காணிக்கை




(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அந்த அரசாங்க மருத்துவ மனை அன்றும் வழமை போல் ஜனத்திரளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இரண்டு டாக்டர்கள் இருந்து பணி புரிகின்ற அந்தச் சிறிய வைத்தியசாலையில் அன்று ஒருவர் விடுமுறை எடுத்திருந்தார்.
டாக்டர் பஸீனா மட்டும் அந்த நோயாளர்களோடு போராடிக் கொண்டிருந்தாள்.
டாக்டரின் அறையிலிருந்து மருத்துவ மனையின் முன் மண்டபம் வரை நீண்டு கிடந்த வரிசை மெதுவாகக் கரைந்து கொண்டிருந்தது.

காலை எட்டு மணியிலிருந்து மத்தியானம் பன்னிரண்டு மணி வரை மருந்து கொடுப்பதற்காக அந்த மருத்துவ மனையில் இருநூறு நோயாளர்களுக்கு இலக்கங்கள் கொடுப்பது வழக்கம். தாமதமாக வந்ததினால் இலக்கம் கிடைக்காத ஆசிரியர் அனீஸ், ஒரு தூணோடு ஒட்டினாற் போல் ஒதுங்கி நின்று கொண்டார். காய்ச்சலும் உடல் வலியும் அவரை மிகவும் சோர்வடையச் செய்திருந்தன. சென்றுவிட்டு பிற்பகலில் வருவதற்கும் வரின் மனம் சம்மதிக்கவில்லை.
‘சனமெல்லாம் குறையட்டும் பாப்பம்’ என்று நின்று கொண்டார்.
அங்கே நோயாளர்களைப் பரிசோதித்துக் கொண் டிருந்த டாக்டர், தனது மாணவி என்பதும் அவருக்குத் தெரியாமலில்லை. என்றாலும் முந்திக்கொண்டு சென்று அவளிடம் சலுகை பெற அவர்
அவர் விரும்பவில்லை. இது அவரின் பெருந்தன்மையை வெளிப்படுத்தியது.
ஆசிரியர் அனீஸிற்கு டாக்டர் பஸீனா மாணவி யாகவிருந்த அந்தக் காலம் அவர் மனத் திரையிலே பட மாக விரிந்தது.
ஆசிரியர் அனீஸ், ஆண்டு ஆறு முதல் பஸீனாவுக்குத் தமிழ்ப்பாடம் கற்பித்து வந்தார். தொடர்ந்து எல்லா வகுப்புகளிலும் முதலாவதாக வரும் அவளுக்குத் தமிழ் கற்பிப்பது அனீஸிற்கு சற்றுப் பெருமையாகவும் இருந்தது.
இந்தச் சந்தர்ப்பத்திலேதான் கண்ணுக்குள் தூசு விழுந்தது போல அவள் வாழ்விலும் ஒரு சோதனை ஏற்பட்டது.
அப்பொழுது பஸீனா. ஆண்டு பத்தில் கல்வி பயின்று கொண்டிருந்தாள். ஆசிரியர் அனீஸ் அவ் வகுப்பில் தமிழ்ப்பாடம் கற்பித்து வந்ததோடு வகுப்புப் பொறுப் பாசிரியராகவும் பணியாற்றி வந்தார்.
இந் நிலையிலேதான் அவளின் தந்தை நிஸாம் திடீ ரென்று மாரடைப்பினால் மரணமடைந்தார்.
மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள மகளிர் கல்லூரி ஒன்றின் விடுதியிலே தங்கியிருந்து கல்வி பயின்று வந்த பஸீனாவைப் படிப்பிக்க வேண்டிய பொறுப்பு அவளின் தாய் பௌஸியாவின் தலையில் விழுந்தது.
பொருளாதார நிலையைப் பொறுத்தவரையில், பஸீனாவைப் படிப்பிப்பது அவளுக்குச் சிரமமாக இருக்க வில்லை.
ஆனால், வீட்டுக்குள்ளே வாழ்ந்து பழகிப்போன பௌஸியாவுக்கு மூன்று மைல்களுக்கப்பால் உள்ள அவ் விடத்திற்குச் சென்று பஸீனாவைக் கவனிப்பதுதான்’ கஷ்டமான காரியமாகத் தோன்றியது.
அப் பிரதேசத்தில் நிலவிய பிரச்சினையான சூழ் நிலை காரணமாகத் தன் மகள் தன்னுடன் இருப்பதையே அவள் விரும்பினாள். அதனால், பஸீனாவின் பாடசாலைக் கல்விக்கதவை அடைத்துவிட்டாள் அவள்.
தாயை எதிர்க்கும் தைரியம் அவளுக்குத் தோன்ற வில்லை. பெட்டிப் பாம்பாக அடங்கிப்போனாள்.
ஐந்து மாதங்கள் வீட்டுக்குள்ளேயே புதைந்து கிடந்தாள்.
ஆசிரியர் அனீஸிற்கு இதற்குமேலும் பொறுமை யாக இருக்க முடியவில்லை.பஸீனா கல்வி கற்பதை நிறுத் திக் கொண்டது அவருக்கு மிகுந்த கவலையைத் தந்தது.
ஒரு நாள் அவர், பஸீனாவின் வீட்டுக்குச் சென்று அவளின் தாயிடம் தன்னை அறிமுகஞ் செய்து கொண்டு நிலைமையை எடுத்து விளக்கினார்.
ஆசிரியரின் அறிவுரைகளை அந்தத் தாய் ஏற்றுக் கொண்டாள். அவளைத் திரும்பவும் பாடசாலைக்கு அனுப்ப சம்மதித்தாள்.
விடை பெற்றுக்கொண்ட ஆசிரியர் அனீஸ், ‘பஸீனா …மறந்திராதீங்க. திங்கக் கிழமையிலிருந்து பாடசாலைக்கு வந்திரணும்” என்று பஸீனாவை அன்புடன் தட்டிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்.
பஸீனாவிற்கு. தன்மேல் மலர்களை அள்ளிச் சொரிந் தது போல் இருந்தது.
அவள் மீண்டும் கல்வியைத் தொடர்ந்தாள்.பரீட்சை களில் சித்தி எய்தினாள். உயர் நிலையையும் எட்டினாள்.
“என்ன சேர்… ஒரு மாதிரியாக இருக்கீங்க… கன்நேரமா நீங்க இஞ்ச வந்து…” டாக்டர் பஸீனாவின் குரல் கேட்டு சுய நிலையை அடைந்தார் ஆசிரியர் அனீஸ்.
எதிரே டாக்டர் பஸீனா புன் முறுவல் சிந்திய வண்ணம் நின்றிருந்தாள்.
“மகள்… இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்லதான் நான் இஞ்ச வந்தன். நீங்க இஞ்ச வந்திருக்கீங்க என்டு ரெண்டு மூணு நாளைக்கு முதல்லதான் நான் கேள்விப் பட்டன். நேத்தையிலரிந்து உடம்பெல்லாம் ஒரு மாதிரி யாக இருக்கு காச்சல் குணமாகவுமிருக்கு. உங்களுக்கிட்டக் காட்டி மருந்தெடுக்கலா மெண்டுதான் நான் வந்தன் குறுநகையொன்றை உதிர்த்து விட்டுக்கொண்டு நிமிர்ந்தார் ஆசிரியர்.
“நீங்க இஞ்ச வந்தவுடனேயே உள்ளுக்க வந்திருக் கலாமே சேர். என்னத்துக்கு இஞ்ச நிண்டீங்க?”
“ஆட்கள் நம்பர் எடுத்துக்கிட்டு போளின்ல நிக்காங்க. நாம அதுக்குள்ள பூர்ரது சரியில்லயே மகள். அதுதான் நின்டன்.”
“சரி… இப்ப என்னோட உள்ளுக்க வாங்க.”
டாக்டர் பஸீனா, ஆசிரியர் அனீஸை அழைத்துக் கொண்டு நோயாளரைப் பரிசோதிக்கும் அறைக்குள் நுழைந்தாள்.
தனது ஆசிரியரை ஆசனத்தில் அமரச் செய்துவிட்டு அவளும் தனது ஆசனத்திலே அமர்ந்து கொண்டாள்.
தனது ஆசிரியரை நன்கு பரிசோதனை செய்தாள். அவருக்குரிய மருந்து வகைகளை ஒரு பெண் தாதி மூலம் உடனேயே வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தாள். பாவிக்கும் காலம். அளவு என்பவற்றையும் விபரமாக எடுத்துச் சொன்னாள்.
புறப்பட்ட ஆசிரியரைத் தடுத்து நிறுத்தினாள் டாக்டர் பஸீனா.
“உங்களோடு கொஞ்சங் கதைக்கணும். சோதிக்கிற நோயாளர்களும், கொஞ்சப்பேர்தான் இருக்காங்க. தயவு செய்து கொஞ்ச நேரம் இந்தக் கதிரையில இருங்க சேர்.” டாக்டர் பஸீனா தனக்கு எதிரே இருந்த கைக் கதிரை ஒன்றைச் சுட்டிக் காட்டினாள்.
அவளின் கட்டளையை மீற முடியாமல் அனீஸ் அக் கதிரைக்கு இடம் பெயர்ந்தார்.
டாக்டர் பஸீனா மீண்டும் தன் பணியைத் தொடர்ந் தாள். நாற்பத்தைந்து நிமிடங்களில் தன் பணியினை முடித்துக் கொண்டு தன் ஆசனத்திலே சாவகாசமாக அமர்ந்து கொண்டு தனது ஆசிரியரின் தற்போதைய நிலை மையைக் கேட்டறிந்து கொண்டாள் டாக்டர் பஸீனா.
“மகள்.. என்னப்பத்தி எவ்வளவோ அக்கறையோடு விசாரிக்கீங்க. என்மேல் எவ்வளவு நன்றியுடையவராக இருக்கீங்க.”
“உங்கள் நான் எப்படி சேர் மறப்பேன்… நீங்க இல்லாமலிருந்திருந்தா நான் இந்த நிலைக்கு வந்திருக்கவே மாட்டேனே…” என்றவள், தன் கைப்பையிலிருந்து ஒரு கவரை எடுத்தாள்.
அவளது முதல் மாதச் சம்பளம் அந்தக் கவருக்குள் இருந்தது.
“என் முதல் மாதச் சம்பளம். இது என்னுடைய காணிக்கை” என்றவாறு அதனை ஆசிரியர் அனீஸிடம் நீட்டினாள்.
ஆசிரியர் அனீஸ் சட்டென்று கதிரையை விட்டு எழுந்து நின்றார்.
“என்ன மன்னிக்கணும் மகள் அத அப்படியே நீங்களே வச்சுக்கங்க. நான் உங்களுக்குச் செய்த உதவிக்கு கைமாறாக எந்தப் பெயரிலும் எந்த உதவியையும் பெற்று என்ட பணியின் புனிதத்தைக் கெடுத்துக்கவிரும்பல்ல. இஞ்ச நீங்க எனக்கிட்டக் காட்டின மதிப்பும் மரியாதையுமே பெருங் கைமாறுதான். என்ட வாழ்க்கையில இதுவரையில் இப்படி மகிழ்ச்சிகரமான ஒரு நாள் நான் சந்தித்ததே இல்லை. நன்றி மகள்.”
ஆசிரியர் அனீஸ், தனது அறுபத்தைந்து வயதிலும் திடமாக நடக்க ஆரம்பித்தார். அவரது காய்ச்சலும் உடல் வலியும் பறந்து போயின.
டாக்டர் பஸீனாவின் கையிலிருந்த அந்தக் கவர், அவளை அறியாமலேயே நழுவி மேசை மேல் விழுந்தது.
– சூடாமணி, 1995 செப்டம்பர் 03
– காணிக்கை (சிறுகதைகள்), முதற் பதிப்பு : ஜனவரி 1997, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம் வெளியீடு, இலங்கை.
![]() |
உதுமாலெவ்வை ஆதம்பாவா (பிறப்பு: ஜூன் 15 1939) இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் தன் பங்களிப்பினை வழங்கிவரும் மூத்த இலங்கை எழுத்தாளர்களுள் ஒருவராக திகழ்கின்றார். இலங்கை இலக்கிய வரலாற்றில் பல தரமான எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை மணிக்குரலுக்குண்டு. ஆதம்பாவாவின் முதல் ஆக்கத்துக்குக் 'களம்' கொடுத்ததும் 'மணிக்குரலே'. 1961ம் ஆண்டு 'மலையருவி' எனும் தலைப்பிலான கவிதை மூலம் இலக்கிய உலகில் இவர் பாதம் பதித்தார். அன்றிலிருந்து இன்று வரை காத்திரமான 45 சிறுகதைகளையும்,…மேலும் படிக்க... |