கொலை





(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காற்று அறவே இல்லை. காடா விளக்கின் சுடர், அசையாத பிம்பம்போல் நிமிர்ந்து நின்றது. அதன் உச்சியிலிருந்து நீண்ட புகைக் கோட்டின் உச்சி நுனி மட்டும், சுருள் சுருளாக உருண்டு கரைந்தது.
அந்தச் சந்தன வண்ணச் சுடரையே, குறிமாறாமல் பார்த்துக் கொண்டிருந்தான் மாடசாமி. திண்ணையில் சுவரையொட்டி படுத்திருந்த ராசாத்தி, நிலைகொள்ளாமல் புரண்டாள். வியர்வை பெருக்கெடுத்து நசநசத்தது. குடிசையைப்போல் உயர்ந்திருந்த அவளது சுமைவயிறு, மூச்சிரைப்பினால் விம்மி விம்மித் தணிந்தது.
“உஸ்ஸ்ஸ்…உஸ்ஸ்ஸு…ஸ்ஸ்ஸு…”
நாகப் பாம்பின் சீறலாக ஒலித்தாலும், கொடிய வேதனையும், அதன் உபாதையும் துல்லியமாக உணர்த்தியது.
நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி, மூச்சுத் தின்றலுடன் படும்பாட்டைக் கண்டு மாடசாமிக்கு மனம் பயத்தால் படபடத்தது.
இரக்கத்தோடு அவளைப் பார்த்தான். அங்கும் இங்கும் புரள்வதும், அசைவதும்… அப்போதெல்லாம் சாய்ந்து நிமிரும் தேர் மாதிரி அவள் வயிறு தோன்றுவதும்…
வேதனை தாங்காமல் உதட்டைக் கடிக்கிறாள். நெற்றியிலும், நாசிக்கடியிலும் வியர்வை முத்துக்கள், விளக்கின் ஒளியில் மின்னுகின்றன. அவள் முகத்தில் சுருக்கங்கள்! வலி தாங்காமல் தவிக்கிற அந்தத் தவிப்பு!
இவனுக்கு இதயத்தை யாரோ அறுப்பதுபோலிருக்கிறது. அவளைப் பார்க்கப் பார்க்க, நெருப்பில் விழுந்த மெழுகாக உருகினான். இதயக் கூட்டையே ஏதோ ஓர் அசுரக்கரம் நொறுக்குவது போன்றதோர் பிரமை!
காட்டுக் கள்ளியாக கவனிப்பாரற்றுக் கிடந்த ‘சல்லுவாரிப் பயலான தன்னையும் ஒரு மனிதனாக மதித்து, கழுத்தை நீட்டி ‘குடும்பஸ்தன்’ என்ற கோபுரத்துக்குத் தூக்கி வைத்தவள்! நஷ்டங்களை ஏந்திக்கொண்டு கஷ்டங்களுக்கு மருந்தாக- கவலைகளுக்குத் துணையாக நின்றவள்! உழைப்பதிலும், ‘நாலு பேரைப் போல் வாழணும்’ என்பதிலும் அழுத்தமான ஆர்வமும், வெறியுமுள்ளவள்!
இன்பத்தை வழங்கும் தர்மவதியாக பெருமிதம் கொள்ளச் செய்து, இன்பத்தை, பெறுவதன் மூலமாகவே வழங்கிய அற்புதமானவள்! மூன்று குழந்தைகளைப் பெற்று ரெண்டை சாவுக்குத் தந்துவிட்டு… நாலாவதைத் தாங்கி…நாடி நரம்பெல்லாம் முறுக்கேறி தவிப்பதைப் பார்க்கும்போது…
மாடசாமிக்கு நெஞ்சில் ரத்தம் வடிகிறது. மனிதச் சிருஷ்டிக்காக இப்படி மனித வதையா?
அவனுக்கு எதன் மீதோ கோபம் வந்தது. தன்னையே சாடிக் கொண்டான். ‘ராசாத்தியின் கொழுப்புக்கு இது வேணும்’ என்று சோகத்துடன் சபித்துக்கொண்டான்.
பாழாய்ப் போன ‘குருட்டுப்பய தெய்வத்தை’ சாடிக் கொண்டான்.
உபாதை பொறுக்காமல் தீயில் விழுந்த பூச்சியாக அவள் துடிக்கிற கொடுமையை, அவனால் சகிக்க முடியவில்லை. ‘எப்போ என்ன ஆயிப்போகுமோ’ என்ற பயம், அவன் நெஞ்சில் பயங்கரப் பாரமாக ஏறிக் கனத்தது.
ராசாத்தியை மெல்ல அணு கினான். வழக்கமான செல்லத்துடனேயே அழைத்தான்…
“ராசு… ராசு… ஏம்மா, ரொம்ப வலிக்குதா?”
அவனது மிருதுவான குரலில், அனுதாபமும் பரிவும் கனிந்து நின்றது.
வலி பொறுக்காதவள்போல உதட்டைக் கடித்துக்கொண்டே புருஷன் முகத்தைப் பார்த்தாள். “ம்க்ம்… ம்க்ம்…’ என்று திணறினாள். அவன் முகத்தில் பரவி நின்ற அச்ச இருளைப் புரிந்து கொண்டாள். காய்ந்த உதடுகளை விரித்து, சிரிக்க முயற்சித்தாள்…
‘அப்படியொன்னுமில்லே…’ என்று முணங்கினாள். தன் புருஷனைப் பயப்பட வைத்து விட்டோமே என்ற சுயவருத்தம் அவள் நெஞ்சில் குமைந்ததுபோலும். தனது கண்களால் அவன் முகத்தைக் குளிப்பாட்டினாள். அப்பப்பா…! அந்தக் கண்கள்… அதன் ஒளி… அதில் ததும்பிய கனிவு…
“ஏய்யா பயந்து தவிக்கிறே? எனக்கென்ன, கல்லுபோல இருக்கேன்…ஒம் புள்ளைதான் என்னமோ இப்பவே சேட்டை பண்ணுது…”
சூழ்நிலையை இலேசுப்படுத்த, அவள் சொன்ன அந்த அன்பும் ஆறுதலுமான வார்த்தைகள்!… அவன் உணர்ச்சிகள் கொஞ்சம் சமனப்பட்டன.
மூன்று பிள்ளை பெத்தெடுத்த அவளுக்குத் தெரியாதா? ஆறு மாதத்துக்கு முன்பே சொல்லிவிட்டாள், ‘இந்த வட்டம் ரெட்டைப் பிள்ளைதான்’ என்று!
“ஏம்மா, ராசு… ரொம்ப புழுங்குதா? கதவைத் தெறந்து வைக்கட்டா?” என்று பரிவுடன் விசாரித்தவாறே கதவைத் திறந்தான். வழி கிடைக்காமல் திகைத்து நின்ற காற்று,குளுமையான சுகத்துடன் உள்ளே பாய்ந்தது. சுடரும், ஒளியும் நடுங்கியது. காற்றும், இருளும், ஒளியை அமுக்க முயற்சித்துத் தோல்வி கண்டன.
கதவைத் திறந்தவன், அப்படியே குனிந்து வெளியே வந்தான். முற்றத்தின் இடதுபுறத் தாழ்வாரத்தில் எருமைபாடு அசைபோட்டுக் கொண்டு படுத்திருந்தது. மூத்திரத்தில் நனைந்து கிடந்த அந்த வாலை, அடிக்கடி ‘சளப் சளப்’பென்று தூக்கி அடித்துக்கொண்டது. வலது பக்கத் திண்ணையில் மூத்த பயலும், ‘இளைய பொட்டச்சி’யும் தூங்கினார்கள். அவர்களது மூடு துணியை ஒழுங்குபடுத்திவிட்டு வெளியே வந்தான்.
தேய்பிறை நிலா, சிவந்த முகத்துடன் மேல்வானத்தில் சரிந்து கொண்டிருந்தது. காற்று அவனை அன்புடன் தழுவிச்சென்றது. அந்தத் தழுவலில் ஏற்பட்ட சுகம், மனதுக்குள்ளும் கதகதப்பை ஏற்றியது.
அந்தக் கிராமம், ஏறக்குறைய இருண்டு கிடந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக விளக்குகள் ‘மின்னுட்டான்’ (மின்மினி) பூச்சியைப் போல மின்னின. காற்றினால் எழுப்பி இழுத்து வரப்பட்ட தெருப்புழுதி, முகத்தில் படிவதை மென்மையாக உணர்ந்தான்.
தூரத்தில் பார்வையை எறிந்தான். எங்கும் இருட்டுத்தான். தொலைதூரத்தில் ஒளித்தூள் மிதந்தன. சூரியன் வருவதற்கு முன்பே கிழக்கு வெளுக்கிறதே… அதைப்போல ஏதோ நகரத்தின் விளக்கின் ஒளி மட்டும் வெள்ளையாக – அதுவும் மங்கலாக- தொலைதூரத்தில் தெரிந்தது.
இப்படிப்பட்ட வனாந்திர கிராமத்துலே இருக்கோமே… ‘ஏதாச்சும்’ ஆயிப் போச்சுன்னா… என்ன பண்றது? ‘அவுக்குன்னு போனோம், ஆஸ்பத்திரியிலே நின்னோம்’னு இருக்க முடியுமா என்ன? ஏதாவது நடந்துபோச்சுன்னா…?
இந்த நினைவே அவனைத் திகிலடைய வைத்தது. மனசு நடுங்கிக் குளிர்ந்துவிட்டது.
‘இந்தக் கண்ணு முழியாத ரெண்டு குஞ்சுகளை வைச்சிக்கிட்டு நா எப்படி வாழ முடியும்…?
‘என்னபாடு படுத்தி வைச்சாலும் சரி… அடக்கடவுளே, என்னை அந்தக் கதிக்கு மட்டும் ஆளாக்கிடாதேய்யா.
-என்று அச்சத்துடன் வேண்டிக்கொண்டான்.
பதினாறு நாட்கள்-
பீதியும் திகிலுமாக – பயங்கரமான கனவுகள- துக்ககரமான கற்பனைகள். இப்படி மோசமான அவலங்களுடனேயே பதினாறு நாட்கள் கரைந்தோடிவிட்டன.
சாயங்காலம். மணி ஐந்து இருக்கும். மாடசாமிதான் உரலில் சோளத்தை இடித்துத் தந்தான். அவன் அந்த வேலையைச் செய்ய வேண்டிய அவலமும் வந்துவிட்டதற்காகத் தன்னையும், தன் ‘விதி’யையும் சபித்துக்கொண்ட ராசாத்தி, சோள மாவை உலையில் போட்டுக் கிண்டினாள். அடுப்பில் நீலமும், சிவப்புமான ஜுவாலைகள் பெருகிக் கணகணத்தது.
ராசாத்தியால் உட்காரக்கூட முடியாமல், கனத்த வயிறு நிமிர்ந்து நின்றது. ஆனாலும் பல்லைக்கடித்து, உபாதையைச் சகித்துக்கொண்டு கிண்டிக்கொண்டே இருந்தவளுக்கு, மனதில் கிள்ளியதுபோல ஓர் அதிர்ச்சி! வலி கண்டுவிட்டது… இது பிரசவ வலிதான் என்று அவளுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.
“ஏய்யா…ஏய்யா…” என்று புருஷனைத் திணறலுடன் அழைத்தாள். அவனும் பயத்தால் அலறிப்புடைத்து ஓடி வந்தான்.
“ராசு… ராசு… என்னம்மா… ராசு…?”
“லேசா வலிக்குது…”
“அந்த வலியா?”
“அப்படித்தான் நெனைக்கேன். எதுக்கும், என்னைக் கைத்தாங்கலாத் தூக்கி அப்படி… திர்ணையிலே படுக்க வச்சிடேன்…”
அச்சத்திலும் பரபரப்பிலும் அவன் தவித்தான். அவனது கரங்கள் நடுங்கிற்று. கம்மங்கூட்டுக்குள் கைகளைக் கொடுத்து, தன் நெஞ்சோடு அணைத்தே தூக்கி, அப்படியே பூச்செண்டாகத் திண்ணையில் கிடத்தினான்.
“போயி, ராமாயம்மாளை கூட்டி வரட்டுமா?”
ராமாயம்மாள்தான் இந்தக் கிராமத்து லேடி டாக்டர். பேறு காலம் பார்ப்பது… பேறுகால மருந்து இடித்துத் தருவது… பிள்ளைக்குப் பக்குவமாகப் பாலூட்டுவது… குழந்தை கழுத்தைத் தூக்குகிற வரைக்கும், நீட்டிய காலின் இடுக்குக்குள் வைத்து குளுப்பாட்டி விடுவது… இதுபோன்ற பணிவிடை செய்கிற நர்சும் அவள்தான்! டாக்டரும் அவள்தான்!
ராமாயம்மாளைக் கூப்பிட ஓடிய மாடசாமியை, மெல்ல முணங்கலாக அழைத்தாள் ராசாத்தி.
“ஏய்யா…ஏய்…யா…”
“என்னம்மா…”
“போற போக்குலே, மேலத்தெரு அங்காளம்மாகிட்டேயும், நடுவீட்டு எல்லம்மாகிட்டேயும் ‘இந்த மாதிரி ராசாத்தி இடுப்பு வலியெடுத்து கிடக்கிறாள்’னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிடு” என்று வலியின் முனங்கலுக்கிடையில் அறிவுறுத்தினாள்.
ராசாத்திக்கு ‘இடுப்பு வலி, இடுப்புவலி’ன்னு, ஊர் பூராவும் செய்தி விஷக் காய்ச்சலாகப் பரவிவிட்டது.
ராமாயம்மாள் வீட்டை மாடசாமி நெருங்கினான். வீட்டின் முன் தாழ்வாரத்தில் அவளது மூத்த மகன், யாருக்கோ முடிவெட்டிக் கொண்டிருந்தான். மாடசாமியின் பதற்றமும் பரபரப்பும், அவனது கையிலிருந்த கத்தரிக்கோலையும் திகைக்க வைத்துவிட்டது. ‘கர்ச் கர்ச்’ சென்ற சப்தத்தை நிறுத்திக்கொண்டது.
“என்னப்பா, என்னாச்சு… இப்படி ஓடியாறீக?”
“அம்மா இருக்காளா?”
“இல்லியே… இப்பத்தான் சோறெடுக்க ஊருக்குள் போயிருக்கா…ஏன், அதுக்கென்னப்பா?”
“ராசாத்திக்கு இடுப்பு வலி எடுத்துடுச்சு… அதான் கூட்டிட்டுப் போகணும்…”
“அடடே…அப்புடியா… ஆண்டவன் புண்ணியத்துலே ஆம்பளைப் புள்ளையெ அழகா… பெத்தெடுத்து, தாயும் புள்ளையும் சுகமா எந்திக்கட்டும்.”
அவன் முகத்தில் மகிழ்ச்சி, ஒரு பூவைப்போல மலர்ந்து ஒளி வீசியது. நல்லுணர்ச்சியுடன் வாழ்த்தி பிரார்த்தித்துக்கொண்டான்.
“நீங்க போங்கப்பா… எம் பயலை விரட்டி… ஒரு நிமிஷத்துலே எங்கம்மா, உங்க வூட்லே இருக்கிறாப்லே செய்துடறேன்… பயப்படாதேங்க… கடவுள் இருக்கார்… நாங்க இருக்கோம். ஏன் பயப்படணும்?”
அந்த எளிய தூய இதயத்திலிருந்து பீறிட்டு வந்த அந்த அன்பு வார்த்தைகள், அவன் நரம்புகளுக்குள் சூடாக ஓடுவதுபோலிருந்தது. நெஞ்சில் ஒரு தன்னம்பிக்கை, உறுதியுடன் நிமிர்ந்தது.
அப்படியே பொன்னுவேலய்யா மாமாகிட்டே போய், ஞாபகப்படுத்திட்டு வந்துடுவோம் என்ற நினைப்புடன், கிழக்காக நடந்து அந்தத் தெருவைக் கடந்து, தெற்குத் தெருவை நோக்கி அந்த நீலவண்ணமும், மஞ்சள் வண்ணமுமாக நிமிர்ந்து நிற்கும் ‘காரை’ வீட்டை நோக்கி நடந்தான்.
மாடசாமி என்ன செய்வான், பாவம்! சாதாரண விவசாயத் தொழிலாளி. அன்றாடக் கூலியில் நான்கு ஜீவன்கள் ஜீவித யாத்திரை நடத்தியாக வேண்டும். அதற்கும் மத்தியில் ஒரு வெள்ளாட்டுக்கிடா வளர்த்து விற்றதில்தான், ஒரு நாற்பது ரூபாயைப் பேறுகால செலவுக்காக ஒதுக்கமுடிந்தது. ரெட்டைப்புள்ளை என்ற நினைப்பு வேறு பயமுறுத்தியது.
பேறுகாலத்தில் ஏதாச்சும் சிக்கல் வந்துட்டால்…? ரெட்டிப்புச் செலவு வந்துட்டால்…? அந்த அவசரத்துலே திடீர்னு ரூபாயைப் புரட்ட முடியுமா என்ன? என்ற பயம் நிறைந்த முன் ஜாக்கிரதையுணர்வுடன் ஏற்கனவே பொன்னுவேலய்யா மாமாவிடம் தலையைச் சொறிந்து நின்றிருந்தான். அவரும், “சரிதான் போடா, அப்படிப்பட்ட அவசரத்துலே இல்லேனு சொல்றதுக்கு நானென்ன இரக்கமில்லாத அரக்கனாடா? ஒம் மாமாதானே! ஒம்பொஞ்சாதி உசிருக்கு மன்றாடுறப்போ, நா கல்லுமாதிரியா நிப்பேன்?” என்று சமத்காரமாக தைர்யம் சொல்லியிருந்தார்.
கையோடு அதை நினைவுபடுத்திவைத்தால் நல்லதாகிப் போகுமே என்ற நினைப்பில், வீட்டுக்குள் நடந்தான்.
பொன்னுவேலய்யா மாமாவைக் காணவில்லை. அந்த அக்காதான் இருந்தாள். அவள் செய்தியைக் கேட்டவுடன் ஆனந்தப் புல்லரிப்புடன், ‘அப்படியா’ என்று எதிரொலித்தாள்.
“ஏதோ அந்த ‘ஆத்தா’ புண்யத்துலே தாய்க்குச் சேதாரமில்லாமெ புள்ளையை எடுத்தா போதும்… அந்த ஆயிரங்கண்ணுடையாளுக்கு ராசாத்தியெப் பாக்க ஒரு கண்ணு இல்லாமலா போயிடும்? எல்லாம் ‘அவா’ பாத்துக்குவாள்” என்று தெம்பு சொன்ன அவள்… “சரிப்பா, நீ போய் மத்ததைக் கவனி. மாமா வரவும் சொல்லிட்டு… நானும் ராசாத்தியைப் பாக்க வாரேன்” என்று அன்பும், ஆறுதலுமாகச் சொல்லி அனுப்பி வைத்தாள்.
தனது வீட்டிற்கு மாடசாமி வந்தபோது, மனதில் அச்சக்கறை பெரிதும் கரைந்திருந்தது. சுற்றியுள்ள மனிதர்களின் உறவும், அன்பும், ஆறுதலும் அவனது மனப்பயத்தைத் துடைத்து, ஒளிபெறச் செய்திருந்தது.
கர்ப்பிணியல்லாத அவளது பழைய கோலத்தை மனதுள் நினைத்துக்கொண்டான். கறுப்புப் புறாவாக துடிப்பும் துள்ளலும், மின்னலுமாக சுழன்று திரியும் அந்த அழகு மேலும் செழுமை பெற்று, முழுமையுற்ற பேரழகுடன் மீண்டும் தன்முன் நிற்பாள்… மனதைச் சுண்டியிழுக்கும்படியான அந்த மாயப் பார்வையை வீசுவாள்…உதட்டைச் சுளித்து அழகு காட்டி, கண்ணில் ஒளி துள்ள சிரிப்பாளே, அந்தச் சிரிப்பின் பிரகாசம், தன் நெஞ்சில் இன்ப வித்துக்களை வீசும் என்றெல்லாம் நம்பிக்கையுடன் நினைத்துக் கொள்கிறபோது…. அவன் மனம் பரலசத்தில் சிலிர்த்துக்கொண்டது.
‘ஆண்டவா, எதை எப்படியாக்கினாலும் எனக்குக் கவலையில்லே… ராசாத்தியை மட்டுமாச்சும் மூளி பண்ணாமெ திருப்பிக் கொடுத்துடு.’
மனைவி மேலுள்ள அளப்பரிய ஊமைப்பாசம், இதயத்துக்குள் இப்படிப் பிரார்த்தனைகளாகத் தவித்துக்கொண்டிருந்தது. பலஹீலம், பக்தியைத் துணைக்கு அழைத்தது.
தனது வீட்டை அடைந்தபோது, நிலைமையே வேறுவிதமாகக் காணப்பட்டது. அங்கு எதிர்பாராத பரபரப்பு; திகில் நிறைந்த தவிப்பு. ‘என்னாகிப் போச்சு?’
பதற்றத்துடன் வந்தான். மாடசாமியின் மனதில் ஒரு பாறாங்கல். அவன் விழிகள் பரக்க பரக்க அலைய, பிளந்த வாயுடன் பீதியுடன் கேட்டான்.
“எப்புடியிருக்கு?”
ராமாயம்மாள்தான் சொன்னாள்:
“என்னமோ தெரியலே…வலி துப்புறவா நின்னுபோச்சு…”
“ஐய்யய்யோ… அப்புறம்?”
“அடிச்சுப் போட்டாப்லே கிடக்குது. கொஞ்ச நேரத்துலேயாவது வலி வந்துட்டா, சுகமா பேறுகாலமாகிப் போகும்.”
வீடு பூராவும் பெண்கள் கூட்டம். அனுதாபமும், பரிதவிப்புமாகப் பெண்கள் சோகமாக அங்கலாய்த்தனர். ஓரிரு பெரியவர்களும் வீட்டின் முன், வருத்தம் நிழலாக, படிந்துகிடக்க நின்றனர்.
மாடசாமி, செய்வதறியாமல் தவித்து நின்றான். மனம் அச்சத்தில், வலையில் சிக்கிய புறாவின் சிறகுகளாகப் படபடத்தது.
பாடையில் அவள் செல்வதுபோலவும், குழந்தைகளைக் கையில் பிடித்துக்கொண்டு, மேல் துண்டை வாயில் திணித்துக்கொண்டு தான் அழுவதுபோலவும் ஒரு கொடிய காட்சி நெஞ்சில் மின்னி மறையும் போது, அவனது சர்வாங்கமும் நடுங்கி, அதிர்ந்து அடங்கியது.
பெண்கள் வீட்டுக்குள் அங்குமிங்குமாக – பரபரப்பாக- துப்பாக்கிக் குண்டுகளாக பாய்ந்து அலைந்தனர். அவர்களது அங்கலாய்ப்புகள் அனுதாப வார்த்தைகள், பிரார்த்தனை வேண்டுதல்கள்…
அந்தக் கிராமமே காட்டிய அன்னியோன்யம் வழக்கமானதுதான்; சாதாரணமானதுதான்.
பெரியவர்களுடன், கவலையும் பீதியுமான இருட்டுக்குள் மூழ்கி நினைவிழந்தவனாக நின்ற மாடசாமி, உஷ்ணப் புழுதியில் வெட்டிப்போட்ட பூங்கொடியைப்போல அசாதாரண வாட்டத்துடன் தோன்றினான்.அவன் மனத்துள் அலைபாயும் சோகப் பெருவெள்ளம், அவன் கண்ணில் முட்டி நின்றது.
ராமாயம்மா ஓடிவந்தாள்.
“இங்க ஒன்னும் நடக்காது, ஏதாவது ஒரு டாக்டரைக் கூட்டி வர்ரதுக்கு ஏற்பாடு பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு, பரபரப்புடன் திரும்பினாள்.
ஒரு பெரியவர் குறுக்கிட்டார்.
“இந்தா ராமாயி…”
“என்னப்பா…?”
“எப்படியிருக்கு, இப்போ…”
“வலி வந்து வந்து நின்னு போகுது, மூச்சுத் திணறுது.. அதைவிடக் கொடுமை என்னன்னா, அடிக்கடி ஒடம்பெல்லாம் தண்ணியா குளிர்ந்து போகுது…”
அவள் மறுபடியும் வீட்டிற்குள் போய்விட்டாள். மாடசாமிக்கு திக்கென்றாவிட்டது… எதிர்பார்த்த அபாயம் எதிர் வந்துவிட்டது. தன்னை மோதி வீழ்த்திவிட்டு, குரூரமாகச் சிரிக்கப்போகிறது.
இதயமே வெறுமையாகிவிட்டது போன்ற ஒரு பிரமை! நெஞ்சுக்குள் ‘கபாகபா’வென்று ஏதோ ஒரு மூலையில் கொடிய வேதனை!
பெரியவர்தான் உஷாரானார்.
“என்ன மாடசாமி, என்ன செய்றது?”
“அதான் எனக்கும் தெரியலை…” கைகளைப் பிசைந்தான்.
“டாக்டரைக் கூப்பிடணும்னா ஏழு மைல் போகணும், காட்டுப்பாதை. அப்படியே போனாலும், எந்த டாக்டரும் வரமாட்டானுவ…”
“ராசாத்தியைக் கொண்டுபோகலாமா…?”
“எப்படி முடியும்? இந்த நிலையிலே இருக்கிறவளை மாட்டு வண்டியிலே வைச்சு, காட்டுப் பாதையிலே போனா. மேடு பள்ளத்திலே குலுங்குனா… ஒன்னுருக்க ஒன்னு ஆயிப்போச்சுன்னா என்ன பண்றது? அப்புறம் திரும்பப் பார்க்க முடியாதே …”
பொறிக்குள் சிக்கிக்கொண்ட எலியைப்போல, மாடசாமி திணறினான். எதையும் செய்யமுடியாமல்… எதற்கும் இயலாமல் தவித்தான். முன்னுக்குப் போகவும் முடியாமல், பின்னுக்கும் ஒட இயலாமல் மருகினான்.
பெரியவரும் கவலையுடன் முயற்சித்தார். “இப்ப என்ன செய்றது?”
ஒன்றும் பிடிபடவில்லை. எரிச்சலும், கண்மூடித்தனமாக கோபமும்தான் பொங்கிச் சீறியது. ‘கெட்ட ஜாதிப் பயலுக… முப்பது வருஷமா தேர்தல் வருது… வாக்குறுதிகள் வருது; ஆனையெப் பூனையாக்குனேன்… பூனையெப் புலியாக்குனேன்’னு சாதனைப் புளுகு முழக்கங்கள் வருது. ஆனா… ஒரு ரோடு மட்டும் வர்ரதுக்குல்லே… ஒரு ரோடு மட்டும் வந்துருந்தா…? இந்த ஊரு இப்படி உலகத்துலேருந்து துண்டிக்கப்பட்டு அனாதையா கிடக்காதே! கிராமங்கள் இந்தியாவின் இதயமாமே! நல்ல இதயம்தான் – துயரமும் சலிப்புமாக!’பெரியவரின் நினைவு ஓடியது.
ராசாத்திக்கு சீரியஸ் என்றவுடன், பெண்கள் கூட்டமும் நிறைந்தது. ஆண்களும் வேலைகளைப் போட்டுவிட்டு வந்தனர். ஒவ்வொருவரும்… ‘என்னாச்சு… எப்படியிருக்கு’ என்று துடிப்பான விசாரிப்புடனேயே வந்தனர்.
ஒரு வாலிபன் டாக்சியை அழைத்துவரப் புறப்பட்டான். ஏழுமைல் காட்டுப்பாதையைக் கடக்கணுமே… ஒரு சைக்கிள் வேணும். அதற்கு அரை மணி நேரம் அலைந்தபிறகு கிடைத்தது. காற்றாகப் பறந்தான். இன்னொருவன்… சைக்கிளுக்காக அலைந்து கிடைக்காமல் ஓய்ந்தான். இன்னொருவனுக்குக் கிடைத்து, டாக்டரை அழைக்க ஓடினான்…
அவ்வளவுதான். வேலைகள் சிறகு கட்டிப் பறந்தன. ஒரு ஜீவனையல்ல, மூன்று ஜீவன்களைக் காப்பாற்றணுமே என்கிற பதைப்பு… அமைதியான கட்டுக்கோப்புடன் வாழும் ஓர் எளிய குடும்பம் நொறுங்கிச் சிதைவதைத் தடுத்தாகவேண்டுமே என்கிற துடிப்பு, அவர்களது பரபரப்பான வேகச் சுழலில் தெளிவாகத் தெரிந்தது.
நேரம் ஊர்ந்தது… அந்த நேரம், துயரமும் பீதியும் நிறைந்து அழுத்தும் கொடிய நேரம். ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாய் வதைத்துவிட்டு நகர்கின்றது.
அடுத்தடுத்து, இரண்டு சைக்கிளும் புயல்வாய் பட்ட துரும்பாகப் பறந்துவந்தன.
“இந்த காட்டுப்பாதையிலே மோட்டார் பைக் வராதாம்… ஆகவே டாக்டரும் வரமாட்டாராம்… ஆனா எந்த நேரத்துக்கு ஆஸ்பிடல் வந்து சேர்ந்தாலும், அலுப்பைப் பாராமெ கவனிக்கத் தயாராம்!”
‘அடப்பாவமே!… இங்கே மூன்று ஜீவன்கள் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கையில் இப்படியோர் பதிலா…?
மனிதாபிமானம், இத்தனை நிபந்தனைகளையா விதிக்கிறது…?
டாக்ஸியும் கிடைக்கவில்லையாம்! இடையிலே செத்துத் தொலைஞ்சுட்டா பெரிய ரோதனையாப் போகுமாம்…! அட இழவே, இப்ப என்ன செய்வதாம்…?’
பெரியவர் திகைத்தார்; வழி ஒன்றும் புரியவில்லை. சுற்றிலும் இருள், புகை மூட்டமாகச் சூழ்ந்துகொண்டது போலிருந்தது.
மாடசாமி அழ ஆரம்பித்துவிட்டான்…
பெரியவர் எரிச்சலுடன் திட்டினார்!
“ஏண்டா பொம்பளை மாதிரி ஒப்பாரி வைக்கிறே? ஆகவேண்டியதெப் பாக்காமெ… அழுதா என்னடா லாபம்?”
பெண்கள் மத்தியில், பரபரப்பும் சலசலப்பும் அதிகரித்தது. ஆண்களும் அங்குமிங்குமாக அலைந்தனர். ஆங்காங்கிருந்து யோசனைகள் வெடித்தன; மருத்துவம் சொல்லப்பட்டது. கூட்டம் கூட்டமாக அனுதாபப் புலம்பல்கள்… அங்கலாய்ப்புகள்… இறுதியில் ஒரு முடிவு வந்தது.
‘ஆவது ஆகட்டும்’ என்ற இறுதியான அசட்டுத் துணிச்சலுடன், மாட்டு வண்டியைப் பூட்டினர். வைக்கோலைப் பரப்பி, போர்வையை விரித்து… வேலைகள் சிறகுகட்டிப் பறந்தன. ஒரு வேலையைச் செய்ய, பல இதயங்கள் துடித்தன… அந்த ஏழை நெஞ்சங்கள் அத்தனையும் ஒரே பிரச்சினையால் – ஒரே அன்புக் கயிற்றால் – கட்டியிழுக்கப்பட்டது போன்றதோர் ஒன்றுபட்ட இயக்கமாக அது இருந்தது.
மாடு… கிளம்பியது. வண்டியுள் ராசாத்தி கிடத்தப்பட்டுக் கிடந்தாள். நிழலுக்கு மேலே குடைகள்… துணி விரிப்புகள்! அவளுக்கு ஆதரவாக வண்டியில் இரண்டு பெண்கள்… வண்டி நகன்றது. இதயங்கள், அவநம்பிக்கையுடன் புலம்பின…
“ஆயிரங்கண்ணுடையா… நீ… தான் காப்பாத்தணும்…”
வலி எடுத்ததோ ஐந்து மணிக்கு… வண்டி புறப்படுவதோ இரவு பதினோரு மணிக்கு.
பெரியவரும், மாடசாமியும் புறப்பட்டனர். பிள்ளைகளை, ஒரு பெண் ஆதரவுடன் அணைத்துக்கொண்டாள். நெருங்கிய உறவினர்கள் சிலர், அவர்களாகவே வண்டிக்குப்பின் கிளம்பினர். கிளம்பத் துடிப்பிருந்தும், கையில் காசில்லாமல் மனதைப் பிசைந்து கொண்டு சிலர்…
வண்டி ஊரைக் கடந்தது. ராசாத்தி, மூச்சுப் போகாமல் திணறினாள்.
ஏழு மைல் கடந்தது. வண்டியிலிருந்த பெண்கள் பதறிக் கொண்டேயிருந்தனர். மனம் திக் திக்’ என்று அடித்துக்கொண்டது. சாமத்தைக் கடந்து மணி ஒன்றரையாகிவிட்டது. ஆஸ்பத்திரியில் போய் வண்டி சேர்ந்தது.
வண்டியை விட்டு ராசாத்தியை அந்தப் பெண்களும், மாடசாமியும் சேர்த்து இறக்கி… ஆஸ்பத்திரிக்குள் கொண்டு போய்ச் சேர்த்து…ஒரு ஐந்து நிமிஷம்கூட இருக்காது- அந்தப் பெண்களின் இதயத்தையே பிளந்தது… மாடசாமி, நெஞ்சிலும் தலையிலுமாக அடித்துக்கொண்டு அழுது புலம்பிய அந்தக் காட்சி… பெரியாருடைய வைராக்யத்தையே உடைத்து… கண்களில் நீர்மூட்டச் செய்தது…
“ராசாத்தி செத்துப்போனாள்…”
இந்த உண்மையை அவரால் நம்ப முடியவில்லை…
ஏனெனில், அவள் சாகவில்லை… கொலை செய்யப்பட்டாள்! அநியாயமாக சாகடிக்கப்பட்டாள்! இந்தியாவின் இதயம், இந்தியாவுடன் முறையாகப் பொருந்தியிருந்தால் ரோடு இருந்திருந்தால்… மருத்துவ தாமதமும், மரணமும் நிகழ்ந்திருக்காதே! இது ஒரு மரணம்தான்; ஆனால் கொலை! இந்தக் கொலைக்காக யாரைத் தூக்கில் போடுவது?
கோபமும் சோகமும் பின்னிப் பிணைந்த நினைவுகள், அவரது இதயத்துள் பொங்கிப் பிரவகித்தது. ராசாத்தியின் சடலத்தைப் பார்த்தவுடன், பொறுக்கமுடியாமல் அலறியே விட்டார்!
“ராசாத்தியைக் கொன்னுட்டீகளடா… பாவிகளா…”
இந்தச் சமுதாயத்தைக் குற்றம் சாட்டுவதைப்போல, சடலத்தை பார்த்த மாத்திரத்தில் அம்புபோல் வெளியே வந்து அழுதுகொண்டே கதறினார், பெரியவர்.
(இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற சிறுகதை)
– செம்மலர், ஆகஸ்ட் 1977.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |