கரையெல்லாம் செண்பகப்பூ
கதையாசிரியர்: சுஜாதா
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு:
த்ரில்லர்
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 223
(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 3-4 | அத்தியாயம் 5-6 | அத்தியாயம் 7-8
அத்தியாயம் – 5

“நீங்க சொல்றது எனக்குப் புரியவே இல்லை” என்றான் கல்யாணராமன்.
“புரியாத மாதிரி பாவனை பண்ணிக்கிட்டாப் புரியாது.”
“சேச்சே! என்ன சொல்றீங்க? நான் வந்திருக்கிறது, நாட்டுப் பாடல்களுக்குத்தான். இத பாருங்க என் தீஸிஸ் எழுத ஆரம்பிச்சிருக்கேன்; டேப் ரிக்கார்டர்ல பாடல்களைப் பதிவு செஞ்சிருக்கேன்; வேற எதுக்கு வந்திருக்கேன்னு நீங்க நினைக்கிறீங்க?”
சினேகலதா சற்று யோசித்தாள்: “ஃபர்கெட் இட். நான் விளையாட்டுக்குக் கேட்டேன். உங்களுக்கு ‘பெட்டிட் ஃப்ளவர்ஸ் வாசிக்க வருமா?”
“தெரியும்” என்று அந்த மெட்டை ஒற்றைக்கம்பியில் வாசித்துக் காட்டினான். அவள், “லா… லயலா தாரரா ரா ர ரம்…” என்று உடன் பாடினாள். அந்த மெட்டின் தாளத்தைக் கார்டுகளில் விரித்தான். அதற்கேற்ப அவள் மெலிதாக நடனமாடினாள். அவள் அசைவுகளில் நளினம் இருந்தது. விரசமில்லாத அவள் நடனம் அவனுக்கு உற்சாகமளித்தது.
“ரொம்ப நல்லா வாசிக்கிறீங்க. கையைக் காட்டுங்க பார்க்கலாம்” அவனுடைய இடக்கையைத் தொட்டுப் பார்த்தாள். கம்பிகளை அழுத்தும் இடங்களில் காய்த்துப் போயிருந்த விரல் நுனிகளைத் தன் விரல்களால் தடவிப் பார்த்தாள்.
“கும்பிடறேனுங்க!” – மருதமுத்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். “நான்தாங்க மருதமுத்து” என்றான்.
“ஹாய் மருதமுத்து! உன்னைப் பத்தி தங்கராசு சொன்னாரு.”
“லைட்டுப் போட வந்திருக்கன். கயத்துக் கட்லு, பாயி எல்லாம் கொணாந்திருக்கன். ராத்திரி துணைக்குப் படுக்க வந்திருக்கன். நீங்க வந்திருக்கிறதா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷம். ஊர்ல அப்பாரு அம்மா அவங்க எல்லாரும் சுகங்களா?”
“ஓ எஸ்!”
“நீங்க ரேகை பாப்பிங்களா?”
“இல்லையே! ஏன்?”
“அய்யா கையைப் பார்த்துக்கிட்டிருந்திங்களே?”
“அவர் எப்படி இவ்வளவு அழகா வாத்தியம் வாசிக்கிறாருன்னு பார்த்துக் கிட்டிருந்தேன்.”
“அவர் கையி மெத்துனு இருக்கும். என் கையி களை புடுங்கி, செடி புடுங்கிக் காய்ச்ச கையி!”
மருதமுத்து அவளை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். “சமீந்தாரு பேத்திங்களா நீங்க?
“ஆமாம்.’
“முகத்திலேயே தெரியுது.”
“என்ன?”
“வம்சம்முனு. இந்த ஊர்ல உங்க தாத்தக் குடும்பம்னா மரியாதைங்க. எல்லாரும் சமீன் நிலத்தில ஒளைச்சவங்கதான். எங்கப்பாரு சொல்வாரு; சாரட்டு வண்டியிருக்குமாம். பெரிய பெரிய வெள்ளைக்கார துரைங்கள் எல்லாம் வாத்து சுட வருவாங்களாம்… நல்லா இருக்கிகளா?”
“இருக்கேன் மருதமுத்து.”
“அய்யா வேணுமுன்னா டவுன்ல தங்கிக்கிடலாம். இங்க அசவுரியமா இருக்கும்.” என்றான் கல்யாணராமனிடம்.
“தேவையில்லை. அய்யா அந்த ரூம், நான் எதுத்த ரூம்னு தீர்மானமாயிடுச்சு. நீ போய் லைட்டு போடறியா?”
ஸ்டவ்வில் சோறு கொதித்தது.
“கல்யாண ராமன்! உங்களுக்கு குக் பண்ண வருமா?”
“சாதம் வெப்பேன். அப்புறம் இருக்கவே இருக்கு ப்ரெட். ஊறுகாய், அப்பளம், தயிர்!”
“என்கிட்ட கொஞ்சம் பிஸ்கட்ஸ் இருக்கு… தரட்டுமா?”
“நீங்க என் தயிர் சாதத்தைச் சாப்பிடறதா இருந்தா, வாங்கிக்கறேன்.”
மருதமுத்து கவனித்துக்கேட்டான்: “ஏங்க அவதிப்படறீங்க? நாளைக்கு வெள்ளியை அனுப்பிச்சு, கறிக் கொளம்பு வெச்சுத் தரச்சொல்றேன். நீங்க திம்பிங்கல்ல? அய்யாதான் மேல்சாதி. தின்னமாட்டாரு…”
“வெள்ளி யாரு?”
“அவன் கர்ள் ஃப்ரெண்ட். ஸ்வீட் கர்ள்.”
“என்ன சொல்லுதாரு?”
“உன் சினேகிதி, இனிமையான பொண்ணுங்கறாரு”.
“வெள்ளியை மருதமுத்து கல்யாணம் செஞ்சுக்கப் போறான்.”
“அது கிடக்குங்க. இன்னும் நாளாவும். பத்தெடத்தில் பொண்ணெடுக்கலாம் எனக்கு…”
“நாளைக்கு அவளைக் கூட்டியாரியா? அய்யா ஸ்வீட் கர்ள்ங்கறாரே, அவளைப் பார்க்கணும்.”
“சரிங்க.”
மருதமுத்து சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சினேக லதாவை ஏதாவது கேட்டுக் கொண்டே இருந்தான். தன்னைப் பற்றியும் சொன்னான். “காலை தோப்புக்கு வாங்க… இளநீர் தாரன்… மாம்பளம் தாரன்.. இந்த வருசம் நான் தாங்க கொடையெடுக்கப் போறேன். ஒண்டியாளு டிராக்டரை வெச்சிக் கிட்டு எல்லா நிலத்தையும் உளுது தள்ளிப்புடுவேன்; பாணா, வீச்சு எல்லாம் போடுவங்க. குச்சி சுளட்டினா சும்மா எட்டாளை சமாளிச்சுருவங்க. இங்கிலீசு கத்துக்கணும்னு ஆசை. சொல்லித் தருவிகளா?”
அங்கிருந்து நீளமாக ஓயர் இழுத்து எதிர் அறையில் பல்பு மாட்டினான். கொண்டு வந்திருந்த கட்டிலை ஒற்றைக் கையால் தூக்கி அதைத் தட்டி அமைத்தான். சினேகலதா தன் பெட்டியைத் தூக்கும்போது ஓடிப்போய் அதைப் பிடுங்கிக் கொண்டான்.
“பரம்பரை பரம்பரையாக உங்க குடும்பத்துக்கு உளைச்ச குடும்பங்க எங்க குடும்பம். பொட்டி தூக்கியார மாட்டனா?” என்று அதை எடுத்துச் சென்றான்.
‘உழைக்கும் ஆர்வத்துக்கு மேலும் ஏதாவது இருக்கிறதேர் என்று சந்தேகம் ஏற்பட்டது கல்யாணராமனுக்கு. மருதமுத்து சற்று மாறிவிட்டான். நான் மாறினது போல்!’
“இன்ட்ரஸ்டிங் மான்” என்றாள்.
“ஓ எஸ்!”
“உடம்பு பார்த்தீங்களா? என்ன வலுவா இருக்குது. சார்ல்ஸ் ப்ரான்ஸன் மாதிரி.”
வெளியிலிருந்து மருதமுத்துவின் குரல் கேட்டது.
“வாங்கம்மா! பேசிக்கிட்டே இருந்திங்கன்னா பொளுது விடிஞ்சுடும்”.
“குட் நைட்” என்றாள்.
“குட் நைட்.”
“நான் கேட்டதை மறந்துடுங்க… விளையாட்டுக்குக் கேட்டேன்”.
“என்ன கேட்டீங்க?”
“அப்ப மறந்துட்டீங்கன்னு அர்த்தம்” என்று சென்றாள் வெளியே.மருதமுத்து! நாளைக்கு மாடி ரூம் எல்லாம் கொஞ்சம் ஒழிக்கணும். ஹெல்புக்கு- உதவிக்கு வரியா?” என்று சினேகலதா கேட்க, “நிச்சயம் வர்றேனுங்க” என்று பதிலளித்த மருதமுத்துவின் குரலில் இழையோடிய சந்தோஷத் தைக் கல்யாணராமன் கவனித்தான்.
“அய்யா! நான் வராந்தாவில் படுத்திருக்கேன். பயப்படாத தூங்கிப் போடுங்க!”
கல்யாணராமன் இரவில் மெலிதாகத்தான் தூங்குவான். ஒரு சின்ன சப்தம்கூட அவனை எழுப்பிவிடும். எழுப்பி விட்டது. உற்றுக் கவனித்தான். மிக மெதுவாக ஜாக்கிரதையாக நகர்த்தும் சப்தம்.
சப்தமின்றி எழுந்தான். விளக்கைப் போடாமல் அறைக்கு வெளியே வந்தான். மருதமுத்து போர்த்திக் கொண்டு படுத் திருக்க அந்தப் போர்வையையும் மீறி அவன் குறட்டை கேட்டது. அருகே ஒரு பெரிய கழி வைத்திருந்தான். மெல்ல அவனருகில் குனிந்து அவன் தோளில் தட்டி “மருதமுத்து” என்றான்.
திடுக்கிட்டு விருட்டென்று எழுந்தான். ‘யாரு?’ ‘ஷ்’ என்று பாவனை காட்டினான் கல்யாணராமன். ரகசியமாக, “மேலே! மேலே” என்றான்.
மருதமுத்து தலையணைக்கு அடியில் இருந்த டார்ச்சை எடுத்துக் கொண்டு கழியையும் எடுத்துக் கொண்டான்.
“முதல்ல கவனி! சத்தம் கேக்குதா இல்லியா?”
மருதமுத்து கவனித்தான். “ஆமாங்க!” என்றான் “வாங்க பார்க்கலாம்”.
இருவரும் மெதுவாக, பையப்பைய பூனைப் பாதம் வைத்து மாடி ஏறினார்கள்.
இருட்டாகத்தான் இருந்தது. மருதமுத்துவின் கழி ஓர் இடத்தில் இடித்து சப்தம் செய்து விட, அதற்கப்புறம் சில சம்பவங்கள் மின்னல் வேகத்தில் நிகழ்ந்தன. திறந்திருந்த ஹால் கதவிலிருந்து விருட்டென்று ஒரு கரிய நிழல் உருவம் வெளிப்பட்டுப் பாய்ந்தது. கைப்பிடிச் சுவரில் ஏறி ‘தபால்’ என்று போர்ட்டிகோவின் நீட்டலில் குதித்து அங்கிருந்து சரசரவென்று இறங்கி, மறுபடி குதித்து, அரை நிமிஷத்தில் தோட்டத்தில் ஓடிப்போய் இருட்டுப் பொந்துகளுக்குள் மறைந் ததைக் கவனித்தான்.
மருதமுத்து சற்றுத் தாமதித்த வீரத்துடன் அவன் போன பாதையில் பாய்ந்து புறப்பட்டுத் தேடினான் “புடிடா! புடிடா!” என்று அவன் குரல் எதிரொலித்தது.
“என்ன ஆச்சு? என்ன ஆச்சு!” என்று குரல் கேட்டுத் திடுக்கிட்டான். சினேகலதா நின்றாள்.
“யாரோ ஒரு ஆள் மாடியில் நடமாடற மாதிரி சத்தம் கேட்டது. ரெண்டுபேரும் வந்து பார்த்துக்கறதுக்குள்ள ஓடிப் போயிட்டான்.’
சினேகலதா தைரியமாக ஹாலுக்குள் நுழைய, கல்யாண ராமன் அவள் பின் சென்றான். ஹால் பூராவும் டார்ச் அடித்துப் பார்த்தார்கள். அலமாரிகள் இரண்டு திறந்திருந்தன. சுவரில் இருந்த மனைவியின் படம் சற்று நிலைக்குலைந்து சாய்ந்திருந்தது.
“நேத்திக்குக்கூட சத்தம் கேட்டது எனக்கு.”
சினேகலதா பேசவில்லை. மருதமுத்து திரும்பி வந்தான். “மாயமா ஓடிப் போய்ட்டான். திருட வந்திருக்காப்பல. அம்மா, நீங்களும் எளுந்திட்டிங்களா? அடட! பயப்படாதீங்க! சித்த கண்ணசந்துட்டேன். இனிமே ஆளு வரமாட்டான். நான் முளிச்சிக்கிட்டிருக்கேன். ஒரு எமை முன்னால கிளம்பி யிருந்தா ஆளைப் புடிச்சிருப்பேன். அய்யாதான் பயந்து கூப்பாடு போட்டதில சட்டுனு கவனம் கலைஞ்சுருச்சு! தப்ச்சுட்டான்.”
‘பாவி! பொய் சொல்கிறான்.’
சினேகலதா மௌனமாகக் கீழே இறங்கிச் சென்றாள்.
“மருதமுத்து! நாளைக்கு முதல் காரியமா ஹால்ல நாதாங்கியை ரிப்பேர் செய்து பெரிய பூட்டாப் போடணும். தங்கராசுகிட்ட சொல்லு.”
“ஆவட்டுங்க! நீங்க பயப்படாதிங்க. நான் வாசல்ல காவல் இருக்கன். இனித் தூங்க மாட்டேன்.”
“தாங்க்ஸ்”
நித்திரை கலைந்து போய் ஒருவித சுஷுப்தி அவஸ் தயின் மிச்ச ராத்திரியைக் கடந்தான். எப்போதோ தூங்க ஆரம்பித்தான். வினோதமான நிழல்கள் மாடர்ன் ஆர்ட் படிவத்தில் கண்ணுக்குள் நெளிந்தன. தோப்புத் துரவெல்லாம் அந்த ஆளை ஓட ஓட விரட்டுகிறான். கடைசியில் அவன் சட்டென்று நின்று, “வா! இனிமேல் ஓடமாட்டேன், என்னைப் பிடி என்கிறான். கல்யாண ராமன் பயந்து பின் வாங்குகிறான். “அய்யா! அய்யா!” என்று குரல் கேட்டு விழித்தெழுந்தான்.
ஜன்னலில் நான்கைந்து சிறுவர்களின் முகங்கள் சூரிய ஒளியில் தெரிந்தன.
“யார்ரா நீ?”
“வரச் சொன்னீங்களே நேத்தைக்கு.
ஒரு குட்டிப்பையன், முட்டாய் கொடுங்க தொரை” என்று மழலைக் குரலில் கேட்க, அவனை விட சற்றே வயதான பெண், “த! சும்மாரு, தருவாரு!” என்றாள். “எல்லாரும் வரிசையா நில்லுங்க வரேன்…” என்றான்.
வராந்தாவில் மருதமுத்து இல்லை. காலையிலேயே எழுந்து சென்றிருக்க வேண்டும். சினேகலதாவின் அறை சாத்தியிருந்தது. தட்டினான். உட்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழி யாகப் பார்த்தான். மார்பில் புத்தகத்துடன் அப்படியே தூங்கிக் கொண்டிருந்தாள். விளக்கு இன்னும் எரிந்து கொண்டிருந்தது. தூங்கட்டும்!
சிறுவர்கள் அவனுடன் கண்மாய்க்கு வந்தார்கள். அவன் பல் தேய்ப்பதையும், முகம் கழுவுவதையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.
“முட்டாய் வெச்சிருக்காராடா?”
“பைக்குள் இருக்குது.”
“இல்லடா…வூட்ல இருக்குது!”
அவர்கள் ஜென்மத்தில் இதுவரை சாப்பிட்டிராத காட்பரீ ஸின் முதல் ருசி அவர்களை அவன் பின்னே, ஹெம்லின் நகரத்தில் பைப்பரின் பின் எலிகள் போல் செலுத்தியது. கல்யாணராமனுக்கு இந்தச் சிறுவர்களுக்கு சாக்லேட் லஞ்சம் கொடுத்து அவர்களை ஹார்மோனைஸ் செய்து ஒரு நாட்டுப் பாடல் பாட வைக்க வேண்டும் என்று ஆசை.
“உன் பெயர் என்ன?’
“கருப்பாயி.”
கருப்பாயிக்கு ஏழு வயசிருக்கும். வெறும் பாவாடை மட்டும் அணிந்திருந்தாள். எண்ணெய் கண்டிராத தலை, எலி வால் போல் பின்னல். மாந்தத்திற்குச் சூடு போட்ட நெற்றி. இடுப்பில் சாஸ்வதமாக கருப்பாயியின் தம்பி.
திரும்ப ஜமீன் வீட்டுக்கு வந்ததும் ஒரு பையனைப் பால் வாங்கிவர அனுப்பி வைத்தான். அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்தான்.
“கருப்பாயி! நீ என்ன விளையாட்டு விளையாடுவே?” “கண்ணாமூச்சி.
“எப்படி விளையாடுவீங்க? இப்ப விளையாடிக் காட்டுங்க பார்க்கலாம்… விளையாடினா முட்டாய் தருவேன்.”
சற்று நேரம் சலசலப்பும் கலந்துரையாடலும் நிகழ்ந்தது. முதலில் யார் பொத்திக் கொள்ள வேண்டும் என்பது பற்றிச் சர்ச்சை நிகழ்ந்தது. கருப்பாயி குழந்தையை ஓரத்தில் வைத்து விட்டுத் ‘தாச்சி ஆனாள். எல்லோரையும் வரிசையாக நிறுத்தி ஒரு பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து, ஆளுக்கு ஒரு சொல்லாகத் தொட்டுக் கொண்டே வந்தாள்.
“பச்சத் தவக்கா- பளபளக்க
பழனி பச்சான்- மினுமினுங்க
செங்கரட்டி- சிவத்தப் பிள்ளை
கிண்ணா வந்தான்- கிணுக்கட்டி
உடும்பு- துடும்பு
மகா- சுகா
பால்- பறங்கி
எட்டுமன்- குட்டுமன்- ஜல்”
அந்த ‘ஜல்’ கண் பொத்திக் கொள்ள வேண்டியிருந்தது.
“இருங்க! இந்தப் பாட்டு எல்லோருக்கும் தெரியுமில்லே?”
“தெரியும்.”
“இதை எல்லோரும் சேர்த்து பாடுங்க, பார்க்கலாம்.”
“அதெப்படி?”
“சாக்லெட் முட்டாயி!”
அவர்கள் சேர்ந்து பாட அவர்கள் குரலில் ஓர் ஒற்றுமையும் சுருதியும் கொண்டு வரப் பிரயத்தனப்பட்டான். அவர்களில் சுமாரான குரல் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்தான்.
மறுபடியும் சொல்லுங்க! எட்டுமன்-குட்டுமன்-ஜல் எட்டும் குட்டுமன்-ஜல்!” சட்டென்று திரும்ப வராந்தாப் படிகளில் கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு சினேகலதா சிரித்துக் கொண்டிருந்தாள்.
“குட்மார்னிங்!” என்றாள்.
“குட்மார்னிங்.”
அவள் எழுந்து அருகில் வந்து, “இவர்களை வெச்சுக்கிட்டு ஸிம்ஃபனி ஆர்க்கெஸ்ட்ரா அமைக்கப் போறீங்களா?”
“இன்னும் ஒரு நாலு நாளில் பாடுங்களேன்! பிள்ளைங்களா, இன்னிக்குப் போதும்!” என்று உள்ளே சென்று அவர்களுக்கு இனிப்பு எடுத்து வந்து விநியோகம் செய்ய, அவர்கள் வாங்கிக் கொண்ட உடனே தூள் பறக்க இரைச்சலாக ஓடிப் போனார்கள். எனக்குப் பல் தேய்க்கணும். முகம் கழுவிக்கணும். காப்பி கிடைக்குமா?
“வாங்க பம்புக்குக் கூட்டிப் போறேன். அப்புறம் காப்பி தரேன்.”
நடந்தார்கள்.
இந்த மரத்துக்குப் பேரு தெரியுமா, உங்களுக்கு?”
“ஃபைகஸ் ரிலிஜியோ ஸா லின்!”
“கம் எகய்ன்!”
“தமிழில் சொன்னா அரச மரம்! சில அரச மரங்கள் ரெண்டாயிரம் வருஷம் கூட இருக்கும்.”
“எப்படி இவ்வளவு தெரிஞ்சு வெச்சுக்கிட்டிருக்கீங்க! கித்தார் வாசிக்கிறீங்க. நாட்டுப்பாடல் ரிஸர்ச்… இந்த மாதிரியே நீங்க என்னை இம்ப்ரெஸ் பண்ணிக்கிட்டே இருந்தா, ஒருநாள் உங்களைக் காதலிக்க ஆரம்பிச்சுருவேன்!”
“அதுக்கு ஒரு நாள் முன்னாடி சொல்லிடுங்க!”
“எதுக்கு? ஊரை விட்டே ஓடறதுக்கா!”
இருவரும் அந்தச் சோலைக்குள் நடந்து அந்தப் பொம்பளை யாளுகள் குளிக்கும் இடத்தை நெருங்குகையில் வெள்ளி வந்தாலும் வருவாள் என்று கல்யாணராமனுக்கு ஓர் எதிர் பார்ப்பு இருந்தது.
ஒருவிதமான சலங்கை சப்தம் கேட்டு வெள்ளிதான் என்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தான். இல்லை. “இது யார்?”
அத்தியாயம் – 6
ஒருத்தன் நின்று கொண்டிருந்தான். அவன் ஒரு காலில் சலங்கை கட்டிக் கொண்டிருந்தான். ஃபெல்ட் ஹாட் அணிந்து, காதுகளில் பூ வைத்துக் கொண்டு, கண்களில் மை தடவி, போதும் போதாதுமாக ஓர் கோட் அணிந்து, ஒருவிதமான சார்லி சாப்ளின் தனத்துடன் சிரித்தான். ஒரு நீண்ட தகரப் பெட்டி வைத்திருந்தான். அதில் இரண்டு லென்ஸுகள் பொருத்தப்பட்டு அந்தப் பெட்டியைத் தோளில் தூக்கிக் கொண்டு அதை நிற்க வைக்கப் போகிற கால்களைக் கக்கத்தில் வைத்திருந்தான்.
“என்னய்யா?”
“அய்யா…! எம்பேரு பழனியாண்டி… பயாஸ் கோப்பு பழனியாண்டின்னு பாண்டியாபுரம் வரைக்கும் தெரியுங்க. சாலாச்சி கோயில் திருவிளாவுக்கு வளக்கமா மேம்பட்டி வருவனுங்க. அய்யா பாட்டுப் போட்டா காசு தர்றா பேச்சுக்க கேள்விப்பட்டேன். பார்த்துட்டுப் போகலாம்னு…”
அருகில் இருந்த சினேகலதா, “அது என்னய்யா பொட்டி? என்றாள்.
“பயஸ்கோப்புங்க. அஞ்சு கச்சேரி, அரிதாஸ், சிவாஜி, எம்.ஜி.யாரு எல்லாம் வெச்சிருக்கன். “
லதா குதூகலத்தில் கிறீச்சிட்டாள். “நான் பார்க்கணும் என்றாள்.
“காட்டறங்க.”
“முதல்ல நீங்க பல் தேய்க்கணும்னு நினைக்கிறேன். என்ன பாட்டுப்பா தெரியும் உனக்கு?”
கேள்வி கேட்டு முடிப்பதற்கு அந்தக் கோமாளி பாடத் துவங்கிவிட்டான்.
“பாரு பாரு படம் பாரு
பாவதரு எம்ஜியாரு
பராசக்தி பேரெடுத்த சிவாஜிய்”
அவன் பாட்டுக்கேற்ப அந்தத் தகரப்பெட்டியில் ‘குமுக்குத் தக்கா, குமுக்குத் தக்கா’ என்று தாளம்போட்டு ஒற்றைக் காலால் ‘ஜல் ஜல்’ என்று பேசினான்.
சினேகலதா சின்னக் குழந்தையானாள். கையைக் கொட்டி, பாதி குனிந்து அவன் பாட்டைச் சிரிப்புடன் கவனித்தாள்.
“ஏய் ஏய்! போதும் அது நாட்டுப் பாட்டில்ல… நீயே எட்டுக் கட்டினதுதானே?”
“இல்லிங்க. மேவலாபுரத்தில ஒருத்தர் எழுதிக் கொடுத்தது.”
“எப்படியும் அது நாட்டுப் பாட்டில்லே. நான் கேக்கறது வேறு. சிவகாசிக் கலகம்பத்தி பாட்டு இருக்குதாம்; தெரியுமா உனக்கு?”
“அதுக்குத் தெக்கே போவணுங்க.”
சினேகலதா அந்த லென்ஸினூடே பார்த்தாள். “இருட்டா இருக்கே.” என்றாள்.
“அம்மா உங்க சம்சாரங்களா?”
“சேச்சே! ஜமீன் வம்சம். அம்மா ஜமீன்தார் பேத்தி.”
“அப்படிங்களா! கும்பிடறேனுங்க.”
“அதைப் போட்டுக் காமி.”
“நீ அப்புறம் சாயங்காலமா வாப்பா. சாவகாசமா சினிமா பார்க்கலாம்.”
“அமிதாப்பச்சன் இருக்காய்யா?” என்றாள் சினேகா. தகரப்பெட்டியில் பற்பல வண்ணப்படங்கள் ஒட்டியிருந்தன.
“அதாருங்க?”
“அவன்கிட்ட 1955-க்கு அப்புறம் எதுவும் இருக்காது. ரோடில கிடக்கற பிலிம் துண்டெல்லாம் பொறுக்கிட்டு வந்து…”
“அவன் பாடறது நாட்டுப் பாடல் இல்லியா கல்யாணராமன்?”
“இல்லை.”
“பின்னே நாட்டுப் பாடல்னா என்ன வேணும்? எழுதக் கூடாதா?”
“அப்படியில்லை. இவன் பாடற பாட்டை இந்த ஜில்லா வில, இவனோட சம்பந்தமே இல்லாத வேறொருத்தனும் பாடினா அதை நாட்டுப் பாடல்னு சொல்லலாம். அதனோட பொதுத்தன்மை அதன் சிருஷ்டியிலே இல்லே; பரவறதிலதான் இருக்கு.”
“அப்படீன்னா ‘மச்சானை பார்த்தீங்களா கூட நாட்டுப் பாட்டுத்தான்” என்றாள்.
“அந்தப் பாட்டுல மெட்டு, நாட்டு ஜனங்களோட வால்யூஸ் இருந்து- அது பரவி நிலைச்சதுன்னா அது நிச்சயம் நாட்டுப் பாட்டாகிவிடும். ‘மச்சானைப் பாத்தீங்களா நாட்டுப் பாட்டா இல்லையாங்கறதை சொல்றதுக்கு இன்னும் பதினைஞ்சு வருஷம் ஆகணும். அப்ப அது நிலைச்சிருந்தா அது நாட்டுப் பாட்டு, ஃபோக் ஆய்டறது.’
“நல்லாப் பேசறீங்க.”
“படிச்சதைச் சொல்றேன்” சினேகலதாவின் நேர்ப் பார்வையைத் தவிர்த்தான்.
மருதமுத்துவும் வெள்ளியும் இன்னொரு பெண்ணும் வந்தார்கள். வெள்ளியைக் கண்டதும்தான் சற்று பிரகாச மானதை சினேகலதா கவனிப்பதை உணர்ந்தான் கல்யாண ராமன்.
“இங்கே வந்துட்டிகளா… சமீன் வீட்டில தேடிப் போட்டு வர்றன்” என்றான் மருதமுத்து.
“இதுதான் வெள்ளி” என்றான் கல்யாணராமன். இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் சற்று நேரம் நிதானமாகப் பார்த்தார்கள்.
“ஹலோ ஸ்வீட் கர்ள் என்றாள் சினேகலதா. மருதமுத்து அந்த பயாஸ்கோப்பை, ஏய், இங்கேயும் வந்து போட்டியா? தட்! ஓடுறா பொட்டியைத் தூக்கிக் கிட்டு” என்று பிடரியில் அடித்தான்.
“எதுக்குய்யா அவனை அடிக்கிறே?” என்றான் கல்யாண ராமன்.
‘இந்தப் பயலுவளல்லாம் கிட்டத்திலே சேர்க்கக் கூடாதுங்க. தூக்குறான்னா!’
அவன் பயந்து பெட்டியைச் சேகரித்துக் கொண்டு சலங்கை குலுங்கக் குலுங்க ஓடினான். அந்தக் கோமாளியை அடித்தது அனாவசியமாகப் பட்டது. மருதமுத்து தன் வீரத்தை சினேகலதாவுக்குக் காட்ட விரும்புகிறான் என்று பட்டது.
வெள்ளி வைத்த கண் வாங்காமல் லதாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சுங்கிடிப் புடவை- ஆண் பிள்ளைச் சட்டை; கறுப்பான உடல்-சிவப்பு உடம்பு Asetudy in contrast போட்டோ பிடிக்க வேண்டும்.
மருதமுத்து, நல்லா தூங்கினிங்களா?” என்றான் சினேக லதாவை சினேகமாகப் பார்த்து.
“தூங்கினேன் மருதமுத்து.”
“காப்பி பலகாரம்?”
“இன்னும் இல்லே. முதல்லே கை கால் கழுவிட்டுக் குளிச்சுரலாம்னு பார்க்கறேன்.”
வெள்ளி அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தாள்.
“வென்னித் தண்ணிகூட வெச்சிருக்கியா? வெள்ளி! வெள்…ளி! காதுல சுண்ணாம்படிச்சிருக்கியா?”
“என்னது?”
“வென்னித் தண்ணி வெச்சிருக்கியா?
“எங்கே?”
“உன்னிய நேத்தே சொன்னனில்ல?’
“எங்கிட்ட எங்கே சொன்னே?”
“போட்டன்னாச் சரி! புரளி பண்ணாதே.”
“வேண்டாம். நான் பச்சத் தண்ணில குளிச்சுப் பார்க்கறேன். வெள்ளி! என்னைக் கூட்டிப் போறியா?”
வெள்ளி மருதமுத்துவைப் பார்த்தாள். அவன் லதாவைப் பார்த்துக் கொண்டிருந்தான். “நாங் கூட்டிப் போறனுங்க!” என்றான்.
“அய்ய! பொம்பளையாளுங்க குளிக்கிற இடத்தில் நீ வருவியா? இன்னாடி இது… இந்தாளுக்கு இந்தக் கரிசனம்!”
“அம்மா சமீனு வம்முசம்! நான் அந்தால நிக்கறன். அம்மா குளிச்சதும்…”
“அவுங்க குளிச்சிட்டு வரட்டும் மருதமுத்து. நாம இங்கயெ நிக்கலாம்.”
வெள்ளி பேசாமல் நடக்க, அவள் பின் சினேகலதா சென்றாள்.
“பெரியதனக்காரரு உங்களைப் பாக்கணுமின்னாரு.”
“அப்படியா?
“தங்கராசுகிட்டச் சொன்னன், நேத்து ஒரு வேத்து ஆளு வந்துட்டுப் போனதை. அம்மா தனியாப் படுக்கிறது நல்ல தில்லை. நிதம் நா வந்துர்றனுங்க.”
“சரி.”
“அய்யாகூட, டவுனுக்கு மாத்திடறதா கேள்விப்பட்டன்.”
“இல்லை…யார் சொன்னா?”
“சாப்பிடறதுக்கு சினேகம்மா என்ன செய்வாக?”
சினேகம்மா!
“தெரியலை.”
“வீல்” என்று சினேகலதாவின் குரல் கேட்க. மருதமுத்து டினான். சற்று நேரத்தில் அசடு வழிந்து கொண்டு திரும்பி வந்தான். ஒண்ணுமில்லிங்க… பச்சைத் தண்ணி உடம்பில பட்டதும் அவுங்களுக்கு சிலுத்துக்கிட்டுக் கூச்சப் போடுதாங்க. சந்தோசந்தாங்க!” என்றான்.
சினேகலதா வரப்போகும் வழியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான் மருதமுத்து.
ஒரு கால் நொண்டிக் கொண்டே வந்தாள் சினேகலதா, சற்றுத் தயங்கி பின்னால் வெள்ளியும் அந்தப் பெண்ணும் வந்தார்கள்.
“என்னங்க கால்ல?” என்றான் மருதமுத்து கவலையுடன்.
“சாணியை மிதிச்சாக” என்றாள் வெள்ளி சிரிப்புடன்.
“என்னது வெள்ளி, பார்த்துக்கிட்டு நிக்கிறியே? தண்ணி கொட்டு. அலம்பிக்கட்டும்!”
“அ! அலம்பறேன்’ என்று அவள் பாதத்தில் நீர் இறைத்தாள்.
“அப்ப வரட்டுமா மருதமுத்து?”
“வீட்டுவரைக்கும் வரங்க! வெள்ளி, நீ போய்க்க.”
மருதமுத்து சினேகலதாவுடன் பேசிக்கொண்டே நடந்துவர, கல்யாணராமன் சற்று முன் நடந்தான். மருதமுத்துவுக்கு சினேகலதாவின் பேரில் எஜமான விசுவாசத்துடன் மற்ற சேர்க்கைகளும் இருப்பதை வெள்ளி கவனித்திருப்பாள் என்றே தோன்றியது.
திரும்ப ஜமீன் வீட்டுக்கு வந்ததும், “தாங்க்ஸ் மருதமுத்து! என்றாள் சினேகலதா.
“திரும்ப எப்ப வரட்டும்?
“எதுக்கு?”
“இங்கிலீஷ் கத்துக் தாரன்னிங்களே?”
“அப்படிச் சொன்னேனா என்ன?”
“ஆமாங்க.”
“அய்யா நல்லா கத்துத் தருவாரு. நல்லா படிச்சவரு அவரைப் புடிச்சுக்க.”
“அவரு வேண்டாங்க… நீங்கதான் இனிமையா, கரீக்ட்டா பேசறீங்க…”
“சரி, நாளைக்கு வெச்சுக்கலாம்.”
“சட்டை ஈரமாய்டுச்சு. போய் மாத்திக்கிடுங்க. டவுன்ல ஏதாச்சும் வேணுமின்னா சொல்லியனுப்புங்க. வாங்கியாரன். ராத்திரி படுக்க வாரனுங்க.”
“வா.”
மனமில்லாமல்தான் பிரிந்தான் மருதமுத்து.
“நைஸ் ஃபெலோ என்றாள். கிராமத்து ஜனங்க எவ்வளவு இன்னொஸென்ட்டா இருக்காங்க. பார்த்தீங்களா?”
“அவன் அவ்வளவு இன்னொஸொன்ட் இல்லை” என்று சொல்ல நினைத்தான்.
“உங்க வெள்ளி பேசவே மாட்டேங்கறாளே” என்று தன் அறைக்குள் சென்றாள் சினேகலதா. கல்யாணராமன் பாலைக் காய்ச்சினான். இன்ஸ்டண்ட் காப்பித்தூள் கலந்து சர்க்கரை கலந்து இரண்டு கப் காப்பி தயாரித்து அவள் அறைக்குள் எடுத்துச் சென்று “மேடம்! காப்பி ரெடி” என்றான். சினேகலதா வெளியே வந்தாள். “இன்ஸ்டண்ட் காப்பிதான். சுமாரா… நிமிர்ந்தவன் பேச்சை நிறுத்தி விட்டான். வெள்ளை ஜிப்பா அணிந்து கொண்டிருந்தாள். உள்ளே ஒன்றும் அணியாததால், அவள் மார்பின் வட்டங்கள் மெலிதாகத் துணியினூடே ஊதாவாகத் தெரிந்தன.
“என்ன பாக்கறீங்க?”
கல்யாணராமன் சுதாரித்துக் கொண்டு எச்சில் விழுங்கினான். “கிராமத்தில இந்த மாதிரி டிரஸ் போட்டுக்கறது நல்லதில்ல. பெட்டர் வேர் ஸம்திங் இன்ஸைட்” என்றான்.
“இங்கே யார் வரப்போறாங்க? வி ஆர் ஃப்ரீ.”
“உங்க இஷ்டம்!”
“காப்பி நல்லா இருக்கு. நீங்க செய்யறது எல்லாமே நல்லா இருக்கு. இன்னும் உங்களுக்கு என்னென்ன தெரியும்?”
“உள்ளே போங்க, உள்ளே போங்க!”
“ஏன்?”
“யாரோ பெரியவர் வரார், நல்லாருக்காது. மேலே ஏதாவது…”
“ஒக்கே ஓக்கே!” என்று உள்ளே சென்றாள்.
தங்கராசுவும், அந்தப் பெரியவரும் வந்தனர்.
“வாங்க தங்கராசு…”
“இவருதாங்க அய்யாத்துரை, மணியாரருங்க.”
“அப்படியா? நமஸ்காரம்!”
அய்யாத்துரையின் முகத்தில் விஸ்தீணமாக மச்சம் இருந்தது. சட்டை அணியாமல் மார்பில் மொச மொச என்று வெளுப்பு மயிராக ரஷ்யக்கரடிக் குட்டிபோல் இருந்தார். நெற்றியில் பெரிய சந்தனப் பொட்டு. காப்ஸிகம் போல மூக்கு. பற்கள் பலவற்றை இழந்திருந்தார்.
“தங்கராசு; நேத்துக்கூட ராத்திரி ஆள் நடமாட்டம் கேட்டுது.”
“முத்து சொன்னான் ஓடிப் போய்ட்டானாமில்ல. திருட்டுப் பசங்க வர்றாங்க அய்யாத்துரை.”
“அ! காலை வெட்டிப் போட்டுறலாம். யாரது?” என்றார்.
“முந்தாநாள் மேல்மாடில சிகரெட் துண்டு கிடந்தது பார்த்தேன். ஒஸ்தி சிகரெட்…!”
“அதுவா…! அது ஒண்ணுமில்லிங்க… கெலெக்டர் போன மாசம் வந்திருந்தாரு. மாடி எல்லாம் ஏறிப் பார்த்தாரு. அவரு புடிச்சுக்கிட்டிருந்தாரு… இது ஏதோ திருட்டுப் பயலுவ வேலையா இருக்கும். எதுக்கும் திட்டிக் கதவை இன்னைக்கு மராமத்துப் பண்ணிடறனுங்க.”
“சமீன் பேத்தி வந்திருக்கிறதா சொன்னாங்களே” என்றார் பெரியவர்.
“உள்ள இருக்காங்க. சினேகலதா!”
“அய்யாதான் – பி.டி.ஓ. எளுதியிருந்தாருன்னு சொன்னனே – பாட்டு சேகரிக்க வந்திருக்காரு.”
“அப்படியா…! ரொம்ப சந்தோஷங்க. தங்கராசு அந்த நீர்க்கட்டிப் பயலைப் பாத்தியா பதினஞ்சு நாளாக் காங்களை.. குங்கிலியத்தைச் சாப்ட்டுப போட்டு எங்க கிடக்கானோ?”
“பொன்னுச்சாமி டவுனில ஒரு பொம்பளையில்ல புடிச் சிருக்கான்!”
சினேகலதா வெளியே வந்தான். கல்யாணராமனின் வேண்டுகோளுக்கு இணங்க, ஜிப்பாவின் மேல் நேரு ஜாக்கெட் அணிந்திருந்தாள்.
“இவுங்கதாங்க!”
“கிட்ட வாம்மா குளந்தே!”அய்யாதுரை அவளையே சற்று நேரம் ஆராய்ந்தார். கண்களில் காட்டராக்ட் திரை மெலிதாகப் படர்ந்திருக்க, இன்னும் கிட்டப் போய் அவளைத் தரிசித்தார்; தொட்டுப் பார்த்தார். மஞ்சள் பழுப்புக் கண்களில் நீர் திரையிட்டது. “அப்படியே ரத்னாவதி அம்மா!” என்றார்.
சினேகலதா சிரித்து, “உங்களுக்கு அவுங்களை எல்லாம் தெரியுமா?” என்றாள்.
“தெரியுமான்னு கேக்குது! குளந்தே.. உங்க தாத்தா கருத்த தொரை, மதுரையில குதிரை வாங்கி தங்கத்தில் சேடங்கட் அடிச்சாக. கை கொள்ளாத சொகுசு. பத்துப் பவுன் அழிச்ச இங்கிலீசு புத்தகம் படிச்சாரு அந்தக் காலத்தில. மானத்தில பூப்பறிப்பாரம்மா. அவரு தாசிக்கே விட்ட பணத்தில ரெண்டு தங்க மடம் காட்டலாம்.”
“க்கும்” என்று கனைத்தான் தங்கராசு.
“ஸ்வீட்!” என்று கண்ணிமைத்தாள் கல்யாணராமனைப் பார்த்து. பெரியவர் இருமினார்.
“மணியாரரு உங்க வீட்டிலேயே வளர்ந்தவரும்மா”.
“அப்படியா? க்ரேட்! தாத்தா, நீங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கங்க.. இருமறிங்க!”
“தாத்தான்னு வாய் நிறையக் கூப்பிடுதில்ல குளந்தே! உனக்கு என்ன வேணுமின்னாலுங் கேளு. உங்க குடும்பத்துக்கு நாங்கள்ளாம் எட்டு தலைமுறைக்குக் கடம் பட்டிருக்கம்!”
“சுத்துப்பட்டவங்களே அழிச்சாங்க” என்று சற்றுக் குரலைத் தணித்துச் சொன்னான் தங்கராசு.
“அய்யாத்துரை! வாங்க, அப்புறம் பேசலாம். வரப்புக்குப் போவணும். பிச்சைப் புள்ளை தண்ணித் தகராறு பண்ணிக் கிட்டிருக்காரு…”
“நான் வரட்டுமா கண்ணுக்குட்டி? செல்லம்!”
“வாங்க தாத்தா.”
“வாரம்பா… பாட்டு வேணுமின்னா என்னைக் கேளு… மருதை வீரன், அல்லி அரசாணி…”
“சரிங்க.”
அவர்கள் சென்றதும் கல்யாணராமனைப் பார்த்துச் சிரித்தாள். “வினோதமான ஜனங்கள்” என்றாள்.
“வேர்க்குதில்லே! என்று அந்த நேரு ஜாக்கெட்டைக் கழற்றினாள். கல்யாணராமன் திரும்பித் தன் அறைக்குச் சென்றான்.
சற்று நேரத்தில் அவள் அறையிலிருந்து ‘வீல்’ என்று அலறும் சப்தம் கேட்டது.
– தொடரும்…
– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.