செல்லாக்காசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 10, 2025
பார்வையிட்டோர்: 129 
 
 

வெயிலின் தாக்கம் சற்று தணிந்திருந்த மாலை வேளை கையில் பைக்கட்டுடன் ஆடிப்பாடிக்கொண்டு வீட்டை நோக்கி போய்க் கொண்டிருந்தாள் நிலா. வழியில் தெருவோரத்தில் திருவோட்டுடன் அமர்ந்திருந்த முதியவரைக் கண்டதும் நின்று அவரைப் பார்த்து சிறு புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றவளிடம், பதிலுக்கு அவரும் புன்னகைத்தார். இது வழக்கமாக நடக்கும் ஒன்று.

நான்காம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் சிறுமியான நிலா தினமும் அந்த வழியாகத்தான் பள்ளிக்குச் செல்வாள். கடந்த சில நாட்களாக குழிவிழுந்த கண்களும், சுருங்கிய தோலுடன், மெலிந்த தேகமும், திருத்தப்படாத தாடி, மீசையுடன் அந்த வழியில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த அந்த முதியவரைப் பார்த்ததும் ஏனோ அவளுக்குப் பிடித்துப்போக, அவரைப் பார்த்துச் சிரிப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். அவரும் பதிலுக்குப் புன்னகைப்பார். ஒரு நாள் பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தவள், படுத்துக் கொண்டிருந்த அந்த முதியவரைப் பார்த்ததும் மெதுவாக அவர் அருகினில் சென்று பேசத்துவங்கினாள்.

“தாத்தா…தாத்தா உங்களுக்கு உடம்பு சரியில்லையா? ஏன்? படுத்து இருக்கீங்க” என்று கேட்க , இவளைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்த முதியவர்,

“அது ஒன்னுமில்லம்மா லேசா மயக்கமா இருந்தது. அதான் இங்கேயே படுத்திட்டேன்” என்றார்.

“ஏன் தாத்தா மயக்கம் வந்திச்சு” என்று குழந்தையின் குணத்துடன் ஏதுமறியாமல் கேட்ட நிலாவிடம், அந்த முதியவர் “இல்லம்மா ரெண்டு நாளா எனக்கு யாரும் பிச்சை போடல, அதுதான் சாப்பிடல, அதனால மயக்கம்” என்றார். சிரித்துக்கொண்டே. இதைக்கேட்ட நிலாவுக்கு மிகவும் வருத்தமாக இருக்க, உடனே

“இருங்க தாத்தா, இதோ கொஞ்ச நேரத்துல வாரேன்” என்று வீட்டைநோக்கி ஓடினாள். பிறகு சிறிது நேரம் கழித்து கையில் ஒரு டிபன் பாக்சுடன் வந்தவள், அதிலிருந்த சாப்பாட்டைத் தாத்தாவிற்குக் கொடுத்துச் சாப்பிடச்செய்தாள். முதலில் தயங்கியவர், பிறகு பசியால் வாங்கி உண்டார். கூடவே நிலா கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீரையும் கொடுத்துக் குடிக்கச்செய்தாள்.

பசிதீர்ந்த முதியவர் மகிழ்ச்சியில் ‘நீ நல்லாயிருக்கனுமா’ என வாழ்த்தினார். பின் “அம்மாட்ட சொல்லிட்டு வந்தியாம்மா, தேடப்போறாங்க நீ போம்மா” என்றவரிடம் சரி என்று சொல்லிவிட்டுக் கிளம்பினாள். அடுத்த நாளிலிருந்து வீட்டிலிருந்து அம்மா கொடுத்து விடும் உணவில் பாதியை அந்த முதியவருக்குக் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டாள். மாலை பள்ளி முடிந்து வரும்போது அவரிடம் உட்கார்ந்து அவர் கூறும் கதைகளைக் கேட்டு ரசிப்பாள். அதன் பின் வீடு திரும்புவாள். அம்மா ஏன் தாமதம் எனக் கேட்டால், தோழியுடன் விளையாடிவிட்டு வந்ததாகப் பொய் கூறுவாள். இதையே வாடிக்கையாக்கிக் கொண்டாள் நிலா.

ஒரு நாள் முதியவரிடம் பேசிக்கொண்டிருந்த நிலா “ஏன் தாத்தா உங்களுக்கு யாரும் இல்லையா?”என்று கேட்க முதியவர் அவளைப் பார்த்து புன்னகைத்தவாரே “ஏன்?இல்ல எனக்கு

மூணு பசங்க இருக்காங்கம்மா, ஆன யாரும் என்ன பார்த்துக்கல” என்று கூறினார். அதற்கு நிலா “ஏன் தாத்தா பாத்துக்கல” என வினவ,

“அவங்களுக்கு நா செல்லாக்காசா ஆகிட்டேன்மா” என்று கூறினார். ஒன்றும் புரியாமல் விழித்த நிலா “செல்லாக்காசுன்னா என்ன தாத்தா?” என்று கேட்க. தன் திருவோட்டிலிருந்து ஒரு செல்லாக்காசைக் காண்பித்து,

“இந்தக்காச நீ கடையில குடுத்து ஏதாவது வாங்க முடியுமா? முடியாது. ஏன்னா ? இது இப்ப புழக்கத்துல இல்ல, அது போலத்தான் நானும் அவங்களுக்கு ஆயிட்டேன். என்னால ஒரு பயனும் இல்லைன்னு நினைக்கிறாங்க” என்று வருத்தத்துடன் கூறியவரைப் பார்த்து நிலாவுக்கு அழுகை வந்தது.

“ஏன்? இல்ல நீங்க இப்ப எனக்கு தினமும் கதை சொல்றீங்க, அன்பா எங்கிட்ட பேசுறீங்க, விளையாடுறீங்க அது போதாதா?” என்று குழந்தைக்கே உரிய வெள்ளை மனதுடன் கேட்ட நிலாவுக்கு,

“அதெல்லாம் அவங்களுக்குப் பத்தாதும்மா, எனக்கு வயசாயிருச்சில்ல வேலை பாக்க முடியாது, காசு குடுக்க முடியாது அப்புறம் எப்படி? என்ன வச்சிருப்பாங்க, அதான் என்ன தூக்கி எறிஞ்சிட்டாங்க”என்றார் ஏக்கப் பெருமூச்சுடன். நிலாவுக்கு இது வருத்தத்தைத் தர, “நீங்க எங்க வீட்டுக்கு வாங்க தாத்தா, நா பாத்துக்கிறேன்”என்றாள் குழந்தைத் தனத்தோடு, அவளைப் பார்த்து சிரித்த பெரியவர் “அதெல்லாம் சரிப்பட்டு வராதும்மா” எனக்கூறி, வாங்க என்று அடம்பிடித்தவளைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

பின்னர் வீட்டுக்குச் சென்றவள், வீட்டில் அம்மா வள்ளி புதுத்துணிகளை எடுத்து பெட்டியில் அடுக்கிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் “எங்கம்மா போறோம்” என்று கேட்ட நிலாவின் குரல் கேட்டு திரும்பிய வள்ளி, இவளைப் பார்த்ததும்,

“எங்கடி? இவ்வளவு நேரம் போயிருந்த, பள்ளிக்கூடம் முடிஞ்சா நேரா வீட்டுக்கு வாரதில்ல, அவளோட விளையாடப் போறேன், இவளோட விளையாடப் போறேன்னு. ம்..ம்.. சீக்கிரமா கை, கால், மூஞ்சிய கழுவிட்டுக் கெளம்பு, ஊருக்குப் போறோம் என்ற அம்மாவிடம் “எந்த ஊருக்குப் போறோம்” என்று நிலா கேட்க,

“வாய மூடிட்டு கெளம்பு ஏன்? எதுக்குன்னு? பெரிய மனுஷியாட்டம் கேள்வி கேட்டுட்டு, உங்க அத்த பொண்ணுக்குக் கல்யாணம் அதான் அவங்க வீட்டுக்குப் போறோம்” என்றாள் வள்ளி. “பஸ்சுக்கு நேரமாகுது, சீக்கிரமா கெளம்பு உங்கப்பா வந்தா திட்டுவாரு” என்று கூறி நிலாவைக் கிளப்பி, மூவரும் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். நிலாவுக்கு முதியவரை நினைத்துக் கவலையாக இருந்தது. அந்த தாத்தாட்ட சொல்லாமலேயே வந்துட்டோமே, தாத்தாவுக்கு யாரு சாப்பாடு கொடுப்பாங்க என்று கவலைப்பட்டாள். இருப்பினும் வேறு வழியில்லை அம்மாவுடன் போய்த்தான் ஆகவேண்டும். இன்னும் ஓ‌ரிரு நாட்களில் வந்து விடலாம் என்றிருந்தவள், கல்யாணம் முடிந்து மறுவீடு அது இதுவென்று ஒருவாரம் ஆகிப்போனது.

ஒருவாரம் கழித்து ஒருநாள் காலை ஊருக்குத் திரும்பியவள், ஆர்வமுடன் அந்த முதியவரைக் காண ஓடினாள். வழக்கமாக அவர் அமர்ந்திருக்கும் இடத்தில் பார்த்தவளுக்கு அங்கு அவர் இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்தாள். பிறகு அக்கம்பக்கத்தில் சென்று தேடியவளுக்கு

ஏமாற்றமே மிஞ்சியது. பதட்டம் தொற்றிக்கொள்ள சற்றுத் தொலைவில் குப்பையை அள்ளிக்கொண்டிருந்த துப்புரவுப் பணியாளரான ஒரு வயதான பெண்மணியிடம் சென்று,

“பாட்டி இங்க ஒரு தாத்தா உட்கார்ந்திருப்பாரே ,அவரை பார்த்தீங்களா?” என்று கேட்க அந்த பாட்டி “எனக்குத் தெரியாதும்மா” என்றாள். இதைக்கேட்டு அருகிலிருந்த மற்றொரு பணியாளரான பெண் ஒருத்தி “ஓ….அந்த பிச்சைக்காரரா அவர் ரெண்டு நாளைக்கு முன்னாடிதாம்மா இங்க இறந்து கிடந்தாரு, அநாத பொணமுன்னு முனிசிபாலிட்டில இருந்து வந்து தூக்கிட்டுப் போனாங்க” என்று கூற, இதைக்கேட்ட நிலாவுக்கு அழுகை பீறிட, அவர் வழக்கமாக உட்காரும் இடத்திற்குச் சென்றாள்.

கொஞ்சம் தள்ளி அவருடைய திருவோடும் அதில் சில செல்லாக்காசுகளும் இருந்தன. அதனைப் பார்த்தவள், அந்தச் செல்லாக்காசுகளை தன் கையிலெடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி ஓடினாள். வாசலில் நின்றிருந்த வள்ளி “வந்ததும் வராததுமா எங்கடி? போன” என கடிந்து கொள்ள அம்மாவைக் கட்டிக் கொண்டு கதறியழுதாள் நிலா. ஒன்றும் புரியாமல் பார்த்த வள்ளி “என்னம்மா ஆச்சு“என்று கேட்க நடந்தவற்றைக் கூறி அழுதாள் நிலா. வள்ளிக்கு மகளின் தவிப்பும், வருத்தமும் புரியவே, ஆறுதலுடன் அவளைக்கட்டியணைத்து “நீ ஒன்னும் கவலைப்படாதடா செல்லம், தாத்தாவ இனிமே சாமி பாத்துக்குவாரு” என்று சொல்லி மகளின் நெற்றியில் முத்தமிட்டாள். அம்மாவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்ட நிலாவோ கையில் இருந்த செல்லாக்காசுகளை, கையை இறுக மூடிப் பத்திரமாக வைத்துக்கொண்டாள்.

– முத்தமிழ்நேசனில் வெளிவந்த சிறுகதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *