குருப்பையா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 2, 2025
பார்வையிட்டோர்: 2,756 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

உச்சி வெய்யில் சற்று ஓங்கலாகவே எரித்துக் கொண்டிருந்தது. 

வழுக்கை விழாதத் தலை. தாழை நாறென நரைத்திருந்த தலைமுடிக் கற்றை. நீண்டும் நெளிந்து நெளிந்தும் காணப்பட்ட நெற்றிச் சுருக்கங்கள். உட்குழிந்த கண்கள் ஒட்டிய கன்னங்கள். 

அந்த நெடிய உருவம் நான்கு முழ, வேட்டியோடு வெள்ளைநிற அரைக்கைச் சட்டையும் அணிந்து, தோளிலே துண்டொன்றும் போட்டுக் கொண்டு “பிடோக் வீடமைப்புப் பேட்டைப் பகுதி யில் எதையோ தேடுவதுபோல் நடைச் செலவா (பயணமா)கவே சுற்றிச் சுற்றி வந்தது. 

பழைய “சாங்கி சாலை”யும் “பிடோக் சாலை”யும் சந்திக்கும் இடத்திற்கு முன்பாக வந்து சேர்ந்த அந்த உருவத்தின் முகத்திலே சிறிது மகிழ்ச்சியின் வெளிப்பாடு தெரிந்தது. 

முன்பு இருந்த தென்னை, மாமரங்கள் நான்கைந்து இலவ மரங்கள், இரண்டு பனை மரங்கள் மற்றும் வாழை, வாகை, நெடிதுயர்ந்த ஒதியம் போன்ற மரங்களும், சீனர் நடத்திய குளம்பி (காப்பி)க் கடைகள், மளிகைக் கடைகள், தமிழரின் சலவை நிலையம் ஒரு “காக்கா” மளிகைக் கடை, மணல், சுதை (சிமிண்ட்) ஓடு போன்ற வீடு கட்டும் பொருட்கள் விற்கும் பெரிய கடையும் அங்கில்லை. நலத்துறைத் தொழிலாளர் குடியிருப்பும் அதனை அடுத்திருந்த தகர, மற்றும் அத்தாப்பு (கூரை) வீடுகளும் காணப்பட வில்லை. 

ஆனால், அந்த அஞ்சலகம் (post office) மட்டும் அங்கே அப்படியே இருந்தது. அதனைக் கண்டதும் தான் அந்த உருவத்திற் குரிய பெரியவரின் மனத்திலே எழுந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 

நீராட்டிய வெட்டுக்கடா ஆடு, ஈரத்தைப் போக்கக் குலுக்கு வது போல் தனது உடலை ஒரு குலுக்குக் குலுக்கி விட்டு விறுவிறு வென்று சாலைகள் சந்திப்பை நோக்கி நடந்தார். 

சந்திப்பை அடைந்ததும் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுக் கிழக்கு நோக்கி நடந் தார். ஒரு நூறு “மீட்டர்” தொலைவு நடந்து வந்த அவர், அங்கிருந்த தரைப்பாலத்தருகே சட்டென நின்றார். 

ஆம், அவர் காணத் துடித்துவந்த அது அவரது கண்களுக்குத் தெரிந்தது. அது இப்போது பழையபடி இல்லாமல் இருபுறமும் கற்காரை (காண்கிரிட்) இடப்பட்டு தூய்மையாய்க் காணப்பட்டது. 

“பிடோக்” ஏரியிலிருந்து ஓடிவரும் ஆறுதான் அது. அதனைச் சார்ந்திருந்த “கம்போங்” (சிற்றூர்) கும் கோசெக்லிம் சாலையும் தொலைந்திருந்தன. 

“கோசெக்லிம்” ஒரு நிலக்கிழார். அவருக்கு பிடோக்கிலிருந்து சாங்கி விங்லுங் சாலை வரையிலான பரந்த நிலத்துக்குச் சொந்தக் காரர் அவர். அந்தப் பெருமான் அறமாகத் தந்த நிலத்தில்தான் சாங்கி தமிழ்ப் பள்ளி கட்டப்பட்டு பல்லாண்டு காலம் தமிழ்ப் பயிற்றியது. 

அந்தப் பெரியவர் வடக்குத் திசை நோக்கி தனது பார்வையைச் செலுத்தினார். சுட்டெரிக்கும் அந்த உச்சி நகர்ந்த நேரத்தில், பேரிடியும் மின்னலும் பெருமழையும் தோன்றியது அப்பெரியவரின் கண்களுக்கு. 


“குருப்பையா” 

ஆம், அதுதான் அந்தக் கிழவரின் அருமையான அழகுப் பெயர். 

கருப்பையா, சுப்பையா உண்டு. இது என்ன குருப்பையா? 

ஒருவேளை குருவம்மா என்று பெண்களின் பெயர் இருப்பதுபோல் குருப்பையா வந்திருப் பாரோ? 

“எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான், படித்தவன் பாட்டைக் கெடுத்தான்” என்றதொரு பழமொழி உண்டல்லவா? அதுதான் குருப்பையாவின் பெயருக்குக் காரணம்? 

அவர் பிறந்த காலங்களில் பிறப்புச் சான்றிதழுக்கு காவல் நிலையங்களில்தான் பதிவு செய்யப்படுமாம். 

படிப்பறிவு இல்லாத தமிழர்கள் தம் பிள்ளைகளுக்குரிய பெயரினைக் கூற, அதனைப் பதிவு செய்யும் பிறமொழிக்காரர்கள் தங்கள் செவியில் விழுந்த வாறு பெயர்களை எழுதிவிடு வார்களாம். 

ஆங்கில எழுத்துக்களில் எழுதப் பெற்ற முத்தையா “மொத்தையாக”வும், “வெங்கிடாசலம்” “வங்கடாசலம்” எனவும், பெண் மக்கட் பெயர்களும் பல மாறி இருந்தன. 

அன்றைய தமிழ்த் திரை பரதநாட்டியப் பைங்கிளி பேபி கமலாவின் பெயரைச் சூட்டிய ஒருவரின் மகள் “பீபீ கெமலா”வாக அழைக்கப் பட்டார். அவர்களில் குருப்பையாவும் ஒருவர். 


பிடோக் ஏரி பரந்து விரிந்து கிடந்தது. கரையோரங்களில் நாணல், கோரை, காட்டாமணக்கு, கைதை, வள்ளை, வெள்ளெருக்கு என மிகப் பல செடிகொடிகள் தளிர்த்துச் செழித்து இருக்கும். 

அவ்வேரியினின்று வழியும் நீர் ஆறாகக் கிழக்கு நோக்கிப் போய்க் கடலில் கலக்கும். ஏரியை யொட்டிய வடக்குக் கரைப்பக்கம் கால் நடை வளர்ப்பும் கீரைத் தோட்டங்களும் இருந்தன. 

குருப்பையா அங்குதான் தன் மனைவி காவேரி மகன் மதியழகனோடும் வாழ்ந்து வந்தார். 

அவருக்கு ஏழெட்டுக் கறவை மாடுகளும் பத்துப் பதினைந்து வெள்ளாடுகளும் இருந்தன. வீட்டின் பின்புறம் சிறிய தோட்டம். 

அதில் அகத்தி, முருங்கை, கறிவேப்பிலை போன்றவற்றை வளர்த்திருந்தார். 

அவரது பக்கத்து வீட்டுக்காரர் 

சீனரான “சுவா”அவர் பன்றிகளும் கோழிகளும் பெரும் அளவில் வளர்த்ததோடு பெரிய கீரைத்தோட்டமும் வைத்திருந்தார். அதனில் முளைக்கீரை, கடுகுக்கீரை, நிலவெள்ளை (கங்கோங்) செம்பசலைக் கீரைகள் மற்றும் சுக்குநாறி (செறாய்) மணத்தாழை (டவுன்பாண்டான்) எனப் பலவும் பயிரிட்டு வந்தார். அவருக்கும் ஒரே மகன். “சுவாசெங்” பத்து வயதிருக்கும். 

குருப்பையாவின் மகன் மதியழகனுக்கு அகவை இருபத்துக்கு மேல். தொடக்கப் பள்ளியோடு படிப்பதை நிறுத்திவிட்டான். தந்தைக்கு உதவியாக பால் கறப்பது, கறந்த பாலைப் புட்டி (பாட்டில்)களில் நிரப்பி அதனைக் கதிரவன் உதிக்கும் முன்பே வாடிக்கையாளர் வீடுகளுக்கு வழங்குகை (விநியோகம்) செய்வது, பின்னர் ஆடு மாடுகளுக்கு நிரையுணா (தீவனம்) அளிப்பது போன்ற ஏகப்பட்ட வேலைகள் அவனுக்கு. 

எல்லா வற்றையும் முடித்துச் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மாலை நேரத்தில் ஆடு மாடு சாணத்தைச் சிறிய பொதியுந்தில் ஏற்றித் தெருத் தெருவாக “தைலெம்பு தைலெம்பு” எனக் கூறி விற்று வருவான். 

மதியழகனிடம் சாணம் வாங்கும் வாடிக் கையாளர்கள் சிக்லாப், பிராங்கல் பகுதிகளில் நிறைய பேர் இருந்தனர். அவர் களில் பொதுப்பணித் துறை (பி.டபுள்.டிஇ) கிராணி (எழுத்தர்) காளிமுத்துவும் ஒருவர். மாதம் ஒருமுறை நான்கு தட்டுக் கூடைச் சாணம் வாங்குவார். 

வீட்டின் பின்புறம் சாணத்தைக் கொட்டவரும் மதியழகனை காளிமுத்துவின் மகள் கயல்விழி தனது கடைக்கண் வீச்சால் கவரத் தொடங்கிவிட்டாள். அவனும் காதல் அலையில் தள்ளாட்டம் கண்டான். சாணம் விற்பவனை மணக்க தந்தை ஒப்புவாரோ? 

கயல்விழி மதியழகனிடம் கண்ணீர்மல்க “நீங்கள் ஏன் வேறு வேலை செய்யக் கூடாது?” எனக் கேள்விக் கணை தொடுத்து அவன் கடமை மனத்தைக் கரைத்துவிட்டாள். காதல் வலிய தாயிற்று. 


அப்பொழுது சிங்கப்பூரின் மாபெரும் திட்டமான நில மீட்பு நடந்து கொண்டிருந்தது. பிடோக், சைச்சீ போன்ற வட்டாரங்களில் இருந்து சிறுசிறு குன்றுகள் எல்லாம் கரைக்கப்பட்டுக் கடலாக இருந்தத் தென்கிழக்குப் பகுதிகள் தூக்கப்பட்டு வந்தது. 

மதியழகன் தன் தந்தையிடம் சொல்லாமல் கொள்ளாமல் நில மீட்புச் செய்யும் ஜப்பானிய குத்தகை நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்துவிட்டான். 

அந்தக் கால (1969) கட்டத்தில் நமது சிங்கப்பூரில் சில நாட்கள் இடைவிடாத பெரு மழை இடி மின்னலொடு பெய்து கொண்டிருந்தது. எங்கும் வெள்ளப் பெருக்கு. 

மிதிவண்டியில் இரவு வேலைக்குச் சென்ற மதியழகன் மழை யின் தாக்குதல் தாங்க மாட்டாமல் சற்றே ஒதுங்கி நிற்க எண்ணி னான். சைச்சீ அடுத்த சிறுதொலைவில் அக்காலத்தில் புத்தமதச் சுடலை ஒன்று இருந்தது. சுற்றி மதிற்சுவரும் அடர்ந்த மரங்களும் கொண்டது அந்த இடம். 

உள்ளே செல்ல ஏலாமல் இரும்புப்படல் (கேட்) போடப்பட்டு பூட்டப்பட்டிருந்தது. மதியழகன் அதன் ஓரத்தில் ஒண்டி நின்றான். கிளைத்து அடர்ந்திருந்த மகிழம்பூ மரத்தின் தழைகள் சற்றுச் சுவரைத் தாண்டியும் செழித்திருந்தன. அந்தத் தழைகளே அவனுக்குக் குடையாகக் கவிந்து கனமழையி னின்று காவந்து செய்தன. 


குருப்பையா வாட்டசாட்டமானவர். சிறு வயதிலிருந்தே சுறு சுறுப்பாய்க் கடினமான வேலைகள் எல்லாம் செய்து முறுக்கேறி இருந்தது அவரின் மேனி. மகன் உதவவில்லையே என்று கொஞ்சம் கூட அயரவில்லை, துயரம் கொள்ளவும் இல்லை. அனைத்துப் பணிகளையும் தானே கவனித்து வந்தார். 

அவர், அப்பொழுதுதான் வாடிக்கையாளர் களுக்குப் பால் வழங்குகை (விநியோகம்) செய்துவிட்டு வந்த அவரின் துணைவி யார் காவேரி தந்த இட்டளி இரண்டை நான்கே துண்டுகளாக வயிற்றுக்குள் தள்ளிவிட்டுக் கை கழுவ கொல்லைப்புறம் வந்தார். அப்பொழுது முன்பகல் மணி பதினொன்று இருக்கும்! 

“அண்ணே… குருப்பியா அண்ணே, மதி… மதி… மதி சூடாமத்தி” (இறந்துவிட்டான்) என்று அலறிக் கொண்டு ஓடி வந்தான் சுவா செங். 

“அட எழுவெடுத்தவனே காலாங்காட்டியும் வந்து என்னடா சொல்றே?” 

சுவா செங் தனது வலதுகையை நீட்டிக் காட்டினான். 

அவரது வீட்டருகே ஆற்றோரச் செம்மண் பாதையில், சப்பட்டைக் கருநீலத் தொப்பியும், பழுப்புநிற அரைக்கால் சட்டையும், அதிலே பட்டைவார் அணிந்தும், ஒரு கருநிற குறுந்தடி, முட்டிவரை மூடி யிருந்த காலுரை, கரிய செருப்பு மிதிவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தனர் இரு காவலர்கள். ஒருவர் தமிழர் மற்றவர் மலாய்க்காரர். 

“ஐயா, மதியழகன் என்பது உங்கள் மகனா?”

“ஆமா, என்னங்க ஆச்சு அவனுக்கு?” 

“சொல்ல துக்கமா இருக்குங்க. நேற்று இரவு இடி தாக்கி உங்கள் மகன் இறந்திட்டாரு.” 

“அய்யோ மதி” 

குருப்பையா மயக்கமுற்றுக் கீழே சாய்ந்தார். வீட்டின் உள்ளிருந்து ஓடிவந்த அவரின் மனைவி காவேரியும் செய்தி கேட்டு தன்னிலை இழந்தார். 

சுவா செங் ஓடிப்போய் தன் தந்தையை அழைத்து வந்தான். அவர் அவர்களை மயக்கம் தெளிய வைத்தார். தலையிலும் மார்பிலும் அடித்துக்கொண்டு, “அய்யோ மகனே” என்று அழுது புரண்டனர் அவ்விருவரும். 

காவலர்கள் தந்த செய்திப்படி சுவா, குருப்பையாவையும் காவேரியையும் “உட்றம்” பொது மருத்துவமனைச் சவக் கூடத் திற்கு அழைத்துச் செல்ல ஆயத்தமானார். 

“சுவா செங் நீ போய் “சிம்பாங் பிடோக்”லே (பிடோக் சந்திப்பு) “பவுன்ஷா” (கள்ளடாக்சி) நிற்கும் அழைச்சுகிட்டு வா” என்று சீனமொழியில் தன் மகனிடம் கூறினார் சுவா. 


மழை ஓய்ந்தபாடில்லை. தொடர்ந்து பெய்துகொண்டே இருந்தது. நாட்கள் பத்தைத் தாண்டி விட்டன. 

திடீரென அன்று பேய் மழை எங்கும் நீரின் ஆட்சி. அங்குக் குடியிருந்த பலர் மேட்டுப் பகுதிக்குச் செல்ல வேண்டிய நிலைக்கு வெள்ளம் பெருகிக் கொண்டிருந்தது. கரை புரண்ட நீரால் பிடோக் ஏரியின் தலைமடை உடைந்தது. ஆற்றோரம் இருந்த குடிசைகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டன. 

அவற்றோடு சுவாவின் பன்றிகள், கோழிகள், கீரைகள், குருப்பையாவின் ஆடு மாடு யாவும் விரைந் தோடும் வெள்ளத்தில் கடலை நோக்கி உலாச் சென்றன. 

தன் ஒரே மகனைப் பறி கொடுத்தத் துயரத்தில் உழன்று கொண்டிருந்த குருப்பையாவுக்கு அவரது சொத்திழப்பு அவரை நிலைகுலையச் செய்துவிட்டது. அவருக்கு அந்த “கம்பத்து” (சிற்றூரின்) வாழ்க்கைக் கசந்துவிட்டது. படுத்தப் படுக்கையாகி விட்ட காவேரியைக் கவனித்துக் கொள்ளவே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. 

அதனால் தொழில் செய்யும் எண்ணத்தை மறந்திருந்தார். தனது நிலம், வீடு யாவையும் குறைந்த விலைக்கு சுவாவிடம் விற்றுவிட்டு, மனைவியை அழைத்துக்கொண்டு தன் தந்தையின் ஊரான தமிழ்நாட்டிலுள்ள பட்டுக்கோட்டைக்குச் சென்று குடியேறிவிட்டார். 

ஆண்டுகள் முப்பதுக்கு மேல் கடந்து இருந்தன. தான் வாழ்ந்திருந்த இடத்தை இறுதிக் காலத்தில் கண்டு செல்ல வேண்டும் என்ற ஆசையில்தான் சிங்கப்பூர் வந்திருந்தார் குருப்பையா. 

அத்தாப்பு: செம்பனை ஓலைக் குடிசை

– மண்மணச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2014, பாத்தேறல் இளமாறன் வெளியீடு, சிங்கப்பூர்.

பாத்தேறல் இளமாறன் (தமிழ் தெரிந்த சமையற்காரர்)  தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச் சாலையில் 2-1-1945ல் பிறந்த பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். 12'ம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குச் சமையல் கை வந்த கலை. ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள X ஆன் சிட்டி கடைத் தொகுதி திறக்கப்பட்டபோது அதில் சாப்பாட்டுக் கடை நடத்த உரிமை பெற்ற ஒரே தமிழர் இவர். மணமான இவர் தம் குழந்தைகளுக்கு கண்ணகி, தமிழ்க் கோதை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *