சங்கிலித்தொடர்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 7, 2025
பார்வையிட்டோர்: 622 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மெல்லிய கீச்சுக்குரலை அலைபாயவிட்டபடி தாயின் முலைகளுக்குள் புகுந்து விளையாடின அந்தப் பிஞ்சுப் பூனைக்குட்டிகள். அப்பொழுதைக்கு சற்று முன்னர்தான் புத்தம் புதிய அந்த மூன்று பூனைக்குட்டிகளும் இப்பூவுலகில் வந்து விழுந்திருந்தன. இன்னும் கண்கள் சரியாகத் திறபடாத நிலையில், தாய்ப்பூனையின் ஸ்தனங்களைக் கவ்வி இழுத்து குஸ்தி போட்டுக் கொண்டும், குட்டிக்கரணம் போட்டுக் கொண்டுமிருந்தன அவை. 

அந்தப் பெரிய வீட்டின் கடைசி அறையில் பழைய தட்டுமுட்டுச் சாமான்களுக்கிடையில் கிழிந்த துணிகள் நிறைந்து கிடந்த காட்போட் அட்டைப் பெட்டிக்குள்தான் அவற்றின் பிரசவம் நடந்தது. சில தினங்களாக இரவிரவாக உருண்டு திரிந்த தாய்ப்பூனை தன் பிரசவத்திற்கென தேடிக் கண்டுபிடித்திருந்த அந்த இடம் பஞ்சு மெத்தை போன்று ரொம்ப மென்மையாக இருந்தது. கால்களை அகல விரித்த படி மல்லாந்து கிடந்து, தனது குட்டிகள் ஆசைதீர பால் குடிக்குமட்டும் அமைதியாக அவற்றின் ஹிம்ஸைகளைப் பொறுத்துக்கொண்டு வாளாவிருந்தது அது. சற்று முன்னர் பிரசவ வேதனையில் துடித்துக்கதறினாலும் சற்று ஆசுவாசமாக இருந்தது அதற்கு. 

குட்டிகள் பால் குடித்து ஓய்ந்தபின்னும், அதன் முளைக்காம்புகளில் வலி மீதிருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. மெல்ல எழுந்து, பெட்டிக்குள்ளிருந்து குதித்து வெளியே சென்றது. 

சற்றைக்கெல்லாம் அந்த வீட்டுக்காரப்பெண்—அந்த அறையை ஒட்டியிருந்த வராந்தாவில் ஏதோ செய்துகொண்டிருந்த அந்தப்பெண்—அறைக்குள் இருந்து வருகின்ற கீச்சுக் குரலைக் கேட்டுவிட்டாள். சற்று நேரம் நின்று, அந்தச் சத்தம் எங்கிருந்து வருகின்றதென உன்னிப்பாக அவதானித்தாள். பின்னர், ஏதும் தீர்மானிக்க முடியாதவளாக ‘எதற்கும் சென்று பார்ப்போம்’ என்ற எண்ணத்தில் அறைக்குள் மெதுவாக நுழைந்தாள். நுழைந்ததுமே அந்தக் கீச்சொலி எங்கிருந்து வருகின்ற தென்று அவளால் அறிய முடியுமாகி விட்டது. நேராக சென்று அட்டைப் பெட்டிக்குள் எட்டிப் பார்த்தாள். மூன்று குட்டிகளும் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தன. 

அதைப் பார்த்ததுமே முகத்தைச் சுளித்தாள். அவளுக்கு ஏறத்தாழ முப்பத்தைந்து வயதிருக்கும். திருமணமாகி பல வருடங்கள் கழிந்துவிட்டபோதும் குழந்தை குட்டிகள் ஏதும் இல்லாதவள். அதே மனக்குறையுடன் வேளைக்கு மூன்று வகை மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டு சதா ஏங்கிக் கொண்டிருப்பவள். எப்போதும் தூசி துப்புரவாக வீட்டையும், வீட்டுச் சூழலையும் வைத்திருப்பவள்; தான் கை துடைப்பதற்கும், கால் துடைப் பதற்கும் வைத்திருந்த பழந்துணிகளையெல்லாம் பூனை பிரசவத் தீட்டினால் நாசமாக்கி விட்டது என்பதை உணர்ந்த போது அவளது முகமும், மூக்கு நுனியும் சிவந்து போயின. “சனியன், இருக்கிற வேல போதாதுண்டு இது வேற…..” என்று முணுமுணுத்தபடியே வெளியே சென்றாள். 

சுகமாக உறங்கிக் கொண்டிருந்த பூனைக்குட்டிகளின் அழகு எப்போதும் மருந்தின் எரிவும், மனசின் எரிச்சலும் அடங்கிய அந்தப் பெண்ணின் வேகத்தைக் குறைக்க முடியவில்லை. நேரே தன் கணவனிடம் போய் நின்றாள்…. 

“இங்க பாருங்க…ஸ்டோர் ரூமுக்குள்ள பூன குட்டி போட்டிருக்கு….” 

அவள் முடிக்குமுன் அவன் தொடர்ந்தான். 

“அதுதான் ராவு ராவா ஏதோ சத்தம் கேட்டுக் கொண்டே இருந்திச்சி போல. காட்போட் பெட்டிக்குள்ள தானே..!” 

“வந்து என்னமாவது செய்யுங்களேன். சுருக்கா நா வூட்டக் கூட்டி முடிக்கணும்…” 

அவள் அவசரப்படுத்த அவன் எழுந்து சென்றான். சிறிது நேரத்தில் அந்தப் பூனைக்குட்டிகளுடன் சேர்த்து அட்டைப் பெட்டியும் வெளியே வீசப்பட்டது. குப்பைக் குழியருகில் கவிழ்ந்து கிடந்த பெட்டிக்குள்ளிருந்து துணிகள் சிதறின. ஏதுமறியாத குட்டிகள் நிலத்தில் வந்த விழுந்தன. முற்பகல் வெயிலின் உஷ்ணம் ஏற ஏற அவை மீண்டும் மீண்டும் கீச்சிடத் தொடங்கின. இரண்டு குட்டிகள் சற்று நடக்க வாரம்பிக்க, ஒன்று மட்டும் தூங்கியபடியே. 

குட்டிகளுக்குப் பால் கொடுப்பதற்குத் தேவையான உணவைத் தேடி உண்டு பசியாறிவிட்டு வந்த பூனை வீட்டுக்குள் சென்று குட்டிகளைத் தேடி, காணாமல் வெளியே வந்து பார்த்தது. குப்பைக்குழியருகில், கடும் உஷ்ண வெயிலில் தன் குட்டிகள் பரிதாபமாகக் கீச்சிடும் குரல் அதன் இதயத்தையே கிழித்தது. ஓடிச்சென்று குட்டிகளை இழுத்து ஒன்று சேர்த்து தனது வயிற்றுக்கடியில் வைத்து படுத்துக் கொண்டது. சிறிது நேரத்தில் உச்சி வெயில் ஏறி உக்கிரமாக எரிக்கத் தொடங்கிற்று. 

‘முன்னம் இந்த வீட்டில் குடியிருந்த அம்மாள் எங்கே?’ என்று திடீரென எண்ணிக் கவலையுற்றது தாய்ப்பூனை. எங்கிருந்தோ அனாதரவாக வந்த என்னை “கிட்டி” என்று பெயரிட்டு, சோறு வைத்து எவ்வளவு இரக்கம் காட்டினாள்? ஒவ்வொரு முறையும் பயமில்லாமல் குட்டிபோட முடியுமே அவளிருந்தால்! குட்டிகள் வளர்ந்து, தானாகவே உணவு தேடும் காலம்வரை பொறுமையாக இருந்து, பின்னர் மெதுவாக தூரத்தில், தோட்டத்தின் மூலையில் இருக்கின்ற பழைய காருக்குள் கொண்டுபோய் மெத்தென்று வைத்து விடுவாளே… அதுமட்டுமல்ல, மாலைப் பொழுதுகளில் தனது குழந்தை களோடு அங்கு வந்த நின்று குட்டிகள் விளையாடும் அழகை ரசித்துக் கொண்டிருப்பாளே… அவ்வளவா? கொஞ்சம் கூடப் பொறுப்பேயில்லாமல் வாழை மரத்தின் உச்சியில் ஏறிப் பிராண்டிக் கொண்டுருக்கும் ஆண் பூனையைக் காட்டி, “சப்ரான்…. அங்க பாரு, அதுதான் இந்தக் குட்டிகள்ட வாப்பா பூன” என்று முத்திரையும் குத்தி இனங்காட்டுவாளே….மகராசி எங்கே போனாள்? 

யோசனையுடன் தனது குட்டிகளைத் தன்முகத்தால் நீவி விடத் தொடங்கியது. தன்னைப்போல முதுகில் வெள்ளையும், வயிற்றில் கபில நிறமும் கொண்ட ஒரு குட்டி… தந்தையைப்போல முழு சாம்பல் நிறத்தில் மற்றது… இரண்டும் கலந்த நிறங்களில் கடைசிக்குட்டி. இந்தக் குட்டி களைப் பார்த்தாலும்கூட அவள் சந்தோஷத்தில் என்னென்னவோ கதை சொல்லுவாள் என்று சிந்திக்கையிலேயே கண்ணீர் உகுக்கத் தொடங்கிற்று. 

மேலும் அழுதுகொண்டிருக்க முடியாது என்கின்றவாறு கடைசிக்குட்டி பரிதாபமாக மூசத் தொடங்கிற்று. உச்சி வெயில் வேறு வாட்டத் தொடங்கியது. கிட்டி எழுந்து சுற்று முற்றும் பார்த்தது. அந்தக் குப்பைக்குழி மூன்று வீடுகளுக்குப் பொது வானது. 

அந்தத் தோட்டத்தில் குப்பைக்குழியின் கிழக்குப் பக்கமாக இருந்த சிறிய வீட்டைத் தேர்ந்தெடுத்தது கிட்டி. முதல் குட்டியைக் கவ்வியபடி மெதுவே நடந்து சென்று வீட்டுக்குள் நுழைந்தது. முன்ஹோலில் யாருமில்லை. அதையொட்டிய அடுத்த ஹோலுக்கு வந்து அங்கிருந்து மேலே பரணுக்குத் தாவியது. அது கொங்க்ரீட் பரண். என்றாலும் ஆபத்துக்குப் பாவமில்லை. குட்டியைப் போட்டு விட்டு, இரண்டாவது குட்டியை கவ்விக்கொண்டு பரணில் ஏறுகையில், ஏதோ காரியமாக அந்த ஹோலுக்கு வந்த வீட்டுக்காரி தற்செயலாக மேல் பரணைப் பார்த்துப் பயந்துவிட்டாள். பேசாமல் ஒதுங்கி நின்று அது எங்கே செல்கின்றது என்று கவனித்தாள். அது பரண்மேலே மறைந்து கொண்டதும், இடத்தை அறிந்துகொண்ட திருப்தியுடன் அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள். 

காரணம், அவள் நிறைமாத கர்ப்பிணி. ஓடியாடி எதுவும் செய்ய முடியாத நிலை. எதைக் கண்டாலும் வெறுப்பும் சலிப்பும் ‘இந்தச் சுமையை எப்போது கீழிறக்கு வோம்…’ என்ற சிந்தனை யும், பயமுமாக அவளது காலம் கழிந்து கொண்டிருந்தது. இது இரண்டாவது பிரசவம். மூத்த குழந்தையின் ரோதனை வேறு அவளை வாட்டியது. இனி குழந்தைகளே பெற்றுக்கொள்ளக் கூடாது என்ற வைராக்கியம் ஒரு கயிறு போன்று இறுக அவளை சுற்றிக் கொண்டிருந்தது. கணவனும் அப்போது அருகில் இல்லாத படியால் அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. 

கடைசிக் குட்டியை சென்று பார்த்தபோது அது பேச்சு மூச்சற்றுக் கிடந்தது. ஆம். அது இறந்து போயிருந்தது. தான் பட்ட கஷ்டங்கள் யாவும் வீணாகி விட்டாற் போன்ற ஓர் உணர்ச்சியால் மௌனமாக அழுதுகொண்டே குப்பைக் குழியருகே சிறியதொரு குழியைத் தோண்டி அதனைப் புதைத்தது கிட்டி. “என்ன செய்வது? நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். மீந்திருக்கும் இரு குட்டிகளை யாவது காப்பாற்ற வேண்டும்” தனக்குள் சொல்லிக்கொண்டு, அந்த நினைப்பில் ஓடோடிச் சென்று குட்டிகளுக்குப் பால் கொடுக்கத் தொடங்கிற்று. 

இரவு குழந்தையைத் தூங்கவைத்துவிட்டு கணவன் அருகே வந்து பெரும் சிரமத்துடன் சரிந்து, ஒருக்களித்துப் படுத்துக்கொண்டபோது, பூனைக்குட்டிகளின் சப்தம் பரண் மேலிருந்து கேட்க, “இங்க பாருங்கப்பா…லாபிரா தாத்தா வூட்டுல குட்டி போட்ட பூன இங்க வந்துருச்சி…” என்று கணவனிடம் சொன்னாள். 

கணவன் உடனே எழுந்து சென்று, படிகளில் ஏறி எட்டிப் பார்த்தான். தாய் குட்டிகளை மறைத்து பாலுாட்டிக் கொண்டிருந்தது. நீண்ட கம்பொன்றை எடுத்து லேசாக பூனையின் வயிற்றில் குத்தினான். அது எழுந்து நிற்க, குட்டிகள் இரண்டும் கூச்சலிட்டன. இப்போது ஒன்றும் இந்த இரவு வேளையில் குழப்ப வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு இறங்கினான். 

அவள் கேட்டாள், “எத்தனை குட்டி?” 

“ரெண்டு…” 

“மூணு குட்டின்னு சொான்னாளே லாபிராத்தா. ஒரு குட்டிய தின்னுருச்சோ என்னவோ?” 

“ஏன்…?” அவன் புரியாமல் கேட்டான். 

“குட்டி போட்ட பூன எப்பவும் ஒரு குட்டிய தின்னுரு மாம். அதுதான் அது புள்ள பெத்த வருத்தத்துக்கு மருந்தாம். ஆச்சி சொல்லுவாங்க…” 

அருவருப்புடன் சொல்லி முடித்தாள். சிறிது நேரம் சென்று அந்த அருவருப்பு நீங்க, மறுபடி கேட்டாள். “இப்ப இதுகள என்ன செய்றது?” 

“காலைல பாப்போம்.” 

தாய்ப்பூனையும். இரண்டு குட்டிகளும் மீண்டும் குப்பைக் குழியருகே வீசப்பட்டன. குப்பைக் குழியின் எதிர்ப்புறத்தில் வெறுமனே திறந்து கிடந்த வீட்டை இப்போது கிட்டி தேர்ந் தெடுத்தது. அவ்வீட்டில் குப்பைக் குழியின் பக்கமாகத் திறந்திருந்த ஜன்னலுக்கூடாக, கிட்டி வாயில் குட்டியைக் கவ்விய படி உள்ளே குதித்தது. நல்லவேளையாக அறைக்குள் யாரும் இல்லை. அந்த வீட்டுக்காரி சேகரித்து வைத்திருந்த காகிதங்கள் நிறைந்த கூடைக்குள் ஒவ்வொன்றாக இரண்டு குட்டிகளையும் கொண்டுவந்து போட்டுவிட்டு ஆசுவாசப் பெருமூச்சு விட்டது கிட்டி. இந்த இடமும் பறிபோய்விடக்கூடாதே என்று அதன் நெஞ்சம் பதைத்துக் கொண்டிருந்தது. 

கரகரவென்ற காகிதத் துண்டுகள் உராயும் சப்தம் கேட்டு வீட்டுக்காரி வந்து எட்டிப் பார்த்தாள். காகிதக் கூடை யின் வெளிப்புறமாக நடமாடித் தொடங்கியிருந்த குட்டிகள் சட்டென உள்ளே சென்று பதுங்கிக் கொண்டன. கொஞ்ச நேரம் அமைதியாக நின்று, தான் அவ்விடத்தை விட்டு போய்விட்டது பொன்று பாவனை காட்டினாள் அவள். என்ன ஆச்சரியம்! தாய்ப்பூனை அப்போதுதான் வெளியே போயிருந்தது. எச்சரிக்க யாரும் இல்லாத காரணத்தால் குட்டிகள் மேலே வந்தன. “ஏய்…ஓடிவாங்களேன்…” கூவிக்கொண்டே சென்றவள் கணவனது கையைப் பிடித்து இழுத்து வந்தாள். 

“ஏய்….இங்க பாருங்க.. லாபிரா தாத்தா வூட்டுல குட்டி போட்ட பூன இங்க வந்துருச்சிபோல. ரெண்டு குட்டி….” கணவன் சொன்னான். 

“அப்படியே கொண்டு வெளிய கொட்டினா சரி…” 

அவனது குரலைக் கேட்டுக்கொண்டு வீட்டின் வெளிப் புறமாக படுத்திருந்த கிட்டி விசனமுற்றது. ‘ஐயோ. திரும்பவும் அக்கிரமம் நடக்கப் போகிறது… ‘உள்ளம் கலங்கிற்று. 

மனைவியோ சற்றும் எதிர்பாராதவிதமாகக் கூறினாள். வேணாம். வேணாம். பாவம் குட்டி போட்ட பூன… கொஞ்ச நாளக்கி இருந்துட்டுப் போகட்டும்….” 

சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சொன்னாள். “பூன குட்டி போட்டா ஏழு இடம் மாத்தும்ன்டு சொல்லுவாங்களே… அதுதான் இங்க கொண்டு வந்துருச்சி போல….” 

அவள் பெட்டியை இலேசாகக் கவிழ்க்க குட்டிகள் இரண்டும் பக்கவாட்டில் வந்து விழுந்தன. அவை சரிந்து விழுந்தபோது அவளது இதயம் வலித்தது. அக்குட்டிகளின் பிஞ்சுக்கால்களும், குழந்தை முகமும் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது நாலரை வயதுக் குழந்தையை ஞாபகமூட்ட சிலிர்த்துப் போனாள். 

தனது குழந்தை குழறிக் குழறிப் பேசியதும், பின் “உம்மா” என்று தெளிவாக அழைத்ததும் அகச்செவியில் கேட்டது. ரஸ்மியா தள்ளாடித் தள்ளாடி எழுந்து நின்றதும், பின் தத்தித் தத்தி நடை பயின்றதும் அவளது நினைவுகளில் சொட்டின. இரண்டு கன்னங்களிலும் குழிவிழ, குறும்புப் புன்னகை பூத்த மழலைப் பருவம் மனக் கண்ணில் தெரிந்தது. இன்று அந்தக் கட்டங்களையெல்லாம் கடந்து தன் குழந்தை நன்றாக ஓடி விளையாடி, தெளிவாக அமுதமொழி பேசத் தொடங்கிவிடவே, இப்போது அவள் பக்கத்து வீட்டுக் குழந்தைகளை அள்ளியணைத்து, கொஞ்சி மகிழ்ந்து தனது ஆசைகளைத் தீர்த்துக் கொண்டிருந்தாள். 

மெதுவாக தனது கணவனின் முதகுப்புறம் நெருங்கி அவனது தோள்களைச் சுரண்டி “யப்பா” என்றாள். 

அவன் நிமிர்ந்து பார்த்தான். 

“இந்தக் குட்டிகளப் பாத்தால் சின்னத்துல எங்கட ரஸ்மியா குட்டி பொறந்தது ஞாபகம் வருதுப்பா….” என்றாள். 

“ம்…” அவனும் தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டாலும், அவள் பூடகமாக எதையோ சொல்ல வருகிறாள் என்பதை மையலில் மினுமினுக்கும் அவளது விழிமொழியில் புரிந்து கொண்டான். அதற்குள் அவளது மூன்று பிள்ளைகளும் முன்வாசலில் பேசிக்கொண்டே சப்பாத்துகளைக் கழற்றும் அரவம் கேட்கவே, அவர்கள் பாடசாலையிலிருந்து வந்து விட்டார்கள் என்பதையும், தன்நிலையையும் சட்டென உணர்ந்து கொண்டவளாக சுதாகரித்து விலகி நின்று கொண்டாள். பின்னர், கீழே விழுந்த குட்டிகளைத் தூக்கி மீண்டும் பெட்டிக்குள் போட்டுவிட்டு கேட்டாள். 

“அதில்ல….இந்தப் பூன மூணு மாசத்துக்கு முந்தி தானே குட்டி போட்டது…? அதுக்கிடையில இன்னொருக்காவா…?” 

அவள் கதையை மாற்றிவிட்டாள் என்பதை அவன் லேசாகப் புரிந்து கொண்டான். வெளியே, திண்ணையோரமாக வீட்டின் பக்கவாட்டில் படுத்திருந்த கிட்டியோ முற்றாகவே உணர்ந்து கொண்டது. 

‘அடி பெண்ணே, நாலு புள்ள பெத்த ஒனக்கே இன்னும் ஆச அடங்கல்லியே… எனக்கு மட்டும் கதை சொல்றியே..’ என்று நினைத்துக்கொண்டது அது. 

– மல்லிகை 43வது ஆண்டு மலர், ஜனவரி 2008. 

– முடிவில் தொடங்கும் கதைகள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2012, நூலாசிரியர் வெளியீடு, கெகிறாவ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *