சின்னு என்கிற சின்னசாமியும் அக்கீ என்கிற அக்கீசியாவும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2025
பார்வையிட்டோர்: 3,808 
 
 

அத்தியாயம 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம் – 9

அன்று ரூபிணி கல்லூரிக்குப் போகவில்லை.

மனசில் விரக்தி. வாஷிங் மெஷின் துவைத்துக் கக்கிய ஈரத்துணிகளை

மொட்டைமாடியில் உலரப் போட்டவாறு… ஒரு வகையில் துயரத்துடனும்…

சினத்துடனும்… அவளைத் தேடிக்கொண்டு, கல்பனா- அவள் அம்மா படியேறி மேலே வந்தாள்.

“ரூப்! என்னாச்சு உனக்கு? காலேஜுக்குப் போகலையா?”

அவள் மௌனமாய் துணிகளுக்கு கிளிப் மாட்டிக்கொண்டிருந்தாள். மனதில் எதையெதையோ கற்பனை பண்ணிக்கொண்டு.

“காலேஜ்லே ஏதாவது பிரச்சனையா…” கல்பனா கேட்டாள்.

ரூபிணியின் செவிமடல்கள் சிவந்தன.

“கண்டவனையெல்லாம் எதுக்கு காலேஜுக்கு அனுப்பறே?”

“நீ என்ன சொல்றே?”

“எவனோ புரோக்கராம்… என்னோட ஃபோட்டோவை வச்சிட்டு லோலோன்னு அலைறான்!”

“அப்படியா.. அந்த நாய்க்கு அங்கென்ன வேலை.. இங்க வீட்டுக்கு

வரவேண்டியதுதானே” கல்பனாவுக்குக்காரணம் புரிந்தது.

“அட… அவன் வரட்டும்… நல்லாத் திட்டிவிடறேன்”

“என்னோட ஃபோட்டோ அவன் கிட்டே எப்படிப்போச்சு.. வந்து கிட்ட நின்னுட்டு ‘பாப்பா,பாப்பா’ ன்னு கொழைறான்! அப்பவே, நாலு அப்பு அப்பலாமான்னு கோபம் பொத்துட்டு வந்துச்சு… காலேஜ்ல சீன் போடக்கூடாதுன்னு நெனைச்சுட்டு பேசாம இருந்துட்டேன். நல்லவேளை அப்ப யாரும் பக்கத்திலே இல்லே”

“விட்டுத் தள்ளு ரூப்! பக்கத்து வீட்டு அங்கிள்தான் போட்டோவைக் கொடுத்தது”

“எதுக்கு?”

“என்ன கேள்வி? அவன் புரோக்கர்.. உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்க்க வேண்டாமா”

“நல்ல மாப்பிள்ளையும் வேண்டாம்… அழுகின மாப்பிள்ளையும் வேண்டாம்… எங்கிட்ட மேரேஜைப் பத்தி ஒரு வார்த்தை கேக்கணும்னு உனக்குத் தோணலையா.”

கல்பனா எதுவும் பேசவில்லை.

“உலக அழகனைக் கூட்டிட்டு வந்து ‘இதுதான் ரூபிணி… நல்லாப் பார்த்துக்கோ’ம்பான்… இது தேவையா”

“அவன் வரட்டும்.. நல்லாக் கடிஞ்சு விடறேன்…

காலேஜ் பக்கம் எதுக்குப் போனான்? இப்பவே ஃபோன் பண்ணிச் சொல்லிடறேன்.. நீ புறப்பட்டு காலேஜ் போம்மா”

“அம்மா! இப்பப் போறேன்….. என்னைக் கேட்காம எந்த நாயும் எனக்கு

இனிமேல் மாப்பிள்ளை பார்க்கக்கூடாது… இது கண்டிஷன்!”

புயலைக் கண்டு மரம் திடுக்கிடுவதுபோல், கல்பனா ஆடிப்போனாள்.

***

கல்பனா அமைதியாக இருந்தாள் .

‘ரூபிணியைப் பற்றி அவளுக்குத் தெரியாதா, என்ன… இந்தக் காலத்திலே பொண்ணுக இப்படித்தான் அடம்பிடிப்பாங்க… மெதுவாக… பக்குவமாக.. புரியும்படி சொன்னால் படிந்து விடுவாள்… ஒருவேளை, மனசிலே வேறுயாரையாவது நெனெச்சிட்டிருக்காளோ என்னவோ யார் கண்டது?’

இரவு உணவு முடிந்ததும் —

“ரூபிணி! இங்க வா…வந்து உட்காரு” என்று கல்பனா தன் மகளை ஆதுரத்துடன் அழைத்து அருகே அமரச் செய்தாள் . முன் நெற்றியில் படர்ந்துகிடந்த கேசத்தை பிடரிவரை ஒதுக்கிவிட்டாள் .

“ஏம்மா… இப்படி அம்மாகிட்டே கோபிச்சுக்கறே.. நம்மளோட நெலமை உனக்கு நல்லாவே தெரியும்… நமக்கு யாரு துணையா இருக்கா.. உனக்கு நான், எனக்கு நீ! காலம் கடந்து போறதுக்குள்ள ஒரு நல்ல மனசு உள்ள தம்பியாப் பார்த்து… ஏதோ முடியாத நேரத்திலே என்னையும் வச்சுக்

காப்பாத்தற பையனாப் பாத்து உன்னையே கரை சேர்த்தரணும்ங்கற நல்ல எண்ணத்திலேதாம்மா கொஞ்சம் அவசரப் பட்டேன்.. இது தப்பாம்மா”

அவள் விழிகளில் ஆபரணம் போல் நீர் கோத்தது.

“என்னம்மா நீ .. இந்த உலகத்தை விட்டுப் போறதுக்கு ரொம்ப அவசரப்படறே போலிருக்கு! எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடும்மா! நானாவே தேடி, தட்டி, உரசிப்பார்த்து, என் மனசுக்குப் பிடிச்ச பையனை உன் முன்னாலே கொண்டுவந்து நிறுத்தறேன்!”

‘அட! என் மகள் ரூபிணியா இப்படிப் பேசறே.. இந்தக் காலத்திலே பொண்ணுக எல்லாம் நல்லாவே யோசிக்குதுங்க’

கல்பனா அப்படியே சமைந்து போனாள். —

“என்னமோ எனக்குப் பதட்டமாவே இருக்கு.. நல்லா யோசிச்சு நடந்துக்க.. எந்தப் புத்துலே எந்தப் பாம்புன்னு யாருக்குத் தெரியும்”

“அம்மா! நெகட்டிவா ஏன் யோசிக்கணும்? நீ எப்பவுமே என் கூடத்தான் இருக்கப்போறே.. நான் தேர்ந்தெடுக்கற மாப்பிளைகிட்ட இதுதான் முதல் கண்டிஷன்!”

“ஏம்மா.. ஒண்ணு கேட்கறேன்.. யாரையாவது மனசிலே..” -என்ற கல்பனா அவள் முகத்தைத் தன் பக்கம் திருப்பினாள்.

ரூபிணி அவள் கன்னத்தில் மென்மையாய் முத்தமிட்டவாறு “ஒரு வாரம் பொறுத்துக்கம்மா.. நானே சொல்லிடறேன்!” என்றவள் படுக்கையறைக்குள் நுழைந்தாள்.

***

அன்று ஞாயிற்றுக்கிழமை.

அக்கீசியா, ரூபிணியை அலைபேசியில் அழைத்தாள்.

“ரூப்! இன்னைக்குச் சந்திக்கலாமா?”

“கண்டிப்பா…உன்கிட்ட நேர்லே சில காரியம் பேசணும்”

“நானும்தான்… பிக் மாலுக்கு வா… கான்டீன்லே காத்திட்டிருக்கேன்”

“எத்தனை மணிக்கு அக்கீ?”

”ஈவ்னிங் அஞ்சு மணி.. ஓகேயா?”

பிக்மால் ‘கச கச’ வென்று இருந்தது. எல்லாப் பக்கமும் அலைமோதும் கூட்டம். அக்கீசியா நுழைவு பகுதியிலேயே காத்துக்கொண்டிருந்தாள். ரூபிணி ஸ்டைலாய் ஒரு ஹாண்ட்பேக்கை தோளில் மாட்டியவாறு, வந்தாள். இருவரும் மாடர்னாயிருந்த மேசைமீது கை ஊன்றியவாறு அமர்ந்தார்கள்.

“ஹாய் அக்கீ! ஏதாவது ஸ்வீட் நியூஸ் உண்டா? “

“உக்கும் வேப்பெண்ணெய்! வெள்ளிக்கிழமை உங்கூட ஒரு ஆள்வந்தானே.. அது என்னாச்சு?”

“ஓ… அந்தக் கிறுக்கனா… புரோக்கராம்.. அம்மாவை ஒரு பிடி பிடிச்சுட்டேன்!”

“அட… நீயும் அவன் வலையே விழுந்துட்டியா!” அக்கீசியா, அவளை விசித்திரமாய்ப் பார்த்தாள்.

“பொண்ணு பாக்கறானாம் பொண்ணு! பொண்ணு பாக்கற மொகரையைப் பாரு.. என்னைக்கு இந்தப் பத்தாம் பசலித்தனமெல்லாம் ஒழியுமோ… அது கிடக்கட்டும் சின்னு என்ன சொல்றான்?” என்றாள் ரூபிணி.

“அவன் கிட்டப் பேசற மூடிலே நானில்லே” என்றாள் அக்கீசியா.

“ஏன் என்னாச்சு?”

“அந்த புரோக்கரைப் பார்த்ததும் நானும் அப்செட் ஆயிட்டேன்”

“எப்படி?”

“அந்த மூஞ்சி அடிக்கடி என்னோட வீட்டுக்கும் வருது! எனக்கும் அலயன்ஸ் பார்த்திட்டிருக்கான்!” என்றாள்.

ரூபிணிக்கு உள்ளுக்குள் பொறி தட்டிற்று.

“நல்லதுதானே… பிடிச்சவனைப் பார்த்துக் கட்டிக்கவேண்டியதுதானே!”

“என்ன ரூப்…. அப்படிச் சொல்லிட்டே… நம்ப மனசப் புரிஞ்சுக்காத பேரண்ட்ஸ்கிட்ட சண்டைப் போட்டுட்டிருக்கேன்… நீ என்னடான்னா…”

முட்டை பஃப்ஸும் காஃபியும் வந்தது. ரூபிணி தன் ஹாண்ட் பேக்கிலிருந்து ஒரு மாத நாவலையெடுத்து விரித்தாள்.

“இதைப் படிச்சிருக்கியா…. நீ எங்கே இதெல்லாம்.. உன் அம்மா எழுதினதுதான்.. அதுலே ஒரு பாரா ரொம்ப சூப்பர்… கவிதைன்னே வச்சுக்கலாம் .. படிக்கிறேன் கேளு..

‘பெற்றோர்கள் மகளுக்குத் திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தார்கள்.

தடம் வழி பார்த்தார்கள்.

ஜாதகம் பார்த்தார்கள்

அந்தஸ்து பார்த்தார்கள்

நல்ல நாள் பார்த்தார்கள்

பொருத்தம் பார்த்தார்கள்

எல்லாம் பார்த்தார்கள்

தன்னுடைய மகளின் மனசைத் தவிர!’

எப்படி அக்கீ நல்லா இருக்குல்லே..?”

“எழுதறது வேறே… வாழ்க்கை வேறேன்னு அவங்க நினைக்கறாங்க”

அக்கீசியா பெருமூச்சு விட்டாள்.

“என்ன அக்கீ! உம் மொகமே சரியில்லியே… யாருகிட்டயாவது லாக் ஆயிட்டியா…. என்னை எதுக்கு வரச்சொன்னே? “

அவள் முகம் சடுதியில் மாறுபட்டது.

“நீ ரொம்ப செல்ஃபிஷ் ரூப்! உனக்கு சின்னு மேலே ஒரு கண்.. அதுக்கு நான் தூது போகணுங்கறியா?” என்றாள் விரக்தியுடன். ரூபிணிக்கு மெல்லப்புரிய ஆரம்பித்தது.

“என்ன அக்கீ, இப்படிப் பேசறே.. நேரடியா எப்படி அவன்கிட்டேச் சொல்றதுன்னுதான் உன்னோட உதவி கேட்டேன்… உனக்கு

விருப்பமில்லேன்னா விட்டிரு!” அவள் சட்டென்று பையைத் தோளில் மாட்டியவாறு திரும்பிக்கூடப்பாராமல் காண்டீனை விட்டேகினாள்.

அசந்து போன அக்கீசியா, “ரூப்!… ஒரு நிமிஷம்… நில்லு ரூப் நான் என்ன சொல்ல வர்றேன்னா…!” என்று நாற்காலியை உதறிவிட்டு எழுந்தாள்.

ரூபிணி… இப்பொழுது ஒரு செவிடு!

வெளியே மழை பொழிந்து கொண்டிருந்தது. திருட்டு மழை! எப்படி வந்ததோ, எப்பொழுது வந்ததோ தெரியவில்லை. மழையின் ஒலி, இந்த ஆரவாரத்தில் கேட்குமா, என்ன? ஈசல் பறப்பதுபோல் சாலையில் வாகனங்கள் பறந்து கொண்டிருந்தன. என்னே வேகம்! ஒருவேளை மிரட்டும் மழை விரட்டுகிறதோ என்னவோ? கீழ்தளத்தில் நின்றுகொண்டிருந்தாள், ரூபிணி. மழை நிற்குமா?.

எலிவேட்டரையும், எக்சிட் வழியையும் மாறி மாறிப் பார்த்துக்

கொண்டிருந்தாள். ‘அக்கீசியா கீழே இறங்கிவருவதற்குள் ‘தப்பித்து’ விடவேண்டும்’ ஆங்காங்கே உதிரி உதிரியாய் மக்கள் அப்பிக்கிடந்தார்கள். ஒருவரிடத்தில் கூட குடை இல்லை. எப்படியிருக்கும்? அது ஒரு சுமைதானே!

வஞ்சனையில்லாத மழை…. குழந்தை மாதிரி! மனசுக்கு மகிழ்ச்சியையும், கற்பனைக்குச் சிறகுகளையும், யாவற்றுக்கும் உயிரையும் அளிக்கும் இசை போன்றது மழை!

ஆட்டோ ஒன்று ‘டிர்ர் டிர்ர் …’ என்ற முனகலுடன் வளாகத்துக்குள் நுழைந்து ஆரோகணித்தது.

யாருக்காகவோ.. யார் கண்டது?

மழைத் துளியில் ஈரமாகிக்கொண்டே ஓடிய ஒருவர், டிரைவரிடம் ஏதோ வாக்கு வாதத்தில் போராட.. டிரைவர் சலித்துப்போய் “ஏம்மா… நீ வர்றியா?” என்றான், ரூபிணியைப் பார்த்து.

அவளை நிற்கச்சொல்லி கையசைத்தவாறே, கூப்பிட்டாள். அக்கீசியாதான்!

“ரூப்! நில்லு… ஐ ஆம் வெரி ஸாரி… இரு நானும் வர்றேன்” சரபுரவென்று படிக்கட்டுகளில் ஓடி வந்தாள்.

அவள் முறைத்துக்கொண்டே ஆட்டோவில் ஏறி அமர்ந்ததும் “போ.. போப்பா! சீக்கிரம்” என்று விரட்டினாள் வேண்டா வெறுப்பாக.

விசிறியடிக்கும் சாரல், அக்கீசியாவை வளாகத்துக்குள்ளேயே அடக்கி வைத்தது. மீண்டும் அவள் சோர்ந்துபோய், கண்ணாடிக்கதவை நீக்கி கும்பலுக்குள் கரைந்துபோனாள்.

***

அதே சமயம் —-

எதிர்பாராமல் இது நடந்த்து. ரேமண்ட் துணிக்கடையைத் தாண்டி, ஒரு திருப்பத்தில். ஆட்டோவும் டவுன் பஸ்ஸும் ஒரு சைடில் டமார்ரென்று உரசி மோதிக் கொள்ளும் பேரொலி. டிராஃபிக் ஸ்தம்பித்தது. மழைநீர்

வழுக்கலில் எதிர்பாராத ஆட்டோ விபத்து. என்னதான் ஆட்டோவை லாகவமாக டிரைவர் இடது பக்கமாய் வளைத்து ஒடித்தும் பயனில்லை. சரேலென ஆட்டோ ஈரம் படிந்த நடைபாதையோரம் சரிந்து கவிழ்ந்தது. நிலைகுலைந்துபோன ரூபிணி, மயங்கிய நிலையில் பின் சீட்டிலிருந்து தலை கவிழ்ந்து விழுந்தாள் நடந்தது எதுவுமே அறியாததுபோல், பஸ் தார்ச் சாலையில் தேங்கிய நீரைக் கத்திபோல் கிழித்துக்கொண்டு சிறிது தூரம் கடந்து சென்று, அடுத்த ஸ்டாப்பில் நின்றது. டிரைவரும் கண்டக்டரும் ஒரு சில பயணிகளும் சாரலில் நனைந்தவாறே ஒருக்களித்துக் கிடக்கும் ஆட்டோவை நோக்கி ஓடி வந்தார்கள். இரண்டு ஓட்டுநர்களுக்கும் வாய்ச் சண்டை புரண்டு புரண்டு வெடித்தது. ஆட்டோ டிரைவருக்கு நினனைவிழந்த ரூபிணியைப் பற்றிக் கவலை சிறிதும் இல்லாத மனிதாபிமானத்தை மழைநீர் கழுவிக்கொண்டிருந்தது. அந்த இடத்தில்தான் கடவுள் ஒருவனை ஆபத்பாந்தவனாக அனுப்பினார்.அவன்தான் சின்னு என்கிற சின்னசாமி!

10

——-

அடுத்த நாள் கல்லூரி வளாகம் வழக்கம்போல ‘பூக்க’த் தொடங்கியது.

எதுவும் எதற்காகவும், யாரும் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அதுதானே வாழ்க்கையின் தத்துவம்!

அக்கீசியா வகுப்பறையை நோக்கி நிர்விசாரமாய் நகர்ந்து கொண்டிருந்தாள். கடந்த இரவு முழுவதும் ஒரே தவிப்பு. ‘இந்த ரூபிணி என்ன இப்படி.. அவளுக்கு எதற்கு இவ்வளவு முன்கோபம்.. அவளை எதற்காக வரச்சொன்னேன். ஏன் சந்தித்தேன்?’ அந்த நினைவு அவளை ஆழமாக வருத்தியது.

‘எப்படியாவது சின்னசாமியைச் சந்தித்துப் பேச வேண்டும்…’

அப்போது —

அவளைக் கடந்து போன இரண்டு மாணவிகள் பேசிக்கொண்டு போனது இவள் செவிகளில் விழுந்த்து.

“பாவம்டி ரூபிணி…. ஆக்சிடெண்ட்லே மாட்டிட்டா”

அந்த வார்த்தைகள் அக்கீசியாவின் செவி மடல்களை ஆணிபோல் துளைக்கவும்–

“ஹலோ… ஒரு நிமிஷம் என்ன சொன்னீங்க… என்னாச்சு அவளுக்கு?”

“நேத்து அவ போன ஆட்டோ ஆக்சிடென்ட் ஆயிருச்சு… அவளுக்குத் தலைலே அடின்னு சொல்லிட்டாங்க”

“அய்யய்யோ! இப்ப எங்கிருக்காள்னு தெரியுமா?”

“நேஷனல் ஹாஸ்பிட்டல்னு சொன்னாங்க”

பதறிப்போன அக்கீசியா ஸ்கூட்டியில் நேஷனல் மருத்துவமனைக்கு விரைந்தாள். பின்பக்கமிருந்த பார்க்கிங்கில் வண்டியை உதறி விட்டு, ‘வரவேற்பு’ கௌன்டரை அணுகி விசாரித்தாள்.

“ரூபிணின்னு ஒரு பொண்ணு… நேத்து ஆக்சிடென்ட் ஆகி…”

அவள் சொல்லிமுடிப்பதற்குள் —

வானத்து நீலத்தில் மேல் சட்டையையும், அதே நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்த இளம்பெண் ஒருத்தி “இப்ப பாக்க முடியாது.. ஐசியூவிலே இருக்கு… எதுக்கும் ரூம் நம்பர் 220 க்குப் போங்க… அங்கே போய் விசாரிச்சுக்குங்க” என்றாள் ஒரு கேஸ் ரிக்கார்டைப் புரட்டியவாறே

மீண்டும் மின்தூக்கியை நோக்கிப் பரபரத்தாள், அக்கீசியா.

இரண்டாவது தளத்துக்கு ஏறியவள், அறையின் கதவருகே சென்று நளினமாகத் தட்டினாள். ஒரு நடுத்தர மாது கதவை நீக்கவும்… அவள் பிடரிக்குப் பின்னால் ஒரு சிறுமி செல்லப் பிராணிபோல் பதுங்கவும்…

“ரூபிணி?” என்றாள் தயக்கத்துடன்.

“வாம்மா.. உள்ள வா.. ரூபிணி என் பொண்ணுதான்.. இவ அடுத்தவ..”

கட்டிலின் நுனியில் அக்கீசியா ஒட்டிக்கொண்டாள்.

“ரூபிணிக்கு என்னாச்சுங்க?”

“நேத்து பிக் மாலுக்குப் போனா.. யாரோ பிரெண்ட்ஸுக்குப் பார்ட்டின்னு சொல்லிட்டு போனா.. அங்கிருந்து புறப்படற நேரத்திலே மழைன்னாங்க … ஒரு ஆட்டோ புடிச்சு வந்திருக்கா.. திடீர்னு பிரேக் ஃபெய்லியராயி எதிரே வந்த டவுன் பஸ்லே மோதி…”

விம்மினாள். விழிகளில் நீர் கோர்த்தது.

சில நிமிட அமைதிக்குப் பிறகு —

“டாக்டர் என்ன சொல்றார்?”

“இப்ப எதுவும் சொல்ல முடியாதாம்… அஞ்சு நாளாகணுமாம்.. தலைலே

அடிங்கறதுனாலே ஐ சியூ வுலே வச்சிருக்காங்க.. ஒரு ஸ்பெஷலிஸ்ட்டுக்குச் சொல்லியிருக்காங்க.. அவர் வந்து பார்த்துட்டுச் சொல்லுவார்னு சொன்னாங்க” என்றாள் ரூபிணியின் அம்மா தன் நனைந்த கண்களைத் துடைத்தவாறு.

அக்கீசியாவுக்கு சங்கடமாயிருந்தது. அவளால் சீரணிக்கவே முடியவில்லை.

“இங்க வா… உம் பேரென்ன?

“மாலினி”

“என்ன படிக்கிறே?”

“டென்த் அக்கா”

“ஏம்மா உனக்கு ரூபிணியத் தெரியுமா?” என்றாள் அவள் அம்மா.

“நாங்க ஒரே காலேஜ்லே படிக்கறோம்… அடிக்கடி லைப்ரரிக்கு வருவா.. அப்பப்ப பேசிட்டிருப்போம்”

“ரூபிணியோட அப்பா வரலீங்களா…?” என்றாள் அக்கீசியா.

சடுதியில் அந்த அம்மாள் முகம் இறுகியது. சுதாரித்துக்கொண்டு “அவங்க ஹைதராபாத் ட்ரெயினிங் போயிருக்காரு” என்றாள் விட்டேத்தியாய்.

“என்னவா இருக்காரு… எப்ப வருவாரு”

“இன்ஸ்பெக்டரா இருக்காரு… ஒரு மாசம்தான்… வந்துருவாரு”

“அப்படீங்களா… ஏதாச்சும் உதவி வேணும்னாச் சொல்லுங்க..”

“அதெல்லாம் ஒண்ணும்வேண்டாம்… வார்டுக்கு வந்தாப்போதும்னு இருக்கு.. நாளைக்கு கரூர்லருந்து என் சிஸ்டர் வந்துருவா.. பக்கத்து வீட்லேருந்து சாப்பாடு வந்துரும்… ஒண்ணும் பிரச்சனையில்லே… உம் பேரு என்னம்மா?”

“அக்கீசியா”

“மாலினி! பிளாஸ்கை எடுத்திட்டு போய் காஃபி வாங்கிட்டு வா” என்றாள், ரூபிணியின் அம்மா கல்பனா.

“வேண்டாங்க… நான்தான் எதாவுது வாங்கிட்டு வராம வெறுங்கையை வீசிட்டு வந்திருக்கேன்” என்று எழுந்த அக்கீசியா “கவலைப்படாதீங்க ம்மா.. ரூபிணி தேறி வந்திருவா… நான் க்ளாசுக்குப் போயிட்டு முடிஞ்சா ஈவ்னிங் வர்றேன்” என்றவாறு, மாலினியைப் பார்த்துக் கையசைத்தாள்.

கீழ்தளத்துக்கு வந்தவள், பார்வையாளருக்கென்று ஒதுக்கப்பட்ட

நாற்காலியில் அமர்ந்தாள்.

யோசிக்க… யோசிக்க….

‘ச்சே! ரூபிணிக்கு இப்படி நடந்திருக்கக் கூடாது.. அவளும் அவ்வளவு கோபத்துடன் அப்படி தன் ரூபத்தை மாற்றியிருக்கக் கூடாது.’

கோபித்துக் கொள்ளலாம். தவறில்லை. அவசரப்பட்டுக் கோபித்துக் கொள்வதை அவ்வளவு சுலபமாக்கிக்கொண்டுவிட்டாள் இந்தப் பேதைப்பெண்! ‘ஒண்ணுமே பேசவேயில்லேயே.. அதற்குள் இப்படி ஒரு துக்கமா… ச்சே’ அவள் மனதுக்குள் ஒரு சிந்தனை உதித்தது. ‘இங்கு ரிஷப்ஷனில் ரூபிணியின் தற்போதைய நிலை குறித்து யாரிடமாவது கேட்டால்…? ‘

அப்போது —

ரிஷப்ஷனிலிருந்த ஒருத்தி “தெரசா மேடம்! நான் கிளம்பறேன்…” என்று அனுமதி கேட்டுக் கொண்டிருந்ததை அக்கீசியா கவனித்தாள்.

“நாளைக்கு உனக்கு டூட்டி டாக்டர் கிட்ட வேலை…ஞாபகம் வச்சுக்க” என்றாள் தெரசா சீனியர் சிஸ்டர்.

பார்ப்பதற்கு கண்ணியமான தோற்றத்திலிருக்கும் தெரசா சிஸ்டரை அணுகினாள் அக்கீசியா .

“மேடம்! நான் ரூபிணியோட காலேஜ் மேட்.. ரொம்பப் பழக்கம்… இப்ப ஐசியூ விலே இருக்கா..”

“ஆமா… என்ன வேணும்?”

“இப்ப அவளோட கண்டிசன்?”

அவள் நெற்றியைச் சுருக்கியவாறு அக்கீசியாவைப் பார்த்தாள்.

“உம் பேரென்ன…?

“அக்கீசியா மேடம்”

கண் கண்ணாடியைப் புருவத்துக்கு உயர்த்தியவாறு சொன்னாள்:

“கொஞ்ச நாளைக்கு ஐசியூவிலே வச்சிருப்போம்… பார்க்கலாம்.. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. இன்னொரு டாக்டருக்குச் சொல்லியிருக்கறோம். அவர் வந்து பார்த்துச் சொன்ன பிறகுதான் எதுவும் முடிவு பண்ண முடியும்”

“தேங்க்ஸ் மேடம்… கர்ட்டஸிக்காகக் கேட்டேன்” என்றாள் அக்கீசியா.

ஹாஸ்பிடலை விட்டுக் கீழே இறங்கும்போது, பலவற்றையும் யோசித்துப் பார்த்தாள். அக்கீசியாவின் மனம் நொந்துபோனது.

இடிந்துபோய் ரிஷப்ஷனில் கிடக்கிற ஒரு நாற்காலிமீது அமர்ந்தாள்.

‘கடவுளே.. ரூபிணிக்கு எதுவும் ஆகக் கூடாது … பாவம், நான் இந்த நெலைமைக்கு ஒரு காரணமாயிட்டேன்!… குணமாகி வந்தரணும்’

அவள் மனம் குழம்பிய குட்டைபோல் தெளிவற்றிருந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு, அவள் கண்ணில் ஒரு ஷெல்ஃப் பட்டது. அதில்

சில புத்தகங்களும், பத்திரிகைகளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.

அப்படியே விரல்களால் புரட்டும்போது, அம்மாவின் நாவல்கள் சில

புரண்டன. சலிப்புடன் ஒதுக்கிவிட்டுத் திரும்பும்போது–யாரோ இரண்டு பெண்கள் அம்மாவின் நாவலைக் கையில் வைத்தவாறு, ஆழமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இவளால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

“இந்த நாவலில் வருகிற வசந்தி காரெக்டரைப் பத்தி என்ன நெனைக்கற” என்றாள்.

வெளிர் நிறத்தில் சுடிதாரும் டாப்ஸும் அணிந்த கலா.

“அவளை ரொம்பப் பிடிவாதக்காரியாக் காட்டியிருக்காங்க” என்றாள் பதிலுக்கு ஊதாப் பூ நிறத்தில் புடவை அணிந்திருந்த கமலி.

“இந்தக் காலத்துலே பொண்ணுக அப்படித்தான்.. தான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு சாதிப்பாங்க”

“அப்படியிருந்தாத்தானே காதல்லெ ஜெயிக்கமுடியும்!” என்றாள் பதிலுக்கு கமலி.

“அப்படியும் சொல்லிற முடியாது.. பெரும்பாலும் தோத்துத்தானே போகுது”

“அதர்சைடுன்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யும்… நாம் நல்லதையே எடுத்திட்டு பேசுவோம்”

“கலா! நானும் ஒருத்தனை சின்சியரா லவ் பண்ணினேன்… வீட்லே ஒத்துக்கலே

ஒத்துக்கமாட்டாங்கல்லே! பேரன்ட்ஸ்…பேரன்ட்ஸ்தான் “என்றாள் கமலி

“அப்புறம் என்னாச்சு?”

“காதலைக் கைவிட்டுட்டு.. அப்பா காட்டின மாப்பிளைக்குக் கழுத்தை நீட்டிட்டேன்.. இப்ப நல்லாத்தான் இருக்கேன்..ரெண்டு குழந்தைங்க” -திருப்திப்பட்டுக்கொண்டாள் கமலி.

சில வினாடிகள் அமைதிக்குப் பிறகு —

“நீ எங்கயாவது லாக் ஆன அனுபவம் உண்டா, கலா?” என்று கேட்டாள் கமலி.

“ஓ நோ நோ… நான் ரொம்ப நல்ல பொண்ணு! படிச்சு முடிச்சிட்டு வேலை கிடைக்கலே மாமா பையனைப் பிடிச்சுக் கட்டிவச்சுட்டாங்க … எனக்கு விருப்பம் இல்லதான்.. வேற வழியில்லை… பண்ணிட்டேன்!” என்றாள் கலா.

“சரி.. டாக்டர் வந்துட்டார் போல.. நமக்கு முன்னாலே ஒருத்தர் போகணும்.. அப்புறம் நாம்தான்.. இப்ப அந்த நாவலுக்குப் போவோம்” என்றாள் கமலி நாவலைப் புரட்டியவாறு.

“நான் அந்த வசந்தியோட அம்மாவா இருந்தா கண்டிப்பா அவ மேலே எகிறுவேன்!” என்று கோபப்பட்டாள் கமலி.

“அப்படியெல்லாம் நீ செய்ய முடியாது… பொட்டப் பசங்க ஏதாவுதொரு அஸ்திரத்தை வீசி நம்மளக் கவுத்துருவாங்க!”

“இந்தக் கதையிலியும் அப்படித்தான் நடந்தமாதிரி காட்டிட்டு… அவ விரும்பற பையனுக்கே கட்டி வச்சு… அவ நெனைச்சத சாதிச்சிட்டான்னுதானே நெனைக்கறே …”

“ஆமா கலா” “அதுதான் இல்லே… நான் முழுசையும் படிச்சிட்டேன்..ஆறு மாசம்தான் வாழ்ந்திருப்பாங்க” என்று பரிதாபப்பட்டாள் கமலி.

“அப்புறம்?” -கலா கேட்டாள் ஆர்வத்தோடு.

“கீரையே பறிச்சிட்டு தண்டைத் தூக்கி எறிற மாதிரி எறிஞ்சிட்டு அவன் போயே போயிடறான்”

“காதலிலே வெற்றி… வாழ்க்கையிலே தோல்வி!” என்றாள் நிதானமாக கலா.

“அப்படித்தான் அந்த நாவலே முடிச்சிருப்பாங்க” என்று பதிலிறுத்த கமலி அந்த நாவலை ஷெல்ஃபில் சொருகினாள்.

பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த அக்கீசியா நீண்ட பெருமூச்சு விட்டாள்.

‘ ..இது வெறும் கதை.. கற்பனை! வீணாக எதற்கு மனசைப்போட்டுக் குழப்பிக்கணும் ‘

“சரி. அது கிடக்கட்டும்.. இப்ப நம்ப கதைக்கு வருவோம்.. நீ இப்பச் செய்யப்போறது நல்லாவா இருக்கு” என்று கேட்டாள் கமலி.

அவள் இலேசாகத் தொண்டையை செருமினாள்.

“கன்சீவ் ஆகிறது எவ்வளவு பெரிய தவம்.. கடவுள் கொடுத்த ஆசீர்வாதம்.. அதைக் கலைக்கிறதுக்கு எந்தப்பொண்ணாவது விரும்புவாளா?” என்று விழிகளைத் துடைத்துக் கொண்டாள் கமலி.

இதைக் கேட்டதும் அப்படியே அதிர்ந்துபோனாள் அக்கீசியா.

‘பாவம்.. என்னாச்சு.. இப்படியொரு பிரச்சனையா.. சே!”

அக்கீசியாவின் உள்ளத்தில் கழிவிரக்கம்.

“ஏன் கமலி? உன் புருஷனுக்குப் பிடிக்கலியா?” என்று அவள் பிடரிமீது ஆதரவுக்கரங்களைப் போட்டாள் கலா.

கமலி கைக்குட்டையால் முகத்தை மூடிக்கொண்டு விம்மினாள்.

“ஆமா கலா. அவரு இப்ப வருவாரு.. அபார்ட் செய்யலாம்ன்னு டாக்டர் கிட்ட சொல்லப் போறாரு”

மீண்டும் அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

“கமலி யாரு… வாங்க” — செவிலிப்பெண் அழைக்க…

அக்கீசியா விக்கித்துப்போனவளாய் கடந்துபோன அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

– தொடரும்…

– 2023

சந்திரா மனோகரன் சந்திரா மனோகரன், M.A.,M.Th.,Dip.in JMC, ஈரோடு. கண்காணிப்பாளர் (வேளாண்மை பொறியியல் துறை) பணி நிறைவு. இதுவரை: 45 நூல்கள் (சிறுகதை/கவிதை/கட்டுரை/புதினம்/மொழிபெயர்ப்பு உட்பட) பல்வேறு சிற்றிதழ்களில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தது - சிகரம் இதழ் உட்பட. தற்போது அருளமுது இதழ் ஆசிரியர். அருளமுது பதிப்பக வெளியீட்டாளர். குறிப்பிடத்தக்க சில விருதுகள்: தமிழ் நாடு அரசு - நற்றமிழ் பாவலர் விருது - 'அசையும் இருள் 'கவிதை நூலுக்கு. பாரத ஸ்டேட் வங்கி…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *