சா.கந்தசாமி (1940 – சூலை 31, 2020) சாகித்திய அகாதமி விருது பெற்ற ஒரு தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர் ஆவார்.
நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்த இவர் 1968-இல் எழுதிய சாயாவனம் புதினம் பிரசுரமானதிலிருந்து எழுத்துலகில் பிரபலமானார். இப் புதினத்தைத் தேசிய புத்தக அறக்கட்டளை நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது. சவகர்லால் நேரு, பெரியார், உ. வே. சாமிநாதையர் மற்றும் வெ. சாமிநாத சர்மா போன்றோரின் படைப்புகளை கந்தசாமி இலக்கிய வாழ்க்கைக்கான தளமாக அமைத்தார்.”இதன் மூலம் எனக்கு கிடைத்த கல்வி உதவித் தொகை எனக்கு வலிமை, நம்பிக்கை மற்றும் தன்மை ஆகியவற்றைக் கொடுத்துள்ளது, இது எனது படைப்புகளை நுட்பமாக பாதித்திருக்கிறது,” என்று அவர் கூறுகிறார்.[சான்று தேவை] அவர் மேலும் மேலும் கூறுகிறார், “எழுத்துக்கலை கலை அலங்காரமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். சிறந்த இலக்கியம், நேரம், கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் சித்தாந்தத்தின் தடைகள் ஆகியவற்றை கடந்து செல்லும் ஒன்றாகும். இது ஒரு குறிப்பிட்ட சமூகம் அல்லது பாலினத்துடன் தொடர்புடையது அல்ல. மிக முக்கியமாக, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் ஒரு வாசகர் ஒரு நாவலை அல்லது சிறுகதையை புரிந்துகொள்ள முடியும்.[சான்று தேவை]
தமிழக அரசின் லலித் கலா அகாதமியின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில் 1995ல் தமிழக அரசு இவருக்கு ஆய்வு உதவி ஊதியம் (fellowship) வழங்கி ஊக்குவித்தது. இவரது தென்னிந்திய சுட்ட மண் சிலைகள் (terracotta) பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன் காவல் தெய்வங்கள் என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது. உடல்நலக்குறைவின் காரணமாக 31 சூலை2020ஆம் நாளன்று காலமானார்.
தென்னிந்திய டெரகோட்டா பற்றிய தனது ஆராய்ச்சி அடிப்படையில், சென்னை தூர்தர்சன் பொது தொலைக்காட்சி சேனல் 1989 ஆம் ஆண்டு சைப்ரசில் நிக்கோசியாவில் அங்கினோ திரைப்பட விழாவில் முதன்முதலாக 20 நிமிட ஆவணப்படமான “காவல் தெய்வங்கள்” தயாரித்தது. கலை வளர்ச்சிக்கான அவரது பங்களிப்புக்காக, தமிழ்நாடு அரசாங்கத்தின் லலித் கலா அகாடமி, மார்ச் 1995 இல் அவருக்கு ஒரு அங்கீகாரம் வழங்கியது.1998ல் விசாரணைக் கமிசன் என்ற புதினத்திற்காக இவருக்குத் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
முன்னுரை – சாயாவனம் – டிசம்பர் 1969
சில மாதங்களுக்கு முன்பு ‘வாசகர் வட்ட’த்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு இலக்கியக் கருத்தரங்கு சென்னையில் நடந்தது. தற்காலத் தமிழ் இலக்கியத்தைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியும் விவாதங்கள் நடந்த அக் கருத்தரங்கில் வாசகர்களின் சார்பில் ஆற்றப் பட்ட ஒரு சொற்பொழிவு பரபரப்பை உண்டாக்கியது. ‘எழுத்தாளர்கள் வாழ்க்கையோடு ஒட்டிய படைப்புக்களைத் தரவேண்டும். அப்படித் தரவெண்டுமானால் அவர்கள் தாங்கள் எழுதும் விஷயங்களைப்பற்றி ஆழ்ந்த, ஆராய்ச்சிபூர்வமான அறிவு பெற முயற்சிக்க வேண்டும். ஆனால், அப்படிப்பட்ட முயற்சி குறைவாகவே இருக்கிறது’ என்ற கருத்து தொனிக்கும் வகையில் அமைந்த அப் பேச்சு சிறிது காரசாரமான ஒரு விவாதத்திற்கு அடிப்படையாக அமைந்தது. விவாதம் தொடங்கிய பின்னரே பேச்சு, எழுதியவரின் சார்பாக வேறொருவரால் படிக்கப்பட்டது என்பது தெரிய வந்தது. ஆனால், எழுதிய இளைஞர், விவாதத்திற்குத் தாமே பதிலளிக்க முன்வந்து, தம் கருத்துக்களை இன்னும் ஆணித்தரமாக எடுத்துரைத்தார். அவருடைய கருத்துக்கள் எல்லாவற்றையும் ஒப்புக்கொள்ள முடியாதவர்கள் கூட அவருடைய இலக்கிய ஆர்வத்தையும், இலக்கிய விமர்சனமானது தரமறிந்த வாசகர்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிப்பதாக இருக்கவேண்டுமென்ற அவருடைய கருத்தையும் பாராட்டினார்கள். அந்த இளைஞர்தான் ஸ்ரீ.சா.கந்தசாமி. அன்று அவருடைய உரையையும் விவாதத்தையும் ஆர்வத்துடன் கேட்டு அனுபவித்தவர்களில் நான் ஒருவன்.
சாயாவனம் ஸ்ரீ.கந்தசாமியின் முதல் நாவல். ஒரு தனி மனிதனின் ஆர்வம் மிகுந்த, அசுரத்தனமான ஒரு முயற்சியைப்பற்றியும், அவன் அடையும் வெற்றி (?) யைப் பற்றியும், ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தஞ்சாவூர் கிராமச் சூழ்நிலையில் நடப்பதாக எழுதியுள்ளார். கருத்தரங்கில் தம்முடைய உரையில், இலக்கியப் படைப்பில் எது முக்கியம் என்று வற்புறுத்தினாரோ, அந்த வாழ்க்கையோடு ஒத்த தன்மை (ஆங்கிலத்தில் Verisimilitude எனப்படுவது) பளிச்சிடும்படி யாக எழுதியுள்ளார். படிக்கும் பொழுது சங்கர் ராம், ஷண்முக சுந்தரம் இவர்கள் நினைவு ஓரளவு வருகிறது. அதே சமயத்தில், கையாளப்பட்ட விஷயமும், கையாண்டுள்ள விதமும், கந்தசாமியின் தனித் திறமையைப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக, தேவர் குல வாழ்க்கை, பழக்க வழக்கங்கள், பேச்சு இவைகளைப் பின்னணியாகக் கொண்டு, சிதம்பரத்தின் முயற்சியை, போராட்டத்தை நம் கண்முன்னே காணும் காட்சியாகக் கொண்டு நிறுத்தி யிருக்கிறார்.
கதையின் முடிவு சிறிது அவசரமாக அமைந்து விட்டதோ என நமக்குத் தோன்றுகிறது. அதெ சமயத்தில், ‘சிதம்பரத்தின் குணசித்திரத்திற்கு முழுமை கொடுக்க அவனுடைய காடு திருத்தும் முயற்சியே போதுமே’ என்றும் எண்ணத் தோன்றுகிறது. சிவனாண்டித் தேவருடைய பாத்திர அமைப்பு முழுமையாக அமைந்து சில இடங்களில் சிதம்பரத்தையும் பின்னுக்குத் தள்ளிவிடுவது போலிருக்கிறது. ஆனால், இதுவும் ஆசிரியருடைய திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டே.
‘சாயாவனம்’ கலைரஸனை நிறைந்த – தமிழ் வாழ்க்கையை எழுத்துருவத்தில் சமைப்பதிலும் மனித உணர்வுகளை அதே எழுத்துருவத்தில் துல்யமாகச் சித்திரிப்பதிலும் ஆர்வமுள்ள இளம் ஆசிரியரின் படைப்பு. இது போன்ற இன்னும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், அவர் எழுத வேண்டும்; எழுதுவார் என்ற என் நம்பிக்கையோடு இம் முன்னுரையை முடிக்கிறேன்.
க.வே.ராமநாதன்
சென்னை, 5-12-1969.
– சாயாவனம் (நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1969, வாசகர் வட்டம், சென்னை