கடலம்மா ஏனிந்த சீற்றம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 8, 2025
பார்வையிட்டோர்: 1,078 
 
 

(2005ல் வெளியான கவிதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கடலம்மா ஏனிந்த சீற்றம்
கலங்கித் தவிக்கின்றோம்
அல்லலுற்றே ஆற்றாது
அகதிகளாக வாடிச் சோர்ந்த எம்மை
அலை வீசி தகர்ப்பது என்ன நீதி
அழுத எம் கண்கள் இன்னும் ஓயவில்லை
அவலக்குரல்களும் இன்னமும் தீரவில்லை
அதற்குள் உன் அனர்த்தமா?
கடலம்மா ஏனிந்த சீற்றம்
கலங்கித் தவிக்கின்றோம்.

நிலமகள் தான் உன்னை உடுத்தாள்
நீலப்பட்டாடையாக இன்று; நீயோ
நிலம் வாழ் மாந்தரை அழித்தாய் ஏனோ
துள்ளும் கடலலையே…கடலலையே என்று
தோழர் தோழியருடன் பாடியே மகிழ்ந்தோம்
துயரக் கதைகளை அள்ளி வந்த சுனாமியானாய் – இன்றோ

துயரங்களை அள்ளி வந்த பேரலையே பிரளயமே
பிணம் குவிக்கும் இராட்சியான மர்மமென்ன?
கடலுக்கும் கரையுண்டு எல்லையுண்டு
கட்டுக்காவலுண்டு இதுதான் நியதி ஆனால்
நீயோ ஊர் மனை புகுந்தாய் உயிர்களைக் குடித்தாய்

ஓட.. ஓட ,, துரத்தியே உயிர் மூச்சினைப் பறித்தாய்
அழிப்பேரலையே உன்னால்
உயிர் இழந்தோர் ஆயிரமாயிரமாம்
உற்றார் உறவினர் இழந்தோர் பல்லாயிரமாம்
பேயலையே உன்னால்
மகவிழந்தோம் மாதா பிதா இழந்தோம்
சுற்றமும் சூழமும் இழந்தே துடிக்கின்றோம்.

கடலம்மா நீ கொந்தளித்தே
மாடி மனையைப் பறித்தாய் மணலில்
ஓடித்திரிந்த மகவையெல்லாம் காவு கொண்டாய்
பால் மணம் மாறா பாலகரையும்
பாவியே நீ கொள்ளை கொண்டது ஏனோ
நூற்றாண்டு காலமாய் போற்றியே காத்த
நுட்பமிகு கட்டிடங்கள் ஆனைத்தையுமே
நொடிப் பொழுதில் அழித்தே களித்தாய்
எண்ணும் எழுத்தும் கற்றிட எம்மவர்க்கு
கண்னெனவேத் திகழும் கல்விக் கூடங்களையும்
கள்வனாய் வந்து கடலே நீ கொண்டு சென்றாய்

மாடி மனையை மட்டுமா நீ பறித்தாய் ஏழை
மழைக்கொதுங்கும் குடில்களையும் சிதைத்தாய்
மானம் காக்கும் உடையையும் துகிலுரிந்தாய்
மாண்புடன் வாழ்ந்த எம்மை மண் கவ்வச் செய்தாய்
உண்ணும் உணவினை தட்டிப் பறித்தாய்
உழைத்துச் சேர்த்த உடைமைகளை பறித்தாய்
பேரினப் போரினால் பெற்றோரை இழந்தே
பேர் ஊர் தெரியாது அனாதை இல்லத்தில் வசித்த
பிஞ்சுகளின் உயிர்களையும் குடித்த
பேரலையே உனக்கு பித்தம் பிடித்தது ஏனோ?

கடலாடு தரை தனிலே தலங்கள் ஆடும் விடியற்
காலையிலே, தலங்களில் பொருள் வந்து குவியும் காத்திருப்பார்
தரைகளில் கணவர் தம் பெண்டிர்
மனையெல்லாம் கரிய பனையெல்லாம் வீழ
பிண மலையை குவித்த பேரலையே
தொல்லை ஒலி கடல் பேரலையே – எங்கே
தொலைந்தோடி மறைந்தே போனாய்
ஆனால் இன்று இங்கே
தாயொரு பக்கம் சேயொரு பக்கம் தந்தை
தமயனொரு பக்கம் தம்பி தங்கையர் ஒரு பக்கமாக
தவிக்கின்றோம் தரணியிலே

கடலம்மா ஏன் வஞ்சகளாய் சீற்றம் கொண்டாய்
எம் தென்முதுரை சீமையெல்லாம்
தின்று தீர்த்தும் தீரவில்லை உன்பசி
நின்ற சீர் நெடுமாறனே கொன்று களித்தும்
அடங்கவில்லையா உன் அதிகார வேட்கை

முதல் இடைச்சங்க நூல்களை கபடமாக
கபளீகரம் செய்தாய்
பஃறுளி ஆற்றினை குடித்தும் அடங்கவில்லையா உன் தாகம்
எம் இனத்தை கடல் கொண்ட செய்தி எல்லாம்
கண்ணகி கதையிலே படித்ததுண்டு
எம் காலத்திலும் கணப்பொழுதில்
நிகழ்ந்த மாயமென்ன
ஒரு பிரளயமே வந்துற்றாலும்
ஓய்ந்திடாத தம்பியரே
சவால்கள் எம் முன்னே
சரித்திரம் படைத்திட வாரீர்

தந்தையரே அன்னையரே
தம்பியரே தங்கையரே
அறங்காவலரே புரவலரே
அழுதுபுலம்பியது போதும்
அள்ளிக் கொடுத்திடுவீர்!
அல்லுறும் எம் குலத்தின் அழி பசி தீர்த்திடவே
ஆலயங்கள் சபைகள் மன்றங்கள் – எங்கும்
திரட்டிடுவீர் நிதி குவித்திடுவீர்
பொருள்கள் அகதிகள் துயர் துடைக்க
தீரமிகு தம்பியரே தங்கையரே
புறப்படுவீர் விரைந்தே! உயிர்காக்க இரத்ததானம் செய்வோம்!
வானமே கூரையாக
வாடி நிற்கும் எம்மவரின்
வாழ்விற்கும் உரமேற்ற
சிரமதானப் பணிகள் புரிய ஆயிரமாயிரமாய்
புறப்படுவோம்! விரைந்தே வாரீர்!
ஆழிப்பேரலையின் கோர அழிவுகளா
ஆன்மீக வழியில் நனி சீரமைப்போம்.

– கடலம்மா ஏனிந்த சீற்றம், 2005.

மாத்தளை பெ.வடிவேலன்2 சிறுகதை, நாவல், நாடகம், கவிைன ஆகிய இலக்கியத் துறைகளில் ஈடுபாடு கொண்டுள்ள வடிவேலன், இதுவரை ஐம்பதுக்கு மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் எழுதியுள்ளார். கதைகள் சில சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் பெயர்க்கப் பட்டுள்ளன. இவர் எழுதி தமிழகத்தில் வெளியான சில கதைகள் அங்கு மறுபிரசுரமும் செய்யப்பட்டன.  வடிவேலனின் 12 சிறுகதைகள் அடங்கிய 'வல்லமை தாராயோ!' என்னும் சிறு கதைத் தொகுதி மலையக வெளியீட்டகத்தின் பிரசுரமாக வெளிவரவுள்ளது. 'தோட்டக் காட்டினிலே…' என்னும்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *