கட்டி கடவுளானது எப்படி?

பெண்களுக்கு கல்யாணமென்றால் உச்சி குளிர்வது மட்டுமல்ல, தேகம் முழுவதுமே புல்லரிப்புத் தான் இதற்கு ஒத்திசைவாக மட்டுமல்ல, உறுதுணையாகவும் வந்து அப் பெண்ணை தலை மேல் தூக்க வைத்து கொண்டாடி மகிழும் நற்குணமுடைய, ஓர் ஆதர்ஸக் கணவன் கிடைக்காமல் போனால், அவள் நிலைமை என்னவாகும் ?கூழ் முட்டை தானென்றால், இதென்ன புதுக் கதை?ஆமாம் வேதம் சொல்லியே உயிர்களை வாழ்விக்க வேண்டுமென்றால்,இதை இவ்வாறு சொல்லியாக வேண்டிய தலையாய கடமை மட்டுமல்ல சத்தியத்தைக் காற்றில் பறக்க விடாமல்,காப்பாற்றியாக வேண்டிய மிகப் பெரிய பொறுப்பின் விளைவாகவே செல்லரித்துப் போன ஒரு பழம் கதையை தூசு தட்டிப் பார்த்து இப்போது முழு உத்வேகத்துடன் எழுத நேர்ந்திருக்கிறது.
கல்யாணமாகி இரு மாதங்களேயாகிவிட்ட ட நிலையில் பூரணி ஒரு துர்சம்பவத்தை எதிர்கொள்ள நேர்ந்து, ஒரு முடி இழந்த ராணி போலவேயாகி விட்டிருந்தாள் . காரணம் அவள் கணவனின் பாராமுகம், புறக்கணிப்பு, அவள் உணவு பரிமாறப் போனாலே, அவள் கையைத் தட்டி விட்டு எழுந்து போய் விடுகிறான் இதற்கான காரணம் அவள் அம்மாவீட்டிற்குப் போய் தஞ்சமாகிற வரைக்கும் புதிராகவே இருந்தது.
அன்று அவர்களுக்குத் தலை தீபாவளி. எனினும் அது கறை மூழ்கிக் கிடந்தது அவர்கள் அதை மிகச் சிறப்பாகக் கொண்டாட வேண்டுமென்று கருதி அது வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாக, அவளின் அப்பாவும் அம்மாவுமாக, அவனுக்கு வேஷ்டி அவளுக்குப் புடவையெல்லாம் வாங்கிக் கொண்டு தேர் ஏறியல்ல பஸ்ஸில் நீண்ட தூரம் பயணம் செய்து அங்கு வரும் போது, அவர்களை அவள் வரவேற்ற விதம் வயிற்றில் புளியைக் கரைத்தது.
அவர்களைக் கண்டவுடன் பெரும் சத்தம் எடுத்து அழுது ஓலமிட்டவாறே ஓடி வந்து அவள் அவர்களின் காலில் விழுந்து கதறிய, போது, அவர்கள் முற்றாக ஸ்தம்பித்துப் போனார்கள்.
இங்கு என்ன நடக்கிறது? சாத்தான் கையில் துவண்டு கருகி வீழ்ந்த மலர் போல, இன்று அவள் ஏன் இப்படி கண்ணீர் நதி குளித்து நிற்கிறாள்.
அவளைச் சூழ பற்றி எரியும் தீ அவளை உயிருடன் விழுங்கி, ஏப்பம் விட அவளின் கணவன் ஆனந்தன் மட்டுமல்ல அனைத்து மனிதர்களுமே, சாத்தான்கள் போல அவளை இரை விழுங்க, வாயைப் பிளந்து கொண்டு காத்து நிற்பது போல் அவர்கள் உணர்ந்தார்கள்.
இந்த சாத்தான்களிடமிருந்து அவளை மீட்டு எடுத்தாலே போதுமென்றுபட்டது ஆனால் இது அவ்வளவு லேசான காரியமல்ல சட்ட பூர்வமாகவும் சாஸ்திர ரீதியாகவும் இருவரும் மனம் செய்து கொண்ட, பின் நினைத்தவுடன் மனம் மாறி இவளைத் தூக்கி எறிந்து விடலாமென்று ஆனந்தன் மட்டுமல்ல அவர்களும் நினைத்தால், லேசில் நடக்கக் கூடிய காரியமா இது?
அழுகிற அவளை சமாதானப்படுத்த முடியாமலே, அன்றைய அவர்களின் வருகை தோல்வியில் முடிந்தது. இதையெல்லாம் புறம் தள்ளி மறந்து விட்டு கந்தசஷ்டி விரதம் கடைப்பிடித்து அம்மா வயல் முருகன் கோவிலுக்குப் போயிருந்த நேரத்தில் தான் அந்த விபரீத நிகழ்ச்சி நடந்தேறியது.
அப்பா மட்டும் தான் அப்போது வீட்டில் தனியாக இருந்தார். பூரணிக்கு ஒரேயொரு அண்ணன் மட்டும் தான், அவன் யாழ் பல்கலைக் கழகத்தில் நூலகராகப் பணி புரிகிறான், இன்னும் கல்யாணமாகாததால், விடுதியில் தங்கி இருந்து தான் பணி புரிகிறான், அபூர்வமாக எப்போதாவது வீட்டிற்கு வந்து போவான், தங்கையை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து விட்டதாகவே அவன் நினைப்பு . இனி நடக்கப் போவதை அவன் அறிய நேர்ந்தால், செத்தே போய் விடுவான், தங்கை என்றால், அவனுக்கு உயிர்.
இந்த விலைமதிப்பற்ற உயிரின் பெறுமதி அறியாமலே ஆனந்தன் விதியோடு விளையாடிக் கொண்டிருக்கிறான், அதன் ஆரம்ப நிகழ்வாகவே களை கட்டிய அதன் அரங்கேற்றம் அப்பா பார்த்துக் கொண்டிருக்க, நடந்தேறியாது.
திருமணமாகி இரண்டு மாதம் கழித்து பூரணியின் வருகை அவர்கள் வீட்டில் திடுமென்று நேர்ந்தது வாசலில் கார் வந்து நிற்கும் போதேஅப்பாவுக்குப் புரிந்தது.
அது தான் அவர் பார்த்துக் கொண்டிருக்க உயிருள்ள ஒரு பெண்ணாகவல்ல சடம் மரத்த நிழலாக சூனியம் வெறித்த பார்வையுடன் காரை விட்டிறங்கி பூரணி முன்னால் வர பின்னால் அந்த ஜாம்பவான் கடவுள் மறுப்புக் கொள்கையாளன் போல் திமிர் பிடித்த பார்வையுடன் வருவது போல் படவே, அப்பா அதை எதிர்கொள்ள முடியாமல், நிலைகுலைந்து போய் அங்கேயே வெறித்துப்பார்த்துக் கொண்டிருந்தார். அதைப் பொருட்படுத்தாதவன் போல், எறிகணைப் பார்வையுடன் அவசரமாகப் படியேறி வந்த அவன் அகங்காரமாக குரலை உயர்த்தி சொன்னான்.
பூரணி கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருக்கட்டும்.
அதற்கு அவர் கேட்டார். பிறகு வந்து கூட்டிப் போவியள் தானே.
அதைப் பிறகு பார்ப்பம். இதற்கு மேல் கதை இல்லை சொல்ல, அங்கு அவன் நின்றால், தானே. அவன் போன பின் ஒன்றும் பேசத் தோன்றாமல் வெகு நேரம் வரை பூரணி கொண்டேயிருந்தாள். எப்படி எத்தனை முறை அழுதாளோ தெரியவில்லை ஊன் மூழ்கும் வாழ்கையில் இது தான் அவள் கொண்டு வந்த வரம் அழுகையில் முடிந்த அவளின் பாவக் கணக்கு எல்லையில்லாமல், போய்க் கொண்டிருந்தது. இது நடந்த மறுநாளே இன்னுமொரு பேரிடி அப்போது அம்மாவும் கூடவே இருந்தாள் அவளுக்கு ஒரு தாய்மாமன் பேரம்பலப் பரியாரி அவர் ஒரு புகழ் பெற்ற சித்த வைத்தியர் கைராசிக்காரரும் கூட அன்று கேட் கதவு திறந்து அவர் உள்ளே வரும் போது முகம் குழம்பிக் கிடந்தது.
அம்மா பார்வதி அவரைப் பார்த்தவுடன் குரல் நடுங்கிக் கேட்டாள் .
என்ன மாமா? பதறிக் கொண்டு வாறியள்?
எனக்குப் போய் ஆனந்தனின் அப்பா இளையதம்பி கடிதம் எழுதியிருக்கிறான்!
என்னவாம்?
சொல்ல நாக் கூசுது சொல்லட்டே?
சொல்லுங்கோ மாமா!
இருடியாம் அது தான் பூரணி சாமத்தியப்படேலையாம். இதை விட வேறு ஒரு வழி அலியாம் இவள்.
அப்படியென்றால், என்ன அர்த்தம்?
போடி விசரி! இது கூடவா தெரியாது? ஆனந்தன் கட்டிப் பிடிச்சு விளையாட பூரணிக்குத் தகுதி இல்லையாம்.
ஓ! அதற்காகவா இத்துணை தூரம் இந்த வெறுப்பு.
ஓ! அதற்காகவா இத்துணை தூரம் இந்த வெறுப்பு நாடகம். அதுவும் உண்மையை அறியாமல், என்னவொரு மனவக்கிரத்திலை இப்படியொரு கடிதம் . இந்த வழக்கு எதில் போய் முடியுமோ தெரியேலை என்று கேட்டு விட்டு மேலும் தொடர்ந்தார் அப்பா. அவர் ஒரு நேர்மையான பள்ளியாசிரியர். பண்பாடு ஒழுக்க விழ்மியங்களையே, கடவுளாக நினைப்பவர். ஆனால் இளையாம்பியும் அவர் தம் உறவுகளும் முழுவதும் அறிவு மங்கிப் போன பாமர ஜனங்கள். இவர்களுக்கு உண்மையை உரைகல் போட்டு காட்டினாலும் ஏற்கப் போவதில்லை பாவம் பூரணி இதில் அவள் தலை தான் உருளப் போகிறது இதற்காக இவள் கழுவாயே சுமக்க நேர்ந்தது. ஆம் இது ஒரு கொடிய விதி இவளின் பளிங்கு உடல் வார்ப்பு உண்மையை நிரூபிக்ககடைசியில் மகப் பேறு வைத்தியரிடமே போய் மானமிழ்ந்த கதையை என்னவென்று நிரூபிப்பது. இதில் அவள் நிரபராதி என்ற, போதிலும் கடைசியில் மண் கவ்விய கதைதான் இது. கேவலம் ஒரு சதை வாழ்க்கைக்காக நடந்தேறிய விபரீத நாடகம் பலன் பூஜ்யம் தான் இனி என்ன செய்வது? தாம்பத்ய உறவுக்கும் தசை இன்பம் பெறுவதற்கும் பூரணி தகுதியற்றவள் என்பதே அவர்களின் கண்மூடித்தனமான முடிவாக இருந்தது. இதைத் தகர்த்தெறிய இனி கடவுள் தான் வர வேண்டும் இதற்காக பூரணி கண் விழித்து தவம் செய்து காத்திருந்த வேளையில் தான் எதிர்பாராத விதமாக, கடவுள் அவளூக்குள் வந்தார் கருவாக. உருவாக இன்னும் என்னென்னவோ அதிசயங்கள். இது நடந்து நான்கு மாதங்களே கடந்து விட்ட நிலையில் அவளுக்குத் தொடர் வாந்தியாக இருந்தது. அது வெறும் வாந்தி என்று விட்டு விட முடியாமல், டாக்டரிடம் மருந்து எடுக்கப் போன போது தான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. அவர்கள் எழுதிக் காண்பித்தது போல் அவள் இருடியல்ல அலியுமல்ல. அவன் விந்துவை சுமந்து கொண்டிருக்கும் அற்புதமான, ஆதர்ஸ மங்கை. அப்படியும் அந்த ஆனந்தனும் அவன் ஆட்களுமாய் அதை நம்பி ஜீரணிக்க முடியாமல், வாய் கூசாமல் பொய்யுரைக்கும் பேதமை மாறாமல், அதையும் கட்டி என்ற போது பூரணி இடறி வீழ்த்துகிற அந்த இருளில் அவன் முகம் கூட மறந்து போனது. முகம் தெரியாத ஒருவனிடமா நான் என்னையே இழக்க நேர்ந்தது. சரி போகட்டும், இது கட்டியாகவே இருந்து விட்டுப் போகட்டும்.
ஒரு கட்டியை சுமக்கவா, இன்று இந்தப் பாடுபடுகிறேன்.
இது கட்டியல்ல கடவுள் தான் என்பது நிதர்ஸனமாக ஆசுபத்திரிக்குப் போன இல்லை பின்னர் தான் அவர்களால் அறிய முடிந்தது. அந்தக் கடவுளைப் பார்க்க வெட்கம் சூடு சுரணையெல்லாம் விட்டு விட்டு ஆனந்தனே நேரில் வர நேர்ந்தது. வேறு வழியில்லை இதிலும் தட்டிக் கழித்தால், வழக்காக எடுபட்டால், நீதி தலை நிமிர, இவளுக்குத் தான் வாழ்வு எனக்கல்ல. கட்டி கடவுளாகவே இருந்து தன்னைப் பார்த்து கைகொட்டி நகைப்பது போல் படவே தலை குனிந்து அவன் நின்ற கோலம் வெறும் நிழலாகவே அவள் கண்களை உறுத்தி விட்டு மறைந்து போனது. கடவுளே நேரில் வந்து சாட்சி பூர்வமாக சத்தியத்தை நிரூப்பித்த அந்த நிலையிலும் கூட கனவில் தூங்குகிற அவனை, எழுப்ப மனம் வராமல், கண்களில் நிறைந்த அந்தக் கடவுளை விட்டு விலக மனம் வராமல், ஒரு பொய் கரை ஒதுங்கிப் போன பெருமிதக் களையோடு, அவள் அங்கு நிலைத்திருப்பது போல் பட்டது. இந்தப்படுதலின் சூடு தணியாமல், அங்கு ஒரு வெறும் மனிதனாய் அவன் பார்வை மட்டுமல்ல முகம் கூட இருள்மூடி மறைந்து போயிருந்தது,
![]() |
என் எழுத்துயுகத்தின் இனியதொரு விடிவு. இருள் கனத்த நீண்ட என் எழுத்து யுகம் தாண்டி இது எனக்கு ஒரு மறு மலர்ச்சிக் காலம். இலை மறை காயாக அதில் வாழ்ந்த காலம் போய், இத்தளத்திற்கு வந்த பிறகு பல நூறு அல்ல அதிலும் கூடுதலான வாசகர்களை பெற்று, புறம் தள்ளப்பட்ட என் கதைகள்அமோக வரவேற்புப் பெற்று, கொடி கட்டிப் பறக்க நேர்ந்த பெரும் பேற்றினை, ஒரு கடவுள் வரமாகவே நான்…மேலும் படிக்க... |