கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 7, 2025
பார்வையிட்டோர்: 79 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“இன்று காய் கிடையாது. மொச்சைப்பயறு போட்டுக் குழம்பு வை” என்றார் சிவசாமி செட்டியார். 

“அப்ப மொச்சைப் பயறாவது வாங்கிக்கொண்டு வாருங்கள்” என்றாள் பார்வதியம்மாள். 

“வாங்கிக்கொண்டு வருகிற பேச்சுக் கிடையாது. மொச்சைப்பயறு இல்லாவிட்டால் அவரை வற்றலைப் போட்டு வை” என்று சொல்லிவிட்டு நித்தியப் பிரசங்கத்தை ஆரம்பித்தார். மேல் வீட்டுக்காரச் செட்டி வட்டிக்கு வட்டி போட்டு, கணக்கை ஏத்தி வைத்துக்கொண்டிருக்கிறான். நான் கடன் எப்படா தீரப்போகிறது என்று இருக்கிறேன். பொதி நூறு ரூபாய் வித்த பருத்தி பதினைந்து ரூபாயாய்விட்டது. குறுக்கம் நாலுபொதி. வெடிக்குமிண்ணு மதிப்புப் போட்டு வச்சிருந்தேன். அந்தப் பாரெழவு மழை வந்து காயெல்லாம் உதித்துப்புடுச்சு. கோடைமழை பேயுதோ என்னமோ? எப்படிக் கடன் தீர்க்கப் போகிறோம்? மண்டையைப் போடுறதுக்குள்ளே இந்தக் கடனெல்லாம் தீத்துப் பேரப்பிள்ளைகளுக்கு ஆளுக்கு ரெண்டு சங்கிலி நிலமாவது வில்லங்கமில்லாமல் வச்சிட்டுப் போகணுமிண்ணு  நான் பார்க்கிறேன். இல்லையிண்ணா ஊர் நாய்களெல்லாம் சிரிக்குமேடி, செட்டியார் வாழ்வு செத்தால் தெரியுமிண்ணு.” 

இந்தப் பிரசங்கத்தின் மேல் பார்வதியம்மாள் தன் அபிப்பிராயத்தை முடிவுரையாகக் கொடுப்பது எப்போதும் வழக்கம். ஆனால் இன்று என்னவோ செட்டியார் சொன்னது உண்மைதானென்று அவளுக்குக் கூடப் பட்டது. 

சிவசாமி செட்டியாருக்கு ஏழெட்டுச் சங்கிலிப் புன்செய் நிலமும், 1500 ரூபாய்க் கடனும் உண்டு. அவருக்கு ஆண்பிள்ளைகள் இல்லை. நான்கு பெண் பிள்ளைகள் தாம் உண்டு. அந்த நான்கு பெண்களுக்கும் கல்யாணமாகி அவர்களுக்குக் குழந்தைகளும் இருக்கின்றன. அது என்னவோ சொல்லிவைத்ததுபோல், மகள் ஒவ்வொருத்திக்கும் ஆண் பிள்ளை மாத்திரம் ஒவ்வொன்றுதான் இருந்தது.பொதுவுடைமை! செட்டி யாருக்குக் காடுதான் உயிர். இரவும் பகலும் காட்டி லேயே தான் கிடப்பார். “செட்டியாருக்கு லேசிலே உயிர் போகாது; அந்தத் தார்க் காட்டு மண்ணைக் கரைச்சு வாயிலே ஊத்தினாத்தான் உயிர் போகும்” என்று ஜனங்கள் சொல்லுவது உண்டு. தார்க்காடு செட்டியாருக்கு வெகு பிரியமான காடு. தார்க்காட்டுப் பூமாதேவி தயை வைத்தால் கடன் ஒரு வருஷத்தில் தீர்ந்துவிடும் என்பது செட்டியாரின் பூரண நம்பிக்கை. 

அன்று மழை பெய்துகொண்டிருந்தது. ஆகையினால் செட்டியார் காட்டுக்குப் போக முடியவில்லை. சீட்டுக் கட்டை எடுத்துக்கொண்டு ஊர்ச்சாவடிக்குப் போனார். என்ன ஆட்டம் விளையாடுவது என்ற பிரச்னை முதலில் ஆலோசனைக்கு வந்தது. 

“304 போடலாமா” என்றார் சிவசாமி செட்டியார்.

“சீட்டு விளையாட்டிலுமாகஞ்சத்தனம்! 504, 904, 1004 எல்லாம் இருக்கும்போது, தரித்திரம் பிடிச்ச 304 தானா விளையாடணும்? 1004 போடையா” என்றார் மூலைவீட்டு முரட்டு நாயக்கர். 

“நாயக்கர் எப்போதும் முரட்டடிதான் அடிப்பார். போடையா, நாயக்கர் மனம்போலப் போடு” என்றார் செட்டியார். 

சீட்டுக் கலைத்துப் போடப்பட்டது. 

“செட்டியாரையாவுக்கு ஒரு காயிதமில்ல கொண்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லிப் பல்லைத் திறந்து கொண்டே தபால்காரன் வந்தான். தாலுகா ஆபீஸ் டபேதார், முன்சீப் கோர்ட்டுச் சேவகன், கிராமத் தபால் காரன் – இவர்களுடைய பல்லிளிப்பெல்லாம் ஒரே ரகம்; கொஞ்சங்கூட வித்தியாசம் இல்லை. ஏனென்றால் இவைகள் அனைத்திற்கும் அர்த்தம் ஒன்றுதான். தபால் காரனைக் கண்டால் கிராமத்தார்களுக்கு அடி வயிற்றில் நெருப்புத்தான். கல்லூரி மாணவர்களுக்கு வரும் காதற்  கடிதமோ, ‘கன்க்ரேச்சுலேஷன் லெட்டரோ’ கிராமத்தார்களுக்கு வரப் போவதில்லை. ஒன்று மண ஓலையாக இருக்கவேண்டும்; அல்லது மரண ஓலையாக இருக்கவேண்டும். எதுவானாலும் அவர்களுக்கு ஒன்று தான். ரூபாய் அணா பைசாவில் மொழிபெயர்க்கும் பொழுது ‘செலவு’ என்ற கலத்தில்தான் வந்து முடியும். 

“மஞ்சள் தடவியிருக்கு; சுபகாரியந்தான் ஐயா” என்றார் மூக்க நாயக்கர். 

“நமக்கு நாலணா பழுத்துப் போச்சிண்ணு சொல்லுங்க” என்றான் தபால்காரன். 

“எங்கேயிருந்தையா வந்திருக்கு?” என்று கேட்டார் நொண்டித்தேவர். 

“எங்கே இருந்து வந்திருக்கப் போகுது? ஜோஸியமா கேக்கணும்? மதுரைப் பேரனுக்குக் கல்யாணப் பேச்சு நடந்துகொண்டிருந்தது; அங்கே. இருந்துதான் வந்திருக்கும் ” என்று சொல்லிக்கொண்டே அநாயாசமாகக் கவரை உடைத்தார். 

“அப்ப எங்களுக்கு நாலு நாளைக்குப் பருப்புச் சோறு இருக்கிண்ணு சொல்லுங்க” என்றார் முரட்டு நாயக்கர். 

“கல்யாணம் மதுரையிலே இல்ல நடக்கும்? நமக்கு எங்கே சோறு கிடைக்கப்போகுது?” என்றார் நல்லம நாயக்கர். 

“இருங்க ஐயா, செட்டியாரை வாசிக்கச் சொல்லிக் கேட்போம்” என்றார் முரட்டு நாயக்கர். 

கிராமத்திற்கு வரும் கடிதங்களெல்லாம் கிராமத்தாரின் பொதுச் சொத்து என்பது இவர்கள் அபிப்பிராயம். 

செட்டியார் கவரை உடைத்து ஒரு மஞ்சள் பத்திரிகையை வெளியில் எடுத்து இங்கும் அங்கும் திருப்பிக் கொண்டிருந்தார். 

“வாசிங்க ஐயா என்று அவசரப்படுத்தினார் மூக்க நாயக்கர். 

“கண்ணாடி வேணுமில்ல. எனக்குமில்ல எழவு வெள்ளெழுத்து வந்திரிச்சு” என்றார் செட்டியார்.

“அடே ராமா, கணக்குப்பிள்ளை ஐயாகிட்டக் கண்ணாடி வாங்கீட்டு வாடா, காயிதம் வாசிக்கணு மிண்ணு” என்றார் முரட்டு நாயக்கர். 

அந்த ஊர் முழுமைக்கும் அது ஒரு கண்ணாடி தான். 

வெகு நேரம் வரைக்கும் ராமன் திரும்பிவரவில்லை. வெளியில் வந்து பார்த்தபொழுது மரத்தில் மாங்காய் தட்டிக்கொண்டிருந்தான். 

“என்னடா கண்ணாடி மாமரத்தில் மாட்டிக் கொண்டதா?” 

“கணக்குப் பிள்ளை ஐயா வீட்டிலே இல்லை” என்று கத்தினான் ராமன். 

இதற்குள் முரட்டு நாயக்கர் சொன்னார்: “இந்தா வாத்தியாரையா வருகிறாரில்ல. அவரை வாசிக்கச் சொல்லலாம்”. 

உபாத்தியாயர் மேலே பிள்ளையார் சுழியிலிருந்து கீழே ‘சிவானந்தம் பிரஸ், காப்பிகள் 200’ என்பது வரைக்கும் வாசித்தார். 

“கல்யாணம் எண்ணைக்கு?” என்று கேட்டார் செட்டியார். 

“நெருங்கிவிட்டது. நாளை கழித்து மறுநாள்தான்” என்றார் உபாத்தியாயர். 

“அப்ப இண்ணைக்கே புறப்பட வேண்டியதுதான்” என்றார் நல்லம நாயக்கர். 

“சமுசாரி அப்படி நெனைச்சுது நெனச்சாப்பிலே போக முடியுமா ஐயா? நாளைத்தான் போகணும்.” 

“பாட்டியம்மாளையும் கூட்டிக்கொண்டு போங்க ஐயா. பேரனுக்கு ‘எப்பக் கல்யாணம், எப்பக் கல்யாணமி’ண்ணு  தவிச்சிக்கிட்டிருக்குது”  என்றார் மூக்க நாயக்கர். 

“எனக்கு உத்தரவு கொடுங்க” என்றான் தபால்காரன். 

“ஆமையா, சேவுகரையாவுக்கு நல்ல மரியாதை செய்து அனுப்புங்கோ. பாவம், மழையிலே நனைஞ்சுக் கிட்டே வந்திருக்கார்” என்றார் முரட்டு நாயக்கர். 

அவர் நாமக்காரரில்ல. நம்ப வீட்டிலே சாப்பிட மாட்டாரே” என்றார் செட்டியார். 

“கணக்குப் பிள்ளை வீட்டிலே சொல்லுங்கையா” என்றார் நொண்டித்தேவர். 

தபால்காரன் சாப்பாட்டிற்கு அரிசி பருப்பு எடுத்துக்கொண்டு செட்டியார் கணக்குப்பிள்ளை வீட்டில் சொல்லப்போனார். 

“சிவசாமி செட்டியார் இங்குறது யாரு? என்று சொல்லிக்கொண்டு ஒரு வண்ணான் வந்தான். 

“ஏனப்பா? இப்பத்தான் கணக்குப்பிள்ளை வீட்டிற்குப் போகிறார்.” 

“எல்லாம் நல்ல காரியந்தான்” என்றான் வண்ணான்.

”பெரிய பேரனுக்குச் சாந்திமுகூர்த்தமாயிருக்கும்” என்றார் நல்லம நாயக்கர். 

“ஆமையா, பெண் ருதுவானால் செட்டிப்பிள்ளைகள் வண்ணானைத் தானையா அனுப்புவது வழக்கம்” என்று சொல்லிவிட்டுத் தமது அநுபவஞானத்துக்கு ஏற்ற மதிப்பை எல்லாரும் கொடுக்கிறார்களா என்று எல்லோரையும் ஒருமுறை சுற்றிப் பார்த்தார் முரட்டு நாயக்கர். 

“ஓலையைக் கொடப்பா வாசிப்போம்” என்றார் உபாத்தியாயர். 

உபாத்தியாயர் வாசித்துக்கொண்டிருக்கும் போது செட்டியாரும் வந்து சேர்ந்தார். 

“செட்டியாரையாவுக்கு ரெட்டைப் பிரைஸ் இல்ல அடிச்சிருக்கு.ஒரு பேரனுக்குக் கல்யாணம், இன்னொரு பேரனுக்குச் சாந்திமுகூர்த்தம்!” என்றார் நொண்டித் தேவர். 

“அந்த யோகத்தை ஏன் சொல்லுகிறீர்கள்,ரூபாய் 500 பழுத்துப் போச்சு” என்றார் செட்டியார். 

“ரூபாய் போனாப்போகுதையா. கழுதை இன்னைக்கிப் போகும். நாளைக்கு வரும். அதைத் தள்ளுங்க. பேரன் கல்யாணத்தையும். சாந்தியையும் பார்க்கக் கொடுத்து வச்சிருக்கணுமே ஐயா; எல்லோருக்கும் கிடைக்குதா? நானும் ஒரு மலட்டுக் கழுதை இருக்கிறேன். லக்ஷரூபாய் கொடுத்தாலும் ஒரு பேரன் கல்யாணத்தைப் பார்க்க முடியுமா?” என்றார் முரட்டு நாயக்கர். 


“அத்தான் வாருங்க! பேரனுக்கு நாளைக் கல்யாணமிங்க. இண்ணைக்கு யாரோ விருந்தாளிபோல வந்திருக்கியளே என்ன!” என்றார் ராமநாதன் செட்டியார். 

“ஒங்களைப்போல பட்டணக்கரையிலே இருந்தால், இண்ணைக்குப் போட்ட காயிதம் நாளைக்குக் கெடைச்சிரும். பாரெழவு பட்டிக்காட்டிலே தபாலாபீஸா, ஒண்ணா? ஒங்க பத்திரிகை நேற்றுத்தான் கிடைச்சுது. இண்ணைக்குப் புறப்பட்டு வந்தேன்.” 

“பேரன் என்னமோ சொல்றானே?” 

“என்ன?” 

“வெண்பட்டு வேணுமாம். 200 ரூபாயிலே வயிரக் கடுக்கன் வேணுமாம். ஒரு தங்க அருணாக்கொடியும் வேணுமாம்.” 

செட்டியார் சிரித்துக்கொண்டே, “இது நீங்கள் சொல்லுகிறீர்களா, பேரன் சொல்லுகிறானா?” 

புன்முறுவலோடு, “நான் சொன்னா நம்பமாட்டிய. ஒங்க பேரனை நீங்களே தனியாக் கூப்பிட்டுக் கேளுங்க.” 

“அது சரி. அவன் சொன்னால் என்ன, நீங்கள் சொன்னால் என்ன? எல்லாம் ஒன்றுதான். மாவாத் தின்னாப் பணியாரம் இல்லை.”
 
அன்றிரவு மேல்வீட்டுக்காரச் செட்டியிடம் போய் சிவசாமி செட்டியார் ஒன்றரை வட்டியில் ஐந்நூறு ரூபாய் கடன் வாங்கினார்!

– வாடா விளக்கு முதலிய கதைகள், முதற் பதிப்பு: 1944, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

சு.குருசாமி சு.குருசாமி (Trichi. S.V. Guruswamy Sarma, திருச்சிராபுரம் சு.வை.குருசாமி சர்மா) என்பவர், தமிழில் முதல் சில புதினங்களில் ஒன்றான "பிரேம கலாவதீயம்" (1893) எழுதிய ஒரு முக்கியமான தமிழ் புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவர் 1940களில் "வாடா விளக்கு" போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும், பல கதைகளைத் தொகுத்து வெளியிட்டதோடு, தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியவர். மாயூரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பண்டித எஸ்.எம்.நடேச சாஸ்திரி, பி.ஆர்.ராஜமையர், சு.வை.குருசாமி சர்மா, அ.மாதவையா ஆகியோர் முதற் காலக்கட்டத் தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *