சித்திரக் குள்ளன்




(1941ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
I

முன்னொரு காலத்தில் ஒரு நல்ல தமிழ்ப் புலவர் இருந்தார். அவருக்கு வனதேவதைகள் இருக்கும் டம் எல்லாம் நன்றாய்த் தெரியும். ஒருநாள் அவர் காட்டின் வழியாகப் போய்க்கொண்டு இருக்கும் போது இரவு வந்துவிட்டது. பக்கத்தில் ஒரு சிறிய குடிசையைக் கண்டு அதன் கதவைத் தட்டினார். அவர் முகம் பசியினால் வாடி இருந்தது. அந்த வீட்டிலிருந்த குடியானவனும் அவன் மனைவியும் அவரைப் பார்த்து இரக்கப்பட்டார்கள். உடனே அவருக்குச் சாப்பாடு போட்டு அங்கே தங்குவதற்கு இடமும் கொடுத்தார்கள்.
அந்தக் குடியானவனுக்கு ஒரு குறைவும் இல்லை. அப்படி இருந்தும் அவனும், அவன் மனைவியும் மிகவும் வாட்டமாக இருந்தனர்.
“நீங்கள் ஏன் வருத்தமாய் இருக்கிறீர்கள்? உங்களுக்கு நல்ல தோட்டமும் அழகிய வீடும் இருக் கின்றனவே! வேறு என்ன வேண்டும்?” என்று அவர்களிடம் அந்தப் புலவர் கேட்டார்.
“எங்களுக்கு நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லை. அதுதான் பெரிய கவலையாக இருக்கிறது, என்று குடியானவன் மனைவி சொன்னாள். “எங்களுக்கு ஒருவிரல் அளவு சிறிய பையன் இருந்தாலும் போதும். அவனை நாங்கள் அன்போடு வளர்த்து வருவோம்,” என்று அவள் சொன்னாள்.
“ஒரு விரல் உயரத்தில் பிள்ளை கிடைத்தால் அது வேடிக்கையாகத்தான் இருக்கும். கடவுள் உங் களுக்கு அப்படியே அருள் புரிவார்,” என்று புலவர் சொன்னார்.
மறுநாள் காலையில் புலவர் வனதேவதையின் அரண்மனைக்குப் போய்க் குடியானவனுடைய மனைவியின் ஆவலைத் தெரிவித்தார். வனதேவதை, ‘அப்படியே ஆகட்டும். அவளுக்குப் பெருவிரல் அளவு உயரத்தில் ஒரு மகன் பிறப்பான்,” என்று வரம் கொடுத்தது.
II
வனதேவதை கொடுத்த வரத்தின்படியே குடி யானவன் மனைவிக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பெருவிரலின் அளவுதான் இருந் தது. இந்த வியப்பைக் காண ஊரிலுள்ளவர்களெல் லாரும் கூட்டம் கூட்டமாய் வந்தார்கள். வன தேவதையும் குழந்தையைப் பார்க்க வந்தது. அது பையனை எடுத்து முத்தமிட்டு அவனுக்குச் ‘சித்திரக் குள்ளன்’ என்னும் பெயர் சூட்டியது.
சிலந்திக் கூட்டிலிருந்து பட்டு எடுத்துவந்து வனதேவதை அவனுக்குச் சட்டை தைத்துக் கொடுத்தது. இலையினாலும் பூவினாலும் அவனுக்குத் தொப்பி செய்து கொடுத்தது. எலித் தோலினால் செருப்புத் தைத்துக் கொடுத்தது. இன்னும் அவ னுக்கு வேண்டிய பொருள்களெல்லாம் வனதேவதை கொண்டுவந்து கொடுத்தது.
குள்ளன் குள்ளனாகவே இருந்தான். பெருவிர லின் உயரத்திற்குமேல் அவன் வளரவில்லை. ஆனால் அவன் பெரிய குறும்புக்காரனாக இருந்தான். ஒரு நாள் அவனுடைய தாய் பாயசம் செய்தாள். குள் ளன் பாயசம் வைத்திருந்த ஏனத்தை எட்டிப் பார்த்தான். கால் நழுவி அதற்குள் விழுந்துவிட்டான். அவன் அப்படியே பாயாசத்திற்குள் முழுகிப் போய் விட்டான்.
அவன் அதன் உள்ளே விழுந்தது தாய்க்குத் தெரியாது. குள்ளன் உள்ளேயே காலை உதைத்துக் கொண்டுகிடந்தான். பாயசம் தானாகக் குதிப்பதைக் கண்டு தாய் அஞ்சினாள். அவளுக்கு என்ன செய்வ தென்று தெரியவில்லை. அதில் பேயோ பிசாசோ இருக்கவேண்டும் என்று நினைத்தாள். அதைக் கீழே கொட்டிவிடலாம் என்று தெருவிற்கு எடுத்துக் கொண்டு போனாள். வாசற்படியில் ஒரு பிச்சைக் காரன் நின்றான்.
“இதை வேண்டுமானால் நீ சாப்பிடு,” என்று அதைப் பிச்சைக்காரனிடம் கொடுத்தாள். பிச்சைக் காரன் அவளுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு அதை வாங்கிக்கொண்டான். அவன் அதைத் தன் கூடை யில் வைத்துக்கொண்டு புறப்பட்டான். அடுத்த தெருவிற்குப் போனவுடன் குள்ளன் தன் த லையை மேலே தூக்கிக்கொண்டு கீச்சென்று கத்தினான். “என்னை வெளியே எடுத்து விடுகிறாயா? இல்லையா?” என்று கேட்டான்.
பிச்சைக்காரன் நடுநடுங்கிப் போய்விட்டான். அவன் பாயசத்தைக் கூடையோடு கீழே போட்டு விட்டுத் திரும்பிப் பாராமல் ஓட்டம் பிடித்தான். கூடைக்குள்ளிருந்த குள்ளன் மெள்ளமெள்ள வெளி யில் வந்து, வீட்டை நோக்கி நடந்தான். அவனுடைய தாய் அவனைக் குளிக்கச் செய்து தூங்கவைத்தாள்.
III
குள்ளன் வீட்டில் ஒரு பசு இருந்தது. ஒருநாள் குள்ளன் வைக்கோல் போரில் விளையாடிக்கொண்டு இருந்தான். மாடு அவனை வைக்கோலுடன் சேர்த்து வாயில் போட்டுக்கொண்டது. குள்ளன் உள்ளேயே துள்ளித் துள்ளிக் குதித்தான். மாடு வாயைத் திறந் தது. குள்ளன் கீழே பாய்ந்தான். அதற்குள் அவன் தாய் ஓடிவந்து அவனை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போனாள். நல்ல வேளையாக அவனுக்கு அடிபடவில்லை.
ஒருநாள் குள்ளன் அவன் தந்தையுடன் தோட் டத்திற்குப் போனான். “அப்பா! நான் குதிரையை வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு போகட்டுமா?” என்று கேட்டான். “நீ குதிரைமேல் எப்படிச் சவாரி செய்வாய்?” என்று அவன் தந்தை கேட்க, “நான் அதன் காதிற்குள் உட்கார்ந்துகொண்டு அதற்குச் சொல்லிக்கொடுப்பேன்,” என்று பையன் சொன்னான். தந்தை ஒத்துக்கொண்டபின், அவன் குதிரையின் கா துக்குள் உட்கார்ந்துகொண்டு வீடுநோக்கி வந்தான்.
குதிரை வீட்டிற்கு வந்து சேர்ந்தது. “அம்மா, அம்மா!” என்று குள்ளன் கூப்பிட்டான். தாய் வெளியில் வந்தாள். குள்ளன் இருக்கும் இடம் அவ ளுக்குத் தெரியவில்லை. “என் கண்ணே! நீ எங்கு ஒளிந்துகொண்டு இருக்கிறாய்?” என்று அவள் கேட்டாள். “நான் குதிரையின் காதுக்குள் இருக் கிறேன்; என்னைக் கீழே எடுத்து விடு,” என்று குள் என் சொன்னான். தாய் அவனை எடுத்து முத்தமிட் டாள். அவனை வீட்டிற்குக் கொண்டுபோய்ப் பால் ஊட்டினாள்.
குள்ளன் ஒருநாள் விளையாடிக்கொண்டே போய்ச் சாக்கடையில் விழுந்துவிட்டான். அவனைக் கோழிக் குஞ்சு என்று நினைத்து ஒரு பருந்து தூக்கிக்கொண்டு போய்விட்டது. அது கடலுக்குமேல் பறந்து போயிற்று. குள்ளன் துள்ளியதால் பருந்து அவனைக் கடலில் போட்டுவிட்டது. அவன் தண்ணீருக்குள் போனதும் அங்கிருந்த ஒரு பெரிய மீன் அவனை அப்படியே விழுங்கிவிட்டது.
அந்த மீன் செம்படவர்களின் வலையில் அகப் பட்டது. செம்படவர்கள் அந்த மீனை அவ்வூர் அரச னுக்குக் கொடுத்துவிட்டார்கள். சமையற்காரன் மீனை அரிந்தவுடன் குள்ளன் அதன் வயிற்றி லிருந்து வெளியில் குதித்தான். அவனை அரசன் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார்கள். குள்ளன் தன் கதையை அரசனிடம் சொன்னான்.
IV
அரசன் குள்ளனைத் தன் அரண்மனையிலேயே வைத்துக்கொண்டான். அரசன் எங்கே போனாலும் குள்ளனைத் தன் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு போவது வழக்கம். அரசன் குள்ளனுக் குப் புதிய சட்டைகள் தைத்துக் கொடுத்தான். அவன் சவாரி செய்வதற்கு ஓர் அழகான சீமை எலி வாங்கிக்கொடுத்தான். அவனுக்கு ஒருசிறிய பட்டாக் கத்தியும் செய்து கொடுத்தான். குள்ளன் எலியின் மேல் சவாரி செய்வதையும், அவன் பட்டாக் கத் தியை வீசுவதையும் பார்த்து அரசனும் அரசியும் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஒரு நாள் குள்ளனுடைய எலிக்குதிரையை ஒரு பூனை பிடித்துக்கொண்டது. குள்ளன் தன் பட்டாக்கத்தியை உருவிக்கொண்டு அந்தப் பூனையுடன் சண்டையிட்டான். அப்படியிருந்தும் பூனை எலியைக் கொன்றுவிட்டது. அது குள்ளனையும் கடித்து நகத்தால் கீறிவிட்டது. அரசன் ஓடிவந்து குள்ளனைப் பூனையினிடமிருந்து காப்பாற்றினான்.
குள்ளன் சில நாட்கள் மட்டும் படுக்கையிலிருந் தான். அவன் நலம் அடைந்ததும் முன்போலவே அரசனுடைய உயிர்த் தோழனாக ஆய்விட்டான். அரசன் குள்ளனுக்கு அமைச்சர் வேலை கொடுத் தான். குள்ளனுடைய நிலையை அறிந்து அவன் தாயும் தந்தையும் அடைந்த இன்பத்துக்கு அளவே கிடையாது.
‘வேடிக்கைக் குள்ளன் கதைதனையே
விருப்புடன் கற்றே வியந்தனமே!”
அருஞ் சொற்கள்
சாக்கடை
செம்படவர்
பட்டாக்கத்தி
வனதேவதை
வாசற்படி
வாட்டமாக
– கழகக் கதைச் செல்வம், முதற் பதிப்பு: டிசம்பர் 1941, திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட், திருநெல்வேலி.