மனக்கண்






அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
7-ம் அத்தியாயம் : ஸ்ரீதர் மோசக்காரனல்லன்!
மனித இதயத்தைத் தாக்கும் உணர்ச்சிகளிலே காதலைப் போன்ற சக்தி வேறில்லை என்றே சொல்ல வேண்டும். அதுவும் வாலிப இதயத்தை வாடவும் மலரவும் அங்கலாய்க்கவும் வைப்பதிலே, காதலுக்கு இணை காதலேதான். ஸ்ரீதர் இரவு நெடு நேரம் வரை கண் விழித்து பத்மாவுக்கும், பரமானந்தருக்கும் கடிதங்கள் எழுதி விட்டுப் படுக்கைக்குச் செல்லச் சற்றேறக் குறைய இரண்டு மணியாகிவிட்டது; இருப்பினும் விடியற் காலை வரை அவனுக்கு நித்திரை வரவேயில்லை. நித்திரை கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளை பகல் முழுவதும் உடம்பில் உற்சாகமாயிராதே” என்ற நினைவால் அவன் தனது கண்களை மூடித் துயிலுதற்கு எவ்வளவு தூரம் முயன்ற போதிலும், நித்திரை வர மறுத்துவிட்டது. பத்மாவின் நினைவால் ஏற்பட்ட தாபங்கள் அவன் மனதின் ஒவ்வொரு பகுதியையும் பிய்த்துப் பிடுங்கிக் கொண்டிருந்ததே அதற்குக் காரணம்.

நாளைக் காலை பத்மாவைப் பல்கலைக் கழகத்தில் சந்தித்ததும் அவளிடம் “பத்மா, நான் உனக்கும் உன் தந்தையாருக்கும் — இல்லை இல்லை மாமாவுக்கும் –அப்படித்தானே உன் அப்பாவை நான் அழைக்க வேண்டும், என்று அவர் என்னிடம் கூறினார்? — இரு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். வாசித்துப் பார்த்து உடனே பதில் எழுத வேண்டும். தவறக் கூடாது என்று சொல்லுவேன். பத்மா ஆச்சரியத்துடன் “என்ன கடிதம்? என்ன எழுதியிருக்கிறீர்கள்?” என்று கேட்பாள். “ஓ! அது இரகசியம்! ஒருவரிடமும் சொல்ல மாட்டேன்!” என்று நான் சொல்ல, “நன்றாயிருக்கிறது உங்கள் கதை! கடிதம் எழுதப்பட்டவருக்கே கடிதத்தின் விஷயத்தைச் சொல்லக் கூடாதோ? இந்த இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியமாயிருக்கிறது! சும்மா விலை வைக்காமச் சொல்லக் கூடாதோ? இந்த இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியம் அப்பாடா, மிகப் புதுமையான இரகசியமாயிருக்கிறது! சும்மா விலை வைக்காமச் சொல்லுங்கள்” என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு என் கையைப் பிடித்துக் கெஞ்சுவாள். ஆனால் நானா சொல்லுவேன்? எனது பிடிவாதம் அவளுக்குக் கோபத்தைக் ஊட்டும். “அப்படியானால் போங்கள். என்னோடு பேச வேண்டாம்” என்று முகத்தைச் சுளிப்பாள்.. அதற்குப் பிறகும் என்னால் விஷயத்தைச் சொல்லாமல் இருக்க முடியுமா? என் ஆசைப் பத்மா மனங் கோண, நான் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? ஆனாலும் நான் விஷயத்தைச் சொல்ல மாட்டேன். சொல்லவே மாட்டேன்! அவளுக்கு உண்மையில் கோபம் பொத்துக் கொண்டு வரும் என் கையைப் பிடித்துக் கிள்ளுவாள். சிவப்புச் சாயம் பூசிய அவளது பளபளக்கும் நகங்களால் அவள் கிள்ளுவது கூட எனக்கு இன்பமாய்த் தான் இருக்கும். ஆனால் நல்ல வேளை. மற்றப் பெண்கள் போல் அவள் தனது நகங்களை நீளமாக வளர்க்கவில்லை. அப்படி வளர்த்திருந்தால், அது மிக அழகாகத்தானிருந்திருக்கும். ஆனால் அழகான நகமும் நீள நகமாயிருந்தால் கிள்ளும் போது – மிகவும் உறைக்குமல்லவா? ஆகவே, நாளைக்கு அவள் நகங்கள் இப்போதிருப்பது போல் மொட்டை நகங்களாக இருப்பதே மேல்! வேண்டுமானால் பின்னர் தனது நகங்களை வளர்த்துக் கொள்ளட்டும்” என்று தனது ஆசைகளையும் கவலைகளையும் கனவுகளாகப் பின்னிப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன்.
ஆனால் இச்சிந்தனைகளின் பயனாக ஸ்ரீதரின் மனதில் ஒரு புதிய பிரச்சினை தோன்றிவிட்டது. கடிதத்திலுள்ள விஷயத்தைப் பத்மாவிடம் முன்னரே கூறி விடலாமா அல்லது கடிதத்தைப் பார்த்துத் தான் அவள் விஷயங்களைத் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று விட்டு விட வேண்டுமா என்பதே அது. அன்று மாலை சுரேஷிடம் பேசும் வரை தன் ஆள் மாறாட்ட நாடகத்தைப் பத்மாவிடம் எப்படி நேரில் எடுத்துச் சொல்வது என்று திக்குமுக்காடிய ஸ்ரீதர் அதற்காகத் தானே கடித மூலம் – தன் கபட நாடகத்தை வெளியிடத் தீர்மானித்தான்? ஆனால் கடிதத்தை எழுதி முடித்தப் பின்னர், மனம் வேறு விதமாக வேலை செய்கிறது. “சீச்சீ, மனதை இவ்வாறு அலைய விடக் கூடாது. தீர்மானித்தது தீர்மானித்ததுதான். விடிந்ததும் கடிதத்தைப் பதிவுத் தபால் மூலம் அனுப்புவேன். அவள் சகல விஷயங்களையும் கடித மூலமே தெரிந்து கொள்ளட்டும்” என்று முடிவு செய்த ஸ்ரீதர் மனதில் மற்றோர் அச்சமும் எழுந்தது. ஒரு வேளை கடிதத்தைப் படித்ததும் நான் பொய்யன் என்பதைத் தெரிந்து கொண்டு என் மீது பத்மா வெறுப்படைந்தாளானால்..?” என்ற பழைய அச்சமே அது. ஆனால் “ஒரு போதும் ஒரு பெண் இப்படிப்பட்ட காரியத்துக்காகத் தன் காதலனை வெறுக்கமாட்டாள்; உண்மையில் இவ்விஷயம் தெரிந்ததும் என்னை அடைவதற்காகத்தானே என் காதலர் இப்படிப் பொய் சொன்னார்?” என்றெண்ணி அவள் தன் காதலன் மீது முன்னிலும் அதிகமான அன்பைப் பொழியவும் கூடும்” என்று சுரேஷ் கூறிய வார்த்தைகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. “ஆம் சுரேஷ் அறிவாளி. என் போலக் காதல் ‘கீதல்’ என்று அலையாமல் பெரிய புத்தகங்களை எந்நேரமும் வாசிப்பவன். அவன்தான் “கிஷ்கிந்தா”வின் சாக்ரட்டீஸ்! அவன் சொன்னது சரியாகவே நடக்கும்” என்று தனக்குத்தானே தேறுதலும் கூறிக்கொண்டான் அவன்.
“இருந்தாலும் அதை அவ்வளவு நிச்சயமாக நாம் எப்படிக் கூற முடியும். இந்த ஆள் மாறாட்ட நாடகத்தால் எவ்வித தீய பலனும் ஏற்படாதிருப்பதை எப்படிச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்துவது? அதற்கேதாவது வழியில்லையா?” என்று தன்னைத்தானன் வினாவிய ஸ்ரீதருக்கு உடனே ஒரு பதிலும் கிடைத்துவிட்டது.
“கொட்டாஞ்சேனை மாரியம்மனுக்கு ஐம்பது ருபாவுக்குக் கற்பூரம் கொளுத்துவேன். மாரியம்மன் கைவிட மாட்டாள். தீய பலன் எல்லாவற்றையும் தவிர்ப்பாள் என் தாய்” என்று தீர்மானித்த ஸ்ரீதர் சிறிது யோசித்தப் பின்னர் இப்படிப்பட்ட பெரிய வேலைக்கு ஐம்பது ரூபா போதாது. நூறு ரூபாவுக்குக் கற்பூரம் கொளுத்துவேன்.” என்று உடனடியாக நேர்த்திக்கடனின் பெறுமதியை உயர்த்தினான். உண்மையில் வங்கியில் இருந்த முழுப் பணத்தையுமே கற்பூரமாகக் கொளுத்த அவனது காதலுள்ளம் தயாராக இருந்ததென்றாலும் அவ்வளவு பெரிய தொகைக்கு எவரும் கற்பூரம் கொளுத்தியதாக அவன் முன்னொரு போதும் கேள்விப்பட்டிராததால், தான் அவ்வாறு பல ஆயிர ரூபாக்களுக்குக் கற்பூரம் கொளுத்துவதைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்க மாட்டார்களா என்று அவன் அஞ்சியதே கற்பூரச் செலவை நூறு ரூபாவாகக் கட்டுப்படுத்தும்படி அவனை உந்தியது. பார்க்கப் போனால் நூறு ரூபா கூட மற்றவர்களின் கண்களில் சற்று அதிகமாகத் தான் படும். ஆனால் மாரியம்மனிடம் அவன் கோரிய சேவையின் முக்கியத்துவத்தோடு ஒப்பிட்டால் நூறு ரூபா எம்மாத்திரம்? ஆனால் அதைக் கண்டும் சிலர் சிரிக்கக் கூடும், என்றாலும் அதற்காக அதனை இன்னும் குறைப்பது நியாயமல்ல என்று ஸ்ரீதர் தீர்மானித்துக்கொண்டான். பார்க்கப் போனால், என்ன உலகமிது? ஒருவனுக்குத் தன்னிஷ்டப் பிரகாரம் கற்பூரம் கொளுத்துவதற்குக் கூடச் சுதந்திரமில்லா உலகம்!

இப்படிப் பலவாறாகச் சிந்தித்துப் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த ஸ்ரீதர் இடையிடையே துயிலுலகிற்கு எழுவதும் மீளுவதுமாக இருந்து முடிவாகத் துயிலுலகிற் புகுந்த போது நேரம் நான்கரைக்கு மேலாகிவிட்டது.
அடுத்த நாட் காலை பத்து மணியளவில் காதலர்கள் “வழமையான இடத்”தில் சந்தித்தபோது இருவரும் தாம் தாம் வகுத்த திட்டங்களின் படி நடந்து கொண்டனர். பத்மா தன் மனதில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, ஸ்ரீதரிடம் “எனக்கு இன்று நிறைய வேலை இருக்கிறது. ஆகவே இப்பொழுது பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. நீங்கள் இன்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு வாருங்கள். அப்பா உங்களிடம் ஏதோ பேச வேண்டுமாம்” என்றாள்.
“என்ன? மாமா மருமகனைக் காண விரும்புகிறாரா? மகளையும் மருமகனையும் ஒன்றாக வைத்து ஆசிர்வதிக்க விரும்புகிறார் போலும்!” என்றான் ஸ்ரீதர்.
வேறு நேரத்தில் என்றால் பத்மா ஸ்ரீதரின் இப்படிப்பட்ட கேலிப் பேச்சுக்களைக் கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்திருப்பாள். அத்துடன் தானும் பதிலுக்கு ஏதாவது பகடிப் பேச்சுப் பேசியிருப்பாள். ஆனால் அப்போதிருந்த மன நிலையில் அவளால் அவ்வாறு பேச முடியவில்லை. இருந்த போதிலும் ஸ்ரீதர் கேலியாகவேனும் அப்பாவை மாமாவென்று உரிமையோடு அழைத்தது அவளுக்கு இன்பமாகவே இருந்தது. ஆகவே ஸ்ரீதரின் வேடிக்கைப் பேச்சில் அவளால் உளம் மறந்து சங்கமிக்க முடியவில்லை என்றாலும், ஒப்புக்காவது புன்னகை செய்ய முடிந்தது. ஆகவே சிரித்த முகம் காட்டினாள் அவள்.
ஸ்ரீதர் தான் இரவு தீட்டிய திட்டத்தின் பிரகாரம் “பத்மா, நான் உனக்கும் மாமாவுக்கும் இரு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். நாளைக் காலையில் பதிவுத் தபாலில் அவை உங்களை வந்தடையும். வாசித்துவிட்டு உடனே பதிலெழுத வேண்டும். தவறக் கூடாது. தெரிந்ததா?” என்றான். இவ்வாறு சொல்லிக் கொண்டே சட்டைப் பையில் இருந்த பதிவுச் சீட்டை எடுத்து பத்மாவுக்குக் காட்டினான்.
பத்மா ஆச்சரியத்துடன் “கடிதமா? எனக்கும் அப்பாவுக்குமா? எதற்கு? தினசரி நேரில் காணுபவர்களுக்கு எதற்காகக் கடிதம் எழுத வேண்டும்? பேச வேண்டியவற்றை நேரே பேசிவிடலாமல்லவா?” என்றாள்.
ஸ்ரீதர், “சில விஷயங்களை நேரில் சொல்லுவதை விட கடிதம் மூலம் எழுதுவது இலகு. அதனால்தான் கடிதத்திலெழுதியிருக்கிறேன்.” என்றான்.
பத்மாவுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் சிலருக்கு நாடி தளர்ந்து பேசச் சக்தியற்றுப் போய்விடுகிறது. பத்மா அன்று அந்த நிலையிலேயே இருந்தாள். ஏமாற்றம், துக்கம், கோபம், எதிர்காலத்தைப் பற்றிய அச்சம் என்ற நான்கு பேருணர்ச்சிகளின் பீடிப்பிலே அவள் இதயம் சிக்கித் தடுமாறிக் கொண்டிருந்தது. அதனால் வழக்கமாக அவள் பேச்சிலும் நடையிலும் அலைவீசும் உயிரும் உற்சாகமும் அன்று எங்கோ மறந்துவிட்டன. அத்துடன் இதயத்தில் குமுறல் கண்ணீர்க் குமுறலாக மாறிவிடுமோ என்ற அச்சம் வேறு. அதனால் அவளைச் சுற்றிலும் ஒரு வகை இருள் — ஒரு வகை மந்தம் அல்லது மப்பு — திரையிட்டிருந்தது.
ஆனால் ஸ்ரீதருக்கோ பத்மாவின் இம்மாற்றம் சற்றேனும் தெரியவில்லை. அவன் கண்கள் காதற் கண்கள். பத்மா அவன் கண்களுக்கு வழக்கம் போல் தான் தோன்றினாள். உண்மையில் அவன் கண்களில் அவள் இன்று சற்று அதிக கவர்ச்சியுடன் தோன்றினாள் என்று கூட சொல்லலாம். காதலன் கண்களிலே தினசரி அதிக சிறப்பைப் பெறாத காதலி யார்? வழமையான உற்சாகமில்லாத இன்றைய பத்மாவின் போக்கு, அவளுக்கு அமைதியின் சிறப்பை நல்கியது. உண்மையில் வழக்கத்திலே வெகு துடுக்காகப் பேசும் பத்மா இன்று மிக அடக்கமாகப் பேசிய முறையைக் கண்டு, “ஓகோ, அப்பா திருமணத்துக்கு அனுமதித்துவிட்டார். ஆகவே பத்மா மணப்பெண் அல்லவா? இந்து சமூகத்து மணப்பெண் கால் பெருவிரலைப் பார்த்து நடக்க வேண்டியவளல்லவா? பத்தினிப் பண்புகள் அவளிடம் தோன்றுகின்றன. சரியாக அம்மாவிடம் காணும் அந்த அடக்கமும் அமைதியும் இவளிடம் தோன்றத் தொடங்கி விட்டனவே. நிச்சயம், என் பத்மாவின் அழகும் அமைதியும் இனிய பேச்சும் அம்மாவைக் கொள்ளை கொள்ளப் போகின்றன!” என்று சிந்தித்தான் ஸ்ரீதர். பத்மாவை மணப்பெண்ணாக எண்ணியதும், தலையில் மல்லிகைப்பூ அலங்காரத்துடனும் நெஞ்சு நிறைந்த தங்க வைர நகைகளுடனும் அவன் கிராமத்திலுள்ள தனது மாளிகையின் சலவைக்கல் பதித்த தரையில் தங்கச் சரிகையிட்ட கரு நீலக் காசிப் பட்டுக் கொடிச் சேலை சரசரக்க, இடுப்பில் தங்க ஒட்டியாணம் அணிந்து தன் கையைப் பற்றிக் கொண்டு, நிதானமாக நிமிர்ந்து தங்கப் பதுமை போல் நடந்து செல்வது போன்ற ஒரு பிரமை அவனுக்கு ஏற்பட்டது. அதில் மெய்மறந்த அவன் “பத்மா வாத்தியார் மகளாயிருந்தாலென்ன, அரசகுமாரனை மணந்து அரண்மனைக்கு ஒளியேற்றவல்ல அற்புதமான பெண். சீதையை மணந்த இராமன் தசரத மாளிகைக்குப் போன போது எப்படி இருந்திருப்பாளோ அப்படித் தோன்றுவாள் அவள். என்னுடன் தோளோடு தோளாகத் தன் பூங்கையால் என் கை பற்றி நடந்து வரும் பொழுது” என்று ஒரு தெய்வ மகளைப் பற்றி எண்ணுவது போல எண்ணினான்.
ஆனால் ஸ்ரீதரின் இந்த அற்புதமான கற்பனை உலகத்துக்குத் தன்னை உயர்த்திச் செல்ல பத்மாவால் அன்று முடியவில்லை. அவள் பல்கலைக் கழகத்தின் சிமெந்துத் தரையில் நிற்க அவன் மின்னல்களிடையே நின்று பேசினான். ”பத்மா! இனிமேல் நாம் பிரிந்திருக்கக் கூடாது. சீக்கிரமே திருமணம் செய்துகொள்ள வேண்டும். பார், எவ்வளவு சீக்கிரமாக அம்மாவிடமும் அப்பாவிடமும் எங்கள் கல்யாணத்துக்கு அனுமதி பெற்று வருகிறேன்.” என்றான். பத்மா திடுக்கிட்டாள். கனவிலே நின்று பேசுவது போல் பேசிய ஸ்ரீதரின் அவ்வார்த்தைகளிலே தோய்ந்திருந்த கனிவும் திடமும் அவன் முகத்தின் படர்ந்திருந்த சாந்தமும் அவ்வார்த்தைகளை உண்மையிலும் உண்மையாகச் சத்தியத்தின் உறையுளாக அவளுக்குக் காட்டின. அவற்றை எவ்வாறு நம்பாதிருக்க முடியும்? காதலே உருவானவன் போல் காட்சி அளித்த அவன் முகத்தை அண்ணாந்து பார்த்து நின்ற பத்மா “சீ, ஸ்ரீதர் மோசக்காரனல்லன். அவன் என்னை விட வேறு யாரையும் எண்ணியதில்லை. எண்ணப் போவதுமில்லை. நான் தான் சலனமடைந்து விட்டேன். தங்கமணி சொன்னதெல்லாம் பொய்! ஸ்ரீதரைப் போன்ற உண்மையானவன் இவ்வுலகில் இல்லை. அவன் சிவநேசர் மகனல்லன். சின்னப்பா வாத்தியார் மகன்தான். எதற்கும் எல்லாம் இன்று தெரிந்து விடுமல்லவா? ஸ்ரீதரே என் காதலன்; கமலநாதனல்லன்” என்ற எண்ணங்கள் அவள் மனத்தை ஊடுருவிச் செல்ல அவளது கள்ளமற்ற மனதின் எதிரொலி போல அவள் கண்கள் கலங்கின; கட்டுப்படுத்த முடியாத கண்ணீர்த் துளிகள் கன்னத்தின் வழியாகக் கொட்டத் தொடங்கின. உணர்ச்சிகளை மறப்பதற்காகச் சிரித்தவண்ணம் தன் கண்களைத் தனது வளைக்கைகளால் கசக்கிவிட்டாள் அவள். வளையல்கள் சப்தித்தன. கைகள் ஈரமாகின. இருந்த போதிலும் ‘ஹாண்ட் பாக்’கிலிருந்த கைக்குட்டையை எடுக்க அவள் மறந்து போனாள். சேலையில் முன்றானையை எடுத்து நாணத்தோடு கன்னங்களைத் துடைத்து நின்றாள் அவள்.
ஸ்ரீதர் “பத்மா! ஏன் அழுகிறாய்?” என்றான். அவன் மூளை குழம்பியது, “ஏதாவது துக்கமா?”
“இல்லை, ஆனந்தம்! எங்கள் திருமணம் சீக்கிரம் நடக்குமல்லவா?”
“ஆம் சீக்கிரம். வெகு சீக்கிரத்தில் நடக்கும், பத்மா”
ஸ்ரீதர் நடைசாலை நீளக் கண்ணைச் செலுத்திப் பார்த்தான். யாரையும் காணோம். இரு மாணவர்கள் புற முதுகுக் காட்டித் தூரத்தில் போய்க் கொண்டிருந்தனர். ஆகவே யாரும் தங்களைப் பார்க்கவில்லை என்ற உறுதியுடன் பத்மாவின் கண்களைத் தடவி அவளது பட்டுக் கன்னங்களைத் தன் கரங்களால் மெல்லத் தட்டினான் ஸ்ரீதர். மெல்லிய கண்ணாடி பாத்திரத்தைத் தடவுவது போல் அவள் வளவளப்பான கன்னங்களைத் தன் விரல்களால் சிறிது நேரம் தடவிக் கொண்டே நின்றான்.
பத்மா திருப்தியுடன் புன்னகை செய்தாள். கூம்பிய தாமரை மீண்டும் விரிவது போல் அவள் அன்பு மீண்டும் மலர்ந்தது.
“சரி நான் வரட்டுமா ஸ்ரீதர்? கட்டாயம் பின்னேரம் வர வேண்டும். தவறக்கூடாது” என்றாள் பத்மா.
“வருவேன். என் கடிதத்துக்கும் நீ கட்டாயம் பதிலெழுத வேண்டும். தெரிந்ததா?” என்றான் ஸ்ரீதர்.
“எழுதுகிறேன். சரி. வருகிறேன் டார்லிங்”
பத்மா அங்கிருந்து போகு முன்னர் சுற்று முற்றும் பார்த்து விட்டு அவனது சிவந்த திரண்ட கரங்களைத் தன் கைகளால் கிள்ளி விட்டு விரைந்து நடந்து சென்றாள். செஞ்சாயம் பூசிய பள பளக்கும் அவள் நகங்கள் நீளமில்லாவிட்டாலும் அவன் எதிர்பார்த்தது போல அவ்வளவு மொட்டையாக இருக்கவில்லை. ஆகவே அவளது கிள்ளு சற்று உறைக்கவே செய்தது! அவனுக்கு மிக மிக ஆனந்தம்!
ஸ்ரீதர் இரவு கண்ட கனவு பலித்து விட்டது. அவன் தன் மனதில் பின்னியிருந்த சித்திரத்தின் போலவே பத்மா அவனைக் கிள்ளிவிட்டுப் போய்விட்டாள். உண்மையில் அவள் அன்று கிள்ளாது போயிருந்தால் அது பெரிய ஏமாற்றமாகத்தான் இருந்திருக்கும். மேலும் அவளது கண்ணீர், உணர்ச்சி நிறைந்த அவளது கண்ணீர் அவள் நேசத்தின் கின்னம். “நிச்சயம் எனது பொய்க்காக அவள் என்னை வெறுக்க மாட்டாள். மாரியம்மன் என் காதலைக் கட்டாயம் காப்பாற்றுவாள்.” என்று சொல்லிக் கொண்ட ஸ்ரீதர் தன் விரல்களைல் படிந்திருந்த அவளது கண்ணீரின் ஈரத்தை மறு கரத்தால் தொட்டுப் பார்த்துக் கொண்டான். அவன் கண்ணிலும் கண்ணீர் பிறந்தது. தனது கைகளால் துடைக்கும் பொழுது அவனது விரல்களில் பட்டிருந்த பத்மாவின் கண்ணீரும் அவன் கண்ணீரும் ஒன்று சேர்ந்தன. அதில் அவனுக்கு அளவு மீறிய திருப்தி!
அன்று பிற்பகல் ஸ்ரீதர் வழக்கம்போலத் தனது பிளிமத் காரைக் கொலீஜ் ரோட்டிற்குச் சற்றுத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கி வருபவன் போல் 48ம் இலக்கத் தோட்டத்தை வந்தடைந்த போது, அங்கே பரமானந்தர் அவனுக்காக ஆவலுடன் காத்திருந்தார். இன்று அவனிடம் விஷயத்தைப் பேசித் தீர்த்து விட வேண்டுமென்பது அவர் தீர்மானம். எதற்காக அவன் பொய் சொல்ல வேண்டும்? உண்மையில் அவன் சிவநேசர் மகன் தானா? அப்படியானால் இந்தத் திருமணம் நடக்கக் கூடியதா? — இவ்வாறு அவர் யோசித்துக் கொண்டிருக்க ஸ்ரீதர் சிரித்த முகத்தோடு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் “வா தம்பி” என்று வழக்கம் போலவே அழைத்த பரமானந்தர் உள்ளே விமலாவுக்கும் லோகாவுக்கும் ஆங்கில பாடம் சொல்லிக் கொண்டிருந்த மகளை நோக்கி “பத்மா, பத்மா” என்று சப்தமிட்டார்.
உண்மையில் பரமானந்தருக்கு ஸ்ரீதர் மீது கடுமையான கோபம் இருந்தது இருந்தாலும் கள்ளங்கபடமற்ற அவனது புன்முறுவல் பூத்த முகத்தைக் கண்டதும் அக்கோபம் எங்கேயோ மறைந்துவிட்டது. இவனா பொய் சொல்லியிருப்பான். ஏன் – அவரால் அவன் தீய எண்ணத்துடன் எதையும் செய்யக் கூடியவன் என்ற நம்ப முடியவில்லை. இருந்தாலும் இது சாதாரண விஷயமில்லவே, பேசாது விடுவதற்கு. இன்னும் தன் ஒரே மகள் பத்மாவின் முழு வாழ்க்கையையுமே பாதிக்கத்தகக பெரிய விஷயம் இது. ஆகவே எப்படியும் அதனை வெளியாகப் பேசித் தீர்த்துவிட வேண்டியதுதான். அப்படிப் பேசி, அவன் உண்மையிலேயே குற்றவாளியாகக் காணப்பட்டால், விஷயத்தைப் பெரிதுபடுத்திக் குழப்பிக் கொண்டிராமல், “போ சனியன்” என்று முடித்துவிட்டுத் தனக்கு நன்கு தெரிந்த ஓர் இடத்தில் பத்மாவுக்கு வேறு மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டியதுதான். தாயில்லாத ஒண்டி பெண். நான் திடீரெனக் கண்ணை மூடி விட்டால் என்ன செய்யும்? கல்யாணம் ஒன்று தான் அவனைக் கரை சேர்த்துப் பாதுகாப்பளிக்கவல்லது. ஆகவே அதைத் தட்டில் கழிக்கவோ, ஒத்தி போடவோ முடியாது.
பத்மா வெளியே சிரித்த முகத்துடன் வந்து ஸ்ரீதரை வரவேற்றாள். ஸ்ரீதரும் புன்னகை செய்து கொண்டே ஒரு நாற்காலியில் அமர்ந்தாள். அவன் நாற்காலியில் அமர்ந்ததும் பத்மா விமலாவைக் கூப்பிட்டு, அவள் கன்னத்தைத் தடவிக் காதோடு காதாக, “விமலா! ஓடிப் போய் மூலைக் கடை வேலாயுதக் கிழவனை நான் கையோடு வரச் சொன்னதாக அழைத்து வா” என்று கூறி விட்டு, தகப்பனாரைத் தனியே அழைத்து “அப்பா நீங்கள் ஒன்றும் பேச வேண்டாம். நான் சில ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். எல்லாவற்றையும் நான் கவனிக்கிறேன்” என்றாள். பரமானந்தரும் “சரி” என்று சொல்லி விட்டு ஒரு சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டார். விமலா வேலாயுதக் கிழவனை அழைக்கத் துள்ளிக் கொண்டு ஓடி விட்டாள். லோகாவும் அவளுக்குப் பின்னாலே குதித்துக் கொண்டு ஓடினாள்.
பரமானந்தர் ஸ்ரீதரோடு ஏதாவது பேச எண்ணி, “தம்பி, உன்னுடைய தந்தையார் சின்னப்பாவை நான் காண வேண்டும். நீ அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவரால் இங்கு வர முடியுமானால், நல்லது. அவரால் வர முடியாவிட்டால், எனக்குக் கூட உடுவில்லுக்குப் போக ஆசைதான். பத்மாவையும் அழைத்துக் கொண்டு போய்விட்டு வரலாம்” என்றார்.
ஸ்ரீதருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இருந்த போதிலும் சமாளித்துக் கொண்டு, “ஆம் அது நல்ல யோசனைதான். நாங்கள் மூவருமே இம்மாத முடிவில் ஊருக்குப் போவோம். வீட்டுக்குக் கடிதம் எழுதி எல்லா ஏற்பாடுகளும் செய்கிறேன்” என்றான்.
இதற்கிடையில் பத்மா ஸ்ரீதருக்குச் சூடான் தேநீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவன் அதை மெல்லக் குடித்துக் கொண்டே பரமானந்தர் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்துக் கொண்டிருக்க, வேலாயுதக் கிழவன் தனது தலையைத் தடவிக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தான். அவன் பின்னாலே விமலாவும் லோகாவும் ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டு வந்தார்கள். கிழவன் அவர்களுக்கு இனாமாகக் கொடுத்த ‘அம்ப்ரெல்லா’க் காயை அவர்கள் கடித்துத் தின்று கொண்டிருந்தார்கள்.
பரமானந்தர் வீட்டுக்குள் புகுந்து வேலாயுதக் கிழவன் திடுக்கிட்டு விட்டான். தனது பழைய எஜமானர் சிவநேசரே அங்கு உட்கார்ந்திருப்பது போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது அவனுக்கு. “என்ன? தம்பி ஸ்ரீதரல்லவா — சிவநேசப் பிரபுவின் மகனல்லவா இங்கிருப்பது?” என்று தன்னுள் தானே கூறிக் கொண்ட வேலாயுதம், “ஸ்ரீதர் ஐயா, நீங்கள் எப்போது வந்தீர்கள்?” என்று கூனிக் குறுகி நின்று கேட்டான். ஸ்ரீதரும் திடுக்கிட்டு விட்டான் என்றாலும் சமாளித்துக் கொண்டு “யாரது வேலாயுதமா? நீ இங்கேயா இருக்கிறாய்?” என்றான்.
“ஆம் ஐயா! தோட்டத்திலே ஒரு வெற்றிலை பாக்குக் கடை வைத்திருக்கிறேன். வீட்டிலே சிவநேசப் பிரபு சுகமாயிருக்கிறாரா?” என்றான் வேலாயுதக் கிழவன்.
இதைக் கண்ட பரமானந்தர் “என்ன ஸ்ரீதரை உனக்குத் தெரியுமா, வேலாயுதம்?” என்று கேட்டார். அவருக்கும் இது திடுக்கிடும் செய்திதான்.
“என்ன, என்னை அப்படிக் கேட்கிறீர்கள்? அவர்கள் வீட்டிலே பிழைத்தவன் யான். இவருடைய தகப்பனாரைப் பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே! இலங்கையிலே பெரிய, பணக்காரர், படித்தவர், சிவநேசப் பிரபு” என்றான் வேலாயுதம் விநயமாக.
“உண்மைதானா? நீங்கள் சிவநேசர் மகனா? பார்த்தால் உங்கள் முகம் அவரைப் போல் தான் இருக்கிறது” என்றார் பரமானந்தர். வெறுப்பாலும் கோபத்தாலும் அவர் முகம் விகாரமடைந்தது. “ஆம், ஸ்ரீதர் பொய்காரன் தான். ஏமாற்றுக்காரன். மோசக்காரன்.” என்றது அவர் மனம்.
பத்மா இவற்றை எல்லாம் தொலைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். “ஆம், தங்கமணி வெற்றி பெற்றுவிட்டாள்.” அவள் சொன்னது முற்றிலும் உண்மை. ஸ்ரீதர் மோசக்காரன், பொய்யன், அயோக்கியன்” என்று நினைத்தவன்ணமே வேலாயுதத்தை உள்ளே வரும்படி அழைத்தாள். “வேலாயுதம்! நான் எதற்கு உன்னை அழைத்தேன், தெரியுமா? இன்று உனக்கு இங்கே எட்டு மணிக்குச் சாப்பாடு, கட்டாயம் வர வேண்டுமென்று சொல்வதற்குத் தான். இப்பொழுது வேலையிருந்தால் போய்விட்டு நேரத்துக்கு வந்துவிடு” என்றாள். வேலாயுதக் கிழவனும் அப்படியே செய்வதாகப் புறப்பட்டான். ஆனால் வெளியே போகு முன் ஸ்ரீதர் முன்னிலையில் சென்று இரு கரங்களையும் கூப்பி, அவனைக் கும்பிடக் கிழவன் மறக்கவில்லை.
ஸ்ரீதர், “சரி போய் வா” என்று கூறினானாயினும், வேலாயுதத்தின் சந்திப்பு அவனை திகைக்க வைத்திருந்தது! தலையில் ஒரு குண்டு விழுந்தது போலிருந்தது அவனுக்கு!
வேலாயுதக் கிழவன் போன பின்னர் பரமானந்தரும் பத்மாவும் ஏக காலத்தில் ஸ்ரீதர் மீது பாய்ந்தார்கள். அவர்கள் பேச்சிலே ஆத்திரமும் ஆவேசமும் தொனித்தன.
“தம்பி ஸ்ரீதர்! உன் நாடகம் நன்றாயிருக்கிறது! இது பல்கலைக் கழகத்தில் நீ நடித்த ஈடிப்பஸ் நாடகத்தை விட எவ்வளவோ மேல்! ஆனால், இந்த நாடகத்தின் அர்த்தம் தான் எனக்கு விளங்கவில்லை.” என்றார் பரமானந்தர். அவர் குரல் வழக்கத்துக்கு மாறான உச்ச ஸ்தாயியில் ஒலித்தது.
“என்ன அர்த்தம்? எல்லாம் பொய் சொல்லி எங்களை ஏமாற்றி, மெல்ல நழுவும் திட்டம் தான் அப்பா. இல்லாவிட்டால் அவர் பொய் விலாசம் கொடுக்க வேண்டிய காரணமென்ன?” பத்மா இவ்வாறு கூறும்போது கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அவள் அடக்க முயன்ற அழுகை விம்மலாக வெடித்து வெளி வந்தது. கோபமும் ஆத்திரமும் ஏமாற்றமும் அவள் குரலை நடுங்க வைத்தன.
ஸ்ரீதருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் தான் மோசக்காரனல்லன் என்பதை நிரூபித்தே தீர்வது என்று முடிவு கட்டி விட்டான் அவன்.
“பத்மா! வெறுமனே கூச்சலிட்டு அழாமல் நான் சொல்வதைக் கேட்டுவிட்டுப் பேசு! எனக்குப் பேசச் சந்தர்ப்பம் கொடுங்கள். என் நிலையை எடுத்துச் சொல்ல இடமளியுங்கள்” என்று உரத்த குரலில் சப்தமிட்டான் ஸ்ரீதர். “ஈடிப்பஸ்” நாடகத்தில் அவன் செய்த முழக்கம் பத்மாவுக்கு ஞாபகம் வந்தது. அப்பொழுது பரமானாந்தர் “இதிலென்ன தம்பி பேச இருக்கிறது? நீ சொன்னது பொய்தானே? நீ சின்னப்பா மகனல்ல. சிவநேசர் மகனென்பது மெய் தானே?” என்றார்.
ஸ்ரீதர் “அது மெய்தான். ஆனால் என்ன காரணத்துக்காக நான் பொய் சொன்னேன் என்பது தெரிந்தால் நீங்கள் என்னை ஒரு போதும் மோசக்காரனென்று கூற மாட்டீர்கள். மேலும், பத்மாவை ஏமாற்றி ஓடும் கீழ்த்தர எண்ணம் எனக்கு ஒரு போதும் ஏற்பட்டதில்லை” என்றான், அழுத்தம் திருத்தமாக.
“அப்படியானால் பொய் சொல்ல வேண்டிய காரணம்?” பத்மாவின் கேள்விப் பானம் இது.
“சொல்லுகிறேன். முதலில் இருவரும் அமைதியாக உட்காருங்கள்” என்று கூறிக் கொண்டே தன் கதையைக் கூற ஆரம்பித்தான் ஸ்ரீதர்.
“உண்மைதான். நான் சிவநேசரின் மகனே. இந்த நாட்டிலேயே பெரிய பணக்காரர் எங்கள் குடும்பந்தான் என்று தான் எல்லோரும் சொல்லுகிறார்கள். அத்துடன் அவர் படித்தவர். உயர்ந்த ஜாதிக்காரர். இவை எல்லாம் சேர்ந்து எங்களை மற்றவர் கண்களில் அபூர்வப் பிறவிகளாக்கிவிட்டன. அவர்கள் ஒன்றில் எங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள், அல்லது எங்கள் முன் தாழ்மை உணர்ச்சியால் பதறுகிறார்கள். இதனால் பல்கலைக் கழகத்தில் கூட என்னுடன் பழகுபவர்கள் மிகக் குறைவு. இந்த நிலையில் நான் பத்மாவைக் கண்டு அவளை என் மனைவியாக்க வேண்டுமென்று தீர்மானித்தபோது, என் முன் ஒரு பிரச்சினை எழுந்தது. சாதாரண குடும்பத்தில் பிறந்த பத்மா நான் சிவநேசரின் மகன் என்று தெரிந்ததும் மிரண்டு போய் விடுவாள் என்று அஞ்சினேன். அப்படி அவள் மிரண்டு சென்றால் எப்படி அவள் அன்பை நான் பெற முடியும்? ஆகவே பத்மா மிரளாமலிருக்க வேண்டுமென்றே நான் வாத்தியார் சின்னப்பா என்று ஒருவரைக் கற்பனை செய்து அவரது மகன் நான் என்று கூறிக் கொண்டேன். ஆனால் எவரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு இருந்ததில்லை. சமயம் வந்ததும் உண்மையைச் சொல்லி, பத்மாவை என் மனைவியாக்க வேண்டுமென்பதே என் திட்டம். ஆனால் அதற்கிடையில் வேலைக்கார வேலாயுதத்தால் இந்தக் குழப்பமேற்பட்டுவிட்டது.”
ஸ்ரீதரின் கதையை முற்றிலும் கேட்ட பரமானந்தர் “ஆனால் நீ சொல்லும் இக்கதை வெறும் கட்டுக் கதையல்ல என்று எப்படி நாம் நம்புவது? உன் திட்டம் எங்களை ஏமாற்றுவதாகவே இருந்திருக்கலாம். இப்பொழுது அகஸ்மாத்தாகப் பிடிபட்டுக் கொண்டதும் தப்பித்துக் கொள்வதற்காக நீ இக் கதையைச் சோடித்திருக்கலாம்!” என்றார்.
ஸ்ரீதர், “நான் சொல்வதற்கு என்னால் ஆதாரம் காட்ட முடியும்!” என்றான்.
“காட்டுங்களேன்,” என்றாள் பத்மா.
ஸ்ரீதர், “நாளை உங்கள் இருவருக்கும் இரண்டு கடிதங்கள் வரும். இன்று காலையில் கட்டில் சேர்த்த பதிவுத் தபால்கள். அவற்றில் நான் சொன்ன இக்கதை முழுவதும் இருக்கும். அவை நேற்றிரவு நான் எழுதிய கடிதங்கள். அக் கடிதங்கள் இன்று இப்பொழுது நடை பெற்றவைகளை எதிர்பார்த்து எழுதப்பட்ட மோசடிக் கடிதங்களாக இருக்க முடியாதல்லவா? மேலும் அவை இன்று காலை தபாலில் சேர்க்கப்பட்டன என்பதற்கு இதோ அத்தாட்சி!” என்று கூறிக் கொண்டே தனது சட்டைப் பையிலிருந்த பதிவு ரசீதுகளை எடுத்து, பரமானந்தர் கையில் கொடுத்தான்.
பரமானந்தர் அவற்றை வாங்கிக் கொண்டு மெளனமானார். பத்மா முகத்தில் மலர்ச்சி. அது திடீர்ப் புன்னகையாகிப் பின்னர் சிரிப்பாக விகசித்தது. ஸ்ரீதரும் சிரித்தான். ஆம் ஸ்ரீதர் மோசக்காரனல்லன்! பத்மா முகம் நாணியது. இடம் விட்டு இடமோடிய அவள் கன்னச் சுழியை இரசித்தான் ஸ்ரீதர்!
பரமானந்தர் உள்ளத்திலும் திருப்தி. இருவரையும் பார்த்துப் புன்னகை செய்தார். “சரி, நாளைக்குக் கடிதத்தை வாசித்துப் பார்ப்போம்” என்றார் அவர். ஆனால் கடிதத்தை வாசிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஸ்ரீதர் மோசக்காரனல்லன் என்பதை அவர் நன்குணர்ந்து கொண்டார்.
அன்று இரவு சுரேஷிடம் கொட்டாஞ்சேனைச் சம்பவங்கள் யாவற்றையும் நவ ரசங்களும் ததும்ப விவரித்த ஸ்ரீதர், “எல்லாம் மாரியம்மனின் அருள். நாளைக்கு நான் மாரியம்மன் கோவிலில் நூறு ரூபாவுக்குக் கற்பூரம் கொளுத்தப் போகிறேன்” என்றான்.
“எதற்காக? உன்னைக் காப்பாற்றியவை அக்கடிதங்கள். அவற்றை எழுதச் சொன்னது நான். ஆகவே நீ அதற்காக ஏதாவது ‘பீஸ்’ செலுத்த விரும்பினால் அதை எனக்குத் தான் செலுத்த வேண்டும்.” என்றான் சுரேஷ்.
ஸ்ரீதர் சுரேஷின் பேச்சை இலட்சியம் செய்யாமல் ஏதோ பாட்டொன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அப்போது கூரையில் பல்லி சொல்லுவது கேட்டது. “சுரேஷ்! பல்லி சொல்வதைக் கேட்டாயா? பல்லி என்ன சொல்கிறது?” என்றான் ஸ்ரீதர்.
“பல்லியக் கூரைச் சாஸ்திரியாராக எண்ணிக் கொண்டு நீ இக் கேள்வியைக் கேட்கிறாய். நான் அறிந்துள்ள மிருகவியலின் படி எந்தப் பல்லியும் சோதிடம் கற்றுக் கொண்டதாக எனக்குத் தெரியாது!” என்றான் சுரேஷ்.
“பல்லி சொல்வது என்ன என்பது எனக்குத் தெரியும். பத்மாவும் நானும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்வோம் என்று பல்லி சொல்லிற்று” என்றான் ஸ்ரீதர் மன மகிழ்ச்சியால் சுரேஷோடு குழந்தை போல் கொஞ்சினான் அவன் .
ஸ்ரீதரின் மனதில் இருந்த பெரிய பாரம் – எப்படித் தன் ஆள் மாறாட்ட நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்ற பிரச்சினை – இப்பொழுது தீர்ந்துவிட்டதால், அவன் மனம் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தது! அவனைப் போன்ற சந்தோஷமான மனிதன் இவ்வுலகில் வேறு யாரும் அன்றிருக்கவில்லை. தங்கள் காதலென்னும் முழுமதியைப் பீடித்த இராகு நீங்கியதே என்று மகிழ்ந்து கொண்டிருந்தான் அவன்.
8-ம் அத்தியாயம் : சுய உருவில் ஸ்ரீதர்
பாரதக் கதையிலே பாண்டவர்கள் யாவரும் ஒரு வருஷம் அஞ்ஞாதவாசம் சென்றதாகவும், அக்காலத்திலே அவர்கள் தமது பெயரையும் உருவையும் மாற்றி விராட தேசத்திலே மறைந்து வாழ்ந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. துரியோதனாதியரிடம் சூதிலே தோற்ற பாண்டவர்களில் மூத்தவராகிய தர்மபுத்திரன், தானும் தம்பியரும் மனைவி திரெளபதியுடன் பன்னிரண்டு வருட காலம் வன வாசமும், பதின்மூன்றாம் வருடம் அஞ்ஞாதவாசமும் செய்ய ஒப்புக் கொண்டு அவ்வொப்பத்திற்குச் சிறிதும் பிழையில்லாமல் நிறைவேற்றியதாகவும் பாரதக் கதை கூறுகிறது. பதின்மூன்றாம் வருடத்தின் கடைசி நாளும் கழிந்து பதினான்காம் வருடத் தொடக்க நாளில் பாண்டவர்கள் என்ன நிலையில் இருந்திருப்பார்கள்? பத்மா வீட்டில் தான் யாரென்பதைப் பத்மா முன்னிலையிலும் பரமானந்தர் முன்னிலையிலும் ஒப்புக் கொண்டு, அதன் மூலம் தன் சுய உருவத்தைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீதர் அன்று அந்த நிலையில் தான் இருந்தான். ஆள் மாறாட்ட நாடகத்தால் ஏற்பட்ட மனப்பாரமும், எங்கே பிடிபட்டு விடுகிறோமோ என்ற அச்சமும் முற்றாக ஒழிந்து விட, ஒரே ஆனந்தத்தில் மூழ்கிக் கிடந்தான் அவன்.

அதிகாலையில் நித்திரை நீங்கி விழித்துக் கொண்டதும் சின்ன வயதில் தான் கேட்ட பாண்டவர்களின் அஞ்ஞாதவாசக் கதைதான் அவனுக்கு ஞாபகம் வந்தது. “ஒரு வருட காலம் தருமர் உள்ளிட்ட எல்லாப் பாண்டவர்களும் பொய்ப் பெயரும் பொய்யுருவும் தாங்கி விராட தேசத்து மன்னனை ஏமாற்றி வந்தது போலத் தானே, நானும் பத்மாவையும் பரமானந்தரையும் ஏமாற்றி வந்தேன்? சிவநேசர் மகன் ஸ்ரீதர் என்பதை சின்னப்பா மகன் ஸ்ரீதர் என்ற பெயரை மாற்றியதோடு மட்டும் நான் நிற்கவில்லை. என்னிடமருந்த உயர் தர ஆடைகளை உடுத்தாது, நடுத்தரமான ஆடைகளை உடுத்தி, ஒரு வகை மாறு வேடமும் பூண்டேன். ஏன், நீண்ட காலமாக நான் வழக்கமாக அணியும் என் பாட்டனார் சர் நமசிவாயத்தின் வைர மோதிரத்தைக் கூட அணியாது விட்டேன். அத்துடன் கொலீஜ் ரோட்டுக்குப் போகும்போது எனது ‘பிளிமத்’ காரை வேறொரு வீதியில் நிறுத்தி விட்டும் கால் நடையாகப் பத்மா வீட்டுக்குப் போனேன்.
இன்னும் பல்கலைக் கழக்த்திலும் எனது கார் பத்மாவின் கன்ணில் பட்டு விடாதிருக்க வேண்டுமென்பதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எல்லாமெடுத்துக் கொண்டேன். அப்பப்பா, இனி மேல் இந்தத் தொல்லைகள் இல்லை. என் சுயரூபத்தில், சிவநேசர் மகன் ஸ்ரீதர் உருவத்தில், நான் என் பத்மாவுடன் பழகப் போகிறேன்!” என்று மகிழ்ச்சிக் கடலில் நீந்தினான் ஸ்ரீதர்.
அன்று காதலரிருவரும் பல்கலைக் கழகத்தில் தமது “வழமையான இடத்”தில் சந்தித்த போது அவர்கள் தம்மிடமிருந்த, மிகவும் அழகான உடைகளை அணிந்து வெகு அலங்காரமாக “மேக்கப்” செய்து வந்திருந்தார்கள்.
ஸ்ரீதர் நீல நிறக் காற்சட்டையும் “பிக்காசோ” சித்திரங்களிட்ட ஒரு புஷ் ஷேர்ட்டும் அணிந்திருந்தான். கண்களை அழகிய பிரேமுடன் கூடிய கறுப்புக் கண்ணாடி அலங்கரித்தது. கையில் பதினைந்து வைரக்கற்கள் பதித்த பாட்டனாரின் பழைய மோஸ்தர் தங்க மோதிரம், கால்களில் நவீன முறையில் அமைந்த செவ்வர்ண வெல்வெட் பாதரட்சைகள். தனது பிளிமத் காரைத் தானே ஓட்டி வந்து, நூல் நிலையத்துக்குச் சற்றுத் தொலைவில் இருந்த பெரிய நிழல் வாடி மரத்தின் கீழ் விட்டிருந்தான் அவன். குளித்து மூழ்கித் தலைக்கு வாசப் பசையிட்டுருந்த அவனது “ஓடிக் கொலோன்” நறுமணத்துடன் கூடிய வழுவழுப்பான மேனியைப் போலவே, அவனது பிளிமத் காரும் நன்கு கழுவி மினுக்கி விடப்பட்டிருந்தது. வேலைக்காரச் சுப்பையாவும் டிரைவர் சங்கரனும் அவன் முதல் நாளிரவு படுக்கைக்குச் செல்லுமுன் இட்டிருந்த கட்டளையை சரியாக நிறைவேற்றியிருந்தார்கள். காலையில் பூவைப் போன்ற புனிதத்தோடு பளபளப்பாகக் காணப்பட்ட காரைப் பார்த்ததும் ஸ்ரீதருக்குச் சொல்லொணா மகிழ்ச்சி. இருவருக்கும் ஐந்து ரூபா ‘டிப் ‘ கொடுத்ததோடு, டிரைவருக்கு முழு நாள் லீவும் கொடுத்து விட்டான். பத்மாவை ஏற்றிக் கொண்டு உல்லாசமாக எங்காவது போய் வர வேண்டுமென்பது அவனது திட்டம். காதலியோடு காரில் போகும்பொழுது அவர்களது தனிமைக்கு இடைஞ்சலாயிருக்குமென்பது தான் அவனுக்கு லீவுக் கொடுக்கக் காரணம்.
ஸ்ரீதரைப் போலவே “வழமையான இடத்”துக்கு வரும் போது, பத்மாவும் ஒரு திட்டத்தைத் தீட்டி வந்திருந்தாள். “எஸ்கிமோ ஐஸ்கிறீம் பார்லரு’க்குப் போய் ஐஸ்கிறீம் அருந்த வேண்டுமென்பதே அது. நாவுக்கு ருசியான ஐஸ்கிறீம் உண்ணும் ஆசையில் மட்டும் அவள் இத்திட்டத்தை வகுத்திருந்தாள் என்று கூற முடியாது. தனிமையான இடத்தில் தன் காதலனுடன் சேர்ந்திருக்கும் ஆசையும், அவனுடைய காதல் மழலையைக் கேட்டு மகிழ வேண்டுமென்ற எண்ணமுமே அவளை இத்திட்டத்தை வகுக்கத் தூண்டின.
பத்மா அன்று மணிந்திருந்த சேலையும் சோளியும் அவளை ஸ்ரீதருக்கேற்ற ஜோடியாகவே காட்டின. அன்று காலை கொழும்பு நகரிலேயே மிகவும் அழகாக உடை அணிந்திருந்த நாகரிக யுவதி யார் என்று ஒரு போட்டி வைப்பதற்காக, நடுவர் சிலர் புறப்பட்டிருந்தால், அவர்கள் நிச்சயம் பல்கலைக்கழகத்து நூல் நிலையத்தை அடுத்திருந்த நடை சாலையில் தன் காதலன் ஸ்ரீதருடன் கொஞ்சு மொழி பேசிக் கொண்டிருந்த பத்மாவையும் அப்போட்டியில் பங்கு பற்றத் தகுதி பெற்றவளாகத் தெரிந்தெடுத்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆனால் அவர்களின் நல்ல காலம், அன்று அவ்விதமான போட்டி எதுவும் இல்லாததால் பத்மா அவ்வாறு தெரியப்படவில்லை. அதனால் காதலர்கள் தமக்குள் தனித்துப் பேசி மகிழ்வதற்கும் எவ்வித பங்கமும் ஏற்படவில்லை!
பத்மா வெண்ணீலப் பட்டில் வெள்ளிப் பொட்டுகளிட்ட ஒரு பட்டுச் சேலையை அணிந்து அதற்கேற்ற வெண் சரிகைக் கரையிட்ட வெண்ணீலச் சோளி ஒன்றையும் தரித்திருந்தாள். தொளதொளவென்று பின்னி விடப்பட்ட கூந்தலை ஒரேயொரு சிவந்த ‘கார்னேஷன்’ மலர் அலங்கரித்தது. கைகளில் கலகலவென்று கூத்திட்ட பல வர்ணக் கண்ணாடி வளையல்கள். காதில் நவீன முறையில் அமைந்திருந்த காதணிகள். கால்களில் வெள்ளி வர்ணப் பாதரட்சைகள். உன்மையில் அன்று பத்மா சாதாரணப் பெண்ணாகத் தோன்றவில்லை. தேவ மாது போல் தோன்றினான். ஆனால் அவள் அணிந்திருந்த எல்லாவற்றிலும் அவளுக்கு அழகூட்டியது அவள் முகத்தில் அவள் என்றும் அணிந்திருந்த அவளது புன்னகையே. கன்னத்தைக் குழி விழச் செய்த அவளது புன்னகையும், ‘ஐ’ பென்சிலின் உதவியால் காதளவு நீண்ட அவளது புருவங்களும், லிப்ஸ்டிக்கால் செம்மையோட்டப்பட்டு சிறிய ரோஜா மொட்டுப் போல் விளங்கிய அவளது கனிந்த அதரங்களும் அவளது முகத்தின் கவர்ச்சியை மிகவும் அதிகரித்தன. ஸ்ரீதரையும் பத்மாவையும் அப்போது பார்த்தவர்கள் அவர்களைப் போன்றபொருத்தமான ஜோடி இவ்வுலகில் இல்லையென்றே கூறியிருப்பார்கள்.
பத்மாவைக் கண்டதும் ஸ்ரீதர் “பத்மா எனது கடிதம் கிடைத்ததா?” என்று கேட்டான் ஆவலுடன்.
“கிடைத்தது. இதோ…” என்று கூறிக் கொண்டே தனது “ஹாண்ட் பாக்”கைத் திறந்து அங்கிருந்த ஸ்ரீதரின் கடிதத்தை வெளியே எடுத்தாள் பத்மா.
“அப்பா கடிதங்கள் இரண்டையும் மிகவும் இரசித்தார். நல்ல வேளை, எனக்கெழுதிய கடிதத்தில் கூட கிளியே, குயிலே என்ற காதல் மொழிகளை அள்ளித் தெளிக்காமல் நாகரிகமாக எழுதியிருந்தீர்கள். மாமாவுக்கு மருமகனை நிரம்பப் பிடித்து விட்டது” என்றாள் பத்மா சிரித்த முகத்துடன்.
“அப்படியா! அப்படி மாமா மெச்சும்படி நான் என்ன எழுதியிருந்தேன்? கடிதத்தில் எந்தப் பகுதி அவருக்குப் பிடித்தது” என்று கேட்டான் ஸ்ரீதர்.
“இந்தப் பகுதி” என்று கூறிக் கொண்டே பத்மா தன்னிடமிருந்த கடிதத்தை எடுத்து வாசிக்கலானாள்.
“நான் பொய்யன் தான். ஆனால் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் மாமன்னன் துஷ்யந்தன் கூடப் பொய் சொல்லியிருக்கிறான். நான் மன்னன் என்பதை அறிந்தால் வன மங்கை சகுந்தலை அதிக மரியாதை செய்து, தன்னை விட்டு நீங்கி விடுவாள் என்ற பயந்த காளிதாசனின் கதாநாயகன் தான் ஒரு சாதாரண அரச ஊழியன் எனப் பொய் சொன்னான். நான் சொன்ன பொய்யும் அத்தகையதே…” என்று வாசித்து வந்த பத்மா தன்னைப் பற்றி நேரடியாக எழுதப்பட்ட இடம் வந்ததும் நாணத்தால் முகம் சிவந்து மேலே வாசிக்க முடியாது நிறுத்திவிட்டாள்.
ஸ்ரீதர் அவள் கையிலிருந்த கடிதத்தைத் தானெடுத்து வாசிக்கலானான்:
“பத்மாவை என் வாழ்க்கைத் துணையாகப் பெற வேண்டுமென்ற ஆசையால் தான் நான் பொய் சொன்னேன். என்னுடன் பழக அவள் அஞ்சி விடுவாளோ என்று நான் பயந்ததே எனது பொய்க்குக் காரணம்…”
பத்மா, “உங்கள் மாமா இந்தப் பகுதியைத்தான் மிகவும் இரசித்தார். “என்ன அருமையான எடுத்துக்காட்டு! துஷ்யந்தன் செய்ததைத்தானே நானும் செய்தேன்” என்ற பேச்சுக்கு நாங்கள் என்ன எதிர்ப் பேச்சுக் கூற முடியும்?” என்று பல தடவை கூறிவிட்டார் அவர். இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? அப்பாவும் துஷ்யந்தன் வேஷம் போட்டு நடித்திருக்கிறாராம் சின்ன வயதில்” என்றாள்.
“என்ன, மாமா துஷ்யந்தனாக நடித்தாரா? அப்படியானால் சகுந்தலை யார்? உனக்குத் தெரியாம்லே உன்னைச் சகுந்தலையாக்கி நான் ஆடிய நாடகம் போன்ற ஒரு நாடகமா? அல்லது மேடை நாடகமா? ஒரு வேளை நான் உன்னிடம் பொய் சொன்னது போல் அவரும் மாமியிடம் பொய்கள் சொல்லி இருப்பாரோ, என்னவோ?” என்றான் ஸ்ரீதர்.
பத்மா சிணுங்கிக் கொண்டு, “எனக்கு அது தெரியாது. வாருங்கள், ஐஸ்கிறீம் பார்லருக்குப் போவோம்” என்றாள் ஆவலுடன். அன்று தன் முன் இருந்த முழு நேரத்தையும் ஒரு நிமிஷம் கூட வீணாகாமல் ஸ்ரீதருடன் தனியே இன்பமாகக் கழிக்க வேண்டுமென்பது அவள் ஆசை.
இப்படி நடைசாலையில் அர்த்தமில்லமல் பேசிக் கொண்டே நின்றால் இன்பப் பொழுதைத் தொடங்குவது எப்படி? — இந்த எண்ணம் தான் பத்மாவை அவ்வாறு அவசரப்படுத்தத் தூண்டியது.
தான் துஷ்யந்தனை எடுத்துக்காட்டாகக் கூறியதற்கு இவ்வளவு பாராட்டா என்று அதிசயித்த ஸ்ரீதர், அப்பாராட்டுக்கு உண்மையில் உரியவன் டாக்டர் சுரேஷ் அல்லவா என்று எண்ணினான். அவனுக்குத்தான் எல்லாம் தெரியும். வைத்தியம், அரசியல், இலக்கியம், உலகியல், உளவியல் – அவனுக்குத் தெரியாதது ஒன்றுமே இல்லை! “அவன் தானே துஷ்யந்தனின் கதையைக் கூறி எனது குற்ற உணர்ச்சியைப் பெரிதும் குறைத்தவன்?” என்று நினைத்த ஸ்ரீதர் அவன் சீமைக்குப் போக இருப்பதை எண்ணிக் கவலையடைந்தான்.
“அவன் போய் விட்டால் சந்தர்ப்பங்களுக்குரிய ஆலோசனைகள் கூற எனக்கு யார் இருக்கிறார்கள். அர்ச்சுனனுக்குக் கண்ணன் இருந்தது போல பக்கத்திலிருந்து ஆலோசனை சொல்ல அவனில்லாமல் நான் என்ன செய்வேன்?” என்று பயந்தான் ஸ்ரீதர். உண்மையில் ஸ்ரீதர் தன்னால் இழக்க முடியாத இருவரே இவ்வுலகில் இருப்பதாகக் கருதினால், ஒன்று அவனது காதலி பத்மா, மற்றது நண்பன் சுரேஷ்.
ஆனால் அவன் சுரேஷைப் பற்றிய சிந்தனைகளில் சிக்கிக் கொண்டிருக்கப் பத்மா விட வில்லை. நடைசாலையையும், பல்கலைக் கழக வளவையும் சுற்று முற்றும் பார்த்து விட்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை யாரும் தென்படாது போகவே, துணிவோடு தனது தளிர்க்கரங்களால் அவனது கரங்களைப் பற்றிக் கொண்டு “வாருங்களேன் போவோம்” என்று மீண்டும் சிணுங்கினாள் அவள்.
ஸ்ரீதர் சிரித்துக் கொண்டே நிழல்வாடியின் கீழ் நின்ற காரை நோக்கிப் போனான். “இன்று டாக்சி வேண்டியதில்லை. எனது சொந்தக் காரிலேயே ஊர் சுற்றுவோம்” என்றான். பத்மாவும் பின் தொடர்ந்து ஏறிக் கொண்டாள். சாதாரணமாக ஒரு மாணவனின் காரில் ஒரு மாணவி பல்கலைக்கழக வளவிலேயே ஏறிக் கொண்டு செல்வதற்குச் சிறிது கூச்சமடையவே செய்வாளென்றாலும், அந்த வேளையில் பல்கலைக்கழகத்தின் அப்பகுதியில் மாணவர் நடமாட்டம் சற்றும் இல்லாதிருந்தது பத்மாவுக்குத் துணையாயிருந்தது.
இருந்த போதிலும் அப்பொழுது கூட இரு நீண்ட பெண் விழிகள் காதலர் இருவரையும் அவர்களறியாது கவனித்துக் கொண்டு தான் இருந்தன. அவை தங்கமணியின் விழிகள். மை தீட்டிய அவளது இரு விழிகளும் அவளது புருவங்களுக்கு இடையே நெற்றியில்தீட்டப்பட்டிருந்த அவளது ஆச்சரியக்குறி போன்ற திலகத்தின் தாக்கத்தாலோ என்னவோ ஒரே ஆச்சரிய உணர்ச்சியையே பிரதிபலித்துக்கொண்டிருந்தன. “என்ன இது? நேற்று முன் தினம் தான் பத்மா தனது கர்வம் அடங்கிக் கண்ணீர் விட்டாள். இன்று மீண்டும் என்ன மிடுக்கு! சினிமாகாரி போல் சிங்காரித்துக் கொண்டு ஸ்ரீதருடன் காரில் பவனி, தலையைப் பார்! கெட்ட கேட்டுக்குக் கார்னேஷன் பூ வேறு” என்று கூறிக் கொண்ட அவளது மார்பு ஒரு பெருமூச்சால், கடலலை போல் ஏறி இறங்கியது!
பல்கலைக்கழகத்து வாயிலுக்குச் சமீபமாக இருந்த இரசாயன ஆய்வு கூடத்தில் ஜன்னலுக்குச் சமீபமாக நின்று கொண்டு ஒரு திரவ பரிசோதனையை நடத்திக் கொண்டிருந்த தங்கமணி காரொன்று செல்வதன் ஓசையைக் கேட்டு நிமிர்ந்து நோக்கிய பொழுதுதான் பத்மாவும் ஸ்ரீதரும் காரில் செல்வதைப் பார்த்தாள். சிறிது நேரம் தனது மேலிதழைக் கீழ்ப் பற்களால் கடித்துக் கொண்டு, ஏதோ யோசித்த அவள் திடீரென மனதை மாற்றிக் கொண்டு மீண்டும் தனது பரிசோதனையில் ஈடுபட்டாள். இருந்த போதிலும் சற்று நேரத்தில் அங்கே வந்த அவளது தோழி கலாவிடம், “பார்த்தாயா.. பல்கலைக்கழகத்துப் புதிய ஜோடியை. ஸ்ரீதருடன் பத்மா காரில் போகிறாள். இவர்கள் இங்கே வருவது படிக்கவல்ல – காதற் கலை பயில. இவர்களின் போக்கு, தமிழர்களுக்கே அவமானம். இந்தக் காலத்தில் வெள்ளைக்காரர்கூட எவ்வளவோ மேல்” என்றாள்.
கலா அதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ பதிலளிக்கவில்லை. ஏனென்றால் அவளுக்கும் பல்கலைக்கழகத்தில் ஒரு காதலன் உருவாகிக் கொண்டிருந்தாள். பத்மா போலவே அவளுக்கும் காதலன் ஒருவன் இல்லாவிட்டால், நிச்சயம் தங்கமணியின் கருத்து அவளுக்குச் சரியாகவே பட்டிருக்கும். இந்த உலகில் பெரும்பாலோரின் பொதுக் கருத்துகள் கூட அவர்கள் அறியாமலே அவர்களது சொந்த விவகாரங்களின் அடிப்படையிலேயேதான் உருவாகின்றன.
கலா பதிலொன்றும் கூறாமல் வெறுமனே புன்னகை செய்து விட்டுச் செல்லவே, “இதுவும் ஒரு கழிசடைதான் போல” என்று தனக்குள் நினைத்துக் கொண்டாள் தங்கமணி.
பத்மா காரில் ஏறிக் கொண்டதும் ஸ்ரீதரிடம் “இப்போது எங்கே போகிறோம் ஸ்ரீதர்? எஸ்கிமோவுக்குத் தானே?” என்றான்.
“இல்லை நண்பர் இருவரைப் பார்க்க, தெகிவளைக்கு. அவர்களும் என்னைப் போலவே காதலர்கள். போய் வருவோம்?” என்றான் ஸ்ரீதர்.
காதலர் என்று சொன்னதும் “ஆம்” என்ற ஆவலுடன் பதிலளித்தாள் பத்மா. காதல் வயப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் உலகமே காதல்மயமாகத் தோன்றுகிறது. காதலைப் போல் விரும்பத்தக்கது வேறு எதுவுமே இல்லை என்று எண்ணும் அவர்களை அந்த வார்த்தை வசீகரிப்பது போல வேறெவ் வார்த்தையும் வசீகரிப்பதில்லை.
கார் புல்லர்ஸ் வீதி வழியாகச் சென்று காலி வீதியை அடைந்த பொழுது ஸ்ரீதருக்கு “பத்மாவுக்கு ஐஸ்கிறீமில் மிகவும் ஆசை” என்பது ஞாபகத்துக்கு வர, ஓர் ஐஸ்கிறீம் பார்லருக்கு முன்னால் காரை நிறுத்தி அவளுக்கு ஓர் ஐஸ்கிறீமையும் தனக்கு ஒரு பாற் கலவை அல்லது ‘மில்க் ஷேக்’கையும் கொண்டு வரும்படி உத்தரவிட்டான். காதலர் இருவரும் அவற்றை அருந்தி முடித்ததும் கார் காலி வீதியின் அகன்ற தளத்திலே தெகிவளையை நோக்கிப் பறந்தது.
பத்மா, பட்டப்பகல் நேரமாயிருந்ததால் ஸ்ரீதருடன் அதிகம் நெருங்கி உட்காராமல் அவனோடு தன்னுடல் பட்டும் படாமலே உட்கார்ந்திருந்தாள் என்றாலும் அவளது வலது கரமோ அவனது தோள் மீது நீண்டுக் கிடந்தது.; ஸ்ரீதர் தன் காதலன் என்ற உரிமையை ஸ்தாபிப்பது போலிருந்தது அவளது செயல். உண்மையில் அவ்வாறு அவனது தோளிலே தனது கரத்தை வைத்திருந்தது அவளுக்கு வெது வெதுப்பான உடலின்பத்தை மட்டும் தர வில்லை — உள்ளத்திற்கும் ஒரு பேராசை நிறைவேறுவது போன்ற இதமும் திருப்தியும் ஏற்பட்டன. சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவள் கண்ட ஒரு பூங்கனவு அப்பொழுது நிறைவேறிக் கொண்டிருந்ததே அவளுக்கு அவ்வித மனநிறைவு ஏற்படுவதற்குக் காரணம்.
சுமார் பதினாறு பதினைந்து வயதிலிருந்தே பத்மா கண்ட இரகசியக் கனவுகளிலொன்று தனக்குப் பிடித்த மணவாளனுடன் அழகான காரொன்றில் அதன் முன்னாசனத்தில் ஜோடியாக அமர்ந்து, அவனோடு காதல் மொழிகள் பேசி இன்பக் குறும்புகள் செய்து கொண்டு போக வேண்டுமென்பதாகும். இப்படிப்பட்ட காதல் ஜோடிகள் பலரை அவள் கொழும்பில் பல இடங்களில் கண்டிருக்கிறாள். ஏன் அவள் வசித்த கொலீஜ் ரோட் 48ம் இலக்கத் தோட்டத்தைக் கூட இது போன்ற காதல் ஜோடிகள் பல தடவைகள் கடந்து சென்றிருக்கிறார்கள். அவர்களைக் காணும் போது அவளை அறியாம்லே அவள் உள்ளம் துள்ளூம்; வாய் பாட்டிசைக்கும்.
அவளது இதயத்தில் புகுந்திருந்த மற்றொரு கனவு தன் காதலன் ஏறிச் செல்லும் ஒரு மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரின் பின்னால் அவனை இறுகப் பற்றிக் கொண்டு தானும் அவனோடு சவாரி போக வேண்டுமென்பதாகும். பல பறங்கிப் பெண்களும் அவளது காதலர்களும் இவ்வாறு போவதை அவள் பார்த்திருக்கிறாள். அவர்களைப் பார்க்கும் போதெல்லாம் இவர்களல்லவோ வாழ்க்கையின் இனிமையை அனுபவிக்கப் பிறந்தவர்கள்” என்று அவளுக்குத் தோன்றுவதுண்டு.
அவள் கண்ட இன்னொரு கனவு, தான் நீச்சலுடையில் சமுத்திரக் கரையிலே தன் காதலனோடு இன்பப் பேச்சுகள் பேசிக் கொண்டு அமர்ந்திருக்க வேண்டும் என்பதாகும். சினிமாப் படமொன்றைப் பார்க்கும் போதே அவளுக்கு இந்த நினைவு முதலில் உண்டாயிற்று.
இருந்தாலும் அதுவும் ஒரு தாங்கொணாத ஆசையாக அவள் மனதில் குடி கொண்டது. உள்ளக் குகையில் ஒரு மூலையில் அந்த ஆசையும் சுருண்டு கிடந்தது.
ஸ்ரீதருடன் காரில் சென்று கொண்டிருந்த பத்மாவின் மனத்திரையில் இவ்வாசைகெளெல்லாம் புத்துருக்கொண்டு தோன்றின. கார் ஆசை நிறைவேறிக் கொண்டிருந்தது. ஆனால் ஸ்கூட்டர் ஆசை? காரில் இருந்த போதிலும் திடீரென அவள் மனம் இனந் தெரியாத ஒரு காதலனுடன் ஸ்கூட்டரின் பின்னால் சென்றது. போதாதற்கு வீதியில் அவர்களது காருக்கு முன்னாலே ஒரு வாலிப ஜோடி ஸ்கூட்டரில் கண்ணுக்கு எதிரே போய்க் கொண்டிருந்தது. நாகரிகமான “ஷிப்ட்” என்னும் புது மோஸ்தர் கவுன் அணிந்த ஒரு பெண் அவளது பொன்னிறக் கூந்தல் காரிலே பறக்க உல்லாசமாகத் தனது காதலனை இறுகக் கட்டிக் கொண்டு ஸ்கூட்டரின் பின்னால் போய்க் கொண்டிருந்தாள்.
ஸ்கூட்டரின் நினைவு வந்ததும், கூடவே கமலநாதனின் நினவும் சேர்ந்து வந்தது. அதை மறக்க விரும்பிய பத்மா ஸ்ரீதரின் தோள்களைத் தடவி அவனுக்கு ஸ்பரிச சுகம் கொடுத்ததோடு, தானும் அதை அனுபவிக்கலானாள். ஆனால் கமலநாதனையோ அவனது அரும்பு மீசையையோ மறப்பது அவ்வளவு இலகுவாக இருக்கவில்லை. ஆகவே ஸ்ரீதருடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் அவள். பேச்சில் சுவையேறியதும் மற்ற நினைவுகள் மறந்து போகுமல்லவா?
“ஸ்ரீதர்! நாங்கள் தேடிச் செல்லும் உங்கள் நண்பரின் பெயரென்ன?” என்று கேட்டாள் பத்மா.
“மிஸ்டர் டி.எம். ராஜ்” என்றான் ஸ்ரீதர். அதன் பின் ஸ்ரீதர் பத்மாவிடம் டாக்டர் சுரேஷைப் பற்றி விவரித்தான்.
“எனதுயிருக்கு உயிரான ஒரே நண்பன் சுரேஷ் தான். அவன் இன்னும் இரண்டு வாரத்தில் இங்கிலாந்து போகிறான். அதற்கு முன்னர் உன்னை நான் அவனுக்குக் கட்டாயம் அறிமுகம் செய்து வைக்க வேண்டும்.”
“அதற்கென்ன? நானும் உங்கள் நண்பரைக் காணவே விரும்புகிறென்.”
“அவன் இங்கிலாந்து புறப்பட்டதும், நான் யாழ்ப்பாணம் போவேன். எங்கள் திருமண விஷயத்தைக் கவனிக்க வேண்டுமல்லவா?” என்றான் ஸ்ரீதர்.
பத்மாவுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி. தன் கரங்களால் அவன் தோள்களை இறுக அனைத்துக் கொண்டாள்.
ஸ்ரீதர் என்னதான் காதலனென்றாலும், காரை ஓட்டிக் கொண்டு காதல் புரிவது ஆபத்து என்பதை அறியாதவனல்லன். எனவே பத்மா தன் காதல் நாடகத்தை மேலும் தொடர்வதற்கு அவன் இடமளிக்கவில்லை. பத்மாவுக்குக் கோபம். என்றாலும் என்ன செய்வது? வேறு வழியின்றி ஜன்னலண்டை சாய்ந்து வீதிக் காட்சிகளை இரசிக்க முயன்றாள்.
ஓடும் காரின் வேகத்தினால் காற்று முகத்தின் எதிர்ப்புறமாக வீசியது. அது முகத்தின் இரத்த ஓட்டத்தைத் துரிதப் படுத்தி, சரும நரம்புகளுக்கு ஓர் இன்ப உணர்ச்சியை நல்கியது. தலை மயிர் பஞ்சு போல் மிதந்து, பின்னால் பறந்தது. நித்திரை செய்வது போல் பாசாங்கு செய்தாள் அவள். ஸ்ரீதர் “பத்மா!” என்று இரண்டு மூன்று தடவை கூப்பிட்டும், அவள் பதிலளிக்க வில்லை.
கார் தெகிவளையில் ஒரு சந்தியில் திரும்பி அங்கிருந்த மிருகக்காட்சிசாலையின் வாசலில் திடீரென ‘பிரேக்’ போட்டு அவளை அதிர வைத்த பொழுது தான் பத்மா கண் விழித்தாள். மிருகக்காட்சிசாலையின் வாசலில் பெரிய எழுத்துகளில் “மிருகக்காட்சிசாலை” என்று எழுதப்பட்டிருந்தது.
“என்ன? மிஸ்டர் டி. எம். ராஜைக் காணப் புறப்பட்டு, இங்கு வந்து நிற்கிறீர்கள்?” என்றாள் பத்மா.
“இங்குதான் மிஸ்டர் ராஜ் இருக்கிறார்!”
“ஓகோ! இங்கு வேலை செய்பவரா அவர்?” என்றாள் பத்மா, பலவும் தெரிந்தவள் போல.
ஸ்ரீதர் பதிலெதுவும் பேசாமல் காரை வீதியின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, இரண்டு பிரவேசச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு பத்மாவுடன் காட்சி சாலையுள் நுழைந்தான். அங்கே குருவிகளூம் வரிக்குதிரைகளும் வரவேற்றன!
பத்மாவின் தோள்களைப் பற்றிக் கொண்டு உல்லாசமாக நடந்த ஸ்ரீதர் “முதலில் நான் சொன்ன காதலர்களைப் பார்த்துவிட்டு, பிறகு மிருகங்களையும் குருவிகளையும் பார்ப்போம்” என்றான்.
“ஆகட்டும் சுவாமி” என்று கொஞ்சலாய் பதிலளித்தாள் பத்மா. ஸ்ரீதர் தன்னைத் தொட்டு நடந்தது அவளுக்குப் புதிய உற்சாகத்தைத் தந்தது.
ஸ்ரீதர் பத்மாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டே நடந்தவன் வழியில் மர்க்கட வனத்தில் சிறிது தாமதித்தான். செங்குரங்கு, கருங்குரங்கு, ஆபிரிகக் குரங்கு, இந்தியக் குரங்கு, வாலில்லாக் குரங்கு, ஒரன்குட்டான், கொரில்லா என்று குரங்குகளில்தான் எத்தனை வகை!
மனிதர்களிலும் பார்க்கக் குழந்தைகளே அதிக கவர்ச்சியுள்ளனவாய் இருப்பது போலக் குரங்குகளிலும் அவற்றின் குட்டிகளே அதிக கவர்ச்சியுள்ளனவாய் இருந்தன. குரங்குகளில் மட்டுமென்ன, எல்லா மிருகங்களிலும் இதுவே நியதி போலும்! நாய், பூனை என்பவற்றில் கூட அவற்றின் குட்டிகள்தானே மிக அழுகுள்ளவையாய் இருக்கின்றன! மர்க்கட வனத்தில் ஏறாளமான குரங்குக் குட்டிகள் கூடுகளுள் தொங்கிப் பாய்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. பார்வையாளர்கள் பலர், முக்கியமாகக் குழந்தைகள், தாமும் கூட்டுக்கு வெளியே நின்று அவற்றோடு விளையாடிக் கொண்டிருந்தனர். ஆகச் சிறிய குழந்தைகள் புதுமை நிறந்த தனது கணகளை அதிக அகல விரித்து, அவற்றை ஆச்சரியத்துடன் பார்த்து நின்ற் காட்சியே காட்சி!
ஸ்ரீதர் பத்மாவிடம் திடீரென “அதோ நாங்கள் பார்க்க வந்த ஜோடி!” என்றான் அமைதியாக.
பத்மா அவன் சுட்டிய திசையை நோக்கினாள். அங்கே ஒரு பெரிய இரும்புக் கூட்டுள் ஒரு குரங்கு இன்னொரு குரங்குக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தது.
“பேனெடுக்கும் குரங்கு தான் டி.எம். ராஜ். பேனெடுக்கப்படும் குரங்கு அதன் காதலி டி.எம். ராணி!” என்றான் ஸ்ரீதர்.
“உங்களுக்கு எப்பொழுதும் பெயர் மாறாட்டம்தானே? சிவநேசர் சின்னப்பா ஆன மாதிரி” என்றாள் பத்மா குறும்பாக.
ஸ்ரீதர், “இந்த விஷயத்தில் நான் பொய் சொல்லவில்லை. உண்மைதான் சொன்னேன். ஆண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராஜ். பெண் குரங்கின் பெயர் தெகிவளை மர்க்கட ராணி. மர்க்கடமென்றால் குரங்கு. தெரிந்ததா மட்டிப் பெண்ணே?” என்றான்.
இதற்கிடையில் காதலன் குரங்கு அவர்களைப் பார்த்து விட்டது. காதலியின் தலைப் பேனொன்றை எடுத்து வாயிற் போட்டு மென்று கொண்டே அவர்களைப் பார்த்துப் பல்லை இளித்து மூக்கைச் சொறிந்தது குரங்கு!
“அந்தக் காதலன் போல எனக்கும் உனக்குப் பேன் பார்க்க ஆசை. உட்கார், பேன் பார்க்கிறேன்” என்றான் ஸ்ரீதர்.
அதற்குப் பத்மா சாதுரியமாக “ஓகோ, பேன் பார்ப்பதால் குரங்கு இரண்டு பிரச்சினைகளைத் தீர்க்கிறது. ஒன்று பெண் குரங்கின் பேன் தொல்லை தீருகிறது. அதே சமயம் ஆண் குரங்கின் வயிற்றுப் பசியும் தீர்கிறது. உங்களுக்கு இப்பொழுது வயிற்றுப் பசி அதிகமாயிருக்கிறதோ?” என்றாள் சிரித்துக் கொண்டு.
“உனக்குப் பேன் பார்த்தால் வயிற்றுப்பசி தீர்ந்தாற் போலத்தான். நீதான் உலகத்திலுள்ள ‘ஷம்பூ’ எல்லாவற்றையும் உபயோகித்துத் தலையை இப்படிச் சுத்தமாய் வைத்திருக்கிறாயே. பேன் எப்படிக் கிடைக்கும்” என்றான் ஸ்ரீதர்.
“அப்படியானால் பேனுள்ள பெண்ணொருத்தியைப் பாருங்களேன், போங்கள்” என்றாள் பத்மா.
இப்படியாக ஆரம்பித்த இன்பப் பேச்சுகள் தொடர்ந்து கொண்டேயிருந்தன. பல மணி நேரம் ஒய்யாரமாகச் சுற்றிக் கொண்டேயிருந்தார்கள்.
பறவை வனத்தில் ஒன்றுடன் ஒன்று கொஞ்சிக் குலாவிய பல வர்ணப் பறவைகளைப் பார்த்ததும் தாமும் அப்படியே கொஞ்ச வேண்டுமென்று காதலர் விரும்பினார்கள். ஆனால் சுற்றிலும் ஆணும் பெண்ணும் சிறுவரும் மொய்த்துக் கொண்டிருக்கும் இடத்தில் அவ்வாறு கொஞ்சிக் கொள்ள முடியுமா என்ன? ஆகவே கண்களால் பேசிக் கருத்தால் கொஞ்சினார்கள். செடி விளிம்புடன், ஓங்கி வளர்ந்த பொன்னிற மூங்கில் மரங்களைக் கரையில் கொண்டு விளங்கிய பச்சைப் படிகத் தெண்ணீர்க் குளத்தின் கரையில் நின்று, அலை வளையங்களின் நடுவே ஆடி அசைந்து சென்ற ஆஸ்திரேலிய அன்னங்களைப் பார்த்த போது ஸ்ரீதர் “பார்த்தாயா பத்மா, இவை தான் அன்னங்கள். நளன் தமயந்தியிடம் காதல் தூது விட்டது அன்னங்களைத்தான்” என்றான். தோகை விரித்துப் பசுந்தரையில் நடந்த மயில்களைக் கண்ட போது, “பார்த்தாயா பத்மா, எவ்வளவு ஒய்யாரம்! அவை போல பொற்காசுப் பொட்டமைந்த கரும்பச்சை வண்ண உடைகளைத் தயாரித்தணிய மானிட மங்கையரால் கூட முடியவில்லையே!” என்றான் ஸ்ரீதர். “ஏன் பெண்களைக் கூறுகிறீர்கள்?
மயில்களில் ஆண் தானே அழகான தோகையுடன் விளங்குகிறது! ஆகவே மனிதர்களிலும் ஆண்களல்லவா அவ்வாறு பொன்னும் நீலமும் பசுமையும் சேர்த்த வர்ண உடைகளை அணிய வேண்டும்?” என்றாள் பத்மா. இவ்வாறு இளங் காதலர்கள் ஒருவர் தோளை ஒருவர் தழுவிக் குழந்தைகள் போலவும் கவிஞர்கள் போலவும் உரையாடிக் கொண்டார்கள். இடையிடையே தனித்த இடங்களில் பூஞ்செடி மறைவுகளில் நிலத்தில் கிடந்து கற்களின் மீது கரங்களைக் கோத்து மெய் மறந்து உட்கார்ந்திருந்தார்கள். மிகவும் தனித்த இடங்களில் ஒருவரை ஒருவர் இறுக அணைத்து முத்தமிட்டுக் கொண்டார்கள். கூந்தல் ‘டானிஷ்’கின் இனிய சந்தன வாசம் வீசிய பத்மாவின் தலை மயிரைக் கையால் நீவி, அவளது பொன்னிற உச்சியைப் பல தடவை மோந்தான் ஸ்ரீதர். பத்மாவும் வாளா இருக்கவில்லை. ஸ்ரீதரின் கரங்களைத் தன் சின்னஞ்சிறு உதடுகளால் தொட்டு எச்சிற்படுத்தி வேடிக்கைகாக அதில் தன் “லிப்ஸ்டிக்”கின் செஞ்சாயத்தையும் பதிய வைத்தாள். பத்மா கண்களை மூடி உலகை மறந்த பொது அவள் பொன் முகத்தைத் தன் கையில் ஏந்தி, அவள் கண் மடலையும் இமைகளையும் புருவங்களையும் முத்தமிட்டான் ஸ்ரீதர். காதலின் இவ்வித சைகைகளோ ஏராளம். கற்பனைக்குத் தோன்றிய சகல காதற் சைகைகளையும் புதியன புதியனவாகச் செய்து மகிழ்ந்தார்கள் காதலர்கள்.
மிருக வனத்துக்குத் தாம் விஜயம் செய்த இந்த நாளைப் புகைப்படத்தில் நிரந்தரமாக்க வேண்டுமென்ற ஆசை ஸ்ரீதருக்கு ஏற்பட்டது.
ஆனால் கையிலே புகைப்படக் கருவி இல்லை. இருந்தாலும் மிருக வனத்தின் நடுவிலேயிருந்த சிற்றுண்டிச்சாலியில் எப்பொழுதோ புகைப்படக் கருவிகள் விற்பனைக்கிருந்தமை அவனுக்கு ஞாபகம் வந்தது. அவை அவனுக்கேற்ற ரகமானவை அல்ல என்றாலும், அப்போதைய தேவைக்கு உதவக் கூடியவைதான். எனவே பத்மாவுடன் அங்கே சென்று சில கேக்குகளை அருந்திக் குளிர்பானங்களும்பருகிவிட்டு, ரூபா இருநூறு செலுத்தி ஒரு புகைப்படக் கருவியையும் புகைப்படச் சுருள்கள் சிலவற்றையும் வாங்கிக் கொண்டான். அன்று
பத்மா பணத்தை வீணாக்க வேண்டாமென்று ஸ்ரீதருக்குப் புத்தி சொல்லவில்லை. எவ்வளவு பணத்தைச் செலவழித்தாலும் வறியவராக முடியாத பெரும் பணக்காரர் சிவநேசரின் ஏகபுத்திரன் ஸ்ரீதர் என்பது இப்பொழுது அவளுக்குத் தெரியுமல்லவா?
பத்மாவை யானை மீதேற்றி வலம் வரச் செய்து படம் பிடித்தான் ஸ்ரீதர். முதலில் அவள் பயந்து கீச்சுக் குரலில் கூச்சலிட்ட போதிலும் சிறிது நேரத்தில் பயம் தெளிந்து விட, யானையின் முதுகில் கையை ஊன்றி இராணி போல் வீற்றிருந்தாள் அவள். இன்னொரு படத்தில் அவளைத் தன் முன்னே வைத்து தான் பின்னிருந்து ஜோடியாகப் படம் பிடித்துக் கொண்டான் ஸ்ரீதர். பார்வையாளர் ஒருவர் அப்படத்தை எடுத்து உதவியானார். இவை தவிர சிங்கக் கூட்டின் முன்னால் ஒரு படம், மர்க்கட வனத்தில் டி. எம். ராஜ் – டி. எம். ராணி கூட்டின் முன்னொரு படம், அன்னம் தவழ்ந்த குளத்தின் முன்னொரு படம், புலிக் கூட்டின் முன்னொரு படம், பறவை வனத்தில் ஒரு படம், ஆடும் மயிலுடன் கூட ஒரு படம், பூம்பந்தரொன்றின் கீழ் ஒரு படம், நிலத்தில் உட்கார்ந்து ஒரு படம், குளக்கரையில் இருந்து சிமெந்து ஆசனத்தில் நீளச் சாய்ந்த ஒய்யார நிலையில் ஒரு படம் — இப்படி இரண்டு படச் சுருளகளைப் பத்மாவின் படங்களால் நிறைத்து விட்டான் அவன்.
இவை எல்லாம் ஒருவாறு முடியப் பிற்பகல் இரண்டு மணியாகி விட்டது; சிற்றுண்டிகளையும் குளிர்பானங்களையும் அருந்தியதால் வயிற்றின் நேர அறிவிப்பு கிட்டாவிட்டாலும், கையில் கட்டியிருந்த கடிகாரங்கள் நேரத்தைக் காட்டவே செய்தன.
பத்மா பதைபதைத்து “ஸ்ரீதர்! நான் வீட்டுக்குப் போக வேண்டாமா? அப்பா ஏதாவது நினைத்துக் கொள்ளூவார். வழக்கத்தில் இதற்கு முன்னரே வீட்டுக்குப் போய் விடுவேன். இன்று போய்ச் சேர நாலு மணியாகிவிடும். இன்னும் தாமதித்தால் வீடு போக இருட்டி விடும். அப்பா பயந்து போய் விடுவார். அத்தோடு வாயாடி விமலாவும் லோகாவும் படிக்க வருங்கள். வாய்த் துடுக்கான குழந்தைகள் என்னைப் பற்றித் தங்கள் வீட்டுக்குப் போய்த் தங்கள் தாயாரிடம் ஏதாவது உளறி வைக்குங்கள்!” என்றாள் அச்சத்துடன்.
ஸ்ரீதர் அதற்கு மேலும் அவளைத் தாமதிக்க வைக்க விரும்ப வில்லை. “சரி” என்று சொல்லிப் புறப்பட்டான். கார் கர்லி வீதி வழியாகக் கொட்டாஞ்சேனையை நோக்கி பறந்தது!
வழியில் தங்கள் அடுத்த சந்திப்பைப் பற்றித் திட்டமிட்டான் ஸ்ரீதர். “நாளை கழித்து மறுநாள் ‘வழமையான இடத்’தில் காலை ஒன்பது மணிக்குச் சந்திப்போம். நான் ஒரு சைத்திரிகன் என்பது உனக்குத் தெரியுமல்லவா? உன்னைக் கல்கிசைக் கடற்கரையில் நீலத் திரைக்கடலின் பின்னணியில் வன்ணப்படமாக எழுதப் போகிறேன்” என்றான் ஸ்ரீதர்.
பத்மாவுக்கு ஒரே ஆனந்தம். அவன் தோள்களைத் தன் கரங்களால் அழுத்தமாகப் பற்றித் தன் பலங் கொண்ட மட்டும் பிசைந்தாள் அவள்.
“சரி வருகிறேன்” என்றாள் புன்னைகையுடன்.
கார் கொட்டாஞ்சேனைப் பாதையில் ஆர்மர் வீதியை அடைந்தது. அதற்கு மேலும் காரைக் கொண்டு செல்ல ஸ்ரீதர் விரும்பவில்லை.
பத்மாவும் அவ்வளவு பென்னாம்பெரிய காரில் வீட்டில் நேரே சென்றிறங்க விரும்ப வில்லை. அப்போதிருந்த நிலையில் தந்தை பரமானந்தர் அதை ஆட்சேபிக்க மாட்டார் என்றாலும், அக்கப்பக்கத்து வீட்டுக்காரர்கள் – அன்னம்மா போன்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற அச்சமே அவளை அவ்வாறு செய்யாது தடுத்தது. எனவே ஸ்ரீதர் பத்மாவை ஆர்மர் வீதியில் இறக்கி விட, அவள் கால் நடையாகவே கொலீஜ் ரோட்டை நோக்கி நடந்தாள். ஸ்ரீதரோ காரை வீதி ஓரத்தில் நிறுத்தி விட்டு, பத்மாவின் உருவம் கண் பார்வைக்கு மறையும் வரை அவள் சென்ற திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் காரிலிருந்து இறங்கியதும் பத்மா கண்ட காட்சி! கமலநாதன் தனது மோட்டார் சைக்கிளில் இறுக்கமான கறுப்புக் காற்சட்டையணிந்து கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்து சென்று கொண்டிருந்தான். அவன் கண்களை “கொகிள்ஸ்” என்னும் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்கள் அணியும் புகைக் கண்ணாடி அலங்கரித்தது. உதடுகளை வழக்கம் போல் அவனது கவர்ச்சிகரமான அரும்பு மீசை அலங்கரித்தது.
ஆளில்லாது வெறிச்சென்றிருந்த மோட்டார் சைக்கிளின் பின்னாசனம் – ஐயோ வீணாகிறதே என்ற உணர்ச்சி பத்மாவுக்குத் தன்னையறியாமலேயே ஏற்பட்டது. மேலும் என்ன தான் முயன்ற போதிலும் கமலநாதனின் பின்னழகை இரசிக்காதிருக்கவும் அவளால் முடியவில்லை!
9-ம் அத்தியாயம் : அதிகார் அம்பலவாணர்
காதலுக்கு இருக்கும் புதுமையான பண்புகளில் ஒன்று, அது ஆண்களைப் பெண்மை நிறைந்தவர்களாகவும், பெண்களை ஆண்மை நிறைந்தவர்களாகவும் ஆக்கிவிடுவது தான். காதலின் வயப்பட்ட ஆண்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாகவும் சிறு விஷயங்களைப் பற்றிக் கூட அதிகமாக எண்ணி எண்ணிக் கலங்குபவர்களாகவும் ஆகிவிடுகிறார்கள். பெண்களோ காதலின் உச்சத்திலே சத்தியவானை நேசித்த சாவித்திரியைப் போல் எமனையும் எதிர்த்துப் போராடத் துணிந்து விடுகிறார்கள். கல்கிசை என்னும் இலங்கையின் மிகப் பிரசித்தி பெற்ற மவுண்ட் லவீனியாக் கடற்கரையில்லே தன் காதற்கிளி பத்மாவைப் படமாக வரைய விரும்பிய ஸ்ரீதர் அடுத்த நாள் முழுவதும் அது பற்றிச் சிந்தப்பதிலேயே செலவிட்டான். அவளை எப்படி உட்கார வைக்க வேண்டும், என்ன உடையை அணியச் செய்ய வேண்டும்.
அமைதியான உயர்குல யாழ்ப்பாணக் குடும்பப் பெண்ணைப் போலச் சேலையால் உடம்பை நன்கு போர்த்தச் செய்து, தலையில் பூவுடனும், நெற்றியில் செஞ்சாந்துத் திலகத்துடனும் தங்கள் வீட்டிலே மாட்டியிருக்கும் அம்மாவின் படத்தைப் போல எழுதுவோமா, அல்லது அவளது அலையலையாக அவிழும் மேகக் கூந்தலை, ஒரு புறத் தோள் வழியாக அவள் எடுப்பான மார்பில் ஏறி இறங்க வைத்து, சினிமா நடிகை போல சிங்காரமாக எழுதுவோமா என்பது போன்ற பல பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருந்தான் அவன்.
இளமையில் கனவிலே மிதக்கும் ஓர் ஆடவனுக்குத் தன் காதலி கண்ணகி போல் பத்தினியாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் மாதவி போல் மனதுக்குக் கிளர்ச்சி தரும் மாயக்காரியாகவும் இருக்க வேண்டும். இது இன்றைய நேற்றைய கனவல்ல. முற்காலத்திற் கூட இலட்சிய மாது, அன்னை தயையும், அடியாள் பணியும் கொண்ட பத்தினிப் பெண்ணாக இருந்தால் மட்டும் போதாது. “வள்ள முலை மாது” போல் பஞ்சனையில் இன்பத் துயில் தருபவளாகவும் இருக்க வேண்டுமென்றே கருதப்பட்டது. அதனால் தான் ஸ்ரீதரும் பத்மாவை வெவ்வேறு விதமாகக் கற்பனை செய்து பார்த்தான் அன்று.
பத்மாவைப் பொறுத்த வரையில் கொடி போன்ற பெண்மையும் சித்திரப்பாவை போன்ற கட்டும் கொண்ட அவளது வண்ண உடல் எந்தப் “போசி”ற்கும் பொருத்தமானதே. நீச்சலுடையில் கூட நேர்த்தியாகத் தானிருப்பாள். மேல் நாட்டு நடிகையர் கூட அவளிடம் தோற்கும்படி ஏற்படும். ஆனால் இந்த விதமான செயற்கைப் ‘போஸ்’களை விட்டு விட்டு வேறு விதமாகவும் அவளை எழுதலாம். பல்கலைக் கழக மாணவி என்ற அவளது தினசரி கோலத்தில் கூட அவள் அழகாய்த் தான் இருப்பாள். ஏன் சில சமயம் அவள் வீட்டிலிருப்பது போல் அவள் சிற்றிடையை அழுத்திக் காட்டும் அவளது பெரிய பூவிட்ட ‘கவுனை’யோ, பாவாடை சட்டையையோ அணியச் செய்து, அந்தத் தோற்றத்தில் கூட அவளைத் தீட்டலாம். இன்னும் குற்றமற்ற மலர் போல் அவள் தோன்ற வேண்டுமாயின் தாவணி அணியச் செய்து அந்தத் தோற்றத்தில் நாலைந்து வர்ணங்களில் அவளை வானவில் போல் கூட வரைந்து விடலாம். ஏன், காலோடு காலாக ஜட்டி, உடம்பின் மேடு பள்ளங்களையும், வளவு நெளிவுகளையும் கவினுறக் காட்டும் ‘ஜீன்ஸ்’ என்னும் மெல்லியலார் காற்சட்டையை அணியச் செய்தும் அவளை எழுதலாம். “ஆனால் இவற்றில் எவ்வாறு நான் அவளைத் தீட்டப் போகிறேன்? அவளுக்கு எல்லம் அழகாய்த் தானிருக்கும். என்னால் இதில் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லையே! என்ன செய்வேன்?” என்று சிறிய பிரச்சினைகளை எல்லாம் பெரிதுபடுத்திக் கொண்டு, சிறு பெண் போல் கவலைப் பட்டான் அவன். இப்படிப்பட்ட சிக்கலான பிரச்சினைகள் எழும்போது, அவன் கலந்தாலோசிக்கும் அவனது நண்பன் சுரேஷிடம் இதைப் பற்றிக் கலந்தாலோசிக்கலாமென்றாலோ, சில காலமாகச் சுரேஷைச் சந்திப்பதே அரிதாகிவிட்டது. சீமைக்கு மேல் படிப்பிற்காகப் போவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்த அவன் விசா கந்தோருக்கும் தானாதிபதி காரியாலயங்களுக்கும் வெள்ளவத்தையிலிருந்த அவனது உறவினர் கடைக்குமிடையே பம்பரமாகச் சுற்றிக் கொண்டிருந்தான். அத்துடன் இது போன்ற சின்ன விஷயத்தை அவனிடம் பேச ஸ்ரீதருக்கு முன்னில்லாத வெட்கங் கூட இப்பொழுது பிறந்திருந்தது!
இவ்வாறு ஸ்ரீதர் கலங்கிக் கொண்டிருக்க, பத்மாவோ தான் அண்மையில் சில விஷயங்களில் எவ்வளவு துணிவாக நடந்து கொண்டாள் என்பதை நினைந்து நினைந்து வியந்து கொண்டிருந்தாள். பெண்களுக்கு இயல்பாயில்லாத ஆண்மையுணர்ச்சியுடன் தான் காரியங்களைச் செய்து வருவதாக அவளுக்குப்பட்டது. உதாரணமாக அவள் ஸ்ரீதருடன் இரண்டு தடவைகள் தந்தைக்குத் தெரியாமல் கள்ளமாக வெளியே போய்விட்டு வந்தமை அவளுக்கே அளவிட முடியாத ஆச்சரியத்தைத் தந்திருந்தது. ஒன்று ஐஸ்கிறீம் பார்லருக்குப் போய் வந்தமை, மற்றது தெகிவளை மிருக வனத்துக்குப் போய் வந்தமை. “அதுவும் சும்மா போய் விட்டு வந்தேனா? பார்ப்பவர்கள் புதிதாக மண முடித்த இளம் ஜோடிகள் என்று எண்ணும்படி உடலோடு உடல் உராய, மிருக வனத்தில் என்னென்னவெல்லாம் செய்து, எதை எதை எல்லாம் பேசி, எப்படி எப்படி எல்லம் நடந்துகொண்டோம்!” என்று சிந்திந்தாள் அவள். “ஆனால் நான் இப்படி அப்பாவுக்குத் தெரியாமல் நடந்தது சரியா? அது அவரை ஏமாற்றியது போலத்தானே? என்றாலும் காதல் விஷயங்களைப் பெற்றோரறியும்படியாகச் செய்ய முடியுமா? இந்தச் சிக்கலால் தான் பல பெண்களும் ஆண்களும் காதல் புரிவதற்கே அஞ்சிக் காதல் புரியாமலே இருந்து விடுகிறார்கள். ஆனால் அதுவும் தப்புத்தான். வாழ்க்கையின் முக்கியமான அனுபவமொன்றைப் பெறாவிட்டால் அந்த வாழ்க்கையின் பயன் தான் என்ன? அதனால் தான் அந்தக் காலத்திலிருந்தே காதலருக்குக் களவு முறைகளை அனுமதித்துள்ளார்கள் நமது முன்னோர்கள். பழைய காலத்திலும் களவு காதலில் ஈடுபட்ட தலைவி தன் பெற்றோரை ஏமாற்றத் தானே செய்தாள்? இன்று நான் அப்பாவை ஏமாற்றுகிறேன். நிச்சயம் எனக்குப் பிறக்கும் மகனும் மகளும் கூட எனக்குத் தெரியாமலே இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யத்தான் செய்வார்கள். அவர்கள் என்னை ஏமாற்றுவார்கள். இதுதான் உலக நியதி போலும்” என்று கூட நினைத்தாள் அவள்.
ஆனால் ஸ்ரீதருடன் படமெழுதுவதற்காகக் கடற்கரைக்கு மேற்கொள்ளவிருந்த பிரயாணத்தையும் மிருகவனத்துக்குச் சென்றது போலவே கள்ளத்தனமாகத் தந்தைக்குத் தெரியாமல் செய்வது சரியா? – தற்செயலாக அப்பாவுக்குத் தெரிந்த யாராவது தன்னை ஸ்ரீதருடன் அங்கே கண்டுவிட்டு, அதை அப்பாவிடம் வந்து சொன்னால் நிலைமை என்ன? விஷயங்கள் எவ்வளவு குளறுபடியாகி விடும்? உண்மையில் அப்பா நான் ஸ்ரீதருடன் அளவாக ஊர் சுற்றுவதையோ, நெருங்கிப் பழகுவதையோ ஆட்சேபிக்கா மாட்டாரென்றாலும், இன்னும் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் படிப்பென்ன ஆகும் அன்று அஞ்சமாட்டாரா? மேலும் மண முடிக்காது ஆணோடு நெருங்கிப் பழகும் பெண் தன்னைப் பெரிய ஆபத்துகளுக்கு ஆளாக்கிக் கொள்ளவும் கூடும். நெருங்கிப் பழகும் ஆண் பெண்கள் எவ்வளவு நாட்களுக்குக் களவொழுக்கத்தில் ஈடுபடாமல் இருக்க முடியும்? அவ்வித விஷப் பரீட்சைகளினால் முடிவில் பெண் தாய்மை நிலையை அடைந்து விட்டால், அதனால் ஏற்படும் சமுதாய அபவாதத்தையும் சிறுமையும் எப்படிச் சமாளிப்பதென்ற கவலையும் பொறுப்புள்ள தந்தை என்ற முறையில் அப்பாவுக்கு இருக்குமல்லவா? – இவ்விதம் பலவாறு சிந்தித்த பத்மாவுக்கு நிலைமையைச் சமாளிக்க ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. அடுத்த வீட்டு அன்னம்மாவைத் துணைக் கொண்டு பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டுமென்பதே அது.
அன்னம்மா அடுத்த வீட்டு அன்னம்மா என்றே பரமானந்தர் வீட்டிலும், அன்னம்மா வீட்டுக்கு அந்தப் புறமிருந்த அவிஸ் நோனா வீட்டிலும் அழைக்கப்பட்ட போதிலும் பரமானந்தர் வீட்டைப் பொறுத்த வரையில் அவள் உண்மையில் ஓர் உள் வீட்டு உறவுக்காரியாகவே இருந்தாள். நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் பத்துத் தடவைகளாவது பின்புற வாயில் வழியாகப் பரமானந்தர் வீட்டுக்கு வந்து போகும் பழக்கத்தையுடைய அன்னம்மா புருஷனை இழந்து விதவையான காலம் தொட்டு, அந்த முழுத் தோட்டத்துக்கும் கொலீஜ் ரோட் தபால் கந்தோருக்குப் பக்கத்தேயிருந்த அந்தோணியார் போசன சாலைக்கும் உருசியான தோசைகளைச் சுட்டுக் கொடுத்துத் தனக்கென்று பெரும் புகழ் சம்பாதித்துக் கொண்டவள். அது மட்டுமல்ல, பரமானந்தர் வீட்டுக்கும், 48/33ம் இலக்க வீட்டிலிருந்த பாடசாலை வாத்தியார் மூவருக்கும் வெற்றிலைக் கடை வேலாயுதக் கிழவனுக்கும் அவள் தான் மத்தியான உணவு கொடுத்துக் கொண்டிருந்தாள். இவற்றால் கிடைக்கும் வருமானத்தை வைத்தே அவளது செலவுகளும், அவளது வேலையில்லாத் ஒரே மகனான ‘திராவிடதாசன்’ என்று தன் பெயரை ‘ரிப்பெயர்’ செய்திருந்த சிங்கார வேலுவின் சினிமாச் செலவுகளும் தடங்கலில்லாமல் நடைபெறக் கூடியதாயிருந்தன.
பத்மா அன்னம்மா வீட்டுக்குப் பின்புற வாசல் வழியாகப் போன போது அன்னம்மா அடுப்பு வெக்கையில் உட்கார்ந்து தோசைகளைத் தடவைக்கு இவ்விரண்டாகச் சுட்டு அடுக்கிக் கொண்டிருந்தாள். புகைக்கும் நல்லெண்ணெய்த் துணியால் தோசைக் கல்லை அழுத்தித் துடைத்து, அகப்பையால் அதில் தோசை மாவை ஊற்றிச் சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருந்தபோதிலும், வாய்க்கு ஓய்வு கொடுக்காமல் அடுப்புக்குப் பக்கத்தில் ஒரு பலகையில் உட்கார்ந்திருந்த அவிஸ் நோனாவுடன் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். அந்தோணியார் போசன சலைக்கு அனுப்ப வேண்டியதை நன்றாக விடியு முன்னரே அவள் சுட்டு அனுப்பி விடுவது வழக்கம்.
இப்போது அவள் சுட்டுக் கொண்டிருந்தது தோட்டத்து “ஓடர்”களுக்காகவும் மகன் திராவிடதாசன் உண்பதற்காகவும் தான். தோசைக் கல்லில் ‘சொய்’யென்று சுடுபட்டுக் கொண்டிருந்த அன்னம்மாவின் இரட்டைத் தோசைகளின் வாசம் தோட்டத்திற் பாதி தூரமாவது வியாபித்துக் கொண்டிருக்க, அரட்டைக்கார அவிஸ், தோட்டத்துப் புதினங்களைப் பற்றித் தனது காலை விமர்சனத்தை அப்பொழுது நடத்திக் கொண்டிருந்தாள்.
அன்னம்மாவின் சூடான தோசைகளின் உருசிக்கு எவ்விதத்திலும் அவிசின் சூடான விமர்சனக் குறிப்புகளின் உருசி குறைந்ததென்று சொல்ல முடியாது. அவள் தனக்குத் தெரிந்த சிங்களத் தமிழில் தனது பேச்சுகளை நிகத்திக் கொண்டிருக்க, அன்னம்மாவும் தனக்குத் தெரிந்த தமிழ்ச் சிங்களத்தில் தன் கருத்துகளை இடையிடையே கூறிக் கொண்டிருந்தாள். அவர்கள் உண்மையில் அங்கே ஒருவர் மொழியை ஒருவர் கொலை செய்து கொண்டிருந்தார்கள். ஒருத்தியின் மொழிக் கொலையை மற்றவள் பழிவாங்குவது போல இருந்தது அவர்கள் பேசிக் கொண்டிருந்த தோரணை. அன்னம்மா தனக்குச் சிங்களம் தெரியுமென்பதைப் பிரகடனம் செய்யவும், அவிஸ் தனக்குத் தமிழ் தெரியும் என்பதை அறிவிக்கவும் அவ்வாறு ஒருத்தி மொழியில் மற்றவள் பேசிக் கொண்டாள் போலும்!
குசுமா வீட்டுக்கு எதிர் வீட்டிற்குப் புதிதாக வந்திருக்கும் ஓர் இ. போ. ச. பஸ்கண்டக்டர் குசுமாவுக்கு வலை வீசுவதாகக் கூறிய அவிஸ், “பாவம், அவனுக்குக் குசுமாவுக்கு ஒரு கள்ளப் பிள்ளை இருப்பது இன்னும் தெரியாது போல” என்று குறிப்பிட்டாள். “ஆனால் அந்த இளந்தாரி தான் என்ன செய்வான்? குசுமா தங்கள் வீட்டு வாசலிலே எந்த நேரமும் நின்று கொண்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தால் ஆண் பிள்ளையால் சும்மா இருக்க முடியுமா?” என்று கேட்டாள் அவிஸ். அன்னம்மா அவிஸ் காதில் குனிந்து “குசுமாவுக்குச் சரியான மோகினிப் பிசாசுதான் பிடித்திருக்கிறது. முந்தா நாள் சிங்காரம் குளிக்காம்பரைக்குக் குளிக்கப் போன போது, வழியிலே இரண்டு பேரும் ஏதோ சிரித்துச் சிரித்துப் பேசுவதை நான் இங்கே வாசலிலே இருந்தே பார்த்து விட்டேன். அவர் குளிச்சிட்டு வந்ததும் “உனக்கென்னாடா குசுமாவோடு பேச்சு! மற்றவன் பிள்ளையை வளர்க்கப் போகிறாயா?” என்று சரியாகக் கொடுத்தேன். “ஆள் இப்போது பயந்து போய் விட்டார். அடங்கிப் போயிருக்கிறார்” என்று இரகசியமாகக் குசுகுசுத்தாள்.
பத்மா அன்னம்மாவின் வீட்டின் உட்புறத்தில் திராவிடதாசன் இருக்கிறானா என்று பார்த்த போது முன்னாள் இரவு எம்.ஜி.ஆர். படம் இரண்டாம் காட்சி பார்த்த களைப்பால் அவன் அங்கே இருந்த ஒரு சாக்குக் கட்டிலில் இன்னும் நீண்டு படுத்துக் குறட்டை விட்டுக் கொண்டிருந்ததைக் கண்டாள். இதற்கிடையில் அவிஸ் பிற்காளில் தோசையோடு புறப்படத் தயாராகிவிட்டாள். அவள் அங்கிருந்து போகு முன்னர் பத்மாவின் கன்னத்தைத் தன் கைகளால் கிள்ளி, “பெம்ப்பிளை பெரிய பெம்பிளையா வளர்ந்திட்டா, எப்போ கலியாணம்” என்று வேடிக்கையாகக் கூறி விட்டுப் போனாள். பத்மா பதிலுக்கு அவளைத் தன் கைகளால் குட்ட்ப் போவது போல் பாசாங்கு செய்தாள்.
அன்னம்மாவுடன் தனிமையில் விடப்பட்டதும் பத்மா “அன்னம்மாக்கா நீங்கள் ஒரு பெரிய உதவி எனக்குச் செய்ய வேண்டும். செய்வீர்கலா?” என்றாள்.
“என்ன உதவி தங்கச்சி! சொல்லு, செய்கிறேன்.” என்றாள்.
“எனக்குச் சொல்ல வெட்கமாயிருக்கிறது!”
“அப்படியானால் எனக்கு விஷயம் என்னவென்று தெரியும். ஸ்ரீதரைப் பற்றி அப்படித்தானே?”
“முற்றிலும் சரி. உங்களுக்குச் சாஸ்திரம் கூடத் தெரியும் போல்!”
“தெரியும். தோசைச் சாஸ்திரம். தோசை ‘சொய்’யென்று சப்தம் போட்டால் அது ஸ்ரீதரைப் பற்றி என்று அர்த்தம்.”
தோட்டத்திலே அன்னம்மா ஒருத்திக்குத் தான் ஸ்ரீதர்-பத்மா பற்றிய விஷயங்கள் முற்றிலும் தெரியும். பரமானந்தரும் பத்மாவும் அவற்றை அவளுக்கு மறைக்க முயற்சி செய்யாமல், எல்லாவற்றையும் கூறியிருந்தார்கள். ஒரு நாள் அன்னம்மா ஸ்ரீதரைப் பார்த்துவிட்டு “மாப்பிள்ளை என்றால் இப்படியல்லவோ இருக்க வேண்டும்! சினிமா நடிகன் தோற்றுப் போவான் உன் ஸ்ரீதரிடம்.” என்று கூடக் கூறியிருக்கிறாள். அன்று தொடக்கம் பத்மாவுக்கு அன்னம்மா மீதுள்ள அன்பும் மதிப்பும் பல நூறு மடங்கு அதிகரித்துவிட்டன!
பத்மா அன்னம்மாவிடம் “அக்கா! நாளை என்னைத் தன்னோடு கடற்கரைக்குப் ‘பிக்னிக்’ போக அழைத்திருக்கிறார் ஸ்ரீதர். எப்படியும் போக வேண்டும். நான் நினைத்தால் அப்பாவுக்குத் தெரியாமல் போய் விடலாம். ஆனால் அது சரியில்லை. அப்பாவைக் கேட்டால் நிச்சயம் மறுக்க மாட்டார். ஆனால் எப்படியக்கா வெட்கமில்லாமல் நான் இது பற்றி அப்பாவிடம் பேசுவேன்? நீ சொல்லி விடுகிறாயா?” என்றாள்.
“ஆ, இது தானா? நீ போ. தோசை சுட்டு முடித்ததும் நான் வந்து பேசுகிறேன். எப்படியாவது நாளைக்கு ஸ்ரீதரோடு உன்னை ஊர் சுற்ற அனுப்பினால் சரிதானே?”
பத்மா திருப்தியோடு புன்னகை செய்து “ஆம்” என்று தலை அசைத்தாள்.
“ஆனால் ஒன்று. குசுமா போல் தெரியாத்தனமாக நடந்து கொள்ளாதே. கல்யாணம் ஆகும் வரை ஆண் பிள்ளைகளோடு பழகுவதே ஆபத்து. ஆனால் இப்போதெல்லாம் புது மாதிரி. என்றாலும் புத்திசாலித் தனமாக நடந்து கொள்.” என்றாள் அன்னம்மா.
பத்மா அங்கிருந்த சூடான தோசை ஒன்றில் ஒரு துண்டைப் பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு “வருகிறேன்” என்று புறப்பட்டாள்.
அன்று மத்தியானம் வழக்கம் போல் பத்மா வீட்டுக்கு உணவு கொண்டு வந்த அன்னம்மா சுருட்டுப் பிடித்துப் பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த பரமானந்தரிடம் விஷயத்தை மெல்ல ஆரம்பித்தாள்.
“ஸ்ரீதர் பத்மாவை நாளைக்கு எங்கோ ‘பிக்னிக்’ போக அழைத்திருக்கிறானாம். அதை உங்களிடம் பேச பத்மாவுக்கு வெட்கம். தாயில்லாத பிள்ளை. என்ன செய்யும்.? என்னிடம் வந்து சொல்லிற்று. நான் உங்களிடம் பேசி நாளைக்கு எப்படியும் அவளை ஸ்ரீதருடன் அனுப்பி வைப்பதாகச் சொன்னேன்.”
“ஓ, அப்படியா? தாயில்லாத பிள்ளைக்கு நீதான் அப்போ தாய். சரி, போகச் சொல்லு. ஆனால் ஓர் ஆண் பிள்ளையோடு எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று புத்தி சொல்லிக் கொடுக்க மட்டும் மறக்க வேண்டாம். ஸ்ரீதர் யோக்கியமான பையன். ஆகவே இதில் நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்றார் பரமானந்தர்.
அன்னம்மா “நான் பத்மாவுக்கு இந்த விஷயங்களை பற்றி எவ்வளவோ புத்திமதிகள் முன்னரே சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அத்துடன் நல்ல பெண். இல்லாவிட்டால் உங்களுக்குத் தெரியாமலே பள்ளிக்குப் போவது போல் கள்ளத்தனமாகப் போயிருக்கலாமல்லவா? அப்படித்தானே இந்தக் காலத்தில் ஆணென்ன, பெண்ணென்ன, பிள்ளைகள் செய்கின்றன?” என்றாள்.
பரமானந்தர் “அது எனக்குத் தெரியும் அன்னம்மா. இல்லாவிட்டால் நான் ஒரு பெரிய குழந்தைக்கு இவ்வளவு சுதந்திரம் கொடுத்திருப்பேனா என்ன? பத்மாவுக்கு மிகவும் நிதான புத்தி” என்றார்.
அன்னம்மா போனதும் பரமானந்தர் பத்மாவின் புத்திசாலித்தனத்தையும் களவின்மையையும் வியந்து கொண்டார். மற்றப் பெண்கள் போல் சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, ஊர் சுற்றாமல் பத்மா எவ்வளவு அடக்கமாக நடந்து கொள்கிறாள் என்று அவர் மெச்சினார்! பாவம் பரமானந்தர், இளமையின் சூழ்ச்சிகள் அவருக்கு என்ன தெரியும்? ஐஸ்கிறீம் பார்லரிலும், மிருக வனத்திலும் பத்மாவும் ஸ்ரீதரும் செய்து கொண்ட காதற் செய்கைகளை அவர் கண்டிருந்தால், அவர் அப்படி நினைத்திருப்பாரா, என்ன?
அடுத்த நாட் காலை பத்மா குளித்து முழுகி அரம்பை போல் அலங்காரம் செய்து கொண்டு அப்பாவிடம் வந்து “அப்பா! நான் போய் வருகிறேன். மூன்று மணிக்கு வந்து விடுவேன்” என்ற பொழுது அவர் தாராளமான மனதோடு “இருட்டு முன் வந்தால் போதும். ஸ்ரீதரிடம் நேரமிருக்கும்போது இங்கு வரச் சொல்” என்று குறிப்பிட்டார்.
பத்மா துள்ளூம் நெஞ்சுடன் வீதியின் இறங்கி நடக்க, மலர்ந்து மணம் வீசும் சிவந்த ரோஜா போல் விளங்கும் தன் பருவ மகளின் இன்றைய நிலையைக் காண அவளது அன்புத் தாய் இப்பொழுது தன் அருகில் இருக்க, தான் கொடுத்து வைக்கவில்லையே என்று கவலையடைந்த பரமானந்தர், ஈரமாகி வந்த தன் கண்களிரண்டையும் தனது விரல்களால் கசக்கிக் கொண்டார்.
ஸ்ரீதரும் பத்மாவும் ஏறக்குறையப் பத்து மணிக்குச் சூரிய ஒளியில் பளிச்சென்று விளங்கிய கல்கிசைக் கடற்கரையை அடைந்த போது, ஸ்ரீதர் அங்கே காணப்பட்ட திரளான ஜனங்களைக் கண்டு திகைத்து விட்டாள். அவனுக்கு அங்குள்ள ஹோட்டல் நன்கு பழக்கப்பட்ட இடமாதலால், நேரே காரை ஹோட்டல் வளவுக்குள் கொண்டு போய் அங்கு நின்ற பெருந் தொகையான கார்களுக்கு நடுவே எப்படியோ ஓரிடத்தைப் பிடித்து நிறுத்தி விட்டு, பத்மாவைத் தன் ஒரு கரத்தால் அணைத்த வன்ணம், ஹோட்டல் நந்தவனத்தில் மெத்தென்ற மரகதப் புற்றரையில் தென்னை மரங்களுக்கு இடையே இடப்பட்டிருந்த மேசைகளை நோக்கி நடந்தான். கடலில் நீந்துவதில் பிரியமுள்ள ஸ்ரீதர் வாரத்துக்கு ஒரு தடவையோ, இரு தடவையோ ஹோட்டலிலிருந்த ஸ்நான மண்டபத்துக்கு வருவது வழக்கமானதால், அங்குள்ள ஊழியர் பலருக்கு அவனை நன்கு தெரிந்திருந்தது. ஸ்ரீதரையும் பத்மாவையும் கண்டதும் அவர்களிலே மிகவும் வயோதியனான அல்பேர்ட் ஸ்ரீதரை நோக்கி வந்து, பெரிய பூக்குடை ஒன்று பொருத்தப்பட்டிருந்த ஒரு மேசைக்கு அவனை வழிகாட்டிச் சென்றான். பத்மாவுக்கோ இவை எல்லாம் புதிய அனுபவங்கள். உண்மையில் இப்படிப்பட்ட பெரிய ஹோட்டலுக்கு அவள் போனது இதுவே முதல் தடவை. இருந்த போதிலும், எந்த இடத்துக்கும் ஏற்பப் புத்திசாலித்தனமாகவும் சலனமில்லாமலும் நடக்கும் நாகரிகப் பண்பு என்றுமே அவளுக்கு இயற்கையாக அமைந்திருந்ததால், அவள் மிக நாசுக்காகவே நடந்து கொண்டாள். இன்னும் அவளது பேரெழில் அவள் நாகரிகமாக நடக்காவிட்டால் கூட நாகரிகமாக நடப்பது போன்ற பிரமையை யாருக்கும் ஏற்படுத்தவே செய்யும். இந்த வகையில் தேக வனப்பு ஆணுக்கென்ன பெண்ணுக்கென்ன, பல இடங்களில் பல செளகரியங்களைத் தரத் தான் செய்கிறது.
பத்மா கம்பீரமாக உயர்ந்து தோன்றிய ஹோட்டலையும் , அதைச் சுற்றியிருந்த தென்னைகள் நிறைந்த சோலையையும், சிமெந்தினால் அழகுற அமைக்கப்பட்டு, நிலத்துக்குத் தக்கபடி உயர்ந்தும் தாழ்ந்தும் சில இடங்களில் படிக்கட்டுகளுடனும் விளங்கிய நடைபாதைகளையும், அவற்றின் ஓரங்களை அலங்கரித்த மலர்ப் பாத்திகளையும் ஹோட்டலுக்குப் பின்னே மல்லிகை மலர் போன்ற நுரையோடு கரை நோக்கித் திரண்டு வந்து வெடித்துக் குமுறிய அலைகளினால் உயிரோட்டம் கொண்டு விளங்கிய நீலக் கடற் படுதாவையும் பார்த்துப் பார்த்துப் புளங்காகிதமடைந்தாள். போதாதற்குக் கடற்காற்று வேகமாக வீசி வந்து உடல் முழுவதையும் தழுவி,
தலை மயிரை முன்னும் பின்னும் அலைய வைத்து, உள்ளத்துக்கும் உடம்புக்கும் தென்பையும் இன்பச் சிலிர்ப்பையும் அளித்து இது பூலோகமோ அன்றிச் சுவர்க்க பூமியோ என்ற ஐயப்பட்டை அவளுக்கு ஏற்படுத்தியது.
ஆனால் இயற்கையும் செயற்கையுமான இந்தக் காட்சிகளை விட அந்த ஹோட்டலில் அப்பொழுது காணப்பட்ட மனிதர்களும் அவர்களது நவ நாகரிகப் போக்கும் தான் அவளை அதிகமாக கவர்ந்து ஒருவித மயக்கத்தை அவளுக்குக் கொடுத்தன. பல நூற்றுக் கணக்கான கவலையேயற்ற கந்தர்வர், கின்னர்கள், கிம்புருடர் போல் அங்கு திரிந்து கொண்டிருந்தார்கள். பல ஆண்களும் பெண்களும் குறுகிய நீச்சலுடைகளை அணிந்து சிரித்துப் பேசிக் குறும்புகள் செய்து குதூகலித்த காட்சி, தான் இருப்பது இலங்கையா அல்லது ‘மியாமி’ அல்லது ‘பிரைட்டன்’ கடற்கரையா என்று அவளை எண்ண வைத்தது. உண்மையில் இப்படிப்பட்ட காட்சிகளை மேற்சொன்ன கடற்கரைகள் பறிய ஆங்கில சினிமாப் படங்களில் தான் அவள் இதுவரை கண்டிருக்கிறாள். இலங்கையிலேயே அவை போன்ற இடங்கள் இருக்கின்றன என்பது அவளுக்கு இது வரை தெரியாது. பார்க்கப் போனால் கொட்டாஞ்சேனைக்கும் கல்கிசைக்கும் வெகு தொலைவில்லை. இருந்த போதிலும் இவற்றை எல்லாம் இதுவரை அறியாது, கொழும்பிலேயே ஓர் அசல் பட்டிக்காடு மாதிரித் தானே நான் இருந்திருக்கிறேன் என்று வெட்கமும் அதிசயமும் அடைந்தாள் அவள். ஸ்ரீதரிடம் “இந்த இடம் எந்த நாளும் இப்படிக் கோலாகலமாகத்தான் இருக்குமோ?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் அவள். ஸ்ரீதர் புன்னகையோடு, “இல்லை, இன்று இங்கே ஒரு கார்னிவல் அல்லது களியாட்டு நடக்கிறது. கடற்கரைக் களியாட்டு எனது அதற்குப் பெயர். அதனால் தான் இவ்வளவு ஜனங்கள். இல்லாவிட்டால் குறைவுதான்” என்றான்.
பத்மா இப்பொழுது கண்களை நாலு புறமும் செதுக்கி நீச்சலுடையிற் சென்ற ஆண்களையும் பெண்களையும் அவர்களறியாமலே நன்கு அவதானிக்கலானாள். அவர்களில் சிலர் ஐரோப்பியர், சிலர் பறங்கியர், சிலர் சிங்களவர்கள், சிலர் மலாயர்கள். தமிழர்கள், தென்னிந்தியரும் சரி, இலங்கையரும் சரி அங்கு இருக்கிறார்களா என்பதை அவள் ஆவலுடன் அவதானித்தபோது ஒரு சிலர் மட்டும் அங்குமிங்கும் காணப்படவே செய்தார்கள். ஓர் இளம் ஜோடி அவளுக்கும் சமீபமாகச் சென்ற போது அவர்கள் தமிழர்கள் என்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்களை மிகவும் கவனமாக அவதானித்தாள் பத்மா. அவர்களில் ஆண் கம்பீரமாகவும் மா நிறமாகவும் காணப்பட்டான் என்றாலும் அவனால் ஸ்ரீதருக்குக் கிட்ட வர முடியாது. பகட்டான பச்சை நிற ஸ்நான உடையும், கண்களில் கறுப்புக் கண்ணாடியும் அணிந்திருந்தால் அவனுக்குப் பக்கத்திற் சென்ற பெண்ணோ மிகவும் கறுப்பு. ஓரளவு பத்மாவின் தோழி தங்கமணியைப் போலத் தோன்றிய அவளது விட்டுப் போன்ற உடலை ஒரு மஞ்சள் நிற நீச்சலுடை இறுகப் பற்றியிருந்தது. அது அவளுக்கு ஒரு சொகுசான தோற்றத்தைத் தந்த போதிலும் அவள் மட்டும் சிவப்பாகவும் அழகாகவும் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாயிருக்கும் என்று யோசித்தாள் பத்மா.
அந்த யோசனையைத் தொடர்ந்து தானும் தனது கட்டழகன் ஸ்ரீதரும் நீச்சலுடை அணிந்து கடல் மண்ணில் துள்ளி விளையாடித் திரிவது போன்ற கவின் மிக்க கனவொன்றும் அவள் மனதில் மிதந்து வந்தது!
ஹோட்டல் நந்தவனத்தில் பல இடங்களில் ‘டைகர் கிளப் பீச் கார்னிவல்’ என்ற சிவப்புக் கொட்டை எழுத்துகளில் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக் கொடிச் சீலைகள் மரங்களுக்கு இடையே உயரமான இடங்களில் இறுக இழுத்துப் பாதைகளின் குறுக்கே கட்டப்பட்டிருந்தன.
அவற்றையும் கவனித்தாள் பத்மா. சில சோப்புக் கம்பெனிகளும், குளிர்பானக் கம்பெனிகளும் அங்குமிங்கும் தமது விளம்பரங்களையும் கொடிச் சீலைகளிலே பொறித்துக் கட்டியிருந்தன.
பத்மாவுக்கு அவள் கண்ட காட்சிகள் பெரிய கிளர்ச்சியை உண்டு பண்ணியிருந்தன. அவளது மறைந்த கிடந்த ஆசைக் கனவுகள் பல உயிர்க் கொண்டு மனதில் கூத்தாடத் தொடங்கியிருந்தன! ஆனால் ஸ்ரீதருக்கோ அவ்வித அனுபவம் ஏற்படவில்லை. அவன் அடிக்கடி இப்படிப்பட்ட களியாட்டுகளில் கலந்து அனுபவப்பட்டவனாதலால், அவன் உணர்ச்சிகள் கட்டுக்குள்ளேயே இருந்தன. அவனுக்கு அப்போதிருந்த கவலை ஒன்றே ஒன்றுதான். இந்தச் சந்தடியில் எப்படிப் பத்மாவைப் படம் எழுதும் தனது திட்டத்தை நிறைவேற்றுவது என்பதே அது. கிழவன் அல்பேர்டிடம் உண்பதற்குச் சில காரமான சிற்றுண்டிகள். ஐஸ்கிறீம், கொக்கோக் கோலா ஆகியவற்றைக் கொண்டு வரும்படி உத்தரவிட்டு, பத்மாவின் செங்காந்தள் விரல்களைத் தன் விரல்களால் வருடியவாறு “பத்மா! என்ன கனவு காண்கிறாய்” என்றான் புன்னகையோடு.
ஸ்ரீதரும் பத்மாவும் வீற்றிருந்த மேசை மேட்டுப் பாங்கான ஓர் இடத்தில் இருந்தது. அங்கிருந்தவாறு அவர்களால் மக்கள் திரண்டு குதூகலித்துக் கும்மாளமடித்துக் கொண்டிருந்த கடல் ஓரத்தை நன்கு கவனிக்கக் கூடியதாயிருந்தது. ஸ்ரீதர் நீலக் கல் போல் வீசிய கடலைப் பத்மாவுக்குச் சுட்டிக் காட்டினான். அங்கே பெரிய ஒலிபரப்பிகள் ஆங்கில படப் பாப் பாட்டுகளை முழங்கிக் கொண்டிருந்தன. அதில் திருப்தியுறாதவர்கள் போன்று சில இளைஞர்கள் கையில் வாத்தியங்கள் ஏந்திப் பாட்டுகள் பாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ஸ்நான உடைகளிலும் மற்றும் சிலர் அழகான புஷ் ஷேர்ட்டுகளிலும் காணப்பட்டார்கள். ஒரு யெளவனப் பெண் ‘ஜீன்ஸ்’ அணிந்து கொண்டு ஓர் ஆடவனுடன் ஜோடியாக ‘டுவிஸ்ட்’ என்னும் நடனத்தை ஆடிக் கொண்டிருந்தாள். சிலர் கடலில் குளித்து விட்டு ‘பாத்’ கவுன் அல்லது பெரிய வர்ணக் கோடுகளிட்ட துவாய்களால் உடல்களைப் போர்த்திக் கொண்டு ஸ்நான மண்டபத்துப் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள். நீச்சலுடை அணிந்த ஒரு சில ஆண்களும் பெண்களும் வெண்மணலில் நீண்ட வர்ணத் துவாய்களை விரித்துக் கண்களைக் கறுப்புக் கண்ணாடியாலோ, கைக் குட்டைகளாலோ மறைந்துக் கொண்டு சூரிய ஸ்நானம் செய்து கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் சிவப்பு, பச்சை, மஞ்சள் என்ற வர்ணங்களுடன் கூடிய பெரிய குடைகளை விரித்து, அவற்றின் கீழே நிழலில் படுத்துக் கிடந்தார்கள். பிஞ்சுக் குழந்தைகளும் சிறு பிள்ளைகளும் கடற்கரை மணலில் வீடு கட்டியும் வண்ண வண்ண வாளிகளில் மணலையும் கடல் நீரையும் அள்ளித் தெளித்தும் விளையாடிக் கொண்டிருக்க, ஏராளமான ஆண், பெண்கள், குமிறி நிமிர்ந்து குதிரைகள் போல் வந்து கொண்டிருந்த அலைகளுக்கிடையே துள்ளி எழுவதும் நீந்துவதும் நீந்த முயல்வதுமாகக் காணப்பட்டார்கள்.
பத்மா தன் முன் விரிந்து கிடந்த இவ்வின்ப உலகத்தின் மாயையில் தன்னை மறந்து சொக்கிக் கிடந்தாளாயினும், அவள் முன்னே நடந்து சென்ற பெண்களும் ஆண்களும் அணிந்திருந்த நீச்சலுடைகளின் ரகங்களை கவனிக்கத் தவறவில்லை. ஒரு சில பெண்கள் ‘உவன் பீஸ்’ – ஒற்றை ஆடை நீச்சலுடைகளை அணிந்திருந்தார்கள். மற்றவர்களோ மார்புக்கு வேறு, இடைக்கு வேறென்று ‘டூ பீஸ்’ – இரட்டை ஆடை நீச்சலுடைகளை அணிந்திருந்தார்கள். இந்த இரட்டை ஆடை நீச்சலுடைகளில் சில மிகவும் குறுகியனவாகவும் சிறியனவாகவும், இறுக்கமாகவும் காணப்பட்டன. இவற்றை அவள் பத்திரிகைகளில் வெளியிடப்படும் பெண்களின் கவர்ச்சிப் படங்களில் தான் முன்னர் பார்த்திருக்கிறாள். அவற்றின் பெயர் கூட அவளுக்கு நன்கு தெரியும். மூன்று நான்கங்குல அகலமே கொண்டன போல் காட்சி தரும் அவற்றின் பெயர் ‘பிக்கினி’- அவ்வித உடையணிந்து ஈரக் கடல் மண்ணில் உற்சாகமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பருவப் பெண்ணை அவள் ஸ்ரீதருக்குச் சுட்டிக் காட்டி “அதோ ஒரு பிக்கினி அணிந்த பெண்” என்றாள், சிரிப்போடு. ஸ்ரீதருக்கு அவளது குறிப்பு வேடிக்கையாயிருந்தது. அவன் புன்னகையோடு “இன்று உன்னை ஒரு பிக்கினி நீச்சலுடையில் தான் நான் படமெழுதப் போகிறேன்” என்றான் அவள் கரங்களைப் பற்றிக் கொண்டு.

பத்மா திடுக்கிட்டு விட்டாள். “என்ன நீச்சலுடையா? என்னால் முடியாது. நான் ஒரு போதும் அணியாத உடையை அணிய எனக்கு வெட்கமாயிருக்காதா? அத்துடன், நீச்சலுடை எங்கேயிருக்கிறது?” என்றாள் வியப்போடு.
இதற்கிடையில் அல்பேர்ட் உணவு வகைகளை மேசையில் கொண்டு வந்து வைக்க இருவரும் அவற்றை உண்டு கொண்டே பேச்சைத் தொடர்ந்தார்கள்.
“உடை கிடைக்குமா என்ற கவலை உனக்கு வேண்டாம். அவசிய்மானால் இங்கேயே எனது பத்மாவுக்கு நான் ஒரு நீச்சலுடையை தைத்துக் கொடுக்க மாட்டேனா, என்ன?” என்றான் ஸ்ரீதர் குறும்பாக.
பத்மா அவனது பகடி தனக்குப் பிடிக்கவில்லை என்பது போல் தன் முகத்தால் அழகு காட்டினாள். ஸ்ரீதரோ ஹோட்டலில் தங்களுக்கு வேண்டிய நீச்சலுடைகளை விலைக்கோ வாடகைக்கோ பெறலாம் என்று விளக்கினான். பத்மா ஆச்சர்யத்தோடு “அப்படியா!” என்று வினவினாளானாலும், “நான் அவற்றை அணிய மாட்டேன்” என்று அடம் பிடித்தாள். வாய் தான் அடம் பிடித்தது. மனமோ தனக்கு முன்னே விரிந்து வரும் சந்தர்ப்பத்தை வரவேற்கவே செய்தது. என்றாலும் நீச்சலுடையை அணிந்து கொண்டு எவ்வாறு நாணமின்றி இவ்வளவு ஆட்களிடையே நடமாடுவது என்ற அச்சமும் அவளுக்கு இருக்கவே செய்தது. இருந்த போதிலும் நீச்சலுடையை அணிய ஆசை இருந்தால் எப்போதோ ஒரு நாள் நாணத்தைக் கட்டுப்படுத்தி அதை அணிந்து பார்க்கத்தானே வேண்டும்? அதற்கு இன்று ஒரு நல்ல ஆரம்ப நாளாகவே அவளுக்குத் தோன்றியது. இவ்வளவு பேர் அணிந்திருக்கும் ஓர் உடையைத் தானே நாம் அணியப் போகிறோம் என்ற எண்ணம் ஒரு புறமும், தனக்கு முன்னே பல பெண்கள் தங்கள் பெற்றோர் அண்ணன் தம்பிமார் முன்னிலேயிலேயே அணிந்து கொண்டு நடமாடுகின்ற ஓர் உடையாக அது காட்சியளித்ததும், அவளுக்கு தனது இயற்கையான நாணத்தைத் தான் வென்று விடலாமென்ற தைரியத்தைக் கொடுத்தது. இன்னும் இவ்வளவு கூட்டத்தில் நான் நீச்சலுடையில் செல்வதை மட்டும் யார் விசேஷமாகக் கவனிக்கப் போகிறார்கள் என்ற எண்ணமும், அப்படிக் கவனிப்பவர்களும் அதை அங்கீகரிப்பவர்களே அல்லாமல் வெறுத்துக் கண்டிப்பவர்களல்லவே என்ற நினைவும் அவளது அச்சத்தைப் படிப்படியாகப் போக்கின. மேலும் ஸ்ரீதர் போன்று ஓர் ஆள் பக்கத்திலிருந்து வற்புறுத்தினாலொழியத் தான் ஆசையோடு விரும்பிய காரியந்தான் என்றாலும் நீச்சலுடையைத் தானே அணியும் தைரியம் தனக்கு ஒரு போதும் வராது என்பதும் அவளுக்குத் தெரியும். ஆகவே ஸ்ரீதர் இன்னும் இரண்டோர் தடவை வற்புறுத்தியதும் சந்தர்ப்பத்தை நழுவ விடாது நீச்சலுடையை அணியச் சம்மதிப்பதென்று தனக்குள்ளே தான் தீர்மானித்துக் கொண்டாள் அவள்.+

இதற்கிடையில் ஸ்ரீதர் “பத்மா! இந்தச் சந்தை இரைச்சலில் வைத்து உன்னைப் படமெழுதுவது முடியாத காரியம். நாங்கள் கடற்கரை ஓரமாக நடந்து சென்றால் ரெயில் பாதைக்கருகில் ஒரு தென்னை மரக் கூட்டத்துக்குப் போகலாம். ஸ்நான உடை வாங்கிக் கொண்டு அங்கு புறப்படுவோமா?” என்றாள்.
பத்மா ஒரு பதிலும் சொல்லாமல் பேசாமலிருந்தாள். அது சம்மதத்தின் அறிகுறியே என்பது ஸ்ரீதருக்கு நன்கு தெரியும். ஆகவே அல்பேர்டிடம் ‘பில்’ பணத்தையும் மேலதிகமாக ரூபா ஐந்தைப் பரிசாகவும் வழங்கி விட்டு, ஹோட்டலில் இருந்த காளிதாஸ் துணிக் கடைக்குப் பத்மாவை இழுத்துக் கொண்டு சென்றான் அவன்.
துணிக் கடையிலிருந்த வட இந்திய விற்பனையாளன் ஸ்ரீதர்-பத்மா ஜோடியை மிகவும் மரியாதையுடன் வரவேற்று “என்ன வேண்டும் சார்” என்று விநயமாகக் கேட்டான்.
“இதோ என் பெண்மணிக்கு ஒரு நீச்சலுடை வேண்டுமாம்” என்றான் ஸ்ரீதர்.
பத்மாவுக்கு அவன் பேச்சு வெட்கத்தை உண்டு பண்ணியதாயினும், ஒருவாறு சமாளித்துக் கொண்டாள்.
விற்பனையாளன் உடனே கடையிலிருந்த பல ரகமான நீச்சலுடைகளையும் காட்சிப் பெட்டிக் கண்ணாடி மீது பரப்பினான். பல நாகரிகமான ஒற்றை ஆடை, இரட்டை ஆடை நீச்சலுடைகளை எடுத்ததுப் பத்மா முன்னர் போடுவிட்டுக் குறும்பாக “மற்ற ஆடைகளைப் போலல்ல நீச்சலுடை விஷயம். அவை எவ்வளவுக்குச் சிறிதாக இருக்கின்றனவோ அவ்வளவுக்கு அவற்றின் விலை அதிகம்” என்று குறிப்பிட்டான்.
ஸ்ரீதர் சிரித்தான்.
விற்பனையாளன் மேலும் தொடர்ந்து பேசினான்: “இதோ இது மொத்தம் இரண்டவுன்ஸ் எடைதான். விலை ரூபா எழுபத்தைந்து. இதோ இது ஆறு அவுன்ஸ் எடை, விலை ரூபா இருபது..”
“அப்படியானால் இது ஒன்றுமே நமக்குச் சரிப்படாது. அரை அவுன்ஸ், முக்கால் அவுன்சில் ஏதாவது இல்லையா? ரூபா நூற்றைம்பது என்றாலும் பரவாயில்லை” என்றான் ஸ்ரீதர்.
விற்பனையாளனுக்குச் சிரிப்புத் தாங்க முடியவில்லை. சிரித்துக் கொண்டே பத்மாவைப் பார்த்தான். அவள் முகம் இரத்தமேறி ரோஜா மலர் போல் குப்பென்று சிவந்து கிடந்தது. “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று ஸ்ரீதரைப் பார்த்துச் சிணுங்கினாள் அவள். ஆண்களின் இந்த நகைச்சுவை அவளுக்கு உண்மையாகவே பிடிக்கவில்லை. விவேகமான விற்பனையாளனுக்கு நிலைமை தெரிந்து விட்டது. ஆகவே மிகுந்த பணிவோடு “இதோ இந்தத் தங்க நிற ‘உவன் பீஸ்’ நீச்சலுடைதான் இங்குள்ளவற்றிலேயே ஆக உயர்ந்தது” என்று கூறிக்கொண்டடு அதனைக் காட்சிப் பெட்டியின் கண்ணாடி மீறிட்டான்.
பின்னர் ஏதோ நினைத்துக் கொண்டவன் போல் “சரியான ‘வைட்டல் ஸ்டாட்டிக்ஸ்டிக்ஸ்’களைக் கூறினால் அளவும் பொருத்தத்தில் எவ்வித குறைபாடுமில்லாத உடையை உடனேயே எடுத்துத் தந்து விடுவேன்” என்றான் அவன்.
பெண்களைப் பொறுத்தவரையில் ‘வைட்டல் ஸ்டாட்டிக்ஸ்டிக்ஸ்’ அல்லது ‘ஜீவாதாரப் புள்ளிகள்’ என்ற ஆங்கில வார்த்தைக்கு மேல்-இடை-கீழ் உடலளவுகள் என்று அர்த்தம்.
பத்மாவுக்கு இவ்வார்த்தைகளின் பொருள் நன்கு தெரியும். ஆகவே பளிச்சென்று “எனது அளவுப் புள்ளிகள் 36:24:38” என்று பதிலளித்தாள்.
விற்பனையாளன் அதைக் கேட்டதும் அசந்து போய்விட்டால், அவனால் தன் காதுகளை நம்ப முடியவில்லை. “உண்மையாகவா சொல்லுகிறீர்கள்? இவை இந்த ஆண்டு உலக அழகியின் புள்ளிகளல்லவா?” என்றான் ஆச்சரியத்துடன்.
பத்மாவுக்கோ பெருமை தாங்க முடியவில்லை. ஸ்ரீதருக்கோ அதை விட மேலே.
விற்பனையாளன் பணிவோடு “நான் சொன்னால் தப்பர்த்தம் செய்ய மாட்டீர்களென்றால் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்,” என்றான்.
ஸ்ரீதர் “சொல்லு” என்றான். பத்மா “அவன் என்ன சொல்லப் போகிறான்” என்று ஆவலுடன் காத்து நின்றாள். “அடுத்த வருடம் உலக அழகிப் போட்டியில் நீங்கள் கட்டாயம் பங்குபற்ற வேண்டும். நிச்சயம் முதலிடம் கிடைத்தே தீரும்” என்றான் அவன். ஸ்ரீதரும் பத்மாவும் சிரித்தார்கள்.
முடிவாக எழுபத்தைந்து ரூபாவுக்கு இளம் பச்சை வர்ணத்தில் ஓர் ஒற்றை ஆடை நீச்சலுடையைத் தெரிந்தெடுத்துக் கொண்டாள் பத்மா. எடுத்த எடுப்பில் ‘பிக்கினி’யை அணிய அவளுக்குத் துணிவு பிறக்கவில்லை!
சரியாகப் பதினொன்றே கால் மணியளவில் ஸ்ரீதர் கடற்கரை ஓரத்தில் தென்னை மர நிழலில் பத்மாவைப் படத் தீட்ட ஆரம்பித்தான். அதற்கென உள்ள ஒரு ‘ஸ்டாண்டி’ல் பெரிய சித்திரக் காகிதத்தை விரித்து வண்ண மைகளால் படத்தைத் தீட்ட தொடங்கினான் அவன். பத்மா நீலத்தில் விழ்ந்து கிடந்த ஒரு தென்னங் குற்றியில் தன் நீச்சலுடையில் ‘போஸ்’ கொடுத்துக் கொண்டிருந்தாள். பத்மாவுக்கோ இந்தப் படம் எழுதும் விஷயமே பெரும் வேடிக்கை போலிருந்தது. மெளனமாக ஓர் இடத்தில் பொம்மை போல் ஆடாது அசையாது வீற்றிருப்பது அவ்வளவு இலேசாகவோ இன்பமாகவோ தோன்றவில்லை அவளுக்கு. ஒரு சில நிமிடங்கள் கழிவதற்குள்ளேயே “ஸ்ரீதர்! முடிந்துவிட்டதா?” “இது என்ன கரைச்சல்” இப்போது முடியாதா?” “எப்போது முடியும்?” “கடலிலே போய்க் குளிப்போம். நீங்களும் ஸ்நான உடையை அணிந்து கொண்டு கிளம்புங்கள்.” “ஐயோ தென்னங் குற்றியில் எறும்பிருக்கிறது” “ஆ… கடித்துவிட்டது!” என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருந்தாள் அவள். ஸ்ரீதர் வாயில் கையை வைத்து, “பேசாதே!” என்று கூறிக் கூறிப் பத்மாவை நன்கு அவதானித்து, படத்தை வரைந்து கொண்டிருந்தான்.
இவ்வாறு அவர்கள் படம் வரைவதில் ஒத்துழைப்பதும் போராடுவதுமாக இருந்த போது தான், அங்கு வந்து சேர்ந்தார் அதிகார் அம்பலவாணர். தலையில் வெள்ளைத் தலைப்பகை, வெள்ளைக் குளோஸ் கோட், நீண்ட வெள்ளைக் காற்சட்டை ஆகியவற்றுடன் அதிக பருமனும் உயரமும் இல்லாமல் காட்சியளித்த அவர், இப்பொழுது யாழ்ப்பாணத்தில் முற்றாக மலர்ந்து கொண்டிருக்கும் ஒரு தலைமுறையின் கடைசிப் பிரதிநிதிகளில் ஒருவராக விளங்கினார். நெற்றியில் சந்தனப் பொட்டு ஒளி வீசக் கம்பீரமாக நடந்து வந்த அவரது பக்கத்தில் அவரது தர்ம பத்தினி வள்ளியாச்சி பின் கொப்பகம் வைத்த சேலையுடனும் நீண்ட கை வைந்த இரவிக்கையுடனும், நெஞ்சினிலே பெரிய பதக்கம், கழுத்தை நெரித்தாற் போன்ற தங்க அட்டிகை, கையில் பெரிய தங்க கொலுசுகள் ஆகியவற்றுடனும் வந்து கொண்டிருந்தாள். சேவலின் வாலைப் போன்று அவளுக்குப் பின்னால் துள்ளி எழுந்த காட்சியளித்த அவளது சேலையின் முகதலை இன்றைய பரம்பரையினருக்கு விநோதப் பொருளாகத் தோன்றினாலும், அதிலும் ஓர் அழகும் கம்பீரமும் இருக்கத்தான் செய்தன!
தற்செயலாகக் கடலோரத்தைப் பார்த்த ஸ்ரீதர் அதிகார் அம்பலவாணரையும் அவர் மனைவியையும் கண்டதும் அதிர்ச்சியடைந்து விட்டான். உண்மையில் அவர்கள் ஸ்ரீதர் இருக்கும் திசையை நோக்கியே வந்து கொண்டிருந்தார்கள். ஸ்நான உடையில் ஒரு பெண் தென்னங்குற்றியில் வீற்றிருப்பதும் அவளை ஓர் ஓவியன் படமாகத் தீட்டிக் கொண்டிருப்பதும்தான் அவர்களைஅங்கே அழைத்து வந்தன.
அதிகார் முக மலர்ச்சியோடு மனைவியிடம் ஏதோ பகடியாகச் சொல்ல அவள் பின்னால் தனது ஸ்தூல சரீரத்தை இழுக்க முடியாமல் கால்களால் இழுத்து வந்த காட்சி வேறு நேரங்களில் என்றால் ஸ்ரீதருக்கு நல்ல வேடிக்கையாய்த் தோன்றிருக்கும். ஆனால் இப்போது அவ்வாறு தோன்ற வில்லை. தனது தந்தை சிவநேசருக்கு மிகவும் நெருங்கிய நண்பரான அதிகாரை எவ்வாறு சமாளிப்பதென்ற நினைவு ஒன்றே அவன் மனதில் விஸ்வரூபம் எடுத்தது. என்றாலும் அதை வெளிக்காட்டாது படம் தீட்டுவதில் தன்னை முற்றாக மறந்தவன் போல் நடிக்க ஆரம்பித்தான் அவன்.
பத்மாவோ அதிகார் மனைவி வள்ளியாச்சி வால் வைத்த சேலைக் கட்டைச் சுவாரஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் ஓர் எறும்பு அவள் காலில் ஏறி விட்டதால், “எறும்பு, எறும்பு” என்றும் சப்தமிட்டாள் அவள். பின்னர், “ஸ்ரீதர், அதோ பாருங்கள்! எங்களை நோக்கி வால் முளைத்த பெண்பிள்ளை ஒன்று வந்துக் கொண்டிருக்கிறது” என்றும் சிரிப்பு முழக்கத்தோடு கும்மாளம் போட்டாள். பத்மா கடற் காற்றும் நீச்சலுடையுமாக அவளுக்கு ஒரு வெறியின்பத்தைத் தந்திருந்ததே, அவளது அசாதாரண கலகலப்புக்குக் காரணம். இன்னும் கொழும்பிலேயே பிறந்து வளர்ந்திருந்த பத்மாவுக்கு, பின் கொப்பகம் வைத்த அந்த யாழ்ப்பாணச் சேலைக்கட்டு உண்மையில் புதுமையாகத்தான் தோன்றியது. ஸ்ரீதரோ வாயில் வைத்து, “பேசாதே” என்று சைகை செய்தான் பத்மாவைப் பார்த்து.
அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
– தொடரும்…
– இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது. ‘பதிவுகளில்’ தொடராக வெளிவந்த நாவலிது.
– மனக்கண் (தொடர் நாவல்), தினகரனில் வெளிவந்தது.
![]() |
அ.ந.கந்தசாமி (8 ஆகத்து 1924 – 14 பெப்ரவரி 1968) இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடி எனப் போற்றப்படுகிறார்.சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர், இதழாசிரியர், மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டு இயங்கினார். கவீந்திரன், பண்டிதர் திருமலைராயர், கலையரசன், சிப்பி, புரூனே போன்ற புனைபெயர்களிலும் எழுதினார். பதிவுகள்.காம் அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும்…மேலும் படிக்க... |