குருஷேத்திரம்





(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இதற்கு முன் பலதடவைகள் நான் இந்தக்தோட்டத்திற்கு வந்திருக்கின்றேன். இப்படியொரு அவலச் சூழ்நிலையில்தான் மறுபடியும் இங்கு வரவேண்டியிருக்கும் என்று அப்பொழுது நினைத்தது கிடையாது.
அப்பொழுது “இந்த மலைகளையே அதற்றிடும் முயற்சியில் எத்தனை உற்சாகத்துடன் இரகசியமாக நாங்கள்” எதிரும் புதிரும் புதிருமாக அமைந்துள்ள நான்கு வயன்களுக்கு மேற்கே மேகத்தைக் கடையும் மத்தாக “வீசுக்கென்று நிமிர்ந்து நிற்கும் மலையின் அடிவயிற்றை வெட்டிச்சரித்து, நிரவிய ஒரு திடல் அதுதான் காமன் பொட்டல்.
காமன் கூத்து ஓய்ந்துவிட, கிளிதட்டு, கிட்டிப் புள்ளு என்ற விளையாட்டுகள் முதல் “தலைவருக்கு… ஜே! ஜே!” என்று சந்தியில் ஊர் வலத்துடன் தொடங்கும் தொழிற்சங்கக் கூட்டம் வரை எல்லாமே இங்கு தான் நடக்கும். காமன் பொட்டலுக்கு மேலே குடைவிரித்து நிற்கும் ஆலமரத்து நிழலில் அம்மன் கோயில். ஆலமரத்தின் விழுதுகள் கோயில் தகரத்தில் படிந்து, தழுவி, சரசரத்து சாமரை வீசிக் கொண்டிருக்கும். பறவைகளின் சங்கீதத்திற்கும் குறைவேயில்லை. கோயிலுக்கு முன் வங்கிச் சரிவை அணைத்தப்படி பெரிய கல்லுத்திண்டு, கல்லுத்திண்டில் அமர்ந்து, ஆலமர நிழலின் குளுமையில் சுருட்டைப் புகைத்தபடியே கிழடுகள் ஊர்க்கதை பேசிக் கொண்டிருப்பார்கள். ஊர்ப் பஞ்சாயத்து மேடை என்ற நினைப்பு போலும்.
இடது புறமாக சற்றுத்தூரம் தள்ளி மென்சாய்வின் வளைவில்; கோரமாக நாவினை தீட்டிக் கொண்டிருக்கும்; தீப்பாறையில் உச்சிமலையிலிருந்து கசிந்து; நசிந்து; ஊறும் நிறைந்து ஒழுகிக் கொண்டே இருக்கும். கோயில் உற்சவ காலத்தில் இது தீர்த்தம். அதற்கப்பால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, மலைகளை பசிய இலைகளால் மெழுகிக் கொண்டிருக்கும் தேயிலைச் செடிகள் இடையிடையே; உயரமாகவும்; குட்டையாகவும் கடும் பச்சை நிறத்திலும் சோர்ந்துப்போய் நிற்கும் கருப்பந்தைல மரங்கள்.
கோயில் உற்சவத்தை முன்னிட்டு “பூலோக ரம்பை” அல்லது ‘ரம்பையின் காதல்’ என்ற நாடகத்தை மேயேற்றினார்கள். அப்பொழுது தான் முதற்தடவையாக இங்கு வந்தேன் அதற்கு பின்னர் பல தடவைகள் இங்கு வந்திருக்கின்றோம். “ஏழையின் வெற்றி.. “கொடுமை தீராதா” ஆகிய நாடகங்கள் அரங்கேற்றப்பட்ட பொழுது வந்துள்ளோம். காலமாற்றத்தில் மேடை யேற்றப்பட்ட நாடகங்கள் அவை.
இது நிகழ்ந்து பல வருடங்களாகிவிட்டன. அப்பொழுது அந்த இளைஞன் இலட்சுமமணன் தோட்டத்தில் இளைஞர்களின் தலைவனாக விளங்கினான்.
உழைப்பால் உரமேறிய உடல், உறுதிவாய்ந்த உள்ளம், பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தீர்த்து வைக்கத் துடிக்கும் உணர்வு… சேவைக்கு முதலிடம். அப்பாடா……!! “தொண்டர், தோழர்” என்றெல்லாம் முழுத் தோட்டமுமே தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடியது. அத்தனை மதிப்பு!!
எதிர்பாராமல் கிடைத்த இடமாற்றத்தினால்தான் இப்பகுதியுடனே தொடர்பு அற்றுப் போய்விட்டது என்று கூற முடியாவிட்டாலும்; தொடர்பு அற்று தான் போற்றிவிட்டது. இடமாற்றம். அறுபது மைல்களுக்கு அப்பால்!! அதுவும் தோட்டப் பகுதிதான் தோட்டப்பகுதி என்றால் வாழ்க்கையே பிரச்சினைதான். குழந்தைகளைப் பேணும் பிள்ளைப் மடுவத்திலிருந்து, பிணத்தைப் புதைக்க; சுடுகாட்டிலும் கூடப் போராட்டம் தான்.
வஞ்சிக்கப்பட்ட வயிற்றுடனும்; நிராசையான நம்பிக்கைகளுடனும் வாழ்வின் பிடிப்பே அற்று; உழைப்பதற்காகவே உயிர் பிழைத்திருக்கும் அவர்கள் மீது பல்வேறு விளைவுகளும் வந்து விழ…. நாதியற்று நடுத்தெருவில் இறங்க நேர்ந்தபோது…
உடனடிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு; எப்படியெல்லாமோ செயல்பட வேண்டியதாகி விட்டது. அது தவிர்க்க முடியாத நிலை….
ஒர் இனத்தைச் சேர்ந்த தொழிலாள வர்க்கத்தினரை திட்டமிட்டு நசுக்கும் போது, ஏற்படும் பிரச்சினைகளை இரண்டொரு இதயத் துடிப்புகளால் போக்கி விட முடியுமா? உழைக்கும் நிலத்திலிருந்து பிரித்தெடுத்து குடியிருந்த, குச்சியிலிருந்து துரத்தி, ஒரு வேளை சோற்றுக்கே வழியின்றி, பஞ்சப் பராரிகளாக பாதைகளில் தவிக்க விட்ட போது..
பிணம் தின்னும் சாத்திரங்களுக்குமத்தியில், ஜீவ மரணப் போராட்டம் நடத்துகையில் எல்லாத் தொடர்புகளுமே அறுப்பட்டுத் தான் போய் விட்டன. கடந்த வாரம் இங்கு நிகழ்ந்த அனர்த்தத்தை கேள்விப்பட்டவுடனயே ஓடி வரவேண்டும் போலிருந்து…. பழைய நினைவுகள் மனதில் எழுந்து நெஞ்சை ரணகளமாக்கி விட்டன.
குறுக்கு பாதையால் இறங்கி, லயத்தைப் பார்த்து விட்டு, திரும்பி நடக்கின்றேன். “ஓவென்று குரலெடுத்து கத்த வேண்டும் போலிருந்தது.
நான்கு லயன்களும் அடித்து நொறுக்கப் பட்டு எரிக்கப்பட்டுள்ளன. எப்பொழுதும் கல கலப்பாக விளங்கிய, இடமா இது? இந்த நாட்டிற்கு என்ன நடந்து விட்டது! இங்கு ஏன் மனிதர்கள் அரக்கர்களாக மாறிவிட்டனர்! கால் நடைகளின் பட்டிகள் கூட எரிக்கப்பட்டு தீய்ந்து போய் கிடக்கின்றன. ஒரு பிரளயமே ஊற்றெடுத்தது போல கொடுமை… ஒன்றுமே அறியாத அப்பாவி மக்கள் மீது…. அநியாயம்… அநியாயம்.
இடிபாடுகளுக் கிடையே சிக்கி, எஞ்சிக் கிடப்பவற்றை நாலைந்து பேர் கிண்டி மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கே போதாத வருவாயில் மிச்சம் பிடித்து சிறுகச் சேமித்த பொருட்கள் உருக்குலைந்து கிடக்கின்றன.
அது இலட்சுமணனின் காம்பிரா…… தொங்கற் தாம்பிரா….! இன்று தரை மட்டமாகக் கிடக்கும் இந்த காம்பிராவில் அமர்ந்து எத்தனையோ திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம்.
இடிபாடுகளுக் கிடையே புத்தகங்கள் எரிந்து கருகிப் போய்க் கிடக்கின்றன. இலட்சுமணனின் நினைவாக எதையாவது கொண்டு செல்ல வேண்டும். கிண்டிப் பார்க்கின்றேன் ஒன்றும் உருப்படியாக இல்லை. பாதி எரிந்து போன நிலையில் ஒரு நாட்குறிப்பேடு ஆம்…. அது இலட்சுமணனின் “டயறி” தான் நடுங்கும். கரங்களில் அதனை எடுத்துக் கொள்கின்றேன். இருட்டுவதற்குள் நகருக்கு சென்று கடைசி பஸ்வண்டியைப் பிடித்தாக வேண்டும்.
பச்சை நிற அழகிய சிறிய நாட் குறிப்பு புத்தகம், கீழ்ப் பாதி எரிந்து போய் விட்டது! முன் பக்கமும் கடைசிப் பக்கமும் தீயில் தீய்ந்து கருகிப் போய் விட நடுப்பாகம் எஞ்சியுள்ளது. தார் ரோட்டை நோக்கி நடையை விட்டபடியே மெதுவாகப் புறட்டுகிறேன். சில பக்கங்களில் ஒன்றுமே விளங்க வில்லை. தீ அரக்கனின் கொடிய நாக்குகள் அவற்றை வாசித்து சுவைத்து விட்டன போலும்…
டயரியில் கரிக்கோலங்கள் தொடர்கின்றன. ஆர்வத்துடன் தொடர்கிறேன். உள்ளே செல்லச் செல்ல எழுத்துக்கள் புரியத் தொடங்குகின்றன.
1978 மார்ச் 1 ஆம் திகதி.
இன்று வேலை முடிந்து ஸ்டோரிலிருந்து வீடு திரும்பும் போது லெட்சுமியைக் கண்டேன். அந்திக் கொழுந்தை நிறுப்பதற்காக வரிசையில் கூடையுடன் நின்றாள். நான் அவளைக் கடந்து செல்கையில் ஒரக்கண்ணால் பார்த்தாள். அவள் பார்வை…. என் மீது குற்றம் சுமத்துவது போலிருந்தது. அவளை சந்தித்து எத்தனை நாள்களாகி விட்டன. நாளை கட்டாயம் அவள் வீட்டுக்குப் போக வேண்டும்.! இம்மாதம் முடிய திருமணத்தை.. அதற்கு மேலே வாசிக்க முடிய வில்லை. ஏடு எரிந்து, தீய்ந்து, போய் உள்ளது. மறு ஏட்டைப் புரட்டுகிறேன்.
மார்ச் 2 ஆம் திகதி
“இன்று மாலை லெட்சுமியின் வீட்டுக்குப் போனேன். மாமாவும் வீட்டிலிருந்தார். “ஊர் போற போக்கு நல்லதா தெரியல”… கூடிய விரைவில் இந்தியாவுக்கு போயிடலாமுன்னு நெனைக்கிறேன் தம்பி” என்று கூறினார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தலை சுற்றி மயக்கம் வந்து விடும் போலிருந்தது. லெட்சுமி உள்ளே சமையலில் ஈடுபட்டிருந்த படியே எட்டிப் பார்த்தாள். கண்களில் ஈரம் பளபளத்தது. லெட்சுமி உன்னை எப்படி பிரிவது’ நான் அதற்கு கீழே படிக்க முடியாத படி நாட் குறிப்பு புத்தகத்தின் ஏடு எரிந்துள்ளது! அடுத்தப் பக்கம் மார்ச் 3ம் திகதி.
மார்ச் 3 ஆம் திகதி
இன்று ஞாயிற்றுக் கிழமை, ஓய்வு நாள், டவுனுக்குப் போய் வந்தோம். நகரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் காணப்பட்ட வாசகங்கள் எங்களை கலங்கச் செய்தன. அப்பப்பா எத்தனை கொடூரமான எண்ணங்கள்…. நாங்களும் மனிதர்கள்தானே…. உழைக்கின்றோம் உழைப்பதைத் தவிர இந்த நாட்டில் வேறு என்ன சுகத்தைக் கண்டோம். எங்கள் தோட்டத்தைப் பகிர்ந்தளித்து விட்டால் நாங்கள் எங்கே போவது….? ஏதோ வேலை உண்டு; குடியிருக்க லயன், உண்டென்றிருக்கும் போதே இத்தனை கஷ்டங்கள் வேறு தோட்டங்களிலும் அங்குள்ளவர்களுக்கே வேலை இல்லாத நிலைமை. கதை தொடர வில்லை. ஏடு எரிந்து போய் விட்டது. அடுத்தப் பக்கத்தைப் புரட்டுகிறேன்.
மார்ச் 4 ஆம் திகதி.
இன்று எமது தொழிற் சங்கத்தின் மாவட்டக் கூட்டம் நடைபெற்றது. தோட்டத் தலைவர்கள் தங்கள் தோட்டங்களில் நடைபெறும் அட்டூழியங்களை எடுத்துக்கூறி கவலை தெரிவித்தார்கள். தோட்டங்களைப் பகிர்ந்தளிப்பதால்; நாங்கள் வேலையிழப்பதுடன்; வாழ வழியற்று நிர்கதிக்குள்ளாவதை எடுத்துக் கூறினோம். எங்களுக்கும் நிலம் கேட்பதென்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. மாவட்ட தலைவர் மேலிடத்தில் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகக் கூறினார். டவுனிலிருந்து திரும்புகையில் லெட்சுமிக்கு மல்லிகை பூச்சரம் வாங்கி…… ஏடு சரிந்து போய் அந்த இரகசியத்தை மறைத்துக் கொள்கிறது.
மார்ச் 5ஆம் திகதி.
“இன்று லெட்சுமியை சந்தித்தேன். ம்….. அவள் தான் எத்தனை அழகாக இருக்கின்றாள். அம்மன் கோயிலைச் சுற்றி நிறைகுடத்து நீரை ஊற்றி விட்டு வந்தாள். ஈரச்சேலை உடம்போடு ஒட்டிக்கொள்ள மார்பகம் பிதுங்கி கண் சிமிட்டுகிறது… என்ன நேர்த்திக் கடனா? என்று கேலி செய்தேன். “ம் எல்லாம் உங்களுக்காகத்தான்.” என்று பக்கென்று பதில் கூறிவிட்டு ஓடி விட்டாள். குறும்புக் காரி. இருக்கட்டும்…. உனக்கு …. நல்ல பாடம் … லெட்சுமி’ குறிப்பு தொடர்கிறது. என்னால் தொடர்ந்து படிக்க முடியாதபடி ஏடு எரிந்து போயிருக்கின்றது. ஆவலுடன் மறுபக்கத்தைப் புரட்டுகிறேன்.
மார்ச் 6ஆம் திகதி.
“இன்று எங்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. தோட்டத்தை மூடிவிட்டோம். என்று கூறுகிறார்கள். தோட்டத்தை பங்கிட்டு வழங்கப் போகிறார்களாம். எங்களுக்கும் நிலம் கேட்டோம்…. ம் …. மூச்சு விடக் கூடாது. என்று கூறுகிறார்கள். முழுத் தோட்டமுமே சொல்ல முடியாத விசனத்தில் மூழ்கியுள்ளது. என்ன செய்வதன்றே தெரியவில்லை. முருகா எங்களுக்கு வழி காட்ட மாட்டாயா……? “நானூறு குடும்பங்களும் நடுத்தெருவில் நிற்க வேண்டியது தானா?’ குறிப்பேடு தொடரவில்லை. ஏடு தீயினால் கரிந்துள்ளது.
மார்ச் 7 ஆம் திகதி.
“இவ்வாரத்திற்கான ரேசன் அரிசி இன்னும் வழங்கப்பட வில்லை… எப்படியோ சமாளிக்க வேண்டியுள்ளது. குழந்தைகளெல்லாம் வாடிச் சோர்ந்து விட்டார்கள். எங்கள் நிலைமையை விளங்கிப்பல இடங்களுக்கும் தந்தி கொடுத்துள்ளோம். உணவுப் பொருள்கள் வாங்க நகைகள் அடவுக்கடையை நோக்கிப் போகின்றன”. அன்றைய குறிப்பு இவ்வளவு தான். மனதில் உற்சாகம் இல்லை போலும்.
மார்ச் 8ஆம் திகதி.
நேற்றிரவு விஷமிகள் லயத்திற்கு கல்லெறிந்து கலகம் விளைவித்தார்கள். நள்ளிரவில் விழித்துக் கொண்டு ஆளும் பேரும் கம்பும் தடியுமாக ஓடியபோது; இரண்டு லொறிகள் நகரை நோக்கி ஓடி மறைந்து விட்டன. அகால வேளையில் பெண்கள் குழந்தைகள் யாவரும் ஒப்பாரிவைத்து பயந்து ஒலமிட்டு அழுதார்கள். பயங்கரம்…. என்ன நடக்குமோ…? உழைத்துக் களைத்தவர்கள் இரவில் நிம்மதியாக தூங்கவும் முடியவில்லை. இளைஞர்கள் விழித்திருந்து துகாப்பை பலப்படுத்துவது என்று முடிவு செய்தோம். இருவர் இருவராக லயத்தைச் சுற்றி மணிக்கொரு தடவை அம்மன் கோயில் மணியை அடிப்பது என்று முடிவு செய்தோம்…” ஏடு பாதியில் எரிந்துள்ளது.
மார்ச் 9 ஆம் திகதி
இன்று லெட்சுமியை சந்தித்தேன். அவள் ஏன் இப்படி வாடிப் போய்விட்டால். சிட்டாகப் பறக்கும் என் லெட்சுமியா இவள்? பயம் அவளை குடைந்து உலுப்பி விட்டது..! என் கைகளைப் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு கேவிக்கேவி அழுதாள். அப் பொழுது தான் பணிய டிவிசனிலிருந்து செய்தி வந்தது. பலாத்காரமாக தோட்டத்தில் புகுந்த காடையாளர்கள் தாக்குகின்றார்களாம் அம்மன் கோயில் மணி தொடர்ந்து ஒலித்தது! இது எங்கள் ஏற்பாடு: நாங்கள் ஒன்று கூடி தயாராகி நின்றோம். பனிய டிவிசனில் கேட்ட அவலக் குரல்கள் சற்று நேரத்தில் அடங்கிப் போய் விட்டன. எங்களால் உதவ முடியாத நிலை இந்த நான்கு லயங்களும் ரோட்டோரத்தில், எட்டிப் பிடித்து விடலாம். இங்கேயும் குமர்களும் பெண்டு பிள்ளைகளும். பனிய டிவிசனில் புகுந்த கோஷ்டி அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாம். ஏடு எரிந்துள்ளது….
மார்ச் 10 ஆம் திகதி.
இரண்டு வாரங்களுக்கு மேலாக ரேஷன் அரிசியும் உப உணவுப் பொருட்களும் கிடைக்கவில்லை. நிலைமை எதிர்பார்த்ததை விட மோசமாகி விட்டது. முழுத் தோட்டமுமே செய்வதறியாது. கலங்கிப் போய் நிற்கின்றது. மேலிடத்திலிருந்து எதுவித பதிலுமே கிடையாது. நிமிஷத்திற்கு ஒரு வதந்தி வந்து விஸ்வரூபமெடுத்து அலைக் கழிக்கின்றது. பெண்களை எப்படி காப்பாற்ற போகின்றோமோ…. நாங்கள் உடனடியாக தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டுமாம். காணி தேவையானவர்கள் தாங்களே கயிற்றால் அளந்து பிரித்தெடுத்துக் கொள்ளப் போகிறார்களாம். இவர்களுக்குப் பக்க பலமாக.. பின் பகுதி ஏடு எரிந்துள்ளது. தொடர்ந்து படிக்க முடியவில்லை.
மார்ச் 11 ஆம் திகதி.
இன்று மாவட்ட தலைவரை சந்தித்து பேசினேன்! பத்திரிகைச் செய்தியை காட்டி ஆறுதல் கூறினர். நிலைமை தலைக்கு மேலே போய்விட்டது. அவராலும் எதுவும் செய்ய முடியாத நிலைமை…! கொழும்பிலிருந்து தலைவர் செய்தி அனுப்பியிருந்தார்.
என்ன நடந்தாலும் உறுதியுடன் நின்று போராடனுமாம். நாங்க போராடிக்கிட்டு தான் இருக்கலாம்…… இரண்டு தினங்களாக நித்திரை கிடையாது: லயத்தைச் சுற்றி நான்கு திசைகளிலும் இளைஞர்கள் காவல் செய்கின்றோம். நாளை எமது டிவிசனையும் அளக்கின்றார்களாம்….! எங்கள் தோட்டத்தை பிரிக்க விடமாட்டோம். எங்கள் குருவிக் கூட்டை யார் கலைத்தாலும் உயிரை கொடுத்து தடுப்போம். மேலே படிக்க முடியாத படி ஏட்டை தீ அனைத்துள்ளது. அடுத்த ஏட்டைப் புரட்டுகின்றேன். பாதி எரிந்த ஏட்டில் கரிக் கோலங்கள் தான் உள்ளன. குறிப்பு எழுதப்படவில்லை. அந்தக் கைகள் அன்று பகலே ஓய்ந்துவிட்டன. போராட்டத்தில் மார்பினில் குண்டை ஏந்திய அந்தக் கைகள் சாகாவரம் பெற்று விட்டன.
இனி அந்த நாட்குறிப்புப் புத்தகத்தைத் தொடர்ந்து எழுதுவது யார். ? மீண்டும் முன்பக்கங்களைப் புரட்டுகின்றேன். எரிந்து கருகிய ஏட்டின் முன்பக்கத்தில் ‘இலட்சுமணன் தோட்டக் கமிட்டி தலைவர்’ எழுத்து கரிக்கோலங் களுக்கிடையில் பளிச்சிடுகின்றது.
என் கண்கள் பனிக்கின்றன நாட் குறிப்புப் புத்தகத்தை காற்சட்டைப் பாக்கெட்டினுள் திணித்துக் கொண்டு வேகமாக நடக்கின்றேன்.
அந்த புல்லுமலையின் சரிவில் தார்ரோடு ஓரமாக “நர்சரி” பாத்தி போன்ற புதை குழி மேட்டைச் சுற்றி, அலங்கரிக்கப்பட்டுள்ள தென்னங் குருத்தோலைகளுக்கு நடுவில், சிவப்பு நிறத்தில் எழுதி; நாற் புறமும். இழுத்துக் கட்டப்பட்டுள்ள வெள்ளைத்துணி இளங்காற்றின் தழுவலுக்கு கையசைத்து இலட்சுமணனைப் போல் உறுதி எடுத்தா கொள்கின்றது.
இலட்சுமணன் நீ என்றும் வாழ்வாய்” மலை வெயிலின் தக தகப்பில் எழுத்துக்கள் பள பளக்கின்றன.
தார் ரோட்டில் நிரவி; தூவி; விடப்பட்ட வெண் மணல்கள் இன்னமும் பரவிக் கிடக்கின்றன. சிறு சிறு மூங்கில் குச்சுகளின் தலைகளில் ஒட்டப்பட்ட வெள்ளைக் கொடிகள், வளைந்து, வளைந்து செல்லும் பாதையின் இரு பக்கங்களிலும் தேயிலைச் செடிகளுக்கு மேலாக சிலிர்த்துக் கொண்டு கையசைக்கின்றன.
அந்த மரண ஊர்வலம் சென் பாதையில் நடக்கின்றேன்.
“டெவன் தோட்டம்” பெயர் பலகை பாதையோரத்தில் தலை கீழாக விழுந்து கிடக்கின்றது.
– வீரகேசரி, 1975.
– அட்சய வடம், முதற் பதிப்பு: 2012, பூபாலசிங்கம் பதிப்பகம், கொழும்பு.
![]() |
சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன. வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க... |