கிளை நதி




(1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“புரூரவஸுடைய மூன்றாவது குமாரனான அம் வசுவின் வம்சத்தில் நூறு சகோதரர்களுடன் காதி ராஜன் என்று ஒரு பிரசித்தமான அரசன் இருந்தான். அந்த அரசனுக்கு இரண்டே இரண்டு குழந்தைகள் – ஒரு புதல்வனும் ஒருபுதல்வியும்.”
இவ்வாறு அன்றைய உலகோடு சற்றும் சம்பந் தம் இல்லாதது போலத் தோன்றுகிற-ஆனால், நெருங்கிய தொடர்புள்ள-ஒரு கதையைத் தொடங் கினார் விசுவாமித்திரர்.
அயோத்தி மன்னன் தசரத சக்கரவர்த்தியின் செல்வக் குமாரர்களான ராமனும் லக்ஷ்மணனும் ராஜரிஷியின் பேச்சிலே ஈடு பட்டவர்களாய், தாடகை வதத்தின் களைப்பையும் நடையினால் உண்டான சிரமத்தையும் மறந்து மிதிலை நோக்கி விரைந்தார்கள். எதிரே சரயு நதி. குறுக்கிட்டது. அங்கே இன்னொரு கிளை நதி வந்து கலக்கும் ஒலி யைக் கேட்டு ராமன் திரும்பிப் பார்த்தான். ஓர் இளம் பெண்ணைப்போல ஒல்கி வந்து கொண்டிருந்தது கெளமதி நதி.
“அதுதான் புனிதமான கெளமதி நதி. பாவங் களை யெல்லாம் போக்கக் கூடியதும் ஞானிகள் எல்லாரும் வணங்குவதுமான புண்ணிய நதி!” என்று சொல்லும்போதே, விசுவாமித்திரரின் குரல் கம்மியது. அதைச் சரிப்படுத்திக்கொண்டு கதையைத் தொடர்ந்தார்.
“காதி ராஜனுக்கு இரண்டு குழந்தைகள்- ஒரு புதல்வனும் ஒரு புதல்வியும். அந்தப் புதல்விக்குப் பெயர் சத்தியவதி. அபாரமான அழகு படைத்தவள். சீலத்திலே ஒப்புயர்வற்றவள். அவளுடைய உள்ளத்தைப் பரிசுத்தமான தண்ணீர் நிரம்பி ரம்ய மாகக் காட்சிஓ அழகியதடா கத்துக்குத் தான் உவமை சொல்ல வேண்டும். ஆழ்ந்த அறி வோடு தூய சிந்தனையும்,அடக்கமும் பாசி படராத எழிலும் வாய்ந்தவள் அந்த உத்தமி!
“இப்படிப்பட்ட குணவதியான சத்தியவதியை மகா தபஸ்வியான பிருகுரிஷியின் குமாரர் இரிசிகர் மணந்துகொள்ள விரும்பினார். விரும்பிக் காதி ராஜ னிடமே நேரில் சென்று விண்ணப்பித்தார். காதி ராஜனுக்கு ரிஷி குமாரரிடம் சிறப்பான அன்பும் மரியாதையும் உண்டு மகளைக் கொடுக்க விருப்பந் தான். ஆனாலும் வழக்கம் எப்படி என்றால், மண மகன் மணமகளுக்கு அன்பளிப்பு – ‘சுருள்’- வழங்க வேண்டும். அதைக் கேட்டார்.
“செவி மட்டும் பசுமையாகவும், உடம்பெல்லாம் பரிசுத்த வெண்ணிறமாகவும் கூடிய ஆயிரம் குதிரை கள் கொண்டுவந்து கொடுத்தால் என் மகளை மணந்து கொள்வதில் ஆட்சேபம் இல்லை!’ என்றார் காதி ராஜன்!”
காதி ராஜனுடைய இந்த நிபந்தனையைக் குறிப் பிடும்போது விசுவாமித்திரர் புன்முறுவல் செய்து கொண்டார். ராம லக்ஷ்மணர்களிடம் ஒரு சமா தானம் கூறினார்: “இரிசிகரோ முனிவர். எப்பொழு தும் தவத்திலேயே நிற்பவர். இது காதிராஜனுக்கு நன்றாகத் தெரியும். எனவே இப்படிப்பட்ட ஒரு ரிஷி குமாரருக்குத் தம் மகளிடம் உண்மையான பற்றுத் தீவிரமாக இருக்கிறதா என்று தந்தை தெரிந்துகொள்ள வேண்டாமா? அதனாலேதான் இந்த மாதிரி ஒரு பரீட்சை செய்து பார்த்தார் காதி மன்னர்” என்று கூறிவிட்டு ராமனைக் கடைக் கண்ணால் பார்த்துக் கொண்டே விசுவாமித்திரர் சொல்லலானார்: “பொதுவாக ஒரு சிறந்த பெண்ணை மணப்பது என்றால் இப்படி ஏதாவது ஒரு பரீட்சை யில் தேறியே ஆகவேண்டும்!”
லக்ஷ்மணன் கேட்டான்: “செல்வங்களை யெல் லாம் துறந்த ஒரு முனிவரிடம், ஆயிரம் குதிரைகள் வேண்டும், அவையும் உடம்பெல்லாம் வெண்மை யாகவும், காது மட்டும் பசுமையாகவும் உள்ளன வாக இருக்க வேண்டும் என்று கேட்டால் முடிகிற காரியமா? பெண்ணைப் பெற்றவர்கள் என்ன நிபந்தனை வேண்டுமானாலும் போட்டுவிடலாமோ?”
விசுவாமித்திரர் சிரித்தார்; சொன்னார்: “அரச குமாரர்களே! தவத்தினால் ஆகாத காரியமே இல்லை. ஞானம் என்ற விலை மதிப்பில்லாத நிரந்தரச் செல் வமே தவத்தினால் சித்திக்கும்போது, கேவலம் ஆயிரம் குதிரைகள் கிடைப்பதுதானா அரிது?”
ராமன் கேட்டான்: “அப்படியானால், ரிஷி குமாரருக்கு ஆயிரம் குதிரைகள் கிடைத்தனவோ?”
“ஆமாம். வருணனை நோக்கித் தவம் செய்து அவனிடமிருந்து ஆயிரம் குதிரைகள் வரமாக அடைந்தார் அவர். சத்தியவதியைப் போன்ற பேரழகியை மணப்பதற்காக ஆயிரம் குதிரைகள் என்ன, அறுபதினாயிரம் ஆனைகள் கேட்டிருந்தாலும் அவர் தயங்கியிருக்க மாட்டார். வருணன் இல்லா விட்டால், இந்திரனையே நோக்கித் தவமிருந்து வரம் பெற்றிருப்பார். சத்தியவதியிடம் அவருக்கு அத்தனை பற்று இருந்தது!”
“அத்தோடு அத்தனை தவ வலிமையும் இருந்தது அவருக்கு!” என்று மகிழ்ச்சியோடு சொன்னான் ராமன்.
லக்ஷ்மணன் கதையைக் கூர்ந்து கேட்டான்.
“சத்தியவதியோடு இரிசிகரின் வாழ்க்கை ஆனந்தமும் அமைதியும் நிறைந்ததாய் ஓடியது. பிறகு…
“பிறகு?” என்று அரசகுமாரர்கள் இருவரும் கவலையோடும் ஆவலோடும் கேட்டார்கள்.
“வாழ்க்கையே அப்படித்தான். பிறகு என்ற கேள்விக்கு மனித அறிவினால் விடை கண்டுபிடிக்க முடிகிறதா? போகப் போகத்தான் அது புலப்படு கிறது” என்று சொல்லிச் சற்றுத் தாமதித்துவிட்டு முனிவர் தொடர்ந்தார்:
“இரிசிகருடைய தவ மகிமையை உணர்ந்த சத்தியவதியும் அவளுடைய அன்னையும் தவத்தி னாலே தோன்றும் குமாரர்கள் தங்களுக்கு வேண்டும் என்று விரும்பினார்கள். இதை அறிந்த இரிசிகர் மந்திர மூலமான அவிசைப் பாகம் செய்து இரண்டு கூறாக வைத்து விட்டு, நதிக்கு ஸ்நானம் செய்து வரச் சென்றார். அந்த வேளையில் சத்தியவதி அறி யாத தவறு ஒன்று செய்து விட்டாள். ஆத்திரத் தில், தனக்காக வைத்திருந்த அவிசைத் தன் அன்னைக்குக் கொடுத்துவிட்டு மற்றைக் கூறு ஒன்றை எடுத்துத்தான் அருந்திவிட்டாள்! பாவம், அளுவக்குத் தெரியாது அது!
“நதிக்குக் குளிக்கச் சென்ற முனிவருடைய உள் மனத்தில் விபரீத அலை வந்து மோதிற்று. அவ்வளவுதான். நடந்ததை உள்ளுணர்வினால் அறிந்து, இரிசகர் அப்படியே நடந்து விட்டார். வீடு திரும்பவில்லை!
“சத்தியவதி கணவருக்காகக் காத்திருந்தாள். பாவம், தான் செய்த தவறு எத்தகையது என் பதைச் சற்றும் அறியாத அந்தப் பேதை அன்றும் மறுநாளும், பின்னும் காத்திருந்தாள். கணவரைக் காணவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்து தேடினாள். நடந்து திரிந்து அலைந்தாள். பிரிவும் வேதனையும் குழப்பமும் அவளால் தாங்க முடிய வில்லை. நடந்தாள், நடந்தாள், வடதிசை நோக்கி நடந்துகொண்டே இருந்தாள்!
”சத்தியவதி எத்தனை காலம் இப்படி நடந் தாள் என்று அவளுக்கே தெரியாது.இறுதியில், இமயமலைச் சாரலில் வேகமாகப் படர்ந்து செல்லும் கண வரைத் தொலைவிலே கண்டுகொண்டாள்.
“நில்லுங்கள். எங்கே செல்கிறீர்கள், என்னை விட்டுவிட்டு?” என்று கதறினாள். அந்த மலை முகடும் பள்ளத்தாக்கும் அவளுடைய வார்த்தை களை எதிரொலித்தன.
“அணுகாதே, என்னை! அவிசின் கூறுகளை மாற்றி விட்டாய். என்னைக் கேளாது செய்த தவறு உன்னை என் அருகிலேயே அணுகாமற் செய்துவிட்டது நில் அங்கே!” என்றார் இரிசிகர்.
“அந்த ஒரு கணத்திலே தன் தவறு என்ன என்பது சத்தியவதிக்குத் தெரிந்துவிட்டது. அவ் வளவுதான். அந்த உத்தமிக்கு உடம்பெல்லாம் ஜில்லிட்டது. அப்படியே பனிக் கட்டியாக உறைந்து நின்றுவிட்டாள் அவள்!
“அப்படியும் முனிவருக்குக் கோபம் அடங்க. வில்லை. ‘நில்லாதே அங்கே. சென்றுவிடு. உடனே சென்றுவிடு’ என்று கோபக்கனலைக் கொட்டினார் அந்தத் தவமா முனிவர். அந்தக் கோபக் கனலா னது, ஜில்லிட்டுப்போய் நின்ற சத்தியவதி என்னும் பனிக் கட்டியைத் தாக்கி அதை உருக்கிவிட்டது. அப்படியே அந்த இடத்திலிருந்து ஒரு நதி உரு ஓடி விழுந்தது.
“பரிசுத்தமான தண்ணீர் நிரம்பிய தடாகம் என்று சொன்னேனே, அந்தக் குணத் தடாகமான சத்யவதிதான் இப்பொழுது இந்தக் கௌமதி நதி யாக ஓடுகிறாள்” என்று கதையை முடித்தார் விசுவாமித்திரர்.
“காதிராஜனுக்கு இரண்டு குழந்தைகள் என்று சொன்னீர்களே, அந்த மகன்?” என்று கேட்டான் லக்ஷ்மணன்.
“ஆமாம்,காதி ராஜனுடைய மகள் சத்தியவதி மகன்தான் விசுவாமித்திரன்!” என்று சொல்லிக் கொண்டே அந்தப் புனித நதியின் தண்ணீரைத் தம் முடைய இரண்டு கையினாலும் வாரி எடுத்தார் விசுவாமித்திரர். அந்தத் தண்ணீரில் சகோதரியின் பிம்பமே அவருக்குத் தெரிந்தது. கலங்கிய கண்களை அந்தப் பவித்திரமான தண்ணீரினால் குளிர்வித்துக் கொண்டு மேலே நடந்தார்.
கிளை நதியின் சகோதரக் கிளையைப் புரிந்து கொண்ட அரச குமாரர்கள் பக்தி இன்னும் மேலிட்ட வர்களாய், அந்தத் தண்ணீரை எடுத்துத் தலையில் தெளித்துக் கொண்டார்கள்!
– கேளாத கானம் முதலிய கதைகள், முதற் பதிப்பு: பெப்ருவரி 1955, பாரி நிலையம், சென்னை.
![]() |
மீ. ப. சோமசுந்தரம் (Mi. Pa. Somasundaram; 17 சூன் 1921 – 15 சனவரி 1999) ஒரு தமிழ் எழுத்தாளர். மீ. ப. சோமு என்பது இவரது புனைபெயர். இவர் பத்திரிக்கை, கவிதை, புதினம், சிறுகதை, கட்டுரை, இசை போன்ற பல துறைகளிலும் சிறந்து விளங்கியவர். 1962ல் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். அகில இந்திய வானொலியில் பணியாற்றியவர். வாழ்க்கைக் குறிப்பு சோமு திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில்…மேலும் படிக்க... |