சிலம்பக் கூடம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 5, 2025
பார்வையிட்டோர்: 85 
 
 

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

புளியந்தோப்பு சீனித் தேவர் என்று சொன்னால் ‘அகில உலக சிலம்ப உஸ்தாத்’ என்று அர்த்தம்! வாழ்க் கையிலோ என்றால், அவர் அந்த ஊர் கிராம முன்சீபிடம் ஒரு வெட்டியான்! 

சீனித் தேவர் சாதாரணமாகப் பெரிய மனிதர்களைக் கண்டால் மேல்-துண்டை எடுத்து அரையிலே கட்டி நின்றுதான் பேசுவார். அவ்வளவு அடக்க ஒடுக்கம். ஆனால் சிலம்பக் கூடத்துக்குள்ளே இறங்கிவிட்டால், அவர் உஸ்தாத். அவருக்கு ‘சலாம்’ வரிசை வாங்கிக் கொண்டுதான் சீடர்கள் எல்லாரும் வட்டத்துக்குள் இறங்க வேண்டும். அதிகம் சொல்வானேன்? அந்தக் கிராம முன்சீபே வந்து சிலம்பம் படிப்பதானாலுங்கூட, சீனித்தேவருக்குத் தேங்காய் தட்டி, ‘சலாம் வரிசை’யும் வாங்கித்தான் ஆகவேண்டும்! 

சீனித்தேவருக்கு நிகராக சிலம்பம் ஆடுபவர் அந்த வட்டாரத்திலேயே யாரும் கிடையாது. கம்பு வீச்சில் அவர் வேங்கைப் புலி! ‘கோப்ட்டாக் கத்தி’யை எடுத்துக்கொண்டு வீச ஆரம்பித்தார் என்றால், பார்க்கிற வர்களுக்கு ஈரல் பதறும். ஆனால் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று ஆசை தோன்றும்! கூட்டங் களுக்குள் சுருளியைச் சுழற்றிக்கொண்டு சீனித்தேவர் பாயும்போது, ‘நடன பலாட்டிய நரவீர சண்டியர்’களும் கதிகலங்கிப் போவார்கள்! 

வித்தையில் தேர்ந்த திறமைசாலிகளில் பலர் சாதாரணமாகத் தங்கள் வித்தை முழுவதையும் மகிழ்ச்சி யோடு வழங்கி, சிஷ்ய சந்ததியை ஸ்தாபிப்பதில்லை. ஆனால், சீனித்தேவர் அப்படியில்லை. தமக்குப் பின்னால் தம்முடைய பெயரைச் சிலம்பக் கம்பிலே சுழற்றி வானத்தில் வீசி விளையாடக்கூடிய இரண்டு சீடர்களை அக்கறையோடு பயிற்றியிருந்தார். அவர்களிடம் அவருக்கு அபாரமான நம்பிக்கை. 

சங்குத்தேவனும், சந்தனத் தேவனும் சரியான இளங் காளைகள். எத்தனையோ ஆண்டுகள், எத்தனையோ வாலிபர்களை ஆராய்ந்து, எத்தனையோ பேரைக் கழித்து இவர்களைத் தேர்ந்தெடுத்து ஜோடிகளாக இணைத்திருக் கிறார், சீனி. அசைப்பிலே பார்த்தால் யார் சங்கு, யார் சந்தனம் என்று இனங்கண்டு சொல்லிவிட முடியாது. ஒரே உயரம், ஒரே மாதிரி ஒடிசலான தேகம், ஒரே நடை, உருவிவிட்ட சாட்டை மாதிரி ஒரே வேகம் இருவருக்கும். முகங்கூட அநேகமாக ஒன்றுபோல் இருக்கும். ஆட்டத் தில் இருவரும் சரி நிகர் சமானம்; ஒருவனை ஒருவன் வென்றான் என்றோ, ஒருவனுக்கு ஒருவன் பம்மினான் என்றோ கிடையாது! 

ஐப்பசி கார்த்திகை மாதங்களில் மாலை நேரத்தில் தாமிரவருணிக் கரையில், புளியந்தோப்பில் நின்று பார்த்தால் பொதிகை மலைக்கு மேலே மின்னல்கள் துவளுவது தெரியும். சங்குத் தேவனும் சந்தனத்தேவ னும் சிலம்பக் கூடத்துக்குள் இறங்கி, ஆசானிடம் சலாம் வாங்கும் முறையைப் பார்க்கும்போது, அந்த மின்னல் களில் இரண்டு பொதிகை மலையிலிருந்து கீழே இறங்கி வந்து சீனித்தேவருக்கு முன்னால் வணங்கித் துவளுவது போல் இருக்கும்! 

“எல்லாச் சிலம்பப் பள்ளிக்கூடத்திலுந்தான் ஜோடி கள் என்று இருக்கும். ஆனாலும் இந்த மாதிரி ஜோடி எப்படித்தான் அமைந்ததோ!” என்று எல்லாரும் அதிசயப்பட்டார்கள். 

எனவேதான், மயிலம்மையின் நிலைமை அவ்வளவு கஷ்டமாகப் போய்விட்டது! 

மயிலம்மை சீனித்தேவருக்கு ஒரே மகள். மகள் என்ன-மகள், மகன், மக்கள் எல்லாம் அவளேதான். சிவப்பும் கருப்பும் ஒன்று பேசிக் கலந்து உருவம் எடுத்தது போல அவளுடைய நிறம் – பொது நிறம். அந்தக் கிராமத்துப் பெண்களிலேயே அவள் ஒரு தனியான கவர்ச்சி! தாயில்லாப் பெண்ணான தால், அப்பாவைப் பெற்ற ‘ஆச்சி’யிடம் அவளுக்கு ஏகப்பட்ட செல்லம். அந்தச் செல்லத்திலே வளர்ந்ததால், நல்ல சூரிய வெளிச்சத்தில் வளர்ந்த பூச்செடி மாதிரி அவள் வனப் பாக இருந்தாள். முகத்தில் ஒரு பிரகாசம்; கண்கள் எப்பொழுதும் சிலம்பம் ஆடிக்கொண்டே யிருக்கும். நேர் வகிடுக் கொண்டையும், நெற்றியிலே துலங்குகிற நேர்த்தியான குங்குமப் பொட்டும், வீராதி வீரன் சிலம்பச் சூரனையும் சலாம் வரிசை வாங்க வைத்துவிடும்! 

மயிலம்மை அடிக்கடி தகப்பனாரோடு சிலம்பக் கூடத் துக்கு வருவதுண்டு. அவள் வந்துவிட்டால் ஆட்டத்தில் களை கட்டும். சீடப் பிள்ளைகள் தங்கள் குருநாதனுடைய குமாரிக்கு முன்பாகத் தாங்கள் கற்ற வித்தையையெல் லாம் ஸ்தாபிதம் செய்வார்கள். சிலம்பக் கூடத்தின் அந்த ஜோடிகள் இருக்கிறார்களே, அவர்களுக்கோ சொல்லவே வேண்டாம்! 

மயிலம்மை சம்பந் தப்பட்ட மட்டில், சங்குத்தேவன், சந்தனத்தேவன் இருவருடைய ஆட்டமுமே அவளுக்கு வியப்பூட்டியது. சில சமயங்களில் இமை கொட்டாமல் அவள் பார்த்துக்கொண்டே யிருப்பதைக் கவனித்தால், இந்த இருவரில் யாரை அதிகமாக வியப்பது என்று அவளுடைய கண்கள் அங்கும் இங்கும் தடுமாறுவது போல் தெரியும்! 

இந்தத் தடுமாற்றம் பல நாளாக நீடித்தது. ஒரு நாள்- 

ஒரு நாள் மயிலம்மை சிலம்பக் கூடத்துக்கு வருவது நின்றது. அவளுக்கு மஞ்சள் நீர் ஆட்டியதிலிருந்து, அவள் – பெரிய மனுஷி-வெளியே வரக்கூடாது என்று ஆகிவிட்டது. ஆச்சிதான் அவளுக்குத் துணை. 

“அல்லி யரசாணி மாலை”யும் “புரந்தரன் களவு மாலை”யும், “பஞ்சபாண்டவர் வனவாசமும்” அவளுக் குப் பொழுதுபோக்கு. எப்பொழுதாவது சங்குவும் சந்தனமும் வாத்தியாரைத் தேடி வீட்டுக்கு வருவார்கள்; மற்றப்படி சிலம்பத்துக்கும் மயிலம்மைக்கும் இப்பொழுது எத்தனையோ மைல்கள்! 

மயிலம்மை மெய்யாகவே மிகவும் அவதிப்பட்டாள். ஆச்சிக்குத் தெரியாத ரகசியம் ஏது? அவளுக்கும் தன்னுடைய பேத்தியை இந்த இரண்டு வாலிபப் பிள்ளை களில் ஒருவனுக்குக் கல்யாணம் முடிப்பதில் இஷ்டந் தான். ஆனால் இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது? 

சீனித் தேவருக்கோ என்றால், இரண்டு பேரும் இரண்டு கண்கள் மாதிரி. 

நிலைமை இப்படி இக்கட்டாக இருக்கும்போதுதான், உலகம்மன் கோவிலில் தசரா வந்தது. தசரா என்றால், சிலம்பப் பள்ளிக்கூடத்துக்கு வருஷத்துக்கு ஒரு நாள்! அம்மன் சப்பரம் செல்வதற்கு அடுத்தபடியாக, அந்த வட்டாரங்களில் உள்ள சிலம்பப் பள்ளிக்கூடத்துச் சீடர்கள் எல்லாரும் அணி வகுத்துச் செல்லும் திருவிழா அது! வீதி முனைகளில் நின்று ஒரு வருஷத்துக்குக் காணும் படியாக ஆடுவார்கள்! 

வாண வேடிக்கைகளும், புலி வேஷங்களும், சாமி யாட்டங்களும் ஒரே அமர்க்களமாயிருந்தன. பனியன் துணியினால் செய்த நீண்ட கால் அங்கிகளை அணிந்த சிலம்ப வீரர்கள், பத்தி பத்தியாகச் சென்றார்கள். மேலே பனியனால் தைத்த முழுக்கைச் சட்டை உடம்பை இறுக்கிக்கொண்டு நெளிந்தது. அரையிலே பச்சை வெல்வெட் துணியினால் ‘ஜட்டி’. கழுத்தைச் சுற்றி ரோஜா நிறத்தில் முக்கோணவடிவத்தில் முடி போட்டுத் தொங்கும் சவுக்கம். கையில் உயரம் உயரமான சிலம்பக் கம்புகள்; கோப்ட்டாக் கத்திகள். அந்தக் கத்திகளிலே சொருகிய பளபளப்பான கேடயங்கள். அங்கங்கே சுருளி கள், மான் கொம்புகள். அந்தக் காட்சி ஏதோ பெரிய படை புறப்பட்டதுபோலத் தெரு வீதிகளில் அணி அணி யாக வந்தது. 

சீனித் தேவருடைய வீட்டை அடைந்ததும் கூட்டத் தில் ஒரு பரபரப்பு உண்டாயிற்று. 

வாத்தியார் சுருளியைக் கையிலே பிடித்துக்கொண்டு கூட்டத்துக்குள் இறங்கினார். அப்படியே வட்டமாக ஜனத்திரள் ஒதுங்கி வளையமிட்டு நின்றது. 

வாணங்கள் வானத்தில் சீறி வெடித்து வர்ணங்களை உதிர்த்தன. தூரத்தில் மேளமும் பாண்ட் வாத்யமும்  ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்தன. தீவட்டிகள், காஸ் லைட்டுகள், மானிடத் தோளில் ஏறி நின்று எரியும் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் எல்லாம் அங்கங்கே இடம் போட்டு நின்று ஒளி வீசின. சிவப்பும், பச்சையுமாக மத்தாப்புகள்-சுற்றுப்புறங்களுக்கும், ஜனத்திரளுக்கும் வர்ணம் பூசின. வளையமிட்டு நின்ற கூட்டத்தின் மத்தியில் விசாலமான வட்டத்துக்குள் ஜோடிகள் அந்த இறங்கினார்கள்! 

மூடி விழிக்கும் நேரத்தில் இளங்காளைகள் இருவரும், ஆசானுக்கு முன்பு துள்ளி வந்து சலாம் வாங்கினார்கள். அடுத்த கணம் வலது காலையும் இடது காலையும் மாற்றி மாற்றிப் பாவி எட்டத்திலிருந்து கைக்கம்பை நீட்டிய வண்ணம், ‘பாவலா’ போட்டு அருகிலே வந்தார்கள். குச்சிகளை மேலே உயர்த்தி ஒரு ‘டக்’! பிறகு கீழே தாழ்த்தி ஒரு ‘டக்’! பிறகு மறுபடியும் மேலே! இப்படி யாக ‘டக் டக் டிக்!’-ஆட்டம் வெகு ரஸமாகத் ‘தட் தட்’ என்று எவ்வியது. இடையிடையே இரண்டு பேரும் சீனித் தேவர் வீட்டு ஜன்னலையும் பார்த்துக் கொண்டார்கள்! ஒவ்வொரு பார்வைக்கும் உற்சாகம் ஒரு படி மேலே சென்றது! 

வாத்தியார் திகைத்தார். வெகு நேரம் ஆகியும் சீடர்கள் இருவரும் ஆடிக்கொண்டே யிருந்தார்கள். இருவருடைய முகத்திலும், களைப்புக்குப் பதிலாக ஒரு புதிய வேகம் அரும்பியிருந்தது. பார்த்துக்கொண் டிருந்த ஜனங்களே நினைத்தார்கள்: “இன்றுதான் ஜோடி களுக்குள் ஒரு போட்டி தெரிகிறது” என்று. அதைக் கண்டு அந்த ஜனங்களுக்கெல்லாம் கொண்டாட்டம்; ஆனால் மயிலம்மைக்கோ? சில சமயம் ஜன்னல்-கம்பி களைப் பெயர்த்துக்கொண்டு வெளியே வந்து, “நீங்கள் இரண்டு பேரும் சமம். வெற்றி-தோல்வி என்பது எவ் வளவு நேரமானாலும் கிடையாது!” என்று சொல்லிவிட லாமா எனத் தோன்றும். நேரம் ஆக ஆக இந்த ஆத் திரம் அதிகரித்தது! 

உலகம்மன் சப்பரம் இதற்குள் வீதியைத் தாண்டி வெகு தூரம் போய்விட்டது. சீனித் தேவருக்கு வேறு வழி புலப்படவில்லை. வட்டத்துக்குள்ளே சாடினார். இரண்டு பேரையும் முதுகைத் தட்டி ‘சபாஷ்’ கொடுத்து விட்டு, கூட்டத்தை ‘நகரலாம்’ என்று கை கூப்பினார். 

ஜோடிகளின் சிலம்ப ஆட்டம் நின்றது. ஆனால் அந்த இரண்டு மனங்களுக்குள்ளும் மிகப் பெரிய சிலம்ப ஆட்டம் அப்பொழுதே ஆரம்பமாகிவிட்டது! 

சீனித் தேவர் பெரிய பெரிய புதிர்களுக்கெல்லாம் விடை காணுவது, தம்முடைய கிராம முன்சீபு ஐயா விடம் வந்துதான். எனவே, தம்முடைய மகளின் கல் யாணப் பிரச்னையையும் அவருடைய சந்நிதிக்கே கொண்டுவந்தார். கிராம முன்சீபு சொன்னார், “இந்த இரண்டு பேரில் யார் சிலம்பம் ஆடி வெற்றி பெறுகிறானோ அவனுக்கு மயிலம்மையைக் கொடுக்கலாம்” என்று. 

சிக்கலுக்கு இப்பொழுது இன்னும் பலமான முடிப்பு விழுந்துவிட்டது. உலகம்மன் கோவிலை அடுத்த ‘லாலா தோப்பில்’ ஜோடிகள் இருவரும் மயிலம்மைக்காகச் சிலம்பப் போட்டியிலே இறங்குவது என்று நாள் குறித்து விட்டார்கள்! வென்றால் மயிலம்மையோடு வாழ்வு, வெல்லாவிட்டால் மயிலம்மைக்காகச் சாவு என்ற தீர் மானத்தில் சங்குத் தேவனும், சந்தனத் தேவனும் முனைந் தார்கள்! 

போட்டி நாள் நெருங்க நெருங்க, சீனித் தேவருக்கு மனத்தைப் புளிக்கரைக்க ஆரம்பித்துவிட்டது! காரணம் தம்முடைய சீடர்கள் ஒருவனை ஒருவன் காலை வாங்குவது, கையை வாங்குவது என்று பேசிக் கொள்வதாக அவர் காதில் விழுந்தது. மயிலம்மையோ, இந்த விவகாரத் தில் அனாவசியமாக கிராம முன்சீபு ஐயா நுழைந்து போட்டி யோசனையினால் குட்டை குழப்பி விட்டார் என்று மனம் வருந்தினாள். தனக்குக் கல்யாணமே வேண் டாம் என்று கூடச் சொல்லி விடலாமா எனப் பல தடவைகள் அவள் நினைத்தாள்! 

அந்தி வேளையில் ஆறு மணியிருக்கும். பூக்காரி வந் தாள். ‘கேட்டையா சங்கதி’ என்று மயிலம்மையிடம் வந்து பேச ஆரம்பித்தாள். அவள் சொன்ன விவரம் மயிலம்மையின் மனத்தைத் திகிலடையச் செய்தது. 

தெருவோடு போய்க் கொண்டிருந்தபோது பூக்காரி யின் காதில் சங்குத் தேவன் தன் சகாவுடன் பேசிய வார்த்தை நன்றாகக் கேட்டதாம். “சந்தனத் தேவனைக் கெலிப்பது. இல்லையென்றால் இந்த உலகம்மன் சத்தியமா இந்தப் பயலுடைய காலை முறித்து முடமாக்குவது” என்று அவன் சபதம் கூறினானாம்! 

‘தன்னிடம் சங்குத் தேவனுக்குள்ள அளவு கடந்த பிரியம் அல்லவா இப்படிச் சபதம் போடச் செய்கிறது’ என்று முதலில் மயிலம்மை நினைத்தாள். ஆனால் பாவம், சந்தனத்தேவனுக்குக் கால் முறிவதை எண்ணிப் பார்க் கவே அவளுக்குத் திகிலாக இருந்தது. அப்பா வந்ததும் அவரிடம் விஷ்யத்தைச் சொன்னாள். அவருக்கும் உள்ளூரக் கவலையிருந்தாலும் அதைக் காட்டிக் கொள் ளாமல், “சந்தனத் தேவன் அத்தனைக்கு விடுவானா! சம ஜோடியல்லவா? சங்கு வந்து காலை முறிக்கும்வரை இவனுடைய கை புளியங்காய் பறிக்கவா போயிருக்கும்!” என்று சொல்லிப் பேச்சை முடித்தார். 

அந்த நேரத்தில் “வாத்தியாரையா” என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தார். சந்தனம் நின்று கொண்டிருந்தான். 

“என்னடா நாளை ஆட்டத்திலே நம்ப வள முறை களை யெல்லாம் மீறி, சங்குத்தேவன் காலை முறிக்கப் போறியாக்கும்!” என்றார் வாத்தியார். 

“இல்லை, அப்படிச் சபதம் செய்திருப்பது சங்கு தான். நானில்லை” என்றான் சந்தனம். 

“உன்னுடைய தீர்மானம் என்னவாம்?” 

“இந்தப் போட்டியே வேண்டாங்கிறதுதான்!” சீனித்தேவர் இந்த வார்த்தையை எதிர்பார்க்கவில்லை. 

“என்னடா சீடப் பிள்ளை, பயந்துட்டியா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். மனத்துக்குள் அந்த மாதிரிப் போட்டியில்லாமற் போய்விட்டால் அவருக்கும் இப்பொழுது திருப்திதான்! 

“பயத்திலே சொல்லலை. போட்டின்னு வந்துட்டா, குருநாதன் கிருபையிலே ஒரு கை பார்த்துத்தான் விடுவேன். அது ஒங்களுக்கே தெரியும். ஆனா…” என்று இழுத்தான் சந்தனம். 

“ஆனா என்னடா?” என்று கேட்டார் சீனித்தேவர். 

“என் காலை அவன் முறிச்சா அவன் காலை நான் முறிக்காம விடமாட்டேன்! முடிவு அதுதான். ஆனா கடைசியிலே மயிலம்மை இந்த இரண்டு முடவனிலே ஒரு முடவனோடுதானே வாழணும்! அதுதான் மனசுக்குச் சங்கடமாயிருக்கு-” என்றான் சந்தனம். 

சீனித்தேவர் அசைந்துவிட்டார். சந்தனத்தின் வார்த்தைகள், எதிர்காலத்தின் மெய்யான ஒரு சூழ் நிலையை அவர் கண் முன்பு சித்திரித்தன! 

“என்னடா பெரிய குழப்பமாப் போச்சு. என்னதான் இதுக்கு வழி?” என்றார் அவர். அந்த வார்த்தைகளில் ஒரு சலிப்புத் தெறித்தது. 

சந்தனம் முடிவாகச் சொன்னான்: “நல்ல நாள் பார்த்து சங்குத்தேவனுக்கும் மயிலம்மைக்கும் கல்யாணம் முடியுங்க. எப்படியும் அவ நல்லாயிருக்கணும்.” 

சிலம்பப் போட்டி நடைபெறவில்லை. என்றாலும் மயிலம்மைக்குத் திருமணம் நடந்தேறியது! ஆனால் சங்குத்தேவனுக்குப் பதிலாக சந்தனத்தேவன் அவளை மணந்தான்! 

இரண்டு பேரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்று திண்டாடிக்கொண்டிருந்த மயிலம்மை வெகு எளிதில் அந்த மகத்தான தீர்மானத்துக்கு வந்து விட்டாள். அன்று சாயந்திரம் சந்தனத்தேவன் தன் அப்பாவிடம் வந்து சொன்ன வார்த்தைகள் மயிலம்மையின் மனத்தில் அவ்வளவு பெரிய மாறுதலைச் செய்துவிட்டன. உண்மை யில், மயிலம்மையின் நலத்தை எண்ணி எதிரிக்கே விட்டுக் கொடுக்க நினைத்தானே சந்தனம், அந்த நினைப்பு அவளைக் கண்கலங்க வைத்துவிட்டது. தன்னிடம் எவ் வளவு அன்பு சந்தனத்துக்கு இருந்தால் அவன் அப்படிச் சொல்லியிருப்பான் என்று யோசித்துப் பார்த்தாள். 

‘அல்லி கதை’, ‘புரந்தரன் கதை’ இவற்றில் வருகிற ஆடவர்கள் எல்லாம் சுயநலக்காரர்களாகவே அவளுக்குப் பட்டது. ஒரு பெண்ணுக்காகத் தன்னுடைய விரோதியை வீழ்த்துகிற சுயநலச் சூரர்கள் – சங்குத்தேவர்களை- அவளுக்குத் தெரியும். ஆனால் உண்மையான அன்பு காரணமாக எதிரிக்கே விட்டுக் கொடுக்கிற சந்தனத் தேவனை முதன் முதலாக இன்றுதான் பார்த்திருக்கிறாள்! 

மணமக்களை ஆசீர்வாதம் செய்த கிராம முன்சீப் சிவசங்கரம் பிள்ளை, சிலம்ப வாத்தியார் சீனித்தேவருக்கே ஆசானாக நின்று விஷயத்தை விளக்க ஆரம்பித்தார்: “நீர் சிலம்பம் ஆடுபவர். நான் சிலம்பம் பார்ப்பவன். நம் கண்ணுக்கு சந்தனமும் சங்கும் சரி நிகர் சமானந் தான். ஆனால், மயிலம்மை எவ்வளவு எளிதில் அவர்களை இனங் கண்டுபிடித்து விட்டாள் பாரும்! மன உலகம் என்பது தனி! அது வேறு வகையான ஒரு சிலம்பக் கூடம்!”

– இந்த தொகுப்பில் உள்ள பன்னிரண்டு கதைகளும் கல்கி, ஆனந்த விகடன், கலைமகள், வசந்தம் முதலான பத்திரிகைகளில் வெளியானவை.

-மஞ்சள் ரோஜா முதலிய கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1954, பாரி நிலையம், சென்னை.

மீ.ப.சோமு மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *