கலைகின்ற வேஷங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 9, 2025
பார்வையிட்டோர்: 2,348 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிபர் என்பவர் எல்லோரையும் மகிழ்விக்கக்கூடிய ஒரு கழைக் கூத்தாடியாய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது அவருக்குத் தெரிந்திருந்தாலும், அன்று அவர் செய்த அந்தச் செயல் அவளை உறுத்தத்தான் செய்தது. கல்லூரியில், ஆசிரியர்களின் கூட்டம் நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் கலந்துரையாடல்கள் நடைபெறுகின்ற வேளைகளில் ஆசிரியர்களின் வேண்டுகோள்கள் பலவற்றிற்கு அவர் எடுத்தெறியும் இதுபோன்ற பல மறுத்தல்களை அவள் அவதானித்திருந்தாலும், இது போன்றதொரு மங்கள நாளில் இத்தனை மனிதர் முன்னிலையில், இந்தத் தீர்க்கமான மறுப்புத் தன்னை உதாசீனம் செய்தது போன்றதொரு உணர்வையே அவளிடம் ஏற்படுத்துகிறது. 

திருமணம் நிறைவேறிய அந்த இறைவனின் சந்நிதியில் மிக லாவகமாய், அடுக்கடுக்காய், பலர் அறுகரிசி எடுத்துக் கொண்டிருக் கின்றனர். அந்த ரம்மியமான, மனதை அள்ளும் சூழ்நிலைக்கு ஒரு கறை ஏற்படுத்துவது போல் அவள் முற்றிலும் எதிர்பாராத விதமாய் அவர்களை அறுகரிசி எடுத்து ஆசீர்வாதம் செய்ய அதிபர் மறுத்துவிட்டார். அவள் தந்தை ஒன்றுக்குப் பலமுறை கேட்டும் அவர் மிக மூர்த்தண்ணியமாய் மறுத்துவிட்ட காரணம் அவளுக்கு விளங்குவது போலவும் விளங்காதது போலவும் இருக்கிறது. 

பக்கத்தில் அன்புப் பிரவாகம் ஊற்றெடுத்து ஓடுவதுபோல் கதைகள் பல கூறி அவளை ஆட்கொள்ளும் முரளி இருக்கின்ற எக்களிப்பில், இந்தக் குமுறலை அவள் உடனே மறந்துவிட்டிருந்த போதும் அதிபர் மணமக்களிடம் விடைபெற வந்தபோது அது ‘பளிச்சென’ நினைவுக்கு வருகிறது. 

“கடைசியில் நீங்கள் எங்களை ஆசீர்வதிக்காமல்தான் போகப் போறீங்க போல இருக்கு…” 

ஏதோ ஒரு ஆதங்கத்தில் வெள்ளை உள்ளத்துடன் நிஷ்கபடமாய் அவள் கேட்டுவிட்டாள். 

“சீ… சீ… நீங்கள் தவறாய் நினைக்கப்பிடாது ரீச்சர்… எனக்கு ஒரு ஆசௌசம் இருக்கு… அதுதான் தயங்கிறன்… அறுகரிசி எடுத்தால்தான் ஆசீர்வாதமே? என்ரை ஆசீர்வாதம் எப்பவும் உங்களுக்கு இருக்கும்தானே… அப்ப நேரமாகுது… நான் வரப்போறன்…” என்று பட்டும் படாமலும் கூறிச் சமாளித்து அவர் விடைபெறும் போதும், 

“கோயிலுக்கு வரத் தடை செய்யாத ஆசௌசம் அறுகரிசி எடுக்கத்தான் தடை செய்கிறதோ?” என்ற முரளியின் கேள்விக்கான பதில் அவளுக்குத் தெரியவில்லை. அவரது செயலுக்குள் ‘ஏதோ ஒன்று’ ஒளிந்து கொண்டிருப்பது அவளுக்கு மெதுவாகப் புரிகிறபோதும் அவள் சுதாரித்துக் கொள்கிறாள். 

தூரத்தே சென்று தன் காரில் ஏறிக்கொள்ளும் அதிபரின் மிடுக்கான நடையும், கம்பீரமும், அவர் அணிந்திருக்கும் மெல்லிய சருகைக் கரைப் பட்டுவேட்டியும், அதனை அணிந்திருக்கும் நேர்த்தியும், கனமாகி முறுக்கேறி உயர்ந்து வளர்ந்திருந்த அந்த உடலும், விபூதி சந்தனம் பிரகாசிக்கும் நெற்றியும், எல்லாமே அவருக்கு ஒரு தனியான பிரபையைத் தந்து மலர்வித்திருந்தன. அவள் கல்லூரியிலும் அவதானித்திருக்கிறாள். அவருக்கு யாரையாவது ஒரே அடியாகப் பிடித்துப்போகும். அல்லது ஒரே அடியாகப் பிடிக்காமலும் போகும். அந்த வகையில் ஒருவேளை முரளியை அவருக்குப் பிடிக்கவில்லையோ? பிடிக்காவிட்டாலுந்தான் என்ன? அவள் அவரது கல்லூரியின் ஆசிரியை என்பதற்காகவாவது ஒரு சம்பிரதாயத்திற்காவது அறுகரிசி எடுத்திருக்கலாமே! 

திருமணத்தின் பின் தேன்நிலவு என்ற பெயரில் ஒரு வாரம் கணவனின் அன்பில் கரைந்து, கிறங்கி, லயித்து, மகிழ்ந்து, மிதந்தவள் கல்லூரிக்குப் போகவில்லை. 

அடுத்த திங்கட்கிழமை அவள் போனபோது சீதா ரீச்சர் கேட்டாள். “எப்பிடிப் புதினங்கள்? அண்டைக்கு உங்கடை கலியாண வீட்டிலை அதிபர் அறுகரிசி எடுக்க மறுத்திட்டாராமே?” 

அவள் அதைக் கேட்ட தோரணையில் அதன் காரணம் சீதா ரீச்சருக்குத் தெரியுமா தெரியாதா என்று புரியாத குழப்பத்தில் அவள் சொன்னாள், 

“அதுதான் எனக்கும் விளங்கேல்லை… அப்பா திருப்பித் திருப்பிக் கேட்டும்… நானே கேட்டும்கூட மனிசன் எடுக்கேல்லை…”

சீதா ரீச்சரின் கண்கள் விரிந்து இதழ்க் கடையில் நளினமாகத் தோன்றிய மெல்லிய முறுவல். அவளுக்குக் காரணம் தெரியும் என்பதை ஊர்ஜிதம் செய்தபோது, அதை அறிந்துகொள்ளும் ஆவலில் அவள் கேட்டாள், 

“ஏன் சிரிக்கிறியள்? உங்களுக்குக் காரணம் தெரியும்போலை இருக்கு” 

“எனக்கு மட்டுமே தெரியும்? எல்லோருக்கும் விளங்கியிருக்கும். நீங்கள் ஒரு குழந்தைப் பிள்ளை மாதிரி… உங்களுக்குத்தான் விளங்கேல்லை.” 

அது என்னவென்று அறிந்துகொள்ளும் மிகைப்பட்ட ஆவலில் அவள் திடீரென்று கேட்டாள். 

“சரி… விளங்காத எனக்கு விளக்கமாச் சொல்லுங்கோவன்…” 

“வேறை ஒண்டுமில்லை. இது சாதிப் பிரச்சினை. உங்கடை முரளியின்ரை ஆட்கள் சாதி குறைவாம். அதனாலை மாப்பிள்ளை பக்கம் அறுகரிசி எடுத்த பிறகு, தான் எடுக்கிறது மதிப்பில்லையாம்… தன்னை முதல் கேட்டிருந்தாலாவது பரவாயில்லையாம்…” 

“இப்பிடி யார் சொன்னது?” 

“அதிபர்தான் சொன்னவர்.” 

இருந்தாற்போல் யாரோ உள்ளத்தில் சுறுக்கென்று குத்தியது போன்றதொரு உணர்வில் அவள் மனம் விக்கித்துப் போகிறது. அவள் இக் கல்லூரிக்கு வந்து சில வாரங்களே ஆகியிருந்தபடியால், வேளாளருக்கிடையிலேயே இப்பிடி ஒரு பேதம் இன்னும் காட்டப்படும் குழப்பம் நெடுநேரம் நிலைத்திருந்து சிந்திக்க வைக்கிறது. “குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்” என்று பாரதி கனவு கண்டு இத்தனை வருடங்களின் பின்னர் இதுபோன்ற விஷயங்களில்கூட நுணுக்கம் பார்ப்பதாலேயே தனது ‘பெரிய மனிதத் தன்மை’ நிலை கொள்வதாய்க் கனவுகாணும் ஒரு மனிதர்… எங்கள் சமுதாயத்தில் இருக்கிறாரா? 

அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திவிட்ட கீறலின் பின் அவள் அதிபரின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக நோட்டம்விடத் தொடங்கினாள். 

தன் வீட்டிற்கு ஒருநாள் வந்திருந்த அதிபர் தான் கொடுத்த தேநீரை ‘விரதம்’ என்று சொல்லிப் பருகாததைப் பற்றிக் கனகா ரீச்சர் ஒருநாள் சொன்னதை மனதிலே பதிந்துகொண்டாள். 

‘தடித்த சாதி என்ற பரிமாணத்திற்கு அமையாதபடியால் அதிபர் தன் மகளுக்கு வரும் திருமணப் பேச்சுக்களையெல்லாம் தட்டிக் கழித்துவிடுகிறார் என்று நடேசு மாஸ்டர் இன்னொரு நாள் சொன்னதையும் அவதானித்துக்கொண்டாள். 

மிகைப்படுத்தப்பட்ட சாதி உணர்வு அவரது பல செயல் களிலும் இழையோடி அவர் ஒரு சாமான்ய மனிதரிலும் உயர்ந்தவர் என்ற எண்ணத்தை அவருக்குள்ளேயே ஏற்படுத்தி விட்டிருப்பதை அவள் கண்காணித்துக் கொண்டாள். 

அன்று ஓய்வுநாள்தானே என்று முரளியும் அவளும் நெடுநாள் கவனிக்கப்படாமல் இருந்த தமது பனங்காணியைப் பார்க்கச் சென்றனர். மழை இடை இடையே விட்டு விட்டுச் சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தாலும், கரிய நெடுந் தூண்களாய் வளர்ந்து காற்றில் சத்தம்போட்டு அசையும் பனைகளைப் பார்ப்பதில் அவளுக்கு என்றுமே அலாதிப் பிரியம் உண்டு. பனங்காணியின் நடுவிலே தனியாய் ஒரு குடிசை கட்டி வாழ்ந்து, அந்தக் காணியையும் கவனித்துக் கொள்ளும் கந்தனைக் கண்டு அவனுக்கு ‘இனாம்’ கொடுக்கும்போது அவன் முகத்தில் தோன்றும் மகிழ்வையும் மலர்ச்சியையும் பார்ப்பதில் அவளுக்கு இன்னும் அதிகமான பரவசம் ஏற்படும். அதற்காகவே அன்று அவர்கள் குடிசையை அண்மித்தபோது கந்தனின் நாய் வேகமாக ஓடிவந்து குரைத்து அவர்களை முன்னேற விடாமல் தடை உத்தரவு போட்டது. அதனால் சிறிது தூரத்தில் நின்றே முரளி கூப்பிட்டான். 

“கந்தண்ணை… கந்தண்ணை…!” 

பலமுறை சத்தமாக அழைத்த பின்னர், உள்ளே இருந்து வள்ளிதான் ஓடிவந்தாள். 

“அப்பு வெளியிலை போட்டார். நாளைக்கு வந்து சந்தியுங்கோவன்…”  

சொல்லிக்கொண்டே வெளியில் வைக்கப்பட்டிருந்த மண் பானையில் ஒரு செம்பு நீர் வார்த்துக் குடிக்கிறாள் வள்ளி. 

வள்ளியின் குரலில் தெரிந்த பதட்டம் அவர்களை அகற்றிவிட முயற்சி செய்வதுபோல் ஒலித்தாலும், 

“வந்ததுதான் வந்திட்டம் கந்தனைக் கண்டுகொண்டு போவம்…’ என்ற நினைவிலும், தூற்றலடிக்கும் மழைக்குச் சற்று ஒதுங்கி நின்று ஆறுதல் பெறுவோம் என்ற உணர்விலும் கந்தனின் குடிசைத் தாழ்வாரத்தை முரளியும் அவளும் அண்மித்தபோது, எதேச்சையாய் அவள் கண்கள் குடிசையினுள் செல்கின்றன. 

அந்த இடத்திற்கு மிகவும் பரிசயமானவர் போல் ஓலைப் பாயில் காலை மடக்கி அமர்ந்து, பிளாவைக் கையில் ஏந்திய சுகானுபவத்தில் வெளியே வெறித்துக்கொண்டிருக்கிறார் அதிபர். முக்கால்வாசி குடித்து முடித்த நிலையில் அவர் அருகே கிடக்கும் தேநீர்க் ‘கிளாஸ்’ ஒன்று அந்தரங்கத்தில் அவர் சாதியை ஒழித்துவிட்டவரே என்பதைப் பறை சாற்றுகிறது. அதிபருக்குச் சிலரை ஒரே அடியாகப் பிடித்துப்போகும் என்பது ஏனோ இச் சந்தர்ப்பத்தில் அவளுக்கு நினைவு வருகிறது. அவளின் தீட்சண்யமான பார்வையைத் தாங்கமுடியாமல் அவர் கண்கள் நிலத்தை முத்தமிடுகின்றன. 

உள்ளுக்குள் ஒரு மனதால் சாதியை அந்தரங்கத்தில் ஒழித்துவிட்ட நல்ல மனிதனாய்.. வெளியில் வேறொரு மனிதனாய் நுணுக்கங்களில் நுணுக்கம் பார்க்கும் தன்மை தனது அந்தஸ்தை உயர்த்தும் என்ற நம்பிக்கையுடைய பெரிய மனிதனாய்… நடமாடும் அவரின் முரண்பாடு அவருக்கே தரிசனமாகிறதா? 

இந்த விடயம் இவருக்கு மட்டும் சொந்தமானதா? சமுதாயத்தின் போக்கில் எற்றுண்ட ஒரு தனிமனிதப் பிரதிநிதிதானே இவர்! அவள் மனம் அவருக்காக ஒரு முறை விம்முகிறது. 

– சுடர் 1979 ஆவணி இதழில் பிரசுரமானது.

– மனித சொரூபங்கள் (பன்னிரு சிறுகதைகள்), முதற் பதிப்பு: டிசம்பர் 1982, சிவன் கல்வி நிலைய வெளியீடு, தெல்லிப்பழை.

GokilaMahendran கோகிலா மகேந்திரன் (நவம்பர் 17, 1950 ,தெல்லிப்பளை, விழிசிட்டி, இலங்கை) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், நாடகக் கலைஞர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம்.. என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகளில் எல்லாம் இடம் பிடித்திருக்கின்றன. இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் சமய எழுத்துக்காக சாகித்திய விருது…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *