கன்னிப் பெண்
கதையாசிரியர்: நா.க.தங்கரத்தினம்
தின/வார இதழ்: ஈழநாடு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: January 11, 2026
பார்வையிட்டோர்: 392
(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“தேவன்! தேவன்! கோவிலுக்கு வரவில்லையே? இந்த முறை ஆறாம் திருவிழாவுக்கு நல்ல நல்ல மேள மெல்லாம் பிடித்திருக்கிறார்களாம்.”
“ஆர் சொன்னது?”
“நீ ஆறாம் திருவிழா நோட்டீசு பார்க்கவில்லையே? இஞ்சை பார் எத்தனை கூட்டமேளம், எத்தனை கூட்டஞ் சின்ன மேளமெண்டு தேவனிடம் நோட்டீசைக் கொடுத்தான். தெண்டாயுதம். தெண்டாயுதம் கொடுத்த ஆறாம் திருவிழா நோட்டீசை வாங்கிப் பார்த்தான் தேவன். அந்த நோட்டீஸ் பார்ப்பதற்கு நல்ல அழகாக இருந்ததோடு ஏழு கூட்ட மேளமும் இரண்டு கூட்டஞ் சின்னமேளமும் என்று அதில் அச்சடிக்கப்பட்டிருந்தது.
தேவனுக்கு மேளக்கச்சேரி, சதுர்க்கச்சேரி பார்ப்ப தென்றால் மிகவும் ஆசை. அவன் இந்தக் கச்சேரிகள் பார்ப்பதென்றால் எந்த வேலையையும் பின்போட்டு விட் டுத் திருவிழா முடியும்வரை நின்று பார்த்துவிட்டுத்தான் வருவான். ஏன் ? பதினைந்து இருபது மைல்களுக் கப்பால் உள்ள சுட்டிபுரத்துக்கே நண்பர்களுடன் சேர்ந்து போய்ப் பார்க்கிறவன் என்றால் அவனது திருவிழா ரசனையைச் சொல்லவும் வேண்டுமா?
“தெண்டாயுதம்! தெண்டாயுதம்!! நான் வேட்டி கட்டிக்கொண்டு வாறன். நீ உந்தக் கடையிலை நிக்கிறியே?’”
“அதுக்கென்ன, கெதியா வா மச்சான்” என்று சொல்லிவிட்டுச் சின்னராசாவின் ‘பொன்மலர்’ ‘ஸ்ரோ சில் நின்றான் தெண்டாயுதம்.
தேவன் அவசர அவசரமாக வேட்டியைக் கட்டிக் கொண்டு ஓடோடி வந்ததும் தேவனும் தெண்டாயுத மும் கோவிலுக்குப் போனார்கள்.
கோவிலிலே ஆறாம் திருவிழா வெகு மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ‘டுமீல், டுமீல்’ என்று மத்தாப்புக்கள் வெடித்துக்கொண்டிருந்தன.
தேவனும், தெண்டாயுதமும் நூற்றுக்கணக்காகச் செலவு செய்து கட்டப்பட்ட மணிப்பந்தலின் ஒரு பக்கத்திலே இருந்து மேளக்கச்சேரியைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்தனர்.
அப்போது,
“மாஸ்ரர்! உங்கடை ஏழாம் திருவிழா நாளைக்கு எப்படி ? இந்தத் திருவிழாவைத் தட்டுமோ?” என்று கேட்டுக்கொண்டே அருகில் வந்து இருந்தான் அமுதன். இந்தமுறை ஆறாம் திருவிழாவை ஏழாம் திருவிழாவால் வெல்ல முடியாது என்பது அமுதனின் எண்ணம். அதனால், அமுதன் தன்னுடைய ஆறாம் திருவிழா வைப் பற்றிப் புளுகிக்கொண்டே இருந்தான்.
தேவனுக்கு அமுதன் புளுகுவது ஆத்திரத்தை உண்டாக்கியது. பரம்பரை பரம்பரையாக எல்லாத் திருவிழாவிலும் பார்க்க நன்றாக நடந்துவந்த ஏழாம் திருவிழா இம்முறை நடைபெறாது எனத்தெரிந்துதானே அமுதன் அப்படிப் புளுகுகிறான் என்பது தேவனுக்குத் தெரியும்.
தேவனும் திருவிழா விஷயத்திலே மிகவும் ரோஷக் காரன். எந்தத் திருவிழாவும் தங்கள் திருவிழாவை வெற்றி பெறுவதற்கு விடமாட்டான். ஆசிரியனாக இருந்துகொண்டு எத்தனையோ தடவை வீடு வளவையே ஈடு வைத்துத் திருவிழாச் செய்திருக்கிறான். அத்தகைய ரோஷக்காரனுக்கு அமுதன் கூறியது எரிகிற விளக்கில் எண்ணெய் விட்டதுபோல ஆத்திரத்தை மிகப்படுத்தி யது. பார்த்துக்கொண்டிருந்த மேளக்கச்சேரியையும் இடையிலே விட்டு விட்டு வீட்டுக்குப் போனான்.
2
“டொக் டொக்” = தேவன் கதவில் தட்டினான்.
“தேவி! தேவி!”
“யாரது?”
“அது நான்தான் கதவைத் திற!”
“என்னத்தான், திருவிழாப் பார்க்கவெண்டு போனியள். திருவிழாப் பார்க்கவில்லையோ?”.
“பார்த்துக்கொண்டுதான் வாறன்.”
“ஏன் நேரத்தோடை முடிஞ்சது. திருவிழா நல்லா யில்லையோ?”
“இந்தமுறை ஆறாம் திருவிழா மிச்சம் எழுப்பம். அதை முடியும்வரை பார்க்கலாமெண்டால் வாறவன் போறவன் எல்லாரும் ஏழாந் திருவிழா எப்படி? ஏழாந் திருவிழா எப்படி ? என்று வந்து வந்து என்னைக் கேட்கிறாங்கள். எனக்கெண்டாலோ ‘ஆத்திரமாக எரிந்தது. பார் ஏழாம் திருவிழாவைச் செய்து காட்டுறன் என்று சொல்லிப்போட்டு வந்துவிட்டேன்.”
“ஏனத்தான் உங்களுக்கு உந்தவேலை. போனவரு ஷம் திருவிழாவுக்கெண்டு ஈடுவைச்ச காணி இன்னும் மீளவில்லை. இந்த வருஷம் என்ன செய்யப்போறியள்?”
“அதுதான் எனக்கும் யோசினையாக்கிடக்கு?”
“யோசினையென்ன, வீட்டிலை ஒரு சதமெண்டா லும் இருந்தாலல்லோ யோசிக்கலாம்.”
“இந்த வருஷம்தான் உன்னை ஒண்டு கேட்கப்போகி றன். நீ சம்மதித்தாயெண்டால் ஆறாம் திருவிழாவை இந்த வருஷமும் ஏழாந் திருவிழா ஒதுக்கி வைத்துப் போடும். கேக்கட்டோ?”
“தாராளமாகக் கேளுங்கோ. உங்களுக்கில்லா ததை எனக்கென்னத்துக்கு. உங்களுக்குத் தெரியாமல் காசைக் கீசைப் பதுக்கி வைத்திருக்கிறேனோ?”
“தேவி! இந்தமுறை திருவிழாச் செய்கிறதுக்கு உனது தாலிக்கொடியைக் கழற்றித் தருவயோ?”
“என்ன, தாலியைக் கழற்றித் தாறதோ? காசைக்:, கொட்டி ஆடம்பரத் திருவிழாச்செய்கிறதுக்காக என்ரை உயிருக்குயிரான தாலியைக் கழற்றித் தரச் சொல்லுறியளே?”
“பார்த்தியோ என்னிலும் பார்க்க உந்தத் தாலினே உனக்குப் பெரிதாகப் போய் விட்டது.'”
“என்னுயிரைக் கேட்டாலும் கேளுங்கோ தந்து விடுகிறேன். ஆனால், தாலியை மாத்திரம் கேளாதீர்கள். தாலிதான் பெண்ணுக்கு ‘வேலி’. அந்த வேலியை எடுத்து விட்டால் எந்த ஒரு ஆடவனும் அந்தப் பெண்ணை விரும்பத்தான் செய்வான். ஒரு பெண் அதிகாலையிலே எழுந்து கணவனை உள்ளத்திலே நினைத்து தினந்தோ றும் வணங்குவதற்குத் தாலிதானே உதவி புரிகிறது? தாலி கட்டாதவளை தாலி அறுத்தவள் என்று ஊரவர் கள் கூறிக்கொள்வது உங்களுக்குத் தெரியாதா ஏன்? தாலி கட்டினவனே கண் கண்ட தெய்வம் என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டிருப்பது இந்தத் தாலிதானே? கன்னிப்பெண்ணல்ல, கலியாணம் செய்தவள் என்று மற் றவர்களுக்கெல்லாம் பறை சாற்றிக்கொண்டிருப்பதும் இந்தத் தாலிதானே? நீங்கள் உயிருடன் இருக்கும்வரை இந்தத் தாலியை என்னுடைய கழுத்திலே இருந்து கழற்றமாட்டேன். கழற்றவும் விடமாட்டேன். இதை யாராலும் கழற்ற முடியாது”. இவ்வாறு பலவிதமாகத் தேவி கூறியதும் தேவனுக்குத் தாலியினால் சம்பவித்த கடந்த காலச் சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு வந்தது..
3
“தேவன்! தேவன்! வாவன் கோப்பாய்க்குப் போவிட்டு வருவோம்?”
“அங்கே என்னத்துக்கப்பா, நீ மாத்திரம் உன்ரை மிசிசைப் பார்க்கப் போகிறாய்; நான் வந்து என்ன செய்யிறது?”
“நீ அங்கை வந்து பாரனப்பா. என்னென்னவித மான ரீச்சர்மாரெல்லாம் இருக்கினமெண்டு.”
“எனக்குத் தெரியாத ரீச்சர்மாரோ? பத்துப் பதி னைந்து பிள்ளையள் பெத்தவைதான் இருப்பினம்.”
“எட மச்சான், நீ உப்பிடி நினைச்சுத்தானே அண்டைக்கும் வரமாட்டனெண்டனி. அங்கே இருக்கிற ரீச் சர்மாரில் தொண்ணூறு வீதம் கல்யாணம் செய்யா தவையப்பா.”
“கல்யாணம் செய்யாத ரீச்சர்மார் இருந்தாப் போலை என்ன ? பலாலியிலை இருக்கிற ரீச்சர்மாரைப் பார்க்கப் பத்தாயிரம் கண் வேணுமப்பா”
“ஏன்? அவை இங்கிலீசு படிக்கினம் என்றாற் போல அவையிலை உனக்குப் பெரிய எண்ணமே ? நீயும் ஒரு தமிழ்ச்சட்டம்பிதானே?”
“அவை இங்கிலீசு படிக்கிறதுக்காகச் சொல்லை யில்லை. அந்த ரீச்சர்மார் ‘கூலிங் கிளாஸ்’ அடிச்சுக் கொண்டு ஒயிலாக் நடந்து போனதை எப்பவாலும் பார்த்தனியே? உண்மையிலை அவளவைதானப்பா அழகியள்.”
“ஓகோ!… நீ உந்தப் பகட்டிலை மயங்கிப் பேர் னாய் போல கிடக்கு. அவையின்ரை வீட்டுக்கு ஒரு நாளைக்குப் போய் உண்மையான இயற்கை அழகை ஒருக்காப் பாத்துவிட்டுச் சொல்லு. அவையின்ரை அழகு எப்படி எண்டு. சும்மா பவுடரையும் லிப்ஸ்ட்ரிக் கையும் போட்டுச் செயற்கை அழகு செய்துகொண்டு வந்தாப்போல, அவை பெரிய அழகிகள். எண்டு நினைச். சுட்டியே?”
“ஏனப்பா, உனக்குப் பலாலியைப் பற்றிப் புகழ்ந் தாப்போலே கோவம் வருகுது?”
“எனக்கேன் கோவம் வருகுது உண்மையைத் தான் சொல்லுறன்.”
“சரி சரி, நீ புகழும் கோப்பாயையும் ஒருக்கா வந்து பாப்போமே.”
கொழும்புத்துறை ஆசிரியர் கலாசாலை ‘டோமெற்றி’யினுள் நின்று, அவசர அவசரமாக வேட்டியைக் கட்டிக்கொண்டு வரதனுடன் புறப்பட்டுப் போனான் தேவன்.
தேவனும் வாதனும் ஒருவரோடு ஒருவர் எத்தனை எத்தனையோ கதைகள் எல்லாம் கதைத்துக்கொண்டு கோப்பாய் மகளிர் கலாசாலைக்குப் போய்ச் சேர்ந்தனர்.
4
கோப்பாய் மகளிர் கலாசாலைக்குப் போனதும் *அங்கேயுள்ள ‘விசிற்ரேஸ் றூமில் தேவனை இருக்கும்படி சொல்லிவிட்டுக் கிளாக்கரின் காரியாலத்திற்குள் நுழைந் தான் வரதன். மாஸ்ரர் என்ன மாஸ்ரர் !! மலர்விழியைச் சும்மா இருக்க விடமாட்டியளோ மாஸ் ரர் ? ” என்று குறும்பாகச் சிரித்துக் கொண்ே வரத னைக் கேட்டாள். அந்தக் கிளாக். அந்தப் பெண் கிளாக்குக்கு வரதன் போனதும் அவன் யாரைத் தேடி வந்திருக்கிறான் என்பது நன்றாகத் தெரியும். அடிக்கடி போனால் யாருக்குத்தான் பழக்கம் இல்லாமற்போகும்.
“என்ன பாருங்க ஒரு மாதிரிக் கேலி செய்யிறி யள். கல்யாணம் செய்தவைக்குத்தான் அதன் அருமை தெரியும். உங்களுக்கு…” என்று இழுத்துக்கொண்டே வரதன் கூறியது அவளைக் கேலி செய்வதுபோல் அவ ளுக்குத் தோன்றியது. அவளும் வரதனுக்கு விட்டுக் கொடுக்காது கேலி செய்துகொண்டே இருந்தாள்.
“சரி சரி, மலர்விழியை ஒருக்கா வரச் சொல்லுங்க” என்று வரதன் சொன்னதும் மலர்விழியைக் கூட்டிக் கொண்டு வந்தாள் அந்தக் கிளாக்.
மலர்விழி வரதனைக் காண வரும்போது தன் சிநே கிதி பொன்முடியோடுதான் வருவாள். அவள் எங்கு போனாலும் தன் சிநேகிதி பொன்முடியைக் கூட்டிக் கொண்டு போகத் தவறமாட்டாள். அந்தக் கலாசாலையிலே மலர் விழியையும் பொன்முடியையும்போல உயிருக்குயிரான சிநேகிதிகள் ஒருவரேனும் இல்லை என்றே சொல்லலாம்.
மலர்விழி தன் கணவன் சந்திக்க வந்திருப்பதை அறிந்ததும் தன் சிநேகிதியோடு ‘விசிற்றேஸ் றூ’முக்கு வந்துகொண்டே “என்னத்தான்! இன்றைக்குத்துணை யோடே வந்திருக்கிறியள்? என்ன விசேஷம்?” என்றாள்.
“ஒன்றுமில்லை மலர்விழி, உங்களுக்கு ‘ரீச்சிங் பிறைக்ரீசு’க்கு உபகரணங்கள் தேவை என்று சொன்னியள். அதுதான் கொண்டுவந்தனாங்கள்” என்று. சொல்லிக்கொண்டே உபகரணங்கள் எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்தெடுத்துக் காட்டினான் வரதன்.
அவன் காட்டிய உபகரணங்களைப் பார்த்ததும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“அத்தான்! இந்தப்படம் ஆர் அத்தான் கீறினது?”
“இதோ இருக்கிறாரே இந்தக் கலைஞர்தான்” என்று சொல்லித் தேவனைக் காட்டினான் வரதன். அந்த அழ உபகரணங்களை எல்லாம் தேவன்தான் செய் தான் என்று வரதன் சொன்னதைக் கேட்டுக்கொண்டு அருகில் நின்ற பொன்முடி “என்ன! இந்த உபகரணங்களை இவரா செய்தார்?” என்று கேட்டாள் ஆச்சரியத்தோடு.
“….”
”மாஸ்ரர்! எனக்கும் கொஞ்ச உபகரணங்கள் செய்து கொண்டுவந்து தாறியளே ?” என்று தேவனைக் கேட்டாள் பொன்முடி. பொன்முடி கேட்கும்போது அவ ளது வாயிலிருந்து தேன் சொட்டுவதுபோல் இருந்தது. பெண்கள் ஒன்றை விரும்பிக் கேட்டால் எந்த ஆண் தான் மறுப்பான். ‘ பெண் என்றால் பேயும் இரங்கும் ‘ என்று சொல்வார்களே ! தேவனும் பொன்முடியின் வேண்டுகோளுக்கு இசைந்தான்.
5
வரதனோடு போய்ப்பொன் முடியோடு கதைக்கத்தொ டங்கிய தேவன் பொன்முடியின் வேண்டுகோட்படி அதிக பணத்தைச் செலவு செய்து உபகரணங்கள் எல்லாம் செய்து கொண்டுபோய்ப் பொன்முடிக்குக் கொடுத்தான். பொன்முடி அவனது கலைத்திறனைப் பாராட்டியது அவ னுக்கு என்னவோபோல இருந்தது. அவனும் அவ ளது பாராட்டைப் பெறுவதற்காகத் தன்னால் இயன்ற நல்ல நல்ல உபகரணங்களை எல்லாம் செய்துகொண்டு போய்க் கொடுத்தான்.
தேவனுக்குப் பொன்முடி பாராட்டப் பாராட்ட அவள் மேல் காதல் பிறந்தது. பொன்முடி – பொன்முடியின் இயற்கை அழகும் பிடிநடையும் குயிலினும் இனிய குர லும் பெண்களுக்கு அதிக அழகைக் கொடுக்கும். கரு வண்டை ஒத்த நீளமான பின்னல்களும் யாரைத்தான் காதலிக்கச் செய்யாது? தேவனும் அவளது அழகில் மயங்கினான்.
நாட்கள் செல்லச்செல்ல அவனுக்குப் பொன்முடியின் மேல் காதல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அவன் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அவளைச் சந்தித்துக் கதைத்து வந்தான்.
வாரத்தில் ஒரு நாளாவது அவளைச் சந்தித்துக் கதைக்காவிட்டால் அவனுக்கு மண்டை வெடித்துவிடும் போலிருக்கும்.
ஒருநாள்-
யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் பொன்முடியைச் சந்திப்பதற்காகக் காத்து நின்றான் தேவன்.
கோப்பாயில் இருந்துவரும் ஒவ்வொரு பஸ்ஸை யும் அடிக்கடி ஓடி ஓடிப் போய்ப் பார்த்தான். அவளைக் காணவில்லை. அவனுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு அவளின் வரவை எதிர் பார்த்து நின்றான். பொன்முடி கடைசியாக வந்த பஸ் ஸில் இருந்து இறங்கி நடந்துவந்தாள். அவளைக்கண்ட பிறகுதான் அவனுக்கு உச்சி குளிர்ந்தது.
இருவரும் சந்தித்துக் கதைக்கும் மரத்துக்குக் கீழே நின்று கதைத்தார்கள். இருவரும் ஒருவரோடு ஒருவர் கதைத்துக்கொண்டு நிற்கும்போது பொன்முடியின் கழுத் திலே தாலிக்கொடி தொங்கிக்கொண்டிருப்பது தேவனுடைய கண்ணுக்குத் தெரிந்தது. இவ்வளவு காலமும் கன்னியென நினைத்து அவளைக் காதலித்த தேவனுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது. எதிர்பாராத விஷயம் ஒன்று திடீரென நடந்துவிட்டால் யாருக்குத்தான் அதிர்ச்சி ஏற்படாது?
“பொன்முடி! நீ கல்யாணம் செய்துவிட்டாயா எப்பொழுது செய்தாய்?”
“உங்களுக்குத் தெரியாதா?”
“எப்படி எனக்குத் தெரியும்? நீ கல்யாணம் செய்தபொழுது சொன்னாயா?” என்று தேவன் கேட்டபோது பொன்முடி சிரித்தாள். – அவள் சிரிப்பது. தேவனுக்கு ஆத்திரமாக இருந்தது.
“ஏன் சிரிக்கிறாய்?” ஆத்திரத்துடன் கேட்டான்.
“நான் கல்யாணம் செய்து இரண்டு வருடத்துக்கு மேலாகிறதே ? எப்படி உங்களுக்குச் சொல்லியிருக்க முடியும்?”
“என்ன, நீ கல்யாணம் செய்து இரண்டு வருடங்களாகிறதா ? அப்படியானால் நீ ஏன் தாலிக் கொடி கட்டாமல் இருந்தாய்?”
“அது…”
“என்னை ஏமாற்றுவதற்காகவா?”
“என்ன! உங்களை ஏமாற்றுவதற்காகவா? நான் உங்களை விரும்புவதாக எப்பொழுதாவது சொன்னேனா? அல்லது நீங்கள் எனக்குச் சொன்னீர்களா?”
“மாஸ்ரர்! நான் தாலிக்கொடி கட்டாமல் இருந்த தைக்கண்டு கன்னியென நினைத்துக் காதலித்திருக்கிறீர்கள் போலத் தெரிகிறது. எனக்குச் சொல்லாமல் நீங்கள் என்னைக் காதலித்தது உங்கள் தப்பு. கலியாணம் செய்தும் தாலிக்கொடி கட்டாமல் இருந்தது எனது தப்பு. ஆனால், நான் தாலிக்கொடி கட்டாமல் இருந்த தற்கும் காரணத்தைச் சொல்லுகிறேன் கேளுங்கள்” என்று சொல்லித் தன் கணவன் வறுமையின் காரணமாகவும் தனது படிப்புச் செலவுக்காக அடைவு வைத்ததாகவும் தற்பொழுது அந்தத் தாலிக்கொடியை அடைவிலிருந்து எடுத்ததாகவும் சொன்னாள் பொன்முடி.
இப்படியே பொன்முடி சொன்னதும் தேவனின் முகமெல்லாம் எண்ணெய் படர்ந்ததுபோல மாறிவிட்டது.
பொன்முடி என்ன செய்யமுடியும்? அவள், அவனைக் காதலிக்கவில்லைத்தானே! அவன்தானே அவளைக் காதலித்தான். அவன் அவளைக் காதலிக்கும்போது அவளைப்பற்றித் தீரவிசாரித்து விட்டல்லவா காதலித்திருக்க வேண்டும் ? அவளைப்பற்றி ஒன்றுமே தெரியாது ஒரு தலையாகக் காதலித்துவிட்டுக் காதல் நிறைவேறவில்லை என்றால் ‘தற்கொலை’ செய்யலாமா?
“தாலிகட்டாமல் இருந்ததால்தானே அவள் ‘கன்னிப்பெண்’, என நினைத்து அவளைக் காதலித்தேன். பெண்கள் தாலிகட்டாமல் இருக்கவே கூடாது.” என்று தனக்குள்ளே நினைத்துக்கொண்டு அவளைத் திரும்பியும் பார்க்காமல் ஓடினான் தேவன்.
6
“அத்தான்! என்னத்தான்! நான் சொல்வதில் ஏதாவது தவறு இருக்கிறதா? ஒவ்வொரு பெண்களுக்கும் தாலி மிகமிக முக்கியம் என்பதை நீங்கள் கேள்விப்படவில்லையா?” என்று தேவி கேட்டதும் கடந்த கால நினைவை அப்படியே அறுத்துவிட்டு, “தேவி! நீ சொல்வது முற்றிலும் உண்மை. தாலி பெண்களுக்கு வேலிதான். அந்த வேலியை நான் ஒரு நாளும் அழிக்கமாட்டேன் ” என்று சொல்லித் தாலியின் மகிமையை. உணர்ந்தவன்போல் தாலியை வாங்கி அடைவு வைக்க விருப்பமில்லாது மீண்டும் திருவிழாப் பார்க்க ஓடினான் தேவன்.
– 04-04-1965, ஈழநாடு.
– கன்னிப்பெண் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மே 1965, நகுலன் வெளியீடு, கலையகம், கலைநகர், சித்தன்கேணி.
![]() |
சித்தன்கேணி கலைநகரைச் கேர்ந்த திரு. நா. க. தங்கரத்தினம் அவர்கள் அராலி வடக்குச் செட்டியார் மடத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு நாகர் கந்தையாவுக்கும் திருமதி மனோன்மணி கந்தையாவுக்கும் 8-6-35ல் பிறந்தார். 'நகுலன்', 'அராலியூரான்', 'கலை நகரான்', 'கொழும்பு மாமா', 'இராசாக்குட்டி' என்னும் புனை பெயர்களுள் மறைந்திருந்து சிறுகதை, கட்டுரை, கவிதைகள் எழுதும் இவர், சமூகத்தொண்டனில் முதன் முதலாகக் கட்டுரை எழுதத் தொடங்கி, தினகரன், வீரகேசரி, ஈழநாடு. ஸ்ரீலங்கா, சுதந்திரன், விவேகி, கலைவாணி…மேலும் படிக்க... |
