கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 76 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சில வெறுமை தாள்களுடன் ஒரு படைப்புக்கான தவமிருப்பில் நான். அப்போது “அம்மா தாயே பிச்ச போடுங்க சாமி சாப்பிட்டு ரெண்டு நாளாச்சி ஏதாவது பழசுபட்டது இருந்தா குடுங்க சாமி புண்ணியமா போகும்” என்ற அவலக் குரல் என் சிந்தையை ஊடறுத்து உள் பாய்ந்தது. எங்கோ கேட்ட குரல் நன்கு பரிட்சையமான குரல். கையில் இருந்த வெறுமை தாள்களையும் பேனாவையும் அப்படியே போட்டு விட்டு வாசலை நோக்கி விரைகிறேன். 

என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. இது உண்மைதானா கால மாற்றங்கள் இப்படியும் கூட அனுபவங்களைப் பெற்றுத் தருமா என்றெல்லாம் சிதறிப் பாய்ந்த எண்ணங்களை இழுத்து கட்டி விட்டு “நீங்க மரகதம் பாட்டிதானே! என்றதும் “நீ யாரு சாமி எனக்கு அடையாம் தெரியலையே…!” “பாட்டி நான் ஒங்க தோட்ட கண்டாக்கு மகன் நாதன்.””ஏன் ராசா நீயா சாமி இந்த பாவிக்குத் தான் பாழாப் போன கண்ணும் தெரியமாட்டேங்குதே எப்பிடி சாமி இருக்க, பொண்டாட்டி புள்ள எல்லாம் நல்லா இருக்காங்களா” என்று தழுதழுத்த குரலில் குசலம் விசாரிக்கவும் என் மனம் மெதுவாய் வலிக்கிறது. 

இந்த நிலையில் கூட இங்கிதம் காக்கும் மரகதம் பாட்டியின் மீதென்றால் எனக்கு எப்போதுமே தனிமரியாதை இருப்பது உண்மையே… 

ஒவ்வொரு மனிதனின் வளர்ச்சியிலும் தவிர்க்க முடியாமல் சிலரின் பங்களிப்புகள் தலை நீட்டி போவதுண்டு. என் வளர்ச்சி போக்கிலும் கூட மரகதம் பாட்டியின் பங்களிப்புகள் அதிகமாகவே இருக்கிறது. அவருக்கா இந்த நிலை இதயம் அசுர வேகத்தில் துடித்துக் கொண்டிருந்தது. என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு “ப்ரியா ப்ரியா இங்க கொஞ்சம் சீக்கிரம் வாவே” என்றதும் வெளியே விராந்தாவிற்கு வந்த ப்ரியாவின் முகம் முழுதும் வினாத் தழும்புகளின் விஸ்வரூபங்கள். “யாருங்க இவங்க புதுசா இருக்காங்க?” “ப்ரியா நான் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருப்பேனே மரகதம் பாட்டி இவங்கதான். நீ மொதல்ல போய் இவங்களுக்கு சாப்பாடு ஏதாவது கொண்டு வா” என்றதும் சமையல் கட்டை நோக்கி விரைந்தாள் ப்ரியா. 

உறவுகளில் இப்படியும் கூட விரிசல்கள் ஏற்படுமா என்று வியக்கும் வகையில் மரகதம் பாட்டி சொன்ன கதைகள் என் மனதை வெகுவாய் காயப்படுத்தியிருக்கிறது. 

நகரும் ஒவ்வொரு நாழிகையிலும் எத்தனையோ உறவுகளோடு உரசிக் கொள்கிறோம். ஆனால் தாய்மை என்ற உறவுக்கும் பந்தத்திற்கும் ஈடிணை கிடையாது. அந்த உறவை அந்த புனிதத்தை கூட உதாசீனப்படுத்தி உதறி தள்ளுபவர்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்க்கவே கஸ்டமாக இருக்கிறது. 

பெற்ற பிள்ளைகளே தள்ளி வைக்கும் கொடுமை இருக்கிறதே அதை வார்த்தைகளில் கொண்டு வந்து நிறுத்த முடியாது என்பதை எனக்கு உணர வைத்தவரே மரகதம் பாட்டிதான். 

என்னையும் என் நினைவுகளையும் இழுத்துப் பிடித்த நிலை நிறுத்த எவ்வளவோ முயற்சித்துப் பார்க்கின்றேன். முடியவில்லை. மனம் மறுபடியும் மறுபடியும் கடந்த காலங்களில் லயித்துப் பார்க்கத்தான் பிரியப்படுகிறது. உண்மையை சொல்கிறேன். தோற்றுப்போனது நான்தான். வெற்றி என்னவோ கடிவாளம் தாண்டி களிப்புக் கொள்ளும் மனதிற்குதான். 

அது நான் சந்தோஷ பட்டாம்பூச்சிகளுடன் சகவாசம் வைத்திருந்த பருவ வயது. என் வீட்டில் பேருக்கு வேலை செய்த மரகதம் பாட்டியென்றால் எனக்கு கொள்கைப் பிரியம். தயவு செய்து ஏன் என்ற காரணங்களை மட்டும் கேட்டு விடாதீர்கள். ஒன்றல்ல இரண்டல்ல அதற்கான காரணங்கள் ஓராயிரம். அவ்வளவு ஏன் நல்லவர்களை எல்லோருக்குமே பிடிக்கும் என்பதுதானே நியதி. 

எங்களுக்கும் மரகதம் பாட்டிக்கும் இடையில் இருக்கும் உறவுக்கும் எனக்கும் ஒரே வயது. ஏனெனில் நான் பிறந்து நான்கு நாட்களில் அப்பா தரவளை தோட்டத்திற்கு றான்ஸ்பர் வாங்கியிருக் கிறார். அப்போதிலிருந்தே என் வளர்ச்சியில் பங்கேற்ற இந்த பவித்தர உறவிற்கா இந்த நிலை! நினைக்கும் போதே நெஞ்சு வெடிக்கிறது. 

நான் என் அம்மாவோடு இருந்த காலங்களை விட மரகதம் பாட்டியோடு இருந்த காலம்தான் அதிகம். தேயிலைச் செடிகளோடு போராடி போராடி களைத்த அந்த கரடு முரடான கரங்கள் பற்றி பள்ளி சென்ற காலந்தொட்டு என் உடல் நலனில் அக்கறை கொண்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் அவர் வைக்கும் எண்ணெய்க்கு பயந்து அஞ்சி நடுங்கிய நாட்கள் என்று அவர் என் மீது காட்டிய அக்கறை அன்பு எதை சொல்வது எதை விடுவது! இவை எல்லாவற்றையும் விட என்னையும் என் மனதையும் அதிகமாய் அழுத்திய ஒரு விடயம் இருக்கிறது. அது காலமாற்றம் கருதி என் அப்பா எடுத்த முடிவு காரணமாகவும் சில அடிப்படை வசதிகள் கருதியும் ஊரை விட்டுப் போக வேண்டும் என்ற முடிவுதான் அது. அப்போது என் மனம்பட்ட வேதனை இருக்கிறதே சொல்லிமாளாது. 

அப்போது “பாட்டி நீங்களும் எங்களோடு வருவீங்க இல்ல…!” ”ராசா எனக்கும் புள்ளைக இருக்கு இல்ல நீங்க போய் பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு இந்த தோட்டத்துக்கே கண்டாக்கா வாங்க ஒங்க புள்ள குட்டிகளையும் நான்தான் பார்ப்பேன். அடம் பிடிக்காம ஐயா சொல்லுறத கேளுங்கய்யா. இந்த கெழவி நல்லாயிருந்தா கண்டப்பா ஒங்கள பாக்க வருவேன்” என்று என் கன்னங்களில் முத்தம் வைத்து அழுத அந்த நாள் என் மனக் கண்ணில் வந்து வந்து போகிறது. 

இப்படியெல்லாம் வட்டமடித்து திரியும் என் சிந்தையை சட்டென கலைத்தாள் ப்ரியா “என்னங்க இந்த கெழவியோட நெலம ரொம்ப மோசமா இருக்கு, நமக்கு ஏங்க வீண்தொல்ல பேசாம காலையில போகச் சொல்லிட வேண்டியதுதான்.” என்றதும் சுருக்கென தைத்தது எனக்கு. 

எனக்குள் இருக்கும் போராட்டங்களை உள்வாங்கிக் கொள்ளாமல் சட்டென சொன்ன ப்ரியாவின் வார்த்தைகள் எரிச்சலையும் கோபத்தையும் மூட்டினாலும் சில நன்மை கருதி மௌனம் காத்து திரும்பி படுத்து விடுகிறேன். ஆனால் விடியும் வரையுமே தூக்கம் மட்டும் கண்களை தழுவவே இல்லை. 

அன்றைய நாள் சம்பங்கள் என்னை அதிகமாகவே பாதித்திருந்தது. மறுநாள் “பாட்டி இனிமேல நீங்க இங்கையே இருங்களே ஏன் இப்படி வீடு வீடா அசிங்கமா அலையீறீங்க பேசாம இங்கையே இருங்களே” என்கிறேன். “சாமி இந்த எழவெடுத்த பொழப்புக்கு எனக்கு மட்டும் விருப்பமா சாமி? என்னா தொர செய்யிறது வயித்த கழுவத்தான் இந்த மாதிரி ஈன பொழப்பு பொழைக்க வேண்டியிருக்கு. பாழாப் போன வயிறு இப்பத்தான் கண்டதையும் திங்க அலையுது. ஏன் சாமி இங்க கெடந்து நல்லா திண்ணுட்டு ரெண்டு நாள் இருந்துட்டு போறேன் என்னால பேரப் புள்ளைகளை பாக்காம இருக்க முடியாது.” என்றதும் ஒரு கணம் ஆடிப்போனேன் நான். 

இப்படியும் கூட மனிதர்கள் இருப்பார்களா பெற்று வளர்த்து ஆளாக்கி விட்ட தாயை ஒரு நேர சோற்றுக்கும் தண்ணிக்குமே அலைய விட்ட பிள்ளைகள் மீதும் அவர்கள் பெற்ற குழந்தைகள் மீதும் இனியும் கூட எப்படி இவரால் அன்புக் காட்ட முடிகிறது என்று குழம்பிப்போகிறேன். மனம் மட்டும்தான் குழம்பிக் கொண்டே இருக்கிறது அதற்கான விடைகள் மட்டும் இன்னுமே கிட்டவில்லை. 

எல்லாவற்றையும் ஜீரணித்துக் கொண்டு மரகதம் பாட்டியை இரண்டு நாட்களாய் தாங்கு தாங்கென்று தாங்கினேன். இப்போது எனக்குள் பெரியதொரு ஆத்ம திருப்தி. மனம் முழுதுமே சந்தோஷங்கள் நிரம்பி வழிந்தது.இப்போது மரகதம் பாட்டி எங்களிடம் இருந்து விடைப்பெற்றுக் கொள்கிறார். இப்போதும் என் விழியோரங்கள் மெதுவாய் நனைகிறது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் வழியனுப்பி விட்டு உள் நுழைகிறேன். என் வீட்டை தீட்டுக் கழிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் மனைவி ப்ரியா செய்துக் கொண்டிருந்தாள். இருப்புக் கொள்ளாமல் நூலகம் நோக்கி பயணிக்கிறேன். மனம் முழுதும் மரகதம் பாட்டியின் விம்பங்கள் விழுந்து விழுந்து மறைகிறது. 

சில நாட்களில் நானும் வழமையான வாழ்க்கை நுகர்ச்சிகளுக்குள் சென்று சேர்கிறேன். இதுதான் இயந்திர யுகமாயிற்றே யாரை சொல்லி என்ன பயன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இதில் யாரையும் குறைப்பட்டுக் கொள்வதற்கில்லை. இந்த அவசர யுகத்தின் ஆட்டங்களுக்கு பழகிப் போன எண்ணமும் மனமும் மரகதம் பாட்டியின் நினைவுகளுக்கு தற்காலிகமாக விடை கொடுத்திருந்தது உண்மைதான். 

அன்றும் ஆபிஸ் முடித்து வீடு வந்து அமர்கிறேன். என் செல்ல மகள் மதுரா “அப்பா உங்களுக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு” என்று ஒரு தபால் அட்டையை மேசையின் மீது போட்டு விட்டு ஓடுகிறாள். 

வந்த அசதி மாறாமலே அந்த அட்டையை கையில் எடுத்துப் பார்க்கிறேன். உத்தரகிரியை பத்திரிக்கை. தரவளை மேற்பிரிவை சேர்ந்த திருமதி மரகதம் அவர்கள் மரணித்து விட்டார். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக 31-03-2005 புண்ணியதானம் செய்ய பெரியோர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வந்து கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். இங்ஙனம் பிரிவுத் துயரால் வாடும் மகன்மார்கள். வாசித்து முடிக்கிறேன் கண்களில் நீர் தேங்கி நிற்கிறது. 

சுதாகரித்துச் கொண்டு இரவு உணவை எடுப்பதற்கு உள்ளே செல்கிறேன். மனம் உணவை மட்டும் நாடவே இல்லை. 

மறுநாள் கருமாதி வீட்டில் நானும் அங்கம் வகிக்கிறேன். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு விதமான சலசலப்பு என் மனதைப் போலவே சுதாகரித்துக் கொண்டு அமர்ந்திருக்கிறேன். 

மீறப்படாத மரபுகள் எல்லாம் சடங்குகளாய் அரங்கேறி முடிந்தது. அப்போது மரகதம் பாட்டியின் மகன் பழனி “சாமி தொர உள்ள வாங்க நீங்கதான் அம்மாவுக்கு படையல் போடனும்” என்றதும் ஒரு நிமிடம் தடுமாறிப் போனாலும் சுதாகரித்துக் கொண்டு உள்ளே போகிறேன். அந்த அறை விதவிதமான தின்பண்டங்களால் நிரம்பி இருந்தது. அப்போது அங்கு கூடியிருந்த கூட்டத்தில் யாரோ “என்னாத் தம்பி இருக்கிற சாப்ட்டுல இருந்து ஒன்னு ஒன்னு எடுத்து படையலுக்கு வைங்க” என்றதும் மறுபேச்சின்றி என் பணியினை செவ்வனே முடித்து கொடுக்கின்றேன். 

அப்போது பழனி “அட இவருக்க ஒன்னும் தெரியாது இல்ல. இவங்க ஐயா சாமினா எல்லா வீட்டு கருமாதிக்கும் போயிருக்கிறார். நம்ம வரமொற எல்லாம் தெரியும்” என்று என்னை பார்த்து நகைக்கவும் பதிலுக்கு நானும் புன்னகைத்து விட்டு வெளியேறுகிறேன். 

அப்போது பின்னால் வந்த பழனி “சாமி தொர இங்க வெச்சிருக்கிற சாப்பாடு எல்லாம் எங்கம்மா உசிரோட இருந்தப்போ விரும்பி தின்ன சாப்பாடுங்க. கருமாதிக்கு இதயெல்லாம் வக்காம போனா அம்மாவோட ஆவி அவுட்டம் பண்ணும். நாள பின்ன நாங்களும் புள்ள குட்டியோட நல்லா இருக்கனும் இல்ல இதுல எல்லாம் கொறவக்க கூடாது” என்றதும் என் உணர்வு பொறிகளுக்குள் ஓராயிரம் ஆவேச சுடர்கள் ஏற்றப்பட்டது. கொதித்தெழுந்த ஆவேசங்களை கொட்டித் தீர்த்து விடத்தான் நினைக்கின்றேன். மறு நொடியே என் ஆவேசமும் உணர்வுகளும் வெறும் பஸ்பங்களாய் அடங்கி நிசப்தம் கண்டு விடுகிறது. செவிட்டு வெவிகளில் சங்கு ஊதி பயனில்லை என்பதால். 

எல்லாம் முடிந்து இப்போது வீடு நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றேன். இப்போதும் பழனியின் வார்த்தைகள் என் செவியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

உண்மையை சொல்கிறேன் இப்போது ஒரு படைப்புக்கான கதையும் கருவும் என்னுள் உள்வாங்கப்பட்டுள்ளது. ஆனால் என்னால் எதையும் எழுத மட்டும் முடியவே இல்லை. 

(பரிசுச் சான்றிதழ் பெறும் சிறுகதை ) 

ஆசிரியரான சிவனு மனோஹரன் 1978ஆம் ஆண்டு ஹட்டனில் பிறந்தார். மலையக மக்களின் வாழ்க்கையையும், அவலங்களையும் தனது ஆக்கங்களுக்குக் கருப்பொருளாகக் கொண்டு எழுதிவரும் ஒரு வளரும் எழுத்தாளர். வீரகேசரி, சுடர்ஒளி, தினமுரக ஆகிய பத்திரிகைகளிலும் ஞானம் சஞ்சிகையிலும் இவருடைய ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. 

இவருடைய 30க்கு மேற்பட்ட சிறுகதைகளும், 50க்கு மேற்பட்ட கவிதைகளும் பிரகரமாகியுள்ளன. 2004ஆம் ஆண்டு பூபாளராகம் சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது. உலகக் கவிதை போட்டி (இரண்டாவது) மில் தமிழ்க் கவிதைக்கான மூன்றாம் பரிசைப் பெற்றுள்ளார். நிறைய எழுதவேண்டும் என்ற துடிப்புள்ள இளைஞர். வளர்ந்துவரும் மலையக எழுத்தாளராகத் தன்னை உருவாக்கிக் கொண்டு உழைத்துவருகின்றார். 

– கொக்கிளாய் மாமி (சிறுகதைகள்), தொகுப்பாசிரியர்: தி.ஞானசேகரன், முதற்பதிப்பு: செப்டெம்பர் 2005, ஞானம் பதிப்பகம், கொழும்பு.

சிவனு மனோஹரன் சிவனு, மனோகரன் (1978.09.17 - ) ஹட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர். இவர் பேராதனைப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரி. இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம் ஆகிய துறைகளில் எழுதி வருகின்றார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, ஞானம், தினமுரசு, தினக்குரல், சுடரொளி, மித்திரன், வடம், லண்டன், சுடரொளி, புதினம் ஆகியவற்றில் வெளியகியுள்ளன. ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும், கோடங்கி ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புக்களாகும். இவரது நூல்கள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *