சமூகத்தின் அவலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 21, 2025
பார்வையிட்டோர்: 1,046 
 
 

(2025ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலையில் எழுந்து கால்நடையாக அருகில் இருக்கும் பூங்காவிற்குச் செல்வது ரகுவின் வழக்கம். சில மாதங்களாக பணிச்சுமையால் நடக்காமல் போகவே, இன்று முதல் எப்படியாவது தினமும் பூங்காவிற்கு சென்று நடந்துவிட வேண்டும், இயற்கைச் சூழலை அனுபவித்து விடவேண்டும், கால ஓட்டத்தில் நம்மை இழந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று ரகுவை பூங்காவிற்கு வரவைத்தது.

சென்னை மயிலாப்பூரில் வசிக்கும் ரகுவின் வீட்டிலிருந்து சுமார் 7 நிமிடங்கள் தொலைவில் தான் நாகேஸ்வரராவ் பூங்கா இருக்கிறது. பூங்காவிற்குள் நுழைந்ததும் சிறு குழந்தையாகிப் போன ரகு மெல்ல நடக்க ஆரம்பித்தார்.

எதிரே நடந்து நடந்து வரக்கூடிய ஒவ்வொரு மனிதரையும் கவனித்தபடியே மெதுவாக நடக்கத்தொடங்கி, கொஞ்ச நேரத்தில் தன்னுடைய நடையின் வேகத்தைக் கூட்டி நடந்து கொண்டிருந்தார்.

எதிரில் யாரேனும் நடந்து வரும்போது சற்றே விலகி வழி விட்டு நடந்த படி, குழந்தைகள் விளையாடுவதை ரசித்தபடி.. சின்னச் சின்ன பூச்செடிகள் தொடங்கி வானுயர்ந்து நிற்கும் மரங்கள் வரைக்கும் பார்த்தபடியே நடை பயணம் தொடர்ந்தது.

தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவுகளின் பிறந்தநாளன்று ஏதாவது ஒரு செடியோ அல்லது மரக்கன்றோ வாங்கி வந்து இந்தப் பூங்காவில் நடுவது ரகுவின் வழக்கமாக இருந்து வருகிறது.

அப்படிப் பல வருடங்களாகத் தான் நட்டு வைத்த மரங்களை, செடிகளை அடையாளம் கண்டு ஆத்ம திருப்தியோடு அவற்றோடு அளவளாவுதல் ரகுவுக்கு பிடித்த பொழுதுபோக்கு.

மனிதர்களோடு உரையாடும்போது கருத்து வேறுபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அவை ஏதுமில்லாமல் கனிவோடு கேட்டுக் கொண்டிருக்கும் இந்த இயற்கையிடம் எப்போதுமே ரகுவிற்கு அலாதிப் பிரியம் தான்.

தான் வளர்த்த செடிகளை எல்லாம் பெருமையுடன் பார்த்துக் கொண்டே இன்னும் சில சுற்றுகள் நடந்த போது அங்கே தரையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப் பானைகள் ரகுவை ஈர்த்தன.

மூன்று நாள்களுக்கு முன்பு தான் அரசாங்கத்திலிருந்து தண்ணீர்த் தொட்டிகள் வைப்பதைப் பற்றி பிரபலமாக அறிவிப்பு செய்யப்பட்டு அங்கே பானைகள் வைக்கப்பட்டு தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது ரகுவிற்கு ஒரே மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சி எல்லாம் மூன்று நாள்கள் தான் போலும். பானையில் தண்ணீர் இருந்தவரை கொடுத்த வாக்கும் இருந்திருக்கிறது. தண்ணீர் முடிந்ததும் பானையை இறக்கி கீழே வைத்து விட்டார்கள்.

எப்போதுமே சமூக அக்கறையுடன் செயல்படக் கூடிய ரகுவிற்கு உறுத்தலாக இருக்கவே அங்கே இருக்கக்கூடிய காவலாளியிடம்,

“என்ன ஆயிற்று? ஏன் இந்தப்பானைகளில் தண்ணீர் இல்லை?” என்று கேட்க,

அந்தக் காலவாளி “அத்த ஏன் சார் கேக்கீறீங்க.. தண்ணீர் நிரப்பும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் முதல் வாரம் மட்டுமே அனுப்பினார்.

அதற்குப் பிறகு அனுப்பவில்லை. வெறும் பானையை வைத்து என்ன செய்வது சார்? அதனால்தான் இறக்கி வைத்து விட்டோம்” என்று சொல்லவும்

மனதிற்குள் ஒரு கசப்பை உணர்ந்தவாரே.. தன்னுடைய சுய இலாபத்திற்காக விளம்பரம் தேடிக் கொள்வதற்காக மக்களுக்குத் தொண்டு செய்வது போன்று நடிப்பது எல்லாம் என்ன செய்கை என்று எண்ணியவாறு… சரி நாம் வந்த வேலையைப் பார்ப்போம் என்று மீண்டும் நடக்கத் தொடங்கினார்.

வழியில் ஒரு சிறுபிள்ளை உதிர்ந்து கிடந்த பூக்களை எல்லாம் ஒவ்வொன்றாகத் தன் உள்ளங்கையில் அடுக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து ரசித்தபடியே சில வருடங்களுக்கு முன்பாக விதைப்பந்து செய்யக்கூடிய ஒரு நிகழ்வை இதே பூங்காவில் நடத்திய அனுபவத்தை நினைவு கூர்ந்தபடியே சிரித்தபடி நகர்ந்தார்.

சுமார் ஒரு லட்சத்திற்கும் மேலான விதைப்பந்துகளை தனது பிள்ளைகள் மற்றும் அருகிலிருக்கும் வீட்டுப் பிள்ளைகளுடன் இணைந்து செய்து ஆங்காங்கே அந்த விதைப் பந்துகளை குழந்தைகள் கையில் கொடுத்து வீசச் செய்து இயற்கையைக் காக்கும் முக்கிய நிகழ்வாய் இருந்தது.

அந்த இனிய அனுபவம் மனதிற்கு இனிப்பாக இருந்தது. அசை போடுவது ரகுவிற்கு பிடித்த விடயம். எப்போதோ நடந்த நிகழ்வுகளை எல்லாம் இப்போது நடந்தது போலவே சிலாகித்து நெஞ்சினிக்க நினைத்தபடியே நடப்பது வழக்கம். ஒருவழியாக நடைப்பயிற்சி முடிந்து பொடிநடையாக வீட்டிற்கும் வந்து சேர்ந்தாயிற்று.

உடலுக்கு ஊறு விளைவிக்காத எத்தனையோ உணவுப் பொருட்கள் நம் கலாச்சாரத்தில் இருக்கிறது. அதில் ஒன்று நீர்மோர். கெட்டியான தயிரில் தண்ணீரை ஊற்றி நன்றாகச் சிலுப்பி அதில் கொஞ்சம் உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மல்லித்தழை, இஞ்சி சேர்த்து அருந்துதல் ரகுவிற்குப் பிடித்த விடயம்.

அதேபோல் நீர்மோர் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்திற்கு இன்ஷூரன்ஸை புதுப்பிப்பதற்காக கிளம்ப வேண்டும் என்று எண்ணியவர், ஒரு பத்து மணிக்கு மேல் போகலாம். அப்போது தான் பள்ளி வாகன நெரிசல் எல்லாம் இருக்காது என்று எண்ணியபடி காலை உணவை முடித்துக்கொண்டு பத்து மணிக்கு கிளம்பிப் பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்திற்கு சென்று திருவான்மியூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டார்.

திருவான்மியூரில் இறங்கி செல்ல வேண்டிய இடத்திற்குச் சென்று, வந்த வேலையை முடித்துவிட்டு மீண்டும் பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்காக ஷேர் ஆட்டோ ஒன்றில் ஏறி பேருந்து நிலையத்தை வந்தடைந்தார். ஆட்டோவிற்கு பணம் கொடுப்பதற்காக தன்னுடைய பர்ஸில் இருந்து பணம் எடுத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஓர் இருசக்கர வாகனம் வேகமாக வந்து ரகுவின் கால்களில் பின்னிருந்து மோதியது.

இதை எதிர்பாராத ரகு நிலை தடுமாறிக் கீழே விழுந்து விட… அருகில் நின்ற ஒரு மனிதரும், இவரோடு ஷேர் ஆட்டோவில் வந்த மற்றொருவரும் ரகுவைக் கைத்தாங்கலாகப் தூக்கிப்பிடித்து எழுப்பிவிட்டனர். ரகுவை நிறுத்தியபடி “பரவாயில்லையா?” என்று கேட்டுக் கொண்டிருக்க…

என்ன நடந்தது? எப்படி இது நடந்தது? என்று யோசித்துப் பார்த்தால், வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு பெண் தனக்கு முன்னால் சென்ற காரை முந்திக் கொண்டு போகும் முயற்சியில், வந்த வேகத்தில் காரில் மோதவும், அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனம் தரையை உரசியபடி கிடைக்கையாகச் சரிந்தபடியே வேகமாக வந்து சும்மா நின்று கொண்டிருந்த ரகுவின் மேல் மோதியது.

அருகில் இருந்த ஒட்டுமொத்த மக்களும் ஒன்று சேர்ந்தபடி அந்தப் பெண்ணிடம் “என்னம்மா பரவாயில்லையா? ஒன்னும் பிரச்சனை இல்லையே?” என்று கேட்டது ரகுவிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

அந்தப் பெண் செய்த தவறினால் இங்கே ரகுவிற்கு ஏற்பட்ட விபத்தை அவர்கள் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை.

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்தப்பெண் “என் கைபேசியைக் காணோம்’ என்று சொல்லவும்,

இந்த மக்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பார்த்த ரகுவிற்கு மனதிற்குள் சமுதாயத்தில் இருக்கும் சீர்கேட்டையும், அக்கறையற்ற தன்மையையும், பொறுப்பற்ற தன்மையும் நினைத்து எரிச்சல்தான் வந்தது.

தவறே செய்திருந்தாலும் ஒரு பெண்ணுக்கு கொடுக்கக்கூடிய அத்தனை கவனம் அங்கே சம்பந்தமே இல்லாமல் அடிபட்டு விழுந்து கிடக்கும் ஓர் ஆணுக்கு கிடைப்பதில்லை. இது என்ன சமுதாய கட்டமைப்பு? என்று எண்ணியபடியே மெதுவாக நடந்து, துணைக்கு வந்த அந்த இருவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, அவர்கள் உதவியுடன் பேருந்தில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்.

நல்ல வேளையாக சின்ன சிராய்ப்பு மற்றும் காயங்களுடன் லேசாகப் போயிற்று. இதுவே வேறு எங்காவது அடிபட்டு இருந்தால் அவரின் நிலைமை என்ன ஆயிருக்கும்?! யாரோ ஒருவர் செய்யக்கூடிய தவறினால் சும்மா நின்று கொண்டிருந்த மனிதருக்குச் சோதனை ஆகிப்போனது. இதுவே சுய உணர்வு இல்லாத சமூகத்தின் அவலம்.

– ஜூலை 2025, அன்புப் பாலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *