கடமை – ஒரு பக்க கதை

0
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 4,248 
 
 

காட்டுக்கு வேட்டையாட வந்திருந்த தன் எஜமானனுக்காக புதரில் மறைந்திருந்த ஒரு முயலை விரட்டு, விரட்டு என்று விரட்டிற்று ஒரு நாய்.

ஓடி ஓடிக் களைத்த முயல் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்று, அட, இனத் துரோகி!

என்னைப் போல் நீயும் ஒரு மிருகம், உன்னைப்போல் நானும் ஒரு மிருகம். கேவலம், ஒரு சில எலும்புகளுக்காக என்னை நீ இப்படிக் காட்டிக் கொடுக்கலாமா? என்று கேட்டது.

காட்டிக் கொடுத்தால் இனத் துரோகி; காட்டிக் கொடுக்காவிட்டால் எஜமானத் துரோகி. இதில் எது தருமம் எது அதருமம்? என்று நீதான் சொல்லேன்! என்று அதைத் திருப்பிக் கேட்டது நாய்.

முயல் விழிக்க, அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் உங்களுடைய கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பார்க்காதீர்கள்! என்றது ஒரு கழுகு, அங்கிருந்த ஒரு மரக்கிளையில் அமர்ந்தபடி.

சரி, இப்போது ஓடுவதுதான் என் கடமை! என்று சொல்லிக்கொண்டே முயல் ஓடிற்று.

என் கடமை உன்னைத் துரத்துவதுதான்! என்று சொல்லிக்கொண்டே அதைத் துரத்திற்று நாய்.

டுமீர்! என்று ஒரு சத்தம். சுருண்டு விழுந்த முயலைப் பாய்ந்து வந்த கழுகு தன் காலால் இறுகப் பற்றிக்கொண்டு மேலே பறந்தது;

இதைக் கண்டதும் ஒரு கணம் திடுக்கிட்டு நின்ற நாய், மறுகணம் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு சொல்லிற்று:

இது பலனை எதிர்பாராமல் செய்யும் கழுகின் கடமைபோலும்!

(விந்தன் குட்டிக் கதைகள் என்ற நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *