எம்.பி.எம்.நிஸ்வான்

 

என்னுரை

அன்பும் அருளும் விழுமிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்……

இனிய உள்ளம் கொண்ட வாசக பெருமக்களே, உள்ளே புகுந்து சுவைக்க முன், என் உள்ளத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.

நீண்டகால அவாவொன்று இன்று நிறைவேறுவதையிட்டு முதற்கண் என்னைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவனுக்கே நன்றி நவில்கின்றேன். தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு நாலு தசாப்த காலம் நான் எழுதிய சிறு கதைகளுள் பலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதையிட்டு என்னையும் உங்களில் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்கள் என எண்ணுகின்றேன்.

தொன்மையான தமிழ் மொழியை பண்டைய நாள் தொட்டு அழியாத பொக்கிஷமாக வளரச் செய்வதில் இஸ்லாமியரின் பங்கு அளப்பரியது. இஸ்லாமியர் தம்மை, தனி இன சமயக் குழுவாக அடையாளம் காட்டினாலும் மொழி ரீதியாக தமிழ் மொழிக்கு தனித்துவம் கொடுக்கின்றனர். இலங்கையில் பொதுவாக வடக்கு, கிழக்கில் தமிழ் மொழி ஆட்சி புரிந்தாலும் ஏனைய பகுதிகளில் இஸ்லாமியர் சிங்கள மொழிக்கு மத்தியில் செறிந்து வாழும் பகுதிகளிலும், கிராமமாக குக்கிராமமாக வாழ்ந்தாலும் அங்கெல்லாம் வீட்டு மொழியாக தமிழை வளர்ப்பவர்கள் முஸ்லிம்கள். – வீட்டு மொழி, கல்வி மொழி ஆகியவற்றுக்கிடையே தமிழ் மொழியில் வேறுபாடு இருந்த போதிலும் இலங்கை முஸ்லிம்களின் வரலாறு உயர் தமிழ் மொழியிலே உள்ளதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே இச்சிறுகதைகள் தமிழ் மொழிக்கு நான் செய்யும் சிறு தொண்டாக இருக்கும் என நம்புகிறேன்.

சிறுகதை, நாவல் என்பவை தமிழ் மொழிக்குப் புதியவை என்றாலும் தமிழில் தொன்று தொட்டு கதைகள் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. தமிழில் சிறுகதைக்கும் நாவல் எனும் நெடுங்கதைக்கும் இலக்கணம் வகுத்தோர் பல விதமாகக் கூறினாலும் நான் அறிந்த மட்டில் சமூகம் என்ற வீட்டினுள் இருந்து சாளரம் மூலம் காண்பது சிறுகதை என்றும் கதவைத் திறந்து பார்ப்பது நாவல் என்றும் குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் சிறுகதைகள் வாசகர்களின் சிந்தனையிலே முடிவு காண வேண்டும். இந்த வழியில் என்னால் படைக்கப்பட்ட சிறுகதைகளும் அடங்கும் என நம்புகின்றேன்.

சிறுவயதில், தினகரன் மாணவர் பகுதியில் கட்டுரை எழுத ஆரம்பித்த நான், பல பத்திரிகைகளில் கட்டுரை எழுதினேன். அவை ஒன்றும் என் கைவசம் இல்லை; ஆனால் என் முதல் சிறுகதை என் கையில் இருந்தது.

நான் எழுதிய என் முதல் சிறுகதை அன்றைய ஜனரஞ்சக பத்திரிகைகளில் ஒன்றாகிய “ராதா” இதழில் 1965ம் ஆண்டுக் காலப்பகுதியில் வெளிவந்தது. என் கதை வெளிவந்த அன்று எனக்குத் தெரியாது. நான் காலை வேளை வீட்டுத் தேவை ஒன்றுக்காக கடை வீதிக்கு செல்லும் நேரம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்களை வகைப்படுத்தி தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்திய நற்றமிழ் மொழி அறிஞர் அல்லாமா ம.மு. உவைஸ் அவர்கள், அவர் வீட்டு கேட்டடி வாசலில் இருந்து கைகளைத் தட்டி முகம் மலர “அடே நிஸ்வான்….. இங்கே வா…. ஒன்ட கத பேப்பரில் வந்திருச்சிய” என்றார். நான் அவர் அருகே சென்று “எந்த பேப்பரிலே…?” எனக் கேட்டேன்…. “அது இந்த கெழம ராதா பேப்பரில் வந்திருச்சிய… நல்ல கதை….” என்றார்…. (உவைஸ் ஹாஜியார் அவர்கள் எம்முடன் கதைக்கும் பொழுது எமது பிராந்திய மொழியிலேதான் கதைப்பார். அவர் கொள்கை அப்படி. சற்றும் பெருமை இல்லாதவர்; வல்ல நாயன் அவர் சேவையை ஏற்றுக் கொண்டு ஜென்னத் என்னும் சுவர்க்கத்தை அருள்வானாக!) எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி…. ஓடினேன் பத்திரிகைக் கடைக்கு; “ராதா” இதழை வாங்கினேன். என் பெயருடன் – சித்திரம் வரையப்பட்டு – கதை வெளிவந்திருந்தது.

அன்று எனக்கேற்பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை – இன்றும் பசுமை நிறைந்த நினைவாக அது இருக்கின்றது. அப்பத்திரிகையில் தொடர்ந்து எழுதினேன். இஸ்லாமிய எழுத்தாளர் பலரை உருவாக்கிய “இன்ஸான்” பத்திரிகை வெளிவந்தது. நானும் அதில் தொடராக பல கதைகளை எழுதினேன். இந்நேரத்தில் – பலப்பிட்டி அரூஸ் அவர்களை ஆசிரியராகக் கொண்டு “ஜும்ஆ” மாதாந்த இதழ் வெளிவந்தது. அதிலும் எழுதினேன். நானும் ரமழான் மலர் எனும் தொகுதியை வெளியிட்டேன்…. இதன் பின் நான் சிறிது காலம் எழுத்துப் பணியிலிருந்து விலகியிருந்தேன். இடையில் 1975ம் ஆண்டு குரு /கல்கமுவ பிரதேசத்தில் ஜாகம எனும் ஊரில் அல் – ஹகீம் வித்தியாலயத்தில் பதில் அதிபராகக் கடமை புரிந்த காலத்தில் விளையாட்டுப் போட்டிகளுடன் கலாசார நிகழ்வுகளையும் அறிமுகம் செய்தேன். அதில் “பணம், பொருள், பாசம்” என்ற பெயரில் நாடகமொன்றை எழுதி, அதை நெறிப்படுத்தி ஊரார் ஒத்துழைப்புடன் அரங்கேற்றினேன். அங்கே அதுவரை எவரும் அறிமுகப்படுத்தாத ஒன்று என்னால் அறிமுகப்படுத்தப்பட்டதால் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின் நான் படிப்பித்த பாடசாலைகளில் மாணவர்களுக்காக குறுநாடகங்கள் எழுதியும், கவிதைகள் எழுதியும் உள்ளேன்.

இப்படி இருக்கையில் சகோதரர் கலைவாதி கலீல் அவர்களை – சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. – உண்மையில் நல்லதொரு மனிதனை அல்லாஹ் அறிமுகஞ் செய்து வைத்தான் என்பதையிட்டு சந்தோஷப் படுகிறேன். அவர்தான் என்னை எழுத மீண்டும் தூண்டினார். நானும் நவமணி பத்திரிகையில் சிறுகதை, கவிதைகள் வரைந்தேன். நவமணி உதவி ஆசிரியர் அல்ஹாஜ் ஏ.எல்.எம். சத்தார் (ஷபீக்) ஆதரவு தந்தார். மேலும் கலைவாதி அவர்கள், பத்திரிகைகளில் கதைகள் வெளிவந்தாலும் அது மங்கிவிடும். புத்தக ரூபமாக வெளிவந்தால் எழுத்துலகில் மறைந்து வாழும் உங்களையும் இனம் காண்பார்கள்’ எனக் கூறினார். நீண்ட காலமாக என் அடிமனதில் பதிந்திருந்த எண்ணம் ஊற்றெடுத்தது. புத்தகமாக வெளியிட ஆசைப்பட்டேன். ஆனால் நான் எழுதிய கதைகள் பல என் கைவசம் இல்லை … நான் அறிந்த – பத்திரிகைத் தொடர்புடைய – பலரை விசாரித்தேன். காலஞ்சென்ற பிரபல எழுத்தாளரும் கவிஞருமான எம்.எச்.எம். ஷம்ஸ் அவர்களிடம் “இன்ஸான்” பத்திரிகையின் தொகுப்பு இருந்ததாக அறிந்தேன். உடனே அவர் மகன் எம்.எஸ்.எம். பாஹிம் அவர்களை தொடர்பு கொண்டேன்…. அவரிடம் இன்ஸான் தொகுப்பு இருந்தது. அவரை காண என் மனைவியுடன் வெலிகம் சென்றேன். எனக்கு தேவையான – இன்ஸானில் வெளிவந்த – கதைகளைப் பெற்றுக் கொண்டேன். மர்ஹூம் ஷம்ஸ் அவர்களின் பாரியார் உட்பட அவர் குடும்பத்தார் . எல்லாரையும் நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

பலப்பிட்டி அரூஸ் அவர்களின் வீடு சென்று அவரைச் சந்தித்தேன். அங்கே ஜும்ஆ பத்திரிகைத் தொகுப்பு சுனாமியால் பாதிக்கப்பட்டிருந்தது. என்றாலும் என்னால் தொகுத்து வெளியிடப்பட்ட “ரமழான் மலர்’ பத்திரிகை அவர் கைவசம் இருந்தது. – எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த மலரைக் கண்டவுடன் மட்டில்லா மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டேன். அரூஸ் அவர்கள் செய்த உதவி மறக்க முடியாத தொன்றாக நினைவு கூர்கின்றேன்.

முஸ்லிம்களின் தரமான பத்திரிகையான “அல் ஹஸனாத்” காரியாலயம் சென்றும், அங்கே எனக்குக் கதைகளைப் பெற்றுக்கொள்ள இயலவில்லை….. இன்ஷா அல்லாஹ் மீண்டும் இன்னொரு தொகுதி சிறுகதை வெளியிடச் சந்தர்ப்பம் கிடைத்தால் அப்பத்திரிகையில் வெளிவந்த கதைகளை வெளியிடுவேன். அன்று எனக்காக நேரத்தை ஒதுக்கிய அல்ஹஸனாத் உதவி ஆசிரியர் அவர்களுக்கும் முன்னால் அல் ஹஸனாத் ஆசிரியரும் இந்நாள் “பிரபோதய” சிங்கள இதழ் ஆசிரியருமான அல்ஹாஜ் எஸ்.எம். மன்சூர் அவர்களுக்கும் என் நன்றி.

தனது வாசிப்புக் கூடத்திலிருந்து நான் தேடிய “பிறைப்பூக்கள்” சிறுகதைத் தொகுதியைத் தந்துதவிய தத்துவ வித்தகர் அல்ஹாஜ் காத்தான்குடி பௌஸ் மௌலவி ஷர்கி) அவர்களுக்கும் எனது நன்றி; எல்லாவற்றிற்கும் மேலாக முப்பத்தைந்து வருடகாலத்துக்கு மேல் என் சுகதுக்கங்களில் பங்கு கொள்ளும் என் உயிரினும் இனிய என் மனைவியின் பங்களிப்பு இல்லையெனில் இத்தொகுதியை என்னால் வெளியிட முடிந்திருக்காது…. மிகைத்துக் கூறுவதல்ல. உண்மை அதுதான்.

மேலும் இக்கதைத் தொகுதியை அழகுற அச்சிட்டுத் தந்த பிரபல எழுத்தாளரும் V4U பதிப்பகத்தின் உரிமையாளருமான கதைவாணன்’ மொஹிடீன் ரஜா அவர்களுக்கும், வெளியீடு செய்த பாணந்துறை முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தினருக்கும், அணிந்துரை வழங்கிய பிரபல எழுத்தாளர் – கலாபூஷண் – கலைவாதி கலீல் அவர்களுக்கும், மதிப்புரை வழங்கிய பன்னூலாசிரியர் – தத்துவ வித்தகர் – அல்ஹாஜ் பௌஸ் மௌலவி அவர்களுக்கும், பின்னட்டையில் என்னைப் பற்றி உரைத்துள்ள சக கலை, இலக்கியவாதிகளான, ஏ.ஆர்.எம். ஜிப்ரி, எம்.கே.எம். அஸ்வர். ஏ.எல்.எம். சத்தார், யாமூர் ராஸீக் ஆகியோருக்கும், கணினியில் அச்சுக்கோத்துத் தந்த செல்வி றம்ஸியா ஹாணீம் அவர்களுக்கும் மற்றும் எனது இக்கதைத் தொகுதியை வாசிக்கும் எல்லா வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இத்தொகுதியில் இடம்பெறும் எந்தவொரு கதையும்
இந்த பூமிப்பந்தில்
இருந்தோர், இருப்போர் எவரையும்
குறிப்பிடவில்லை
அவை முற்றிலும் கற்பனை வடிவங்களே,

– இன்ஷா அல்லாஹ் சந்திப்போம்.

சகோதரன் எம்.பி.எம்.நிஸ்வான்
2007.05.01
தொ.பே.03822 97309

“ரஹ்மத்”
6 A. யோனக மாவத்தை,
வத்தல் பொளை,
கெசெல்வத்தை 12550.
(பாணந்துறை இலங்கை)

– மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

***

சக படைப்பாளிகள் கலைஞர்கள் பார்வையில்….எம்.பி.எம். நிஸ்வான்!

ஆற்றல் நிறைந்தவர்கள் எப்போதும் சோம்பல் கொள்வதில்லை. முன்னாள் ஆசிரியரும் முன்னாள் காதி நீதிவானும் முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்தின் இந்நாள் அமைப்பாளரும் சமாதான நீதிவானுமாகிய எம்.பி.எம். நிஸ்வான் அவர்களின் சீரிய சிந்தனைகளை இச்சிறுகதைகள் புடம் போட்டுக் காட்டுகின்றன. அவருக்குள் ஆழ்ந்துகிடக்கும் தமிழ் ஆர்வமும் சமுதாயப் பார்வையும் இந்நூலில் பிரதிபலிக்கின்றன. ஆசிரிய வாழ்வில் மாணவருக்காக பல நாடகங்களை எழுதி மேடையேற்றியவர். நான்கு தசாப்தங்களாக நாளேடுகளில் தடம் பதித்தவை மூன்றாம் தலாக்’காக நூலுருவானமை மகிழ்வளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்!
– ஏ.ஆர்.எம். ஜீப்ரீ – பிரபல ஒலிபரப்பாளர்.

சீசாவுக்குள்ளிருக்கும் பூதம், வெளியே வரும்போது எத்தகைய மலைப்பு ஏற்படுமோ அத்தகைய ஒரு மலைப்புத்தான் – நிஸ்வான் அவர்களின் கதைகளைத் தொகுத்து வாசிக்கும் போது ஏற்படுகிறது. இந்த மனிதருக்குள் இத்துணை ஆற்றல்களா!’ என்று வியக்கத் தோன்றுகிறது. இலகுவாக நகரும் சரளமான மொழிநடை…. இடமறிந்து கையாளப்பட்டுள்ள உத்திகள் (குறிப்பாக நனவோடையுத்தி – Stream of Consciousness)… இடைக்கிடையே தலை காட்டும் சிருங்காரம்…. மண் மணம் கமழும் உரையாடல்கள்…. என்று இன்ன பிற கலந்து, மனதில் தங்கும் பாத்திரங்களையும், மனதில் பதியும் சிறுகதைகளையும் படைத்தளித்திருக்கிறார் சகோதரர் எம்.பி.எம். நிஸ்வான்.
– ‘கதைவாணன்’ சிமாஸ்டீன் ரஜா – பிரபல எழுத்தாளர், பதிப்பாளர்.

பாணந்துறை எம்.பி.எம். நிஸ்வான் ஆசிரியர் 1965 முதல் சிறுகதைகள் எழுதி வருகிறார். ஏலவே இவர் சில சிறிய நூல்களைத் தந்திருந்தாலும் சமூக நடைமுறைப் பிரச்சினைகளைக் கொண்டு யதார்த்தமாகப் படைத்த சிறுகதைகளின் தொகுப்பு இது. இலை மறை காயாக இருந்து படைப்பாக்கம் செய்யும் இவருடைய ஆற்றல்கள் இந்நூல் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
– எம்.கே.எம். அளவர் – செயலாளர், மூலப்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம்.

‘சிறுகதை’ என்ற பெயரில் சிறு – கதைகள் வெளிவந்து கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சிறுகதைக்குரிய வரைவிலக்கணங்களுடன் எம்.பி.எம். நிஸ்வான் ஆசிரியர் காத்திரமான சிறுகதைகளைப் படைத்தளித்து வருகிறார். சிறுகதை ஆக்கத்துக்கு இவர் தன் அனுபவங்களையே கருப்பொருளாகக் கொள்கிறார். இதனால் இவரது சிறுகதைகளில் யதார்த்தம் இழையோடுகிறது. சிறுகதை எழுதப் புகும் இளம் எழுத்தாளர் கற்றுக் கொள்ள இவரிடம் நிறைய விடயங்களுள்ளன.
– ஏ.எல்.எம். சத்தார் – உதவி ஆசிரியர், நவமணி’,

ஒரு படைப்பின் வெற்றி ஒரு படைப்பாளியின் வெற்றி. பாணந்துறை எம். பி.எம். நிஸ்வான் ஜே.பி. தன் அனுபவத்தினூடாக தன் நெஞ்சைத் தொட்ட நிகழ்வுகளை வாசகரோடு பகிர்ந்து கொள்வதால் அவர்தம் சிறுகதைகள் வாசகரை ஈர்க்கின்றன. அவர் வெற்றியின் இரகசியம் இதுதான்.
– யாழூர் ராஸிக் பிரபல எழுத்தாளர்

– மூன்றாம் தலாக் (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: மே 2007, முஸ்லிம் சமுதாய மறுமலர்ச்சி இயக்கம், பாணந்துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *