கண் சிமிட்டும் வானவில்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 9, 2026
பார்வையிட்டோர்: 211 
 
 

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14

அத்தியாயம் 11 – நெய்லியின் இந்திய பயணம்…

நெய்லியின் போனை எடுத்து ”சொல்லு நெய்லி. என்ன விசயம்?:” என்று கேட்டான் நரேன்.

“நான் மும்பை கிளம்புகிறேன்” என்றாள் எதிர் முனையில்

”என்ன செய்தி…. ஏன் திடீர் பயணம்?” சுரத்தில்லாமல் கேட்டான் நரேன்.

”கோடிக்கணக்கில் பணம் தருபவர்களுக்கு பொறுமை கிடையாது நரேன்”

“ஏய்… உனக்குத்தான் எல்லா சம்பவங்களையும் அப்பப்ப என்ன நடக்குதுண்ணு எல்லாம் சொல்லிக்கிட்டிருக்கேன். எதையும் புரிஞ்சுக்காம பேசறியே?. இதிலே வேற நான் ஆஸ்பத்திரியிலே இருக்கேன். புரிஞ்சுக்கிட்டுத்தான் இந்தியா வர்றியா..யானை என்னைத்தூக்கி எறிஞ்சதை பார்த்திருந்தா இப்படி எல்லாம் பேச மாட்டாய்”

“ஏதோ நாலு கோடி வாங்கிட்டு இப்படி யு.கே. குளிரில் அல்லாடாமல் இந்தியாவிலே ஏதோ ஒரு ஓரமா போய் தங்கி சந்தோசமா வாழ்ந்துட்டு போயிடலாமுண்ணு நெனச்சேன். ஏனோ எனக்கு எதுவுமே கொடுத்து வைக்கவில்லை. அவ்வளவு தான்.” பெருமூச்சு விட்டவள், ”இப்பவும் நேரே திருவனந்த புரம் வந்து களக்காட்டுக்கு வர ரொம்ப நேரமாகாது. ஆனா … அதுக்குள்ளேயாவது அந்த செடியை கண்டு பிடிச்சிடுவே என்கிற ஒரு அசட்டு நம்பிக்கை நெஞ்சுக்குள்ளே ஓடிகிட்டேயிருக்கு…”

சிரித்துக்கொண்டே கண்ணீரைத்துடைத்துக் கொண்டவள், “ எங்கே உன்னை பார்த்தேன்? ஏன் உன்னைக்காதலிச்சேன் என்பதெல்லாம் இனி பிரச்சினையேயில்லை.

உன்னோடு மகிழ்ச்சியா வாழ்ணும்ணு முடிவு பண்ணியாச்சு… பார் நரேன் கண்ணா… நீ எப்படியாவது வசந்தை பாலோ பண்ணி இன்னைக்குள்ளே அந்த செடியைக் கொண்டு வரப்பாரு.” என்றாள் நெய்லி.

“சே… வீணாக அழாதே… கண்ணைத்துடைத்துக் கொள். நீ இங்கே வந்து சேர்றதுக்குள்ளே ஏதாவது வழி பண்ணுகிறேன். ஆங்… எப்ப கிளம்புகிறீர்கள்?” என்றான் நரேன்.

”நாளைக்கு காலையில் மும்பை… அனேகமாக… நாளை மறு நாள் தூத்துக்குடி… அங்கேயிருந்து களக்காடு…”

“யாரெல்லாம் வருகிறீர்கள்?”

“அந்த மருந்துக் கம்பேனி சி.இ.ஓ., ஹைட்ரன், ரிச்சர்ட்.. அவனுடைய பி.ஏ. சிமி., நான்…”

“சரி… தொடர்பிலே இரு.. நான் பார்த்துக்கொள்கிறேன்.” காலில் வலியோடு யோசிக்க ஆர்ம்பித்தான் நரேன்.

“அவர்களுக்கு நம்முடைய திட்டங்கள் ஏதேனும் தெரியுமா?”

“இல்லை… களக்காட்டு மலையில் ஏதோ ஒரு பகுதியில் அந்தச்செடியைக் கொண்டு வரப்போயிருக்கிறாய் என்பது தெரியும்”

” நெய்லி… அவங்க உன்னை விரட்ட ஆரம்பிச்சிட்டாங்களா?”

”ம்கூம். ஆனா… நாம் ஏன் இவ்வளவு சார்ட் பீரியட்குள்ளே தர்றோம்ணு கமிட் பண்ணினோம் என்றே புரியவில்லை..”

“ஸோ … நெய்லி நீயும் என்னைச் சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டியா?”

“இல்லை நரேன். ஏதோ எடுத்து கடையிலே வச்சிருக்கிற மாதிரி நீயும் ஒரு வாரத்திலே பிடுங்கி வருவதாகச் சொல்லி விட்டு… இப்படி ஆஸ்பத்திரியிலே போய் படுத்துக்கிட்டா… என்ன பண்ணுறது… கொஞ்சம் யோசித்துப்பார். நீ ரிச்சர்ட் இடத்திலே இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பாய்.. என்ன… நம்முடைய கமிட்மெண்ட் கொஞ்சம் பிந்தி இருந்திருக்கலாம். பரவாயில்லை… சில சம்பவங்கள் நாம் நினைப்பது மாதிரி எல்லாம் நடப்பதில்லை.”

“சாரி நெய்லி… எதிர்பாராத நிகழ்வுகள்… யானைத்தூக்கிப் போட்ட நிகழ்ச்சி தான் எனக்கு இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது..”

”பார். நரேன்… இவர்களெல்லாம் நீ புரூடா விடுகிறாய் என்று நினக்கிறார்கள். யானையாவது… அது தூக்கிப் போட்டால் பிழைக்க முடியுமா? எனக் கிண்டல் பேசுகிறார்கள்.”

“அப்படி என்றால் அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா?”

“அப்படித்தான் தோன்றுகிறது.அவர்களிடம் சொல்லிவிட்டு இப்போது வேற யாரோ பெரிய தொகையை கொடுத்து உன்னிடமிருந்து வாங்க திட்டம் போட்டிருக்கிறார்களோ என்று பேசிக்கொள்கிறார்கள்”

”சே! எவ்வளவு மடத்தனம் பண்ணியிருக்கிறோம்…ஏதோ போனோம். செடியைப் பிடுங்கிக் கொடுத்தோம். பணத்தை வாங்கிட்டுப் போயிடலாம் என்று நினைத்தது தப்பாகி விட்டது”

“ஆமாம். நரேன்… உனக்கு எதிராக… ஏதோ ஒரு மந்திரிக்கும்பலும் இந்தச் செடிய விக்கதுக்கு ஏதோ ஒரு லோக்கல் மருந்துக் கம்பெனி கூட சேர்ந்து நீ புடுங்கிக் கொண்டு வர்ற செடிய மெதுவா லவட்டிக் கொண்டு போறதுக்கு திட்டம் போட்டுக்கிட்டு இருக்கிறதா இங்கே பேசிக்கிறாங்க… அதப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?”

“இங்கே ஏதோ நடக்கிறது? ஆனா யாரெல்லாம் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை.. எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கிளம்பி வா…ஆங்.. நீ அநேகமாக நேரா ஆஸ்பத்திக்கு தான் வர வேண்டியிருக்கும். ஓ.கே..”

“சரி.. நான் புறப்படும்போது உனக்கு தெரிவிக்கிறேன்” என்றாள் நெய்லி.

அத்தியாயம் 12 – வசந்தின் சாதனை!

”அடிக்கடி நாணம் வந்து ஆளை மயக்கும்” ஜானகி அம்மாவின் பாடல் ஆட்டோவில் வசந்தை மயக்கிக் கொண்டிருந்த்து. திரும்பிப்பார்த்தான். கண்ணனின் ஆட்டோ தொடர்வதைக் கண்டதும் ஒரு கணம் திகைத்துப் போனவன் அந்த காட்டிற்குள் போவதற்கான பாதுகாப்பினரின் கேட்டை அடைந்ததும், ஆட்டோவை நிறுத்தி விட்டு, உள்ளே இருந்த பாதுகாப்பாளரின் மேலதிகாரியிடம் சென்று தன்னுடைய அடையாள அட்டையை காட்டிவிட்டு, “என்னை ஒருவன் பின் தொடர்கிறான். அவனிடம் எந்த அடையாள அட்டையும் கிடையாது” என்று சொல்லி விட்டு ரமணியை ஆட்டோவை ஓட்டும்படி சொல்லி விட்டு, அவன் மட்டும் ஒதுங்கி நின்று கண்ணனின் ஆட்டோ வருகிறதா என்று கண்காணித்தான்.

கண்ணன் வேகமாக வந்து “சார். நான் அடிக்கடி இங்குள்ள காட்டிலாகா அதிகாரிகளுடன் உள்ளே வருபவன் தான் சார்.

அடையாள அட்டையை எடுத்து வர மறந்து விட்டேன். ஒரு சின்ன வேலை … உடனடியாக திரும்பி விடுவேன்” என்று பையிலிருந்து பணம் எடுத்தான்.

“மிஸ்டர். லஞ்சம் கொடுக்கிற பழக்கத்தை விடுங்க.. நீங்க போய் முதலில் அடையாள அட்டையை எடுத்துக் கொண்டு வாருங்கள்”

”சார். நம்ம பிரபு சார். அலுவலகத்திலேயிருந்து தான் வருகிறேன் அவரோடு பேசுங்களேன்” என்று அலைபேசியில் பிரபுவை அழைத்தான்.

“மிஸ்டர். நான் யார் கூடவும் பேசத்தயாரில்லை. போய் உங்கள் அடையாள அட்டையை எடுத்து வாருங்கள். இந்த காட்டுக்குள்ளே சும்மா யார் வேண்டுமிண்ணாலும் போக முடியாது. தெரியுமில்ல..”

பாதுகாப்பாளரின் மேலதிகாரி கத்தினார்.

பிரபு எதிர்முனையிலிருந்து“ என்ன கண்ணன் என்ன செய்தி?” என்றார்.

”சார். நான் வசந்தை தொடர்ந்து வருகிறேன். இப்போது காட்டிலாகா கேட்டிலே உள்ளே விடமாட்டேங்கிறாங்க. நீங்க சொன்னால்..” அவன் முடிப்பதற்குள் : இந்த மாதிரி இடியாட்டிக் தனமா எதையும் செய்யாதே… நீ அடையாள அட்டையை எடுத்து போயிருக்க மாட்டாய்… சரி… நம்ம கேட் நம்பர் ஏழிலே கதிரவன் இருப்பார். நீ அவரைப்பார்த்துச் சொல்லிவிட்டுக் கிளம்பு” என்றார்.

கண்ணன் வெளியேறுவதைப் பார்த்து பெருமூச்சு விட்டவாறு ரமணியை அழைத்து ஆட்டோவில் ஏறிக்கொண்ட வசந்த் அலைபேசியில் வரை படம் பார்த்து வழி சொல்ல ஆரம்பித்தான்.

கண்ணன் வேகமாக கேட் நம்பர் ஏழுக்கு வந்து, கதிரவனிடம் சொல்லி விட்டு ஆட்டோ டிரைவரை விரட்டினான்.

எங்கே தேடியும் வசந்த் வந்த ஆட்டோவைக் காணாமல், திரும்ப முனையும் போது, அங்கே வந்த ஜீப்பில் இருந்த அலுவலகரிடம் ”சார் இந்த வழியாக ஒரு ஆட்டோ போச்சுதா?” என்று கேட்டான்

“ஆமாம் தம்பி.. இப்ப தான் ஒரு ஆட்டோ இங்கே கிழக்கு பக்கமாக போச்சுது… யாரோ மொபைல் பார்த்து வழி சொல்லி கிட்டிருந்தாங்க..” என்றார்.

கண்ணன் ஆட்டோ டிரைவரிடம்” சீக்கிரமா போப்பா..”என்று விரட்டினான்.

கொஞ்ச தூரத்தில் வசந்த் சென்று கொண்டிருந்த ஆட்டோ தெரிய டிரைவரிடம், “ கொஞ்சம் இடைவெளி விட்டு நாம் பாலோ பண்ணுறது தெரியாமல் போப்பா” என்றான் கண்ணன் பெருமூச்சு விட்டவாறு.

பின்னாலே திரும்பிப் பார்த்த வசந்த், ‘கண்ணன் இங்கேயும் வந்துட்டானா?’ என்று முணு முணுத்தவாறு “ரமணி. பின்னாலே நம்மள ஒரு ஆட்டோ தொடருது… கொஞ்சம் ஏதாவது புதரிலே ஒளிஞ்சு நிக்க முடியுமா…? பாருங்க…” என்றான் வசந்த்.

முன்னால் போய்க்கொண்டிருந்த ஆட்டோவைக் காணாமல் தவித்த கண்ணன், வசந்திற்கு போன் பண்ணினான்.’இங்கே எங்கேயாவது நின்னா அவன் போன் சப்தம் கேட்காமல் இருக்காது’ என்று எண்ணினான் கண்ணன்.

அலைபேசியை எடுத்த வசந்த், ஒரு முறை அசந்து போனான்.

நல்ல வேளை போன் “சைலண்ட் மோடில்” இருந்ததால், சப்தம் வராததால், கண்ணனின் தந்திரத்தை புரிந்து கொண்டவன் அலைபேசியை அணைத்துப்போட்டு விட்டு கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருந்தான்.

கண்ணன் பொறுமை இழந்து காட்டை விட்டு வெளியேற, வசந்த், வரை படத்தை பார்த்துக் கொண்டே, ரமணிக்கு வழி சொல்ல ஆரம்பித்தான்

நரேனும் அவனும் சந்தித்த யானைக் கூட்ட்ங்கள் வந்த இடம் தாண்டியதும், “ரமணி, வலப்பக்கம் போ” என்றான் வசந்த்.

ஆட்டோ வேகமாகப் போய்க்கொண்டிருக்க, திடீரென்று பிரபுவின் போன் வர, முதலில் எடுக்கலாமா என்று யோசித்தான்.

பின்பு” வந்த வேலையை முதலில் முடிப்போம் ” என்று நினைத்தவாறு, “ரமணி.. அந்தப்பக்கம் வேலி தெரிகிறது பார்.

அதைத் தாண்டித்தான் போக வேண்டும்” என்றான் வசந்த்.

”சார். வழி ஒண்ணும் தெரியலியே” என்றான் ரமணி ஆட்டோ ஓட்டிக்கொண்டே.

”செம்மியா பாரு” என்றான் வசந்த்.

“ஆங்.. அங்கே ஒரு தொண்டு (வழி) கெடக்கு… ஆனா ஆட்டோ போவுமாண்ணு தான் தெரியல” என்றான் ரமணி

“பக்கத்திலே போய் பார். ஆங்… அந்த முனிவரோட கல்லறை தெரியுது” என்றான்.

“சாரி சார். எறங்கி நடந்து தான் போகணும். ஆட்டோ போற அளவுக்கு வழி இல்ல” என்றான் ரமணி

“சரி. சைடில நிப்பாட்டு” என்று இறங்கியதும், நரேனின் போன் வர எடுத்தான்.

“வசந்த் போய்ச் சேர்ந்துட்டியா?” என்றது எதிர் முனை.

“ஆங்.. கல்லறையை கண்டுபிடிச்சிட்டேன்.” என்றான் வச்ந்த்.

“வெரி குட். கமாண். சீக்கிரம் பக்கத்திலே போய் அந்த செடிய புடுங்கிட்டு என்ன கூப்பிடு: என்றான் நரேன்.

“சரி” அலைபேசியை அணைத்து விட்டு நடந்தான் வசந்த்.

– தொடரும்…

GeorgeChandran பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *