கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 14, 2025
பார்வையிட்டோர்: 980 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவர் கழுத்தில் மற்றவர் கை மண்டலமிட்டிருந்தது. அவ்விருவரின் மூச்சுக் காற்றும் ஓருருவ மாகியிருந்தது. ஆயினும், அவர்கள் மனமோ? 

அவன் கனவிலே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுடைய சோலை ஒன்று.அதில் எங்கே பார்த் தாலும் அரும்பு மயம். மலர்ந்த பூ ஒன்றுகூட இல்லை. அந்த அரும்புகள் யாவும் பூத்ததும், அவற்றின் ‘கும்’ என்ற நறுமணத்தில் ஈடுபட்டு உலக மெல்லாம் தன் சோலையை நோக்கி ஓடிவரும் என் பதில் அவனுக்குச் சந்தேகமே இருக்கவில்லை. 

ஒரு மங்கைநல்லாள் அந்தச் சோலையில் நுழைந் தாள் ‘யாருடைய அநுமதியினால் நீங்கள் உள்ளே வந்தீர்கள்?’ என்ற கேள்வி அவன் உதடுவரையிலும் வந்துவிட்டது. ஆனால், ஓர் இளைஞன் அழகியைப் பார்த்து இவ்விதம் அதிகப்பிரசங்கித்தனமான கேள் வியைக் கேட்க முடியுமா? 

அந்த மங்கை சோலையில் உலாவ ஆரம்பித்தாள். தன் கூந்தலை அலங்கரித்துக்கொள்ள அவள் நிரம்ப அரும்புகளைக் கிள்ளினாள். ‘என்னதான் கிள்ளினாலும் இவள் எத்தனை அரும்புகள் பறித்துவிடப்போகிறாள்?” என்று அவன் நினைத்தான். அவளுடைய அழகிய முகத்தை ஆசையோடு பார்த்துக்கொண்டு அவன் சும்மா உட்கார்ந்திருந்தான். 

ஒரு நிமிஷத்தில் அவளைச் சுற்றிக் குழந்தைகள் கூடிவிட்டன. அந்தக் குழந்தைகளை அவள் எங்கிருந்து தான் அழைத்து வந்தாளோ! அந்தக் குழந்தைக ளெல்லாம் சேர்ந்து சோலையில் இருந்த அரும்புகளைச் சின்னபின்னமாக்கிவிட்டன. 

அவளிடம் அவனுக்குப் பிரமாதமான கோபம் வந்தது.’எங்கிருந்தாவது விஷத்தைக் கொணர்ந்து அவளைக் குடிக்கச் செய்யவேண்டும்’ என்று தோன்றிற்று. 

அதே க்ஷணத்தில், அவளுடைய கனவிலும் அவள் ஒருவன்மீது இப்படித்தான் எரிச்சல் கொண்டிருந்தாள். ‘எங்கிருந்தாவது விஷத்தைக் கொணர்ந்து அவனைக் குடிக்கச் செய்யவேண்டும்’ என்ற எண்ணம் அவள் மனத்திலும் தோன்றிற்று. அதற்குத் தகுந்த காரணமும் இருந்தது. 

தன் கோயிலில், உலகத்தைப் பைத்தியமாக்கும் படியான ரதியின் பிரதிமையை உருவாக்குவதில் அவள் முனைந்திருந்தாள். அதற்குள் எவனோ ஒருவன் அவளருகில் வந்தான். எவ்வளவு அழகாக இருந்தான் அவன்!’யாருடைய உத்தரவினால் நீங்கள் உள்ளே வந்தீர்கள்?’ என்ற கேள்வி அவள் உதட்டில் முட்டி யது. ஆனால், ஓர் இளமங்கை அழகனைக் கண்டு இவ் விதம் அதிகப்பிரசங்கித்தனமான கேள்வியைக் கேட்க முடியுமா? 

கீழே கிடந்த சுத்தியை எடுத்து அவன் அந்த ரதிபிம்பத்தைக் குரூபமாக்குவதை அவள் முதலில் கவனிக்கவில்லை. பிறகு அந்தச் செயலைக் கண்டதும் அவன் மீது அவளுக்கு அளவற்ற கோபம் வந்தது. ஆனால் அவனுடைய அழகைப் பார்த்த வுடனே அந்தக் கோபம் எங்கோ மறைந்து போயிற்று. 

ஒரு நிமிஷத்தில் அந்தப் பிரதிமையைச் சுற்றிக் குழந்தைகளும் கூடிவிட்டன. அவன் அந்தக் குழந் தைகளை எங்கிருந்துதான் அழைத்து வந்தானோ! ஒவ்வொரு குழந்தையும் அந்தச் சுத்தியை எடுத்து, ஏற்கனவே சின்னபின்னமான அந்த ரதிபிம்பத்தைப் பின்னும் சிதைத்தது. அந்த ஆளிடம் அவளுக்கு இப்போது உண்டான கோபம் இவ்வளவு அவ்வளவு அல்ல. எங்கிருந்தாவது விஷத்தைக் கொணர்ந்து அவனைக் குடிக்கச் செய்யவேண்டும் என்று அவளுக்குத் தோன்றிற்று. 

அவனுடைய கனவைப்போலவே அவள் கனவும் இந்த இடத்திலேயே அரைகுறையாக நின்றது. அவள் உடல் முழுவதும் கிடுகிடென்று நடுங்குவதைக் கண்டு, “ஏன் இப்படி நடுங்குகிறாய்? கனவிலே எதையாவது பார்த்தாயா?” என்று அவன் கேட் டான். 

“உங்களுக்கு யாரோ விஷமிடுவதை–.” மேலே அவளால் பேச முடியவில்லை. பயத்தினால் அவள் அவனைச் சேர்த்துக் கட்டிக்கொண்டாள். 

“நானும் அப்படித்தான் ஒரு கனவு கண்டேன். யாரோ உனக்கு விஷமிடுவதை- போடி பயங் கொள்ளி! உனக்கும் எனக்கும் யாராவது விஷமிட்ட தனாலேயே நாம் செத்துப் போய்விடுவோமா என்ன?” என்றான் அவன். 

அவன் பேச்சிலே இருந்த குறிப்பை அவள் அறிந்துகொள்ளவில்லை. ஆனால் புன்னகையோடு பேசிய அவன் சொற்களைக் கேட்டு அவளுடைய பயம் மட்டும் மறைந்து போயிற்று. 

“நம்மிடந்தான் அமிருதம் இருக்கிறதே!” என் றான் அவன், சிரித்துக்கொண்டே. 

‘எங்கே?’ என்று அவள் கண்களால் கேட்டாள். அவன் அந்தக் கேள்விக்கு இதழ்களால் பதில் சொன்னான். 

அந்தச் சின்னஞ்சிறு அமுதக் கிண்ணத்திலே, அந்த விஷக் கனவுகள் மட்டுமல்ல, அவர்களுடைய துன்பங்கள் யாவுமே மூழ்கி அமிழ்ந்து மறைந்தன. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *