சாவை வேண்டும் சித்தன்
(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எனக்கு இப்ப இன்னா பண்றதுனு பிரியிலியே, இப்டி ஒரு நெலம வரும்னு யாருயா பாத்தா? உச்சியில இடி வந்து உயிந்தா போல இதே, இனிமே நான் இன்னா பண்ணுவேன்! ஆங், ராம்ப குளுவா சொல்லி பூட்டிங்களே வேற வேலை செஞ்சி பொளச்சிகோனு, தோட அங்க நிக்குது பாருங்க ஒரு புளியமரம் எம்மாம் பெர்சா, அது நான் பொறக்கும் போது, தோ இம்மாதூண்டுதான் இருந்திச்சாம். இப்பப் பாருங்க எம்மாம் பெர்சா வளந்துகீது, இப்ப அத புடிங்கி வேற எடத்துல நட்டு வெச்ச இதே மாரி ஒயிங்கா நெல்லா வளருமுனு நிச்சயமா சொல்ல மிடியுமா? அது மாரிதான் நா வேற வேலைக்கி போறதும், ஆமா, இந்த வேல எவன் எனுக்கு செஞ்சதா தெரிஞ்சா வேற வேலய தருவான் …நாங்க இன்னா தொயிலு செஞ்சா இன்னா எங்களுக்கு அர வவுத்து கஞ்சிதானே எப்பவும்”.
“ஆமாஞ்சாமி, ஒலகத்துக்கு இனிமே நெல்ல காலமா? இல்ல கெட்ட காலமா? எனுக்கு ஒண்ணியும் பிரியிலியே. இல்ல. இல்ல. இது கெட்ட காலம்தான், நீங்கதான் இப்டி ஒரு குண்டத் தூக்கிப் போட்டுடிங்களே சாமி, நீங்க சொல்றத என்னால நம்பவும் மிடியில நம்பாம்ம இருக்கவும் மிடியில். ஐயா, நா நாலு எயித்து படிக்காத தற்குறிதான் ஆனா எனுக்கும் கொஞ்சம் அறிவு கீதுங்க. எங்க பெரிய நைனா எனுக்கு மண்ணுல எயிதி எயிதி காட்டிக் கொஞ்சம் எண்ணும் எயித்தும், பாடம் சொல்லி குடுத்து கீறாங்க அவுரு எப்டி யாருகிட்ட கத்துக்கினாரோ தெர்ல.
அவருக்குக் தெரிஞ்ச வரிக்கும் சொல்லிக் குடுத்தாரு. நானும் அதை மண்ணுல எயிதி பயகிக்குவேன். வெரலு தேய்ஞ்சி ஜீவு ஜீவுன்னு எரியும் அப்பக்கூட உடமாட்டேன். அப்பாவிக்கா நெறிய பாட்டுங்க எல்லாம் சொல்லி குடுத்துகிறாறு பாட்டுனா சும்மா “ஜீங்கலிக்கிடி” பாட்டு இல்லிங்க. சித்தர் பாட்டு, ஞானவெட்டியான், பட்டினத்தார், பத்ரகிரி, வாதவூரானோட திருவாசகம், திருமொறை, வள்ளலாரு சாமி பாட்டு, மஸ்தான் சாயிபு பாட்டுனு மணி மணியா எவ்ளோ பாட்டுங்க… ஆங்..
“ஜீகு ஜீக்க ஜிகுஜீக்க ஜீக்காங் – ஜீக்கு
ஜீகு ஜீக்க ஜீகுஜீக்க ஜீக்காங்
நிர்மேற் குமிழயிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறிமாயம்.
பார்மீதில் மெத்தவும் நேயம் – சற்றும்
பற்ற திருந்திடப் பண்ணுமுபாயம்
பாபஞ்செய் யாதிரு மனமே – நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்”.
ஜீகு ஜீக்க ஜீகுஜீக்க… இந்தப் பாட்ட கேட்டுகீறிங்களா? கடுவெளிச் சித்தர் பாட்டு – இந்தப் பாட்டுக்குப் பொருளு பிரியும், ஆனா பிரிஞ்சும் பிரியாதமாரி சில பாட்டுங்க கீது, பொருளு பிரியாகாட்டியும் அதெல்லாம் கூட நமக்கு மனப்பாடம். இன்னொரு பாட்ட கேளுங்க.
“உச்சிக்கு கீழடியோ ஊசி முனை வாசலுக்குள்
மச்சுக்கு மேலேறி வானுதிரந் தானேடுத்துக்
கச்சை வடம்புரியக் காயலூர் பாதையிலே
வச்சு மறந்தல்லோ என் கண்ணம்மா
வகைமோச மானேண்டி”.
இது எப்டி கீது, பொருளு பிரிஞ்சிதா, அழுகணி சித்தர் பாட்டு… அய்யோ… அய்யோ… நீங்க இன்னா விசயம் சொல்லிகிறிங்க, நான் பாட்டுக்குச் சும்மா குஜாலா பாட்டு பாடிகீனுகிறேன். சாமி நீங்க சொன்ன விசயம் மெய்யா, மெய்யா? சும்மா டமாஸ்க்குதானே சொன்னிங்க இன்னாங்கசாமி நான் ரொம்ப நெல்லா பாடறேனா… இன்னொரு பாட்டு பாடணுமா? ஆமாங்கசாமி… பாட்டுனு சொன்னப்றம்தான் எனுக்கு இன்னொரு விசயம் ஞாபகம் வாது.. ஒரே ஒரு நிமிட் ஒரு பீடிய வலிச்சுட்டு வந்து சொல்றேன்.
“ஆங்… எங்க உட்டேன். பாட்டு. ஆமா ஐயா. நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க, ரொம்ப வருசம் மின்னாடி நடந்தது இது. என்னை தேடிகினு ஒரு காலேஜீ வாத்தியாரு, அதாங்க புரபெஸ்சாருனு ஏதோ சொல்லுவிங்களே அந்த வேல. நமக்கு தெரிஞ்ச சாவு சடங்கு செய்யிற ஒர்த்தன்தான் அவுர என்னான்ட அனுப்பி வெச்சான். அவன இந்த வாதியாரு எங்கியோ சாவு வூட்டுல பாத்துகீறாறு. அவன்கிட்ட இவுரு சாவு சடங்கு செய்யிறப்ப பாடுற பாட்ட பத்தியெல்லாம் அவனுக்கு வெசாரிச்சு கீறாறு. அவனும் தெரிஞ்சதயெல்லாம் சொல்லிக்கிட்டு நமக்கு தெரிஞ்ச வெட்டியான் ஓர்தன் கீறான், எங்களமாரியே பாட்டு கீட்டுயெல்லாம் ஷோக்கா பாடுவானு நாம்பாண்ட அனுப்பி வெச்சான் நான் அவுருகிட்ட நெறிய பாட்டெல்லாம் பாடி காமிச்சென். ம். ஆ…
“இரவா வரமனித்தென்னைமேல் ஏற்றிய
அறவாழியாதனி அருட்பெருஞ் ஜோதி
நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட் பெருஞ் ஜோதி”…
அப்டினு நான் பாடின இராமலிங்கசாமி பாட்ட கேட்டு அவுரு அளுதே பூட்டாரு. இன்னும் யாரு பாடினாங்கனு தெரியாத பாட்டெல்லாம்கூட பாடி காமிச்சேன். நான் பாடுதினல நெறிய பாட்டெல்லாம் பொஸ்தகத்துல எல்லாம் கூட இல்லியாம். அவுரு நான் பாடின அந்தப் பாட்டு எல்லாத்தையும் “டேப்பு” பொட்டியில புடிச்சிகிட்டாரு. ஏதோ எசைய பத்தியும் முயிய பத்தியும் ஆராய்ச்சியாம் அவுருதான் சொன்னாரு… ம்.. இன்னாட இது பாடுறப்ப சுத்தமா தப்புத் தவறு இல்லாம சத்தமா பாடுகிறான். ஆனா பேச்சு இப்டி கீது.. இசைய எசைங்கறான், மொழிய முயிங்கறிான் அப்டினு ரோசனை அதான் யோசனை பண்ணிகிறீங்களா? திக்குவாய்காரங்க சில பேருக்குப் பேசும்போது திக்கும், ஆனா பாடறப்ப திக்காது… அது மாரிதான் இதுவும். எல்லாம் பேச்சு வயக்குதான் பேசி பேசி இப்டியே பயகி போச்சு. இன்னாங்கையா நான் சொல்றது சரிதானே… ம்…ஆ…
செத்ததோர் மாடெடுப்போம் – சிவசிவ
சுடுகாடனுதினங் காத்திருப்போம்
நித்தமுங்கடவுள்தனை…ம்..ம்…
அ… திரும்பவும் பாட ஆரம்பிச்சிடேனா… ம் எங்கவுட்டேன். ஆங்… எம் பாட்டயெல்லாம் ‘திருப்பி பாடுற’ பொட்டியில புடிச்சிட்டாரு. அப்பாலிக்கா எங் தொயிலு பத்தியெல்லாம் வெசாரிச்சாரு. எங்கஷ்ட நெலமய பாத்து எனுக்கு ஒதவுமேனு கொஞ்சம் பணத்த, ரூவா நோட்ட எங்கயில கொடுத்தாரு. நானு.. “ஐயா, சாவு உயிந்தாதான் எல்லோருக்கும் எங்க நெனப்பே வரும். எல்லோரும் எங்கள பாத்தாகூட தீட்டுனு நெனக்கிறாங்க. என்னையும் மனுசனா மதிச்சி நீங்க என்னிய தேடி வந்து எங்கிட்ட பேசுனதே பெரிய விசயம், ஏதோ எனுக்கு தெரிஞ்சத பாடி காட்டினேன். எனுக்கு எதுக்குய்யா ரூவாயெல்லாம், இதெல்லாம் வாணாமய்யா” அப்டினேன். ஆனா அவுரு மனுசனுங்ககுள்ள இன்னாப்பா ஏற்ற தாய்வு, உங்க வேல மட்டும் இல்லினா ஊரு, ஒலகத்தோட நெலம இன்னா ஆவும். இந்தா இத வெச்சுகோ… சும்மா வெச்சிகோப்பா… உன்னோட அண்ணாத்த குடுத்தா வாங்கிக்க மாட்டியா அப்டினாரு.. என் பொண்சாதியும் வாங்கிக்கோ- வாங்கிக்கோனு சைகை காட்டுறா, சரினு நானும் தயக்கத்தோட வாங்கிகினேன்.
“அப்போ எம் மவன் ஒரே மவனுங்க. வெளயாடிப்புட்டு மேலெல்லாம் புயிதிய, சாம்பல பூசிகிட்டு சுடல மாடன் சாமிமாரி வந்து ஜீங்குனு நிக்கிறான். “டோய் வாடா டூம் ராஜா வந்து ஐயாவுக்கு வணக்கம் போடு, அப்டினேன். வாத்தியாரு ஐயாவும் அவன் வணக்கத்த வாங்கிகினு, இவன்தான் உன்மவனா அப்டினுட்டு அவன் பேரு, வயசு எல்லாம் வெசாரிச்சா… அப்பாலிக்கா அவன் படிக்காம சும்மாதான் கீறானு தெரிஞ்சிகினு ரொம்ப மனசு கஷ்டபட்டு இவன நான் நெல்ல இஸ்கூல்லில சேத்து படிக்க வெக்கிறேன். செலவு கிலவு எல்லாம் நான் பாத்துகிறேன். இவன நீ இஸ்கூல்லுக்கு மட்டும் அனுப்பி வெச்சா போதும், அப்டினாரு. அப்பாலிக்கா எதோ ரோசனை பண்ணி, ஞானசித்தா -இதாங்க எம்பேரு, ஞானசித்தா, உம் மவன ஆஸ்டலுகீற இஸ்கூல்லா பாத்து சேத்து உடறேன். அங்கியே தங்கி படிக்கனும் சாப்பாடு கிப்பாடு எல்லாம் அங்கியேதான். நடுநடுவுல நீயும்போய் பாக்கலாம். லீவு உட்டா இஸ்டமிருந்தா வூட்டுக்கும் கூட்டிகினு வர்லாம். இங்கியே இருந்தா வெளயாட்டுலதான் புத்தி போவும், இன்னா சொல்றே, அப்டினாரு. அதுக்கு நான், நா இன்னா சாமி சொல்றது எம்மவனும் நாலு பேரு மாரி படிச்சி பெரிய்ய ஆளா வரனுமுனுதான் ஆச, நீங்களும் ஒதவி பண்றேனு சொல்றீங்க, ரொம்பவும் தெல்லது சாமி, அப்டினு நானும் எம்பொஞ்சாதியும் சம்மதம் சொன்னோம்.”
“எனுக்கு இப்டி நெனப்பு ஓடுது, எம்மவன் படிச்சி பெரிய்ய ஆளா அதிகாரியா வரான். இங்கிலிபிகல சும்மா தஸ்க புஸ்சுனு பேஸ்சறான். நெறிய சம்பாதிக்கிறான். நானு வசதியா கிறேன். எம்பொஞ்சாதியும் புள்ளய பாத்து பாத்து பூரிச்சு போறா. எம்மவன் என்னிய பாத்து சொல்றான் “தாடி- இல்ல. டாடியா. ஏதோ ஒண்ணு ட்டாடி ம்மம்மி. நீங்க இனிமே வேல கீல எல்லாம் செய்ய வாணாம். “வூட்டுலேயே ஒக்காந்துகினு சும்மா காலு மேல கால் போட்டுகினு தெனம் விருந்து சோறு துன்னுங்கோ, அப்டிங்கிறான், ஆனா எனுக்குதான் சும்மா குந்திகினு இருக்க மிடியில், ஓய்கிற ஒடம்புயில்ல, எனுக்கு கீள நாலு ஆள வெச்சி வேல வாங்குறேன். இன்னா வேல இதே சுடுகாட்டு வேலதான், இன்னாங்கையா சிரிக்கிறீங்க, செய்யிற தொயிலே தெய்வம் இல்லிங்களா”,
“இன்னா ஞானசித்தா, ஒரே ரோசணையா கீறே, செய்ய வேண்டிய ஏற்பாடுயெல்லாம் செஞ்சிட்டு ஒரு வாரம் கயிச்சி வந்து ஒம்மவன கூட்டிகினு போய் இஸ்கூல்லில் சேத்து உடறேன். நீயும் உம்பொஞ்சாதிய கூட்டிகினு எங்கூட வா, இன்னா வரட்டுமா, அப்டினுட்டு அவுரு பெறபட்டு போனாரு. நாங்களும் ரொம்ப சந்தோசத்தோட வயி அனுப்பி வெச்சோம்.

“அப்பாலிக்கா ஒரு வாரம் கயிச்சி அவுரும் திரும்பி வந்தாரு, ஆனா உசுரோடயில்ல, தலயெயித்த பாத்திங்களா, எம்மவன் தலயெயித்தயும் எங்கதலயெயித்தயும் சேத்துதான் சொல்றேன். ஏதோ ரோசணையா ரோட்டுல நடந்து போய்கினு இருந்தவரு மேல ஒரு லாரிகாரன் ராங்சைடுல வந்து டபார்னு மோதி அடிச்சி போட்டுட்டுப் போய்ட்டானாம், அப்பாலிக்கா இன்னா ஆஸ்பித்ரியில சேத்துகீறாங்க. அவுரு ஆஸ்பித்திரியில உசுரு போறப்பகூட எனாவோ மொணவிகிட்டே இருந்தாராம். அவுரு சொந்தக்காரங்கயெல்லாம் இன்னா சொல்றாரு இன்னா சொல்றாருனு, உத்து உத்து கேட்டு பாத்துகீறாங்க. ஆனா ஒண்ணியும் பிரியிலியாம். ஆனா எனுக்கு தெரியுங்க அவுரு அப்பவும் சித்தர்பாட்டு, அப்பர் பாட்டுனு ஏதாவது ஒரு பாட்டதான் பாடிகினு இருந்து இருப்பாரு. அவ்ளோ உசுருங்க இந்த பாட்டுங்க மேல, ஆங்… ஆ..
“தானதான தானதான தானனான தான்ன
மண்கலம் கவிழ்ந்த போது வைத்து வைத்து அடுக்குவார்
வெங்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நம் கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
என் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே”.
ம்… திரும்பவும் பாட ஆரமிச்சிடேனா, செரி விசயத்துக்கு வரேன்.ம். அப்பாலிக்கா இன்னா அவுர குயிவெட்டி பொதச்சது நான்தான் அப்போ அவுருக்கு பிடிச்ச பாட்டெல்லாம் பாடினேன். ஆனா அத கேட்கதான் அவுரு உசுரோடயில்லயே… பெயரினை நீக்கி பொணம் என்று பெயரிட்டு சரி உடுங்கோ நேத்து இருந்தவன் இன்னிக்கி இல்ல, இதானே இந்த லகத்துக்கே பெரும் ஆங். இன்னா சொல்ல வந்தேன். ஆங் அப்பாலிக்கா எம்மவன் எங்க படிக்கறது எப்ப பெரிய ஆளா வர்ரது அவனும் இப்ப எங்ககூடமா ஒத்தாசையா கீறான். ம். இப்போ எனுக்கும் வயசாயிடுச்சி. ம். நீங்க இன்னாடானா டமால்னு இப்டி ஒரு பெரியய ருண்ட தூக்கிப் போடுறீங்க சாமி நெசமாலும் சொல்றீங்களா இல்லாங்காட்டியும் சும்மா டமாஸ்சுக்கா, சொல்லுங்க சாமி, ஏன் சாமி பேச மாட்டிறிங்க, சும்மாதானே சொல்றீங்க. ஆங் நான்தான் பேசணுமா. நான் படறதையும் போறதையும் கேட்டுகினே இருக்கணும் போல கீதா… செரிங்க சாமி சொல்றேன் கேளுங்க, எவ்ளோ அனுபவங்க என் வாய்கையில். எத சொல்றது எத உடறது.. என் தொயிலு அப்பேர்பட்ட தொயிலுங்க.
“சாமி, எங்க தொயிலு ஆனானபட்ட ராஜாவே செஞ்ச தொயிலுங்க, உங்களுக்கு தெரியாத விசயமா சொல்ல போறேன், அதாங்க அரிச்சந்திரன் ராஜா அவுரு மாரிதான்யா நானும் மனசுல உண்மை நேர்மையோட கீறேனுங்க. இன்னாயா கத உடுறே, காட்டுக்கு பொணம் வந்தா போதுமே எரிக்கறதுக்கோ பொதக்கறதுக்கோ எதுவாயிருந்தாலும் துட்டு துட்டுனு பயத்தை கேட்டு பிச்சி புடுங்குவிங்களே அப்டினு கேட்கறீங்களா.. சிலரு அப்டிதான் ஆனா நா அந்தமாரி இல்லங்க. ஆமா நீங்களும் அப்டியே வாரி வாரிதான் குடுத்துடுவிங்க. சர்தான் நான் ஒண்ண கேட்குறேன் ஊரு ஒலகத்துல எல்லாம் ரூல்படிதான் நடக்குதா, உங்க நெஞ்சில கையவெச்சி சொல்லுங்க, அவனவ கோடி கோடிய சுருட்றான் அதெல்லாம் உங்க கண்ணுக்குத் தெரியாது, ஊரு ஒலகத்துல தெனம் பத்து இருவது சாவா வுயிவுது நாங்க வவுறு நெறைஞ்சி தின்னுட்டு வசதியா வாய்றதுக்கு. இன்னாடா இவன் இப்டியெல்லாம் பேசரானேனு பாக்கிறீங்களா, இன்னா சாமி பண்றது ஊர்ல சாவு உயிந்தாதான் உயிம். எங்க வவுத்துல சோறு இன்னாங்ககையா மூஞ்சி மாறுது நேர்மையா ஓய்ச்சி செய்யிற எந்த தொயிலுகேவலம் இல்லிங்க.”
“இது இன்னா லேசுபட்ட தொயிலா, இதுலேயும் நெல்லது கெட்டது எல்லாம் கீது. ஆமாங்க நீங்க நெனக்கிறமாரி இது சாதாரண வேலயில்லீங்க சும்மா குப்ப கொளுத்துறமாரியா பொணம் எரிக்கறதும், பொதக்கறதும் ம்…ம்அ. ஆங்..பூ உதிரும்.. பிஞ்சி உதிரும்.. காய் உதிரும்… கனி உதிரும்.. எங்க சிவனாரு ஆட்டத்துல மொதல்ல மனசு தெடம் வேணுங்க இந்த தொயிலு செய்ய, கொயந்த பொணம், கௌவன் பொணம், பத்தினி பொணம், தெவ்டியா பொணம், மண்ணுல செத்தது, தண்ணியில செத்தது, ராஜா பொணம், பிச்சக்காரன் பொணம் இப்டி எதுவாயிருந்தாலும் காடு தேடி வந்த பொணத்த மருவாதையா அடக்கம் செய்யணு ஒடம்புக்குள்ள உசுர் கீறவரிக்கும்தான் மனுசனுக்குள்ள ஏற்றதாய்வுயெல்லாம், உசுரு போயிட்டு இங்க வந்த பொறவு ஆண்டியும் அரசனும் இங்க ஒண்ணுதான்”.
எங்க சிவனாரு ஆட்டத்துல மொதல்ல மளசு தெடம் வேணுங்க இந்த தொயிலு செய்ய, கொயந்த பொணம். கெளவன் பொணம், பத்தினி பொணம், தெவ்டியா பொணம், மண்ணுல செத்தது. தண்ணியில செத்தது. ராஜா பொணம், பிச்சக்காரன் பொணம் இப்டி எதுவாயிருந்தாலும் காடு தேடி வந்த பொணத்த மருவாதையா அடக்கம் செய்யணும். ஒடம்புக்குள்ள உசுர் கீறவரிக்கும்தான் மனுசனுக்குள்ள ஏற்றதாய்வுயெல்லாம், உசுரு போயிட்டு இங்க வந்த பொறவு ஆண்டியும் அரசனும் இங்க ஒண்ணுதான்.
“பொணம் எரிக்கறது இன்னா சாதாரண வேலயா, சொல்றேன் கேளுங்க சில பொணங்கள் எரிக்கிறப்ப அதுல கொயிப்பே இருக்காது அத எரிக்கறதுக்கு நெறிய வெறட்டி தேவப்படும், பொணம் கொயிப்பு ஒடம்பாயிருந்தா கொஞ்சம் வேலகளு ஆனா அதுவே நோய் கண்ட தண்ணி ஒடம்பாயிருந்தா பொணம் எரியறப்ப அது சூட்டுல படீர் படீர்னு வெடிச்சி நௌ நீரு சூடா “சல்க்குனு” விசிறி அடிக்கும். அப்ப நாம்ப உசாரா ஒதுங்கிகினும் இல்ல. அந்த நௌ நீரு சூடா நம்ப மேல அடிச்சி நமக்கும் நோய் தொத்திக்கும். அவ்வளவு ஏன் சமயத்துல நம்ம உசுரேகூட போயிடும். ஆமாங்க மெய்யாலும்தான் சொல்றேன். எங்க தகப்பானரு கொடியில ஒர்த்தர் இப்டிதான் பொண தண்ணி அடிச்சி அப்டியே செத்து பூட்டாராம். ம். இன்னாத்த சொல்றது. வெறிநாய் கடிச்சு உசுரு போன பொணமுனா ஒரு ரெண்டு மூணு அடி பொணத்த தொடாம தூராமாவே இருக்கணும். இல்ல நம்ம கதியும் வெறிநாய்மாரிதான் ஆய்புடும். அப்பாலிக்கா பொணம் எரியிறப்ப அத்தோட நரம்பெல்லம் இஸ்துகினு அப்டியே “வூய்ங்னு” எயிந்து ஒக்காரும். அப்ப கைதடியால அது மண்டையில பட்டுனு ஒண்ணு போட்டு அத படுக்க வெச்சு எரிக்கணும்.
“மய காலத்துல வேறமாரி கஷ்டம். காடெல்லாம் ஒரேடியா மய தண்ணி ரொம்பி கெடக்கும். ஈர வெறட்டியும் ஈர வெறும்வும்தான் கெடைக்கும். அடுப்பு ஊதற மாரிதான் ஈரத்தால அமிஞ்சிபோன சிதைய ஊதி ஊதி பெட்ரோல் ஊத்தி பத்த வெச்சி எரிப்போம். செத்தவங்களோட சொந்தகாரங்க என்னமோ நாங்க தண்ணிக்குப் பதிலா பெட்ரோலயும், கிரேசினையும் குடிச்சிகிறமாரி பெட்ரோல் வாங்குற துட்ட கொறச்சிதான் தருவாங்க. மய காலத்துல பெட்ரோலு அதிகமா தேவப்படுமுனு சொன்னாலும் கேட்க மாட்டாங்க எங்க தாத்தா செத்தப்பக் கூட இப்ளோதான் வாங்கி குடுத்தேன். இப்ப மட்டும் எப்டி அதிகம் தேவப் படுதுனு தர்க்கம் பேசுவாங்க, இன்னா பண்றது அதுக்காக பொணத்த முயிசா எரிக்காம உட்டுட மிடியுமா? கொட்ற மயயிலும் பொணத்த எப்டியோ கஷ்டப்பட்டு எரிச்சி சாம்பாலக்கிடுவோம்.
“மய காலத்துல பெதக்கிற சடங்குகார பொணம் வந்தா இன்னும் கஷ்டம், முடிஞ்ச வரிக்கும் குயிவெட்டி மய தண்ணிய மொண்டு மொண்டு ஊத்திட்டு பொணத்த பொதப்போம். பொணத்த அடக்கம் செய்ய வரவங்க சடங்கு முடிஞ்ச உடனே திரும்பிப் பாக்காமா போயிடுவாங்க. மய காலம் இல்லையா எவன் மயயில நெனஞ்சிக்னு நின்னுகினு இருப்பான். இப்பாலிக்கா பொணம்பாடு எங்கபாடுதான். மயதண்ணி மண்ணு சேறா செத செதனு இருக்கும். அதுல பொதச்ச பொணம் மண்ணு உள்ளார நிக்காது, மய வேற உடாம பெய்யுமா, பொணம் மண்ண பொளந்துக்கிட்டு மய தண்ணியில மொந்து மேல வந்துடும். அப்டி வராம கீறதுகோஸ்சரம் அதுமேல பெரிய்ய பாறாங்கல்லா பாத்து தூக்கி வெப்போம். உசுரோட கீறப்பதான் எவ்ளோ பாரம் சொமக்குறோம், செத்துப் போனப்புறம் கூட பாரம் சொமக்குனுமானு பொணம் நெனச்சிகினா போல
எவ்னோ பாரம் வெச்சாலும் அதத் தள்ளிவுட்டுட்டு வெளியே வந்துடும். அது உள்ள கிறது கயிகாத்து இல்லியா. அப்டிதான் அது வெளிய வரும் சின்ன வயகல் காலத்துல இப்டி வெளியே வந்து தண்ணில மெதக்கிற பொணத்துங்க மேல ஒக்காந்துயினு நாங்கெல்லாம் படகு ஒட்டி வெளயாடுவோமாம். எங்க அப்பாரு சொல்லிகிறாறு. எங்கள தொறத்திட்டு பொணம் தண்ணியில மெதக்காம அது மேல பாராங்கல்ல தூக்கி வெச்சி கயிறு போட்டு கட்டிட்டு திரும்பவும் பொணத்த மய தண்ணி கொஞ்சம் வடிஞ்சப்புறம் பொதப்பாங்களாம். அப்பாலிக்கா இன்னொரு விசயம் பொணத்துல உகர் காத்து போயிட்டாலும் தச வாயுல கயி காத்து உள்ளயே இருக்கும். அது உள்ள கீற வரிக்கும் பொணம் ஊதி பொருசாயிகிட்டே வரும். பொணத்த அயுக வெச்சி. நாத்தம் அடிக்க வெச்சி புயூ பூக்க வெச்சி, வெடிக்க வெச்சி அப்பாலிக்காதான் சுயி காத்து வெளியே போவும். அந்த நாத்தத்த நீங்க ஒரு வாட்டி மோந்தீங்கன்னா அவ்ளவுதான் ஒரு மாசத்துக்கு சோறு துண்ண மாட்டீங்க இப்டி எவ்வோ கஷ்டம் தெரியுங்களா எங்க தொயிலிலே. கரண்டு மிசினு, கேஸ் நெருப்பு மிசினு எல்லாம். இப்பதான் வந்திச்சு. ம். தான் இன்னா சொல்ல வந்தேன் இன்னா சொல்லிகினு கீறேன். ஆங், யான் யாரையும் காசு கேட்டு கட்டாயம் பண்றது இல்லீங்க, தொயிலு சுத்தம் பாத்து இஷ்டபட்டு கொடுத்தா வாங்கிக்குவேன் இல்லாங்காட்டி இல்லை.”
“ஆமா சாமி, இப்ப நீங்க சொன்னத பாத்தா இதுக்கெல்லாம். வேலயில்லாம பூடுமே. சாமி நெசமாலும்தான் சொல்ரிங்களா இல்ல டமாஸ்சுக்கா உங்கள் பாத்தா டமாஸ் பண்ணுற ஆளுமாரி இல்லியே எஞ்சாமி பேச மாட்ரிங்க.. நான்தான் பேசணுமா…. செரிதான் என்னோட வாயயும் கெளரி உட்டுடிங்க. என்னாலயும் பேசாம இருக்க மிடியல. எவ்ளோ சம்பவங்க இந்த காட்டுல நடந்து இது தெரியுங்களா.
ஒரே நிமிட் நிங்க சொன்னது பீலாவா இல்லா மெய்யாலுமா, வாய தொறந்து சொல்லுங்கசாமி, சாமி இப்டி குமிண் சிரிப்பா சிரிக்கிறிங்களே, செரி நீங்க பேச மாட்டீங்க, என்னோட கதயயெல்லாம் சொல்றேன். கேட்டுகுங்க.
“இது ரொம்ப வருஷம் மின்னாடி நடந்தது. ஒரு நா ராத்திரி எங் குடுச்ச சுதவ யாரோ டமடன்னு தட்ற சத்தம், எங் குடுச்ச சுடுகாட்டுலியேதான் கீது, அதான் எங்களுக்கு லைசென்சு தரபோதே இருவத்திநாலு மணி நேரமும் சுடுகாட்டுளியே இருக்கனுமுனுதானே கண்ஷஜன் போட்டு தராங்க. எங்க வேல அந்தமாரி வேல, எப்ப வேல வருமுனு சொல்ல மிடியாது இல்லிங்களா, ஆங் டம.டமானு கதவ தட்ற சத்தம் இந்த நேரத்தில எவன்டா அது, காத்து கருப்பு, பேய் கீய் ஏதாவது சேட்டை பண்ணுதானு நெனச்சிகினே வெளிய வந்து பாத்தா, அர நெலா வெளிச்சத்துல அவனங்க மூஞ்சில பாத்தாலே தெரியுது காலி பசங்கனு, நாலஞ்சி பேசு எல்லோரும் புல் பேதையில கீறானுங்க. நமக்கு தெரிஞ்ச பசங்க எல்லாம் பகல் நேரத்துல போதை அடிச்சிட்டு கானா பாட்டு பாடிகினு உள்ள வெளிய, மங்காத்தா. மூணு சீட்டுனு துட்டு வெச்சி சீட்டு ஆடிகினு இருப்பானுங்க, கொஞ்சம் வுட்டு புடிச்சி வெரட்டிவுட்டா கம்னுனு காட்டவுட்டு போயிடுவாங்க. ஆனா இவனுங்கயெல்லாம் புச்சா கீறானுங்க”
“நீங்களாம் ஆரு? இன்னா விசயம்? அப்டினு கேட்குறேன். அவனுங்க போதையில வாய் கொளறி இலருறானுங்க.ஆந்தமாரி முயிச்சிகினு ஓர்த்தன் மூஞ்சிய ஒர்த்தன் பாத்துகீறானுங்க. அப்பாலிக்க ஓர்த்தன் சொல்றான். “யண்ணா. என் பொண்டாட்டி செத்துப் போச்சு பொதக்கினுமுன இல்லா மாமு எரிச்சிடலாம். அதான் நெல்லது, போதையிலும் எப்டி கரீக்கிட்டா கீறேன் பாரு. அப்டிங்கீறான் இன்னொருத்தன் இளிச்சினே.”
அதுக்கு ஏண்டா இப்டி நடுராவுல வந்து கீறிங்க. உன் பெண்டாட்டி எங்க செத்தாங்க? எப்டி செத்தாங்க? வூட்டுலியா? இல்ல ஆஸ்பித்திரிலியா, ஆஸ்பித்திரினா காயிதம் எங்க? காலில எங்க அதிகாரியாண்ட வந்து பேசுங்க. எங்க கையில மட்டும் சொன்னா நான்ன இன்னா பண்றது அப்படிங்கிறேன். அப்போ கபால்னு ஒர்த்தன் எங்கைய புடிச்சான். இன்னாடா டோய்னு பாக்குறேன் அவன் எங்கையில எதையோ அமுக்குறான். இன்னாடா இதுனு அத பாத்தா அர நெலா வெளிச்சத்துல ஒரு சோடி. பொன்னு வலையலு மினுக்மினுக்குங்குது, நா நிமிந்து பாக்குறேன். அவனுங்க கையில பிச்சுவா கத்திங்க மினுக்மினுக்குங்குது. சர்தான், இதுக்கு வேற வயிதான் பண்ணனமுனு நெனச்சிகினே அவனுங்ககிட்ட நைசா, எல்லோரும் இப்டி இங்க குந்துங்க. இன்னா விசயமுனு சொல்லுங்க, கத்தி கித்தி எல்லாம் எதுக்கு காமிச்சிகினு இருக்கணும் அப்டினேன். அவனுங்க என்னை பாத்துகினே ஒண்ணுக்கூடி பேசிகினுட்டு அப்பாலிக்கா ஒர்த்தன் சொல்றான். தோ, பாரு அண்ணாத்தே அந்த மரத்துளேதான் கோணி பையில அந்த தேவ்டியா கீறா, நாங்க ஆறு பேரு ஒரு நிமிட் பேச்ச நிறுத்திட்டு கைவெரல எல்லாம் இறுக்கமா மூடிக்கிட்டு கைய ஒரு மாரி ஆட்டி காமிச்சுட்டு சொல்றான், “போனமா இன்னா ஆச்சினு தெர்ல மூச்சு நின்னு போச்சு. அது தல எயித்து அவ்ளோதான், நாம்ப இன்னா பண்றது, போனது போனதுதான். நீதான் எங்களுக்கு ஒதவி பண்ணனும். இந்த சோடி வலயல நீ கூலியா வெச்சிகோ, பொளச்சிகோ, விசயம் வெளிய வரக்கூடாது வேற ஏதாவது ராங் பண்ண நெனச்சே கத்திய மூஞ்சி மின்னாடி ஆட்டி காமிச்சிகினே சொல்றான், உனுக்கும் சேத்து நீதான் குயி வெட்டிகினும்,” அப்டினு.
“நானும் சர்தான், சர்தான் அப்டினு அவனுங்க போக்குலியே போறமாரி போக்கு காட்டினே அவன்களாண்ட, என்னோட புள்ளயாண்டான் ஓர்த்தன் கீறான். ஒத்தாசைக்கு அவன கூப்டுகிறேனு சொல்லிட்டு. எம்புள்ளக்கிட்ட விசயத்த சொல்லி நைசா நயிவி போய் போலிசுல சொல்லி கையோடு இட்டுகினு வா அப்டினுட்டேன். எம்மவன் ஆகாசசூரன் நைசா நயிவி இருட்டுல மறஞ்சி போயி போவிசுல சொல்லிட்டான்.
“அப்பாலிக்கா இன்னா, போலிசு வந்து அவனுங்கள் அள்ளிகினு போய்டாங்க. அந்த பொண்ணு ஆரு வூட்டு பொண்ணோ மகமாயி மாரி மூஞ்சி அவ்ளோ லட்சணமா இருந்திச்சி, பாவி பசங்க வெறிநாயிமாரி அந்த பொண்ண கடிச்சி கொதறி நாஸ்தி பண்ணி இருந்தாங்க. போலிசால அவ யாரு எந்த ஊருனு கட்சி வரிக்கும் கண்டுபுடிக்கவே மிடியில அந்த பொண்ண அறுத்து கூறுபோட்டு பாத்து பஞ்சி வச்சி தெச்சி கொஞ்சம் நாளு ஐஸ் ரூம்ல, அதான் பொணவறயில் வச்சி இருந்து அப்பாலிக்கா அனாத பொணமா எங்கிட்ட குடுத்துதான் எரிக்கச் சொன்னாங்க, ஏதோ கிராமத்துல இருந்து டவுனுக்கு வந்து ஆறு வூட்டு விலாசமோ கேட்டு இது. இந்த பாவி பசங்க ஏமாத்தி ஆட்டோவுல ஏத்தினுபோய் அமிக்கிட்டு கீறானுய்க. அப்பாலிக்கா ஏதோ வயக்கு வாய்தாயெல்லாம் நடந்துச்சி. இந்த விசயத்தபத்தி பேப்பர்ல எல்லாம் கூட போட்டங்க. ஆனா அந்த கேப்மாரி பசங்கள புட்சி கொடுத்த எம்பேரும் எம்புள்ளயாண்டான் பேரும் அதுல வர்ல நானும் அதுக்கெல்லாம் ஆசபடல. என் வரிக்கும் நா ஒயிங்கா நேர்மையா இருந்தேன் பாருங்க அது போதும் எனக்கு,
“வைதோரைக் கூடவையாதே இந்த
வையம் முழுவதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் புறவைகள் மீதிலெய்யாதே”.
“பாபஞ்செய்யாதிரு மனமே.ம் அப்பாலிக்கா இன்னொரு விசயமும் ஞாபகம் வர்து, அதையும் சொல்றேன் சாமி, கேட்டுகோங்க.
“இதுவும் ரொம்ப வருசம் மின்னாடி நடந்தது. ஒரு நா ராத்திரி அன்னிக்கி முக்கா நெலவு. ஒரே புழுக்கம், நெலா வெளிச்சத்துல குடுச்சக்கு வெளிய தூக்கம் வராம நானு காத்துகோஸ்ரம் குந்திகினு இருந்தேன். அப்போ தீடீர்னு காட்டு எல்லயில எதோ வண்டியோட வௌக்கு வெளிச்சம். இந்த நேரத்துல எவன்டா அது வண்டில் காட்டுகுள்ள வார்துனு ரோசனை பண்ணிகிட்டு கிறப்ப ஒரு ஜீப்பு வண்டி மேலயும் கீழயும் மேடு பள்ளமெல்லாம் ஏறி எறங்கி ஆடிகிட்டு கிர்கிர்னு எங்குடுச்சக்கு கொஞ்சம் மின்னாடி வந்து நிக்குது. வண்டி மின்னாடி கீற ரெண்டு வெளக்கு வெளிச்சத்துல் கண்ணுரெண்டும் கூசுது. அந்த வண்டியில இருந்து ஒரு ஆறு. ஏழு பேரு எறங்குறாங்க, சொல்லி வெச்சாபோல அதுக்கு பின்னாடியும் ஒரு ஜீப்பு வண்டி வந்து நிக்குது. அதுலயும் ஆளுங்க வண்டியோட வெளக்கு வெளிச்சத்துல ஆளுங்க உருவம் தெரியுது. ஆனா மூஞ்சி சரியா தெர்ல. அவங்க எல்லோரும் என்னான்ட வராங்க. இன்னாயா ஞான சித்தா எப்டிகிறேனு ஒரு கொலு, இன்னாடா இது எங்கியோ கேட்ட கெரலா கீதேனு பாத்தா, ஆங், அது என்னோட பெரிய்ய அதிகாரியோட கொலு. வாங்க சாமி, வாங்கசாமினு கும்புட்டு கூப்பிடுறேன். இப்ப கண்ணு கூச்சம் மறஞ்சி கண்ணு வெளிச்சத்துக்கு வளகி என்னோட அதிகாரி கூட வந்தவங்கள பாக்குறேன். ஒரு பத்திருபது பேரு அவனுங்க தோரணைய பாத்தே புரிஞ்சிக்கிட்டேன் அவுங்க எல்லாம். போலிசுகாரனுங்கனு ஆனா அவுங்க யாரும் போலிசு டிரசு போடல. ஜீப்பு வண்டிய உத்துப் பாத்தேன் போலிசு ஜீப்புதான். ஓஹோ எல்லோரும் மப்டில வந்து கீறாங்கனு நெனச்சிகினேன். இன்னா விசயமுனு ஒண்ணியும் பிரியில.
“என்னோட அதிகாரி என்னிய பாத்து சொல்றாறு. ஒண்ணியுமில்ல ஞானசித்தா, ஒரு அனாத பொணம் வந்து கீது. கொளுத்தனும் வந்து வேலய ஆரமி அப்டினு, ஆஸ்பித்திரி பொணவறையில் இருந்து சொந்தக்காரங்க யாரும் வாங்கிகினு போவாத அடையாளம் தெரியாத பொணங்கள எப்பவாச்சும் இப்டி மொத்தமா எடுத்துகினு வந்து எரிக்க சொல்லுவாங்க. ஆனா ஒத்தை பொணமுனு அதிகாரி சொல்றாறே அதுவும் இப்டி ராவுல வந்துகிறாங்களே. இன்னாடா இது புச்சா கீது. ஒரு அனாத பொணத்த எரிக்க ஏன் இவ்ளோ போலிசுகாரனுங்க கூட வரணும் ஒண்ணியும் பிரியலியே அப்டினு நெனச்சிகினு மரம் மாரி நிக்குறேன்.
“அவனுங்கள்ள ஒர்த்தன், பாத்தாலே தெர்து பெரிய போலிசு அதிகாரினு மத்த போலிசுகாரனுங்க எல்லாம் அவன்கிட்ட மருவாதியா, பயபக்தியா நடந்துக்கிட்டாங்க அவன் என்னோட மூஞ்சிய பாத்தே என்னோட மனச படிச்சிகிட்டான் போலகீது. அவன் என்னொட அதிகாரிய பாத்து சொல்றான். “இவன்கிட்ட இன்ன ஸார் பேச்சு” அப்டினுட்டு அப்பாலிக்கா என்னிய பாத்து சொல்றான். “டேய், கம்னாட்டி சொன்ன வேலய ஒயிங்கா செய்யி, ரோசனை பண்ணிகிட்டு நிக்குற வேல எல்லாம் இங்க வாணாம். இன்னொரு விசயம். இந்த விசயம் வெளியில ஆருக்கும் தெரியக்கூடாது. அரசாங்க ரகசியம் இது. ஆமா சொல்லிப்புட்டேன். இந்த பத்திரிகைக்காரனுங்க வேசம் போட்டுகினு வந்து விசாரிப்பானுங்க, எவன்கிட்டயும் மூச்சு உடக்கூடாது தெர்தா, மூச்சு உட்டா ஏதாவது பொய் கேசு போட்டு உள்ள தள்ளிடுவேன். அப்பாலிக்கா, ஆயுசு முயிக்க கம்பிதான் எண்ணிக்கின்னு இருக்கணும், அப்டினான். எனுக்கு ஒண்ணியும் பிரியல, நா பாட்டுக்கு காளியாத்தா, சாம்பசிவா, அரிசந்திரா அப்டினுட்டு கீறேன். சுடுகாட்டு தொயிலு நாம்ப தொயிலு அனாத பொணமோ, சொந்தக்கார பொணமோ எரினா எரிக்கப் போறேன். பொதனா பொதக்கப் போறேன். அனாத பொணத்த எரிக்க ஏன் இவ்ளோ போலிசுகாரனுங்க வரனும், விசயம் வெளிய தெரிஞ்சா செயில்லயில்ல தள்ளிடுவாராமே, ஒரே கூத்தா கீதேனு நெனச்சிகினேன்.
“என்னோட அதிகாரி என்னிய பாத்து, சித்தா வேலய ஆரமி அப்டினாரு, நான் “பாடி” எங்கையா, அப்டினேன். ஜீப்பு வண்டில இருந்து இரத்த கறையோட ஒரு பெரிய கோணிபை மூட்டைய நாலஞ்சி பேரு தூக்கிகினு வந்து என் மின்னாடி கடாசி போட்டாங்க. பெரிய போலிசு அதிகாரி மூட்டைய அவுருடா கம்னாட்டி அப்டினாரு. நா மூட்டைய கட்டி கீற கயித்த அவுத்து கோணி மூட்டைய உருவுனேன். புள்ளதாச்சி வவுத்துல இருந்து பனிகொடம் ஒடஞ்சி, தண்ணியும் இரத்தமுமாய் சவு பையோட சிசு பொறக்குமாரி ஒரு பொணம் வெளிய வந்து உளுவுது. அது ஒரு எளந்தாரிபொணம். உசுறு போய் கொஞ்ச நேரம்தான் ஆயி இருக்கும் போலகீது, கை, காலு எல்லாம் வெரச்சிகாம இருந்துச்சு. ஒடம்புல துணியே இல்லாம முண்டகட்டயா இருந்துச்சு. ஒடம்பு முயிக்க தலயில இருந்து உள்ளங்காலு வரிக்கும் முச்சுடும் இரத்தக்காயம். மூஞ்சில ரெண்டு கண் ணு ம் இருக்கவேண்டிய எடத்துல பள்ளம், வாயி “ஆ”னு தெறந்து கெடக்கு, பல்லுங்களே காணோம். உள்ள என்னமோ கோயிமுட்ட மாரி செவப்பா கீது. கோயிமுட்டயில்ல கண்ண புடிங்கி வாயில போட்டுகீறாங்க, ரெண்டு காது ஓட்டயிலும் பென்சிலு குச்சிய செருவி உள்ள அடிச்சிகீறாங்க. கயித்து, மாரு, வவுரு, கையி, காலு, தொடயினு எல்லா எடத்திலியும் கத்தில் அறுத்தமாரி, குத்தினமாரி, தடியில அடிச்சமாரி கண்ணிப்போன காயம், சூடு வெச்சா போல காயம் கீது ஒரு எடம் பாக்கி இல்ல, கைவெரலு, கால் வெரலுல எல்லாம் நகங்களே காணோம். ஒரே இரத்தக் களரி, இடுப்பு கீழ உறுப்புல மயிரெல்லாம் தீய்ஞ்சி போய் கருப்பா மைமாரி கீது, குஞ்சி இம்மாம் பெர்சா வீங்கி போய் அது முயிக்க இன்னாவோ பளபளனு கீது, இன்னாட இதுனு உத்து பாத்தா, தெவிடியா பசங்க குஞ்சி முயிக்க ஊசிங்கள குத்தி வெச்சி கீறாங்க வெறை கொட்டையையே காணோம். அறுத்திட்டு கீறாங்க. அங்க கொஞ்சம் போல தோல்தான் இது எருவாயில ஒரு இரும்பு கம்பிய சொருவி கீறாங்க. அது வளஞ்சி மின்னாடி ரெண்டு காலு நடுவுலே நீட்டிக்கிட்டு கீது நானும் எத்தனையோ பொணத்த பாத்துகீறேன். ஆனா இந்தமாரி ஒரு கோராமையா பாத்ததில்ல சாமி,
“என்ன பிழை செய்தாய், ஏது நீ பொய் உரைத்தாய்
வந்து பிறந்தாயே இந்த பாழும் மண் உலகில்
சொன்ன சொல் மாறுனியோ, சத்தியம் தான் மீறினியோ
இந்த கதிக்கு நீ ஆளானது எப்படியோ?”
அப்டினு மனசுகுள்ள பலாக்கணம் பாடிக்கினு நிக்குறேன்.
“இன்னாயா வேடிக்க, வேலைய சீக்கிரம் முடி, அப்டினு கத்தராறு என்னோட அதிகாரி. அது பொணம் எரிக்க கரண்டு மிசினு எல்லாம் வராத காலம், அவுங்களே எங்கிருந்தோ வெறுவு, வெரட்டி, பெட்ரோலு எல்லாம் வரவெச்சாங்க. நானு வெறுவு, வெரட்டி எல்லத்தையும் அடுக்கி சிதைய தயார் செஞ்சேன். எங்கண்ணுகுள்ள அந்த எளந்தாரி பய பொணமே நிக்குது. யாரு பெத்த புள்ளயோ, பாவி மகனே, அப்டி இன்னாடா தப்பு பண்ண இப்டி சித்ரவதை பட்டு போய்கீறியேனு நெனச்சிகினே என்னோட வேலய முடிச்சேன். பொணத்த தூக்கிச் சிதையில வெக்க வேண்டியதுதான் பாக்கி, நாலஞ்சி பேரா சேந்து பொணத்த தூக்கிச் சிதையில வெச்சோம்.
“அப்ப, பெரிய்ய போலிசு அதிகாரி என்னிய பாத்து, “டேய் கம்னாட்டி கொஞ்சம் இருடானுட்டு,” அந்த பொணத்துக்கிட்ட போய் அது மூஞ்சி மேல காறித்துப்பனாரு, எல்லாரும் பாத்துகினு கீறப்பவே பேண்ட்ட அவுத்து பொணத்துமேலே ஒண்ணுக்கு அடிச்சாரு. அவுர பாத்து மத்தவங்களும் அவுரு பண்ணமாரியே பண்ணினாங்க. என்னோட வாய்கையில் இந்த மாரி ஒரு மருவாதைய ஒரு பொணத்துக்குப் பண்ணி பாத்ததில்ல சாமி. இப்டி பொணத்த அவமருவாதை பண்ற அளவுக்கு இன்னா வன்மமுனு நா மனசுகுள்ள நெனச்சிகிட்டேன்.
“அப்பாலிக்கா ஜீப்பு வண்டிகுள்ள இருந்து இன்னொரு சின்ன மூட்டைய ரெண்டு பேரு தூக்கிகினு வந்தாங்க இது இன்னாட புதுகதயினு நான் பாத்துகினுகீறப்ப ஒர்த்தன் அந்த மூட்டைய அவுத்து அதுல இருந்து புடிபுடியா சக்கரைய எடுத்து, ஆமா அந்த மூட்டை உள்ள சக்கரைதான் இருந்திச்சி. சக்கரைய எடுத்து மொதல்ல அந்த பெரிய்ய போலிசு அதிகாரிக்கும் அப்பாலிக்கா அல்லாருக்கும் புடி, புடியா குடுக்குறான்.
பெரிய்ய போலிசு அதிகாரி என்னிய பாத்து, ‘டேய் கம்னாட்டி கொஞ்சம் இருடானுட்டு” அந்த பொணத்துக்கிட்ட போய் அது மூஞ்சி மேல காறித்துப்பனாரு. எல்லாரும் பாத்துகினு கீறப்பவே பேண்ட்ட அவுத்து பொணத்துமேலே ஒண்ணுக்கு அடிச்சாரு. அவுர பாத்து மத்தவங்களும் அவுரு பண்ணமாரியே பண்ணினாங்க. என்னோட வாய்கையில இந்த மாரி ஒரு மருவாதைய ஒரு பொணத்துக்குப் பண்ணி பாத்ததில்ல சாமி. இப்டி பொணத்த அவமருவாதை பண்ற அளவுக்கு இன்னா வன்மமுனு நா மனசுகுள்ள நெனச்சிகிட்டேன்.
பெரிய்ய அதிகாரி இன்னாவோ சொல்ல, அல்லாரும் அதக் கேட்டு சிரிச்சிகினே சக்கரைய துன்னாங்க. அப்ப அந்த எடமே கல்லியாணவூடு மாரி இருந்திச்சி, அந்த அதிகாரி என்னிய பாத்து சிதையில கீற பொணத்து மேல அந்த சக்கரைய கொட்டி எரிடானாரு. அது எதுக்குனா அப்டி எரிச்சா பொணத்துல ஒரு எலும்பு கூட மிஞ்சாதாம் முயிக்க பஸ்பம் தானாம். அதை அவனங்கள்ள ஒர்த்தன் சொல்லிதான் நானே தெரிஞ்சிகிட்டேன். ஏன் அப்டினு கேட்டேன், அதுக்கு அவன், “தடயமே கெடைக்கக் கூடாது. இதுக்கு மேலே கேக்காதே வேலய பாரு” அப்டினுட்டான். அப்பாலிக்கா இன்னா பட்டினத்தார் சொன்ன மாரி ஒரு பிடி நீறுதான். இவ்ளோ வருசம் ஓடி போச்சு, இந்த விசயத்தயெல்லாம் யாராண்டையும் சொன்னதில்ல, தோ, இப்பதான் உங்களாண்ட சொல்றேன். இந்தச் சம்வத்துக்குப் பின்னாடியே இன்னொரு சம்பவமும் நடந்திச்சி, அதையும் சொல்றேன் கேட்டுகோங்க சார்.
“இப்ப சொன்ன சம்பவம் நடந்து ஒரு ரெண்டு மூணு மாசம் போய் இருக்கும். அதேமாரி ஒரு நாள் ராவுல எங்குடுச்ச கதவ யாரோ டம, டமானு தட்ற சத்தம். இன்னாட இது ஒரே ரோதனையா பூடுச்சுனு லாந்தர் வெளக்க எடுத்துகினு வெளிய வந்து பாக்குறேன். ஒரு பத்துப் பேர் இருப்பாங்க, திடீர்னு பாய்ஞ்சி என்னிய கபால்னு புடிச்சிகினாங்க. என்னிய அப்பால இப்பால நவுர வுடல. அதுல ஒர்த்தன் என்னான்ட சொல்றான். தோழரே. ஒண்ணியும் பயப்படாதே, உன்னிய ஒண்ணும் செய்ய மாட்டோம். அன்னிக்கு ராவுல என்னா நடந்திச்சினு மட்டும் சொல்லுனாங்க. என்னிக்கு ராவுலனேன் நானு. ரெண்டு மாசம் ரெண்டு மாசம் மின்னாடி இத்தினியாம் தேதி இந்த கெழமையில, ராவுல போலிசுகாரனுங்க ஒரு பொணத்த கொண்டு வந்து அனாத பொணமுனு சொல்லி எரிக்கச் சொன்னாங்களே அதப் பத்தி சொல்லுனாங்க.

எனுக்கு ஒண்ணியும் பிரியில, யாரு இவனுங்க இவங்களாண்ட அதயெல்லாம் சொல்லிகிளாமா, வாணாமா, அப்டினு ரோசிச்சிகினு நிக்குறேன். இப்டி நடந்திச்சா, அப்படி நடந்திச்சா அந்த போலிசுக்காரனுங்களோட உருவ அடையாளம் இப்டிதானே இருந்திச்சி, உங்கையில ஒரு பொணத்த குடுத்து அனாத பொணமுனு சொல்லி எரிக்க சொன்னாங்களே, அப்டினு அல்லாத்தையும் நேர்ல பாத்தமாரி புட்டுப் புட்டு வக்கறாங்க.
எனுக்கு அப்பதான் அந்த போலிசுகாரன் சொன்னது ஞாபகம் வந்திச்சி, இவனுங்க ஒரு வேள பத்திரிக்கைக்காரனுங்களா இருப்பாங்களோனு நெனச்சிகினு, நீங்கதான் அலாத்தையும் நேர்ல பாத்தமாரி புட்டுப் புட்டு வக்ரிங்களே புதுசா நான் இன்னாத்த சொல்ல, நீங்க அல்லாரும் பத்திக்காரனுங்களானு கேட்டேன். நான் கேட்டத அவுங்க காதுல வாங்கிக்கவேயில்ல. அதுல ஒர்த்தன் அனிக்கி எரிச்ச அந்த பொணத்தோட அடயாளத்த எல்லாம் சொல்ல சொன்னான். நானு, பொணமாவா அது இருந்திச்சி, ஒரே கோரமையா அது, அடையாளம் சொல்ற மாரி ஒண்ணியும் இல்லங்கயைா அப்டினேன். அப்பதான் எனுக்கு திடீர்னு ஒரு ஞாபகம் வந்திச்சி, “ஆமாங்கயைா, ஒரு அடையாளம் ஞாபகம் வந்திச்சி. அந்த பொணத்தோட கையில ஏதோ ஒரு பேரு பச்சகுத்தி இருந்திச்சி” அப்டினேன். அவுங்க எல்லோரும் அது இன்னா, இது இன்னானாங்க. நானு அவுங்ககிட்ட, ஐயா நானு பள்ளிக்கூடம் போய் நாலு எயித்து படிக்காத தற்குறிதான். ஆனா கொஞ்சம் எண்ணும் எயித்தும் தெரியும். அந்த எயித்துகள அதான் அந்த பேர திரும்பவும் வாத்தா ஞாபம் வந்துடும். அதுவான்னு அப்பதான் சொல்லமிடியும் அப்டினேன். அவுங்கள்ள ஒர்த்தன் அவங்ககிட்ட இருந்த காயிதத்துல பேனாவால் சில பேருங்கள எயிதி லாந்தர் வெளக்கு வெளிச்சத்துல எங்கையில இதுவா, இதுவானு கேட்டாங்க. நா ஒரு பேர இதுதான்னு சொன்னேன். ஆனா அவுங்க நெறிய பேருங்கள எயிதி, எயிதி, மாத்தி மாத்தி கேட்டாங்க. நானு, எனுக்கு நெல்ல ஞாபகம் கீது, நெல்லா ரோசனை பண்ணிதான் சொல்றேன். தோ இந்த பேரதான் இரத்தத்துல நனஞ்சி இருந்த அந்த பொணத்து கையில பாத்தேனு சொன்னேன். அவுங்க தோழரே நீ உண்மையாதான் சொல்றேனு என் தோளலத் தட்டிக் கொடுத்தாங்க. அப்பாலிக்கா அவுங்கள்ள ஒர்த்தன் மத்தவங்கக்கிட்ட, தோழர்களே, அது நம்ப காம்ரேட்டுதானு உறுதி ஆய்டிச்சி. அவுருதான் தன்னோட கையில “அபிராமி” அப்டினு பச்ச குத்தி இருப்பாரு அப்டினான். மத்தவங்க எல்லாரும் ஆமா, ஆமான்னாங்க அப்பாலிக்கா, செரி அவுர எரிச்ச எடத்த காட்டுனாங்க நானும் காட்டினேன்.
அங்க அவுங்க அல்லோரும் அங்க ஒரு ரெண்டு நிமிட் கண்ண மூடிகினு கம்முனு நின்னாங்க. ஒர்த்தன் இன்னாவோ பேசினான். வீரவணக்கம் கீறவணக்கம். புர்ச்சி கிர்ச்சி, சமத்துவம் கிமத்துவமுனு எனுக்கு ஒண்ணியும் பிரியல. ஆனா அவுங்க பேசினத கேட்டப்ப இந்த பாட்டு வரிதான் ஞாபகம் வந்திச்சி. அது–
“ஆடு பாம்பே, விளையாடு பாம்பே..ம்..ஆ.”
சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்
சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம்.. ம்..
ம். அப்பாலிக்கா அல்லாரும் சேந்துகினு எதோ உறுதி மொயி எடுத்துகினாங்க. அப்பாலிக்கா அல்லாரும் மெலிசு கெரல்ல நெறிய கோசங்க போட்டங்க. மெலிசு கொரலுனாலும் அது ரொம் ஆவேசமா இருந்திச்சி. அது இன்னாதது, ஆங்.. புர்சியாளருங்க பொதக்கபடல வெதக்கபடறாங்க. அப்டினு ஒரு கோசம் இவனுங்க இன்னா சொல்றானுங்க, எவன பொதச்சாலும் பொதச்ச உடத்துல பில்லுதானே மொளக்குமின அவுங்கக்கிட்டேயே கேட்டேன். எங்க புர்சியாளர பொதச்சாலும் வெதச்சாலும் மண்ணுல பில்லுதானே மொளக்கும். ஆனா உங்க அது இன்னா ஏதோ காம்ரோட்டோ, கம்ரோட்டோ, அவுரதான் எரிச்சிடாங்களே அந்த சாம்பல்ல இருந்து இன்னா மொளக்குமுனு கேட்டுடேன். அப்டி கேட்டுட்ட அப்பாலிக்காதான் ஐய்யய்யோ இப்டி வாய் துடுக்கா கேட்டுடோமேனு மனசு கஷ்டபட்டுச்சு. அந்த எளந்தாரி பயபுள்ளயோட சித்ரவதை பட்ட ஒடம்பு, உசுரு போன ஒடம்பு ஞாபகம் வந்துச்சு. நம்பள இவுங்க இது வரிக்கும் மருவாதையாதானே நடத்தினாங்க. எங்க இப்ப கோவப்பட்டுடுவாங்களோனு பயந்தேன். ஆனா அவுங்க கோவப்படவேயில்லை நிதானமா எங்கையில சொல்லிகினாங்க. தோழரே, நாங்க பினிக்ஸ்சு பறவமாரி சாம்பல்ல இருந்தும் திரும்பவும் உசுரோட வருவோம் அப்டினு. எனுக்கு தெர்ஞ்சது எல்லாம் காக்கா, குருவி, கயுகு, பாறாந்து பறவதான் இது இன்னா பீனிக்ஸ்சு பறவயினு தெர்ல. அப்பாலிக்கா இன்னா அவுங்க அல்லாரும் என்னான்ட நீங்க கொடுத்த தகவலுக்கு நன்றி தோழரேனு சொல்லிட்டு, திடீர்னு வந்தாபோல திடீர்னு கெளம்பியும் போய்டாங்க. அவுங்க யாரு இன்னான்னு எனுக்கு ஒண்ணியும் பிரியல.
“ஆங். கொஞ்சம் இருங்க. நீங்க இன்னா விசயம் சொல்லிகினுங்க. நான் பாட்டுக்கு வேற கதயயெல்லாம் சொல்லிகினுகீறேன். எந்தலயில இடிவுயிந்தமாரி கீதே, போச்சே எந்தொயிலு போச்சே, நான் இன்னா பண்ணுவேன். என்னோட வாய புடிங்கி புடிங்கி பழைய கதயெல்லாம் கேட்டுகினுகீறிங்களே சாமி, மெய்யாலும்தான் சொல்றிங்களா, இல்ல டமாஸ்சுக்கா சும்மா டமாஸ்சுக்குதானே, சிரிக்காதீங்க சாமி உங்களுக்கு இன்னா அல்லாம் சிரிப்பாதான் படும். ஆங்..என் வாய கௌரிவுட்டு பழய கதயெல்லாம் சொல்ல வெச்சிடிங்க. எனுக்கும் பழைய நெனப்புயெல்லாம் வர்து, இப்ப இன்னொரு சம்பவமும் ஞாபகம் வர்து. ஐய சிரிக்காதீங்க சாமி, நா பேச ஆரம்மிச்சா இப்டிதான் மூச்சு உடாம பேசிகினே இருப்பேன். இப்ப இதயும் கேட்டுகோங்க சாமி.
இந்தச் சம்பவமும் ரொம்ப வருசம் மின்னாடி நடந்திச்சி. அன்னிக்கி அம்மாவாச நாளு, நா எங்குடுசயில ஒறக்கத்துல படுத்துகினுகீறேன். திடீர்னு ஏதோ முயிப்பு. வந்திச்சி. காதுல ஏதோ கொத்து கொத்துனு ஒரு சத்தம் வந்து உயிவுது. இன்னாடா இது சத்தமினு கதவ தொறந்துகினு வெளிய வந்து பாக்குறேன் ஒண்ணியும் காணும். சத்தம் தூரத்துல இருந்து கேக்குது. வூட்டுகுள்ள போயி லாந்தர் வெளக்க எடுத்தா அது பக்கு, பக்குனு ஏகமா பொக உட்டுட்டு அமிஞ்சி போச்சு. அதுல எண்ணெய் தீந்து போச்சு. சர்தான்னு கையில தடி ஒண்ண எடுத்துகினு இருட்டுல தடவி தடவி சத்தம் வர எடத்துக்கு போவ ஆரம்பிச்சேன். போனா அங்க தூரத்துல மினுக்மினுக்குனு ஏதோ வெளிச்சம். பொணம் எரியற நெருப்பு இல்ல அது. ரெண்டு நாளா காட்டுக்கு பொணமே வர்ல, இது இன்னாடா வெச்சமுனு இன்னும் கொஞ்சம் கிட்டக போயி போக்குறேன் நெகல் உருவா மனுசங்கமாரி உரு தெரியுது. மனுசங்கதானா, காத்து கருப்பா, கொள்ளிவாய் பிசாசானு நெனச்சிகினே இன்னும் கிட்டக போயி பாக்குறேன். மனுசனுங்கதான், நாலு ஐஞ்சி பேரு இருக்கும். அந்த மை இருட்டுல சின்னசின்ன வெளக்கு வெச்சிகினு அந்த வெளக்கு வெளிச்சத்துல என்னமா பண்ணிகினு கீறாங்க. ஓர்த்தன் பள்ளம் தோண்டிகினு கீறான். நா தகரியமா இன்னும் கொஞ்சம் கிட்ட போய் பாக்குறேன். இப்ப நெல்லா தெரியுது. அம்மாடியோவ், மண்டகட்டயா ஒரு சாமியாரும்மாம் பெர்சா சடமுடி காலுமுட்டி வரிக்கும் சடசடையா தொங்குது. ஒடம்பு முயிக்க திருநீறு சாம்பல, பூசிகினு இம்மாம் பெர்சா குங்குமத்த நெச்சியில வெச்சிகினு ஏதோ மந்திரம் சொல்லிகினு கீறாறு. அவுரு கூட கீறவனுங்க சிசிய புள்ளங்க போல கீது. எனுக்கு புரிஞ்சி போச்சு இது மந்திர வித்தை வேலயினு. இந்த மந்திரவாதிங்க இன்னா பண்ணுவாங்கனா தலச்சன்புள்ள பொணம், இல்லாங்காட்டி வவுத்துல புள்ளகீறப்பவே செத்துபோன கர்பினி பொணம் இதயெல்லாம் தோண்டி எடுத்து அதுங்க மண்ட ஓட்டுல ஐங்கோல மையோ அதுபேர் இன்னாவே ஒரு மந்திர வசியமை பண்ணுவாங்க. அது மட்டும் கையில இருந்தா அவன்தான் மந்திர மாய வித்தையில பெரிய ஆளு. இந்த மாரி மந்திரவாதிங்க பத்தி எங்க நைனா எனுக்கு நெறிய கதங்க சொல்லிகீறாறு. நா அவுங்கள பாத்துகினே இன்னும் கிட்டக போவலாமுனு ஒரு அடி எடுத்து வெக்குறேன். அவ்வளவுதான் என்னோட ரெண்டு காலும் பாறாங்கல்லுமாரி ஆய்யிடுச்சி. ஒடம்ப அசக்க முடியல. ஐய்யோ, ஐய்யோனு கத்தரேன்.
மனககுள்ளதான் கத்தறேன் கொரலு தொண்டய வுட்டு வெளிய வரல தொண்ட இறுகிப் போச்சு, ஆத்தா, காளியாத்தா, காப்பாத்து நான் காவலு கீற காட்டுகுள்ள இதெல்லாம் நடக்கலாமா? நானும் உன்னியதானே கும்புடுகிறேன். இப்ப நான் இன்னா பண்ணனும் இப்டி கல்லு செலமாரி நிக்கிறேன், கைய, கால, ஒடம்ப இம்மிகூட அச்ச முடியலியே அப்டினு மனசுக்குள்ள நெனச்சிக்கிறேன். அப்ப அந்த முண்டக்கட்ட சாமியாரு அவரோட சிசிய புள்ளங்கள பாத்து, நான் நிக்குற தெசயில கைய காட்டி “அங்க போயி பாருங்க”, அப்டினாரு. அவனுங்களும் கையில வெளக்க எடுத்துகினு இருட்டுல நிக்கற என்ன தேடி வராங்க. என்னால நவுரவே முடியில. மனசுக்குள்ள காயிளாத்த, அங்காள பரமேஸ்வரி, ஈஸ்வரி, காபாத்து, காபாத்து அப்டினு கத்திகினேகீறேன். ரெண்டு சிசய புள்ளங்க என்னான்ட வந்து என்னிய பாத்துட்டு “குருவே இங்க ஓர்தன் கீறான்” அப்டினு அந்த முண்டக்கட்ட சாமியார் கீற தெசய பாத்து கத்தறாங்க. சாமியாரோட கொரலு, “என்னான்ட வா மவனே அப்டினு எங்காதுல உயிது. அப்பதான் என்னால எங்கயை கால அசக்க முடிஞ்சது. நா மெதுவா நடந்து போயி அவுரு மின்னால நிக்குறேன். அவுரு என்னிய பாத்து. “நீதான் இந்த காட்டுக்கு காவலா?” அப்டினு கேக்குறாறு, நானு ஆமானு தலய ஆட்றேன். காளியாத்தா, இந்த மகமாயி இப்ப உன் பக்கம் கீறா. நான் மந்தர பூச செய்யறதுக்கு மின்னாடி போடற தீப் பந்தத்தில் நாங்க யார் கண்ணுக்கும் பட மாட்டோம். ஆனா உன் கண்ணுல பட்டுட்டோமே அதாங்காட்டியும்தான் சொல்றேன். இப்ப அந்த மகமாயி உன் பக்கம் உன் பக்கம் கீறானு. மத்தவங்க கண்ணுலபட்ட பொறவு நான் பண்ணுற பூச கீச எதுவுமே பலிக்காது. தீப்பந்தமே ஒடஞ்சி போச்சே, நான் பூசய வடக்கு பக்கம் போயி வேற எடத்துல வெச்சிகிறேன். நீ இப்பத் திரும்பிப் பாக்காம வூடு போயி சேரு. மறந்துகூட திரும்பி பாக்காதேனு என்னிய பாத்து சொன்னாரு. நா, மனசுக்குள்ள காளியாத்தா, காளியாத்தானு சொல்லிகினே வேர்த்து விறுவிறுத்து திரும்பி பாக்காம ஓட்டமும் நடையுமா வூடு வந்து சேந்தேன். வூட்டுல வந்து உயிந்ததுதான் தெரியும். ரெண்டு நாளு காய்ச்சல் வறுத்து எடுத்திட்டுச்சி. இப்டி இந்த காட்டுக்குள்ள எவ்ளோ விசயங்க நடந்துகீது தெரியுங்களா. அது எல்லாத்தையும் சொல்ல ஆரம்மிச்சா இந்த ஒரு நாளு போதுமா? இந்த சுடுகாட்டுல எவ்ளோ பேயிங்கள பாத்துகீறேன் தெரியுமா? பேய்னா சும்மாவா, எப்டி இருக்கும் தெரியுங்களா காரைகாலு பேய்யம்மா படிகீறாங்களே அது மாரி
“ம்.ஆ..கொங்கை திரங்கி நரம்பெழுந்து
குண்டுகண் வெண்பற் குழிவயிற்றுப்
பங்கி சிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர் நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கி யலறி”
“ஐய்யய்யோ, நான் பாட்டுக்கு பாடிகினே கீறனே, ஒரு நிமிட் வெயிட்ஸ்.. சாமி நீங்க சொன்ன விசயம் நெசமாலுமா இல்லாங்காட்டி சும்மானாச்சிமா, நான் பாட்டுக்கு என்னோ பயய கதயெல்லாத்தையும் எடுத்துவிட்டு கினுகீறேன். நீங்களும் என்னிய பேசவுட்டுட்டு கம்முனு கேட்டுகீனே கீறிங்க. சாமி நீங்க இப்ப நெசத்த சொல்லணும். இனிமே நா எத்தையும் சொல்ல மாட்டேன், பாட மாட்டேன் சொல்லுங்க சாமி,- இந்த விஞ்ஞானகார பயலுங்க ஒலகத்துல பசியும் நோவும் வராதமாரி மருந்து கண்டு புடிச்சிருந்தாகூட பரவாயில்ல.. ஆனா சாவே வராதமாரி மருந்து கண்டு புடிச்சிட்டதா சொல்றீங்களே”!
2
“ஐய்யய்யோ, ஐய்யய்யோ, இன்னா ஆச்சி சாமி உங்களுக்கு, என்னிய புட்சி ஏதுக்கு இப்டி உலுக்குறீங்க. ஐய்யய்யோ, ஊ..லு..லு-லூ உலுக்காதீங்க சாமி.. ஆங் அம்மாடி, ஆமாங்க ஆம்பிளியா இல்லாங்காட்டி பொம்பளியா? ஆம்பிளதானே இருந்திங்க இப்ப பொம்பளியா மாறிடிங்களா. கொரலு கூட பொம்பள கொரலா மாரிச்சே. ஆமாமா.. சாவே இல்லாம பூடுறமாரி மருந்து கண்டுபுடிச்ச பொறவு ஆம்பள பொம்பள ஆம்பள ஆவுறது இன்னா பெரிய விசயமா”
“ஆணை பெண்ணு பெண்ணை ஆணும் ஆக செய்குவோம்
ஆரவாரித்து எதிராய் நின்று ஆடு பாம்பே…
“உஸ்..உஸ்.. ஆடு பாம்பே..உஸ்..ஸ்..ஆடு. பாம்பே..
“கௌவா, கௌவா, எந்திரி கௌவா, இன்னா ஆச்சி உனுக்கு. இப்டி தூக்கத்துல பாம்பாட்டம் ஆடிகினு கீறே… கண்ண முயி… தோ.தோ..பாரு, மூஞ்சில தண்ணிய அடிக்கிறேன். கண்ண முயி, நாந்தான்.. நெல்லா முயிச்சி பாரு, முஞ்சிய தொடச்சிக்கோ, எயிந்திரி, கௌவா எயிந்திரி.
முயச்சிகினேன் தாயே முயிச்சிகினேன் என்னிய உலுக்காதேடி.. யம்மா.. ஆத்தா… வாலையம்மா”
“இன்னா ஆச்சி கெளவா, ஏதாவது கனா, கினா கண்டியா?
ஆங்…..ஆமாம் புள்ள கனாதான் ஆனா ரொம்ப ரொம்ப கெட்ட கனா.
“அப்டி இன்னா கெட்ட கனா இந்த ஒலகமே அயியிறமாரி கண்டியா இல்லாங்காட்டி சொந்தத்துல யாராச்சும் மண்டைய போடறமாரி, சாவுறமாரி கனா கண்டியா?
அப்டிதான் பசியும் நோவும் அல்லாம சாவே வராம கீறாங்கனு வெச்சிபோம், அப்டி சாவாமாகீறவங்களுக்குப் பசியும் நோவும் வந்தாலும் கஷ்டம், வராங்காட்டியும் கஷ்டம். ஆமா, கொஞ்சம் நெனச்சி பாத்தா நா சொல்றது செரினு புரியும். சாவு இல்லினா அல்லாத்துக்கும் பயித்தியம்தான் புடிக்கும் பொறகறது, இருக்கறது. சாவுறது இந்த மூணும் நாம்ப கையிலிய கீது.
– உயிர் எழுத்து பிப்ரவரி 2013.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: March 15, 2026
பார்வையிட்டோர்: 21