கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 104 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டுக்குள் நுழைந்த பெரியசாமி, செருப்பைச் சுழற்றிப் போட்டுவிட்டு, சட்டையைக்கூடக் கழற்றிக் கொள்ளாமல் ஈஸிச் சேரில் விழுந்தார்.

தேகத்தின் ஒவ்வொரு எலும்புத் துணுக்குகளும் வலித்தது. ஐம்பதைத் தாண்டிவிட்ட உடம்பு, இந்த அலைச்சலைத் தாங்க முடியாமல் சோர்ந்துபோய்த் துவண்டது.

மனசும் அதற்கும் மேலாக கிழடு தட்டிப்போய்த் துவண்டது. உடம்பின் சோகத்தையெல்லாம் திரட்டி, வாய் வழியாகப் பெருமூச்சுவிட்டார்.

“உஸ்ஸு…” என்ற பேரிரைச்சலாக இருந்தது. கண்கள் இருண்டு வந்தது. மூடினால் எரிந்தது.

‘ஐயாயிரம் புரட்டுவதற்கு எத்தனை புரள வேண்டியிருக்கு?’

‘ஊர் ஊரா புரண்டெழுந்தாலும் பணம் பெயர்ற மாதிரி தெரியலியே… ஊர்லே ஏதோ கொஞ்சம் மதிப்பும் மரியாதையும் சம்பாதிச்சு வைச்சிருக்கிற செகண்ட்ரிகிரேடு வாத்யார் – நமக்கே இந்தப் பாடுன்னா… மத்த ஏழை எளியவங்க பாடு எம்புட்டு கஷ்டமாயிருக்கும்?’

அலுத்துப்போன சிந்தனை, இந்த ரீதியில் ஓடி, தன்னைத்தானே சமாளித்துக்கொண்டது.

“அப்பா…”

பயந்த, மெல்லிசான குரல் கேட்டு, கண்ணைத் திறந்தார் பெரியசாமி. மகள்… அலைச்சலுக்கும்,அலுப்புக்கும் காரணகர்த்தா.

“என்னம்மா…”

“ஏன், காலைக்கூட கழுவலியா?”

“கொஞ்சம் டயர்டா இருந்தது.”

“இந்தாங்கப்பா… காபி.”

“வைச்சிரு. கால் கையை அலம்பிட்டு வர்றேன்.”

நாசி விடைத்துக்கொள்ள, மீண்டுமொருமுறை பெருமூச்சு.

அப்பாவைப் பார்க்க ராஜிக்கு பாவமாக இருந்தது. வயதான காலத்தில் இவருக்குத்தான் எவ்வளவு அலைச்சல்? இதைத் தாங்கக் கூடிய வயசா, உடம்பா?

எனக்குப் பதிலாக ஒரு நொண்டிப் பையனைப் பெற்றிருந்தால் கூட… இவ்வளவு கஷ்டமில்லையே… ‘சாண் பிள்ளையென்றாலும்… ஆண்பிள்ளை’ என்று தெம்பாக இருக்குமே…

எத்தனை அழகு இருந்தென்ன… பெண்தானே! பெண் என்றாலே பெற்றவர்களுக்குச் சுமைதானே! கழுத்தில் தாலி ஏறுவதற்குள் குடும்பத்தின் ஜீவனே இறங்கிப்போய்விடும் போலிருக்கிறதே!

ராஜி, காபி தம்ளர் மீது ஒரு அட்டையை வைத்து மூடிவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தாள். மீறிவரும் நெருப்புக்கு, கட்டையை உள்ளே தள்ளினாள்.

எரியும் ஜ்வாலைகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுள் நினைவு ஜ்வாலைகள்…

…அன்று பெண் பார்க்கும் படலம். தன்னைத்தானே அலங்கரித்துக் கொள்ளும்போது கண்கள் நீரைக் கொட்டியது. தாயில்லாத வெறுமை, அன்றுதான் முழு பலத்துடன் நெஞ்சைத் தாக்கிக் கிழித்தது.

தானே பலகாரம் செய்து… தானே வீட்டைச் சுத்தம் செய்து… தானே அலங்கரித்து.. ஒரு பெண்ணுக்குரிய நாணத்தைக்கூட அணியக்கூட முடியாமல்…தாயில்லாச் சோக மனசை முழுசாக உணரச் செய்து, அவஸ்தைப்படுத்தியது.

”அம்மா…” – அப்பாவின் குரலைக் கேட்டாள். தட்டுத் தடுமாறிய மனசைத் திடப்படுத்திக்கொண்டு வந்தாள். தரையில் கண்கள் நிலைக்க… பல கண்கள் உடலைத் துளைக்கிற உணர்வு…

அந்த உணர்வே மனசைத் தூண்டித் தவிக்க வைக்க, மெல்ல இமை நிமிர்த்தி… விழிகளை ஓரப்படுத்தி… மாப்பிள்ளையைப் பார்த்தாள்.

நல்ல கறுப்பு. இருட்டுப்போல அடர்ந்த கறுப்பு. வாலிபத் துடிப்பான தோற்றம். முகத்தில் ஒரு குழப்பம்… தயக்கம்… இருப்புக் கொள்ளாத லஜ்ஜை… தெரிகிறது…

எப்படிப்பட்டவராக இருப்பார்…? தனது மனசை- வாழ்வை புரிந்து கொள்வாரா? அங்கீகரித்துக்கொள்வாரா… அணைத்து அனுசரித்துப் போவாரா? அன்பு – பரிவு… காட்டுவாரா?

“மாப்பிள்ளை விருந்து போட்ட லட்சணம் தெரியாதாக்கும்?” என்று நாக்கால் மனசைக் கிழித்து புண்ணாக்குவாரோ?

”உங்க அப்பன் பொழைப்பு தெரியாதாக்கும்” என்று நெஞ்சை உடைத்து, சுக்கு நூறாக்கி வன்மம் காட்டுவாரோ?…

நினைக்கும்போதே நெஞ்சு அதிர்ந்து, நடுங்கி… குளிர்ந்து… ஏதேதோ கேள்விகள்… விசாரிப்புகள்…

“போம்மா.”

அப்பாவின் சத்தம், மனசுக்குத் தெம்பாக இருந்தது. துவண்டு தள்ளாடி ‘விழுந்து விடுவோமோ’ என்று பயப்பட வைத்த கால்கள், ஸ்திரப்பட்டன. உள்ளே போய்விட்டாள்.

பேச்சு சப்தம் கேட்டது.

எல்லோரையும் தவிக்க வைத்து விட்டுப் போகும்போது அம்மா…பத்துப் பவுன் நகையையும் விட்டுவிட்டுப் போனாள். சாகும்வரை அப்பாவின் பாரத்தையெல்லாம், தன் மனசில் தாங்கியே வாழ்ந்து வந்த அம்மா… செத்த பிறகுகூட நகையின் மூலமாக அப்பாவின் பாரத்தை ஏந்திக்கொண்டாள்.

“மேற்கொண்டு என்ன தர முடியும், உங்களாலே?” – இது ‘அவரின்’ அப்பா குரல்.

“என்ன எதிர்பார்க்கிறீங்க…?”- இது அப்பாவின் குரல்.

சற்று மெளனம். பேச்சு எங்கெங்கோ திசை திரும்புகிறது. மறுபடியும் விஷயத்துக்கு வருகிறது. தத்தம் நெஞ்சுள் முட்டி மோதும் ஆசைகளையும்-பயத்தையும் மறைத்துக்கொண்டு விஷயத்தைப் பேசுகிற சாங்கோபாங்கம்.

இறுதியில் முடிவாயிற்று.

கல்யாணச் செலவுக்கு இரண்டாயிரமும், தொழில் துவங்க மூவாயிரமும் தருவது என்று முடிவாயிற்று.

இரண்டாயிரத்தைத் தயார் செய்துவிட்டார். ஆனால் மேற்கொண்டு மூவாயிரம்தான்… இப்போது பிரச்னை. இதற்காக அலைந்து அலைந்து… அறிந்த தெரிந்த பெரியவர்களிட மெல்லாம் அணுகிப் பேசி… சோர்ந்து… அலுத்து…

பாவம், அப்பா!

அப்பாவைப் பார்க்கப் பார்க்க, தன் பிறப்பின்மீதே ஆத்திரப்பட்டாள்…

“மேற்கொண்டு என்ன தர்றீங்க?”

எத்தனை சட்டம் போட்டாலும்..: நாகரீகம் வளர்ந்த இந்தக் காலத்திலும் ‘இந்தக்’ குரல் எத்தனை தைரியமாக ஒலிக்கிறது. எப்படி முடிகிறது? சட்டத்துக்கும் மேலாக உயிர்வாழ… இந்தக் குரலுக்கு சமூகத்தில் வலுவான வேர்கள் ஓடியிருக்கிறதா… அது எப்போ அறுபடும்? அறுபடுமா…? பெண் குலத்துக்குச் சாபமாக- சாஸ்வதமாகத் தொடருமா…?

நெருப்பின் அனல் கையில் வீச… உணர்வுக்கு வந்தாள். நெருப்பு இப்போது மனசில் எரிகிறது.

விறகை உள்ளே தள்ளி… மூடியைத் திறந்து… சாதத்தை சரிபார்த்தாள்.

“அம்மா… ராஜி.”

“என்னப்பா?”

“ரெண்டு காபி போடும்மா…”

யாரோ வந்திருக்கிறார். பரபரத்தாள்.

காபியுடன் வெளியே வந்தபோது, அப்பாவுடன் இன்னொருவர் பேசிக்கொண்டிருந்தார்.

யார் இவர்? எங்கோ பார்த்தது போலிருக்கிறதே… மனசுக்குள் ஒரு தீவிர தேடல்…

ஆங்… ஞாபகத்துக்கு வந்துவிட்டது.

‘அன்று’ இவர், ‘அவருடன்’ வந்திருந்தார். ‘அவரு’க்குத் தாய் மாமா. பேசாமலிருந்தாலும், இவர்தான் ‘அவர்’ அப்பாவுக்கு ‘மூளை’ என்பது, அடிக்கடி கிசுகிசுப்பதும், காதைக் கடித்துக் கொள்வது மாயிருந்ததிலிருந்து தெரிந்தது.

என்னத்துக்காய் வந்திருப்பார்…? மனசு அதிர்ந்தது. விரைவில் குழப்பம் நீங்கிப்போயிற்று. பணத்துக்காக வந்திருக்கிறார்.

“அதனாலென்ன, தர்ரேன். சாப்பிட்டுட்டு வாங்கிட்டுப்போங்க…”

“சாப்பாட்டுக்கென்ன இப்போ. அங்க இனிமேதான் கல்யாண வேலைகளைத் துவக்கணும். நாள் நெருங்கிடுச்சு. எல்லாம் நாமெதானே செய்யணும்.”

“சரிங்க…இப்ப ரெண்டாயிரம் ரெடியாயிருக்கு. கொண்டு போங்க, வேலையைத் துவக்குங்க. அதுக்குள்ளே நா மூவாயிரத்தை ரெடி பண்ணிடுறேன்.”

“அதுக்கென்ன… நாமெ ஒன்னுக்குள்ளே ஒன்னாகப் போறோம். இந்தளவுக்குக்கூட அட்ஜஸ்ட் பண்ணிப் போகலேன்னா… மத்தவங்களுக்கும் நமக்கும் என்னங்க வித்தியாசம்…?”

இவர் ரொம்ப சாமர்த்தியமாகவே பேசுகிறார். எவ்வளவு இனிப்பாகப் பேசுகிறார்!

வாங்கிவிட்டுப் போனார்.

வேலைகள், சிறகு முளைத்துப் பறந்தன. ‘என்றோ, எப்போதோ’ என்று தூரத்தில் நின்ற நாள், ‘இதோ இன்று’ என்று நெருங்கிவிட்டது.

அழைப்பிதழைப் பார்க்கிறபோதெல்லாம், தன் மகளின் வாழ்வு மலரப் போகிறது… எப்படியெல்லாம் மணம் வீசப்போகிறது… என்று கனவுகளைக் காணக்கூட மனசு தைரியப்படவில்லை. அந்த மூவாயிரத்துக்கு என்ன செய்றது? இந்தக் கேள்விதான் நெஞ்சைக் குடைந்து தவிக்க வைக்கிறது. நினைக்க நினைக்க மனசுக்குள் ஏதேதோ கற்பனைகள். விபரீத நினைப்புகள்…

இப்படியாகுமோ என்கிற அச்சம், குலையை நடுங்க வைக்கிறது.

இவருடைய பழைய மாணவர்கள் நிறைய உதவிகள் செய்கின்றனர். வேலைகளையெல்லாம் தன்மேல் தாங்கி நிறைவேற்றுகின்றனர்.

இவர்களுக்குத்தான் ஆசிரியர்கள்மீது எவ்வளவு பாசம்…! அந்தப் பாசம் இவர்களை இவ்வளவு செயல்படுத்துகிறதென்றால்… அது எத்தனை நிஜமாக-தூய்மையாக இருக்க வேண்டும்…!

அவர்கள், இவருக்கு நிறைய பலம் தந்தார்கள். மனசும்கூட தெம்பும் நம்பிக்கையும் துளிர்த்து, சற்று நிமிர்ந்தது.

சிந்தனைகூட, நம்பிக்கையின் வலிமையுடன் ஓடியது.

‘சரி… மூவாயிரம் தொழில் துவங்கத்தானே! கல்யாணம் ஆனாலும், எப்படியும் ரெண்டு மாசமாச்சும் விருந்து நடக்காதா அதுக்குப் பிறகுதானே தொழில்? அதுக்குள்ளே ஏற்பாடு செய்துட முடியாதா, என்ன…’

ஆமாம்… வேலைகள் சிறகு கட்டிப் பறந்தன. நாட்களும் பறந்தன.

இதோ, நாளைக்குத்தான்!

காலையிலேயே மாப்பிள்ளை வீட்டார் வந்து சேர்ந்தனர். அவர்களுக்கென்று பார்த்து வைத்திருந்த வீட்டில், சாமான்களை நிரப்பினர்.

வாழைகள் கட்டப்பட்டன. மைக்செட் முழங்கியது. திருமண வேலைகளுக்கு கிராமத்தினரே ஒத்துழைத்தனர்.

மாப்பிள்ளை வீட்டாரும், மிகுந்த சந்தோஷமாகக் காணப்பட்டனர். கிராமத்தினர், ஆசிரியர் பெரியசாமி மீது வைத்திருக்கும் மரியாதையைக் கண்டு மகிழ்ந்தனர்.

இரவு பத்து மணிக்கு மேலாகிவிட்டது. தாய் மாமா, மாப்பிள்ளையின் அப்பாவின் காதில் கிசுகிசுத்தார். அவரது முகம் மாறியது. கண்கள் விரிந்தன.

“என்னை என்ன இளிச்சவாயனா நினைச்சாரா? ‘பொண்ணுக்கு போட முடிஞ்சா செய்யட்டும்… என்ன அர்த்தம்? மூவாயிரத்தை ஏமாத்த இந்தத் திட்டமா…? விடியட்டும்… நா பார்த்துடுறேன்…” என்று சவால் விடுவதுபோல ஆவேசமாகச் சீறினார்.

விடிந்தது…

வெளியூரிலிருந்து உறவினர் வந்தவண்ணமிருந்தனர். பந்தி நடந்தது. கிராமத்தினர் எல்லோரும் வந்தனர்… சாப்பிட்டனர். ‘வெள்ளையும் சொள்ளையுமாக’ வளைய வந்தனர்.

தன் வாழ்வையே அவர் காலடியில் சமர்ப்பிக்கின்றனரே, அவர் அந்த வாழ்வைப் போற்றிப் பாதுகாப்பாரா…? பூவாக நினைத்து பிரியம் காட்டுவாரா…?

புகைந்து சுருங்கிப்போன சிகரெட் துண்டாகப் பாவித்து, நசுக்கிப் போட்டுவிட்டுப் போய்விடுவாரா…?

அவளுள் நம்பிக்கையும் தலை காட்டியது; அவநம்பிக்கையும் அலைக்கழித்தது.

‘பெண்ணோட வாழ்க்கை சுயதன்மையேயில்லாமெ,ஏன் இப்படி முழுக்க சார்புத்தன்மையாயிருக்கு? அதனாலேதா இந்த உத்தரவாதமின்மையா? தாலியை வாங்கும் போதும் கூட திகிலுடன் பீதியுடன்தானே ஏந்த வேண்டியிருக்கு!’

நினைத்தால் ‘ச்சே’ என்றாகிப்போகிறது. மனசே சோர்ந்து, துவண்டு, கசந்து போகிறது. தன் பிறவி மீதே ஆத்திரம் வருகிறது.

ஒலிபெருக்கியின் இசைத்தட்டு முழுக்கம். மனிதர்களின் கசகசப்பு சப்தங்கள்.

நாட்களை எதிர்பார்த்ததுபோய் …இப்போது நிமிசங்கள்…

“பொண்ணைக் கூட்டிட்டு வாங்க” என்ற பல குரல்களில் கூவல்.

“சீதம்மா…போ.கூட்டிட்டு வா.” பெரியசாமியின் குரல்.

தோழிகள் அழைத்துச் செல்ல, முழுமைபெற்ற அலங்காரத்துடன் ஒரு தேவதையாக

மணவறையில் உட்கார்ந்தாள். குரல்களில் ஓர் அவசரம் தெரிந்தது.

“சீக்கிரம் சீக்கிரம்” என்று துரிதப்படுத்தும் குரல்கள். “ஏய்… மைக்செட்காரனை மங்கள ரிக்கார்டு போடச் சொல்லுங்கப்பா” என்ற பெரியசாமியின் குரல்.

சம்பந்தி குறுக்கிட்டார். அந்தக் குறுக்கீடு ஓர் அபசகுனமாய்.. ஓர் இடறலாய்…

“அதுக்குள்ளே பேசுனதைக் குடுத்துட்டா நல்லது.” தீர்மானமாக அவரின் குரல். அந்தக் குரலின் கண்டிப்பு. அந்த சூழ்நிலையின் உணர்வையே மாற்றியது.

திடுக்கிட்டுப் போய் நிமிர்ந்தாள் ராஜி.

“என்ன சொல்றீக சம்பந்தி?”. – பெரியசாமியின் துடித்துப்போன வேதனைக்குரல்.

“பேசுனபடி மூவாயிரம் வரணுமே, இன்னும் தரல்லியே.”

“நடக்கட்டும்; நா தர்ரேன்.”

“முடிஞ்சபிறகு, தருவீகளா, மாட்டீகளாங்கிறதா இப்பப் பிரச்னை? பேசுனபடி குடுத்துடுங்க… மனுஷனுக்குப் பேச்சுப்படி நிக்கணும்னு நெனப்பு வேண்டாமா?”

“நா இல்லேன்னு சொல்லலீயே… பொறுங்க… முடியட்டும். ரெண்டு வாரத்துலே எப்படியாச்சும் ஏற்பாடு பண்ணிக் குடுத்துடுறேன்…”

“அதெல்லாம் முடியாதுங்க. பேசுனா பேச்சுப்படி இருக்கவேணும். அதுதான் முக்யம்.”

”நா, எவ்வளவோ ட்ரை பண்ணிப் பார்த்தேன். மூடியலை.”

“அதுக்கு நான் என்ன செய்யறது?”

பேச்சு வளர்ந்தது. பேச்சில் உஷ்ணம் ஏறியது. வார்த்தைகள் தடித்துச் சிதறின.

ராஜி பயந்துபோனாள். மனசெல்லாம் அதிர்ந்து விதிர் விதிர்த்து… குலுங்கி… நடுங்கி… பேய் மழையில் சிக்கிக்கொண்ட கோழிக் குஞ்சைப்போல …

கூட்டம் திக்பிரமை பிடித்து நின்றது. இந்தக் கிராமத்தில் இந்த மாதிரி அவலம் சரித்திரத்திலேயே கிடையாது. இது புதிது. நகரத்துப் பழக்கம். புரியாமையுடன் திகைத்து நின்றது.

பெரியசாமி மனசெல்லாம் குழம்பி… எதுவும் பேசமுடியாதவராகி… சக்தியையெல்லாம் இழந்தவராகி… குண்டடிப்பட்ட ஊமையாக..

சம்பந்தி அதட்டலுடன் சீறினார்:

“என்னடா…இப்படி முழிச்சிக்கிட்டு உட்கார்ந்து இருக்கே…எந்திடா.”

ராஜி, மூகமெல்லாம் வெளுத்துப் போனாள். திகிலுடன் மாலையுடன் அமர்ந்திருந்த அவரைப் பார்த்தாள்.

அவனும், இவளைப் பார்த்தான். பார்வையில் கருணையா..தர்மசங்கடமா… பயமா…?

திகிலில் ராஜி உறைந்துபோனாள்.

“எந்திடா மடப்பயலே…” சம்பந்தியின் காட்டுக் கூச்சல்.

“என்னடா, செவிடா? எந்திடா.”

”அப்பா!” – அவனது குரல். அந்தக் குரலின் நிதானம், அந்தச் சூழலுக்கே வினோதமாக இருந்தது. பொங்கி வழிகிற பாலில் விழுந்த நீர்த் துளிகளாக… சூழலையே மாற்றிவிட்டது.

“எனக்குத் தாலி கட்டப்போற வயது. அதட்டுன உடனே தலையையாட்டிக்கிட்டு வர்ரதுக்கு… நா ஆட்டுக் குட்டியில்லே…”

அவரது அப்பாவின் முகத்தில், சுருக்கங்கள் விரிந்துவிட்டு ஒடுங்குகின்றன. இருள் படிகிறது. எக்களிப்புடன் சுழன்ற விழிகள், எதிலோ முட்டிக் கொண்டதைப்போல திகைத்துக் குழம்பி… அலங்க மலங்க தவித்தன… சுரத்திழந்துபோய் கேட்டார்:

“என்னடா… சொல்றே?”

மணமகன் தீர்மானமாகப் பேசினான். பதுங்கிக் கிடந்த உணர்ச்சிகளின் பீறிடலாக… துல்லியமாக ஒலித்தன:

“அன்னிக்கு நீங்க பேச்சு வார்த்தை நடத்துனதே எனக்குப் பிடிக்கலே. ஆனாலும் கஷ்டப்பட்டு வளர்த்த பெரியவங்க மனசைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு, கம்முன்னு இருந்தேன். ஆனா… அது ரொம்ப வரம்பு கடந்து போகுது. உங்க சூதாட்டத்துக்கு பகடைக்காயா நா உருள முடியாது. நா வெறும் ஜடமில்லே! மனுஷன். சிந்திக்கத் தெரிஞ்ச மனுஷன்!…”

அப்பாவின் முகம் காகிதமாய் வெளுக்கிறது. தாங்கமுடியாத அவமானம், ஆயிரம் ஊசிகளாக நெஞ்சைக் குத்திக் குடைகின்றது.

‘அவர்’ ஒரு சிகரமாய்… மனசுக்குள் உயர்வதை ராஜி உணர்கிறாள். கன்னத்தில் வழியும் சீழை, ஏதோ ஓர் அன்புக்கரம் துடைப்பது போன்ற பிரமை.

அந்தக் கரத்தின் பரிவு… கடலாய் ஆழ்ந்து விரியும் கருணை… அவளை மெய்சிலிர்க்க வைக்கிறது.

…அவன் தொடர்கின்றான்.

“இன்னிக்கு நடக்கிற விழா, ஆயுள் பூராவும் நாங்க நடத்தப் போற வாழ்க்கைக்கான துவக்கம், அஸ்திவாரம். அந்த அஸ்திவாரமே இப்படிப் பேரத்திலேயும், மிரட்டல்லேயும் துவங்குனா… அன்பும் பாசமுமான வாழ்க்கையை நாங்க வாழமுடியாது. சுயநலமும்,மிருக வெறியுமான வியாபாரந்தான் நாங்க நடத்த முடியும்…

“அப்பா, முடிவா சொல்றேன்… உங்களுக்கு என்னோட நலன்லே அக்கறையிருந்தா… இருந்து எங்களை ஆசீர்வதியுங்க. அம்புட்டுத்தான் சொல்வேன்.”

ஒரு கனத்த மௌனம்…அங்கு நிலவியது. மூச்சுச் சப்தங்கள்கூட துல்லியமாகக் கேட்டது.

கிராமத்துப் பெரியவர் ஒருவர் மௌனத்தை உடைத்தார்:

“அப்புறம் என்னப்பா… மாப்பிள்ளையே சொன்னபிறகு… மறுபேச்சு என்ன கிடக்கு? மங்கள ரிக்கார்டை போடுங்க” என்றார். அவர் குரலில் சந்தோஷமும், பெருமிதமும் ததும்பியிருந்தது.

பெரியசாமிக்கு நெஞ்சில் உயிர் வந்தது…

கூட்டம் மீண்டும் கசகசத்தது.

ராஜி… தன்னுள் உடைந்து… உருகி… கரைந்து… மானசீகமாக அவன் நெஞ்சில் வழிந்தாள்.

அவனின் கருத்த முகம்… இப்போது சூரியனாகப் பிரகாசிப்பது போலிருந்தது.

– செம்மலர், ஏப்ரல். 1981.

– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு:  2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *