கனைத்த… கட்டெறும்பு!






அதிகாலை நாலு ஐந்து மணிக்கே எழுந்து வீட்டு வேலைகளியெல்லாம் சுறுசுறுப்பாகச் செய்து எல்லாரையும் அனுப்ப அன்றைய தினமும் படாதபாடு பட்டுக்கொண்டிருந்தாள் பாமா.
‘மாமா… நானொருத்தி இங்க கழுதை மாதிரி கத்தீட்டிருக்கேன்.. நீங்க பாட்டுக்கு உக்கார்ந்து டிவி பார்த்திட்டிருந்தா எப்படி?! பையனை ஸ்கூலுக்கு அனுப்பணும்., பொண்ணைக் கொண்டு எக்ஸாமுக்கு கரெக்டா எக்ஸாம் செண்டர்ல கொண்டு விடணும்…! அதெல்லாம் பத்திக் கவலைப் படாம, அப்படி என்ன டீவில மூழ்கி இருக்கீங்க?!’ அவள் கஷ்டம் அவளுக்கு…! கத்தினாள்.
கணேசன் சாவுகாசமாய் எழுந்து குளிக்கப் போனான்.
பாத்ரூமுக்குள் உள்ளே போனதும்தான் தெரிந்தது வழக்கம் போல, தான் தலை துவட்டத் துண்டை எடுத்துப் போகவில்லை என்று!
‘பாமா….!’ அன்பாய்க் கூப்பிட்டான் உள்ளிருந்து.
‘மாமா!’ மறுகினாள் வெளியிலிருந்து.
‘ஒரு துண்டை எடுத்துப் போடேன்!’ கெஞ்சினான்.
‘உச்சு..!’ என்றொரு சப்தம் பிறகு,
ஒரு ஐஞ்சு நிமிஷம் சப்தமே இல்லை! டொம்முனு வந்து விழுந்தது பக்கெட்டில் நிறைந்து விளாவி வைத்திருந்த வென்னீர் கலந்த குளிக்கும் தண்ணீரில்.. டர்க்கி டவல். அரைகுறையாய்த் திறந்து வைத்திருந்த பாத் ரூம் கதவு வழியே!
‘கொஞ்சம் மெதுவாப் போடக் கூடாது?’
ஏன்….?
இப்பத் துண்டு நனைஞ்சு போச்சே?
போர்த்தீட்டுப் படுத்தா என்ன? படுத்துப் போர்த்தினா என்ன? துவட்டிட்டு அலசினாலும், அலசி நனைஞ்ச துண்டுல துவட்டினாலும் தப்பில்ல…! குரலில் கொஞ்சலுக்குப் பதில் உக்கிரம் உயர்ந்தது.
‘இனி பேசினா.. துவட்டி எடுத்துடுவா!’ கணேசன் அமைதியானான் வேறு வழியில்லாமல்…!
‘எனக்கென்ன எட்டுக் கையா இருக்கு சிலந்தியாட்டம்?! நான் இந்த வீட்டுக்காக கட்டெறும்பா உழைச்சுத்தான் தேயறேன்! ஒரு ஜீவன் என்னை மதிக்கணுமே?! ஹீம்…!’ பெருமூச்சு விட்டாள் பாமா.
கொஞ்ச நேரத்துக்கு முன்னால இந்த கட்டெறும்புதான் கழுதையாக் கனைச்சது! இது கழுதையா? கட்டெறும்பா? யோசித்தான் கணேசன்.
ஒரு ஜென்மத்தில் இது கழுதையாய் இருந்திருக்கணும்…! பூர்வ நியாபத்தில் கனைச்சதே?! சே!! சே! கடுமையா உழைக்கிறாள். அப்போ இது, கட்டெறும்பா..? கழுதையா?! நாமதான் புரிஞ்சுக்கலை!
‘கழுதை தேஞ்சு கட்டெறும்பான கதையாய்’ இவள் உழைத்து உழைத்தே இப்படி கழுதை தேஞ்சு கட்டெறும்பாகி இருக்க வேண்டும்!’ அவள் பூர்வத்தில் எந்த சலவைக் காரன் வீட்டுலோ இருந்திருக்க வேண்டும்! இப்படி வெள்ளாவில வச்சு வெளுத்தா மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்காளே?! அங்க கழுதையா இருந்து உழைச்சு., இங்க இப்ப எனக்கு சம்சார்மா கழுத்தை நீட்டி கட்டெறும்பாத் தேயறா! ம்ம்ம் பாவம்!!’
இருக்கும் இருக்கும்! கண்டிப்பா… அப்படித்தான் இருக்கும்…! ஏன்னா.. ஒண்ணாந் தேதியான ‘கரென்சி காகிதத்துக்கு’ அப்படி அலையறாளே?!’
‘நம்ம, நெனைப்பு தப்பா? சரியா?’
போன் அடித்தது., பாமா எடுத்துப் பேசினாள்! குளிப்பதை நிறுத்தி ‘என்ன பேசுகிறாள்?’ உள்ளிருந்தே ஒட்டுக் கேட்டான்.
பாமா தன் அம்மாவோடுதான் பேசிக் கொண்டிருந்தாள் கடைசியாய் அவள் தாழ்ந்த குரலில் சொன்னாள்….
‘அம்மா… நீ கவலைப்படாதே! நாம என்ன பண்றது? நமக்கு வந்ததும் சரியில்லை., வாய்ச்சதும் சரியில்லை! விடு! எல்லாம் நம்ம தலைஎழுத்து’ என்றாள். மருமகளைப் பற்றிய தாயின் புலம்பல் என்று புரிந்தது!!
பாத்ரூமில் தரையிலிருந்த விரிசல் வழியே வெயிலுக்கு இருக்க மாட்டாமல் வெளிப்பட்ட கருப்புக் கட்டெறும்பு காலைக் கடிக்க ‘அய்யோ!’…. அலறினான் கணேசன்.
‘என்னாச்சு மாமா?’ இப்போது குரலில் பழைய கனிவு. படபடவென அவள் பாத்ரூம் நோக்கி ஓடி வருவது கேட்டது!
‘கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே!’
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |