கௌரவமான பிச்சைக்காரன்






பழைய, புதிய பேருந்து நிலையங்களை ஒட்டியுள்ள நாற்சந்திக்குக் கிழக்கே, தென்புற நடைபாதை மேடைதான் அவர்களின் வசிப்பிடம். நடைபாதைவாசிகளான அவர்களை அங்கே பகல், இரவு எந்த நேரத்திலும் பார்க்கலாம். சுமார் 8 – 10 பேர் இருப்பார்கள். நடுத்தர வயதினர் மற்றும் கிழவர்களான ஆண்கள்தான் அதிகம். ஓரிரு கிழவிகளும் இருப்பர். பழைய, அழுக்கான ஆடைகள், பரட்டைத் தலைகள் இவர்களின் பொது அடையாளம். யானைக் கால் வியாதி, தொழு நோய், கை – கால் முடம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளானவர்களும் இருப்பர். சிலர் இந்த நடைபாதைக்கு நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள். சிலர் தற்காலிக குடியிருப்பாளர்கள்.
இவர்களில் எவரும் உழைத்து வாழ்பவர்கள் அல்ல. பிச்சை எடுப்பதற்கும் போவதில்லை. இங்கே இருந்தபடி யாசிப்பதும் கிடையாது. சுமார் பத்து அடி இடைவெளிகளில் தனித்தனியே அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருப்பார்கள். வெயில் கொளுத்தும் பகல் பொழுதில் கூட, நகரின் மையமாக உள்ள அந்த பரப்பான சாலையின் மருங்கில், வாகன சத்தங்களை மீறி, இவர்களில் ஓரிருவர் தங்கள் முகத்தை துணியில் மூடி, நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருப்பார்கள்.
இந்தக் காலத்தில் மனிதாபிமானம் பெருகிவிட்டது வியப்புக்குரியதுதான். வறியவர்கள், அபலைகள், கைவிடப்பட்டவர்கள், பிச்சைக்காரர்கள், தெருப் பைத்தியங்கள் ஆகியோருக்கு ஒரு நேரம் உணவளிப்பதை சில நல்லுள்ளங்கள் சேவையாக செய்து வருகின்றன. அப்படிப்பட்ட சிலர் இவர்களுக்கு தினமும் மதிய நேரம் வந்து உணவுப் பொட்டலம் விநியோகித்துச் செல்வது வழக்கம். அதிகப்படியாக வாங்கி உணவை வீணாக்குகிறார்கள் என்பது, இவர்களுக்குப் பின்புறமாக, வளாக சுவர் ஓரங்களில், பாதி – முக்கால் பாகத்துக்கு உணவோடு வீசப்பட்டுக் கிடக்கும் அலுமினிய ஃபாயில் கன்டெய்னர்களிலிருந்து தெரிய வரும்.
ஒரு நாள் மதியம் ஒரு மணி வாக்கில், புதிய பேருந்து நிலையத்தை நோக்கி இந்த நடைபாதையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தேன். ஸ்கூட்டியில் வந்திருந்த, ஜீன்ஸும் டாப்சும் அணிந்த இளைஞி, மேற்கு முனையில் நின்றபடி நடைபாதைவாசிகளுக்கு உணவுப் பொட்டலம் விநியோகித்துக் கொண்டிருந்தாள். நாலைந்து பேர் அவளிடம் சென்று வாங்கிக் கொண்டிருந்தனர். நான் சென்று கொண்டிருந்த இடத்துக்கு அருகே, நடைபாதையில் முக்கால்வாசி தூரத்தில் இருந்த கிழவியும் உணவுப் பொட்டலம் வாங்க எழுந்தாள். அப்போது அவளின் அருகே அமர்ந்திருந்த, ஆரோக்கியமான உடல் கொண்ட, நடுத்தர வயது ஆண், “நீ எதுக்கு அங்க போற? அந்தப் பொண்ணு இங்க வந்து குடுக்கட்டும். உக்காரு!” என்றார், ஜம்பமாக. கிழவி யோசனையோடு தயங்கி நிற்கவே, அவளை அமரச் சொல்லி அந்த நபர் சைகை செய்தார். கிழவியும் மனசின்றி அமர்ந்துவிட்டாள். அவள் எதிர்பார்ப்போடு பொட்டலத் திசை பார்த்துக்கொண்டிருக்க, ஜம்ப ராஜா அலட்சியமாகக் காலாட்டியபடி அமர்ந்திருந்தார்.
மூலையில் உணவு விநியோகத்தை முடித்துவிட்டு இளைஞி மிச்ச பொட்டலங்கள் அடங்கிய பிக் ஷாப்பர் பையோடு அவர்களை நோக்கி வந்தாள்.
– நடுகல் இணைய இதழ், மார்ச் 2025.
![]() |
இலக்கியவாதி மற்றும் நவீன தாந்த்ரீக ஓவியர். 5 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு, ஒரு சிறார் கதைத் தொகுப்பு ஆகியவை வெளியாகியுள்ளன. சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும் பெற்றவர். நாவல் போட்டிகளிலும், ஓவியப் போட்டிகளிலும் ஓரிரு பரிசுகள் / விருதுகள் / பதக்கங்கள் பெற்றுள்ளார். அச்சில் வெளியான நூல்கள்: வடக்கந்தறயில் அம்மாவின் பரம்பரை வீடு – சிறுகதைகள் (2004). வேலந்தாவளம்…மேலும் படிக்க... |