ஓடும் ரயிலில் ஒரு சரணாகதி





(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஊ” என்ற பேரிரைச்சலுடன் பம்பாய் மெயில் இருளைக் கிழித்துக்கொண்டு வேகமாகச் சென்று கோண் டிருந்தது. இரு பக்கங்களிலிருந்தும் வருகிறசிலு சிலுத்த வாடைக் காற்றும் ‘கடக்-கடக், கடக்-கடக்’ என்று ஒரே கதியில் ஒலிக்கிற ஓசையும், தாலாட்டுவது போன்ற வண்டி யின் சீரான அசைவும், உள்ளே இருப்பவர்களுக்கு உறக் கத்தின் போதையை ஊட்டியது.
வண்டி திருவள்ளூரில் நின்றபோது ஒரு நெரிசலான கம்ப்பார்ட்மெண்டில்’, இளைஞனான அந்த டிக்கெட் எக்ஸாமினர் நுழைந்தான். சில நிமிஷ நேரச் சோத னைக்குள் டிக்கெட் இல்லாத ஒரு இளம் பெண்ணைக் கீழே இறக்கி நிறுத்துகிறான்.
அந்தப் பெண் மழையில் நனைந்தபடி, கையில் ஒரு தோல் பெட்டியுடன் தீவிரமாக யோசித்தபடி சற்று ஓர மாக நின்றுகொண்டிருந்தாள். தனக்கேற்பட்ட இந் நிலைக்கு வெட்கப்படுவது போவிருந்தது அவளது முக பாவம்.
டி. டி. இ. அவளை நெருங்கினான். மீண்டும் ஒரு முறை அந்த அழகியை நன்றாக உற்றுப் பார்க்கவேண்டும் போன்றதோர் ஆர்வம் அவனைத் தூண்டியது. ஆயினும் தனக்குரிய மிடுக்குடன், அதிகார தொனியில் கேட்டான்:
“என்ன உத்தேசம்? பணம் கட்டி ஊருக்குப் போறியா, இல்லே இங்கேயே இறக்கி விட்டுடவா.”
“எங்கிட்டே உண்மையிலேயே கட்டப் பணம் இல்லே…” – தயங்கித் தயங்கிக் கூறினாள் அவள்.
“அப்போ இங்கே ஸ்டேஷன்லே ஒப்பிச்சிடவா?”
அவள் பதறிப் போனாள். அந்தக் கேள்வியின் பயங் கரம் தாளாமல், மானைப்போல் மருண்டுபோன அவளது விழிகளின் அழகை, அந்த மங்கலான ஸ்டேஷன் விளக்கு ஒளியிலும் அவனால் கண்டு ரசிக்க முடிந்தது.
குரல் அடைக்க அவள் கூறினாள்; “நாளைக்குக் காலமே ஊருக்குப் போகலேன்னா. எங்கம்மா பிணத்தைக்கூட என்னாலேப் பார்க்க முடியாது. – நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன் – என்னெ இறக்கி மட்டும் விட்டுடாதீங்க…” – அவள் கெஞ்சினாள்.
அவன் தீர்க்கமாக ஒரு முறை அவளைப் பார்த்தான். “நீங்க என்ன சொன்னாலும் கேக்கறேன்” – அவளுடைய இந்த வார்த்தைகள் திரும்பத் திரும்ப அந்த இளம் டி.டி.இ. யின் செவிகளில் முழங்கிக் கொண்டே யிருந்தன.
வண்டி புறப்படுவதற்கான இரண்டாவது மணியும் அடித்து விட்டார்கள். காலத்தின் அவசரம் திடீரென்று டி.டி.இ.யைத் தாக்கியது. கைக்கெட்டிய தீங்கனியைக் கைப்பற்றத் துடிக்கும் ஒருவித பரபரப்பு அவனைத் துரத்தியது. ‘சட்’டென்று ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல், “சரி, வா என் பின்னாலே” என்று அவன் வேகமாக முன்னே நடந்தான். எஞ்சினுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த ஒரு முதல் வகுப்புப் பெட்டியைத் திறந்து விட்டான். அவள் அதனுள் பாய்ந்து ஏறிக் கொண்டாள்.
“அரக்கோணத்தில் சந்திப்போம்” என்று பெட்டியை வெளியே பூட்டிக் கொண்டு, வேறொரு கூட்டமான கம்ப்பார்ட்மெண்டில் டி.டி.இ. தாவி ஏறினான். வண்டி ஸ்டேஷனிலிருந்து நழுவிக் கொண்டிருந்தது.
அந்த இளம் டி.டி.இ. தன்னுடைய தன்னுடைய தொழிலின் போது எண்ணற்ற குடும்பப் பெண்களை, குடும்பமற்ற பெண்களை, பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்திருக் கிறான். ஆனால், எவரிடமும் அவன் இதுவரை காணாத ஒருவித கவர்ச்சி, அழகின் ஆகர்ஷணம், இன்னும் அவ னுக்கே விளக்கத் தெரியாத சௌந்தரியத்தின் சிறப்பியல் புகள் அனைத்தையும் அவளிடம் ஒருசேரக் கண்டு விட்ட பிரமை, அல்லது மயக்கம் தான், அவளை அவன் முதன் முதலாக வண்டியில் பார்த்தபோது ஈர்த்து விட்டது.
எப்படியோ ஒரு மாறான சூழ்நிலை உருவாகி அவ ளாகவே இப்படியோர் இணக்கம் தெரிவித்துத் தன்னிடம் வேண்டி நின்றபோது-
அவனால் ஒரு கணம் தன்னுடைய செவிகளையே நம்ப முடியவில்லை. ஓடுகிற ரயிலில் அல்ல, பறக்கிற விமானத்தில் செல்லுவது போலவே இருந்தது.
வண்டி அரக்கோணம் ஸ்டேஷனில் நின்றது. வேக மாக வி. ஆர். ரூமுக்குள் நுழைத்த அவன், சில ஸ்வீட் வகைகளையும்; பலகாரங்களையும் கட்டி வாங்கிக் கொண்டான். ஸ்டேஷனில் ஆற்ற வேண்டியிருந்த சில பணிகளையும் முடித்துக் கொண்டு, வண்டி புறப்படும் போது அவள் இருக்கும் கம்ப்பார்ட்மெண்ட்டுக்குள் ஏறிக் கொண்டான்
அநேகமாக அவள் தூங்கிப் போயிருப்பாள் என்று எண்ணியதற்கு மாறாக விழித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பார்வையிலிருந்து, எவ்வித விருப்பு வெறுப் புக்களையும் அவனால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. ஆனால், சற்று முன்பு வரை அவள் எதற்காகவோ அழுது ஓய்ந்திருக்க வேண்டும் என்பதை, துடைத்தும் மறையாத கன்னத்தில் படிந்திருந்த கண்ணீர்க் கோடுகள் லேசாக அவனுக்கு உணர்த்தியது. ஆனால், அவன் அதை கவனித்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை.
அரக்கோணத்தை விட்டுப் புறப்பட்ட வண்டி, வேசு மாய்ப் போய்க் கொண்டிருந்தது, இனி அடுத்து ஒன்றரை மணி நேரம் கழித்து-அதாவது இரவு ஒரு மணிக்கு மேல் ரேணிகுண்டாவில் தான் நிற்கும். அவனையும் பாக் கெட்டில் நிறைய வாங்கி வந்திருக்கும் ஸ்வீட்டும் காரமும் மான பலகாரங்களையும் பார்த்து ஒரு கணம் அவள் திடுக்கிட்டுப் போனாள்.
டிக்கெட்டில்லாத ஒரு பிரயாணியிடம் நடந்து கொள்ள வேண்டிய கடுமைகளைக் காட்டாமல் மரணத்தறுவாயிலுள்ள தன் தாயைச் சென்று காண உதவும்படி தான் வேண்டிக் கொண்ட ஒரு சரணா கதியைத் தவறாகப் புரிந்து கொண்டோ, அல்லது வேண்டு மென்றே தவறான எண்ணத்துடன் தன்அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதே போல் தன்னை முதல் வகுப்பு வண்டியில் ஏற்றியபோதே அவள் சந்தேகப்பட்டாள். இப்போது அவனுடைய செய்கை, அந்த சந்தேகத்தை ஊர்ஜிதம் செய்வது போலிருக்கவுமே, அவள் அதிர்ந்தே போனாள்.
எதிரில் இருந்த பொட்டலங்களை ஒவ்வொன்றாய்ப் பிரித்தபடி அவன் கூறினான்: “எங்கே நீ தூங்கிப் போயி ருப்பியோன்னு பயந்தபடி வேகமாக வந்தேன். இந்தா… எடுத்துக்கோ” பலகாரத்தை அவளிடம் நகர்த்தினான்.
அவனுடைய இந்தப் பரிவு வேண்டாததாக-விரும் பத்தகாததாக-இருந்தாலும், அது அவளுள் ஏதோ செய்தது; புறக்கணிக்க முடியவில்லை. எதற்காகாகவோ. தான் அவனிடம் கடமைப்பட்டிருப்பது போன்றதொரு சூழ்நிலையால் தயங்கிய குரலிலேயே கூறினாள்: “அதெப்படித் தூங்க முடியும்…?”
அவளுடைய இந்த வார்த்தையைக் கேட்டதும் அவனுக்கு ஓரு வித மகிழ்ச்சி ஏற்பட்டது…
“இந்தா…இதெல்லாம் உனக்குத்தான். எடுத்துக்கோ. இங்கே நமக்குள்ளே என்ன வித்தியாசம். சேர்ந்தே சாப்பிடுவோம்-இந்தா…” கையிலிருந்த ஜாங்கிரியை அவளது வாயருகே கொண்டு சென்றான். ‘சட்டென்று’ அவள் தலையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.
சற்று முன்புவரை அவன் யாரோ; அவள் யாரோ. ஆனால் இப்போது – இந்தக் குறுகிய காலத்திற்குள் – எத்தனை உரிமையுடன் இந்த டி.டி.இ பழகத் தொடங்கி விட்டான். பார்க்கப் போனால், உண்மையில் இதற்கெல்லாம் வித்திட்டவள் அவளேயல்லவா?
‘விதி ஏன் என்னை இப்படியொரு பாக்கு வெட்டியில் கொண்டு வந்து சிக்க வைத்துவிட்டது?’ என்று எண்ணிய போது அவளால் துக்கம் தாளமுடியவில்லை. தன்னையும் மீறிப் பெரிதாக அழுது விட்டாள்.
டி.டி.இ. ஒரு கணம் திடுக்கிட்டுப் போனாள். “இந்தா, இப்ப நீ எதுக்காக அழறே?” – ஓர் அதட்டு அதட்டினான்.
“நான் வேறே எதுக்காகவும் அழல்லே… அம்மா நெனப்பு வந்தது…” குனிந்தபடி வார்த்தையை மென்று விழுங்கினாள். வேறு என்ன சொல்வது என்று அவள் தவித்துப் போனாள். அவள் இப்படியொரு விபரீத அர்த்தத்துடனா சொன்னாள். அவள் ஏதோ ஒரு போக்கிற்காக ‘என்ன சொன்னாலும் கேட்கிறேன்’ என்று சொன்னதை அவன் இப்படி துஷ்பிரயோகம் செய்ய முனைவான் என்று அவள் எதிர்பார்க்கவில்லையே! அவன் உள்ளம் நடுங்கியது.
அதற்காக திடீரென்று இறங்கி ஓடவும் முடியாது.
அம்மாவைப் பார்க்க வேண்டுமானால் அவனோடு தான் பிரயாணம் செய்தாக வேண்டும்!
”உன் அம்மாவுக்கு ஒன்றும் நேர்ந்து விடாது. தைரியமாயிரு. ஆமாம்… இவ்வளவு நேரமா நீ உன் பெயரைச் சொல்லவே இல்லையே உன் பெயரென்ன? எந்த ஊர்?”
அவள் தலை நிமிர்ந்து அவனை ஒரு முறை பார்த்தாள். பிறகு நிதானமாக, பேரை மட்டுமல்ல, தனது வாழ்க்கைக் கதையே ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து ஆரம்பித்து, ஒரு சுவாரஸ்யமான கட்டம் வரை மிகச் சுருக்கமாகவும், மனத்தில் பதியும் படியும் தெளிவாகக் கூறிக் கொண்டிருந் தாள். அவன் அவளது முகத்தையே ஆவலோடு பார்த்த படி சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.
‘குத்தி அருகே உள்ள ஓர் ஆத்திரக் கிராமத்தில் பிறந்தவள் அவள். பெற்றோருக்கு ஒரே மகள். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட அவளை எவ்வள வோ கஷ்டங்களுக்கு மத்தியில் தாயார் தான் படிக்க வைத்து ஆளாக்கினாள். திருமணத்திற்கான ஏற்பாடுகள் ஏனோ கட ந்து கொண்டே போய்; அதற்காக இருந்த சொல்ப நிலத்தையும் விற்றுச் சாப்பிட்டாயிற்று.
குடும்பத்தின் சிரமம் காரணமாக அவளது தாய் வயதையும் மறந்து, வேலைக்குப் போய் வந்தாள். இது மகளுக்குப் பிடிக்கவில்லை. சிறுகச் சிறுக இப்படி ஓட்டை அடைத்துக் கொண்டிராமல், ஒரேயடியாக நிமிர, தான் சினிமாவில் சேர்ந்து ஒரு ‘ஸ்டார்’ ஆகி விடுவது தான் சிறந்த மார்க்கம் என அவள் எண்ணினாள்.
சினிமாவில் சேர அளவற்ற அழகும் கவர்ச்சியும் வேண்டுமல்லா? அது அவளுக்கு இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. அவள் அதற்காகவே பல படங்களைப் பார்த்தாள். அதில் வரும் கதா நாயகிகளின் அழகிற்கு தான் எந்த விதத்திலும் குறைந்தவளில்லை என்பது அவளுக்கு நம்பிக்கை. சினிமா உலகம் தனக்காகக் காத்திருப்பது போலவும், முயன்று பார்க்காதது தன்னு டைய குற்றமே போலவும் அவளுக்குப் பட்டது.
வெள்ளித் திரைகளிலெல்லாம், தன்னுடைய பொன்னிற மேனி ஒளி வீசுவது போல ஓர் இனிய கனவில் – பிரமையில் – அல்லது ஆழ்ந்த நம்பிக்கையில், தன் மீது உயிரையே வைத்திருக்கும் தாயாரிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல்- கூறினால், நிச்சயம் குறுக்கே விழுந்து தடுப்பாள், இதற்கு அநுமதி கிடைக்காது என்பது அவளுக்குத் தெரியுமாதலால் – ஒரு சிறு தொகையுடனும் திருமணத்திற்காகச் செய்து வைத்திருந்த சொல்ப நகைகளுடனும் ஓர் இரவு சென்னைக்கு ரயில் ஏறி விட்டாள்.
சென்னைக்கு வந்து, கோடம்பாக்கம் வீதிகளில் அலைந்த போது தான் அவளுக்குப் புரிந்தது; சினிமா உலகம் தன் வருகைக்காக ஏங்கவில்லை, அதில் சேருவது என்பது எத்தனை பெரிய விஷயம் என்று. தன்னுடைய அளவற்ற அழகையும் திறமையையும் பற்றி அவள் கொண்டிருந்த நம்பிக்கையெல்லாம் ஸ்டூடியோ மண்ணில் தவிடு பொடியாகி விட்டது.
அவளுக்குத் தாய் பாஷை தெலுங்கு, அதோடு தமிழும் பேசப் படிக்கக் கற்று வைத்திருந்தாள். பத்தாவது வரை படித்ததில் ஓரளவு ஆங்கில அறிவும் அவளுக்கு இருந்தது. ஆனால் – அதனாலெல்லாம் சினிமா வாய்ப்பு அவ்வளவு சுலபத்தில் கிட்டி விடுமா என்ன?
‘சினிமாவில் சேரவேண்டும் என்றால் எல்லாவற்றிற்கும் தயாராக இருக்க வேண்டும்’ என்று சிலர் சொன்னார்கள். ஆனால் – நிச்சயமாக அவள் அதற்குத் தயாராக இல்லை.
கையிலிருந்த பணமும்; கொண்டு வந்திருந்த சொல்ப நகைகளும் அந்த மூன்று மாதங்களுக்குக் கூட ஈடுகொடுக்க வில்லை. ‘அடுத்த வேளைக்கு இல்லை’ என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டது. தான் முற்றிலும் நம்பிக்கையோடு நாடி வந்த துறையைப் பற்றித் தெரிந்து கொள்ள அவளுக்கு இந்தக் கஷ்ட நஷ்டமும்; கால அவகாசமும் தேவைப்பட்டன. ஆனால் அதை ஒரு கெட்ட கனவாக அவள் அப்போதே மறந்து விட்டாள்.
இந்தச் சமயத்தில்தான் தனது கிராமத்தைச் சேர்ந்த ஓர் அம்மாளை எதிர்பாராமல் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவளை அந்த நிலையில் கண்டதும் அந்த அம்மாளுக்கே தாளவில்லை.
“அடி பாவிப் பெண்ணே, நீ இப்படிப் பட்டணத்திலே சுத்திண்டிருக்கியே, அங்கே உன் அம்மா, நீ போனன்னிக்கு படுத்தவதான்; இப்போவோ நாளையோ உசிரை விட்டு வைக்கறதுக்குள்ளே, ஊருக்குப் போய்ச் சேருடி” என்று அன்போடு கடிந்துகொண்டாள்.
இந்தச் செய்தி இடி போல் அவள் நெஞ்சைத் தாக்கியது. உடனே ஓடிப்போய்த் தன் அன்புத் தாயின் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு செய்த தவற்றுக் காக மன்னிப்புக் கேட்டு அழுதால்தான் மனம் ஆறும் போலிருந்தது. ஏதோ ஒரு வித வெறியில் அன்றிரவே ஸ்டேஷனுக்கு வந்து புறப்படத் தயாராக நின்று கொண் டிருந்த பம்பாய் மெயிலில் ஏறி உட்கார்ந்து விட்டாள்.
அப்போது அவளுக்கு இந்த டிக்கெட் விஷயம் ஒரு பிரச்னையாகத் தோன்றவில்லை. ‘கையில் காசில்லாத போது கவலைப்ப என்ன இருக்கிறது’ என்கிற அந்த அசட்டுத் தைரியம்- திருவள்ளூரில் டிக்கெட் இல்லாத தால் இறக்கிவிடப் பட்ட பொழுது- துகள்துகளாகி விட்டது.
‘மரணத்தறுவாயில் இருக்கும், என் தாயைப் பார்க்க முடியாமலே போய் விடுமோ’ — என்று அவள் தவிப்போடு கூறியதை, அந்த டி.டி.இ. இப்போது மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திப் பார்த்துக் கொண்டிருந்தான்.
புனிதமெனத் தான் நம்பி வந்த துறையில் சில மாற்றங்களை ஏற்க நேரிட்ட போது மனம் பதறி அவள் மறுத்து விட்டவள்.
‘அப்போதெல்லாம் குன்றாத உறுதி, பெற்ற தாய் மீதுள்ள பாசத்தில் குலைந்து விட்டதா- அல்லது நெருக்கடியான அந்த தருணத்திலிருந்து தன்னை மீட்க வேண்டு மென்கிற அவளுடைய சரணாகதியை நான்தான் தவறாகப் புரிந்துகொண்டு, பயன்படுத்த முனைந்து விட்டேனா?’
இது ஒரு பெரும் கேள்விக் குறியாக அந்த டி.டி.இ.யின் மனக் கண்முன் எழுந்து நின்றது.
‘சீ!…’ என்று சிலிர்த்துக் கொண்டு எழுந்திருந்தான் அவன்.
‘வாய்த்த தருணத்தை விட்டுவிடுவதா? வலுவில் தேடி வந்த இன்பத்தை அள்ளிச் சுவைப்பதை விட்டு, அர்த்த ராத்திரியில் ஏன் இந்த அனாவசியமான ஆராய்ச்சியும் மனப் போராட்டமும்?’
அவன் மெல்ல எழுந்து அவள் அருகில்வந்து நின்றான். தன்னை மறந்து அவள் தூங்கிக் கொண்டிருந்தாள். அழகே துயில் கொள்வது போலிருந்தது அந்தக் காட்சி. வண்டி ஏதோ ஒரு ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருந்தது.
அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
சுழலும் மின்விசிறியின் காற்றசைவில், கலைந்து போன அவளது முன் கேச மயிர்கள் நிலை கொள்ளாமல் நெற்றியில் வந்து விழுந்து விளையாடிக் கொண்டிருந்தன. பார்க்கப் பார்க்க அவனுள் ஒரு வித ஆவேச வெறி மூண்டது.
‘என்னை வாரி அணைத்துக் கொள்ளேன்’ – என்று அந்தப் பொன்னுடல் அவனிடம் கெஞ்சித் துவள்வது போலிருந்தது. அந்த இளம் டி.டி.இ. ‘பொசுக்’கென்று விளக்கை அணைத்து விட்டான். அந்த முதல் வகுப்பு கம்ப்பார்ட்மெண்ட், இருளில் மூழ்கியது.
‘டொக்… டொக்’
பெஞ்சியின் மேல் பென்சிலால் தட்டுகிற ஓசை கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருந்தாள் அவள்.
‘சட்’டென்று மீண்டுமொரு முறை கண்களைக் கசக்கிக் கொண்டு சுற்று முற்றும் பார்த்தாள். அவளால் வியப்பை அடக்கவே முடியவில்லை.
பொழுது நன்றாக விடிந்து, உதயசூரியனின் காலைக் கதிர்கள், அந்தக் கம்ப்பார்ட்மெண்டுக்குள் பாய்ந்து, ஒளி யைப் பரப்பிக் கொண்டிருந்தன. அத்துடன் முற்றிலும் அந்நியரான ஒரு புது டி.டி.இ. அவள் முன்னால் நின்று கொண்டிருந்தார். அவள் ஒரு கணம் பதறிப் போனாள். ஆனால் அவரோ-
“எக்ஸ்க்யூஸ் மி மாடம்.. ஐ ஆம் ஸோ ஸாரி. காற்றிலே டிக்கெட் பறந்து கீழே விழுந்திருக்கு” என்று கீழே இருந்து எடுத்த ரசீதைச் சரி பார்த்துக் கையெழுத்திட்டு அவளிடம் கொடுத்துவிட்டு இறங்கிச் சென்றார்.
இயந்திரம் போல், கையில் அந்த டி.டி இ. கொடுத்து விட்டுச் சென்ற ரசீதைப் பிரித்துப் ‘பரபர’வென்று படித்தாள். “சென்னை சென்ட்ரல்- டூ- குத்தி”– அவள் போக வேண்டிய ஊர் அதுதான்.
முதல் வகுப்புக்குப் பணம் கட்டியிருந்தது. எத்தனை பெரிய தொகை!
அவள் மீண்டும் ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டவள் போல் மடித்த அந்த ரசீதை மீண்டும் பிரித்துப் படித்தாள்.
வி.சரோஜா – என்று அழகாக அதில் அவள் பெயரும் அந்த இடத்துக்கு நேரே எழுதப்பட்டிருந்தது.
வண்டி சரியாக குறித்த நேரத்திற்கு 7-20-க்கு ‘குத்தி’ ஸ்டேஷனில் வந்து நின்றது.
தோல் பெட்டியுடன் மூன்று மாதங்களுக்கு முன்பு ஓர் இரவில் ஏறிய அதே பிளாட்பாரத்தில் இன்று ஓர் இனிய காலை நேரத்தில் அதே தோல் பெட்டியுடன் அவள் இறங்கி நின்றாள். இந்த இடைக்காலத்திற்குள்தான் எத்தனை பொருள் இழப்பு; ஏமாற்றம், படிப்பினை!
ஆனால் அத்தனையையும் விட, அரிதாகச் சந்திக்க நேர்ந்த ஒரு மனித ரத்தினத்தை உறக்கத்தில் கை நழுவ விட்டுவிட்ட சோதனை; அந்த மனித தெய்வத்திற்கு நன்றிக்கடன் கூடச் செலுத்தக் கொடுத்து வைக்காமற் போன வேதனைதான் அவள் உள்ளத்தைத் தகர்த்துக் கொண்டிருந்தது.
பிளாட்பாரத்தில் குறுக்கும் நெடுக்கமாய் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் மனிதக் கூட்டங்களின் மத்தி வில் அர்த்தமற்று அவளது விழிகள் அவனைத் துழாயின
‘அந்த மாணிக்கத்தை இனி, நான் எங்கு காண் பேன்’-சோர்ந்து போன அவள், டிக்கெட்டைக் ‘கேட்’ டில் கொடுத்துவிட்டு, தன்னுடைய கிராமத்தை நோக்கிச் செல்லும் கப்பிரஸ்தாவில் இறங்கி நடந்தாள்.
வழி முழுவதும் அவள் உள்ளத்தில் ஒரே கேள்வி-
ஆரம்பத்திலிருந்து என்னிடம் ஓர் துர் எண்ணத்துட னேயே பழகத் தொடங்கியவர், பின்னர் எப்படி என்னைத் தீண்டக்கூட மனம் இல்லாதவராக-எனக்காக டிக் கெட்டையும் வாங்கி வைத்துவிட்டு, சொல்லாமல் செல்ல வேண்டும்?
நீண்ட நேர சிந்தனைக்குப் பிறகு -அந்த டி-டி.இ.யின் உள்ளம் – அவரது மாறுதலுக்குக் காரணம்-இப்படித் தான் இருக்க வேண்டுமென்று அவளுக்குப் புரிந்தது.
ஒரு நிர்ப்பந்தத்திலிருந்து மீள அல்லது விடுபட வேறு வழியற்று மனமொடிந்த நிலையில் தன்னை அர்ப் பணித்த எனது ‘சரணாகதி’யைப் பயன்படுத்திக்கொள்ள அவர் விரும்பவில்லையோ? ஏதோ ஒரு பலவீனமான மனோ நிலையில் – அவர் செய்யத் துணிந்தவற்றை- நான் கூறிய வாழ்க்கைக் கதைதான் என்னுடைய தரத்தை விளக்கி, அவரது எண்ணத்தை மாற்றி விட்டதோ?-
அவளுடைய கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டது.
ஆம்! இத்தனை காலம் அவள் தன்னுள் போற்றிக் காத்துவரும் ‘அது’ – பெண்மைக்கோர் பொக்கிஷமான அந்த ‘அது’ எத்தனை மகத்தானது, ‘சக்தி வாய்ந்தது சத்தியமானது’ என்பதை எண்ணியபடி பெருமிதத்துடனேயே தன் அன்னையைக் காண விரைந்தாள்.
– ஆனந்த விகடன்.
– மலருக்கு மது ஊட்டிய வண்டு, முதற் பதிப்பு: டிசம்பர் 1992, காயத்திரி பப்ளிகேஷன், சென்னை.