கடன்காரத் தீபாவளி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 8, 2025
பார்வையிட்டோர்: 9,242 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆண்டுக்கு ஒரு முறைத் தீபாவளி வருவது மகிழ்ச்சியைப் பெருக்கத்தான். 

ஆனால், நடுத்தர, அடித்தளக் குடும்பத் தினருக்கு அந்நாள் எவ்வளவு நோவலையும் துன்பத் தையும் தந்துவிட்டுப் போகும் என்பது ஐந்தாறு பிள்ளைக் குட்டிகள் உள்ளவர்களுக்கே தெரியும். 

நான் நாளொன்றுக்கு பதினான்கு மணிநேரம் வேலை பார்க்கிறேன். மாடா உழைக்கிறேன். இயந்திரமா இயங்குகிறேன். வயிற்றைக் கட்டியும் பார்க்கிறேன். இருந்தும், ஓராண்டாவது கடன் வாங்காமே தீபாவளியைக் கொண்டாட முடியலே. 

மூன்று பிள்ளைங்க படிப்புக்கு முந்நூறு வெள்ளி செலவாகுது. மின்சாரம், தண்ணீர், கழிவுத்துப்புரவுக் கட்டணம் மாதம் அறுபது வெள்ளி செலுத்த வேண்டியுள்ளது. 

அவற்றோடு போச்சா? 

வீடமைப்புக் கழக காவந்து (பராமரிப்புக் கட்டணம்), சொத்து வரி, வருமான வரி, சாப்பாட்டுச் செலவு, நோய்நொடி போக்குவரத்துச் செலவு அது இதுவென்று கணக்குப் பார்த்தால் ஐந்து பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு ஓராண்டுக்குப் பத்துப் பதினைந்தாயிரம் வெள்ளி தேவைப்படுகிறது. 

எனது மொத்த வருமானமும் எட்டாயிரம் வெள்ளிதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாட முடியும்?

‘தீபாவளியைக் கடன் வாங்கி ஏன் கொண்டாட வேண்டும்?’ 

என்று நினைத்தாலும், பிள்ளைகளுடைய சூழ்நிலையும், அவர்களோட ஆசைகளையும் நிறைவேற்ற முடியாத பெற்றவர்களாக ஆளாக நேரிட்டுவிடும். 

ஏமாற்றம் அடைகின்ற பிள்ளைங்க தவறான பாதையில் நடக்கத் தொடங்கி விடுவாங்க. சரி, நடக்கிறது நடக்கட்டும் என்று உரிமம் பெற்ற கொடுக்கல் வாங்கல் (லேவா தேவி) வணிகரிடம் போய்க் கடன் கேட்டால் பரிந்துரைக்க (சிபாரிசு) ஆள் கேட்கிறாங்க. அவர்களுக்குத் தெரிந்தவர் களாகவும், நமக்குப் பரிந்துரைப்பவர் களாகவும் ஆள் தேடுறதுன்னா இந்தக் காலத்திலே இலகுவா என்ன? 

இப்பொழுது நாணயமானவர்களுக்கு உதவ யார்தான் முன் வருகின்றார்கள்? 

ஆடம்பரமா பொய்சுமந்த ஆசைமொழிகளை அள்ளிவிடுகிறவர்களுக்குத்தான் நல்ல காலமாக இருக்கிறது. 

அட, அதுதான் போகட்டும் என்று, பத்துக்கு இரண்டு வட்டி வாங்கும் பாவிகளிடம் கடன் பட்டால் வட்டி கட்டியே தொல்லைப் பட வேண்டியுள்ளது. இந்த நிலைமையில் வரத் தீபாவளியை எப்படி எதிர்கொள்வது? 

மதுக்கடையில் அமர்ந்து ஒரு “மான்சாப்” ஙோ கா பீயைச் சிறிது சிறிதாகக் குடித்தவாறு தனது வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் மாரிமுத்து. அதனைக் கேட்டுக்கொண்டிருந்த பூங்குயி லோ பொன்னம்பலம். 

“ஏய்யா மாரிமுத்து இவ்வளவு செலவு இருக்குன்னு சொல்றே அப்படி இருந்தும் ஒவ்வொரு நாளும் ஒரு “சுக்கு” அடிக்கிறியே அதை நிறுத்தினா ஆண்டுக்கு ஆயிரம் ரெண்டாயிரம் மிச்சப் படுமே” 

“தம்பி, பொன்னம்பலம் நீ சொல்லுறது சரிதான். நான் மறுக்கலே. ஆனா, நீ ஒன்னை நினைச்சுப் பார்க்கணும். மனிதனா பிறந்த நாம வெறும் இயந்திரமா வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. நம்ம உடலுக்கும் உள்ளத்துக்கும் உவகை ஊட்டக்கூடிய ஏதாவது ஒரு மகிழாட்டுத் துணை இருக்கணும். 

அதற்காகத்தான் இந்த உலகத்திலே மது மாது, ஆட்டம் பாட்டு கூத்துக் கும்மாளம் என்றெல்லாம் நூறு வகையான கேளிக்கைகளை இயற்கையின் படைப்பாகவும் மாந்தரின் உருவாக்கமாகவும் தோன்றி உள்ளன. நம்மைப் போன்றவர்கள் எல்லாவற்றையும் துய்த்துப் பார்க்க முடியாது. 

“நமக்குக் குறைந்த செலவிலே கிடைக்கிற ஒரே கேளிக்கை விருந்து இந்தக் குடி ஒன்றுதான். இதுவும் இல்லாவிட்டால் உழைக்கிற நமக்கு வாழ்க்கையிலே சலிப்பு வெறுப்பு ஏற்படக் கூடும். உழைக்கிற ஆர்மிருக்காது. அதனாலே பசிக்கு உண்ணுவது போல ஏதோ ஒரு ஊட்டத்துக்காக குடிக்கிறேன். இது தப்புன்னு சொல்றியா?” 

பொன்னம்பலம் வாயைப் பொத்திக்கொண்டு “பூங்குயிலோ” வை மிடறு மிடறாக உள்ளிறக்கிக் கொண்டிருந்தார். 

மாரிமுத்து ஒரு சூனா மானா. அவர் தொன்ம (புராண)ங் களைக் கதைகளாக மதிப்பாரன்றி அவற்றை நடந்தவை என்றோ உண்மை என்றோ ஏற்கமாட்டார். 

அதனால் அவர் அறிவறிந்த நாள் முதல் இன்றுவரை தீபாவளியை ஒரு பொருட்டாக மதிப்ப தில்லை. என்றாலும், சிங்கப்பூரின் பல்லினச் சூழ்நிலையில் அண்டைவீட்டாரோடு நட்பாக இருக்கவும் உறவாடவும் இது போன்ற விழா ஒரு பாலமாக அமைந்துவிட்டது. பிள்ளைகளும் தமது நட்பினரை வீட்டிற்கழைத்து மகிழ்ந்தாடவும் இந்தத் தீபாவளி தேவையானதாகி விட்டது. 

ஊரோடு ஒட்டிப் போகவேண்டியதால் தீபாவளி அவர் வீட்டிலும் திருவிழா ஆயிற்று. 

தீபாவளிக்கு ஓர் அரக்கனின் சாவும் அவனின் வேண்டலும் தான் கரணியம் என்ற கதை நடப்பில் இருந்தாலும் அந்த நன்னாள் பண்டைத் தமிழர்கள் காண்டாடி வந்த கார்கால விழாவாக இருக்கவேண்டுமென்பது அவரது விருப்பம். 

இப்போது மாரிமுத்து தான் பருகிக்கொண்டிருந்த சிவப்பு நிற சீனச் சாராயத்தைக் குடித்துவிட்டு வீட்டுக்குப் புறப்பட அணிய மானார். 

போதை சற்று ஏறி இருந்தாலும், அவரது முகம் கவலை நீங்கியதாக இல்லாமல் பழையபடியே இருந்தது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. எவரிடம் கடன் கேட்பது என்ற சிந்தனையில் இருக்கையை விட்டு எழுந்தார். 

“அண்ணே கொஞ்சம் இருங்க, பொறுத்துப் போகலாம்” என்று “அங்கர்பீர்” ஆறுமுகம் மாரிமுத்துவின் கையைப் பிடித்து அமரச் செய்தார். 

“இல்லே தம்பி, எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. எங்காவது போய் யாரையாவது பார்த்துப் பணத்துக்கு வழி பண்ணணும்” என்றார் மாரிமுத்து. 

“நீங்க எங்கேயும் போகவேண்டாம். யாரையும் பார்க்க வேண்டாம். உங்களுக்குப் பணம் நான் தருகிறேன்” என்றார் ஆறுமுகம். 

மாரிமுத்துவின் முகத்தில் மகிழ்ச்சி ஒளி படரத் தொடங்கிற்று. 

“நீ சொல்றது உண்மைதானா? உன்னை நம்பலாமா?” வியப்போடு வினவினார் மாரிமுத்து. 

“அண்ணே, பிள்ளைக்குட்டிக்காரரான உங்களை எதுக்கு நான் ஏமாத்தப்போறேன். துயரத்திலே இருக்கிற உங்களுக்கு ஆசை காட்டி மோசம் செய்தா அடுத்த தீபாவளியைக் கொண்டாடும் நற்பேற்றை ஆண்டவன் எனக்குத் தரமாட்டான் அண்ணே, 

கொஞ்ச நேரத்திலே இரண்டு பேரும் என் வீட்டுக்குப் போவோம். ஐந்நூறு வெள்ளி தருகிறேன். வாங்கிக் கொண்டு போய் பிள்ளை களுக்கு வேண்டிய துணிமணி பலகாரங்கள் எல்லாம் வாங்கிட்டுப் போங்க. 

பணத்துக்கு வட்டி ஏதும் வேண்டாம். அதோட பணத்தை உடனடியா திருப்பித்தர வேண்டியதுமில்லே. கொஞ்சம் கொஞ்சமா மெதுவா கொடுத்தா போதும்,” என்றார் ஆறுமுகம். 

மாரிமுத்துவின் மனத்தினுள் மகிழ்ச்சி என்னும் அகல் விளக்கு சுடர் விடத் தொடங்கியது. அவருக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் வாயடைத்திருந்தார். 

நன்றிப் பெருக்கால் நீர் வழியும் தனது கண்களை ஆறுமுகத்தின் காலடிப் பக்கம் திருப்பினார். 

மாரிமுத்துவுக்கு இது கடன்காரத் தீபாவளிதான் என்றாலும் சற்றுமுன் வரை அவருக்கு இருந்த கவலையெல்லாம் எங்கோ பறந்தோட களிப்போடு காணப்பட்டார் அவர். 

ஙோ கா பீ: சீனச் சிவப்புச் சாராயம் 
பூன் குயி லோ: வெள்ளைச் சாராயம்
சுக்கு: 1/4(கால்) 

– தமிழ்முரசு, 21-10-1989. 

– மண்மணச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஜூன் 2014, பாத்தேறல் இளமாறன் வெளியீடு, சிங்கப்பூர்.

பாத்தேறல் இளமாறன் (தமிழ் தெரிந்த சமையற்காரர்)  தமிழகத்தின் தஞ்சை மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள நாட்டுச் சாலையில் 2-1-1945ல் பிறந்த பாத்தேறல் இளமாறனின் இயற்பெயர் மெ. ஆண்டியப்பன். 12'ம் வயதில் சிங்கப்பூருக்கு வந்த இவருக்குச் சமையல் கை வந்த கலை. ஆர்ச்சர்ட் சாலையிலுள்ள X ஆன் சிட்டி கடைத் தொகுதி திறக்கப்பட்டபோது அதில் சாப்பாட்டுக் கடை நடத்த உரிமை பெற்ற ஒரே தமிழர் இவர். மணமான இவர் தம் குழந்தைகளுக்கு கண்ணகி, தமிழ்க் கோதை,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *