கூனல்





(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மதிய உணவினைச் சாப்பாட்டு கேரியரில் இட்டு துடைத்து முடித்த ராஜியின் கண்கள், ஜன்னல் வழியே அக்கிழவியைப் பார்த்து விட்டன.
பலமுறை பார்த்தாகி விட்டாலும் ஒவ்வொரு முறையும் மனம் உதைத்துப் புரள்கிறது.
உடலே இரண்டாக மடிந்து விட்டாற்போன்ற கூளலில் அக்கிழவி சிரமப்பட்டு நடந்தாள்.
ஏதோ தேடக் குனிந்தவள், நிமிர மறந்து விட்டாற்போல… கைகளை மார்போடு சுட்டிக் கொண்டிருந்தாள். தொய்வாக விட்டிருந்தால், நான்கு கால் ஐந்து போலத் தோன்றும்…
ம்பச்…
பாவம்… வயசான காலத்திவே இந்தச் சிரமம்.
ராஜியின் மனம் மூதாட்டிக்காக அனுதாபப்பட்ட அதே நேரத்தில் சுய பச்சாதாபத்திலும் சற்றே தனைந்து கொண்டது. மளம் குன்றிப் போன தானும் பாவந்தான். முன்னே போல வெளியே போக வர.. ஒன்றுமில்லை. வீட்டினுள்ளேயும் அவள் வாய் விட்டுச் சிரித்து இரண்டு வருடங்களாயிற்றே! இவள் முகத் தெம்பிலும் சிரிப்பிலும் சூடு கண்டு மலர வேண்டிய குடும்பமும் இன்று கூம்பித்தான் கிடக்கின்றது.
இரண்டு வருடங்களாகக் கணவனின் டாக்ஸி தொழிலில் ஏகப்பட்ட கரைச்சல்… நஷ்டம். டயரும், பெட்ரோலும் ஏகத்திற்கு வியை கூட்டிக்கொண்டே போசு, தொழிலில் ஏகப்பட்ட போட்டி வேறு முளைத்தது. டீசல் வேன்களின் ‘ரேட்’ சகாயமால் அமைய – விழா, திருமணம், டூர் எனச் சிறிய உள்ளூரின் தேவைகளிலும் டாக்ஸி தொழில் நசுங்கியது. கடனையும் அடைக்க முடியாது. படிப்பு, உணவு, வாடகை, உடை என நீண்ட பட்டியலில் பணத் திணறல் அதிகமாரி குடும்பம் முழுதும் சந்தோஷக் காற்று தேடித்தவித்தது.
கணவன், வீட்டிற்குக் கொண்டு வந்த கமைகளை ராஜி சுமந்தாள். மனதுள் மருள மருக, சுமைகள் கனம் கூடி அவள் மலம் வளைந்து போனது.
சிநேகிதம், திருமணம், உறவு என்று எந்த அழைப்பையும் ஒதுக்கினாள்.
“பத்ரி வேன்ல குற்றாலம் போயிட்டு வரலாமா ராஜி? ஆறு, ஏழு குடும்பம் சேர்ந்து ஜாலியா…”
“பத்ரி, வேன் போட்டதிலேர்ந்துதான் நமக்குச் சிரம காலம் ஆரம்பம். அது புரியாது அவங்கட போகணும்கிறீங்களே?”
“நீங்களும் ஒரு வேனு வாங்குங்க அண்ணேன்னுதான் அவனும்…”
“எல்லாம் வாய் ஜாலக்கு, எவனையும் நம்பாதீங்க.”
வீட்டில் கொண்டாட்டங்கள் நின்றன.
‘”அம்மா என் பிறந்த நாளுக்கு என் ஃபிரெண்ட்ஸைக் கூப்பிடறேனே.”
“அதொண்ணும் வேணாம்.”
“எதுக்கும்மா?” பிள்ளை கெஞ்சுவான்.
“வீண் செலவு.”
”நீங்க செஞ்சு வச்சிருக்கிற தேங்குழலும், ரவா லட்டும் போதும்மா.”
“வர்றதுங்க சுற்றிலும் நோட்டம் விடுங்க. குடிக்க அதி இதுன்னுங்க. சிரிச்சுப் பேசணும் – என்னால ஆகாது. ”
“நாங்க சாப்பிட்டுட்டு வெளியே போய் விளையாடிக்கறோம்.”
“வாயை மூடு” பல்லைக் கடிப்பாள்.
சமையல் உள்ளில் பித்தளையும் எவர்சில்யரும் குறைந்து அலுமினியம் நிறைப்பதை எந்தப்பிள்ளை கவனிக்கப் போகிறது?
அவளது ஒன்றிரண்டு நகைகளும் அடகுக் கடையில் இருப்பதைப் பற்றி அவர்களுக்கென்ன? இவள் புன்னகையுடன் இருப்பதைப் பரிமாறியிருந்தால் பிள்ளையும் சிநேகிதர்களும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்.
ராஜி, தனக்குள் குன்றி வீட்டின் இயல்பையும் நறுக்கி விட்டாள்.
டீசல் வேன் வாங்கிய பின் நான்கு மாதங்களாகத் தொழில் பரவாயில்லை. கடன், வட்டி, செலவு போக கையில் பணம் மிஞ்சுகிறது.
ஆனால், அவளால் நிமிர முடியவில்லை. வெளியே பெண்கள் அவளது கவரிங் சுமந்த கழுத்தை, கண்ணாடி வளையல்களை உற்றுப் பார்ப்பது போல சங்கடப்படுவாள்.
தங்களுக்கு மட்டுமே நஷ்டம்; அதனால் மறைவாக இருப்பது. நல்லது என்பது போல ஒதுங்கிக் கிடந்தாள்.
இன்று குழந்தைகள் சாப்பாட்டை, பள்ளிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இன்று காலை அவளுக்குத் தலைவலி. அனைவரும் பழைய சாதத்தை மோரில் கரைத்துக் குடித்து ஓடியாயிற்று.
மாத்திரைப் போட்டு, நேரம் பார்த்து முரண்டிய ஸ்டவ்வை சரிபார்த்து அவள் சமைத்தும் முடித்தாள்.
அடிக்கடி இப்படி உடல், தலை என வலியும் பாரமும்அவளைப் படுத்தி எடுக்கின்றன.
மனத்திள் துக்கம், உடல் முழுதும் ஓடி களத்து விடுகின்றது.
உடல் கழுவி, சுத்தமாக உடுத்தி, சீவி வெளியே வர ராஜியின் உள்ளே சற்று வெளிச்சம் பட்டாற் போலிருந்தது. 30 நிமிட நடையில் பள்ளியினுள் நுழைந்தாள். அனைவரும் தன்னையே பார்ப்பது போன்ற தவிப்பில் குனிந்து நின்றவன், நிமிருகையில் யாரும் அவளை முறைக்கவில்லை என்பது புரிந்தது. மரநிழலில் தெரிந்தவர்கள். ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டும் மணியடித்த மறுநிமிடம் வெளியே பாய்ந்து வந்த குழந்தைகளைக் கை கழுவச் செய்தும் கொண்டிருந்தனர்.
“இன்னைக்குத்தான் இங்கே வர்றீங்க இல்லையா?”
பளீரென்ற சிநேக முறுவலுடன் அருகே நின்ற பெண்ணைக் கண்ட ராஜி தடுமாறினாள்.
கேட்டவளின் கழுத்தில் கனமாகக் கிடந்த செயினும் சிவப்புக்கல் கம்மலும் அவளை மிரட்டின.
“ம்.”
“பிள்ளைங்க இங்கே புதுசா சேர்ந்திருக்காங்களா?”
“ம்… இல்லை.”
அதிசயமாய்த் தாயைப் பள்ளியில் கண்ட பிள்ளைகள் இருவரும் ஓடிவந்து அவள் கையைப் பற்றினர்.
”நல்லவேளை வந்தீங்கம்மா. ஒரே பசி.”
“அப்பா ஐந்து ரூவா தந்து பழம், பிஸ்கட் வாங்கிச் சாப்பிடச் சொன்னாங்க. ஆனா, பசிக்குச் சோறுதான்” பிள்ளை சிரித்தான்.
“அடே., ரஞ்சிதாவோட அம்மாவா நீங்க?”
“ம்.”
கேட்டவளின் குழந்தைகளும் வர ஏதேதோ பேசி சிரித்தபடி அவர்கள் சாப்பிட்டனர். கையை ஆட்டியபடி மகள் பேச, தாய் சிதறும் சாதத்தை பொறுமையாகச் சுண்டித் துடைத்தாள்.
“யாரது ரஞ்சி?”
ஆவல் தாங்காது ராஜி கேட்டாள்.
“சுநீதான்னு அடிக்கடி சொல்வேனேம்மா – அவதான். அது அவங்கம்மா. எங்களுக்கும் கூட அடிக்கடி ஸ்வீட் தருவாங்க.”
படிப்பு, பாட்டு, விளையாட்டு என அனைத்திலும் முதல் பரிசு தட்டிச்செல்லும் சுந்தா இவள்தானா? அந்தச் சின்ன முகத்திலேயே ‘என்னால் செய்ய முடியாதா என்ன’ என்ற துள்ளலும் பிரகாசமும் தெரிவதைக் காண ரம்மியமாயிருந்தது.
விக்கியதம்பி வாயில் தீர்ஊற்றி, தாய்க்கு அப்பளம் ஊட்டியபடி சாப்பிட்ட சுந்தா, அவ்வப்போது ராஜியைப் பார்த்து புன்னகைத்தாள். தன் மீது புதிய கண்கள் மொய்ப்பதை அவள் உணர்ந்திருக்க வேண்டும்.
சிறுமியின் இயல்பான பார்வையில் ராஜியும் வெட்கமாய்ப் புன்னகைத்தாள். சுற்றிலுமிருந்த சளசளப்பில், சிசிப்பில் காற்றில் அவளுள் ஏதோ புரண்டது.
கை கழுவி, பாத்திரங்கள் அடுக்கப்பட, பேச்சு தொடர்ந்தது.
“ரஞ்சிதா உங்களைப் போல ரொம்ப அமைதி.”
“ம்… உங்க மகளைப் பற்றி அடிக்கடி ரஞ்சி சொல்லுவா.”
“சுநீ வாயாடியாச்சுதே. வீடு ரொம்பத் தொலைவா?”
“20 நிமிஷமாச்சு.”
“அதுதான் கொடுத்து விட்டுடறீங்களா? நானும் வாயல் புடவைதான் கட்டணும்னு நினைக்கறது. வெயிலுக்கு இதம். ஆனா இஸ்திரி போடும் போது அலுப்பாயிடுது. நீங்க கட்டியிருக்கிற சுங்குடி எங்கே எடுத்தது?”
பேச்சு சரசரவென கடை, சொந்த ஊர், படிப்பு, மழை, வெயில் என வளர்த்தது.
பேசியபடி நடக்க சுவாரஸ்யமாயிருந்தது.
உள்மனக் குகைக்குள் காற்று புகுவது போன்ற உணர்வில் ராஜிக்குச் சற்றே உற்சாகம் வந்தது.
புன்னகைப்பதில் கன்னங்கள் இளகி, நாவு தளர்ந்தது.
“ரஞ்சிதா அப்பா வேலையில் கொஞ்சம் சிக்கல். வருமானம் சரியில்லாம கஷ்டப்பட்டுட்டோம். இப்போ பரவாயில்லை.
ஆனாலும் ‘சட்’டுன்னு யாரையும் பார்த்துப் பேச, சிரிக்க தயக்கமாயிருக்கு.”
அடுத்தவள் மெள்ள புன்னகைத்தாள்.
அவள் கண்களின் கீழே வளையமிட்டிருந்த கருமை கூட அழகாயிருந்தது.
“சுநீதா அப்பா அவ நாலு வயசாயிருக்கையிலேயே தவறிட்டார்.”
“ஆஹ்…” ராஜிக்கு மறுபடி மூச்சையடைத்தது.
“அப்போ சின்னவன் ஒன்பது மாசக் குழந்தை”.
“நீங்க…?”
”வீட்டு முன்னாடியே கடை போட்டு நடத்தறேன். நடராஜ் ஸ்நாக்ஸ்…”
“ஓ…?”
“அது அவர் பேரு.”
“சொச்ச காலத்துக்கு நாமளும் வாழணும். குழந்தைகளும் நம்மை நம்பித்தானே! நம்ப முகம் வாடினா, அதுங்க கருகிடுங்க.”
“உண்மைதான்.”
உள்ளே கூனல் நெளிந்து நிமிர ஆரம்பித்தது. நிமிர்வின் நோவில் ராஜியின் கண்களில் நீர் துளிர்த்தது.
– மங்கையர் மலர், பிப் 1994.
– பல்லக்குப் பயணம், முதற் பதிப்பு: செப்டம்பர் 2005, ஜீயே பப்ளிகேஷன்ஸ், சென்னை.