கல்மலர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 12, 2025
பார்வையிட்டோர்: 96 
 
 

நாங்கள் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போது ‘அக்ஷரா அப்யாசம்’ தொடங்கி விட்டது. முன்பதிவு செய்திருந்த ரஷீதைக் காட்டிக் கலந்துகொண்டோம். வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பூச்சரம், உதிரிப்பூக்கள், பழங்கள், வஸ்திரம் முதலான பொருட்களையெல்லாம் தாம்பாளத்தில் அடுக்கி, அதனைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள் பிரேமா. நான் கயலை மடியில் வைத்துக்கொண்டு கூட்டத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். மந்திரங்கள் முற்றுப் பெற்று, ஒவ்வொரு குழந்தையாக அழைத்து, தன் மடிமீது அமர்த்திக்கொண்டு விரல் பிடித்து ‘அ’ என அரிசியில் எழுத வைத்தார் அந்தப் பள்ளியின் தாளாளர். ஏறத்தாழ இறுதியாகத்தான் கயலின் முறை வந்தது. தாளாளரின் வலப்புறத்தில் பிரேமாவும் இடப்புறத்தில் நானும் நிற்க, கயல் தாளாளரின் மடியில் ஒய்யாரமாக அமர்ந்துகொண்டு, தாம்பாளத்தில் பரப்பியிருந்த அரிசியின் மீது தன் பிஞ்சு விரல்களை அலையவிட்டாள். தாளாளர் அவளது ஆட்காட்டிவிரலை மெல்லப் பற்றி, அரிசியில் ‘அ’ என எழுதினார். முன்பே வீட்டில் கயலுக்கு நாங்கள் தமிழ் உயிர், மெய் எழுத்துக்களை விரலால் காற்றில், நீரில் எழுதச் செய்து பயிற்சி அளித்திருந்ததால் அவள் எழுதிய ‘அ’ அழகாக அரிசியில் பதிந்தது. கல்மேல் எழுத்துப் போலத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த அந்த ‘அ’ வையே நானும் பிரேமாவும் ஊற்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

எனக்கு அந்த ‘அ’ அனன்யாவை நினைவூட்டியது. அவள் எப்போதும் என் பெயரை ஆங்கிலத்தில்தான் எழுதுவாள். நான் என்றைக்குமே அவள் பெயரைத் தமிழில்தான் எழுதுவேன். அன்றொருநாள் மலைக்கோட்டை மதிற்சுவரிலும் நான் அவள் பெயரைத் தமிழில்தான் செதுக்கினேன். அவள் என் பெயரை ஆங்கிலத்தில்தான் செதுக்கினாள். நான் அவள் பெயரின் முதல் எழுத்தான ‘அ’ வை மிகப் பெரியதாகச் செதுக்கினேன். பிற எழுத்துக்களைச் சிறியதாகத்தான் என்னால் செதுக்க முடிந்தது. அவள் என் பெயரின் முதல் எழுத்தை ஆங்கிலத்தில் அந்தப் பெரிய ‘அ’வின் வயிற்றுப் பகுதியில் செதுக்கினாள். பிற எழுத்துகளை அவள் பெயருக்கு அருகில் வரிசையாகச் செதுக்கிச் சென்றாள். பின்னாளில் நாங்கள் எப்போது அங்குச் சென்றாலும் நாங்கள் செதுக்கிய கல்வெட்டைக் கண்டுபிடிப்பதில் எங்களுக்கு எந்தச் சிக்கலும் இருந்ததில்லை. காரணம், அந்தப் பெரிய ‘அ’. ஒவ்வொரு முறையும் நான் அதைக் காணும் போதெல்லாம் அவள் வயிற்றுக்குள் – அந்தப் பெரிய ‘அ’வின் வயிற்றுக்குள் இருக்கும் என் பெயரின் முதல் ஆங்கில எழுத்தை நான் தடவிப் பார்க்கத் தவறியதேயில்லை. பத்தாண்டுகள் கடந்துவிட்டன. இப்போதும் எனக்கும் அவளுக்குமான உறவென்பது அந்த எழுத்துக்குள் இருக்கும் என் பெயரின் முதல் ஆங்கில எழுத்து என்பது மட்டுந்தான். மற்றபடி எங்கோ யாரோ யாருக்காகவோ என வாழநேர்ந்துவிட்டது.

கயல் இன்று அரிசியில் எழுதிய அந்த ‘அ’ எனக்குள் ஆழ்ந்துகிடந்த என் அனன்யாவைப் பற்றிய சிந்தனைகளைக் கிளறிவிட்டது. வீட்டுக்கு வரும் வரை பிரேமா என்னிடம் ஏதும் பேசவில்லை. நான் பலமுறை பேச்சுக் கொடுத்தும் கயல்தான் என்னிடம் பேசினாலே தவிர பிரேமா பேசவேயில்லை. ஒருவேளை இன்று ‘அக்ஷரா அப்யாசம்’ நிகழ்ச்சிக்குத் தாமதமாகச் சென்றதால் என்மீது ஏற்பட்ட சினமாக இருக்கலாம். வீட்டுக்கு வந்த பிறகும் அவள் நெடுநேரம் என்னிடம் பேசவில்லை. இரவில்தான் பேசினாள். அதுவும் ஒரு தொடரில், “மலைக்கோட்டைக்குப் போகணும்” என்று. நான் ‘சரி’ என்பதுபோலத் தலையை மட்டும் அசைத்தேன். அவள் தூங்கிவிட்டாள். நாளையும் விடுமுறை என்பதால், ‘நாளைக்கே மலைக்கோட்டைக்குச் செல்லலாம்’ என்று நினைத்தேன்.

நானும் கயலும் சிறிதுநேரம் விளையாடிவிட்டுத் தூங்கச் சென்றோம். கயல் என் வயிற்றின் மீது ‘அ’ எனத் தன் பிஞ்சு விரல்களால் எழுதினாள். நான் சிரித்தேன். கயல் தூங்கத் தொடங்கினாள். நான் அந்தப் பெரிய ‘அ’ வின் வயிற்றுக்குள் செதுக்கப்பட்ட என் பெயரின் முதல் ஆங்கில எழுத்தை நினைத்துக்கொண்டே தூங்கினேன்.

இந்த ஊர் எனக்கு மட்டுமல்ல பிரேமாவுக்கும் சொந்த ஊர் அல்ல. இருவருமே இந்த ஊரில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு விடுதிகளில் தங்கி வெவ்வேறு கல்லூரிகளில் வேறுவேறு பட்டப் படிப்பைப் படித்திருக்கிறோம். அவ்வளவுதான். கடந்த ஆண்டுதான் எனக்குப் பணிமாறுதலாக இந்த ஊர் கிடைத்தது. மீண்டும் நாங்கள் படித்த அதே ஊருக்கு வந்துவிட்டதில் எங்களிருவருக்குமே மகிழ்ச்சிதான்.

காலையில் நல்ல வெய்யில். மலைக்கோட்டையில் நல்ல கூட்டம். குறிப்பாகக் கல்லூரி மாணவ-மாணவியர்கள். அவர்களுள் பலர் காதலர்கள்தான். ஜோடி ஜோடியாக, கைக்கோத்து, உற்சாகமாகவும் உல்லாசமாகவும் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத பொக்கிஷம் தமக்கு மட்டுமே கிடைத்துவிட்டதாக நினைத்துக்கொண்ட மனமயக்கத்திலும் கடவுளே நேரில் வந்து கேட்டாலும் இந்த பொக்கிஷத்தை அவருக்குத் தந்துவிடக் கூடாது என்ற மனவுறுதியுடனும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அவர்களைப் பார்க்கும்போது எனக்கு முதலில் சிரிப்புத்தான் வந்தது. ‘இவர்களுள் யாரும் காலத்தின் கணக்கை அறியவில்லையே!’ என்று நினைத்து இவர்களின் மீது எனக்குப் பரிதாபம் தோன்றியது. ‘இப்படித்தானே நாமும் இருந்தோம்’ என்று நினைத்துப் பார்த்தபோது எனக்கு என் மீதே சினம் பொங்கியது. காதலையும் காலத்தையும் குறைசொல்லி என்ன பயன்? யதார்த்த நதியோட்டத்தில் சில காதல் கரையேறும். பல காதல் மூழ்கும். ஏதும் எவர்கைகளிலும் இல்லை. காலத்தின் கணக்கே வேறு! அதனை யாராலும் கணிக்க முடியாது. கணித்து பின்னாளில் ஏமாறுவதைவிட, கணிக்காமலேயே காலப்போக்கில் வாழ்வதே நல்லது.

கயல் ஐஸ்வண்டியைப் பார்த்துவிட்டாள். அவளுக்குக் குச்சி ஐஸை வாங்கிக் கொடுத்தேன். உதடுகளிலும் கைவிரல்களிலும் உடையிலும் அதனை ஒழுகவிட்டவாறு அதனைச் சுவைத்துக் கொண்டே வந்தாள்.

நான் அவளைப் பிரேமாவிடம் ஒப்படைத்துவிட்டு, “இங்கதான் நான் சுத்திக்கிட்டு இருப்பேன். என்னைத் தேடாதே! அரைமணி நேரத்துல அந்த மரக்கதவுக்குப் பக்கத்துல வந்துடுவேன். நீங்க ரெண்டு பேரும் அங்க உட்கார்ந்திருங்க” என்றேன்.

அவள் தனிமையை எதிர்பார்த்தவள் போல சிறிய புன்னகையுடன் தலையை அசைத்தாள். நான் வலப்புறம் திரும்பி அந்தக் காதலர்கள் கூட்டத்தினுள் சென்று மறைந்தேன். என்னையே மறந்தேன். என் அனன்யாவைத் தேடிக்கொண்டு அந்தப் பாறைச் சுவரை நோக்கி வேக வேகமாக நடந்தேன்.

தன் கணவன் சென்ற பின்னர் பிரேமா தன் மகள் கயலை இடுப்பில் இடுக்கிக்கொண்டு இடப்புறம் திரும்பி அந்தக் காதலர் கூட்டத்துக்குள் நுழைத்து தன்னைத் தொலைத்துக் கொண்டாள். கயல் கூட்டத்தை வேடிக்கை பார்த்தபடி ஐஸைச் சுவைத்துக் கொண்டிருந்தாள். பிரேமாவின் கண்கள் மலைக்கோட்டையின் சுவர்ப்பரப்பினை மேய்ந்துகொண்டிருந்தன. அவை அதில் எதையோ தேடின. நாள்தோறும் எத்தனையோ காதலர்கள் தமது பெயரையோ அல்லது பெயரின் முன் எழுத்தையோ இந்த மலைக்கோட்டைச் சுவரில் செதுக்கிக் கொண்டேதான் இருக்கிறார்கள். அப்படியிருக்க எட்டாண்டுகளுக்கு முன்பு அன்பும் பிரேமாவும் செதுக்கிச் சென்ற அந்த இரண்டெழுத்துகளை எப்படித் தேடிக் கண்டுபிடிக்க முடியும்?

அன்பு முழுப் பெயரையும் செதுக்கலாம் என்றான். ஆனால், பிரேமா மறுத்துவிட்டாள். “இது கல்லெழுத்து. அழியாது. என்றைக்காவது யாராவது பார்த்துவிட்டால் பெரிய பிரச்சனையாகிடும்” என்றாள். அதற்கு ஒப்புக்கொண்ட அன்பு, இருவரின் பெயரின் முதல் தமிழ் எழுத்தை மட்டும் எழுதலாம் என்றும் அவற்றுக்கு நடுவில் காதல் சின்னத்தைப் பொறித்துவிடலாம் என்றும் யோசனை கூறினான். அதற்கும் பிரேமா மறுத்துவிட்டாள். “சரி, என்னதான் எழுத?” என்று எரிச்சலோடு அன்பு கேட்டதற்கு பிரேமா சற்று நேரம் சிந்தித்துவிட்டு, “ரெண்டு எழுத்தையும் சேர்த்தா புதுப் பெயர் வருது. அதையே செதுக்கீடலாம். யாருக்கும் என்றைக்கும் சந்தேகமே வராது” என்றாள். உடனே, மகிழ்ச்சியோடு அன்பு செதுக்கத் தொடங்கினான் – ‘அபி’ என்று. அன்று அந்த ‘அபி’ என்ற பெயர்தான் அந்தச் சுவர்ப் பரப்பில் தனித்துத் தெரிந்தது. காலவோட்டத்தில் வெவ்வேறு எழுத்துகள், பெயர்கள், காதற்குறியீடுகள் எனச் செதுக்கப்பட்டு செதுக்கப்பட்டு அந்தச் சுவர் முழுக்கவே கல்லெழுத்துகளால் நிறைந்துவிட்டது. இந்த எழுத்துக்கூட்டத்தில் ‘அபி’ மறைந்து சில ஆண்டுகளாகிவிட்டன.

மறைந்துவிட்ட அந்த ‘அபி’யைத்தான் இன்று நினைந்து நினைந்து தேடிக் கொண்டிருந்தாள் பிரேமா. பழைய நினைவுகளை மீட்டி மீட்டி தாங்கள் முன்பு நின்றிருந்த அந்தச் சுவர்ப் பகுதியைக் கணித்து, அங்கு ‘அபி’ இருக்கிறதா எனத் தேடிக்கொண்டிருந்தாள் பிரேமா. ஒவ்வொரு எழுத்தாக, பெயராக, காதற்குறியீடாகத் தேடி தேடி தேடி தேடி அலுத்தேவிட்டாள் பிரேமா.

கயல் சிணுங்கத் தொடங்கினாள். அவளைச் சமாதானப்படுத்திவிட்டு, தன்னுடைய கைக் கடிகாரத்தைப் பார்த்தாள். அரைமணிநேரம் கடந்திருந்தது. அங்கிருந்து புறப்பட்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு வேக வேகமாக நடந்தும் ஓடியும் வந்து மரக்கதவுக்கு அருகே வந்தாள். தன் கணவன் அங்கில்லாததைக் கண்டு பெருமூச்சுவிட்டாள். கயல் மீண்டும் சிணுங்கத் தொடங்கினாள்.

அவளைத் தன் இடுப்பிலிருந்து இறக்கிவிட்டு, “இரு அப்பா வரட்டும். உனக்கு இன்னொரு ஐஸ் வாங்கித்தரச் சொல்றேன்” என்றாள். சற்றுத் தொலைவில் தன் தந்தை வருவதைப் பார்த்துவிட்ட கயல் தன்னிரு கைகளையும் உயர்த்தி மகிழ்ச்சியில் துள்ளினாள். அவளது வலக்கையில் ஐஸ்குச்சி மட்டும் இருந்தது. கயல் மண்தரையில் அமர்ந்து ஐஸ்குச்சியால் மண்ணைக் கிளறத் தொடங்கினாள்.

நான் பிரேமாவின் அருகில் வந்து, ஆசைபொங்க, “என்ன, பிரேமா? ‘டல்லா’ இருக்க?” என்று கேட்டேன்.

அவள் அலுப்புனும் விரக்தியுடனும் “அதெல்லாம் ஒன்னுமில்ல” என்றாள்.

“நீ ஆசைப் பட்டேன்னுதானே உன்ன இங்க ஒடனேயே கூட்டியாந்தேன். நீ என்னடான்னா ‘டல்லா’ இருக்குறீயே?”

“அதுக்காக, சிரிச்சுக்கிட்டேவா இருக்க முடியும்?”

நாங்கள் இருவரும் ஏதும் பேசவில்லை. இருவருமே மகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். நான் மீண்டும் பிரேமாவிடம் வலிய பேச்சைக் கொடுத்தேன்.

“நீ ரொம்ப மாறிட்ட”.

“இல்ல”.

“ஆமாம்”.

“சரி, எதுதான் மாறாம இருக்கு இங்க?”

“நீ எதச் சொல்ற?

“இந்த எடத்த.”

“இந்த எடம் மாறலயே.”

“மாறிடுச்சு.”

“இல்ல பிரேமா. மாறவேயில்லை. ஏன் நான் சொல்றேன்னா, நானும் என்னோட ஃபிரண்டும் எழுதுன எழுத்த என்னால உடனேயே கண்டுபிடிக்க முடிஞ்சது. அதனால சொல்றேன்.”

“அது உங்க கேர்ள் பிரண்டுதானே?”

நான் அமைதியானேன். அவளே தொடர்ந்து பேசினாள்.

“எனக்குத் தெரியும். எல்லாந் தெரியும்”

நான் ஏதும் பேசவில்லை. இருவரும் கயலையே பார்த்தோம்.

கயல் ஐஸ்குச்சியால் மண்தரைப்பரப்பில் பெரிய வடிவில் ‘அ’ என எழுதினாள். உடனே, நான் கயலிடமிருந்து ஐஸ்குச்சியை வாங்கி, அந்தப் பெரிய ‘அ’ வின் வயிற்றில் ‘பி’ என வேகமாகவும் எரிச்சலோடும் எழுதினேன். பிரேமா அந்த எழுத்துகளையே பார்த்துக்கொண்டிருந்தாள் – தன் கண்களில் கண்ணீர்ப்பூக்கள் மலர்ந்து வழிய.

நான் பிரேமாவின் தோளில் ஆறுதலாகக் கை வைத்து, “எனக்குத் தெரியும்” என்று கூறிவிட்டு, கயலைத் தூக்கிக் கொஞ்சியபடியே நடக்கத் தொடங்கினேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *