன்று வா என்று மகனைக் கொன்றுவிட்ட அவர்களுக்கு நரகம்கூட எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது! 

உதவாக்கரைகளை வளர்ப்பதுவும் இன்று தேசியக் கௌரவம்தான்! 


பேரனின் சிறுநீர் சுளீரென்று என் முகத்தில் தைத்ததால் திடுக்கிட்டுப் போனேன். 

மகளும் மருமகனும் சின்ன மகனும் மாமியும் ஆரவாரமாகச் சிரிக்கத் தொடங்கினார்கள் ஸனத்தின் ஸிக்ஸரை டீவீயில் கண்ட மாதிரி. 

ஆனால் மனைவி மாத்திரம் கத்தினாள், நான் ஏதோ குடும்பத்தையே கெடுத்துவிட்டமாதிரி! “என்னப்பா நீங்க! ஆட்டினதால பிள்ள மூத்திரத்தை அடக்கீட்டான் பாருங்க!” 

இதொன்றிலுமே காலத்தை விரயமாக்காது ஆடிய தன் கை, கால்களுக்குத் தகுந்த மாதிரிப் பொக்கை வாயை நெளித்துக் கொண்டிருந்தான் அவன். 

“நான் ஒண்ணுஞ் செய்யலப்பா, சும்மா கத்தாதீங்க!” என்று புறங்கையால் முகம் துடைத்தேன்-வாயில் உப்புக் கரிச்சலோடு. “டேய் கள்ளா! இப்பத் தானேடா ஒண்ட மம்மீட :கவுன நனச்சே?’ 

“அஞ்சி நிமிஷத்துக்கொருக்கா யார் மேலயாச்சும் பெய்யல்லேன்னா அவனுக்குத் தூக்கம் போகாது :டெடி!” என்று மகள் பெருமைப்பட்டாள். 

“மூத்திரம் கட்டுறது அவ்வளவு நல்லதில்ல! பிள்ளைக்கு வருத்த மில்லியா!” என்றாள் இவள் விடாப்பிடியாய். 

மடியிலிருக்கும்போது பிள்ளை சிறுநீர் கழித்தானானால் கழித்து முடிகிற வரைக்கும் நானும் அசைவதில்லைதான். இன்றென்னவோ ஒரு திடீர் வீக்னஸ். 

கமக்கட்டுகளுக்கூடாகப் பேரனைக் காவிக்கொண்டு போய் வாசற்படியில் உட்கார்ந்தேன். என் குதிகால் பாதங்களை நட்டுப் பிள்ளையையும் உட்கார வைத்தேன். “நீங்க பேயுங்க ராஜா,” என்ற கொஞ்சலுடன் அவனது அடி வயிற்றில் உள்ளங்கையால் அழுத்தியும் கொடுத்தேன் மூத்திரம் பிழிபட்டா வது வரட்டுமென்று. 

“அவன் இனிப் பேயவா போறான்?” என்றாள் என் மனைவி சாபம் கொடுக்கிற தொனியில். எனக்கு எரிச்சலாக இருந்தது, ஆட்சிக் காலத்தை நீடித்துக் கொள்ளும் அரசாங்கத்தில் இருப்பதைப் போல. 

மூத்திரப் பிரக்ஞையே இல்லாமல் வாசல் வேடிக்கை பேரனுக்கு. இப் போதைக்குப் பெய்ய மாட்டான் என்பதுவும் எனக்குத் தெரியும். 

மகள் டீவீக் கண்களோடு என் தோளில் ஒரு துணித்துண்டைப் போட்டாள். முகம் துடைப்பதாகப் பெயர் பண்ணிவிட்டு இன்னும் கொஞ்சம் இருந்து பார்க்கலானேன். 


குழந்தைமை! 

நாம் நம்மிலிருந்து மறந்து போன ஓர் அதியற்புதப் பராயம்! 

ஏன் இந்த அற்புதத்தை மறந்து போனோம்? அற்புதமாய் இருந்து தானே ஆபாசமாய் மாறிப் போனோம்? அமைதியே இன்று போராக மாறிவிட வில்லையா? எப்படித்தான் அந்தத் தூய அற்புதம் இந்த அசுத்தத்தில் நிற்கும்? அது தானாகவே ஒதுங்கிக் கொண்டது. 

ஒரு பக்கமாக 

மொழி, அறிவு, மத, பண, புகழ், ஆதிக்க அசுத்தங்கள். 

மறுபக்கமாக 

ஆதிப்பாமர, நாத்திக, வறுமை, அடிமைத்தன அசுத்தங்கள். 

இவற்றை நேரத்துக்கொன்றாய் மாட்டி நாம் ஆபாசமாகிப் போனோம். 

அற்புதமாய் இருந்தபோது குழந்தைகள் சொர்க்கத்து மலர்கள்தாம். தூய்மைதான், அதிலும் மனத் தூய்மைதான் சொர்க்கமென்றால், குழந்தை மலர்கள் அந்தச் செடியில்தானே பூக்கவும் முடியும்? தாயின் பாதத்தடியில் சொர்க்கமென்றால், அவள் வயிறும் அவ்வயிறு கனிவித்த குழந்தையும் சொர்க்கம் அல்லாதவையாக இருக்க முடியுமா? 

ஜல-மலங்கள் கூட அவர்களுக்கு அழுக்காக இல்லையே! அவற்றோடு அவர்கள் விருப்பு வெறுப்பில்லாமல் விளையாடுவதைப் பார்த்தால், விவேகானந்தர் மலத்திலும் கடவுள் உண்டென்று கூறியது சரியோ என்றும் படுகிறது. 

ஆகா! ஜலமலநாதர் அல்லது மூத்திராச்சாரியார் என்ற படிமம் அல்லது குறியீடு குழந்தைகளுக்கு எவ்வளவு அழகாய்ப் பொருந்துகிறது! அவையடக்க மற்ற சில தலைக் கனங்களின் வீச்சக் கவிதைகளைவிட இவ்வார்த்தைகள் எவ்வளவு பொருத்தமாகக் கொலு வீற்றிருக்கின்றன! 

ஆதாமும் ஏவாளும் பாவக் கனியைப் புசிக்கும் வரையில் சொர்க்கத்தில் தான் இருந்தார்கள். புசித்த கையோடுதான் வெட்கம் வந்தது. பாவக்கனி புசித்தல் எனும் குறியீடு குழந்தைப் பருவம் முடிவடைவதைக் குறிப்பதாகத்தான் இருக்க வேண்டும். சொர்க்க மலர் நரகக் காய்மைக்குள் பிரவேசிக்கும் விழா என்றும் கொள்ளலாமா? 

அதனால்தான் அந்தப் பருவம் மறக்கடிக்கப்படுகின்றது போலும்! 

மறக்கடிக்கப்படும் இதே ஆரம்ப நிலையோடு, அதாவது இதே குழந்தைமையோடு இறக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘எல்லாம் கடந்த நிலை’ என்று அதற்கொரு பெயரையும் சூட்டி, உதிரும் தருணத்தில், அதையே உக்கிரமாகத் தேடிக்கொண்டிருக்கின்றன நரகக் கனிகள். முடிகிற காரியமா? 

ஜலமலம் இவர்களுக்கு அசுத்தமாகப் படாததால்தான், இது போன்ற கால் கக்கூஸிலோ பூமியிலோ குழந்தைகள் அவற்றைக் கழிக்க விரும்பாமல் இருக்கின்றார்கள் போலும் ! நம் தலை, முகம், தோள், மடி, உடை, உணவுத் தட்டம், புத்தகம், அதாவது உயர்ந்த இடங்களே அவர்களுக்குத் தேவை – அரசியல்வாதிகள் கழிப்பதற்கு நம் வாக்குகள் தேவைப்படுவதைப்போல. 

கிளின்டன் குழந்தை எவ்வளவு அபாரமாகக் கழித்திருக்கிறான்! அமெரிக்கப் பெரியவர்களும் அந்தச் சொர்க்கத்து மலரை எவ்வளவு பாசத் தோடு கொஞ்சுகிறார்கள்! 


எங்களின் சொர்க்க மலரும் இப்போதைக்கு மூத்திரம் பெய்வதாக இல்லை. “இனி எங்க பேயப் போறான்?” என்று இவள் வேறு சிலுவையோடு இன்னும் ! 

“சரிடா, மிச்சத்தையும் என்ட வாய்லயே பேய்!” என்ற எரிச்சலோடு பிள்ளையைத் தூக்கி முத்தமிட்டேன். மறுபடியும் பழைய இருக்கை, புதிய கொஞ்சுகை. 


எங்களுக்கு ஏழு பிள்ளைகள். ஏதோ திட்டம் போட்டு இலட்சிய வாரிசுகளைப் பெற்று விட்டோம் என்று அநியாயமாகக் குளிர்ந்து போகாதீர்கள்! சராசரி அவஸ்தைதான். 

இரண்டைப் பெறு, ஒன்றைப் பெறு என்றெல்லாம் அரசாங்கம் கத்துவதுகூட இலட்சிய வாரிசுகளைப் பெறுவதற்காக அல்லவே! பஞ்சப்பாட்டில்தான்! 

‘இலட்சிய வாரிசைப் பெற முடியாவிட்டால் பெறாமலேயே இரு’, என்றால் அது வித்தியாசம் தான்! 

முதல் ஆறு பிள்ளைகளின் மீதும் எழாத ஒருவகைப் பாச உபாதை எனக்கு ஏழாவது குடல் துடைத்தான் மீதுதான் எழுந்தது. அவள் தாயல்லவா! அதனால் அனைத்துக் கௌரவர்கள் மீதுமே அவளுக்குப் பாசம்தான். 

நமது குழந்தைகளே நமது பல்கலைக் கழகங்கள் என்பதை நான் உணர்ந்த முகூர்த்தத்தில்தான் எங்கள் ஏழாமவன் கருத்தரித்திருக்க வேண்டும். ஏனென்றால் எது பாசம், எதற்காகப் பாசம், அதன் மறுபக்கம் என்ன என்பவற்றையெல்லாம் அவ்வக்கணமே உணர வைத்தவன் அவன்தான். 

ஆறு பல்கலைக் கழகங்களையும் அநியாயமாக இழந்துவிட்டதை உணர்ந்து நான் திடுக்கிட்டபோது ஊற்றுத் தூர்ந்துபோய் இருந்தது. இனிப் பேரப் பிள்ளைகள் தானே கதி? 

பாசம் வைக்கத் துடித்தும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகிறதே, அதுதான் நரக தண்டனை. அந்நிலை வெல்லப்பட்டதால் தான் இந்த எட்டாவது பேரன் மீது எனக்கோர் ஹோல்ஸேல் பாசம்! 

மூன்று பிள்ளைகளின் ஒப்பாரியோடு எங்கள் மூத்த மகனுக்குத் தூரத்தில் குடியும் குடித்தனமும். மழைக்கு ஒதுங்குவதுபோல எப்போதாவது ஒரு விஸிட். அநேகமாக ஒரு மணித்தியாலத்து உறவு. 

இரவில் புதியவர்கள் யாருமே தங்கக்கூடாது என்பது பொலீஸ் அடக்குமுறை அல்லவோ! 

வருந்தி அழைத்தாலும் வாராக் குழந்தைகள். வா வா என்று கெஞ்சிக் கூத்தாடி, நீட்டிய கைகளும் நிலை தளர்ந்து, தொண்டை நீரும் வற்றி வரும்போது தான் – 

‘இவர்கள் பிள்ளை பிடிப்பவர்களாகவும் இல்லையே! போய்த்தான் பார்ப்போமா, பாவமே!’ என்ற தினுசில் மூன்றும் அன்னைக்கோ தந்தைக்கோ பின்னாலிருந்து ஒளிந்து பார்க்கத் தொடங்கும்! 

சரி, குழந்தைகளை இனித் தூக்கிக் கொஞ்சலாம் என்று நாங்கள் தயாராகும் போது, கடைசி வண்டியையாவது பிடிக்கும் அவசரம் மகனுக்கும் மருமகளுக்கும் வந்துவிடும்! 

இனி எப்போதாவது அடுத்த கண்ணீர் மழைக்கு ஒதுங்கினால்தான் மூன்று பேரப்பிள்ளைகளையும் கியூவில் காணமுடியும்; கெஞ்சிக் கூத்தாடித் தோற்றுப்போய் எரிச்சல்பட முடியும்; பிள்ளைகளா பிசாசுகளா என்று பல்லைக் கடிக்கவும் முடியும்! 

குடும்பத்தில் இரண்டாவதாகக் கலியாணம் செய்தவன், மகத்தான ஒரு பாடத்தை எங்களுக்கு அனுகூலப்படுத்தித் தந்த எங்களின் நாலாம் தகப்பன்தான். தன் பத்து வயதிலேயே பரதேசம் போனதன் மூலம் எங்களைக் கலங்கடித்த இன்ஸ்டன்ட் யூனிவர்ஸிட்டி! 

மேலும் பத்து ஆண்டுகள் கடந்து விட்டன இப்போது. மூன்று தகப்பன் மாருக்கு அவன் ஒரு குழந்தை என்று போன வருஷம் காற்றில் ஒரு கேள்வி மிதந்து போனது. 

ஆக, சொந்தம் பேசிவந்த முதல் ஆறு பிள்ளைகளைப் போல், பேரம் பேசி வந்த ஆறு பிள்ளைகளுமே இவ்வாறாக அந்நியப்பட்டுப்போக, மொத்தம் பன்னிரண்டு பல்கலைக் கழகங்களுமே பாழ்! 

மூன்றாவதாக முடித்தவள்தான் இந்த மகள். மூன்றாவதாய மகள்; மூத்திராச்சாரியாரின் தாய். 

உண்டாகியிருப்பதாக வைத்தியர் (?) அறிவித்த கணத்திலிருந்தே ஒருவகைத் தேர்தல் காலத்துப் பரபரப்புத் தொற்றியது குடும்பத்தில். பசித்தாலும்கூட என்னமோ ஏதோ என்று ஆஸ்பத்திரிப் பயணம்! 

ஏழாவது மாதம் மலடாக வந்தது. வயிற்றில் பிள்ளை அல்லாது வேறு ஏதோ பிணி என்றார் அதே வைத்தியர் திலகம்! 

தொடர்ந்த இரு வருஷத்திய ரிப்போர்ட்டுகளும் எக்ஸ்ரேக்களும் ஒரு லைப்ரரி மாதிரிக் குவிந்து வேலூர், வெட்டூர் என்ற பயமுறுத்தல்களோடு நீண்ட போது, மேலூரில் பாரம் போடும்படி வற்புறுத்தினேன் நான். 

இக்காலகட்டத்தில்தான் இரண்டாவது மகன் திருமணம் போனான் – எங்கள் கைகளில் ஒரு குழந்தையை எப்படியும் கொடுப்பது என்ற ரோஷம் பொத்துக் கொண்டவன் மாதிரி! ஏழாவது மாதமே அவன் குழந்தையும் தாழ் புவி! 

ஏழு தவணைகளில் இந்த மாதிரியெல்லாம் பேரக் குழந்தைப் பாசம் எங்களுக்கு ஊட்டப்பட்ட பிறகு மகளுக்குப் பிறந்தவன்தான் இந்த மலஜலநாதர். 

மேலூரில் போடப்பட்ட பாரங்கள் மகள் வயிற்றில் பால் ஊற்றியதோடு, வறண்டு கிடந்த எங்கள் மன நிலத்தையும் துளிர்க்கச் செய்தன. தவமிருக்க ஆரம்பித்தோம். ஒரு சகாப்தத்தின் தவம் என்றுதான் கூறவேண்டும். 

என்னைப் பெறுவதற்கு முதல் நாள் எங்கள் அம்மா அந்த ஹிட்லர்க் காலத்தில் ஒரு புசல் நெல் குற்றியதாகக் குடும்பம் பெருமைப்படுகிறது. உண்டாகிய உடனேயே இந்தக் கம்பியூட்டர்க் காலத்தில் எங்கள் மகள் ஓர் ஊசியைக்கூடத் தூக்கக் கூடாது என்று விஞ்ஞானம் பயமுறுத்தியது! எனவே முழுக் குடும்பமும் தவமிருக்கத்தானே வேண்டும்! 

அரசைச் சுற்றினால் தாய்க்கும் கருவுக்கும் நல்லதென்று பெரிசுகள் தொண தொனத்தன அதற்குக் கீழிருந்துதானே சித்தார்த்தன் வாரிசுக் குடலையே அறுத்தெறிந்தான் என்பது நினைவுக்கு வராமல். 

மகளோ கிளிநிக்கைச் சுற்றி வந்துதான் இந்தப் பசிய கிளி நிற்கப் பெற்றாள். 

ஆறு நாட்களின் அலறல்கள் சகிதம் ஆஸ்பத்திரியில் பெற்று நாலாம் நாள் வீடு கொண்டுவந்து சேர்த்தாள். 

ஆறு, ஒருவகையில் ஏழு பேரப் பிள்ளைகளை நெருங்க முடியாமலிருந்த எங்களை இவன் அன்றிலிருந்து தனக்குள் பூட்டி வைக்கவே தொடங்கியமை தான் எங்கள் வாழ்க்கையின் மிகப் பெரும் திருப்பமாக இருக்க வேண்டும்! 

இவனை நாங்கள் நெருங்கும் ஒவ்வொரு சமயமும், எங்கள் ஒவ்வொரு வரினதும் உருவம் அப்படியே இருக்க மனம், வாக்கு, காயங்களால் இவனை விடக் குழந்தைகளாகச் சுருங்கிப் போகிறோமே, குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே என்பதாலா? 

நம் காலத்தில் நாம் இரண்டு மூன்று வயதுகளில் செய்தவற்றை இன்றையக் குழந்தைகள் இரண்டு மூன்று மாதங்களிலேயே செய்கிறார்களே என்றெல்லாம் வியந்து – 

கண்ணூறு, வாயூறுகள் என்றெல்லாம் திருஷ்டிகள் கழித்து –

உலகம் பிறந்தது இவனுக்காக என்றெல்லாம் புளங்காங்கித்து –

அவனது விழிப்பு, உறக்கம்,சிரிப்பு, அழுகை யாவற்றிலுமே புதிய புதிய அர்த்தங்கள் கண்டு… 

நாலாம் மாதம் மகளும் மருமகனும் மீண்டும் தனிக்குடித்தனம் போனார்கள்- பக்கத்தில்தான் என்றாலும் மனம் எங்களுக்குப் பக்குவப்படாமல் இருக்கும் போதே. 

மறுநாள் விடியுமுன்பாகவே குழந்தையை மூடி எடுத்துக்கொண்டு ஓடி வந்தார்கள் மருந்தெடுக்க யார் நல்ல குழந்தை மருத்துவர் என்று அழுதபடியே. 

அவன் இரவெல்லாம் அழுதழுது கனலிலேயே படுத்திருந்ததாகப் பெற்றார் அழுததில் நாங்களும் கலங்கு முன்பாகவே 

அவர்களின் அலறலை முறியடித்த பாச அசைவுகளோடு என்னிடம் பாய்ந்து வந்தானே குழந்தை, அதன் சுவட்டோடு அனலையும் காணோம் அடுப்பையும் காணோம்! 

பாசத்தால் நான் மாசறுத்த முதற் பொழுது அது. 

இப்போதெல்லாம் தினமொரு தரமாவது இவனைக் காண நாங்கள் அங்கே போயாக வேண்டும்; அல்லது அவன் இங்கே வந்தாக வேண்டும். 

‘மார்பில் அணிவதற்கு இவனைப் போல் வைர மணி’ எங்குமில்லை என்பதை மட்டுமல்ல, ஒருதலைப் பட்சமாக எங்கும் எந்தப் பாசமும் நிறைவு பெறுவதில்லை என்பதையும் கற்றுக் கொண்டேன் கசடற. 

இப்படிப் பாசத்தால் பிணைக்கப்பட்ட சொர்க்க மலர்கள்தாமே இன்று நரகக் காய், கனிகளாக மாறிச் சகோதர காதகம் புரிகின்றன! 

மனிதர்களுக்காகவே படைக்கப்பட்ட உலகத்தில், நியாயமான தனியொரு வனுக்குரிய வாழுரிமை மறுக்கப்பட்டால், அந்த உலகத்தையே அழிக்க முயல்வதில் தவறென்ன இருக்கிறது? 

மனது கனத்தது. 

மடியில் கிடக்க விருப்பமில்லை என்பதைப்போல் அடம்பிடிப்பதாக அசைந்து கொண்டிருந்த குழந்தை திடீரென்று அழ ஆரம்பித்தான். என் கால்களைத் தொட்டிலாக அசைத்தும் பலமாக அழ ஆரம்பித்தான். 

“நுளம்பு கடிச்சிருக்கும்,” என்று மருமகன் சொல்ல, மகள் குழந்தை யையும் டீவீயையும் மாறி மாறிப் பார்க்க, மனைவி எழும்பி அருகில் வர, ஊசி போட்ட எடத்துல என்ட கை பட்றிச்சோ?” என்று நான் சந்தேகப்பட்டேன் என் மீதே. 

அன்று காலையில் அவன் தொடையில் ஊசி பாய்ச்சிய கிளிநிக் நர்ஸ் காய்ச்சல் வரலாம் என்றிருந்தாளாம். 

அந்த இடம் அப்போது சிவந்து சிறிது உப்பலாகவும் இருந்தது. வாயில் ஊதி ஊதியும்…… அழுகை அதிகரித்ததால் தேறுதல் குளறல்களோடு அவனைத் தோளில் சாய்த்துத் தட்டித் தடவி எழுந்து திரிந்தும் ……. 

அழுகையின் சுருதி கூடியதோடு கீழே இறங்கவேண்டும் என்பது போல் அடமும் பிடித்தான் குழந்தை. மனைவியும் அன்புக் குழைச்சல்களோடு என் பின்னாலேயே திரியத் தொடங்கினாள். கைகளை நீட்டி அழைத்தும் பார்த்தாள். தோடம்பழம் உரித்து வருவதாக உள்ளே ஓடினாள். 

மகளும் எழுந்து வந்து பிள்ளையைப் பறிக்கப் பார்த்துத் தோற்றுப் போனாள். 

எல்லோருக்குமே குழப்பமாக இருந்தது. 

நுளம்போ எறும்போ கடித்திருக்கலாம். அவனது தொடையில் என் கை பட்டிருக்கலாம். வேறும் ஏதாவது……. 

அதற்காக இப்படி அழ மாட்டானே?…

எனக்குள் வியர்ப்பது போல் ஓர் உணர்வு. குழந்தையின் வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு வியர்ப்பு. 

இவன் கண்களில் நீர் வடிந்தால் என் நெஞ்சில் உதிரம்தான் கொட்டும். வடியாது, கொட்டும்! நாடு போகிற போக்கைப் பார்த்தால் கொட்டாது, குமுறிப் பிழியும் போலும் படுகிறது. 

இந்தச் சொர்க்கக் குழந்தைகூட நிச்சயமாக நாளை ஒரு நரகக் காயோ கனியோதான் என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை. இந்த ஆபாசம் ஆதிக்கத்துவ அழுக்காலா அடிமைத்துவ அழுக்காலா என்பதுவும் தெரிய வில்லை. 

இவனை இன்று சீராட்டுகிறோமே, நாளை கொலைகாரனாக்கவா, கொலைப்படுபவனாக்கவா? 

ஐயோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவே கூடாதா? பெற்றாலும் வளர்க்காமல் வள்ளுவரைப் புறம் தள்ளிப் போனது போல போய்விட வேண்டுமா? 

தப்பித் தவறி வளர்த்தாலும் பாசமே வைக்கக் கூடாதா? 

இன்று சொர்க்கத்து மலராக இருக்கும் இவன், நாளை நரகத்துக் காயாகவோ கனியாகவோ வாழப்போகும் காலங்களில், கொலைகாரனாகவோ கொலைப்படுபவனாகவோ வாழப்போகும் அந்த எதிர்காலங்களில், நான் இன்னும் கனிந்தவனாய் உயிரோடு இருக்க நேர்ந்தால், அன்றைய என் மனநிலை எப்படியிருக்கும்?….. 

எதிர் வீட்டார் மாதிரியா? 

போர் என்பது கொலைத் தொழில் அல்ல என்கிறார்கள். போருக்குப் போய் இறந்த அந்தக் கில்லாடி மகானும் கொலைப்படவில்லை. 

ஆனால் நாங்கள்? 

நிச்சயமாக நாங்கள் போருக்காக அனுப்பப்படப்போவதில்லை. ஆகவே-

ஆதிக்கத்துவக் காய், கனிகளின் ஒரு வெறிக்காலம் ஏற்படுமானால்- 

நாங்கள் கொலைப்படவும் கூடும். 

பிறந்ததிலிருந்தே இறக்கத் தொடங்கிவிட்டோம் என்பதுதான் தத்துவார்த்த உண்மை என்ற போதிலும், பெரியவர்களாகிய நாங்கள் பலாத்காரமாகவும் நாளாந்தம் செத்துச் செத்தே எங்கள் முடிவை அண்மிவிட்டோம். 

எங்கள் வாரிசுகளின், இந்தப் பிஞ்சுகளின் காலங்கள் எப்படி? 

விழிகள் கலங்குவதைத் தடுக்கப் பாடினேன் அந்த அழகான வரியை:- 

“எந்தக் குழந்தையும் 
நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே…” 

தோளில் கிடந்த துண்டால் முகம் துடைக்கும் சாட்டில் கண்ணீர் வடியாமல் கவனித்துக் கொண்டேன். 

அன்பை வார்த்தைகளில் குழைத்து மனைவி நீட்டிய தோடம்பழச் சுளையைத் தள்ளிவிட்டுத் திமிறி அழுதபடியே துடித்தான் குழந்தை. 

மகள் மறுபடியும் எழுந்து வந்து, “பசியோ தெரியல்ல! வாங்கடா தங்கம், உங்கா குடிக்கிறீங்களாடா?” என்று கைகளை நீட்டினாள். 

குழந்தை திடீரென்று அழுகையை நிறுத்தினாஷன். அவனது சிறுநீர் என் நெஞ்சு வழியே சரசரவென இறங்கி என்னை முற்ற நனைத்தது. 

இப்போது நான் அசையவுமில்லை; இவளிடம் வசவு வாங்கவுமில்லை! 

– மல்லிகை – மாத்தளை ஆண்டு மலர் 1999.

– வெள்ளை மரம் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 2001, துரைவி பதிப்பகம், கொழும்பு.

அல் அஸுமத் அல்-அஸுமத், பொன்னையா (1942.11.22 - ) மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது இயற்பெயர் வேலாயுதம். இவரது தந்தை பொன்னையா; தாய் மரியாயி. 1960 - 1964 காலப்பகுதியில் எல்கடுவை அசோகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் தெகிவளை தொழிநுட்பக் கல்லூரியின் வணிகப் பிரிவில் முகாமையாளராக 1978 வரை பணியாற்றினார். இவரின் பூவின் காதல் என்ற முதல் சிறுகதையும், முதல் கவிதையும் வீரகேசரியில் வெளிவந்தன. மாத்தளையான், விருச்சிகன், சாத்தன், அபூமுனாஃப், புல்வெட்டித்துறைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *