கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 11, 2025
பார்வையிட்டோர்: 184 
 
 

(1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்போது நண்பகல் மணி பத்தேகால்….! அதெப்படி அவ்வளவு துல்லிதம்..? ஆம்; எதிரே இருக்கும் உயர்நிலைப்பள்ளியின் இடைவேளை மணியொலித்துக் கொண்டிருந்தது. வகுப்பறைகளிலிருந்து மாணவர்கள் குதூகலத்துடன் ஓட்டமும் நடையுமாக வெளியேறிக் கொண்டு இருக்கின்றார்கள். அதனைப் பார்த்து அவர் தனக்குள் சிரித்துக் கொள்கின்றார். தனக்குள் என்பது ஒரு தார்மீகம் தான்…! அந்தச் சிரிப்பின் எதிரொலி முகத்திலும் பிரதிபலித்தது. அதற்கு என்ன காரணம்?

பல்வேறு குற்றங்களைப் பல்வேறு காலக் கட்டங்களில் புரிந்து விட்டு தண்டனை பெற்று சிறைச் சாலையில் இருப்போர் சுதந்திர காலப் பிரகடனமாகத் தண்டனை நீக்கம் பெற்றால் எவ்வாறு முண்டியடித்துக் கொண்டு விரிவுலகைக் காண வெளியேறிக் கொண்டிருப்பார்களோ அத்தகைய மகிழ்ச்சித் துள்ளல் வெளியேற்றம் போல்; மாணவர்கள் இடைவேளைப் பொழுதுக்கு வகுப்பறைகளிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் காட்சி அமைந்திருக்கிறது என்று வித்தியாசமானதொரு கற்பனை செய்து கொண்டதன் விளைவுதான் இந்த முகமலர்ச்சிக்குக் காரணமோ…?

இந்த நண்பகல் நேரம் முதல் மாலை ஐந்து மணி வரை ஓய்வாக இருந்து காட்சிகளிலும் வானொலியின் கானங்களிலும்ம் சிந்தனைகளிலும் இலயித்துப் போய் விடுவார். அவருக்கு வேலை அவசரமும் நெருக்கடியும் காலை மணி ஏழு மணிமுதல் ஒன்பது மணி வரைதான். அப்புறம் மாலை ஐந்து மணி முதல் ஆறரை மணிவரைதான். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் வாடிக்கையாளர்களின் “குறையை” நிறைவு செய்து கொண்டிருப்பது தான். இதில் அவசரம் நெருக்கடி எதுவும் இருப்பதில்லை.

சிறகடித்துக் கொண்டு “கீச் கீச்” என்று ஒலியெழுப்பிய வண்ணம் ஒருமித்துப் பறந்து சென்று மரக்கிளைகளிலும் மின்சாரக் கம்பி வடங்களிலும் அமர்ந்து; பின், ஏதோ ‘கண்ணாமூச்சி’ விளையாடும் குழந்தைகளைப் போல் திடீரெனக் கூட்டம் கூட்டமாக எழுந்து பறக்கும் சிட்டுக் குருவிகளின் கட்டுப்பாடற்ற சுதந்திர ஓட்டத்தைக் கண்டு களிப்பதைப் பொழுது போக்காகக் கொண்ட அவர், அந்தப் பள்ளி மாணவர்களின் “விடுதலை வெளியேற்றத்தையும்” வியந்து பார்த்துக் கொண்டிருப்பார்.

இத்தகைய அபூர்வ சிந்தனை மனிதர் யார்…? அத்தகைய சிந்தனைச் செல்வர் ஒரு செருப்பபு தைக்கும் தொழிலாளி….! இனத்தில் சீனர்; ஏறத்தாழ எழுபது வயதை எட்டிக் கொண்டிருக்கும் இந்த நாட்டின் பழம் பெரும் குடிமகன்; சிங்கப்பூரியர்…!

அன்றைய நண்பகலில் மிகவும் ஓய்வாக இருந்தார். வாடிக்கையாளர்கள் கொடுத்துச் சென்ற காலணிகளைச் செம்மைப்படுத்தி வைத்து விட்டார். காலப் பொழுதின் நெரிசல் “மினுக்கல்” (போலிஷ் போடுதல்) ஆனதை, வாடிக்கையாளரின் மனங்கோணாமல் செய்து அனுப்பி விட்டார். இனியென்ன மிச்சம்…? சிந்தனைச் சிறகடித்து சிட்டுக்குருவி போல் பறந்து கொண்டிருந்தார்.

இருபது நிமிடம் எப்படித்தான் கழிந்ததோ; மீண்டும் பள்ளியின் மணி ஒலித்தது. மாணவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வகுப்பறைகளை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். இப்போதும் அந்த முதியவர் ஓர் அரிய கற்பனையில் மூழ்கிச் சிரித்துக் கொண்டிருந்தார்.

அந்த முதியவரின் இதயத்துக் கற்பனை தான் என்ன…? அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும் ஆயிரக்கணக்கானோரை அடக்குமுறைக் காவல் சட்டத்தின் மூலம் கைதிகளாக்கிச் சிறைக்கனுப்பும் போது, கெடு பிடிகளின் உந்துதலில் “கியூ பை கி யூ வாகச்” சிறைச்சாலை ஏகுவோர் போல், வகுப்பறைகளுக்குச் சென்று கொண்டு இருக்கின்றார்களா? இந்த விபரீதச் சிந்தனையின் விதிர்ப்பில் திளைத்திருந்தார்.

ஏதிரே இருந்த பள்ளியில் மாணவர்கள் நடமாட்டம் அடங்கி ஒடுங்கி விட்ட நிலை….! ஆம்; பாடங்கள் தொடங்கி விட்டன. இனி மாணவர்கள் சிறைக் கைதிகள்; ஆசிரியர்கள் அறிவுரையாளர்கள்…! உயர்நிலைப்பள்ளி வழக்கமான கால அட்டவணைப்படி செயல்பாடுகளில் திளைத்திருந்தது.

இந்த முதியவர் இப்போது புதிய சிந்தனை ஒன்றில் ஆழ்ந்து கொண்டிருந்தார். தனது பள்ளிப் படிப்புக் காலச் சிந்தனை….! அவருடைய ஆசிரியர் அப்போது கேட்ட கேள்வியையும், அதற்கான பதிலாக மாணவர்களாகிய தங்களுக்குள் எவரும் சொல்லாத நிலையில் ஆசிரியரே சொன்ன விடையையும் இப்போது எண்ணிப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்.

இதோ ஒரு நேர்க்கோடு; இதனை அழிக்காமல் குலைக்காமல் இந்தக் கோட்டைச் “சிறியதாக்க” வேண்டும். என்று ஆசிரியர் ஓர் அறிவுச் சோதனையை எழுப்பினார். என்ன பதில்…? அந்த வகுப்பில் இவர் உட்பட எவருக்கும் அது புரியவில்லை…!

ஆசிரியர் மாணவர்கள் அனைவரையும் பார்த்து, “அட மர மண்டுகளா இது கூடவா புரியவில்லை..? என்று ஏசிக் கொண்டே கரும்பலகையில் ஒரு கோட்டைப் போட்டுக் காட்டி: இந்தக் கோட்டுக்குக் கீழே அல்லது மேலே ஒரு நீண்ட கோடு போட்டு விட்டால், ஏற்கனவே போட்ட இந்தக்கோடு இயல்பாகவே சிறியதாகி விடுமல்லவா? என்று விளக்கம் கூறினார். அப்போது இவர் உட்படப் பலரும் தங்கள் தலையில் தாங்களே குட்டிக் கொண்டார்கள. மிகச் சிலர் மட்டும் “பூ”…! இவ்வளவுதானா….? என்று சிலிர்த்துக் கொண்டனர்.

அந்த முதியவர் காரண காரியம் இல்லாமல் எந்தவிதச் சிந்தனைக்கும் ஆட்படுவதில்லை. அவரது இன்றைய இப்போதைய சிந்தனைக்கும் ஆத்மார்த்தமான காரணம் இருக்கத்தான் செய்தது.

ஏறக்குறைய இருபத்தைந்து ஆண்டு காலத்துக்கு முன்னம் இந்த மெக்ஸ்வல் சாலையில் சில கடைகளும், ஏதோ ஓர் சந்து போல் அமைந்திருந்த “பெக்சியா’ சாலையின் கடை வரிசைகள் மட்டும் இருந்தன. உயர்ந்த கட்டிடங்கள் என்று எதுவும் தோன்றவில்லை. இப்படிப் பட்டதொரு காலக் கட்டத்தில் தான் இந்த மெக்ஸ்வல் சாலையில் எப்போதோ கட்டப்பட்ட கூரைக் குடிசை ஒட்டுக் கட்டிடமாக மாற்றப்பட்டு இயங்கி வந்த “உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி” தொடக்கப் பள்ளியைத் தமிழ் உயர்நிலைப் பள்ளியாகக் கட்டும் முயற்சி நடைபெற்றது. அந்த முயற்சியில் தமிழ் இன சமூகத்தார் வெற்றி பெற்று மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை எழுப்பித் திறப்பு விழாவும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

அறுபதுகளின் அஸ்தமனத்தில் இறுமாந்து எழுந்திருந்தது ‘உமறுப் புலவர் தமிழ் ஹை ஸ்கூல்” கட்டிடம் எழுபதுகளின் எழுச்சியில் “எச்.டி.பி” எனும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் விரிந்த விண்ணளாவிய கட்டிடம் உயர்ந்து நின்று உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் கட்டிடத்தை எளிமையாக்கிக் காட்டி எழுந்து நின்றது.

உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் நேர் எதிரே அமைந்திருக்கும் “நியூ ஆசியா ஹோட்ட”லின் நிலையமைப்பில் அதாவது தரைமட்டத்தளத்தில் ஒரு மூலையில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னம் தனது ‘கடையை’ விரித்து வைத்தவர் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றார். வரைந்ததொரு கோடு; அதன் கீழ் அல்லது மேல் பகுதியில் வரையுமொரு புதிய நீண்ட கோட்டினால் சிறியதாகி விடக்கூடும் என்ற தத்துவ விளக்கத்தை இன்றைக்கு நேரில் எதிர்கொள்ளக் கண்ட இயல்பின் விசித்திரத்தைக் காண்பதன் அடிப்படையில் எழுந்ததே அந்தச் சிந்தனை…! இப்போதைய அவர் சிந்தனையில் சிரிப்பு மலரவில்லை; எண்ணிலடங்கா எண்ண ஓட்டங்களின் இதயத்துச் சிலிர்ப்புகள் பரிணமித்துக் கொண்டிருந்தன. இதனையும் அவர்தம் முகப்பொலிவே முகிழ்த்து கொண்டிருந்தது.

அவர் இப்போது தமது வாழ்க்கைக் கால நிகழ்ச்சிகளை ஏதோ வீடியோ டேப்பில் பதிவு செய்து வைத்துக் கொண்டு டெலிவிசனில் மறு ஒளிபரப்பு செய்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.

ஆயிரத்துத் தொளாயிரத்துப் பன்னிரெண்டாம் ஆண்டில் பிறந்த அவர், தன் இளமைக் காலத்தை இரண்டாவது உலக மகா யுத்தக் காலத்தில் – ஜப்பானியரின் ஆதிக்கக் காலத்தில் கடத்திக் கொண்டிருந்தார்.ர். இரண்டாவது உலக மகா யுத்தத்தின் எழுச்சியாக, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் சரணடைந்து ஜப்பானியப் படை தன் நாட்டிற்கு ஏக; ஆங்கிலேய “சுபிட்ச ஆட்சி” தொடங்கிய காலக் கட்டத்தில்- அதாவது ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்தேழாம் ஆண்டில் அவருக்குத் திருமணம் வாய்த்து வந்தது.

அஞ்ஞான ரீதியின் அடிப்படையில் சொன்னால் “பூர்வீக பலன்” காரணமாகவோ விஞ்ஞான ரீதியில் சொன்னால் ‘உடற்கூறு” காரணமாகவோ சியோங் திருமண வாழ்க்கை தொடங்கி பத்தாண்டு காலம் கடந்து விட்ட பின்னரும் குழந்தைப் பேறு இல்லாது குழம்பிப் போயிருந்தார்.

சியோங் தம்பதியினர் சிந்தை மகிழும் பேற்றினை இறையருள் வழங்கியதா? ஆம்; சியோங் தந்தையாகி மிகழ்ந்தார். ‘ஆங்” என்று பெயரிட்டு ஆனந்தம் அடைந்தார்கள் சியோங் தம்பதிகள்.

ஏங்கிக் கிடந்து பெற்ற ஒரே பிள்ளையல்லவா? நெஞ்சத்தில் தொட்டில் கட்டி, பஞ்சமில்லாப் பாசப் பாலூட்டி, கொஞ்சமும் வறுமையுணரா நிலையில் கொஞ்சிக் கொஞ்சி வளர்த்து ஆளாக்கினார்கள்.

பள்ளிப் பருவம் எய்தியவுடன் “ஆங்” கைப் பள்ளியில் சேர்த்து மகிழ்ந்தார்கள். சியோங்கும் அவர்தம் மனைவியும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்கல்வி கற்றவர்கள் அல்லர். “கை நாட்டு” இல்லை என்ற அளவுக்குக் கற்றவர்கள்.

சியோங்கின் மகன் ஆங்; பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒருமுகமாய், “ஹி இஸ் ஏ பிரிலியண்ட் ஸ்டூடண்ட்” என்று புகழும் அளவுக்குக் கல்வியில் சிறந்து விளங்கித் தேர்ந்து வந்தான். “எச்.எஸ்.சி; என்னும் உயர் கல்விச் சான்றிதழ் தேர்வில் சிங்கப்பூரின் சிறந்த மாணவனாகத் தேர்ச்சி பெற்றுப் புகழ் அடைந்தான்.

பொருளாதார நிபுணத்துவக் கல்வி சற்க அரசாங்கமே அமெரிக்க நாட்டுக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கும் அரிய பேற்றினை ஆங் பெற்றான். சியோங்கும் அவர்தம் மனைவியும் அகமகிழ்ந்து இறைவனுக்கு நன்றி கூறிக் கொண்டிருந்தார்கள். “இவன் தந்தை என் நோற்றான்?” என்று, தங்களுக்கிருந்த பணப் பெருக்கத்தின் வசதியால் ஒவ்வொரு பாடத்திற்கும் உரிய வித்தகரை “டியூசன்” ஆசிரியராக நியமித்து அரும்பாடுபட்டும், அப்பேறு இழந்த பல பெற்றோர்கள் அதிசயித்து அயர்ந்தார்கள்.

அரசாங்கத்தின் கல்வி உபகாரச் சம்பளம் கிடைத்திருந்தது. ஆயின்; அயல் நாடு சென்று படிக்கப் போகும் ஒருவர்க்கு உரிய அத்தியாவசிய வாழ்க்கைத் தேவைகள் அனைத்தையும் அந்த நிதி நிறைவு செய்து விடுவதில்லை. தன்னுடைய தகுதிக்கு மீறிய ஒரு செலவாக இருக்கக்கூடும் என்றாலும் அரிய வாய்ப்பை இழந்து விடக் கூடாது என்பதிலே கண்ணும் கருத்துமாய் இருந்தார். இதை விட ஒரு முக்கியம் அவனைப் பிரிந்திருக்க ஒப்பாத தன் மனைவியையும் தனனுடைய நெஞ்சத்தையும் அவர் எவ்வாறு சமாளித்தார் என்பது தான்…!

எப்படியோ தான் விதிப்படியும், விதி முறைப் படியும் எல்லாமும் மங்களரமாக இனிது நிகழ்ந்தேறின. “ஆங்” அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு அமெரிக்கா சென்று விட்டான்.

இன்பத்துக்குப் பின் ஒரு துன்பம்; பள்ளத்திற்குப் பின் ஒருமேடு; பகலுக்குப் பின் இரவு என்பது இயற்கை வகுத்து வைத்த ஒரு நியதியோ…? சியோங் தன் மகனை வெளி நாட்டுக்கு அனுப்பி வைத்த மகிழ்ச்சிக்களை முகத்திலிருந்து நீங்குவதற்குள் ஓர் அதிர்ச்சி வந்து சேர வேண்டுமா?

அவர் வேலை செய்து கொண்டு வந்த பிரபலமான “இங் ஹுவாட்” என்னும் காலணி தைக்கும் தொழிற்சாலையில் ஆட்குறைப்புத் திட்டம் அமுலுக்கு வந்தபோது; ஆக ‘ஜுனியாரிட்டியாக” இருந்தவர்களில் ஒருவராக சியோங் பாதிக்கப்பட்டார். ஆயின்; சியோங் இதற்காக வருந்தி ஒடுங்கி விடவில்லை. அன்றைய தினமும் அமைதியாக எப்போதும் போல் தன்னுடைய அரிய பணிகளைச் செய்துவிட்டு, ஆரவமற இருந்து “கணக்குகளைத்” தீர்த்துக் கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தார்.

எதிர்பார்ப்புகள் நிகழ்வதை விட எதிர்பாராதவைகள் தாமே இந்த உலகத்தில் எப்போதும் அதிகமாக நிகழ்ந்து விடுகின்றன. இடியும் மின்னலும் இயைந்து வரும் சூறாவளியுமாய் ஒரு “பேய் மழை” பெய்து கொண்டிருந்தது.

ஏற்கனவே விழுந்த “இடித் தாக்குதலை” விடவா இது பெரியது…? என்றெண்ணிக் கொண்ட சியோங்; இறங்கி நடந்து, “தொப்” என்று நனைந்து விட்ட நிலையில் று வீட்டுக்குள் புகுந்தார். அவர்தம் மனைவி அங்கலாய்த்துக் கொண்டார்.

“என்னங்க இப்படி தொப்பையா நனைஞ்சீட்டு வர்ரீங்க….! கொஞ்சம் பொறுத்து வந்திருக்கக் கூடாதா..” எனறு அழாக் குறையாகக் கேட்டுக் கொண்டே, துண்டு எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து உடனே போய்க் குளித்து விடுங்கள் என்று கூறினார்கள். அந்த மழைக்குளிர் துன்பத்திலும் சியோங் சிரித்துக் கொண்டே சொன்னார்; ‘ஊரில் பெய்த மழையெல்லாம் என் ஒருவன் மீதே கொட்டி விட்டதா…? அடி பைத்தியக்காரி….! இது அடை மழை; நிற்காது என்று தெரிந்து தான் பொறுமையைக் கடைப்பிடிக்காமல் புறப்பட்டு வந்தேன்” என்று சொல்லிக் கொண்டே குளியறைக்குள் சென்று மறைந்தார்.

“இவரு எப்போதுமே இப்படித்தான்: எதையாவது நினைச்சிக்கிட்டு ஒண்ணு கெடக்க ஒண்ணு செஞ்சிட்டு வந்து நிப்பாரு…! உடம்புக்கு ஒண்ணு ஆனா உபத்திரப்பட வேண்டியது யாரு? அவருக்கென்ன…? அவரு “ஹாயா” படுத்துக் கிடப்பாரு; அவதிப் படறவ நான் தானே…..!” இப்படியும்; இன்னும் எப்படியெப்படியெல்லாமோ வாய் பிதற்றிக் கொண்டு “கஷாயம் போல்” ஒரு கடுங் காப்பியை ஆவி பறக்கக் கலக்கிக் கொண்டு வந்து காத்திருக்கவும் சியோங் வந்து சேரவும் “டைம்” மிகச் சரியாக இருந்தது.

சியோங்கிற்குத் தன் மனைவிக்கு அடுத்தபடியான விருப்பப் பொருள் “கோப்பி ஓ” அதாவது பால் போடாக் கடுங்காப்பி…! தற்கொண்டாள் தன்னைப் பேணும் தகைமையின வெகுவாக ரசித்தவாறு ஆவி பறக்கும் அந்தக் கஷாயக் கடுங்காப்பியினை அருந்தினார். இடியொலியுடன் மின்னல் அதிர்ச்சியுடன் இப்போதும் மழை கொட்டோ கொட்டெனக் கொட்டிக் கொண்டிருந்தது. சூறாவளி போல் சுழன்றடிக்கும் காற்றின் இயைபாகச் சுழிந்து வரும் “குளிர் நிலைக்கு ‘காப்பி இதம் தந்தது; அருகிருந்த மனைவியும் தான்…!

“துள்ளி விளையாடப் பிள்ளைகள் இல்லா வீட்டில் கிழவன் குமரனாவான்” என்பது ஒரு வழக்காற்றுச் சொற்றொடர். இப்போது சியோங்கின் வீட்டில் அந்த வழக்காற்றுச் சொற்றொடரின் அர்த்தம் புலனாகிக் கொண்டிருந்தது.

துன்பகரமான செய்தியைத் தன்னுடைய மனத்துக்குள் செரிமானம் செய்து கொண்ட நிலையில் இன்பகரமான அணைப்புச் சூழலில் இதமாக – மிகவும் இதமாக, அந்த அம்மாள் அதிர்ச்சியடைந்து போகக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக, ஒவ்வொரு சொற்றொடரையும் ஒவ்வொரு தாரக மந்திரமாகக் கற்பித்துக் கொண்டு மிகவும் நிதானமாக வேலை வாய்ப்பிழந்த விசித்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்.

எங்கே தன் மனைவி அதிர்ச்சியடைந்து விடுவாளோ என்று பயந்து கொண்டுதான் சியோங் வார்த்தைகளை அளந்து கொண்டு ஒவ்வொரு சொல்லாக எண்ணி எண்ணிச் சொல்லி முடித்தார். இடியோசை போல் வெடிக்கக் கூடும் என்று எதிர்பார்ததுக் கொளுத்தும் பட்டாக கூடச் சமயத்தில் “புஷ்வாணமாய்ப்” போய் விடுவதுண்டு அந்தத் தார்மீகம் தான் அப்போது செயல்பட்டுக் கொண்டிருந்தது. சியோங் வாயடைத்துப் போனார்.

இதென்னங்க….! “அத விட்டாக் கதி இல்ல; அப்பால போனா விதி இல்ல” என்று அங்கலாய்த்துக் கொள்ளுகின்ற நிலையிலா சிங்கப்பூரில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எத்தனையோ வேலை வாய்ப்புகள் இருக்கின்றன….! கவலைப்படாதீங்க…! என்று அவர் இவருக்கு ஆறுதல் கூறினார்.

“ஏங்க…. நான் ஃபேக்டரி வேலைக்குப் போறேன்; நீங்கள் ஓய்வு எடுத்துக்குங்க…!” என்று அவர் சொன்னது தான் தாமதம்; இவர் “தீயைத்” தொட்டது போல் அவரைத் தள்ளி விட்டு விட்டு ஆத்திரத்தோடு “உம்” மென்று உட்கார்ந்திருந்தார். ஏன்?

சியோங்கின் மனைவி கன்னத்தில் போட்டுக் கொண்டு சமாதானப் படுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.இருவரும் வேலை செய்தால் இன்னும் கொஞ்சம் வச தியாக வாழலாமே என்று கருத்துரைத்த, போதெல்லாம்; “நீ வேலைக்குப் போகணும்னு நினைக்கிறியா? ஓகே….! முதலில் விவாகரத்து ஆபீசுக்குப் போவோம்; அப்புறம் நீ வேலைக்குப் போ….!” என்று கண்டிப்பான குரலில் சொல்வதைப் பலமுறை கேட்டுப் பழக்கப்பட்டவர் சியோங்கின் மனைவி. இப்போதைய நிலைமைக்கு ஓர் ஆதரவாக இருக்கட்டும் என்று தான் இந்தக் கருத்தைச் சொல்லப் போய், “கிணறு வெட்ட பூதம் புறப்பட்ட கதையாக முடிந்தது கண்டு அதிர்ந்து போய் அதனைச் சமாளிக்கப் பெரும்பாடு பட்டார்.

வெளியூர் சென்றிருக்கும் தன் மகனின் விமானப் பயணம்: பல்கலைக் கழகத்தின் “ஹாஸ்டல் உணவு” மகனுக்கு ஒத்து வருமா? நாடு விட்டு நாடு சென்றிருக்கும் அவனுக்கு வித்தியாசமான நாட்டின் வெப்ப தட்ப நிலை ஒத்துப் போகுமா? அவன் உடல் நலத்துக்கு ஏதாவது ஆகி விடுமா? என்பன போன்ற சிந்தனைகளில் இருவரும் ஆழ்ந்து கொண்டிருந்த நிலைகளைப் படுக்கையின் “சலசலப்பு” ஒலிகள் பரிணாமம் செய்து கொண்டிருந்தன. கடவுளை நேர்ந்து கொள்வதற்குக் கால நேரம் ஒரு பொருட்டில்லை. இருவரும் அந்த அர்த்த இராத்திரியில் படுக்கையில் கிடந்து உழன்ற படியே “நேர்ந்து” கொண்டிருந்தனர். இருவரும் தம்மை மறந்த நிலையில் கை கூப்பிக்” கொண்டதைக் கப்பியிருந்த படுக்கை அறையின் இருளால் மறைத்து விட முடியவில்லை….!

அந்த இருளிலும் ஒருவரை ஒருவர் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டனர். இருவருமே அதைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல் ஏதோ ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல பாவனை செய்து கொண்டு நடிப்புக்காக “குறட்டை ஒலி” யைச் செயற்கையாக ஒலித்துக் கொண்டிருந்தனர். சியோங் எதிர்காலச் சிந்தனையில் மூழ்கி, ஒரு முடிவுக்கு வந்த போது அவர் எப்போதும் படுக்கையை விட்டெழும் பனித்துளி அரும்பும் விடி காலைப் பொழுது “பொல்” எனப் புலர்ந்து கொண்டிருந்தது. விடிந்தது பொழுது; முடிந்தது கவலை…..! ஆம்; அவர்கள் மகன் ஆங் அமெரிக்காவிலிருந்து கொடுத்திருந்த “தந்தி” வந்து சேர்ந்தது அகங்குளிர்ந்து மகிழ்ந்தனர்.

அறுபது வயதுக்குப் பிறகும் ஏன் அடுத்தவரிடம் அத்துக்கூலி புரிய வேண்டும்…? என்றெண்ணிய சியோங்; சொந்தமாகத் தொழில் புரிய திட்டமிட்டார். கடை திறக்கும் அளவுக்குக் கற்பனையும் செய்யவில்லை; அதற்குண்டான ‘காசும்” அவரிடம் இல்லை. இற்றை நாள் அளவும் வாயும் வயிறும் கழுவிக் கொள்ளும் நிலையில் வாழ்ந்து முடித்தவர். ஒருவாறு துணிந்து தான் சிறிய முதலீட்டில் சிக்கனமாகப் “பெட்டியடிக் கடை” திறந்து கொள்ளத் தீர்மானித்து இடம் தேடியலைந்து இறுதியாக மெக்ஸ்வெல் சாலையில் உமறுப் புலவர் தமிழ் உயர்நிலைப் பள்ளியின் ஏதிரே அமைந்திருக்கும் *நியூ ஏசியா ஹோட்டல்” என்னும் கட்டிடத்தின் அடிவாரப் பகுதியில் ஒரு மூலையில் இடம் கேட்டு அனுமதி பெற்று அமர்ந்து கொண்டார்.

சியோங் அவர்கள் செய்து தான் பார்ப்போமே என்று தொடங்கிய அந்தச் சிறு தொழில் செம்மையாகவும் சீராகவும் நடந்து வருமானத்தில் எதிர்பார்த்ததற்கும் மேலான நிலை எய்தக் கண்டு மகிழ்ந்தார். மன நிறைவு தரத்தக்க அளவு வருமானம் வரப் பெற்று மகிழ்ந்த போது, “எல்லாம் நன்மைக்கே” என்னும் பொன் மொழியை எண்ணிப் பார்த்து எழுச்சியுற்று மகிழ்ந்தார்.

இறைவன் திருவருளால் எவ்விதக் குறையும் இல்லாமல் கை நிறைய வருவாய் பெற்று காலம் கழித்துக் கொண்டிருந்த சியோங் மகனுக்கு மாதந்தோறும் அனுப்புவதிலும் மகன் பட்டதாரியாகத் திரும்பி வரும்போது அவனுடைய தகுதிக்கும் தரத்திற்கும் உரிய “பங்களா” வீடொன்று வேண்டும் என்பதிலும் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டார்.

“குறியற்ற வாழ்க்கை நெறியற்றது” என்று ஆன்றோர் கூறுவர். குறியமைத்து நெறியமைத்துக் கொண்டு வாழ்ந்த சியோங் தன் மகனுக்கு என்றே ஒரு “பங்களா” வீட்டை வாங்கி, தன் மகன் வரும் வரை வாடகைக்கு விட்டு வைப்போம் என்று வாடகைக்கு விட்டிருந்து ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளில் அந்த வீட்டுச் செலவின் காற்பங்கு அளவு சேகரித்துச் சுவிகரித்துக் கொண்டார். இனியென்ன…? மகனுடைய வருகையை எதிர்பார்த்துக் கொண்டு, கிராமப்புறச் சூழலின் “மேற்கோப்பு” வீட்டின் சொந்தக்காரராய் வாழ்ந்து வந்த அந்தக் கிராமத்துச் சொந்த வீட்டிலேயே காலம் கழித்து வந்தார்.

ஆண்டு பிறந்ததும் முடிந்ததும் தெரியவில்லை; அவ்வளவு துரிதமாகக் காலம் கடந்து விட்டது என்று வியந்து கொள்வாரும் உள்ளனர். காலம் நிறை மாதக் கர்ப்பிணி போல் மெது நடை போடுகிறது என்று கலங்கிக் கொள்வாரும் உள்ளனர். காலம் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை; கனவேகத்தில் சுழன்று விடுவதும் இல்லை. மனோவியலின் அடிப்படையில் காலத்தின் வேகத்தை மனிதர்கள் தங்கள் பாவனைகளுக்கேற்ப கற்பனை செய்து கொள்கின்றார்கள்; அவ்வளவு தான்….!

சியோங் தம்பதியரைப் பொறுத்தவரை ஏழு ஆண்டுகள் என்பது “ஏழு யுகங்களாகக்” கழிந்தன. ஒரே பிள்ளை…! அந்த உணர்வு அமைந்திடாதா; என்ன? விரைந்தோ வேகம் குறைந்தோ ஏழு ஆண்டுகள் தேய்ந்து விட்டன.

சியோங் தம்பதியினர் சாங்கி விமான நிலையத்திற்குச் சென்றிருந்தனர். ஆங் வந்து சேர்ந்தான். அம்மாவையும் அப்பாவையும் ஆரத் தழுவிக் கொண்டான். ஆனந்தக் கண்ணீர் அந்த மூவரின் விழிகளிலும் நிறைந்து வழிந்தோடியது. அருகில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண் அவர்கள் தம் அன்பு மேலீட்டு அரவணைப்பை அதிசயித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆமாம்; ஆங்குடன் இணையாக வந்த அந்தப் பெண் யார்..? அணைப்பின் ஆரவாரமெல்லாம் அயர்ந்த பின்னர் தான் சியோங் தம்பதிகள் ஒருவரையொருவர் “அர்த்த புஷ்டியோடு” பார்த்துக் கொண்டார்கள்.

அந்தப் பெண் அவர்களைப் பார்த்துக் கைகூப்பி வணங்கி ஒரு புன்முறுவலை இழைய விட்டாள். பதிலுக்கு அவர்களும் முகம் மலர்ந்து கொண்டார்கள் பணிவன்பின் பதிப்பு அது….!

ஆங் அந்தப் பெண்ணைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. தன்னுடைய பெட்டிகளைப் பெற்றோரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, அந்தப் பெண்ணுடைய பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த தள்ளு வண்டியை நகர்த்திச் சென்று, ஒரு டாக்சியில் ஏற்றி வைத்து அவளை அனுப்பி வைத்து விட்டு வந்தான்.

அடுத்து ஒரு டாக்சியில் ஆங் தன்னுடைய பெட்டிகளையும் தாய் தந்தையரையும் ஏற்றிக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான். டாக்சி காற்றாய்ப் பறந்து கொண்டிருந்தது. இதற்குச் சான்று இவர்களிடையே நிலவிய “மௌனம்” தான். மெளன ராகத்தின் இன்னிசை போல் ஏர்கண்டிஷனின் இதமான குளிர்ந்த காற்று இயைந்து கொண்டிருந்தது.

வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். “பாவ்” என்னும் பலகாரம் சகிதம் தேனீர்…! “சோபா செட்டில்” சூழ்ந்திருந்தது. மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். ஏறக்குறைய இருபத்தாறு வயதை எட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் இளங்காளைக்கு இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டிருந்தார்கள். இவனுக்குப் பிடித்தமான இட்டலி வடிவப்”பாவ்” அமெரிக்காவில் கிடைக்காத ஒன்றாயிற்றே..! அது மட்டுமல்ல; மரியாதைக்குரிய விருந்தாளிகளை வரவேற்கும் மங்களகரமான பலகாரம் இது….! தன்னை மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய விருந்தாளியாகவோ தன் மகனுக்குப் பிடிக்கும் என்ற அமைப்பாகவோ, இறை வழிபாட்டின் புனிதத் தன்மையாகவோ “பாவ் படைத்து’ வரவேற்றிருக்கும் தனது பெற்றோர்தம் பாசத்தின் உச்சத்தை அங்குலம் அங்குலமாக அளந்து கொண்டிருந்த அந்தப் பொருளாதார நிபுணக் கல்வி பயின்று வந்த ஆங் கரை காண முடியாத இன்பத்தில் மெய் மறந்து சுவைத்து மகிழ்ந்தான்.

சிங்கைத் திருநாட்டுக் கல்வியமைச்சு உபகாரச் சம்பளம் வழங்கி அனுப்பி வைத்துத் திரும்பியிருக்கின்ற பொருளாதார நிபுணன் அல்லவா…? “ஆங்” அவர்களுக்குப் பதவி நியமனம் காத்துக் கொண்டிருந்தது போல் வலிந்து வந்து அமைந்தது. கல்வியில் முழுமூச்சாக உழைப்பு நல்கிய ஆங் கனிந்து மகிழ்ந்தான்; பெற்றோரும் பெரிது வந்து நின்றனர்…!

சியோங் தம்பதியினர் இந்த அவசரத்தினுடே “அந்த ஒரு தங்கள் கடனையும்’ கடனையும்” ஆற்றி விடத் துடித்தனர். ஆங் தனக்காகத் தன் பெற்றோர் இவ்வாறெல்லாம் திட்டமிட்டு வாழ்ந்திருப்பார்கள் என்று கற்பனை கூட செய்திருக்கவில்லை. ஆங் உண்மையில் அயர்ந்து போய் விட்டான்.

அப்பனுக்குப் பிள்ளை, பிள்ளைக்குத் தாய் “நன்றி” என்று; தொட்ட தொண்ணூறுக்கும் நாளெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பது மேலை நாட்டுப் பண்பு…! அந்த “நன்றி” யில் ‘ஈரம்’ இருப்பதில்லை. உலர்ந்த உதடுகளின் அசைவில் உதிர்க்கும் நன்றி அது….! மேலை நாட்டில் ஏழு ஆண்டுகள் படித்து விட்டு வந்திருந்தாலும் அந்தப் பண்பை ஆங்கின் உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆங் அரசாங்கத்தின் நிதியமைச்சு நிரந்தரச் செயலாளர் என்ற பதவியும் பொறுப்பும் பெற்று தன்னுடைய சேவையைச் சிங்கப்பூருக்கு அளித்துக் கொண்டிருந்தான். சியோங் தம்பதியினர் ஆங் அவர்களைத் திருமணத்துக்குத் தூண்டினார்கள். இப்போது தான் ஆங் தன்னுடைய அபிலாசையினை மெல்லத் தயங்கித் தயங்கி வெளியிட்டான். இப்படி ஓர் அபிலாசை வரக்கூடும் என்று “அன்றே” திட்டமிட்டுக் கொண்டு தானே ஒருவரையொருவர் “கண் சிமிட்டி’ பார்த்துக் கொண்டார்கள். பொறுத்திருந்து ‘சுருக்கமைக்க” ஆங் அந்த “முடிச்சை” அவிழ்த்தான்.

அயல் நாடு சென்று ஏழு ஆண்டுகள் படித்து விட்டு வந்தாலும் ஆங் தங்கள் கைவசப் பிள்ளயாகவே திரும்பியிருப்பதில் பெருத்த மகிழ்வு கொண்டிருந்தனர். அவனது ‘ஆசை’யும் அப்பழுக்கில்லாத பண்புகளின் எல்லைக்குள் தான் அமைந்திருக்கும் என்பதில் அவர்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

அமெரிக்காவிலிருந்து ஆங் திரும்பி வந்த அன்று அவனுடன் இணைந்து வந்தாளே அந்தப் பெண்ணின் விபரம் குறித்துக் கேட்டார்கள். ஆங் விளக்கம் சொல்லித் தானே ஆக வேண்டும்.

அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் ஆங் இரண்டு ஆண்டுகளைக் கழித்து விட்டான். தனக்கு “சீனியர்களாகப்” பயின்று கொண்டிருந்த சிங்கப்பூரியர் சிலரைச் சந்தித்தான். பழக்க வழக்கங்களை எல்லாம் ஊன்றிக் கவனித்து, “ஹலோ” என்று புன்முறுவல் காட்டி “விஷ்” பண்ணுவதோடு “நிறுத்தல்” பண்ணிக் கொண்டான்

ஆங் தன்னுடைய மூன்றாம் ஆண்டின் தொடக்கக் காலக் கட்டத்தில் அந்த ஆண்டின் புதிய மாணவர்களில் சிங்கப்பூரைச் சேர்ந்த சிலரை எதிர்கொண்டு மகிழ்ந்தான். அவர்களில் தன் இனத்துப் பெண் ஒருத்தி, மஞ்சள் குளித்து, நெற்றி நிறைய நீறு பூசி கருந்சாந்துப் பொட்டிட்டு சேலையணிந்து வரும் விசித்திரத்தையும் கண்ட அந்தப் பெண்ணின் வித்தியாசமான நடையுடை பாவனைகளை மிகவும் அணுக்கமாகத் துருவி ஆராய்ந்தான்.

சொந்தத் தாய்த்திரு நாட்டை விட்டுப் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்து சென்று படிப்போரும் வாழ்வோரும் இன்னொருவரைக் கண்டு மகிழும் போது அவர் சார்ந்த நாட்டாராயின் ஊராராயின் ஒருவகைப் பற்று மேலீட்டால் “சொந்தம்” கொண்டாடி கொள்வது மாந்தர் இயல்….!

ஆங் அவளைச் சந்தித்தான்; அது “பூர்விகப் பொலிவின்” மாயையாகும். இதயத்து உணர்வுகளின் இனிய சேர்க்கைகளுக்கு “பூர்வ ஜென்ம புண்ணிய பலன்” ஒரு காரணம். எது எப்படியோ ஆங் அந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை அணுக்கமாக ஆராய்ந்து திருப்தி கொண்டு தினம் பழகலானான்.

அவளது பெயர் வசந்தி….! இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னம் “இங் பாட் செங்” என்னும் சீன இளஞன்;நான் ஒரு இந்தியப் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வேன என்று பிடிவாதமாகக் கூறிக் கொண்டிருந்து, அட்டெண்டராக’ அவன் பணி புரிந்த அதே மருத்துவமனையில் “ஸ்டூடண்ட் நர்ஸ்” ஆகப் பணி புரிய வந்த ‘இதயமணி” என்னும் பெண்ணைச் சந்திக்க நேர்ந்து, அந்தச் சந்திப்பே காதலாக அரும்பி மலர்ந்து, இரு தரப்பாரின் எதிர்ப்புகளுக்கிடையில் திருமணம் செய்து கொண்ட கலப்புக் கல்யாண காதலர்களுக்குப் பிறந்த ஒரே மகள்…! “தஞ்சோங் காத்தோங்’ பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து, பல்கலைக் கழகப் புகுமுக வகுப்புக்கான தேர்வில் நன்கு தேர்ச்சி பெற்றதால் “அறிவியல் ஆய்வாளர்” (விஞ்ஞான நுட்பம்) துறை சார்ந்த கல்வி பயில்வதற்குரிய சிங்கப்பூர் கல்வியமைச்சின் சீரிய வாய்ப்பு பெற்று அமெரிக்கப் பல்கலைக் கழகம் வந்தாள்.

அவர்களின் அன்றாடப் பழக்கத்தின் போது இருதரப்பாரும் குடும்பங்களின் “சுகதுக்கங்கள்” பற்றி விசாரித்துக் கொள்வார்கள். அவளது தந்தை சாலை விபத்துக்குப் பலியாகி விட்ட செய்தியையும், “இதற்காக நான் படிப்பை விட்டு விட்டு இங்கு வந்து ஆகப் போவது ஒன்றுமில்லை; விதி வழி நடக்கும் வினைகளுக்கு நீ ஆட்படாமல் தொடர்ந்து படி; படித்து முடித்து விட்டு வா….!” என்று அவள் தாயார் எழுதியிருந்த கடிதத்தின் கருத்தையும் சொல்லிய வண்ணம் அழுது புலம்பினாள். அவளுக்கு ஆறுதல் சொன்ன போதும் அவளது தாயாரின் கருத்தையே வலியுறுத்திச் சொல்ல நேர்ந்தது. ஏழ்மையின் பிறப்பிடங்களுக்குப் பணத்தின் அருமை நன்கு புரியும்.

ஆறுதல் எல்லாம் தேறுதல் ஆகிவிடக் கூடுமோ? ஆங் ஆறுதல்” நிலையிலிருந்து “தேறுதல்” நிலைக்கு ஆளாகித்தீர வேண்டிய அத்தியாவசியம். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட அந்த அணுக்கம் தான் காதலாக மலர்ந்தது. ஆங் அனைத்தையும் ஒளிவு மறைவு இல்லாமல் ஒன்று விடாமல் சொல்லி முடித்த போது சியோங் ஏழு பிறப்பின்” தத்துவத்தால் இயைந்த “ஜோடியோ” என்று தனக்குள் தானே சிந்தித்துக் கொண்டார். பெற்றோரின் மறுப்பில்லா நிலை கண்டு ஆங் பெரிதும் மகிழ்வெய்தினான்.

தேசியப் பல்கலைக் கழகத்தின் “அறிவியல் ஆய்வு” தொழில் நுணுக்கர் பதவி பெற்று பணி புரிந்து வரும் வசந்தியைப் பெண் கேட்க முறைப்படியிலான அணுகு முறைப்படி நெருங்கும்போது சியோங் தம்பதியினர்க்கு வசந்தியின் தாயார் மூலம் ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

அறிமுக நோக்கில் அமைந்த வருகையைப் போல் அமைத்துக் கொண்டு சியோங் குடும்பத்தினர் வசந்தியைக் காணச் சென்றனர். தமிழர் பண்பாட்டின் தலைச் சிகரம் விருந்தோம்பல்” ஆகும். வசந்தியின் தாயார் தமிழ்ப் பெண்ணல்லவா? வரவேற்புக்கு உரிய இனிப்பு, காப்பி; வந்தமர்ந்து செல்லுங்கால் வயிறு குளிர் உணவு ஆகியவற்றைக் கண்டு சியோங் குடும்பத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர்.

சியோங் அவர்கள் “மலாய் மொழியில்” தம் குடும்பத்தின் ‘அபிலாசைகளை’ மிகவும் மென்மையாகத் தனக்கே உரித்தான தார்மீக அமைதியோடு எடுத்துச் சொன்னார். “மீனவர்க்கு மிதப்பத்தில் தான் கண்ணும் கருத்தும் இருக்கும்” என்பது தமிழ் மொழி கூறும் தத்துவம்…!

வலிய வந்த “சீதேவியை” உதைத்துத் தள்ள வசந்தியின் தாயார் என்ன படிப்பறியாப் பாமரப் பெண்ணா…? இயற்கை வகுத்துள்ள “விதிக்கு” இணைந்து போக வேண்டியது மாந்தர் தம் பொறுப்பு….! கால ஓட்டத்தின் கருணையினால் பெற்ற பட்டறிவின் படிப்பினை…! வசந்தியின் தாயார் அவர்களுக்குப் புரிய வைக்கப் பெரும் பாடு பட்டுத் தீர வேண்டுவதாயிற்று…! ஏன்…?

ஜாதக ரீதியாக வசந்திக்குச் செவ்வாய் தோஷம் உண்டு செவ்வாய் தோஷம் உள்ள ஒரு மாப்பிள்ளை தான் அமைய வேண்டும். இந்த ஒரு கருத்தமைவை விளக்குவதற்கு மலாய் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சொற்கள் கிடைக்காத நிலையில் சோர்ந்து போய் விட்டார்கள் என்று கூடச் சொல்லலாம்.

எப்படியோ .தான் மலாய் ஆங்கில மொழிகளை இரண்டறக் கலந்து பேசி “செவ்வாய் தோஷம்” என்பது பற்றிய விளக்கம் கேட்டனர். இது பற்றித் தெரிந்திராத சீனத் தம்பதியினர் அரை குறையாகக் கேட்டு கேட்டு அமைந்த விளக்கத்தின் அடிப்படையில் “ஜாதகம்” பார்க்க ஒப்புக் கொண்டனர். ஜாதகப் பொருத்தம் சாதகப் பொருத்தமானால் தனக்கு எந்தவித ஆட்சேபணையுமில்லை என்று வசந்தியின் தாயார் தெள்ளத் தெளிவாகக் கூறி விட்டார்கள்.

இப்போது சியோங் அவர்களுக்கு ஒரு சந்தேகம்…..! ஒருவேளை தன் மகனுக்குச் ‘செவ்வாய் தோஷம்” என்றொன்று இல்லையானால் என்ன நேரும்…? என்று தெரிந்து கொள்வதற்காகத் தான் கேட்டார். வசந்தியின் தாயார் “செவ்வாய் தோஷம்” அமையவில்லையென்றால் செவ்வாய் தோஷம் உள்ள பெண் “தாரமிழந்து” விடுவாள் என்ற திட்டவட்டமான ஜாதகக் கூற்றைத் தெளிவுபடுத்தினார்கள். சியோங் இது கேட்டு அதிர்ந்தார். எவரேனும் தன் செல்ல மகனைச் செவ்வாய் தோஷத்துக்குப் பலியிட விரும்புவார்களா…?

அதிர்ச்சிகரமான செய்தியைக் கேட்டுக் கொண்டு ஜாதகப் பலன்” பார்த்து வருவதாகச் சொல்லித் திரும்பினார்கள். தெய்வாதீனமாக ஆங்கும் செவ்வாய் தோஷப் பிறவியாக இருந்ததால் ஆட்சேபம் இல்லாத நிலையில் திருமணம் இனிது நிகழ்ந்தேறியது.

சியோங் மகன் வந்து சேர்ந்த மகிழ்ச்சியிலும் இந்த மகிழ்ச்சியின் சூடு மாறுவதற்குள் மகனுக்குத் திருமணமும் நடத்திப் பார்த்து விட வேண்டும் என்ற துரித முயற்சியிலும் அந்தச் செயல்பாடுகளின் முனைப்பிலும், தன்னுடைய ஒரே மைந்தனின் வாழ்க்கை வசதிக்காக வாங்கி வைத்திருந்த “பங்களா” வீட்டில் இளந் தம்பதியரைத் தனிக் குடித்தனப் படுத்துவதிலும் ஆர்வத்தோடும் தீவிரத்தோடும் இருந்தமையால் ஏறக்குறைய நான்கு மாத காலம் உமறுப் புலவர் தமிழ் உயர்நிலப் பள்ளி மாணவர்கள் “அப்பே” அவர்களைக் காணாது தவித்தனர். வாடிக்கையாளர்களும் சியோங் அவர்களின் மலர்ந்த முகச் சேவையிழந்து வாட்டத்துடன் சென்று கொண்டிருந்தனர்.

அப்படி இப்படி என்று ஓர் ஐந்து மாத கால இடைவெளிக்குப் பின்னர் சியோங் மீண்டும் கடைய விரித்திருந்தார். “வாடிக்கை” என்பதற்கு “வழக்கம்” என்று பொருள் சொல்லலாமா…? உமறுப் புலவர் மாணவர்களின் *படையெடுப்பை” மட்டுமே ஒரு வாரமாகக் கண்டு மகிழ்ந்த சியோங் மற்றயை வாடிக்கையாளரின் வரவு காணா நிலையை எதிர்கொள்ள நேரிட்டது. ஒருவர் மூலம் ஒருவர்; அந்த ஒருவரின் மூலம் மற்றொருவர் என்றிப்படியாக ஒரு வார கால இடைவெளிக்குப் பின்னர் சியோங்கிற்கு “மாமூல்’ நிலை திரும்பியது. எப்போதும் போல் இனிது சேவையாற்றி மகிழ்ந்தார்.

சியோங் தம்பதியினரின் செல்ல மகன் ஆங் தன்னுடைய தந்தை “ரிட்டையர்ட்” ஆகியிருக்கக்கூடும் என்றெண்ணிக் கொண்டான். அவரது வேலை வாய்ப்பு பற்றிக் கேட்டறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியம் புலப்படாத நிலையில் சியோங் நடந்து கொண்டார் அல்லவா….?

இத்தனை பெரிய வீடு ஒன்றை வாங்கி வைத்துத் தங்களை மட்டும் தனிமைப் படுத்தி விட்டு அவர்கள் அந்தப் பழைய கம்பத்து வீட்டிலேயே வாழ்ந்து கொண்டிருந்து கொஞ்சமும் விரும்பாத ஆங்கும் வசந்தியும் தங்களோடு வந்து தங்கியிருக்கும்படி எவ்வளவோ வலியுறுத்திக் கூறியும், இந்த வீட்டின் அதிர்ஷ்டத்தால் தான் எல்லாம் இனிது நடந்தேறியது: சாகும் வரை நாங்கள் இங்கே தான் இருப்போம்’ என்று, சியோங் தீர்க்கமாகக் கூறி விட்டார்.

எதிர்த்துப் பேசியறியாத ஆங் வாயடைத்துப் போய் அவரது விருப்பத்துக்கு விட்டு விட்டான். சியோங் வசந்தியின் தாயாரையும் அழைத்து வந்து தங்களோடு இருத்திக். கொண்ட செய்தியறிந்து ஆங் தன்னுடைய தந்தையின் பரந்த மனப்பான்மையை எண்ணியெண்ணி வியந்து கொண்டான்.

தற்செயலாக ஒருநாள் ஆங் தன் வேலையின் நிமித்தம் வீடமைப்புக் கழக வளர்ச்சிக் கழகத்திற்குச் செல்ல நேர்ந்த போது தன்னுடைய தந்தையின் “தெருக்கடை” விரிப்பு கண்டு அதிர்ந்து போனான். ஆங் தன்னுடைய தந்தையின் கடை விரிப்பைக் கண்டும் காணாத நிலையில் சென்று மறைந்தான். சியோங் அதைக் கவனித்துக் கொள்ளவில்லை.

இரவு நேரம்ஆங் வசந்தி இருவரும் வந்து விட்டனர். இனிமேலும் இந்தத் தொழில் வருமானம் தேவை தானா என்பது அவர்களின் வாதம்….!

இந்தத் தொழில் தானே என்னை வாழ வைத்தது….! “செய்யும் தொழிலே தெய்வம்” என்பது சியோங்கின் பிரதிவாதம். மகன், மருகமள் ஒரு பக்கம்; சியோங் தனித்து ஒரு பக்கம் என்ற நிலையில் நடைபெற்ற சொற்போரில் சியோங் வெற்றி பெற்றார்.

விவாதத்தில் வெற்றியமைக்க கருப்பொருளாக அமைந்த கருத்து; முத்தாய்ப்புக் கருத்து, “என்னை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம்” என்பதுதான்…..! சியோங்கின் பிடிவாதத்தை எவராலும் மாற்ற வியலாது என்றதொரு நிலையே அவர்தம் வெற்றிக்கு மூலப் பொருள் ஆயிற்று…!

பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருக்கும் வழக்கத்தில் ஆங்கின் தாயாரும் வசந்தியின் தாயாரும் தங்கள் தம் பூர்வீகம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த கருத்தமைவுகளை ஆங்கின் தாயார் சியோங்கிடம் பேசியிருக்கும் போது சொல்லிக் கொண்டிருந்தார். சியோங் அன்றிரவு முழுவதும் சிந்தனையில் ஆழ்ந்தார்.

குலம் வழி கொடி வழி சிந்தித்துப் பார்த்த சியோங், ஆங்கின் தாய் வழியில் அமைந்த உறவு எனக் கண்டு மகிழ்ந்து கொண்டார். தன்னுடைய மனைவியின் இரண்டாங்கால் மூன்றாங்கால் சொந்தம் என்னும் பங்கும் பங்காளி என்ற வரிசையில் வசந்தியின் தந்தை ஆங்கின் தாயாருக்கும் ‘அண்ணன்” உறவு ஆகின்றான்.

சியோங் விடவில்லை. உறவுகளை முறித்துக் கொண்டு இனம் விட்டு இனம் தாவித் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த வசந்தியின் தந்தை வழித் தொடர்புகளை ஆராய்ந்து அவர்களை அழைத்துக் கொண்டு வந்து அறிமுகம் செய்து வைத்து மகிழ்ந்தார். ஆங்கின் பிறந்த நாள் விழாவினை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடும் சியோங் கடந்த ஏழாண்டுகளாகக் கடவுள் வழிபாட்டில் மட்டும் மனங்கனிந்து வேண்டிக் கொண்டு மகிழ்ந்த சியோங் இவ்வாண்டுக்குரிய ஆங்கின் பிறந்த நாள் விழாவினை; திருமண விழாவினையும் சேர்த்துக் கொண்டு, ஏக தடபுடலாகத் தனக்கு ராசியாக அமைந்த தான் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்தக் கம்பத்து வீட்டில் மிகவும் கோலாகலமாகப் பந்தல் போட்டுக் கொண்டாடினார்.

அந்த விழா பிரிந்த உறவுகளையும் முறிந்த உறவுகளையும் அழைத்து வந்து அறியாமை மாயைகளை விலக்கி; ஒருமைப்பாடுணர்த்தும் ஒரு விழாவாக அமைந்தது என்றால் அஃது மிகையாகாது.

கால ஓட்டத்தில் பிரிந்து முறிந்து இருந்த அத்தனை உறவுகளையும் ஒரு நேர்க்கோட்டில் வந்தமைந்து “சங்கமம்” பெறச் செய்த சாதனையைப் புரிந்த மகிழ்ச்சியில் சியோங் திளைத்திருந்தார்.

கொடு முடியாய் நின்றிலங்கும் ஒரு மலையுச்சியிலிருந்து ஒளிர்ந்து வரும் ஒரு நீரருவி இடையில் எதிர்ப்படும் மேடு பள்ளங்களினால்ல் பல்வேறு கிளைகளாகப் பிளவுபட்டு கிளைகள் எனக் கிளைத்து வந்தாலும் கீழ்த்தளமாம் அடிவாரத்தின் முகத்துவாரப் பகுதியில் மீண்டும் ஒன்று சேர்ந்து சமுத்திரத்தில் சங்கமம் ஆகித் தீர வேண்டும்; இது உலகத்து இயற்கையின் நியதியாகும்.

அதோ…. சலசலத்துக் கொண்டு வந்த நீரோடைகள் அனைத்தும் நிர்மலமாகக் காட்சியளிக்கும் சமுத்திரத்தில் மிகவும் அமைதியாகச் சங்கமித்துக் கொண்டிருக்கின்றன.

இறைவன் திருவருள் போல் எழுந்தருளும் “பௌர்ணமி” தன்னுடைய ஒளிக் கற்றைகளால் அமைதி மிக்க சங்கமத்தின் ஆகமத்தைப் புலப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

– மனங்கமழும் பூக்கள், முதல் பதிப்பு: நவம்பர் 1997, மலர்மாமணி பதிப்பகம், சென்னை.

மு.தங்கராசன்2 மு.தங்கராசன் தமிழகத்தின் திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்திலுள்ள தளுகை பாதர்பேட்டை என்ற ஊரில் 1934ல் பிறந்தார். இரண்டாவது வயதிலேயே தனது தாயை இழந்தவர், தந்தையோடு மலாயாவுக்கு வந்தார். ஜோஹூர் மாநிலத்திலுள்ள ‘நியூஸ்கூடாய்’ தோட்டத் தமிழ்ப் பள்ளியியில் ஆசிரியராக இருந்த தனது தந்தையிடம் தமிழ்க் கல்வியைக் கற்றார். 1955ல் ஆசிரியர் பட்டயம் பெற்ற இவர் உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளி உட்பட பல்வேறு பள்ளிகளில் தலைமையாசிரியராகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1955ல் தமிழ்முரசில் பிரசுரமான…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *