கரையெல்லாம் செண்பகப்பூ

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 169 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம் – 11

அந்தக் காட்சி அவனை அதிர வைத்தது. கிராமத்தின் வெளிப் பிம்பம் மேம்போக்கானது. அடித்தளத்தில் இருக்கும் பழைய நம்பிக்கைகள், மூர்க்கம், பயங்கள் எல்லாவற்றையும் திடீர் என்று உணர்த்துவது போல இருந்தது, அந்தக் கோழியின் மரணத்திற்கு முற்பட்ட ரத்த நடனம். 

அந்தப் பரிதாபப் பறவை அடங்கிப் போன பின் பூசாரி அதை அலட்சியமாக எடுத்துக் கொண்டு உள்ளே செல்கையில் கல்யாணராமனைப் பார்த்து “என்னங்கய்யா?” என்றான். 

“எதுக்குய்யா பலி?” 

“ஒண்ணுமில்லிங்க. வெள்ளி கொணாந்து கொடுத்து ஒரு தடவ காவு வாங்கிடு பூசாரி. என் கஷ்டம் எல்லாம் தீரட்டும்னு சொல்லிப் போட்டுப் போச்சு.” 

“பாவம்யா. எத்தனை நாழி துடிச்சது !”

“வெள்ளிதானே? ஆமாங்க!”

“இல்லை, கோழி!” 

“கோளி இந்நேரம் பரமபதம் போயிருக்குங்க”. வெள்ளி அவசரமாக வந்தாள். “என்ன பூசாரி ஆயிடுச்சா?” 

“ஆயிடுச்சு வெள்ளி, இந்தா இட்டுக்க” அவள் நெற்றியில் ரத்தம் இட்டான். “பேய்க் கோயிலுக்கு ஒருக்கா போய்ட்டு வந்துரு. குறளி ஏவி விட்டா கல்லு மாரி பொய்யும். அதுக்கு அவசரமில்ல… அதுக்குள்ள நான் சொல்றதை…” 

“அய்யா இருக்காக” என்றாள் பதட்டத்துடன் கல்யாணராமனைப் பார்த்து. “ஊர் கூட்டத்தில் நீங்க, இருந்திகல்ல. என்னப் பேச்சுப் பேசுதாரு பாத்திங்களா! ஊர்க் கட்டு ஒரு ரூவா கொடுக்கமாட்டாராம். எங்க ஊட்ல சன்னலண்டை சத்தம் போடுதாரு. கொடையெடுக்க யாராவது: வந்தாக்கா கொலை நடக்குமாம். எங்கப்பாரைக் கொன்றுப் போடுவாராம்! பேசற பேச்சைப் பாருங்க. ஏ வெள்ளி! உன்னைய எவண்டி கட்டிப்பான்? சிக்குப் புடிச்சவளே! கருத்த பொண்ணே! தொரை எலுமிச்சம் பளம்! கத்தறாரு! எனக்கு ஆந்து ஆந்துப் போவுது. இவரு இந்த மாதிரிப் பேசவே மாட்டாருங்க. அந்த கவட்டைக் கால் சக்களத்தி சொல்லிக் கொடுத்திருக்கா… சும்மா உட்டுருவேனா? பார்த்துக்கிட்டே இருங்க! அவளைத் தீர்த்துக் கட்டிர்றனா இல்லியா, பாருங்க. ஈருவலிக் குச்சி; நல்ல பாம்பு குட்டி போல வந்து சேர்ந்தா.” 

பெரியாத்தா அவர்களுடன் சேர்ந்து கொண்டு கவனித்தாள். “அது இன்னாடி அந்தப் பேச்சு பேசுதாமே. அவளக் கட்டிக்கப் போறானாமே!” 

“கட்டிக்க உட்டுருவனா!”

“நாலு மகிளம் பூவு 
நாப்பத்தெட்டு ரோசாப் பூவு” 

“நானெடுத்துக் கொஞ்சும் பூவை- இப்ப எவளெடுத்துக் கொஞ்சுறாளேன்னு ஆயிடிச்சே! செட்டிக்கடை வெட்டி வேற மாதிரி இருக்கே சிவகாசிப் பன்னீரு மாதிரி இருக்கே நீ மூதேவி அவகாசம் எப்படி வந்தது?” 

“என்னவோ வேளை சரியில்லை, பெரியாத்தா. மேகலாபுரம் பாடியாபுரம் எல்லாம் பெண் கேக்க வந்தாங்க… என்னவோ இந்த மனுஷன் ஊரோட இருக்காரே, வெவசாயம் மராமத்து பாக்கிற ருன்னுட்டு எங்கப்பாரு ஊம்னுட்டாரு; சம்மதிச் சுட்டாரு. இப்ப அவன் வீட்டு வாசல மிதிக்காட்டாரு.” 

“வெள்ளி! நிஜமா சொல்லு. நீ மருதமுத்துவை வெறுக் கறியா; வேண்டாம்ங்கறியா?” 

“நானா! நானா!” – வெள்ளி திகைத்தாள். கண்கள் தவித்தன. “சொல்லத் தெரியலியே அய்யா, சொல்லத் தெரியலியே!” என்றாள். 

“முதமுத அந்த நீலி வெச்ச சூனியம் வெலகட்டும். அய்யா வைப் பாக்கத்தான் வந்தனுங்க” என்றாள் பெரியாத்தா. 

“சாரி! கொஞ்சம் அந்தால வாங்க!” 

அவர்கள் இருவரும் ஒதுக்குப்புறமாகச் செல்ல, கல்யாண ராமன் திரும்பி தன் அறைக்குச் சென்றான். பெரியாத்தா கூட வந்தாள், பேசிக்கொண்டே. 

“அந்தப் பொம்பளை சரியில்லீங்க! என்னதான் சமீன் வமுசமா இருந்தாலும்… பாவம் வெள்ளி, சொல்லிச் சொல்லி அளுவுது…” 

“உனக்கு அரைகுறை காது. அரைகுறை ஞானம். பேசாம வா” 

“ஒரு ரூபா கொடுத்தீங்கன்னா ஆளாக்கு அரிசியும்…”

“வா! வா” 


ஜமீன் வீட்டின் இடப்புற வெட்ட வெளியில் டிராக்டர் சிறுகுழந்தைபோல் குதித்து வட்டமிட்டுக் கொண்டிருந்தது. சினேகலதா ஓட்டிக் கொண்டிருக்க, மருதமுத்து ஸீட் அருகில் அபாயகரமாக நின்றுகொண்டு அவ்வப் போது ஸ்டியரிங்கை நேராக்கிக் கொண்டிருந்தான். சினேகலதாவின் சிரிப்பு அங்கே கேட்டது. கல்யாணராமனைப் பார்த்தும் நேராக அவன்மேல் ஓட்டுபவள்போல வந்தாள். அவன் ஒதுங்கிக் கொள்ள, சிரித்து நிறுத்தினாள். 

“ஹாய்! நீங்க ஓட்டிப் பாக்கறீங்களா?”

“வேண்டாம்.” 

“ஹாய் கிளவி! இதாரு புதுசா…? கர்ள் ஃப்ரெண்டா?”

ஒரு ராணிபோல் உட்கார்ந்திருந்தாள். மருதமுத்து குதித்து இறங்கினான். “நல்லா கத்துக்கிட்டாங்க!” 

“பஞ்சாயத்தாமே என்னைப்பத்தி?” என்றாள். 

“உங்களைப் பத்தி இல்லை.” 

மருதமுத்து “அப்பன்காரன் என்ன பேச்சுப்பேசினான், பார்த்தீங்களா? வெள்ளி போயி ஒண்ணுக்குப் பத்து சொல்லி வச்சுட்டு. அனாவசியமா ஊர்க்கட்டம் கூடினாக. நேர வந்து என்னையக் கேட்டிருக்கலாமில்ல? ஊர்க் கூட்டம் என்னைய அவமானப்படுத்தத்தானே? பைனடிக்கிறீங்களா? நான் கட்டுவனா? என்ன பெரியாத்தா?” என்றான். 

“ஆமாம், வெட்டிப் பயலுவள்ளாம் ஊர்க்கூட்டம் போடு தாங்க! சமீனு வம்சமும் சின்னக் குளந்தை! நீ ஏதோ இதுக்கு இங்கே அங்கே ஊரு சுத்திக் காட்டிப்புட்டாத் தப்பா என்ன? எப்படி இருக்குது பாரு… ரோசாப்பூ மாதிரி! என் ராசா…த்தி! என் செல்லமே! கண்ணுக் குட்டி!” 

பெரியாத்தாவின் திடீர்க் கட்சி மாற்றம் கல்யாண ராமனைத் திகைக்க வைத்தது. 

“இருந்தாலும் மருதமுத்து, நீ ஒரு வழிக்குக் கட்டுப் பட்டுத்தான் ஆகணும்” என்றாள். ‘உன் மனசிலயோ சினேகலதா மனசுலயோ களங்கம் எதுவும் இல்லாம இருக்கலாம். ஆனா வெள்ளி படிக்காத பொண்ணு. உன்னைக் கூட்டிக்கப் போறவ. அவ பார்வையில் இருந்து…”

“அவளை இனி யாரு கட்டுதாங்க?” 

“பின்னே?” 

“நானும் கட்ட மாட்டேன். கட்டிக்க வர்றவங்களையும் காலை ஒடிச்சுப் போட்டுருவன?” 

“சபாஷ்” என்றாள் சினேகலதா. 

“என்ன சபாஷ்! புரியாத பேசறிங்க!” 

“அந்தப் பொண்ணு கன்னியாகவே கிழவியாயிடட்டும்!”

“டோன்ட் பி ரிடிக்யுலஸ்!” 

“ஆ… மா! வெள்ளியை மருதமுத்துவோட இணைக்க நீங்க ஏன் இவ்வளவு பாடுபடறீங்க? இந்தப் பிறவில நீங்க சந்தோஷம்னா படணும்?” 

அவளை நிறுத்தி நிதானமாக முறைத்தான். ஏன் அவனை இந்த மாதிரி உபயோகப்படுத்துகிறாய்? என்றான் ஆங்கிலத்தில். 

“அவன்தான் என்கிட்ட வரான்! என்ன எழவா இருக்கு? டிராக்டர் கத்துண்டா தப்பா என்ன?” என்றாள் தமிழில். 

கிராம ஜனங்கள் சின்ன விஷயங்களுக்கெல்லாம் வெட்டு குத்துன்னு ஆரம்பிச்சுடுவா 

“அப்படியா? மருதமுத்து பாடிகார்ட் இருக்கான்; எனக்கு என்ன கவலை! என்ன மருதமுத்து?” 

“நான் இருக்கிற வரைக்கும் உங்களை யாரும் அண்ட முடியாதும்மா! நானும் நீங்களும் ஒரு கச்சி.இந்த ஊரே எதிர்க்கட்சியா இருந்தால்கூட சமாளிப்பேன். டிராக்டரை வெச்சுக்கிட்டு ஒர்ரே ஓட்டு! என்ன பெரியாத்தா?” 

“அதானே! பேரிச்சம்பளம் மாதிரி இருக்குது. பெரிய எடத்துக் கிரீடம். இது கிட்ட விசுவாசமா ரெண்டெடம் காட்டி, டாக்டருக்கு ஓட்டிக் காட்டினா தப்பா? ஊரு எல்லாந்தாஞ் சொல்லும் மருதை! விசுவாசங் கெட்ட களுதைங்க கிட்ட என்ன சவுகாசம்!” 

“மருதமுத்து! நான் சொன்ன காரியம்” என்றாள் சினேகலதா.

“செஞ்சுறலாங்க!” 

“என்ன காரியம்?” என்றான் கல்யாணராமன். 

“அது வந்துங்க…” 

“ம்! மூச் அய்யாகிட்ட சொல்லக் கூடாது.” 

“ஐ டோண்ட் கேர்!” 

மருதமுத்துவும் நானும் ஒரு தனி எடத்துக்குப் போகப் போறோம்… இல்லே மருதமுத்து?” 

“ஆமாங்க…”

“போய்ப் பூப்பறிக்கப் போறோம்… செண்பகப்பூ!” 

இருவரும் ஏதோ பகிர்ந்த ரகசியத்தில் சிரித்தார்கள்.

“ராசா… த்தி! அப்படியே ரத்னம்மா சிரிச்ச மாதிரி சிரிக்குது.”

அந்த விவஸ்தை கெட்ட கிழவி பின் தொடர, அறைக்குச் சென்றான். பெரியாத்தா வாசலில் உட்கார்ந்த உடனேயே, 

“திருச்செந்தூர் ஒரத்தில 
விரிச்சதலைப் பாலத்தில 
விரும்பிச் சொன்ன சத்தியங்கள்
வீணாகப் போனதய்யா.” 

என்று பாட ஆரம்பித்தாள். “பெரியாத்தா! இன்னிக்குப் பாட்டு வேண்டாம். இந்தா ஒரு ரூபா! ஆழாக்கு அரிசி, மல்லிக் காப்பி, குழந்தைக்கு அரை நாண்!” 

“ராசா மவனே! இந்த வெவகாரத்தில நீங்க சொன்னதுதான் சத்தியவாக்கு. மருதமுத்து ஒரு வளிக்குக் கட்டுப் பட்டுத்தான் ஆவணும்! என்னதான் மனசில கல்மசமில்லாம இருந்தாக்கூட வெள்ளியைக் கட்டிக்கப் போறவன் தானே! இப்படித் தொட்டுத் தொட்டுப் பேசலாமா?” 

“பெரியாத்தா! நீ அரசியல்ல இருக்க வேண்டியவ!” 

“அ! அரசிலயா! பறிச்சுக்கறங்க! முருங்க எல கூடக் கொஞ்சம் பறிச்சுக்கறங்க!”

*** 

தூரத்தில் டிராக்டர் சப்தமும், சினேகலதாவின் உற்சாகக் குரலும் கேட்டுக் கொண்டிருக்க, அவள் அறையில் எட்டிப் பார்த்தான். ஜன்னலோரம் ஸ்டூல் போட்டு அதன் மேல் ரத்னாவதியின் நோட்டுப் புத்தகம் இருந்தது, கையை நீட்டிப் பார்த்தான். எட்டும் போலிருந்தது. குற்ற உணர்வுடன் அதை எடுத்தான். தன் அறைக்கு வந்தான். கட்டிலில் உட்கார்ந்து முந்திய தினம் விட்ட இடத்தில் தொடர்ந்து படித்தான். 

“எனக்காகக் கண்ணில தண்ணிவிட யாருமில்லே. பிள்ளைகளுக்கு விவரம் தெரியாத வயசு. வீடுதான் பெரிசு. வாரிசா வந்த சொத்தையெல்லாம் அளிச்சுப் போட்டு, வெள்ளைக்காரங்களுக்கு வாங்கிக் கொடுத்துக் கொடுத்து ஏதோ ஒரு பட்டப் பேருக்காக அல்லாடி, ஜில்லா போர்டு எலெக்ஷனுக்காக ஏரோப்ளேன் வெச்சு சீட்டுப் போட்டு, ஓட்டுப் போட்டவுங்களுக்கெல்லாம் ஒரு பவுனும் ஒரு பட்டுச்சீலையும் கொடுத்து, தோத்துப் போயி, சொத்தெல்லாம் காத்தாப் போயி, கரஞ்சு போயி, நிம்மதி வந்து, கூடவே அமீனாவும் கடங்காரங்களும் வர, இப்ப என் நகைகளைக் கேக்குறாரு!” 

“எங்க பாட்டிக்குப் பாட்டி பரம்பரையாகக் கொடுத்த நகைகள். அழிச்சுப் புதுப்பிச்சு மெருகேத்தி நேத்து நிறஞ்சு கொஞ்சம் கொஞ்சமாகப் பண்ணிக் கொடுத்த ரெத்தினங்கள். அதைக் கழட்டிக் கொடுக்க எனக்கேது அதிகாரம்? ‘கடன்காரன் வாசல்ல நிக்குதான், பதில் சொல்லிப் போடணும். நகைகளைக் கொடு. மீட்டுக் கொடுத்திடறேன்னாரு. யானைப் பசிக்கு சோளப்பொறி! நான் மாட்டன்னுட்டன். வீட்டை வித்துக்க, நிலத்தை வித்துக்க, என் நகைகளைப்புடுங்க விடமாட்டன். எங்கிருந்தோ தகிரியம் வந்துடுச்சு. பாளாப் போன நகைகள் மேலதானா ஆசை? என்மேல ஆசையில்லையா? ரத்னாவதி நகைகளை மாட்டியிருக்கிற சட்டமா? அம்புட்டுத்தானா? எனக்குன்னு ஆசை யில்லையா? எனக்குன்னு ஒரு செல்வாக்கு? சுகம்? சாட்டை எடுக்குறாரு, அடிங்கன்னுட்டன் இந்தத் தடவை. முதுகில துணியை உரிச்சாரு. வீறினாரு. சூடு போடறாப்பல வலி. மூலத்தைப் பிடிக்குது. அடி விளுவறப்ப அவ்வளவு தெரியறதில்லை. முதுகில படிஞ்சு அடி விலகறப்போ சிரிச்சன். ‘கொன்னே போடுறன்னு போய்ட்டாரு. நான் இங்க வந்து சேர்ந்த முத நாளில் இருந்து நீ என்னைய ஏறிட்டுப் பார்த்து செல்லமேன்னு ஒரு வார்த்தை சொல்லி யிருக்கியாய்யா? நகைகளைக் கேக்க என்ன உரிமை இருக்குனக்கு? (இந்த இடத்தில் கண்ணீர் விட்டு இரண்டு வார்த்தைகள் அழிந்திருந்தன) விசாலாட்சி முத்தம்மா! நாளும் உங்களைக் கும்பிட்டு என்னடி எனக்குப் பலன்? முதுகிலே சாட்டையடி! குனிஞ்சுக்கங்கறாரு குனிஞ்சுக்கறேன்! இனிக் குனிய மாட்டேன். தீர்மானம் பண்ணிப்புட்டேன்! என் நகைங்களை யாருக்கும் தரமாட்டேன். கயவாளி மக்கள் ஒருத்தருக்கும் அது நிச்சயம் போகக்கூடாது. என் புருஷனுக்கு அது போகக்கூடாது. அதுக்கு ஒரு வழி செஞ்சிருக்கேன். எல்லா நகைகளையும்…”
 
‘சேர்த்து’ என்று படிப்பதற்குள் நோட்டுப் புத்தகம் அவன் கண் முன்னேயிருந்து பறிக்கப்பட்டது. திடுக்கிட்டுத் திரும்பினான். 

“நான் இல்லாதபோது என் பாட்டி டயரியைத் திருட்டுத் தனமா எடுத்து படிக்கிறீங்களா? உங்ளையும் பஞ்சாயத்தில விசாரிக்கணும்!” என்றாள் சினேகலதா. 

“நான்தானே கண்டுபிடிச்சேன்!” 

“கண்டுபிடிச்சா படிக்க உரிமை ஏற்பட்டுடறதா! எது வரைக்கும் வந்திருக்கிங்க?” 

“நகைகளை ஜமீன்தார் கட்டாயப்படுத்திக் கேக்கறார்!”

“அதுவரைக்கும் தானா? நல்லவேளை!” 

“ஏன்?” 

“நான் முழுக்கப் படிச்சுட்டேன்!” 

“கடைசில என்ன ஆறது?” 

“அப்புறம் தர்றேன். படிச்சுப் பாருங்க!” 

“நீங்க இனிமே தர மாட்டிங்க.”

“ஏன்?” 

“நீங்க எதையோ மறைக்க விரும்பறீங்க!”

“வாட் டு யூ மீன்?” 

அவள் சதா உபயோகிக்கும் புன்னகை இப்போது இல்லை.

“சினேகலதா! நீங்க வந்ததில இருந்து நான் உங்களை வாட்ச் பண்ணிக்கிட்டு வரேன். வெளிப்படையா நீங்க வெகுளி யாத் தென்பட்டாலும், உங்க ஒவ்வொரு அசைவிலயும் ஏதோ ஒரு தீர்மானம் ஒரு திட்டம் இருக்கறதா எனக்குப்படறது. இந்த டயரியை நான் படிக்கறதை நீங்க விரும்பலை. அது சுலபமா எனக்குத் தெரியுது. அதே போல மருதமுத்துவோட நீங்க விளையாடற விளையாட்டிலும் ஏதோ ஒரு குறிக்கோள் இருக்கிறதா எனக்குத் தென்படுது. அஃப்கோர்ஸ் ஐ கேன் பி ராங்.” 

சினேகலதா சற்று யோசித்தாள். 

“மிஸ்டர் கல்யாணராமன்! நான் அந்த டயரியை மறைக்க விரும்பறதுக்குக் காரணம் சொல்லட்டுமா?” 

“இஷ்டமிருந்தா சொல்லுங்க…” 

“ரத்னாவதி தற்கொலை பண்ணிக்கிட்டு சாகலை! அவளை ஜமீந்தாரே கொன்னிருக்கணும்!” 

“இஸ் இட்! எப்படிச் சொல்றீங்க?” 

“டயரியைப் படிச்சா தெரியுது. நகைகளுக்காக அவளைத் தினம் அந்தக் கிராதகன் அடிச்சு அடிச்சுப் புடுங்கப் பார்த் திருக்கார்! ஒருநாள் ராத்திரி ஓவராப் போயி…” 

தயங்கினாள். எங்க அழகான முன்னோர்களுடைய சீர்கேட்டை நீங்க படிக்க வேண்டாம்னுட்டுத்தான் உங்களுக்கு டயரியைக் காட்ட விரும்பலை!” 

“புரியறது” என்றான். 

“மிஸ்டர் கல்யாணராமன்! என்கிட்ட வேற ஒரு ரகசியமும் கிடையாது. அனாவசியமா கற்பனை பண்ணிக்காதீங்க! நான் ஒரு திறந்த புத்தகம்.” 

அவள் அவனை நேராகப் பெரிய கண்களால் பார்த்து, “படிக்கிறீங்களா?” என்றாள். 

“டயரியை வேணாப் படிக்கிறேன்.” 

“பாத்தீங்களா! பழையபடி ஆரம்பிச்சுட்டீங்க! கமான் கல்யாணராமன்!” 

“ஸாரி, சினேகலதா! நீங்க அழகான பெண்தான். வசீகரமான பெண்தான். இருந்தாலும் இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கிறது எனக்கு சரியாப் படலை. லெட்ஸ் பி ஃப்ரெண்ட்ஸ்.” 

சரியான லூஸ் அய்யரே நீங்க! என்று சொல்லிச் சென்றாள். கல்யாணராமன் சிரித்துக் கொண்டான். ‘என்னிடம் ஏதோ தவறு நிச்சயம் இருக்கிறது. ஏன் இந்த சுலபமான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள மாட்டேன் என்கிறேன்?’ 

சினேகலதாவைப் பற்றிய சந்தேகங்கள் முழுவதும் விலகி விட்டனவா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. எங்கோ ஓர் இடத்தில் அவள் மழுப்புவது தெரிகிறது. எங்கே?

“மருதமுத்துவும் நானும் ஒரு தனி இடத்திற்குப் போய் செண்பகப்பூ பறிக்கப் போறோம்.’ 

“செண்பகப்பூ!”

நேற்று ரத்னாவதியின் புத்தகத்தில் இருந்த செண்பகப்பூவைக் காட்டி, ‘இது என்ன? அவள் கேட்டது ஞாபகம் வந்தது. 

“செண்பகப்பூ!”
 
மருதமுத்து படுத்துக் கொள்ள வந்தான். 

“சினேகம்மா! நீங்க சொன்னீங்களே! கொண்டாந்திருக்கேன்! என்று அவன் பேசியது கல்யாணராமனின் கவனத்தைக் கவர்ந்தது.என்ன கொண்டு வந்திருக்கிறான்? 

ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தான். 

மருதமுத்து அவளிடம் ஒரு நீண்ட தாம்புக் கயிற்றைக் காட்டிக் கொண்டிருந்தான். 

அத்தியாயம் – 12

சினேகலதா மருதமுத்துவுடன் தாழ்ந்த குரலில் பேசுவதைக் கவனித்தான் கல்யாணராமன். கயிறு எதற்கு என்று புரிய வில்லை. சொல்லி வைத்தாற்போல் இருவரும் தீர்மானமாக நடந்து எங்கோ செல்வதையும் கவனித்தான். தான் இது நாள்வரை பார்த்த சம்பவங்களின் அடித்தடத்தில் மற்றும் ஒதோ ஒரு ரகசியம் பொதிந்திருப்பதை உணர்ந்தான். தூக்க மின்றி சற்று நேரம் விழித்திருந்தான். செண்பகப்பூ உறுத்தியது. வெட்டப்பட்ட கோழி ரத்தம் கொப்பளித்தது. எதையோ நினைத்து எதற்கோ வேதனைப்பட்டான். அவர்கள் இருவரும் எப்போது திரும்பி வந்தார்கள் என்பது தெரியாமல் தூங்கிப் போய்விட்டான். 


காலை தங்கராசு வந்திருந்தான். இந்த வருசம் கொடை வெள்ளியோட அப்பாருதான் எடுக்கறதா முடிவு பண்ணிட் டாங்க…” 

“மருதமுத்து கலாட்டா செய்யப் போறான்யா?” 

“இல்லிங்க, விட்டுக் கொடுத்துட்டான். ஆனா ஊர்க்கட்டு ஒரு ரூபா கொடுக்க மாட்டான்னுட்டான். விலக்கி வெச்சிட்டம். 

“விட்டுக் கொடுத்துட்டானா…?” ஆச்சரியப்பட்டான். 

சினேகலதா வெளியே வந்தாள். நான்தான் விட்டுக் கொடுத்துடச் சொல்லிட்டேன். அனாவசியமா என்னால எதுக்கு சண்டைன்னு மருதமுத்துக்கிட்ட பேசிட்டேன். 

“அம்மா சொல்லிட்டாப் போதும், மருதமுத்து அப்படியே அடங்கிடறான். நல்லதாப் போச்சுங்க. கலகம் வராம தடு துட்டிங்க. 

“என்ன தங்கராசு? பெண்சாதி டவுன்ல இருந்து வந்தாச்சா?” தங்கராசு குழைந்தான். “எப்பவும் விளையாட்டுப் புத்தி சின்னம்மாவுக்கு.” 

“உன் பெண்சாதியைப் பார்க்கணுமே! கூட்டி வாயேன்.”

அசட்டுத்தனமாகச் சிரித்துப் பேச்சை மாற்றினான். “நான் வந்தது வேற விசயங்க. கொடை பத்து நா நடக்கும். வில்லுப் பாட்டு, கரவம், நையாண்டி மேளம், ஒயில் கும்மி எல்லாம் உண்டுங்க. சங்சனில் இருந்து சம்முகம் வரான். அய்யா சிறு பயலுவளை வெச்சிக்கிட்டுப் பாட்டுப் போட்டதா கேள்விப்பட்டேன். முத நா நீங்க வந்து அவுங்களை பாடிக்காட்ட வெக்கணுங்க. கலெக்டர் துரை வர்றாரு. ரொம்ப சந்தோஷப் படுவாருங்க.”
 
“பார்க்கலாம்.” 

“கல்யாணராமன் ஸிம்ஃபனி ஆர்க்கெஸ்ட்ராவா? ஜமாய்ங்க. ஏன்யா, நான் உண்டா? நல்லா டான்ஸ் பண்ணுவேன். மங்க்கி, ஜெர்க், ஷேக்! நான் வரலாமா?” 

“நீங்க இல்லாமயா?” 

‘ஷய்க்’னு விஸில் அடிக்கறேன. நல்லா கைதட்டுவேன். அய்யரே, கடாட்சம் இருக்கணும்” என்று சேவித்தாள். அபாரப் புன்னகை. 

“நீங்க ஊருக்குப் போறதா ஒரு பக்கத்தில பேச்சு அடிபட்டதே!” 

“ஏன் இன்னும் இங்கேயே இருக்கேன்கறிங்களா? போறேன், போறேன். இன்னும் கொஞ்ச நாள்!” 

“என்னிக்குக் கொடை ஆரம்பம்?” என்றான் கல்யாணராமன். 


வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோயில் வாசலில் இடப் பக்கம் பந்தல் கட்டியிருந்தது. மைதானத்தில் தகர ராட்டினம் சுற்றியது. நாகக் கன்னிகை பெண் தலையும் பாம்பு வாலுமாகச் சிரித்தாள். இரண்டு தலை ஆடு அருவருப்புத் தந்தது. சின்னக் குழந்தைகள் ஜவ்வு மிட்டாய்க் கடிகாரங்கள் அணிந்தார்கள். பயாஸ்கோப்பு பழனிச்சாமி எப்போதும் ஹவுஸ்ஃபுல்லாக இருந்தான். மூங்கில் மேல் ஒலிபெருக்கி, நேத்து வச்ச மீன் குழம்பின் பிரதாபம் பேசியது. சாக்கு நிழலில் பெரிய வாணலி களில் மணல் கலந்த பட்டாணிக் கடலைகள் உற்சாகமாகக் குதித்தன. சைக்கிள் டயர் வைத்த வண்டியில் நீள நீளமாக பஜ்ஜியும், மீனும் வறுவலும் எண்ணெயில் பொரிந்தன. பிளாஸ்டிக் மோதிரங்கள்! இருபத்தி சொச்ச ரூபாயில் புடவைகள்; கழகப் பாடல்கள்; கட்சி கீதங்கள்: முருகன் பாடல்கள்; தொடுகுறி சாஸ்திரம்; மதனகாமராஜன்; அறுபத்து நான்கு வித ஆப்டோன் படங்களுடன் கொக்கோக சாஸ்திரம்; பம்பு செட்டுகள். 

மாலை, மேம்பட்டி ஜனங்கள் கோயிலைப் பார்த்து வாயிலில் உட்கார்ந்திருந்தார்கள். தொம்தம்த தொம்தம்த என்று உடுக்குச் சப்தம் கேட்டது. பூசாரி மீசையில் எண்ணெய் தடவியிருந்தான். அம்மன் நகைகள் அணிந்து புதுசணிந்து பூவணிந்து உற்சாகமாக நின்றாள். 

மூன்று புறமும் திறந்த திரையில்லாத மேடை. காற்றில் அலங்காரங்கள் ஆட ஆட -அனந்தாயி,அபிராமி, முத்து, கருப்பாயி, பிச்சை, எசக்கி என்று சிறுவர் சிறுமியர் மிரள விழித்துக் கொண்டு காத்திருந்தார்கள். கல்யாணராமனின் ஆர்க்கெஸ்ட்ரா! பிச்சை ஜால்ரா, எசக்கி மண்ணெண்ணெய் டின் டபுள் ஸ்பேஸ் கருப்பாயியும் முத்துவும் வோக்கல் சப்போர்ட். மற்றவர்கள் கோரஸ், கொட்டாங்குச்சி வயலின் கல்யாணராமன் பின்னணியில் கித்தாருடன் காத்திருந்தான். தங்கராசு மைக்கைப் பிடித்து (கீ…ச்) “அமைதி அமைதி என்று சொல்ல, ஸ்டைல் அடித்துக் கொண்டு சினேகலதா வந்து சேர, அத்தனை ஜனங்களும் ‘ஆ’ என்று அவளையே கவனிக்க கல்யாணராமனிடம் வந்து “என்ன? எல்லாம் ரெடியா?” என்றாள். 

“ஐ ஃபீல் நெர்வஸ்” என்றான். தங்கராசு இறங்கி வந்தான். 

:மருதமுத்து எங்கே?” 

“கலந்துக்க மாட்டானாம். கல்லு மேல் உக்காந்து நக்கலாகப் பாத்துக் கிட்டிருக்கான்!” 

“கலாட்டா ஏதும் இல்லியே?” 

“சொல்ல முடியாதுங்க. திடுதிப்புனு களுதைக்குட்டியைக் கூட்டத்துக்குள்ள உட்டாலும் உடுவாங்க! எதுக்கும் போலீஸ் வந்திருக்குது.” 

“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. தங்கராசு, உம் பொஞ்சாதி அந்தக் கூட்டத்தில இருக்காளா?’ 

“சோலி நிறையக் கிடக்கு- வர்றனுங்க!” 

சினேகலதா சிரித்தாள். ஓடறான் பாருங்க! தொழுவத்தில. சீமைமாடு-சொல்லிட்டிங்க! 

“நீங்கதான் எனக்கு சீமை மாடு காட்டமாட்டிங்க?”


“அமைதி, அமைதி! அதிகாரி வரும்வரை உள்ளூர் சொககன் டேப் அடிப்பார்.” 

“தொந்தி வினாயகனே தோலுடுக்கும் சங்கரனே வாரும் வாரும் கலெக்டர் வந்தார். புதிதாக ‘போஸ்டிங்’ ஆன ஐ.ஏ.எஸ். இளைஞன். க்ளோஸ் கோட்டு அணிந்து சுத்தத் தலை சீவி பளபளப்பான அதிகாரி. எல்லோரையும் சேவித்தார். சினேக லதாவிடம் சிரித்துப் பேசினார். தங்கராசு வீட்டுப் பிரம்பு நாற்காலியில் உட்கார- அருகே சினேகலதா உட்கார- இந்தப் பக்கம் ரொம்ப நாளைக்கப்புறம் சட்டை அணிந்து அய்யாத் துரையும் பஞ்சாயத்துக்காரர்களும் ஒதுங்கி உட்கார… சபை யோர்களே!!இப்பொழுது பட்டணத்திலிருந்து நம்மிடம் வந்திருக்கும் கல்யாணராமய்யர் நம் கிராமத்துக் குளந்தை களைப் பாட வைப்பார்…” 

கல்யாணராமனின் கணம் வந்து விட்டது. பிள்ளைகள் மேடையில் வந்து நிற்க உடனே கூட்டத்தில், 

“ஏய் சாம்யா! ஏய் கருப்பாயி! முத்து” என்று ஆடி யன்ஸிலிருந்து அங்கொன்று இங்கொன்றுமாகக் குரல்கள் தத்தம் மேடை நண்பர்களைக் கூப்பிட, ஆர்க்கெஸ்ட்ராவின் கவனம் கலைந்து தத்தம் சட்டைகளையும் புதிய ரிப்பன் களையும் கடிக்க, கல்யாணராமன், “ஆரம்பி, ஆரம்பி என்று சைகை செய்ய அபிராமி சின்ன குரலில் “சின்னச் சின்ன…” என்று துவங்கினாள். கல்யாணராமன் தன் கித்தாரில் கார்டுகளைத் துவங்க- அந்த மேற்கத்தியத் துடிப்பில் சட்டென்று அங்கே அமைதி ஏற்பட்டது. 

“சின்னச் சின்னக் கையைத் தட்டி 
(கையைத் தட்டினார்கள்) 
கொஞ்சம் கொஞ்சம் கத்துக்கிட்டோம்
(எசக்கி; தொம் தொம் தொம்)
கொட்டாங்கச்சிக் கம்பி நீட்டி.” 

முத்து: கற்றுக்கொடுக்க இரண்டு சுரங்களில் மட்டும் ஞ்சி – ஞ்சி – ஞ்ச ஞ்சீ என்று தேய்த்தான்- சிரிப்பு. 

டப்பாக்களைத் தட்டிக் கொட்டி…” 

(சாம்பன்:- தகர டகர தகர டகர…) இப்போது எல்லோரும் உற்சாகமாக சுருதி சேர்ந்து கொள்ள, சபையில் அந்தப் புதுப் பாட்டின் வசீகரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பாயி ‘ஆ… என்று இனிமையாக இளித்தாள். கல்யாணராமன் பூரித்தான். சினேகலதா கட்டை விரலை உயர்த்தி ‘டாப்ஸ்’ என்று காட் டினாள். வெள்ளி எங்கேயாவது இந்தக் கூட்டத்தில் இருப்பாள். நிச்சயம் இருப்பாள். 

கிராமமே கை தட்ட, பாட்டு முடிந்தது. சினேகலதா வந்து அவன் கையைக் குலுக்கினாள். வலித்தது. “ரிமார்க் கபிள் மிஸ்டர் கல்யாணராமன்! அந்தக் குழந்தைகளுக்கு ஆளுக்கொரு சட்டை வாங்கிக் கொடுக்கறதா உடனே தீர்மானம் பண்ணிட்டேன்’ என்ற கலெக்டர், கை கடிகாரத்தைப் பார்த்து, “அச்சா! ஏழு மணிக்கு ஒரு எங்கேஜ் மெண்ட். சினேகலதா, வி மஸ்ட் மீட் எக்யன் என்று எழுந்து செல்ல, வில்லுப்பாட்டு துவங்கியது. 

பானை வந்தது. பிரிமனை மேல் உட்கார்ந்தது. ‘விண்’ என்று ஒரு நீண்ட வில். அதன் முதலில் சின்னச் சின்ன வெண்கல மணிகள்; விரைப்பான நாண். நடுவே வீசி கோல்காரர் சேவித்துவிட்டு உட்கார, அருகே பானை வாய்ப் பக்கம் ஒருவன் உட்கார, இந்தப் பக்கம் உடுக்கு; அந்தப் பக்கம் ஜால்ரா; இடைய கஷ்டம். 

வில்லின் நாணை ஒரு தடவை அடித்துப் பார்க்க ‘ஜலங்’ என்று சப்தம் வர, வாழைப்பட்டையால் பானை வாயில் ஒரு தடவை தட்ட, அதன் வயிற்று நாதம் எழும்ப, உடுக்கைத் தேய்க்க, வீசுகோலைத் தட்டிவிட்டு, 

“முத்தமிழ் சேர் தென்பவழ மூதூரில் 
இயக்கி கதை- இயக்கி கதை
அத்தனையும் என் நாவில் அறிந்தபடி 
நான் பாட- நான் பாட” 

என்று வில்லுப்பாட்டுத் துவங்க, அதற்கேற்ப அத்தனை வாத்தியங்களும் ‘தக்கதக தங்கதக தக்கதக தங்கதக’ என்று சேர்ந்துகொள்ள, கல்யாணராமனுக்குப் புல்லரித்தது. காஸெட் டைத் தட்டிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தான். 

“பழையனூர் நீலிக் கதைங்க! ராத்தேசாலம் ஒண்ணு ரெண்டாய்டும். நல்லா இருக்கும். அதென்னங்க பொட்டி?”

“டேப் ரிக்கார்டர் என்றான். 

பழையனூர் நீலி 

பழையனூர் நீலியின் கதை திருநெல்வேலி ஜில்லாவில் பிரசித்தமான வில்லுப்பாட்டு கதை. இந்தக் கதைக்குப் பல வடிவங்கள் உள்ளன. அதில் ஒன்றைச் சொல்கிறேன். வேலவன் என்கிற அந்தணன் நீலியை மணந்து கொள்கிறான். மணந்த சில மாதங்களில் ஒரு வேசியின் சகவாசம் ஏற்பட்டு அவள் வசப்படுகிறான். தன் இளம் மனைவி நீலியைக் கைவிட்டு விடுகிறான். ஒரு தடவை அந்த வேசி நீலியின் வீட்டுக்கு வர, நீலி கதவை அடைத்துச் சார்த்தி விடுகிறாள். அதனால் கோபம் கொண்ட வேசி அடுத்த தடவை நீலியின் கணவன் வந்தபோது அவனை மறுத்து, ‘நீலியின் தாலியுடன் வந்தால் தான் மேற்கொண்டு உறவு’ என்கிறாள். வேலவன் நீலியிடம் திரும்பிப் போய் “நான் திருந்தி விட்டேன். இனி இரண்டு பேரும் வேற்றூர் சென்று விடலாம் என்கிறான். நீலி நம்பி அவனுடன் செல்கையில் காட்டுப்பாதையில் கிணற்றடியில் அவளுடன் சல்லாபித்து விட்டு அவள் மயங்கிய நிலையில் அவள் தலைமேல் கல்லெடுத்துப் போட்டுக் கொன்று விடுகிறான். கொன்று, தாலியைப் பறித்தவன் அதிக நேரம் வாழவில்லை; கிணற்றடியில் சர்ப்பம் கடித்து இறந்து போகிறான். 

கதை அடுத்த ஜென்மத்திற்குச் சுலபமாகத் தாவுகிறது. வீணாகக் கொலையுண்ட நீலியின் உயிர் பழிக்கு அலைகிறது. கைலாச வாசலில் சிவபெருமானை வேண்ட, நீலி பழி வாங்குவதற்காகவே சோழராஜனின் மகளாகப் பிறக்கிறாள். கணவன் வேலவன் இந்தத் தடவை ஜாதி மாறி காவிரிப்பூம் பட்டினத்தில் ஒரு செட்டியின் மகனாகப் பிறக்கிறான். 

நீலி சின்னப் பிள்ளையாக இருக்கையிலேயே தொட்டிலை விட்டு இறங்கி வந்து தொழுவத்து மாடுகளை எல்லாம் கொன்று தின்கிறாள். சோழ ராஜா பதைத்து குழந்தையைக் காட்டில் கொண்டு விட்டுவிட, நீலி காட்டில் வளர்கிறாள். காத்திருக்கிறாள். 

செட்டி கல்யாணம் செய்து கொளகிறான். அப்பன் இறந்ததும் மேலும் பொருளீட்ட துர்ச்சகுனங்களை மதிக்காமல் காட்டு வழியில் கடந்து செல்கிறான். காத்திருந்த நீலி மோகனப் பெண் வடிவெடுத்து, நான் உன் மனைவி. எனக்கு உன்னால் ஒரு பிள்ளையுண்டு. என்னுடன் வாழ வா என்கிறாள். பயந்துபோன செட்டி “நானில்லை, உன் கணவன் வேறு யாரோ” என்கிறான். 

வாக்குவாதம் நடக்கிறது. பழைய நல்லூர் சென்று பெரிய வந்ஜுள மத்தியஸ்தம் கேட்கிறார்கள். அவர்கள் சோதித்து, ‘நீலி அவன் மனைவிதான்’ என்று தீர்ப்புச் சொல்லி அவர்கள் இருவரையும் இரவு ஒரு தனி வீட்டில் படுக்க வைக்க, நீலி அவன் மார்பைப் பிளந்து ரத்தம் உறிஞ்சிக் குடித்து, மேலும் எழுபது பேரைக் கொன்றபின்தான் அவளுடைய ஜென்மம் கடந்த ஆத்திரம் தீருகிறது. பிறகு அவள் நல்லவருக்கு நல்லதும், தீயவருக்குத் தீயதும் விளைவிக்கும் இயக்கி அம்மனாக மாறிவிடுகிறாள். 

பாட்டில் கவனமாக இருந்த கல்யாணராமன சற்று நேரம் கழித்து அருகில் பார்த்தான். சினேகலதாவைக் காணோம். சற்று தூரத்தில் சூழல் விளக்கின் ஒளியின் அவள் மருதமுத்து வுடன் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. 

“மடிப்பணத்தைக் கண்ட பின்பு – ஆமா
மணி விளக்குத் தானேந்தி – ஆமா
படுத்திருக்க வாரும் என்று- ஆமா
பஞ்சணையில் கொண்டி வந்து- ஆமா” 

சினேகலதா பேசிவிட்டு முன்னே தனியாக இருட்டுக்குள் சென்றுவிட, மருதமுத்து சிறிது தாமதித்து இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்து சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்படு வதைப் பார்த்தான். 

“சுந்தரஞ்சேர் கட்டிலிலே – ஆமா 
தூளிமெத்தை தனிலிருத்தி – ஆமா
தந்திரமாய் மேலிலிட்ட- ஆமா 
சட்டைதனைக் கழற்றினானே- ஆமா” 

முதல் தடவையாக வெள்ளியைப் பார்த்தான். பெண்கள் மத்தியில் குந்தி உட்கார்ந்திருந்தாள். அவர்கள் இருவரும் இருட்டில் புறப்பட்டுப் போனதை அவளும் கவனித்திருக் கிறாள் என்று தோன்றியது. அந்தத் திசையிலேயே பார்த்துக் கொண்டிருந்தாள். 

“என்னோட பகைக்கவென்று 
ஏந்திழையாள் மருந்தையிட்டாள் 
அன்றைக்கே நலம் குறைந்தான்
ஆசையெல்லாம் தான் மறந்தான்” 

வெள்ளி தன் பக்கத்தில் இருப்பவளுடன் பேசினாள். கைகளைப் பிசைந்தாள். அடிக்கடி அந்த இருட்டின் பக்கமே நோக்கினாள். 

“உனக்கென்று எனை வளர்த்து 
உற்றோர்கள் கட்டிவிட்டார் 
எனக்கினிமேல் தாலி கட்ட 
எவனிருக்கிறான்?” 

வெள்ளி தன் சங்கிலியைக் கடித்து கொண்டாள். கை வளையல்களைக் கழற்றி அணிந்தாள். 

“ஏகபோகமாக நாமளிருப்போம் 
இருந்து ஒரு தலத்தில் பொருந்திப் பார்ப்போம்” 

வெள்ளியின் கண்களில் அதீதமான சந்தேகம், கவலை, ஆத்திரம்… 

“அம்பலமும் சந்திகண்டேள் அரண்மனையும் 
கோயில் கண்டேன் 
சந்தியிலே பந்தானேன் தலை 
குலைந்த நூலானேன்…” 

வெள்ளி எழுந்தாள். 

“ஏற்ற பெண்தான் நானுமக்கு 
செட்டியாரே! என்னை
இணைந்து கொண்டாலே
தெரியும் செட்டியாரே! 
கண்டறிவேன் உன்னையெந்தன்
காலந்தன்னிலே – இப்போ 
காமச் சங்கிலி பூட்டாதே கள்ளி நீ போடி!” 

மெதுவாக உட்கார்ந்திருந்தவர்களை விலக்கி, கூட்டத்தின் விளிம்புக்கு வந்தாள். 

“அட்டுடன் நீர் நாமும் அன்றிருந்த இடம் – ஆமா 
அதோ தெரியுது பாருமே என்பாள்- ஆமா” 

வெள்ளி சற்று நேரம் திகைத்து நின்று, பின் தீர்மானித்தவள் போல அவர்கள் இருவரும் சென்று மறைந்த அதே திக்கில் சென்று மறைந்தாள். 

“தந்தன்னத் தந்தன்னத் தன தன்னத் தானா” 

என்று அத்தனை வாத்தியங்களும் துடிக்க, வீசுகோல் வெடிக்க, உடுக்கும் பானையின் ஓங்காரமும் தொடர, 

“கல்லை எடுத்து மறையவன் தானும் 
கன்னி நல்லாள் மீதில் எளிய
புரண்டாள் உருண்டாள் மருண்டாள் 
பொரிந்தது போலவே மண்டை நெரிய 
நெரிந்து அவளுயிர போகுமுன்பாக 
நிழல் நின்ற கள்ளியே நீ சாட்சி என்றாள்
சிவசங்கரத் தேவே நீ சாட்சி என்று
தெரிவே உயிரது போனபொழுதே –
உயிர்போன பொழுதே” 

கல்யாணராமன் அந்தக் கதையின் வசீகரத்துக்கும், மூவரும் சென்று மறைந்த நோக்கத்தின் வசீகரத்துக்கும் இடையே தத்தளித்தான். எங்கே சென்றார்கள், இந்த ராத்திரியில்? கிராமம் முழுவதும் இங்கு கூடியிருக்கிறது. வீடுகள் பூட்டி வீதிகளில் தனிமை. மேலே கருநீல வானத்தில் தொங்குகிறது. வில்லுப்பாட்டு திசைகளை எல்லாம் நிரப்புகிறது. எங்கு சென்றாலும் கேட்கும் சந்தம்… மூன்று பேரையும் காணோம். முதலில் சினேகலதா; அப்புறம் மருதமுத்து; அப்புறம் வெள்ளி… அப்புறம் இருட்டு. 

“நெஞ்சதிலே பாய்ந்தேறி 
நிமலையந்த இயக்கியம்மை
நெஞ்சதையும் தான் பிளந்தாள் 
நெடுஉதிரச் சேறோட”

‘உதிரச் சேறு!’ 

கல்யாணராமனுக்கு உடல் பதறியது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *