கொள்ளும் குத்து வெட்டும்





அழுக்கு மூட்டைகளை இறக்கியபின் கழுதைகளை முன்னங்கால்களை மட்டும் கட்டி மேயவிட்டான் சலவைத் தொழிலாளி. அவை வெளியில் போய் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அவ்விடத்தில் குதிரைப்படை ஒன்று வந்திறங்க, குதிரைகளின் சேணத்தை இறக்கி, கொள்ளும் புல்லும் கொடுத்து, அவற்றின் அலுப்புத்தீர உடல்களைத் தேய்த்தும் விட்டனர் போர்வீரர்கள்.
இதுகண்ட கழுதைகள், இவையும் நம்மைப் போல் தான் இருக்கின்றன. இவைகளுக்கு மட்டும் என்ன கொள்ளு, புல்லு, தேய்ப்பு, சிறப்பு! நமக்கும் இம்மாதிரி எல்லாம் செய்ய வேண்டும் என நம் எஜமானரிடம் நாம் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தன.
சற்று நேரத்திலேயே வேறொரு குதிரைப்படை அங்கே வந்தது; போர் மூண்டது.
பல குதிரைகளுக்கு குத்தும் வெட்டும் விழுந்தன. தலை, கால்கள் முறிந்தன.
இதையும் பார்த்த கழுதைகள்—
நமக்குக் கொள்ளும் வேண்டாம், இந்தக் குத்து வெட்டும் வேண்டாம் என்று, உடனே தமக்குள் முடிவு செய்து கொண்டன.
நாம் எவ்வளவுக்கெவ்வளவு இன்பங்களை எதிர்பார்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு துன்பங்களும் ஏற்படும் என்பதை இதனால் அறிய முடிகிறது.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை
கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார். இவர் எழுதியுள்ள 23 நூல்களும்…மேலும் படிக்க... |