கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 1, 2024
பார்வையிட்டோர்: 2,273 
 
 

(1979ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 11-15 | அத்தியாயம் 16-20 | அத்தியாயம் 21-25

அத்தியாயம் பதினாறு

அன்று கறுப்பண்ணன் கங்காணி வேலைக்குப் போக வில்லை; அவருடைய வயலில் நாற்று நடும் வேலை நடந்து கொண்டிருந்தது. ஐந்தாறு பெண்கள் அந்தச் சிறிய வய லில் வேலை செய்துகொண்டிருந்தனர். கண்டக்டரின் தயவி னால் கங்காணிக்கும் அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் பெண்களுக்கும் எப்படியும் அன்று செக்றோலில் பெயர் விழுந்துவிடும். 

வயலில் துரிதமாக வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது நாட்டிலுள்ள முக்கிய பிரமுகரான கிராம சேவகர் அவ்விடத்துக்கு வந்துசேர்ந்தார். அவரைக் கண்டதும் வயலுக்குள் நின்று கொண்டிருந்த கறுப்பண்ணன் அவர ருகே சென்று, “சலாங்க மாத்தியா; என்ன இந்தப் பக் கமா வந்திருக்கீங்க?” என வினயமாக வினவினார். 

“இந்த வயல்ல ஏன் நீங்க வேலை செய்யுறது?” கிராம சேவகர் கறுப்பண்ணன் கங்காணியைப் பார்த்து சிறிது அதட்டலாகக் கேட்டார். 

“என்னங்கையா அப்புடி கேக்கிறீங்க; இந்த வயலை எங்க பாட்டன் காலத்தில இருந்தே நான் தாங்கையா செஞ்சுக்கிட்டு வர்ரேனுங்க. தொரைக்கும் இது தெரியு முங்க” என்றார் கறுப்பண்ணன் கங்காணி குழப்பத்துடன்.

“ஆங், அது நமக்குங் தெரியும். இப்ப தோட்டத்த அரசாங்கம் எடுத்ததினால் இந்த வயல் எல்லாங் நமக்குத் தான் பொறுப்பா கொடுத்திருக்கு. இனிமே நாங் சொல் லாம இந்த வயலில யாருங் வேலைசெய்ய முடியாது” என்றார் கிராமசேவகர் சற்றுப் பலமான குரலில். 

கறுப்பண்ணன் கங்காணி வெல வெலத்துப் போனார்.

சிறிது காலத்துக்கு முன்னர் கிராம சேவகர் அங்கு வந்து வயலைப் பார்த்துவிட்டுச் சென்றதும், அந்த வயல் தோட்டத்தில் எந்தப் பகுதியில் இருக்கிறதென்பதைக் குறிப்பெடுப்பதற்காகப் பக்கத்திலுள்ள தேயிலை மலைகளின் இலக்கங்களைக் கேட்டறிந்ததும், வயலுக்குத் தண் ணீர் வசதி இருக்கிறதா என்பதை வினவியதும் கறுப் பண்ணனுக்கு இப்போது நினைவில் வந்தது. 

“இது என்னங்கையா அநியாயமா இருக்கு? நான் வேலை செஞ்சுகிட்டு இருக்கிற வயலையா அரசாங்கம் ஒங்களுக்கு கொடுத்திருக்கு? தோட்டத்தில் எத்தனையோ வயலுக சும்மா கெடுக்கு; அதைப் போயி வெட்டுங்க.” 

“அந்தக் கதையெல்லாங் நமக்குத் தேவையில்லை. இந்த வயலைத்தான் நமக்கு வேலை செய்யச் சொல்லி டி.ஆர்.ஓ.சொல்லியிருக்கு.” 

“ஒருத்தன் வேலை செஞ்சுகிட்டு இருக்கிற வயலைப் புடுங்கி, அடுத்தாளுக்கு கொடுத்துப்புடனுமென்னு அரசாங்கம் ஒண்ணும் சொல்லலை; என்னோட வயலை நான்  கொடுக்கமாட்டேன்” கறுப்பண்ணன் கங்காணி சற்று விறைப்பாகக் கூறினார். 

“இந்தா, நீ மிச்சங் பேசவேணாங். நீ இந்த வயலை வுட்டு இப்பவே போகவேணுங்! இல்லாட்டி நாங் பொலிஸ் கொண்டு வாறது.”

கிராம சேவகர் இப்படிக் கூறியபோது கறுப்பண்ணன் கங்காணி மிரண்டு போனார். 

“என்னங்கையா அப்புடி சொல்லுறீங்க… இந்த வய லுக்கு நான் எவ்வளவோ செலவழிச்சு வேலை செஞ்சு கிட்டு இருக்கேன்; எப்புடீங்கையா எனக்குக் கொடுக்க மனம் வரும்” கருப்பண்ணன் கங்காணி கலக்கத்துடன் கூறினார். 

“அது எல்லாங் நமக்குத் தெரியாது. இனிமே இந்த வயல் பக்கம் யாருங் வரக்கூடாது. அப்புடி நம்ம பேச்சு மீறினா, பொலிசுக்குத்தான் நான் சொல்லுறது” எனக்கூறிய கிராம சேவகர், மேலும் கறுப்பண்ணன் கங்காணியிடம் கதைக்க விரும்பாதவர்போல் விர்ரென்று திரும்பிப் போய் விட்டார். 

கறுப்பண்ணன் கங்காணிக்கு தொடர்ந்தும் வயலில் நின்று வேலை செய்வதற்கு முடியவில்லை. மனது ஒரே குழப்ப மாக இருந்தது. கண்டக்டரைச் சந்தித்து அவரிடம் ஏதா வது ஆலோசனை கேட்கலாம் என்ற எண்ணத்துடன் கண்டக்டரைத் தேடிப் புறப்பட்டார் கங்காணி. 

பதினான்காம் நம்பர் மலையில் தொழிலாளர்கள் கவ் வாத்து வெட்டிக்கொண்டிருந்தனர். கண்டக்டர் அதனை மேற்பார்வை பார்த்த வண்ணமிருந்தார். 

கறுப்பண்ணன் கங்காணி கலக்கத்துடன் வருவதைக் கண்டதும், “ஏங் கங்காணி. ஏன் வந்தது? ஏதும் அவசரமா?” எனக் கேட்டார் கண்டக்டர். 

“ஐயா, என்வூட்டு வயலை இந்த ஆராச்சி’ வந்து வேலை ஒண்ணும் செய்யவேணாமென்கிறாரு… வயல் அவருக்குத்தான் சொந்தம் என்கிறாரு. இது என்னங்கையா பெரிய அநியாயமா இருக்கு. தொரைக்குதான் தெரியுமே, நான் இந்த வயல்ல மிச்ச நாளா வேல செஞ்சிக்கிட்டு வாறேனு… எப்புடியாச்சும் ஆராச்சிக்கிட்ட சொல்லி நம்ப வயல்ல எடுக்க வேணாமுன்னு சொல்லுங்க” எனக் கெஞ்சும் குரலில் கூறினார் கங்காணி. 

கண்டக்டர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “என்னங்… ஆராச்சியா சொன்னது? அவர் வேற ஏதுங் சொன்னதா?’ எனக் கேட்டார். 

“வயலக் கொடுத்துப்புடாட்டி பொலிசை கூட்டி வாறதுன்னு சொல்லுறாங்க” கருப்பண்ணன் கங்காணியின் குரலில் கலக்கம் தொனித்தது. 

“அப்புடியா அந்த ஆராச்சி சொன்னது?அப்ப நாங் ஒண்ணும் செய்ய முடியாதுதானே. பொலிஸ் வந்தா கரச்சல்தானே” எனக் கூறி கையை விரித்தார் கண்டக்டர். 

“ஒங்களுக்கு அந்த ஆராச்சி நல்ல பழக்கந்தானுங்களே. அவருகிட்ட சொல்லி வயலை எடுக்க வேணாமுனு சொல்லுங்கையா?” என மன்றாட்டமாகக் கூறினார் கங்காணி. 

“அப்புடியில்ல கங்காணி, அரசாங்கத்தில் சொல்லாம, ஆராச்சி அப்புடி செய்யிறதில்லதானே; நீங்க வேணுமுன்னா இதைப்பத்தி தொரைகிட்ட பேசிப்பாருங்க” என்றார் கண்டக்டர் யோசனையுடன். 

“என்னங்கையா நீங்களே இப்புடி சொல்லிபுட்டா நான் யாருகிட்டதாங்க போவேன்?” எனப் பதறியவாறு கேட்டார் கருப்பண்ணன் கங்காணி. 

“நமக்கு முடிஞ்சா நான் ஓங்களுக்கு ஒதவி செய்யிறது தானே கங்காணி… எதுக்கும் நான் அந்த ஆராச்சிகிட்ட பேசிப் பாக்கிறன்.” 

கண்டக்டரின் பேச்சு கங்காணிக்கு நம்பிக்கையை இழக்கச் செய்தது. வயலை இழந்துவிட அவரது மனம் சிறிதும் ஒப்பவில்லை. 

வேறு எவ்வித வழியும் தெரியாததால் அவர் துரை யிடமே சென்று இதைப்பற்றி முறையிட்டு ஏதாவது நட வடிக்கை எடுக்கலாம் என்ற எண்ணத்துடன் கண்டக்ட ரிடம் விடைபெற்றுக் கொண்டு தோட்டத்து ஆபீசை நோக்கி கலவரத்துடன் நடந்தார். 

கறுப்பண்ணன் தோட்டத்து ஆபீசை அடைந்தவேளை யில் துரை அங்கு இருக்கவில்லை. 

பெரிய கிளாக்கர்தான் அவருடன் கதைத்தார். 

“சலாங்கையா.” 

“ம்… சலாம்; என்ன மனுஷன் இந்த நேரம் இங்க வந்தது?” புதிய பெரிய கிளாக்கர் வினவினார். 

“தொரை இல்லீங்களா? அவருகிட்ட ஒரு முக்கியமான வெசயம் கதைக்கணுமுங்க…” 

“தொரைகிட்ட நீ நெனச்ச நேரம் கதைக்க வாறதா. போ…போ…; போயிட்டு வெள்ளிக்கெழமைதான் ஆபிஸ் நாள்; அன்னிக்கி வா.” 

“என்னய்யா. நாயை வெரட்டின மாதிரி வெரட்டுறீங்க? அவசரமான வெசயம் எங்கிறபடியால தானே நான் இந்த நேரத்தில் வந்தேன்” எனக் கறுப்பண்ணன் கங்காணி கடுகடுப்புடன் கூறினார். 

கங்காணியின் சினம் பெரிய கிளாக்கரைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. 

“என்னா, ஒனக்கு அப்புடி அவசரமான வெசயம். நம்பகிட்ட சொல்லு… நான் தொரைக்கு சொல்லுறது. “

“இல்லீங்கய்யா… எங்க லயத்துக்கிட்ட எனக்கு ஒரு வயல் இருக்குங்க… பரம்பரையா நான்தாங்க அந்த வயலை செஞ்சுகிட்டு வாறேனுங்க… தொரைக்கும் இது தெரியுமுங்க. இன்னிக்கி அந்த ஆராச்சி மாத்தியா வந்து நம்ப வயலை வேலை செய்யவேணாமுன்னு சொல்லுறாரு.” 

கங்காணி சொன்ன விஷயம் பெரிய கிளாக்கருக்கு ஓரளவு புரிந்தது. 

இரண்டு நாட்களுக்கு முன் துரைக்கும் அந்த வயல் சம்பந்தமாக ஒரு கடிதம் வந்திருந்தது அவருக்கு இப்போது ஞாபகத்தில் வந்தது. கிராம சேவகர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார். 

தான் அந்த வயலில் வேலை செய்யப் போவதாகவும், அதற்கு டி.ஆர்.ஓ.வினால் தனக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட பத்திரத்தின் பிரதி யொன்றையும் அந்தக் கடிதத்துடன் அவர் இணைத்து அனுப்பியிருந்தார். 

“ஓ, அது தொரைக்கு ஒண்டும் செய்ய முடியாது.டி.ஆர்.ஓ. தான் அந்த ஆராச்சிக்கு வயலை கொடுத்துப் போட்டாச்சு. தொரைக்கும் லெட்டர் வந்திருக்கு…” 

பெரிய கிளாக்கர் இப்படிக் கூறியது கறுப்பண்ணன் கங்காணிக்கு மேலும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

“ஆராச்சிகிட்ட கரச்சலுக்குப் போகாம அந்த வயலை விட்டுப் போடுறதுதாங் நல்லது.” 

இப்படிக் கூறிய பெரிய கிளாக்கர் தொடர்ந்தும் கங்காணியிடம் கதைக்க விரும்பாதவராய் ஏதோ புத்தக வேலையில் கவனஞ் செலுத்தத் தொடங்கினார். 

கங்காணிக்கு தலை சுற்றுவதுபோல் இருந்தது. தள்ளாடியபடியே ஆபிஸில் இருந்து திரும்பி நடக்கத் தொடங்கினார். 

தலைவரிடம் சென்று இதைப்பற்றிக் கூறி யூனியன் மூலமாக ஏதாவது நடவடிக்கை எடுக்கலாமென்ற எண்ணம் இப்போது அவர் தலைவரின் அவருக்குத் தோன்றியது. வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். 

அத்தியாயம் பதினேழு

இஸ்தோப்பில் அடுப்புக்கு முன்னாலிருந்து றொட்டிக்கு மாவு பினைந்து கொண்டிருந்தாள் ராக்கு. அவளது கடைசிக் குழந்தை வாயோயாமல் அழுது அவளின் பொறுமையைச் சோதித்தது. 

“இந்தா வாயை மூடு மூச்சு விட்டியனா கொன்னுப்புடுவேன்” எனக் கூறியபடி கண்களை உருட்டிக் குழந்தையை முறைத்துப் பார்த்த ராக்கு, ‘பொத்’தென அதன் முதுகிலே எட்டி அடித்தாள். குழந்தை மீண்டும் வீரிட்டுப் பலமாக அழுத்து. 

வெளியே முற்றத்தில் இருந்தவாறு செந்தாமரையின் தலையில் பேன் பார்த்துக்கொண்டிருந்த மீனாச்சி, “ஏன் ராக்கு கொழந்தைய இப்புடிப் போட்டு அடிக்கிற?” என உரத்த குரலில் கேட்டாள். 

‘‘என்னக்கா வேலைவுட்டு வந்ததிலயிருந்து கொஞ்ச நேரமாவது இந்தப் புள்ள சும்மா இருக்கவுட மாட்டேங்குது; காக்கா மாதிரி கரஞ்சுக்கிட்டே இருக்குது” எனச் சலிப்புடன் கூறினாள் ராக்கு. 

“புள்ளைக்குப் பசிக்கும் போலயிருக்கு. மாவு ஏதும் இருந்தா கொஞ்சம் கலக்கிக் குடுத்துப்புட்டா போவுது; அதுபாட்டுக்குக் குடிச்சுப்புட்டு வெளையாடிக்கிட்டு இருக்கும். பசிக்கிற புள்ளைய அடிச்சுக்கிட்டு இருந்தா எப்புடி?’ 

“மாவு டின்னு முடிஞ்சுதான் ரெண்டு கெழமையாவுது. ரொட்டித் துண்டு குடுத்தா  திங்க மாட்டேங்குது. பால் வேணுமுனு அடம்புடிச்சு அழுவுது.” 

“ஏன் ‘லக்ஸ்பிரே’ மாவு முடிஞ்சுபோயிருச்சா? முடியிறதுக்கு முன்னம் ஒவ்வொரு டின்னு வாங்கி வச்சுக்கிறது நல்லதுதானே. நம்ம கோப்புறட்டிலை தான் கெடைக்குமே” எனக் கூறிய மீனாச்சி, கையில் அகப்பட்ட பேன் ஒன்றை எடுத்து நகங்களினூடே வைத்து நசித்தாள். 

“தெனம் கோப்புறட்டி கடைக்கு அலைஞ்சுக்கிட்டுத் தான் இருக்கேன். போனகிழம் போய் கேக்கிறப்போ இந்த மாவு டின்னு இன்னும் வரலேன்னு சொன்னாங்க. கெழம போய் கேக்கிறப்போ முடிஞ்சு போச்சினு சொல்லுறாங்க. கடை போட்ட புதிசில வேண்டிய சாமான் இருந்துச்சு. போகப்போக என்னாடான்னா அது இல்லே. இது இல்லேனு சொல்லுறாங்க” என்றாள் ராக்கு. 

“கோப்புறட்டிவ் கடையில மாவு டின்னு இல்லாட்டி புள்ளையப் பட்டினியா போட முடியுங்களா அக்கா; டவுனிலயாவது வாங்கி கொடுத்திருக்கலாந்தானே” எனக் கேட்டாள் செந்தாமரை. 

“டவுனுல பழைய கடன் பாக்கி அப்புடியே நிக்குது செந்தாமரை… இந்த கோப்புறட்டிக் கடை போட்டதிலயிருந்து அந்தப் பக்கமே போகல்ல. இப்ப போய்க் கேட்டா சாமான் கொடுப்பாங்களா?” 

“ஏன் ராக்கு, ஒவ்வொரு மாசச் சம்பளத்திலேயும் கொஞ்சங் கொஞ்சமா அந்தக் கடனை கட்டியிருக்கலாந்தானே. சம்பளத்து சல்லியெல்லாம் என்னா செஞ்ச?” 

“என்னா அக்கா அப்புடிக் கேக்குறீங்க, நான் ஒருத்தி வேலை செஞ்சுதான் ஏம்புள்ளைகளை காப்பாத்த வேண்டியதா இருக்கு. கோப்புறேட்டிவ் கடையிலபோய் சாமான் வாங்கிறதுனால அந்தக் கணக்கு எல்லாத்தையும் ஏஞ்சம்ப ளத்தில புடிச்சுப்புடுறாங்க. சம்பள வாசலுக்குப் போனா எனக்குக் கடன்தான்னு வாசிக்கிறாங்க” எனச் சலிப்புடன் கூறினாள் ராக்கு. 

இதுவரை நேரமும் அவர்களது சம்பாஷணையைக் கேட்டபடி உள்ளே படுத்திருந்த மாயாண்டி ஒருமுறை இருமிவிட்டு – 

“என்னா மாவுடின்னு இல்லேனு பேசுக்கிறீங்க. நாட் டுல பண்டா முதலாளி கடையிலதான் நெறைய அடுக்கிவச் சிருக்கானே, வேணுமுனா சொல்லு நான் வாங்கியந்து தாறன்” எனக் கூறினார். 

“என்னாங்க அண்ணே அந்த நாட்டுக் கடையில இப்ப மாவுடின்னு எல்லாம் விக்கிறாங்களா? முந்தி பீடி, சிகரட் இல்லியா வித்துக்கிட்டு இருந்தாங்க” எனக் கேட்டாள் ராக்கு. 

‘என்னா ராக்கு அப்புடிச் சொல்லிப்புட்டே! டவுனுல இல்லாத சாமாங்கூட இப்ப அங்க இருக்கு. அன்னிக்கு நான் போயிருந்தப்போ பாத்தேன்; டவுனுல மீன் டின் இல்லாம அங்க வந்துதான் வாங்கிட்டுப் போறாங்க. நெறைய சாமாங்க அடிக்கி வச்சிருக்காங்க’ என்றார் மாயாண்டி. 

“ஏன் நம்ம கோப்புரேட்டிவ் கடை போட்ட புதிசுல கூட எல்லாச் சாமானுந்தான் இருந்திச்சு, இப்போது தான் கடைய மொட்டையா வச்சிருக்காங்க” என்றாள் மீனாச்சி. 

இஸ்தோப்பில் கோழி கொக்கரிக்கும் சத்தம் கேட் டது. மாயாண்டி நிமிர்ந்துபார்த்தார். அடுப்பின் முன்னால் சுளகிலிருந்த அரிசியைக் கோழிகள் இரண்டு கொத்தித் தின்றுகொண்டிருந்தன. 

“இந்தா பாரு மீனாச்சி, அரிசிய பொடைச்சவாக்கில் அப்புடியே வச்சிட்டு போயிட்டே. அதெல்லாத்தையும் நல்லா கோழி திங்குது… இப்புடிதான் இருக்கும் ஒம்புத்தி” எனக் கூறிக்கொண்டே படங்குக் கட்டிலில் இருந்த மாயாண்டி கோழிகளை ‘சூ… சூ…’ என விரட்டினார். 

“ஐயையோ, மறந்தே போயிட்டேன்” எனக் கூறிக் கொண்டே உள்ளே ஓடிவந்தாள் மீனாச்சி. அவளை உரசிய படியே இரண்டு கோழிகளும் வெளியே பறந்து போயின. 

சுளகுடன் அரிசியைக் கையில் எடுத்த மீனாச்சி, திடீ ரென ஏதோ நினைவுக்கு வந்தவளாக, “ஏன் ராக்கு, இந் தப் பயணம் கொடுத்த அரிசிய அளந்து பாத்தியா? எங்க ளுக்கு எப்போதும் மீன் சுண்டால இருபது சுண்டு அரிசி இருக்கும்; இந்தப் பயணம் நாலு சுண்டு குறையுது” எனக் கூறினாள். 

“ஆமாங்க அக்கா, எங்க வூட்டுலேயும் அப்புடித்தான் போலையிருக்கு. வழமையா அரிசி போட்டா நாலு நாளைக்கு ஒப்பேத்திக்கிடுவோம். இந்த ரெண்டு கெழ மையா மூணு நாளையிலேயே அரிசி முடிஞ்சு போயிருச்சு. என் மகதான் கூடக் கூட அரிசியப் போட்டு ஆக்கிப்புடு துனு நெனைச்சிக்கிட்டு இருந்தேன்”.எனச் சிந்தனையுடன் கூறினாள் ராக்கு. 

அது எப்புடி எல்லா வூட்டுக்கும் அரிசி கொறையுது…? நிறுத்துப் போடுறவங்கதான் ஏதோ ‘திருக்கீசு பண்ணுறாங்க போல தெரியுது” என்றார் மாயாண்டி. 

“கோப்புரட்டி கடை வந்தா நல்லதுன்னு நம்பிக்கிட் டிருந்தோம். இப்போ என்னடான்னா நம்ப வயித்தில் அடிக்கிற மாதிரியில்லையா தெரியுது” எனக் கூறினாள் மீனாச்சி. 

“இதை இப்புடியே சும்மா வுட்டிடக்கூடாது; இதப் பத்தி நம்ப வீரய்யா தம்பிகிட்ட சொல்லி கவனிக்க சொல்லோணும்” என்றாள் ராக்கு. 

இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த மாயாண்டியின் மனதில் பலவாறான் சந்தேகங்கள் துளிர்த்து எழத் தொடங்கின. கடைசியில் அவரது சிந் தனை முழுவதும் பண்டா முதலாளியின் கடையையே வட்டமிட்டுக் கொண்டிருந்தது. 

கடந்த சில வாரங்களாக பண்டா முதலாளியின் வீட் டிற்கு கோப்பறேட்டிவ் மனேஜர் அடிக்கடி செல்வதை அவர் கவனித்திருந்தார். மனேஜர் யூனியனுக்கு பொருட் கள் வாங்கச் செல்லும்போதெல்லாம் பண்டா முதலாளி யும் கூடவே செல்வதும் மாயாண்டியின் நினைவில் வந்தது. 

தோட்டத்து ஆளுகளுக்கு ரேசனுக்குக் கொடுக்கப் படும் அதே வகையான அரிசி, வார இறுதியில் பண்டா முதலாளியின் கடையில் விற்பனைக்கு இருப்பதும், கோப்ப றேட்டிவ் கடையில் மட்டுமே கிடைக்கக் கூடிய பங்கீட்டுப் பொருட்கள் இப்போது அங்கு கிடைக்காததும், அதே வேளையில் பண்டா முதலாளியின் கடையில் தாராளமாகக் கிடைப்பதும் அவரது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கச் செய்தன . 

அத்தியாயம் பதினெட்டு

அன்று சம்பள நாள். 

மடுவத்தில் தொழிலாளர் கள் நிறைந்திருந்தனர். முதல் மாதத்தில் தொழிலாளர் கள் செய்த வேலைக்குரிய சம்பளத்தைக் கணக்குப் பார்த்து ரேஷன் அரிசி, கோப்பரேட்டிவ் கடையில் சாமான் வாங் கிய கணக்கு, ‘புறவிடன்ட் பணம்’, டோபி – பாபர் பணம் முதலிய கணக்குகளைச் சம்பளத்தில் பிடித்துக் கொண்டு மிகுதிப் பணத்தை மறு மாதத்தின் முதற்கிழமையில் கொடுப்பது வழக்கம்.  

தொழிலாளர்கள் மகிழ்வுடன் தங்களுக்குள் ஏதேதோ கதைத்தவண்ணம் துரையின் வரவுக்காகக் காத்திருந்தார்கள். 

சிறு வியாபாரிகள் தீன்பண்டங்கள், றப்பர் சீட், மரக் கறி, பழவகைகள் முதலிய பொருட்களை மடுவத்தின் முன்னால் பரப்பி வைத்துக்கொண்டு வியாபாரத்துக்குத் தயாராக இருந்தனர். 

துரை மடுவத்தின் முன்னே காரை நிறுத்திவிட்டு சிறிய குட்டிச் சாக்குடன் பணத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மடுவத்திற்குள் நுழைந்தார். சம்பளம் வாசிக்கும் கிளாக்கர் அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றார். 

இதுவரை நேரமும் வாயோயாமல் கதைத்துக் கொண் டிருந்த அத்தனை பேரும் இப்போது மௌனமாகினர். 

துரை மடுவத்தின் ஒரு மூலையில் போடப்பட்டிருந்த மேசையில் குட்டிச் சாக்கை வைத்து அதனை அவிழ்த்துப் பணத்தை வெளியே எடுத்தார். பின்னர் அங்குகூடியிருந்த தொழிலாளர்களை ஒரு தடவை நோட்டம்விட்டார். 

பின்பு நோட்டுக்களைக் கட்டுக் கட்டாக மேசையின் மேல் பரப்பி வைத்துக் கொண்டு சில்லறைகளைக் கண்டக் டரிடம் கொடுத்தார். 

கிளாக்கர் செக்ரோலை மேசையின் மறு முனையில் விரித்து வைத்துக்கொண்டு பெயர்களை வாசிக்கத் தயாரானார். 

துரை அனுமதி கொடுத்ததும் பெயர்களை வாசிக்கத் தொடங்கினார். 

“முதலாம் பிரட்டு தெய்வானை… தெய்வானை.” 

தலையில் முக்காடு போட்டபடி பெண்ணொருத்தி அவர் கள் முன்னால் போய் நின்றாள். அவளைக் கவனித்த கிளாக் கர், ‘அறுபத்தேழு ரூபா முப்பது சதம்” எனக் கூறினார். 

துரை ரூபாய்களைக் கொடுக்க கண்டக்டர் சதக் கணக் கைக் கொடுத்தார். 

கிளாக்கர் தொடர்ந்தும் பெயர்களை வாசித்து சம்பளக் கணக்குகளைக் கூறினார். தொழிலாளர்கள் ஒவ்வொருவராக சம்பளத்தைப் பெறத் தொடங்கினர். 

இப்போது மடுவத்திலே மீண்டும் சத்தம் அதிகமாகத் தொடங்கியது. 

“என்னடா ராமு இப்போதான் வாறியா?” அப்போதுதான் அங்கே வந்துசேர்ந்த ராமுவைப் பார்த்துக் கேட்டான் வீரய்யா. 

தலையிலே கட்டியிருந்த லேஞ்சியை அவிழ்த்துக் கையில் வைத்துக்கொண்டு. “மெல்ாதலயே சம்பளம் போடத் தொடங்கிட்டாங்களா?, எங்க பெரட்டு பிந்திப் போயி ருச்சோ என்னமோ தெரியல்ல” எனக் கேட்டான் ராமு. 

“அவசரப் படாதடா; இப்பதாண்டா தொர வந்தாரு ஒன் சம்பளம் என்ன ஓடியா போயிடும்?” எனக் கூறிவிட் டுச் சிரித்தான் வீரய்யா. 

”போன மாசம் இருபத்தி ஆறுநாள் வேலை செஞ்சிருக் கேன். ரேஷன் சாமான், கோப்புறட்டிவ் கடன் எல்லாம் போக எப்புடியாச்சும் அறுவது ரூபாகிட்ட இருக்கும். போட்டுக்கிறதுக்கு ஒரு நல்ல சேட்டுக் கூட இல்ல.. இந் தப் பயணம் நல்ல சேட்டு ஒண்ணு எடுக்கணும்” என்றான் ராமு. 

”இன்னும் சம்பளம் வாங்கவே இல்லே. அதுக்குள்ள ஏண்டா இப்புடித் திட்டம் போடுறே. அவுங்க எப்புடி கடன் புடிச்சு, கணக்குப் பாத்து வச்சிருக்காங்களோ தெரி யாது” என்றான் வீரய்யா. 

“இந்தப் பயணம் எல்லாத்துக்கும் நல்ல சம்பளம் இருக்குமுங்க அண்ணே… போன மாசம் எல்லாரும் நல்லா வேலை செஞ்சாங்க. கவ்வாத்து, மீனா புல்லு வெட்டு எல்லா வேலையும் கொடுத்தாங்க இல்லியா…” என்றான் பக்கத்தில் நின்ற ஒருவன். 

“இந்தா பாருங்க ஆளுங்களா… தயவுசெஞ்சி கொஞ் சம் சத்தம் போடாம இருங்க. இப்புடி சத்தம் போட்டுக்கிட்டு இருந்தா எப்புடி தொர சம்பளம் போடுவாரு?” என்றார் மாரிமுத்துத் தலைவர் பலமான குரலில். 

துரை நிமிர்ந்து தலைவரை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் பணத்தை எண்ணத் தொடங்கினார். 

“ஆமா… நீங்க போடுற சத்தத்தினால கெளாக்கரய்யா பேரு வாசிக்கிறது இங்க வெளங்கல; டேய் இந்த பயலுங்க எல்லாம் லயத்துக்குப் போங்கடா.. சம்பளம் வாங்கிற மாதிரி இந்தச்சின்னப் பயலுக வேற வந்துங்கிறாங்க” எனத் தொடர்ந்து கூறிய தலைவர். அங்கு நின்ற சிறுவர்களை விரட்டினார். 

பின்பு பெரியவர்களைப் பார்த்து, “இந்தா பாருங்க… கொஞ்சம் தள்ளி அப்புடியே பின்னுக்குப் போங்க; இப் புடி எல்லாரும் தொரைய சுத்தி அடைஞ்சிக்கிட்டு நின்னா எப்புடி அவுங்களுக்கு வெளிச்சம் தெரியும். பின்னுக்குப் போங்க…” எனக் கூறியபடி அங்கிருந்தவர்களைப் பின்னால் நகர்த்தினார். 

“கறுப்பையா… கருப்பையா…” 

கிளாக்கர் செக்றோலைப் பார்த்தபடி கூறினார். 

“அந்த ஆளைக் காணோமுங்க” எனக் கூறியபடி தலைவர் முன்னே வந்தார். 

“அப்போ தலைவர், நீங்க அந்தச் சம்பளத்தை வாங்கி அந்த ஆளுக்குக் கொடுங்க’ தலைவரைப் பார்த்துக் கூறினார் கண்டக்டர். 

“எண்பத்தைந்து ரூபா இருபத்தெட்டுச் சதம்” தலைவர், கறுப்பையாவின் சம்பளத்தைப் பெற்றுக்கொண்டார். 

வேறு சிலரும் தமது சம்பளத்தைப் பெற்றுக்கொள்வ தற்கு அங்கு சமுகமளிக்கவில்லை. தலைவர்தான் அவர்களுக்குரிய சம்பளத்தைப் பெற்றுக்கொண்டார். 

பின் வரிசையில் நின்றவர்களிடையே ஏதோ முணு முணுப்புச் சத்தம் கேட்டது. 

“என்னடா இது அநியாயமா இருக்கு. கறுப்பையா வவுனியாவுக்குப் போயி ரெண்டு மாசமாகுது. அவன் பேருக்கு சம்பளம் கொடுக்கிறாங்க. 

“ஆமாங்க நானும் அதுதான் யோசிச்சுக்கிட்டு இருக் கேன்…அவன் சம்சாரம் மட்டுந்தான் வூட்ல இருக்கா. அவ தான் தோட்டத்தில் வேலையில்லையே… பேரையும் வெட்டிப்புட்டாங்க. 

“என்னமோ தெரியல்ல, அந்தச் சம்பளத்தை நம்ப தலைவருதான் வாங்கிக்கிறாரு.” 

“கண்டக்டரும், தலைவரும் சேர்ந்துகிட்டு தோட்டத் தில இல்லாதவங்களுக்கு பேரு போட்டு சம்பளம் வாங்கிக்கிறாங்க போல இருக்கடா” என்றான் வேறொருவன். 

“என்னா அநியாயமா இருக்கு; போன மாசம் பூரா நான் பேரு போட்டிருந்தேன். எனக்கு சம்பளமே இல்லேங்குறாங்க” எனக் கூறிக்கொண்டே வந்தான் குப்பன். 

அவனைப் பார்த்த வீரய்யா, ”இங்க வாங்க குப்பன் சும்மா சத்தம் போடாதீங்க; கோப்புறட்டி கடையில் ஏதும் ரொம்ப சாமான் வாங்கியிருப்பீங்க… நீங்க வேலை செஞ்சது ஒங்கவூட்டு ரேசனுக்கும், கோப்புறட்டிவ் கடனுக்கும் சரியாப் போயிருக்கும்… அவுங்க கணக்கில பிழை விட மாட்டாங்க” என்றான் அமைதியாக. 

“இல்லீங்க தம்பி… போன மாசம்தான் கோப்புறட் டிக் கடையில சாமான் ஒண்ணும் இல்லியே. நான் சரியாக் கூட சாமான் வாங்கலே. ஒரு நாத்தான் இருபத்தி மூணு ரூபாவுக்கு சாமான் வாங்கியிருந்தேன். போன மாசம் பூரா என் சம்சாரமும் நல்லா வேலை செஞ்சிருந்தா. என்னா கணக்குப் பாத்து வச்சிருக்குகாங்கனு தெரியலே” என்றான் குப்பன் ஆவேசத்துடன். 

“சரிங்க அண்ணே. கொஞ்சம் பொறுங்க. கணக்கு ஏதும் வித்தியாசமா இருக்கும். சம்பளம் போட்டு முடிஞ்ச வொடன கணக்கு கேட்டுக்கிடலாம்” என்றான் அங்கிருந்த ஒருவன். 

“ராமு… ராமு…” 

கிளாக்கர் பலமாகப் பெயரை வாசித்தார். 

வீரய்யாவுடன்- கதைத்துக் கொண்டிருந்த ராமு துரையின் முன்னே ஓடினான். 

“ராமுவுக்கு அறுபது சதம் மட்டுந்தான்.” 

கிளாக்கரையாவின் குரல்கேட்ட ராமுவுக்கு திக்கென்றது. 

ஒரு கணம் மலைத்து நின்ற ராமு தன்னைச் சுதாரித்துக்கொண்டு, “நல்லா பாருங்கையா அறுபது ரூபாவா. அறுபது சதமான்னு…” 

”எனக்கென்ன கண்ணா தெரியல்ல? அறுபது சதம் மட்டுந்தான்.” 

எரிச்சலுடன் கூறினார் கிளாக்கர். 

“என்னாங்க, நான் போனமாசம் பூராவும் வேலைசெஞ் சேங்க. எனக்கு சம்பளம் அறுபது சதம்மட்டுமெங்கிறீங்க’ எனக் கிளாக்கரைப் பார்த்துக் கேட்டான் ராமு. 

“இந்தா, இப்ப ஒண்ணும் அதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கமுடியாது. நாளைக்கு வேணுமுன்னா ஆபிசில வந்து கேளு” எனக் கூறிய கிளாக்கர், தொடர்ந்து பெயர்களை வாசிக்கத் தொடங்கினார். 

துரைக்கு அவர்களது சம்பாஷணை விளங்கவில்லை. கிளாக்கரைப் பார்த்தார். 

“இவன் தனக்குச் சம்பளம் குறையுது என்கிறான்” என விளக்கம் கொடுத்தார் கிளாக்கர். 

துரை ஏதோ சிந்தித்துவிட்டுத் தலையை ஆட்டியபடி, தொடர்ந்தும் பெயர்களை வாசிக்கும்படி கிளாக்கருக்குக் கட்டளையிட்டார். 

ராமுவைப் போலவே பலர் சம்பளம் குறைவாக இருக்கிறதென்றும், சிலர் தமக்குச் சம்பளமே இல்லையென்றும் குமுறிக்கொண்டனர். 

“என்னா அநியாயமா இருக்கு. இவ்வளவு நாளா இல்லாம இந்த மாசம் மட்டும் எப்புடி சம்பளம் குறையுது” என்றான் ஒருவன் ராமுவைப் பார்த்து. 

“அதுவும் பாருங்க, ஆம்புளை ஆளுக்கா சம்பளம் கொறையுது. பொதுவா கவ்வாத்து வெட்டின ஆளுங்க ளுக்கு சம்பளமே இல்ல” என்றான் மற்றொருவன். 

“இதை இன்னிக்கு சும்மா விடக்கூடாது. சம்பளம் போட்டு முடியட்டும். என்னா சங்கதின்னு கேட்டுப்புடுறேன். சம்பளம் கொறைஞ்ச யாரும் வூட்டுக்குப் போக வேணாம். எல்லோரும் மடுவத்திலயே இருங்க” என அங்கிருந்தவர்களைப் பார்த்துக் கூறினான் ராமு. 

“இந்தா ராமு, நீ மொறட்டுத்தனமா கதைக்காதடா. சம்பளந்தானே கொறையுது? நாளைக்கு ஆபிசில சம்பளக் கணக்குக் கேட்டா சொல்லுவாங்கதானே; அப்ப என்னானு தெரிஞ்சுக்கலாம்” என வீரய்யா அவனைச் சமாதானப் படுத்த முயன்றான். 

“நீ சும்மா இரு வீரய்யா…எனக்கு வவுத்த எரியுது. இன்னிக்கே கேக்காம வுடமாட்டேன்’ எனப் பிடிவாதமாகக் கூறினான் ராமு. 

எல்லோருக்கும் சம்பளத்தைக் கொடுத்து முடித்த துரை, தனது காரில் ஏறி பங்களாவுக்குப் புறப்பட்டுச்சென்றார். 

கிளாக்கரும், கண்டக்டரும் ஏதோ கதைத்தவண்ணம் எழுந்து செல்ல முயன்றபோது, ராமு, வீரய்யா உட்பட எல்லோரும் அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். 

மாரிமுத்துத் தலைவர் கண்டக்டரின் பின்னால் தயங் கியபடி நின்றுகொண்டிருந்தார். 

‘ஐயா, எனக்கு இன்னிக்குக் கணக்கு சொல்லிட்டுத் தான் போகணும்; இல்லாட்டி நான் ஒங்கள போகவுடமாட் டேன்” என்றான் ராமு கிளாக்கரைப் பார்த்து. 

கண்டக்டரும் கிளாக்கரும் திகைத்துப்போய் நின்றனர்.  

“இந்தா ராமு, எல்லாத்துக்கும் நாளைக்குத்தாங் கணக்கு சொல்லுறது. இப்ப கொழப்பம் பண்ணவேணாங். ஒனக்கு மட்டும் இன்னிக்கு கணக்கு சொல்லிக்கிட்டு இருக்க முடியாது” என்றார் கண்டக்டர். 

“அதெல்லாம் முடியாதுங்க…இன்னிக்கு ஏங் கணக்கு பாக்காம நாங் ஒங்களை வுடமாட்டேன்.கணக்குச் சொல்லியே தீரணும்.” 

ராமு பிடிவாதமாகக் கூறியதைக் கேட்ட கிளாக்கர், இவனிடமிருந்து தப்பமுடியாதென உணர்ந்து செக்ரோல் புத்தகத்தை விரித்துக்கொண்டே, ”இந்தா நீ எத்தனை யாம் பெரட்டு… சுறுக்கா சொல்லு… ஒனக்கு மட்டுந்தான் சொல்லுவேன்” என்றார். 

“எட்டாம் பெரட்டுல பாருங்க.” 

“போன மாசம் பூரா வேலையா நீ?”

“ஆமாங்க. இருபத்தாறு நாளு பேர் போட்டிருக்கேன்” என்றான் ராமு. 

கிளாக்கர் செக்ரோலைப் பார்த்தபடி, “நீயென்னப்பா சொல்லுற, பதினேழு நாள்தான் நீ வேலை செஞ்சிருக்கே” எனக் கூறினார். 

“அப்ப எனக்கு ஒன்பது நாள் பேர் போடயில்லியா? எந்தெந்த நாளுங்க எனக்கு பேரு போடலேனு பாருங்க” 

“நீ போன மாசத்தில பதிமூணாம் தேதி வேலையில்ல. அப்புறம் பதினாறு, பதினேழு, பதினெட்டு… இருபத்திமூணாந் தேதி வரைக்கும் வேலையில்ல.” 

எனக் கூறிய கிளாக்கர் புத்தகத்தை மூடமுயன்றார். அப்போது அங்கிருந்த மற்றவர்களும் பிடிவாதமாகக் கணக்குக் கேட்கத் தொடங்கினர். கிளாக்கரால் மறுக்க முடியவில்லை. 

நிலைமையைப் புரிந்துகொண்ட கண்டக்டர் மெதுவாக அவ்விடத்தைவிட்டு நழுவித் தன் பங்களாவை நோக்கிச் சென்றார். 

கிளாக்கர் எல்லோருக்கும் விபரமாக வேலைக் கணகைக் கூறத் தொடங்கினார். 

“என்னாங்க தலைவரு, ஒங்ககிட்டதானே நான் பதின் மூணாந் திகதியில இருந்து கவ்வாத்து வெட்டினேன். எப்படி ஒம்பது நாள் பேரு கொறையும்?” எனப் பலமாகக் கத்தினான் ராமு. 

“இந்தா ராமு, சத்தம் போடாத. நான் ஒழுங்காத் தான் பேர் எழுதி ஐயாகிட்ட கொடுத்தேன். இதில ஏதோ தவறு நடந்திருச்சி… ஒனக்கு ஒம்பது நாள் பேருதானே கொறைஞ்சுபோயிருச்சி… பேசாம இரு; நான் ஐயாகிட்ட சொல்லி அந்தப் பேரைப் போடச் சொல்லிப்புடுறேன்” எனக் கூறி அவனைச் சமாதானப்படுத்த முயன்றார் தலைவர். கண்டக்டர் பேர் போடாமல்விட்ட விஷயம் இப்போதுதான் தலைவருக்குப் புரிந்தது. 

கவ்வாத்து வேலையெல்லாம் கொன்றாக்கில் போட்டு சல்லி எடுத்ததுமில்லாம, ஆளுகளுக்குப் பேரும் போடாம வுட்டிட்டு, இப்ப பங்களாக்கு வேற போயிட்டாரு. இவங்களோட நான்தான் மாட்டிக்கிட்டு கெடக்கிறேன்” தனக்குள் முணுமுணுத்துக்கொண்டார் தலைவர். 

“அதெல்லாம் முடியாது… எப்புடி எல்லாத்துக்கும் பேரு கொறையும்? இந்தா பாருங்க… இவுங்க எல்லாம் ஒங்ககிட்ட போன மாசம் கவ்வாத்து வெட்டினவங்க. இவங்க எல்லாத்துக்குமே பேரு இல்லே… எல்லாத்துக்கும் பேரு வாங்கிக் கொடுக்க முடியுமா?” என்றான் வீரய்யா அங்கிருந்தவர்களைச் சுட்டிக்காட்டி. 

“இந்தா பாரு வீரய்யா, நான் எல்லாருக்கும் ஒழுங் காத்தான் பேரு போட்டேன்…இது நம்ப கண்டக்கையா வோட தவறுதான். இதை எப்புடியாச்சும் அவருகிட்ட சொல்லிக் கேப்போம். ஏம்மேல ஒண்ணும் குத்தமில்லே.” 

தலைவருக்குக் கண்டக்டரின் மேல் கோபம் கோபமாக வந்தது. தன்னை நடுக் கடலில் தள்ளிவிட்டு, அவர் மட்டும் கரை சேர்ந்துவிட்டார் என்ற உணர்வு அவருக்கு ஆத்திரத்தை ஊட்டியது. 

“சும்மா மழுப்பாதீங்க; நீங்களும் கண்டக்கையாவும் சேந்து செஞ்ச வேலைதான் இது. இவ்வளவு நாளும் இல் லாம இப்ப எப்புடி புதிசா ‘கொன்றாக்’ வேலை வந்திச்சு? அதுவும் எல்லா ‘கொன்றாக்’ வேலையும் ஓங்க பேருலேயே கண்டக்கையா போடுறாரு.. தோட்டத்தில நீங்க ஒரு ஆளு மட்டுந்தான் இருக்கிறீங்களா? வேற ஒருத்தரும் இல்லியா?” ராமு ஆவேசமாகக் கத்தினான். 

“ஆமா,ஆளுகளுக்குப் பேர் போடாம ஓங்க கொன் றாக் வேலையெல்லாம் செஞ்சு நல்லா சல்லி அடிச்சிட்டீங்க” என அங்கிருந்த ஒருவன் கூறினான். 

“நீங்க எங்க தலைவரா இருந்துகிட்டே இப்புடி செய்ய லாமா? ஒரு தலைவரே இப்புடி நடந்தா தோட்டம் என்னத் துக்கு உருப்படும். இப்புடி செய்யிறது உங்களுக்கே நல்லா யிருக்கா?” வீரய்யா ஆத்திரத்தில் குமுறினான். 

“இன்னும் என்னென்ன நடந்திருக்குமோ தெரியாது; அந்தக் கண்டாக்கு பூனைமாதிரி நடந்துகிட்டு தோட்டத்தில் நல்லா வெளையாடுறான்’ குழுமி நின்றவர்களது பக்கத்தி லிருந்து ஒரு குரல் ஒலித்தது. 

”வவுனியாவுக்குப் போன ஆளுக்கு செக்றோல்ல பேரு விழுகுது; அந்தச் சல்லிய நீங்க வாங்கி கண்டக்கையா கையில கொடுப்பீங்க… இங்க தோட்டத்தில் கஷ்டப்பட்டு ஒழைக்கிறவங்க பேரை வெட்டிப்புடுறீங்க.” 

வீரய்யா ஆவேசமாகக் கத்தினான். 

“நாங்க எல்லாம் தோட்டத்தில் தூங்கிக்கிட்டு இருக்கோமுனு நெனைச்சீங்களா? இனிமே சும்மா விடமாட் டோம்;புதிசு புதிசா வேலைக்கு வந்து எல்லாரும் தோட் டத்தை சொறண்டுறானுக. ஏழைங்க வவுத்தில் இல்லியா அடிக்கிறாங்க.” 

இன்னொரு குரல் கூறியது. 

“இந்த கோப்புறட்டி மனேஜரும் கண்டக்கோட கூட் டாளிதான்; அவன் கோப்புறட்டிக் கடையில இருந்துக் கிட்டு ஆளுங்கவூட்டு அரிசியைக் கொள்ளை அடிக்கிறான். இந்த இரண்டு மூணு மாசமா கோப்புறட்டிக் கடையில ஒரு சாமாங்கூட இல்ல.வர்றரேசன் சாமானெல்லாம்எங்க கொண்டுபோய்க் கொடுக்கிறாங்களோ…?” குப்பன் குமுறினான். 

“அந்த வண்டா மொதலாளிதான் இவுங்களோட சுத் திக்கிட்டுத் திரியிறான். அங்கதான் எல்லா சாமானமும் போயிருக்கும்.எல்லாரும் ஒண்ணா வந்து சேர்ந்துக்கிட்டானுக.’” 

“இனிமேலும் நம்ப இப்புடி பாத்திக்கிட்டு இருக்கமுடி யாது. எல்லாத்துக்கும் சுறுக்கா ஒரு முடிவு கட்டணும். அதுக்கு மொதல்ல இந்தத் தலைவரையே மாத்தணும்; அப்பதான் இந்தத் தோட்டம் உருப்படும்” என்றான் பக்கத்தில் நின்ற வேறொரு தொழிலாளி. 

“இனிமே ஒங்களைத் தலைவரா வைச்சிருந்தா நாங்க எல்லாம் மண்ணோட அழியவேண்டிய துதான்” ராமு பட படத்தான். 

“நீங்க இன்னையில் இருந்து எங்களுக்குத் தலைவரில்ல” குப்பன் ஆத்திரத்துடன் கத்தினான். 

அங்கு நின்ற எல்லோரது குரல்களும் அவ்வாறு மீண்டும் மீண்டும் முழங்கின. 

அத்தியாயம் பத்தொன்பது

நடுச்சாம வேளை. வெகு நேரமாக நிலைகொள்ளாமல் தவித்துக்கொண்டிருந்த மாரிமுத்துத் தலைவர் ஏதோ முடி வுக்கு வந்தவராக வெளியே புறப்பட ஆயத்தமானார். 

‘இந்தா பாருங்க…நான் சொல்லுறேன்னு கோவிச் சுக்கிறாதீங்க. நாளைக்கி வேலைக்காட்டுல வச்சி சொல்லிக்கிட லாமுங்க. இந்த நேரத்துல நீங்க மட்டும் எப்புடிங்க ஒத் தையா போவீங்க?” கலக்கத்துடன் கேட்டாள் பூங்கா. 

”என்னாடி வெளங்காம கதைக்கிற? ஒனக்குக் கொஞ்ச மாவது மூளை இருக்கா? வேலக் காட்டுல வச்சி எப்புடி இந்தவெசயத்த கண்டக்கையாகிட்ட சொல்லுறது?யாராச் சும் கண்டாங்கன்னா அப்புறம் என்னைய உயிரோடை வைக்கமாட்டானுங்க” மாரிமுத்துத் தலைவரின் பதிலில் சினம் தொனித்தது. 

“அங்க கதைக்கமுடியாட்டி நாளைக்கி கொஞ்சம் வெள் ளனாவே கண்டக்கையா வூட்டுக்குப் போகலாந்தானே. இன் னிக்கு ஒரு ரவைக்கு மட்டும் பொறுத்துக்கிட்டு இருங்க. சரியான இருட்டா இருக்குங்க.எனக்கு என்னமோ பயமா இருக்கு. இந்த நேரத்துல கண்டக்கையா வூட்டுக்குப் போறதை யாரும் கண்டுகிட்டாங்கனா…” 

“இந்த நேரத்துல யாரு காங்கப் போராங்க?எல்லாந் தான் நல்லா தூங்குறாங்களே. இத இன்னிக்கே கண்டக் கையாகிட்ட சொல்லாட்டி அப்புறம் நாம இந்தத் தோட் டத்துலயே இருக்கமுடியாது.”
 
“நான் அப்பவே தலையால் அடிச்சிக்கிட்டு இருந்தேனே… கேட்டீங்களா? இந்த கண்டக்கையாவோட கவனமா இருங்க…இருங்கனு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தேன். செய்யிறத எல்லாம் செஞ்சிப்புட்டு அவரு சொகமா பங்களாவில இருக்காரு. இங்க ஆளுங்ககிட்ட மாட்டிக் கிட்டு கெடக்கிறது நீங்கதான்” என்றாள் பூங்கா. 

“இந்தக் கண்டாக்கு இப்புடியெல்லாஞ் செய்வான்னு யாரு கண்டது? தோட்டத்து வேலைங்களை எல்லாம் சுறுக்கா முடிக்கணுமுனுதானே கவ்வாத்தெல்லாம் ஏம் பேருக்கு கொந்தரப்பு கொடுத்தான். வேலை செஞ்சவங்களுக்கு இப்புடி பேர் போடாம விடுவான்னு எனக்கு அப் பவே தெரிஞ்சிருந்தா, நான் அவேன் பேச்சையே கேட்டுக்க மாட்டேன்” என்றார் மாரிமுத்துத் தலைவர் கவலையுடன். 

“இவ்வளவு காலமா இல்லாம ‘இந்தக் கண்டக்கையா பேச்சக் கேட்டு சுத்திக்கிட்டு திரிஞ்சிங்களே; இப்ப பாத்தீங்களா…? இந்தத் தோட்டத்து ஆளுங்க எல்லாத்துகிட்டேயும் கெட்ட பேரு வாங்கியாச்சி.” 

“அடியே… வாயை மூடு; சும்மா அது இதுனு சொல்லி எனக்குக் கோவத்தக் கிண்டாத. இந்தத் தலைவரு வேலைய நான் பாத்துகிட்டு இருக்கல.ஏதோ கொந்தரப்புக்கு எடுத்து வேலை செஞ்சா நாமளும் நாலு பணம் தேடிக்கிற லாமுனுதான் செஞ்சேன். இந்தக் கண்டாக்குபய இவ்வளவு அநியாயம் செய்வான்னு யாரு கண்டாங்சு. எல்லாத்துக்கும் சேத்து இப்பவே அவருக்கிட்ட கதைச்சி ஒரு முடிவு கட்டிப் புடுறேன்” எனக் கூறிய தலைவர் லேஞ்சியை எடுத்துத் தலையில் சுற்றிக்கொண்டார். 

“இதெல்லாம் எங்க போய் முடியுமோ தெரியாது. இனிமே இந்த கண்டக்கையாவூட்டு சகவாசமே நமக்கு வேணாம். நாம பாட்டுக்கு நம்ப வேலைய செஞ்சிக்கிட்டு இருப்போம். இந்தத் தோட்டத்து ஆளுங்க பேசுற பேச்சி எல்லாம் எனக்குக் கேட்டுக்கிட்டு இருக்கமுடியாது” எனக் கூறிய பூங்கா மெதுவாகக் காம்பராவின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். 

அவசர அவசரமாகக் கோட்டை எடுத்து அணிந்து கொண்ட தலைவர், “என்னா பூங்கா…யாராச்சும் இருக்காங்களா?” எனக் கேட்டவாறே அவளின் அருகே சென்றார். 

“ஒருத்தருமில்லீங்க… சுறுக்கா போயிட்டு, போன வொடன வந்திடுங்க’ எனக் கிசுகிசுத்தாள் பூங்கா. 

தலைவர் வெளியே இறங்கி நடக்கத் தொடங்கினார்.

எங்கும் இருள் சூழ்ந்து அமைதியாக இருந்தது. தூரத்து மலைக்குன்றுகள் யாவும் கருமையாகக் காட்சியளித்தன. எங்கோ நாய் ஊளையிடும் சத்தமும், இனந் தெரி யாத ஒலிகளும் இரவை மேலும் பயங்கரமாக்கிக்கொண்டிருந்தன. 

கண்டக்டரின் பங்களாவை அடைந்ததும் சுற்றுமுற் றும் பார்த்துவிட்டு, வாசற்படியை நெருங்கி,கண்ணாடியின் ஊடாக உள்ளே பார்த்தார் தலைவர். பின்பு மெதுவாக, ‘ஐயா…ஐயா…’ எனக் கூப்பிட்டார். அவரது குரல் அந்த இரவில் சற்றுப் பலமாகவே ஒலித்தது. 

சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. 

“என்னாங் தலைவர்… என்னா நடந்தது? ஏன் இந்தநேரத் துல வந்தது? உள்ளுக்கு வாங்க.” 

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்கவேண்டும். அதனாலே தான் தலைவர் அந்த நேரத்தில் அங்கு வந்துள்ளார் என்பதைக் கண்டக்டர் ஊகித்துக்கொண்டார். 

“என்னாங்கையா, ரொம்ப தர்மசங்கடமாப் போயி ருச்சி; நீங்க செஞ்சது ரொம்பவும் சரியில்லீங்க. தோட்டமே குழம்பிக் கெடக்கு” என்றார் தலைவர் படபடப்பாக. 

“என்னாங் தலைவர் சொல்லுறது? நமக்கு ஒன்னுங் வௌங்க இல்லைத்தானே ; இப்போ என்னாதாங் நடந்து போச்சு?” 

“என்னாங்க அப்புடி கேக்குறீங்க? நீங்க ஆளுங்களுக்கு பேரு போடாம விட்டதுனால சம்பளத்து வாசல்ல வச்சி எல்லாரும் ஏங்கிட்ட கரச்சலுக்கு வந்துட்டானுங்க…” 

“அப்படியா விஷயங்… யார் கரச்சலுக்கு வந்தது?” 

“தோட்டத்து ஆளுங்க எல்லாமே ஒன்னா சேந்துகிட் டாங்க; இப்போ கொஞ்ச நேரத்துக்கு முந்தி என்னால வூட்டுல இருக்கமுடியலீங்க. நல்லாக் கள்ளுத் தண்ணிய குடிச்சிப்புட்டு வந்து கண்டக்கையாவுக்கு பந்தக்காரன்…வால் புடிக்கிறவன்… அந்த ஆண்டி,இந்த ஆண்டின்னு ஊத்தப் பேச்சில ஏசிப்புட்டாங்க” என்றார் தலைவர். 

“ஆங், அதிக்கி ஒன்னுங் பயப்புடவேனாங் தலைவர். நாங் நாளைக்கே பொலிசுக்கு சொல்லி அவுங்க எல்லாத்துக்குங் செம்மையா ஒதைக்க சொல்லுறேங்” என்றார் கண்டக்டர் அலட்சியமாக. 

”என்னாங்கையா அப்புடி சொல்லுறீங்க. நீங்க பேர் போடாம விட்டதுனாலதானே இப்ப கரச்சலே வந்திருக்கு. இனி பொலிசுக்கு வேற போனா என்னா கரச்சு வருமோ தெரியாது.ஒங்கமேல குத்தத்த வச்சிக்கிட்டு என்னாங்க ஐயா… இப்புடி பேசிறீங்க.” 

தலைவர் இப்படிக் கூறியதும் கண்டக்டருக்குக் கோபம் பொங்கிக்கொண்டு வந்தது. 

“என்னாங் மோடத்தனமா கதைக்கிறது? ஒங்களுக்கு நாங் ஒதவி செஞ்சதுனாலைதாங் இப்புடி வந்தது. ஒங்க கொன்றேக்கில வேலை செய்யிறதுக்குதான் நாங் ஆளுங் களை கொடுத்தது. அதிங்னால தாங் நாங் அந்த ஆளுங்களுக்கு பேர் போடாமவிட்டது.” 

“நீங்கதானே சொன்னீங்க… கொன்றாக்கில வேல செய்யுற ஆளுங்களுக்கு செக்குறேலுல வேற வேலையில பேர் போட்டுப்புடுறேன்னு; இப்ப என்னடானா பேர் போடாமவுட்டுபுட்டீங்க… இது அநியாயமா இல்லியா இருக்கு” என்றார் தலைவர். 

“ஒங்களுக்கு அதிங் ஒன்னுங் வௌங்காது தலைவர். இப்ப தோட்டத்தில குடுக்குற ‘எஸ்டிமேட்டில. தொரைக்கு சரியா வேலைக்கணக்கு காட்டவேனுங்… அந்த ஆளுங்களுக்கு சொல்லுங்க, அந்த கொறைஞ்ச பேர் எல் லாங் அடுத்த மாசத்தில நான் போட்டுத்தாரது சொல்லி’ என்றார் கண்டக்டர் தலைவரைச் சமாதானப்படுத்தும் நோக்கத்துடன். 

“அது எல்லாம் என்னால சொல்லமுடியாதுங்க. ஒரே முடிவோடதான் எல்லாரும் இருக்காங்க… ஜில்லாவுக்குப் போய் சொல்லி இதப்பத்தி வெசாரணை வைக்கோனுமுனு சொல்லிப்புட்டாங்க. இப்போ வெசாரணை வச்சாங்கனா ஒங்களுக்குதாங்க பெரிய கரச்ச வரப்போவுது” என்றார் தலைவர். 

“என்னாங் தலைவர் நம்மளை மெரட்டப் பாக்கிறது. 

நானா ஒப்பங் வச்சி சல்லி எடுத்தது? நீங்கதானே ஒப் பங் வச்சி எல்லாத்திக்கும் சல்லி வாங்கினது. நம்பளை யாருங் ஒன்னுங் செய்யமுடியாது” என்றார் கண்டக்டர் பலமாக. 

“அப்புடினா, என்னைய மட்டும் மாட்டப்பாக்குறீங்க போல இருக்கு.நான் வாங்கின சல்லி எல்லாங் ஒங்ககிட்ட தானே கொடுத்தேன். நீங்க மட்டும் தப்பிச்சுக்கிறலாமுனு பாக்குறீங்களா?” எனப் படபடத்தார் தலைவர். 

“ஆமாங் தலைவர்… நீங்க தப்பிச்சுக்கோனுமுனா ஆளுங்ககிட்ட அது இதுனு சொல்லி ஒருமாதிரி சமாதா னமா கதைச்சி வச்சிக்குங்க. இல்லையன்னா ஒங்களுக்கு மிச் சங் கரச்சல் வாறது; இந்தத் தோட்டத்து ஆளுங்களால நம்மளை ஒண்ணும் செய்யமுடியாது” என்றார் கண்டக்டர். 

“இப்ப அப்புடித்தாங்க சொல்லுவீங்க.நானுந்தாங்க பத்து வருஷமா தலைவரு வேல செஞ்சிக்கிட்டு வாரேன். ஆனா, இந்த மாதிரி ஒரு நாளும் அவமானப்பட்டது இல் லேங்க. ஏம் பேச்சி கேட்டு நடந்தவங்க எல்லாம் இப்ப என்னைக் கெட்டவனென்னு சொல்லுறாங்க. அது மட்டுமா. என்னைய தலைவரு வேலையில் இருந்து விலக்கிப்புட்டு அந்த வீரய்யாவ தலைவரா வைக்கப்போறாங்களாம். நீங்க இப்புடி செய்வீங்கனு நான் கொஞ்சங்கூட நினைக்கலீங்க” என்றார் தலைவர். 

“இந்தா பாருங் தலைவர்… தோட்டத்துல யாரும் புதிசு புதிசா தலைவரா வந்து இங்கே ஒன்னும் செய்யமுடி யாது.நாங் மத்த ஆள் மாதிரி பயந்துகிட்டு இருக்கிற ஆள் ல்ல. தோட்டத்துல யாருங் கொழப்பங் பண்ணி கரச்ச லுக்கு வந்தா அப்புறங் என்ன நடக்குமுனு சொல்லத் தெரியாது.” 

கண்டக்டரின் வார்த்தைகள் கோபத்தில் தடுமாறின. 

“ஒங்க பேச்ச கேட்டு நடந்தேனுங்களே, என்னைத் தாங்க செருப்பாலை அடிக்கனும். நீங்க இப்புடி செய்வீங் கனு எனக்கு முன்னமே தெரிஞ்சிருந்தா நான் இந்த வேலை யில இறங்கியிருக்கமாட்டேங்க. என்னைய தோட்டத்தில தலைகாட்ட முடியாம செஞ்சுப்புட்டீங்க.” 

”இந்தா…நீங்க கொன்றேக்குல சல்லி வாங்கிறப்போ பேசாம இருந்தது.ஆளுங்க கரச்ச வந்தவொடனதாங் நம்மலை குந்தங் சொல்லுறது.” 

“இவ்வளவு நாளும் தோட்டத்து சல்லியதான் எடுத் துக்கிட்டிருந்தீங்க. இப்ப ஆளுங்க வவுத்துலேயும் அடிக்கத் தொடங்கிட்டிங்க.இனிமே ஒங்ககூட பேசுறது கண்டாலே ஆளுா ங்க என்னை உயிரோடை வைக்கமாட்டாங்க. இது எல்லாம் எங்க போய் முடியுமோ தெரியாது” மாரிமுத்துத் தலைவர் குமுறினார். 

“சும்மா வளவளனு கதைக்கவேணாங் தலைவர்… நான் ஒங்களுக்கு உதவி செஞ்சிதான் சல்லி எடுத்துக் கொடுத் தது;உங்களுக்கு விருப்பங் இல்லாட்டி விட்டுப்போடுங்க. நமக்கு தூக்கம் வாறது… நாங் படுக்கப் போறது. நீங்க ஒங்களுக்கு முடிஞ்சா எதுசரி செய்யுங்க. நம்மளை ஒன்னுங் செய்யமுடியாது’ எனக் கூறிக்கொண்டே பெரிய கொட் டாவி விட்டபடி எழுந்திருந்தார் கண்டக்டர். 

கண்டக்டர் இப்படிக் கூறியதும், இனி அவருடன் கதைப்பதில் பிரயோசனமில்லை என நினைத்த தலைவர், கோபத்துடன் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டார். 

‘இந்த கண்டாக்கு பயகூட இனிமே சகவாசமே வச்சி ருக்கக்கூடாது; செய்யிறது எல்லாம் செஞ்சிப்புட்டு கடைசியில நழுவிக்கிற பாக்குறான்’ என எண்ணியபடி வீட்டை நோக்கி நடந்தார் மாரிமுத்துத் தலைவர். 

அத்தியாயம் இருபது

இஸ்தோப்பில் ஒரு பக்கத்திலே வைத்திருந்த குப்பிலாம்பு ஒளி உமிழ்ந்து கொண்டிருந்தது. அதன் அருகே போடப்பட்டிருந்த வாங்கில் அமர்ந்திருந்த வீரய்யா ஏதோ சிந்தனையுடன் தனது நண்பர்களின் வரவுக்காகக் காத்திருந்தான். 

வெளியே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. கையில் தீப்பந்தத்துடன் யாரோ வந்து கொண்டிருந்தனர். 

ராமுவும் செபமாலையுந்தான் வருகிறார்கள் எனப் புரிந்து கொண்ட வீரய்யா இஸ்தோப்பில் நின்றபடி வெளியே எட்டிப் பார்த்தான். 

“இவ்வளவு நேரமா என்னடா செஞ்சிக்கிட்டிருந் தீங்க; நான் வெள்ளணவே வரச் சொல்லியிருந்தேனே” எனக் கேட்ட வீரய்யா கதவைத் திறந்து விட்டான். 

கையில் இருந்த பந்தத்தை ஊதி அணைத்துவிட்டு உள்ளே நுழைந்த செபமாலை, இப்போதான் டவுனுல இருந்து வந்தேன்; வூட்டிலை சாமான் இல்லேனு சொல்லிக்கிட்டிருந் தாங்க. வாங்கிக் குடுத்திட்டு வாறதுக்கு கொஞ்சம் சொணங்கிப் போயிடிச்சு’ எனக் கூறினான். அவனைத் தொடர்ந்து ராமுவும் வேறு சில இளைஞர்களும் உள்ளே நுழைந்தனர். 

அவர்கள் எல்லோரும் சுவர் ஓரமாக வைக்கப்பட் டிருந்த வாங்கில் அமர்ந்து கொண்டனர். 

“இப்போ நம்ப தோட்டம் போய்கிட்டு இருக்கிற போக்கே சரியில்லை; இதப்பத்தி ஒங்களோட கதைக்கலா முனுதான் நான் எல்லாத்தையும் வரச்சொன்னேன். 

வீரய்யா நேரடியாக விஷயத்துக்கு வந்தான். 

”ஆமா வீரய்யா, தோட்டத்த அரசாங்கம் எடுத்த தில இருந்து எல்லாமே தலைகீழாகத்தான் நடந்துகிட்டு வருது” என்றான் ராமு. 

“அண்ணே… இன்னிக்கு நம்ப தோட்டத்துக்கு ஆறு பேரு சுப்பவைசர் வேலைக்கு வந்திருக்காங்க.நம்ப தோட் டத்தில உள்ள படிச்ச பொடியங்க எல்லாம் வேலைக்கு அப்பிளிக்கேசன் போட்டோம். ஆனா ஒருத்தனுக்குக் கூட வேலை கெடைக்கல்ல.” 

“போட்ட அப்பிளிக்கேசனுக்கு பதில்கூட வரலீங்கண்ணே” 

“அதுமட்டுமில்லே ராமு, இப்ப வேலைக்கு வந்தவங் களுக்கு வேலையே தெரியாதுடா. இனிமேதான் பழக்கப் போறாங்களாம். ஒண்ணுமே தெரியாதவங்களை கொண்டு வந்து போட்டு தோட்டத்தை நாசமாக்கப் போறாங்க” என்றான் வீரய்யா. 

“எல்லாரும் வால் புடிச்சு வந்தவங்கபோலத் தெரி யுது. தேயிலை மரத்தையே கண்ணால் காணாதவங்க நம் மளுக்கு வேலை படிச்சுக்கொடுக்க வந்திருக்காங்க” என்றான் செபமாலை. 

“தோட்டத்திலையே பொறந்து வளந்து படிச்ச எங்களுக்கு வேலை இல்லேங்குறாங்க. எங்கையோ கெடந்தவங்க எல்லாத்துக்கும் வேலை குடுக்கிறாங்க 

“அண்ணே … நம்ம ஸ்கூலுக்கு ரெண்டு சிங்கள மாஸ்டர் மார்களை அனுப்பியிருக்காங்க. அந்த வேலைய நம்ம தோட்டத்துல படிச்சிட்டு இருக்கிற பெடியங்களுக்கு கொடுத்திருக்கலாந்தானே” என ஆதங்கத்துடன் கூறினான் செபமாலை. 

“சிங்கள வாத்தியாருங்களை புடிச்சி அனுப்பியிருக்காங்களே, அவுங்க நம்ப புள்ளைங்களுக்கு என்னத்தைத் தான் படிச்சி கொடுக்கப் போறாங்களோ தெரியாது” 

“நம்ப புள்ளைங்க படிச்சா என்ன…? கெட்டுப் போனாதான் என்ன…? அவுங்களுக்கு அதப்பத்தி கவலை யில்லை. மாஸ்டர் மாருங்களுக்கு சம்பளம் மட்டும் கெடைச்சா சரி” என்றான் செபமாலை. 

“நம்ம வருங்கால புள்ளைங்க வூட்டு வாழ்க்கையே படிப்பிலதான் இருக்கு. அதையே நாசமாக்குறாங்க; இந்த அநியாயத்த பாத்துக்கிட்டு சும்மா இருக்கக்கூடாது” என்றான் வீரய்யா. 

இவர்களது சம்பாஷணையைக் கேட்டவண்ணம் காம் பராவில் இருந்த மீனாச்சி, “என்னங்க தம்பி… தோட்டம் அரசாங்கம் எடுத்த புதிசுல என்னென்னமோ செய்யப் போவுதுனு சொல்லி நீங்கதான் பேசிக்கிட்டீங்க; இப்ப நீங்களே இப்படி கதைக்கிறீங்க. எங்களுக்கு ஒண்ணுமே வௌங்கலே” என்றாள் பலமான குரலில். 

“அப்புடியில்லீங்க அத்தை… அரசாங்கத்தோட கொள்கையெல்லாம் நல்லதுதான்… ஊடையில இருக்கிறாங்களே… இந்த வாலு புடிக்கிற பயலுக, அவங்கதான் இந்த மாதிரி வேலையெல்லாம் செஞ்சிகிட்டு வாறாங்க” என்றான் செபமாலை. 

“இப்ப பாருங்கண்ணே …நம்ப தோட்டத்துக்கு எத் தினை பேரு வேலைக்கு வந்துட்டாங்க. யாரைப் பாத்தாலும் அவுங்க சப்போட்டுல வந்த ஆளுங்களாத்தான் இருக்குறாங்க” 

“யாரா இருந்தாலும் பரவாயில்லையடா, வர்றவங்க எல்லாம் சொரண்டுற பயலுகளாக இல்லியா இருக்காங்க என்றான் வீரய்யா. 

“ஆமாங்கண்ணே, புதிசா கண்டக்கையா வந்தாரு; ஆறுமாசத்திலேயே தோட்டத்தைக் காடாக்கிட்டா… அவரு வந்ததிலயிருந்து தேயிலைக்கு ஓரம் போட்டதையே நாங் காங்கலே. ஒழுங்கா மருந்தடிக்காம தேயிலையெல் லாம் பூச்சி வச்சிக் கெடக்குது. இப்புடியே போயிக்கிட்டு இருந்தா இன்னும் கொஞ்சக் காலத்தில கொழுந்தே வராது” என்றான் சுவரிலே சாய்ந்தபடி நின்ற இளைஞன். 

“அதுமட்டும் இல்லேடா, நம்ப லயத்து ரோட்டுங் களுக்கெல்லாம் தோட்டக் கணக்கில ஆள்போட்டு துப்புர வாக்குவாங்க; பீலியில தண்ணி வராமப் போனா ‘ரிப்பர்’ பண்ணிக் கொடுப்பாங்க… இந்தக் கண்டக்கையா வந்ததில இருந்து இதெல்லாம் ஒண்ணுமே செய்யல” என்றான் ராமு. 

“ஆமாடா ராமு, இந்த வேலையெல்லாம் செஞ்சு முடிஞ்சதாக் கணக்குக்காட்டி கண்டக்கையா சல்லி அடிச் சிருப்பார். இப்ப புதிசா வந்திருக்கிற பெரிய கிளாக்கரும் அவருடைய கூட்டாளிதானே; ரெண்டுபேருமா சேந்து வெளையாடியிருந்தா யாருக்குத் தெரியப் போவுது?” 

”அது எப்புடிங்கண்ணே, இவுங்களுக்கு சல்லி அடிக்க முடியும்; தொர கண்டுக்கிட மாட்டாரா?” என்றான் இளைஞனொருவன். 

“அதுதாண்டா வௌங்கல, இப்ப தொரையும் சரியா மலைக்கு வேலை பாக்க வாறதில்லை. எல்லாம் கண்டக் கையா பொறுப்புலேயே நடக்குது. நம்ப மாரிமுத்துத் தலைவரும் ஐயா பின்னுக்கே சுத்திக்கிட்டு திரியிறாரு. ஒண்ணுமே புரியமாட்டேங்குது” என்றான் ராமு சிந்தித்தவாறு. 

“தோட்டத்தில் இப்ப நடந்துகிட்டு வாறதப்பாத்தா நெனைச்சது ஒண்ணு நடக்கிறது ஒண்ணா இருக்கு; நாம நல்லா மாட்டிக்கிட்டம் போல தெரியுது” என்றான் செப மாலை. 

“இனிமே நாம் இப்படியே சும்மா இருந்திடக் கூடாது. இதுங்களுக்கு நடவடிக்கை எடுக்கணும். மொதல் வேலையா யூனியன் மூலமா அரசாங்கத்துக்கு நம்ப எதிர்ப் பைத் தெரிவிக்கோனும்” என்றான் வீரய்யா. 

“ஆமாங்கண்ணே நீங்க சொல்லுறபடி செய்வோம்” என ஆமோதித்தான் செபமாலை. 

“அதுமட்டுமில்லே நீங்க எல்லாரும் முக்கியமாக ஞாப கத்துக்கு வச்சிக்கிற வெசயம் என்னடான்னா, இனிமே நாம எல்லாம் பயப்புடாம எதுக்கும் எதிர்த்து போரா டத் தயாரா இருக்கணும்” என்றான் வீரய்யா ஆவேசமாக. 

வீரய்யா கூறிய சொற்கள் அங்கிருந்த இளைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவர்கள் இப்போது எதற்கும் அஞ்சாதவர்களாக மாறத் தொடங்கினர். 

அவர்களது மனதில் ஆவேசம் துளிர்த்து சுடர்விடத் தொடங்கியது.

– தொடரும்…

– குருதிமலை (நாவல்), முதற் பதிப்பு: ஜூலை 1979, வீரகேசரி பிரசுரம், கொழும்பு.

தி.ஞானசேகரன் தி. ஞானசேகரன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவரும் ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரும் ஆவார். இவர் இச்சஞ்சிகையை 2000ஆம் ஆண்டு சூனிலிருந்து வெளிக்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.தற்போது ஞானம் சஞ்சிகையை இணையத்தில் கிடைக்கக்கூடியவாறும் வெளியிட்டு வருகின்றார். வாழ்க்கைக் குறிப்பு நீண்டகாலம் வைத்தியராகக் கடமை புரிந்து வரும் ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக் கல்வியினையும் இடைநிலைக் கல்வியினையும் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்டார். பின்னர் கொழும்பிலே தமது மருத்துவக் கல்வியினைப்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *