சூரியனைப் பார்க்காமல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 1,083 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எங்கள் ஊர் ரொம்பச் சின்ன ஊர். தீப்பெட்டி மாதிரி. முக்கியமான தெருக்களே நாலுதான். நாலில் நடுவாக இருப்பது காந்தி வீதி. அங்குதான் அந்தப் பள்ளிக் கூடம் இருந்தது. நான் படித்த பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக்கூடத்தின் சுற்று மதில்சுவர் ரொம்ப உயரமாக இருக்கும். எங்கள் ஊர் சிறைச்சாலை மதிலைக் காட்டிலும் உயரமானது. சிறையில் இருந்து மதிலை ஏறிக் குதித்துப் பல கைதிகள் தப்பித்ததாகச் செய்திகள் வருவதுண்டு. எங்கள் பள்ளிக் கூடத்து மதிலை ஏறிக் குதிக்க மனுஷனாகப் பிறந்த எவனாலும் முடியாது. அப்படி இருக்க சிறைச்சாலையை எங்கள் பள்ளிக் கூடத்துக்கு மாற்றாது ஏன் என்று இன்று வரையிலும் கூட எனக்கு விளங்கியதே இல்லை. 

பள்ளிக்கூடத்து வாசல் ரொம்ப அகலமானது. பழங்காலத்து அரண்மனைகளில்தான் அந்த மாதிரி அகலமும் உயரமுமான வாசல்கள் இருக்கும். அதற்குக் காரணங்கள் இருந்தன. யானை, குதிரை, தேர் முதலான வாகனங்களில் வீரர்கள் ஏறிக் கொண்டு கொடி பிடித்துக் கொண்டு போக வேண்டியிருந்தது. ஆகவே அரண் மனைக்கு அது தேவைதான். பள்ளிக் கூடத்துக்கு அது அவசியம் தானா? நான் அங்கு படித்த காலம் வரை அதாவது 1960-க்கு முன்பு வரை எந்த மாணவனும் யானை மீதோ, குதிரை மீதோ ஏறிக் கொண்டு கூட்டமாகப் பள்ளிக்கூடம் வந்ததே இல்லை. 

பள்ளிக்கூட வாசலுக்கு இரு கையிலும் மதிலை ஒட்டி பலவிதமான வியாபாரங்கள் நடந்தன. பல வண்ணங்களில் அச்சடிக்கப்பட்ட தீப்பெட்டி லேபிள் தாள்கள், வீணாகிப் போன சினிமா பிலிம்கள், சீசன்களில் நாவல்பழம், எல்லாக் காலத்திலும் ஐஸ், மாங்காயை வெட்டி மிளகாய் உப்புக் காரம் போட்ட துண்டங்கள், காலணா அரையணாவுக்கு அள்ளிக் கொடுக்கிறார் போல சின்னச் சின்ன மிட்டாய்கள் என்று பலரும் கடை போட்டிருப்பார்கள். 

அந்தக் கடைகளில் ஒன்றாக மயிர் மிட்டாய் தாத்தா கடையும் இருக்கும். தாத்தாவின் கடை வாசலை ஒட்டி இருக்கும். பள்ளிக் கூடத்தை விட்டுப் பையன்கள் வீதியில் வழியும் போது முதலில் அவர் கடையைத்தான் மொய்க்க நேரும். 

தாத்தா மதில் சுவரில் முதுகை முட்டுக் கொடுத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார். அவ்வாறு அவர் முட்டுக் கொடுத்துக் கொண்டு உட்காரவில்லையெனில், சுவர் விழுந்து விடக் கூடும் என்று தோன்றுவதுண்டு. அதன் காரணமாகவே அவர் முதுகில் அழுக் கடைந்து, சட்டை அப்பகுதியில் மட்டும் கறுப்பாய்க் காட்சி அளிக்கும். தாத்தாவின் முன்னால் கிளாஸ்கோ பிஸ்கட் டின் ஒன்று இருக்கும். அதன் வாயைத் துணி போட்டு மூடி இருப்பார். அவர் கை நுழையும் அளவுக்குத் துணியில் பொத்தல் இருக்கும். நாங்கள் மயிர் மிட்டாய் கேட்கும் போது அந்தப் பொத்தலில் கையை விட்டு, மிட்டாய் எடுத்து, துண்டு துண்டாய்க் கிழித்து வைக்கப்பட்டிருக்கும் காகிதத்தில் வைத்துக் கொடுப்பார். 

பெரும்பாலும் எங்கள் தீர்ந்து போன நோட்டுகளின் காகிதங் களாகவே அவை இருக்கும். என் தீர்ந்து போன நோட்டுகளை நான் தாத்தாவிடம் கொடுத்து விடுவேன். துரதிருஷ்டவசமாக என் நோட்டுகள் சீக்கிரம் சீக்கிரம் தீர்ந்து விடுவதில்லை. நான் அடிக்கடி தொல்லை பண்ணுவதாக நினைத்து அப்பா எனக்கு 400 பக்க நோட்டுகளை வாங்கிக் கொடுத்து விட்டார். அந்தச் சனியன்கள் பல மாசங்கள் தீராமலேயே இருப்பதால் நான் வெள்ளைத் தாள்களை ரகசியமாகக் கிழித்தும் போட்டுவிடுவேன். அப்புறம் திருப்தியாகத் தாத்தாவுக்குக் கொடுத்துவிடுவேன். அதற்காகக் கணிசமாகத் தாத்தா மயிர் மிட்டாய் கொடுப்பார். 

தாத்தாவை நான் முதலில் பார்த்தது என்று? எனக்கு ஞாபகம் இல்லை. ரொம்பச் சின்ன வயதில் இருந்தே நான் அவரோடு சினேகமாய் இருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் இருந்தே என்று நினைக்கிறேன். அதற்கும் பல காலத்துக்கு முன்பே தாத்தா அங்கு வந்துவிட்டார். எங்கள் பள்ளிக் கூடத்து ஆண்டு விழாக்களில் பேசப் பிரமுகர்கள் வருவார்கள். அப்போது அவர்கள் அவர்களின் பால்ய கால வாழ்க்கையை நினைவு கூர்வார்கள். புதிதாகக் கட்டப்பட்ட வகுப்புகள் இருந்த இடத்தில் அந்தக் காலத்தில் தூங்குமூஞ்சி மரங்கள் இருந்தன என்பார்கள். தங்களுக்குப் பாடம் எடுத்து, பின் இறந்து போன வாத்தியார்களை நினைவு கூர்ந்து வருந்துவார்கள். 

ஃபாதர் பீட்டர் தங்களை அடிக்க நேர்ந்த சம்பவங்களைக் கூறி, அவர் அன்று அடிக்காமல் இருந்திருந்தால் இன்று தாங்கள் இந்த நிலைக்கு வர முடிந்திருக்காது என்பார்கள். எனவே ஆசிரியர் உங்களை அடிக்கிறார் என்றால் அது கோபத்தினால் அல்ல, உங்களை முன்னேற்ற வேண்டும் என்கிற தாபத்தினால்தான் என்று சொல்வார்கள். நாங்கள் கட்டாயம் கைதட்டி மகிழ்வோம். ஆனால் எந்தப் பெரியவர்களும் தாத்தாவிடம் மிட்டாய் வாங்கித் தின்று சந்தோஷப்பட்டதைச் சொல்லுவதே இல்லை. இது ஏன் என்று இன்று வரை எனக்குப் புரிந்ததே இல்லை. 

தினமும் பள்ளிக்கூடம் புறப்படும்போது அம்மாவிடம் நான் காசு வாங்கிவிடுவேன். பெரும்பாலும் அம்மாவே கொடுப்பாள். இல்லையென்றால் நான் கேட்டு வாங்கிக் கொள்வேன். அம்மா சமயங்களில் ஓரணாக் கொடுப்பாள். ஓரணாக் காசுகள் எனக்குப் பிடிப்பதில்லை. அதைக் காட்டிலும் நாலு காலணா கொடுத்தால் தான் சந்தோஷப்படுவேன். காலணாக் காசுகளை சுண்டு விரல் மோதிரம் போல் போட்டுக்கொள்ள முடியும். இரண்டு சுண்டு விரல்களிலும் இரண்டு காலணாக்களைச் சொருகிக் கொண்டு மீதியை ஜோபியில் போட்டுக் கொள்ளலாம். காசோடு நேராகத் தாத்தாவிடம் தான் போனோன். 

மற்றப் பையன்களுக்குக் கொடுப்பதைக் காட்டிலும் எனக்குக் கூடவே கொடுப்பார். மிட்டாய்களில் எனக்கு மிகவும் பிடித்தது மயிர் மிட்டாய்தான். தாத்தாவின் மீசையைப் போலவே இருக்கும். தாத்தாவின் தலையும் மீசையும் சுத்தமான வெள்ளை. தவறிப் போய்க் கூட கரு மயிர் இருக்காது. மீசை சாதாரண மீசை இல்லை மூக்குக்குக் கீழே தொடங்கி காதுவரை மொத்தமாகவும் அடர்த்தி யாகவும் நீளும் மீசை அவருடையது. அந்த மீசைதான் என்னை அவர்பால் முதன் முதலில் இழுத்திருக்கக் கூடும். 

தாத்தா நிறமும் சிவப்புதான். சாதாரண சிவப்பானவர்களைக் காட்டிலும் பார்த்த மாத்திரத்தில் பளிச்செனத் தெரிந்து வேறு படுத்திக் காட்டத்தக்க சிவப்புக் கமலாப் பழத்தோல் மாதிரி இருப்பார். அவர் சிரிப்பு யாருக்கும் தெரியாது. ஏனெனில் பல்லை மீசை மறைத்து விடும். கன்னம் மேலேறி, கண்களைச் சுருக்கும் போது தான் தாத்தா சிரிக்கிறார் என்று புரியும். சிரிப்புக்குப் பல்லா தேவை? என்னைத் தூரத்தில் பார்த்து விட்டவுடனே தாத்தா துணிக்குள் கையை விட்டு மிட்டாயை எடுத்துப் பேப்பரில் வைத்து விடுவார். காசை அப்புறம் வாங்கிக் கொள்வார். அம்மாவிடம் சில நேரங்களில் சில்லறை இருக்காது. அல்லது நான் காசு வாங்கிக் கொண்டு வர மறந்து விடுவேன். 

அப்படித்தான் ஒரு முதல் நாள் கையில் மிட்டாயை வாங்கிக் கொண்ட பிறகே நான் கொண்டு வராதது தெரிந்தது. இடது கையில் மிட்டாயை வைத்துக் கொண்டு வலது கையால் என் எல்லா ஜேபி களையும் நான் தடவிக் கொண்டே நின்றேன். தடவுவதால் மட்டுமே காசு ஜேபியில் வராது. வாங்கிப் போட்டுக் கொண்டு வந்திருக்க வேண்டும். தாத்தா புரிந்துகொண்டு கன்னங்கள் கண்களுக்குப் போய்ச் சுருங்க ‘நாளைக்குக் குடு’ என்றார். கடன் வாங்கும் பழக்கத்தைத் தாத்தாதான் எனக்குத் தொடங்கி வைத்தார். 

அதற்கப்புறம் அவருக்கும் எனக்கும் வியாபாரி வாங்குபவன் உறவு இருந்த ஞாபகம் இல்லை. 

தாத்தாவின் நினைவு படுத்தும் மீசையைப் போலவே இருக்கும் மயிர் மிட்டாய் எனக்கு ரொம்ப இஷ்டமானது. பிற்காலத்தில் நான் சாப்பிட்டிருக்கும் சோன்பப்டிக்கெல்லாம் அந்த சுவை வாசனை இருந்ததே இல்லை. வெள்ளையாக சற்றே மஞ்சளாகவும், பஞ்சு மாதிரி இருக்கும் அது. எப்படியோ எப்போதும் அது சூடாகவே இருக்கும். விண்டு வாயில் போட்ட மாத்திரத்தில் கரைந்து வாயெல் லாம் இனிக்கும். நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டே சாப்பிட வேண்டும். இந்த மிட்டாய் விஷயத்தில் ரொம்ப நிதானம் வேண்டும். அவசரமாகத் தின்பது கூடாது. 

கொஞ்சம் கொஞ்சமாக, கட்டை விரல், சுட்டுவிரல் இரண்டை யும் சேர்த்து, பொடி எடுப்பதுபோல- இரவல் மட்டையில் பொடி எடுப்பதுபோல — எடுக்க வேண்டும். நடு நாக்கில் வைக்க வேண்டும். நாக்கை மேல் அன்னத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும். அப்படி அதில் லயித்தால், மிட்டாய் கரைந்து நாக்கில் இதர பகுதிகளுக்கும் பரவும். இனிப்பு வாயெல்லாம் மணக்கும். நான் அப்படித்தான். அந்த மிட்டாயை அனுபவித்து இருக்கிறேன். ஏழே முக்கால் மணிக்குப் பள்ளிக்கூட வாசலில் தாத்தாவின் முன்னால் நின்று காலணா மிட்டாயை தின்னத் தொடங்கினால் எட்டு மணிக்குப் பியூன் ராமலிங்கம் பள்ளிக்கூடத் தொடக்க மணி அடிக்கும் வரை தின்று கொண்டேயிருப்பேன். 

தாத்தா வீட்டில் இருப்பவர்களைப் பற்றியெல்லாம் அடிக்கடி விசாரிப்பார். அப்பா எப்படி இருக்கார்? அம்மா எப்படி இருக் காங்க? தம்பிகள் எல்லாம் எப்படி? என்ன படிக்கிறாங்க? எப்படி படிக்கிறாங்க? மணி எப்படி இருக்குது? (மணி எங்கள் வீட்டு நாய். வெள்ளையாக குச்சு நாய்.) வாரத்தில் ஒரு நாளாவது இவர்களை யெல்லாம் விசாரிப்பார். அப்பாவை அவர்களுக்குத் தெரிந்திருந்தது. பெரியவர்களை பெரியவர்கள் எப்படியோ தெரிந்து வைத்துக் கொள்கிறார்கள். அம்மாவை தாத்தா பார்த்தே இருக்கமாட்டார். ஆனாலும் விசாரிப்பார். 

கோடை விடுமுறைகளிலும், கால், அரை பரிட்சை விடுமுறை களிலும் நான் ஊருக்குப் போய் விடுவேன். விருத்தாசலத்தில் இருக்கும் தாத்தா வீட்டுக்குப் போய் விடுவேன். லீவு நாட்கள் முடிந்து பள்ளிக்கூடம் தொடங்கும் நாள் நெருங்க நெருங்க, மீண்டும் பள்ளிக்கூடம் போக வேண்டுமே என்கிற விசாரம் என்னைப் பிடித்துக் கொள்ளும். லீவை அனுபவிக்கவே தோன்றாது. அந்த விசாரத்துக்கூடேயும், லீவு முடிந்தால் தாத்தாவைப் பார்க்கப் போகிறோம் என்கிற சந்தோஷமும் வராமல் இருக்காது. அப்பா சமயங்களில் என்னைப் பள்ளிக் கூடத்தில் இருந்து அழைத்துப் போக வருவார். வீட்டு மணி அடிப்பதற்கு முந்தி வந்து விட்டாரா னால் தாத்தாவோடுதான் பேசிக் கொண்டிருப்பார் அப்பா. அந்தச் சமயங்களில் மட்டும் தாத்தா நின்று கொண்டிருப்பார். அப்பா நிற்கும்போது அவரோடு பேசுபவர் உட்கார்ந்திருப்பது சரி அல்லவே. 

ஒருமுறை எனக்குப் பெரிய ஜுரம் வந்தது. மாதக் கணக்கில் படுத்திருந்தேன். தலைமயிர் எல்லாம் கொட்டிப் போய் விநோதமாக இருந்தேன் என்று பின்னால் எல்லோரும் சொன்னார்கள். என் மார்பு எலும்புகள் எனக்கே தெரிந்தன. அம்மா கையில் காசு முடிந்த மஞ்சள் துணி கட்டியிருந்தாள். குல தெய்வத்துக்கும், திருப்பதிக்கும், அந்தோணியார் கோயிலுக்கும் வேண்டிக் கொண்டிருந்தாள். காலை நேரங்களில் ஜுரம் சுத்தமாக இறங்கி உடம்பும் மனசும் உற்சாகமாக இருக்கும். மாலையில் உடம்பு நெருப்பில் போட்ட இரும்பு மாதிரி சுடும். சுய நினைவே இருக்காது. காலையில்தான் எல்லாமே தெரியும். 

வெகு தொலைவில் இருக்கும் சொந்தக்காரர்கள் எல்லாரும் என்னைச் சுற்றி உட்கார்ந்திருப்பார்கள், அம்மா தலை கலைந்து அழுக்குப்புடவையோடே என் தலை மாட்டில் உட்கார்ந்து கிடப்பாள். அப்பா தினமும் ஷேவ் செய்து கொள்பவர். என்ன காரணத்தாலோ அப்பா பெரிசாக அந்தச் சமயத்தில் தாடி வளர்த்திருப்பார் யார் யாரோ என்னைப் பார்க்க வந்தார்களாம். மிட்டாய்த் தாத்தா வாரத்துக்கு ரெண்டு முறை என்னைப் பார்க்க வந்ததாக அம்மா அப்புறம் சொன்னாள். 

அப்பா எதேச்சையாக ஒருநாள் சொன்னார். தாத்தா வடக்கத்திக்காரராம். அவர் ஊரில் இரண்டு சாதியாருக்கு இடையில் தோன்றிய அடிதடி தகராறில் தாத்தாவின் மனைவியும் குழந்தைகளும் கூடக் கொல்லப்பட்டார்கள் என்றும் தனியாக இந்த ஊருக்கு வந்து காலம் தள்ளுகிறார் என்றும் அப்பா சொன்னார். 

ஆறாம் வகுப்புப் படிக்கும்போது எனக்குப் பெரிய சிக்கல் வந்தது. கிளாஸ் டீச்சர் அர்ச்சுனன் சார் ஒருநாள் வகுப்புக்குள் வந்து எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு வகுப்புத் தலைவனாக என்ன காரணத்தாலோ என்னை நியமித்துவிட்டார். வகுப்புத் தலைவனான என்னுடைய கடமை, தினம் பள்ளிக்கூடம் தொடங்க அரைமணி முன் கூட்டியே வந்து வகுப்புக் கதவைத் திறந்து வைப்பது. அன்றைக்குத் தேவையான சாக்கட்டிகளைக் கொண்டு வந்து வைப்பது. பிளாக் போர்டைத் துடைத்து சுத்தமாக வைப்பது. அட்டென்டன்ஸ் ரிஜிஸ்டரைக் கொண்டு வந்து கொண்டு போய்க் கொடுப்பது முதலியனவாம். வகுப்பைத் திறந்து வைக்கச் சௌகரியமாகச் சாவியையும் என்னிடம் கொடுத்து வைத்திருந்தார். 

அர்ச்சுனன் சார் பள்ளிக்கூடத்திலேயே முக்கியமான வாத்தியா ராகக் கருதப்பட்டார். பள்ளிக்கூடக் கணக்கு வழக்கையெல்லாம் அவர் பார்த்துக் கொள்வார். அதற்கென்றே கம்பிக் கதவு போட்ட கதவுகளுக்குப் பின்னால் இரண்டு மூன்று பேர் எப்போதும் உட்கார்ந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சம்பளம் கட்டப் போகும் போதெல்லாம் இவர்கள், நீளநீளமான நோட்டுகளை வைத்துக் கொண்டு எழுதிக் கொண்டிருப்பார்கள். பிறகு இந்த நோட்டுகள் எல்லாம் அர்ச்சுனன் சாரிடம் வரும். சார், வேறு நோட்டில் இன்னும் வேறு கணக்கு எழுதுவார். வகுப்புகளில் கூட அவர் சமயங்களில் இந்தக் கணக்கு எழுதுவதை நான் பார்த்தி ருக்கிறேன். 

இந்தப் பள்ளிக் கூடத்துக்கு அர்ச்சுனன் சார் சின்ன வயசிலேயே வேலைக்கு வந்து விட்டாராம். ரொம்ப அநுபவம் எல்லாம் உள்ளவராம். மற்ற சார்களுக்குத் தேவையான விஷயங் களை எல்லாம் வீடு பார்த்துக் கொடுத்தல் ரேஷன் கார்டு வாங்கிக் கொடுத்தல் போன்ற காரியங்களுக்கு அர்ச்சுனன் சார்தான் முன்னால் இருந்து உதவுவார். மற்ற சார்கள் பெரிய சாரைப் பார்த்து லீவு வாங்கப் பயப்படும் நேரங்களில் இவர் போய் சொல்லி லீவு வாங்கிக் கொடுப்பார். 

அர்ச்சுனன் சார், விடுமுறை விட்டுப் புதுசாகப் பள்ளிக் கூடம் தொடங்கும் நேரத்தில், பையன்களையெல்லாம் தனித் தனியாகக் கூப்பிட்டு தன்னிடம் டியூஷன் வைத்துக் கொள்ளச் சொல்லுவார். தன்னிடம் டியூஷன் வைத்துக் கொண்டால் நிச்சயம் அந்த வருஷம் பாஸ் என்று சொல்லுவார். வைக்காதவன் எல்லாம் ‘குளோஸ்’ என்று உறுதியாகச் சொல்லி அனுப்புவார். என்னிடம் கூடச் சொன்னார். அப்பா வேண்டாம் என்று விட்டார். நிறையப் பையன் களின் அப்பாக்கள் மறுநாளையே பள்ளிக்கூடம் வந்து, டியூஷனுக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்கள். 

அர்ச்சுனன் சார் ஒருநாள் வகுப்பில் ‘துணிக்கடை வச்சிருக் கிறவர் மகன் எவனாவது இருக்கானாடா இங்கே’ என்றார். பிலவேந்திரன் எழுந்து நின்றான் ‘பலசரக்குக் கடைக்காரன் மகன்?’ என்றார். யாரும் இல்லை. பிலவேந்திரனைச் சாயங்காலம் கிளாஸ் விட்டதும் வந்து தன்னைப் பார்க்கச் சொன்னார். பிலவேந்திரன் அப்புறம் என்னிடம் சொன்னான். அவனையும் அழைத்துக் கொண்டு சார் கடைக்குப் போனாராம். பிலவேந்திரனின் வாத்தி யார் என்றதும் அவன் அப்பா ‘வாங்க… வாங்க…’ என்று வர வேற்றாராம். காப்பி டிபன் கடைக்கே வரவழைத்தாராம். 

அப்புறம் மாசாமாசம் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் கொடுப்பதாகச் சொல்லி சட்டை வேஷ்டியெல்லாம் எடுத்துக் கொண்டாராம். எங்கள் அப்பா அப்போது கள்ளுக்கடைக் கான்டிராக்ட் எடுத்திருந்தார். அர்ச்சுனன் சார் என்னைக் கூப்பிட வில்லை. சாவியின் உருவத்தில் சனியன் வந்தது தெரியாமல் அதைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தேன். 

சாவியின் தலைத் துவாரத்தில் விரலை நுழைத்துக் கொண்டுத் திரிந்தேன். பார்ப்பவருக்கு எனக்கு ஆறு விரலோ எனத் தோன்றும் படியாக என் கையோடேயே சாவி தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு வகுப்பின் சாவியையே நான் வைத்துக் கொண்டிருப்பது எனக்குப் பெருமையாகவே இருந்தது. என்னோடு படித்தப் பலருக்கும் அது பொறாமையைக் கிளப்பி விட்டுவிட்டது. என் எதிரிகளாக இருந்த முருகேசன், ஆல்பர்ட், ரங்காச்சாரி போன்றோர் என்னைக் கண்டு பொறாமை அடைந்து இருப்பது குறித்து எனக்கு ஆனந்தமாகவே இருந்தது. நான் ரொம்பப் பெரியவனாகி விட்டதாகத் திடீரென்று உணர்ந்து சில பையன்களோடு பேசுவதையே விட்டுவிட்டேன். இந்தப் பெருமையும் ஆனந்தமும் ரொம்ப நாள் நீடிக்கவில்லை, ஒருநாள் எப்படியோ அந்தச் சாவி தொலைந்துவிட்டது. 

சாவி தொலைந்து விட்டது என்று அறிந்த அந்தக் கணம் இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. உடம்பு குப்பென்று வியர்த்துவிட்டது. வீடு முழுக்க சாவியைத் துழாவி விட்டேன். பேனா மூடிகள், பேனாவின் அடிப்பக்கம், தொலைந்து விட்டது என்று நினைத்திருந்த அம்மாவின் சின்ன சுருக்குப்பை, பேனாக்கத்தி, ஒரு மரப்பாச்சி பொம்மை, எல்லாம் கிடைத்தது. சாவி மட்டும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையே அபாயங்கள் நிகழ ஆரம்பித்தன. காலையில் மணி அடித்து வகுப்புக்கு வரிசையாகப் பையன்கள் வருகிறார்கள். வரிசை கதவுக்கு முன் வந்து பிரேக் போட்டாற்போல் நின்றுவிட்டது. பின்னால் வந்தவர்கள் முன்னால் வந்தவர்களோடு மோதிக் கொண்டார்கள். கதவு திறக்கப்படவில்லை. திறக்க வேண்டியவன் நான் அர்ச்சுனன் சாரிடம் சென்று சாவியை மறந்து போய் வீட்டில் வைத்துவிட்டு வந்து விட்டதாகப் பொய் சொன்னேன். 

‘ஹும்..’ என்றார் அர்ச்சுனன் சார். அவர் கண்கள் ரொம்பவும் சிறிசு. ஆனால் கண்ணாடியின் வழியாகத் தெரியும் கண்கள் பார்க்கப் பயங்கரமாய் இருக்கும். அவருக்குத் தொடைக்கு மேலே, பின் பக்கத்தில் சொறி இருந்தது. அஞ்சு நிமிஷத்துக்கு ஒருமுறை பின் பக்கத்தைச் சொரிய வேண்டியிருக்கும். சொரிந்தால் எரிச்சலாய்த்தான் இருக்கும். எரிச்சல் வந்தால் மனிதர்கள் பிற மனிதர்கள் மீது அந்த எரிச்சலைக் காண்பிக்க வேண்டியிருக்கும். 

அர்ச்சுனன் சாரின் ‘ஹும்’ என்கிற சொல்லுக்கு அர்த்தம் அதிகம். அட அயோக்கியா, அட மக்கு, அட உதவாக்கரை, முதலாகப் பல அர்த்தங்கள். ‘ராமலிங்கத்திடம் போய் நான் கேக்க றேன்று சொல்லி சாவியை வாங்கியா-‘ என்றார். வகுப்பு வாத்தி யார்களுக்கு ஒரு சாவி இருப்பது போல, பியூன் ராமலிங்கத்திடமும் ஒரு சாவி இருக்கும். நான் போய்ச் சொன்னவுடன் ராமலிங்கம் சாவிக் கொத்தைத் தூக்கிக் கொண்டு ‘சலுங் சலுங்’ என்கிற சப்தத்தோடு என்னோடு வந்தான். பையன்கள் அபூர்வமாக, வகுப்பு தொடங்குவதற்கு ஏற்பட்ட இடையூறை ரசித்தவாறு நின்றிருந்தார்கள். 

எனக்கு ஏதோ சங்கடம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட முருகேசன், ஆல்பர்ட் முதலான, அயோக்கியர்கள் ரொம்பவும் சந்தோஷப்படுவதை ஓரக் கண் பார்வையிலேயே என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ராமலிங்கம் கதவைத் திறந்து கொண்டிருக்கும் போது பிரின்ஸ்பால் அந்தப் பக்கமாக நடந்து வந்தவர் பையன்கள் நிற்பதையும், ராமலிங்கம் கதவைத் திறந்து கொண்டிருப்பதையும், பார்த்ததோடு அர்ச்சுனன் சாரை மிகவும் அழுத்தமாகப் பார்த்துக் கொண்டே நடந்து போய்விட்டார். 

சார் மீண்டும் ஒருமுறை ‘ஹும்’ என்றார் என்னைப் பார்த்து. 

முதல் நாள் அபாயம் எப்படியோ முடிவுக்கு வந்தது. இனி அடுத்த நாள் காலை நடக்கப் போகும் சங்கடங்களை நினைக்கை யில் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. சாப்பிட முடிய வில்லை. என்னை சோகம் கவிழ்ந்து கொண்டது. அம்மா உடம்புக்கு என்னடா என்றாள். திடீரென்று ஒரு நினைப்பு வந்தது. கதவைத் திறக்கும் போது சாவியை அதிலேயே வைத்துவிட்டோமோ என்று தோன்றியது. ரொம்ப யோசனைக்குப் பின்னால், ராத்திரி சாப்பாட்டு நேரத்துக்குப் பின், அர்ச்சுனன் சார் வீட்டுக்குப் போனேன். 

அவர் வீட்டு அறையில் விளக்கு எரிந்தது. கதவைத் தட்ட தைரியம் இல்லாமல் அந்தத் தெருவின் இரண்டு முனைகளுக்கும் இரண்டு முறை நடந்தேன். மூன்றாம் முறை நடந்தேன். மூன்றாம் முறை நடந்த போது சார் தெருவாசற் படியில் ஈசிச்சேர் போட்டுக் கொண்டு படுத்திருந்தார். அவர் பக்கத்தில் பெரிய மனுஷி போல அவர் மகளும் உட்கார்ந்திருந்தாள். திக் திக்கென்று நெஞ்சு அடித்துக் கொள்ள அவர் அருகில் போய் நின்றேன். கண்ணாடி இல்லாமல் இருந்தார். அதனால் ‘யாரது’ என்றார். ‘வைத்தி’ என்றேன். ‘ஹும்’ என்றார். புரியவில்லை என்பதாக அர்த்தம். நான், ‘எஸ். வைத்தியலிங்கம், சிக்ஸ்த் கிளாஸ் ஏ’ என்றேன். 

‘என்னடா இந்த நேரத்தில், என்றார். ‘இந்த தெருவில் எங்க மாமா இருக்கார். அவர் வீட்டுக்கு வந்தேன்’ என்றேன். ‘யாரு உங்க மாமா-‘ என்றார். நான் பேசாமல் இருந்துவிட்டு, ‘சாவி தொலைஞ்சு போச்சு சார்’ என்றேன். 

‘என்ன சாவி?’ 

‘நம்ம கிளாஸ் சாவி-‘ 

‘ஹூம்.’ 

அவர் மகள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கு சங்கடமாக இருந்தது. 

‘நேற்று கதவைத் திறந்த போது அதிலேயே சாவியை விட்டுட் டேன்னு தோணுது.’ 

‘ப்ச்’ என்றார். பிறகு- 

‘அந்த மாதிரி சாவி வாங்கணும்னா பத்து ரூபா ஆவும். நாளைக்கு வரும்போது பத்து ரூபாவோட வா-‘ என்றார். அவர் மகள் ‘அப்பா வெற்றிலை இல்லேன்னு சொன்னீங்களே’ என்று ஞாபகப்படுத்தவே, சார் ‘அந்த முனைக் கடைக்குப் போயி நாலணா வெத்திலை வாங்கி வர்றியா’ என்றார். அந்தப் பெண் என்னிடம் காசைக் கொடுத்தாள். 

புதிதாக அப்போதுதான் அறிமுகமாகி இருந்த அந்தக் காசைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே கடைக்குச் சென்று வெற்றிலையை வாங்கிக் கொண்டு போய் அவரிடம் கொடுத்தேன். ‘சரி- நாளைக் காலையில பணத்தோடு வந்து சேர்’ என்றார். 

இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் பிடிக்காமல் இருந்தேன். புரண்டு புரண்டு படுத்தேன். சத்தம் இல்லாமல் அழுதேன். சொல்ல முடியாத பயம் என்னுள் இருந்தது. என் காரணமாக ஒரு வகுப்பு பையன்கள் முப்பத்தாறு பேர் வெளியே நிற்கிறார்கள். அர்ச்சுனன் சாரைக் கூப்பிட்டு பிரின்சிபல் திட்டுகிறார். அர்ச்சுனன் என்னை உதைக்கிறார். பியூன் ராமலிங்கமும் என்னைத் திட்டுகிறான். தொடர்ந்து இந்த மாதிரி நினைவுகளே எனக்கு வந்து கொண்டி ருந்தன. 

அம்மாவிடம் சொல்லியிருக்கலாம். பின்னாளில் தோன்றியது. ஆனால் அப்போது சொல்லவில்லை. அம்மாவிடம் சொல்லி யிருந்தால் அப்பாவிடம் சொல்வாள். அம்மாவிடம் இருந்த அன்னி யோன்யம் என்ன காரணத்தாலோ அப்பாவிடம் ஏற்படாமல், ஏதோ ஒரு முடிச்சு விழுந்து விட்டிருந்தது. 

காலையில் சாப்பிட்டு விட்டதாகப் பேர் பண்ணி விட்டுப் பள்ளிக்கூடம் கிளம்பினேன். 

வழியில், அப்படியே எங்காவது ஓடி விடலாமா என்று கூடத் தோன்றியது. நல்ல வேளையாக அப்படிச் செய்யவில்லை. பள்ளிக் கூடம் தான் போனேன். தூரத்தில் என்னைக் கண்டு கொண்ட தாத்தா துணிக்குள் கையை விட்டு மிட்டாயை எடுத்து பேப்பரில் வைத்து, நான் அருகில் வந்ததும் என்னிடம் நீட்டினார். 

‘வேணாம்’ என்றேன். 

‘ஏன்-காசு இல்லியா-நாளைக்குக் கொடேன்-‘ 

‘அதுக்கில்லே-வேணாம்-‘ 

தாத்தா என்னை முறைத்துப் பார்த்தார். 

‘ஏன் மூஞ்சு ஒரு மாதிரியா இருக்கு. உடம்பு சரியில்லையா.’ 

இப்போதும் நன்றாக ஞாபகம் இருக்கிறது. நான் அழத் தொடங்கினேன். தேம்பித் தேம்பி அழுதேன். நான் அழத் தொடங்கி யதுமே, தாத்தா என் தோளில் கை வைத்து, கொஞ்ச தூரத்தில் எதிர்ப்புறத்தில் இருந்த பூவரச மர நிழலுக்கு அழைத்துச் சென்றார். நான் அழுது ஓயும் வரை காத்திருந்து விட்டுப் பிறகு கேட்டார்.

‘என்ன நடந்தது. சொல்லு-எதுக்காக அழறே-அப்பா அடிச்சாரா?’ 

நான் தலையை ஆட்டினேன். 

‘அம்மா திட்டினாங்களா?’ 

நான், ‘இல்லை’ என தலையை அசைத்தேன்.

‘பின்ன ஏன் அழறே? 

‘சாவியைத் தொலைச்சுட்டேன்-‘ என்று தொடங்கி, அது என்னிடம் வந்தது காரணம் முதலான அனைத்தையும் சொன்னேன். 

‘பத்து ரூபாயா கேட்டான் அந்த வாத்தி?’ 

‘ஆமா-‘ 

‘ஒரு சாவியோட விலை ஒரு ரூபாகூட இல்லே தெரியுமா?’

‘தெரியாது-‘ 

தாத்தா கொஞ்ச நாழி சும்மா இருந்தார்; பிறகு தன் அழுக்கு சட்டையில் இருந்து ஒத்தை ரூபாயும் சில்லறையுமாக இருந்த எல்லாவற்றையும் பொறுக்கி எண்ணி என்னிடம் பத்து ரூபாயைக் கொடுத்தார். 

நான் மறுக்காமல் அதை வாங்கிக் கொண்டு போய் அர்ச்சுனனிடம் கொடுத்தேன். நான் போன நேரத்தில் வகுப்பு அறை திறந்தே இருந்தது. அவர் வாங்கி சட்டைப் பையில் வைத்துக் கொண்டார். அன்று மாலையே அவர் வேறு ஒரு சாவியை என்னிடம் கொடுத்தார். 

பள்ளிக்கூடம்விட்டு வீடு திரும்பும் வழியில் அந்தச் சாவி யையே பார்த்துக் கொண்டு நடந்தேன். அது ஏற்கெனவே என்னி டம் இருந்த சாவி போல இருந்தது. ஒருமுறை என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் முத்துக்கிருஷ்ணன் சின்ன அரம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தான். அதனால் டெஸ்க்கின் ஓரத்தை அறுத்தான். மாவு மாதிரி மரத்தூள் உதிர்ந்தது. எனக்கும் ஆசை யாக இருந்தது. அரத்தை வாங்கி என் கையில் இருந்த சாவியை உராய்ந்தேன். கோடு விழுந்தது. என் இன்ஷியலையும் போட்டுப் பார்த்தேன். 

கோணல் மாணலான கோடாக இருந்தாலும் என்னால் என் இன்ஷியலைப் புரிந்துகொள்ள முடியும். அது இந்தச் சாவியிலும் இருந்தது. சாவி தொலைந்த அன்று முதல் நாள் கதவைத் திறந்து சாவியை எடுக்காமல் கதவிலேயே விட்டு விட்ட ஞாபகம் லேசாக எனக்கு இருந்து கொண்டே இருந்தது… 

நான் படித்த பள்ளிக் கூடத்திலேயே என் பையனும் படிக்கிறான். அவனைப் பள்ளிக்கூடத்தில் விட்டு விட்டு நான் அலுவலகம் போகிறேன். சூரியன் பிரகாசமாக இருந்தது. பலர் தார்ரோட்டையே பார்த்துக் கொண்டு நடந்தார்கள். சூரியனைப் பார்க்காமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்று தோன்றியது. 

– 1979

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *