ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: April 26, 2025
பார்வையிட்டோர்: 12,979 
 
 

அன்று ஞாயிற்றுக் கிழமை மதியம். நிவின் அம்மா வீட்டை ஒதுங்க வைத்து கொண்டிருந்தாள்.  நிவின் அவனது அறையில் படுத்துக் கொண்டு போனை பார்த்துக் கொண்டிருந்தான். ஹே நிவின் இங்க வந்து கொஞ்சம் எனக்கு உதவி பண்ணு, மேல இருக்க அட்டைப்பெட்டியை என்னால் தூக்க முடியவில்லை. வந்து அதை எடுத்து கொடு. நான் தேவையில்லாத பொருட்களை தூக்கி போடணும் என அழைக்க, அவனும் வருகிறான்.  ஒருநாள் தான் வீட்டில் இருக்கிறேன் அது உங்களுக்கு பிடிக்கலையா?  மா  என சலித்துக் கொண்டே வருகிறான். 

எடுத்து கொடுத்து விட்டான். ஒவ்வொரு பெட்டியாய் என்ன என்ன இருக்கிறது என அவனின் அம்மா பார்த்துக் கொண்டு இருக்கிறாள். அதில் ஒரு பெட்டியை திறக்கிறாள். அதில் சாக்லேட் பேப்பர் ஐஸ் குச்சி என நிறைய பொருட்கள் இருந்தது. டேய் நிவின் என்னடா இது என அவனிடம் காட்ட அதை பார்க்கிறான். அந்த பெட்டியை தூக்கிக் கொண்டு அவனின் அறைக்குச் செல்ல, ஒழுங்கா அந்த குப்பைய எல்லாம் தூக்கி போடு இடத்தை அடைச்சுட்டு இருக்கு என்கிறாள். 

அதில் இருந்த சாக்லேட் பேப்பரை எடுக்கிறான். அவன் காலேஜ் படிக்கும் பொழுது அவன் விரும்பிய பெண் மகதிக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தான். அதை சாப்பிட்டுவிட்டு அவள் தூக்கி போட்ட பேப்பரை எடுத்து வைத்து இருந்தான். காலேஜில் நடைபெற்ற விழாவில் நடனம் ஆடி முடித்ததும் கீழே இறங்கி முதலில் நிவின் வாங்கி வைத்திருந்த ஜூஸை குடித்தாள். பிறகு ரொம்ப வலிக்குது இது என அவள் கையில் போட்டு இருந்த பேண்டை கழட்டி இதப்புடி என அவனிடம் கொடுத்தாள், அதை அவனே வைத்துக்கொண்டான். 

கேன்டீனில் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தாள். இவனும் அதேசமயம் அங்கு வர அவனுக்கும் ஒரு ஸ்பூன் கொடுத்தாள், அந்த ஐஸ்குச்சி அதில் இருந்தது. அவளுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடியபோது பயன்படுத்திய பொருட்கள் அனைத்தும் அதில் இருந்தது. கண்ணில் ஏதோ விழுந்து விட்டது என கண்ணை கசக்கி கொண்டு வந்தாள் அவனிடம். முடி ஒன்று கண்ணுக்குள் விழுந்து இருந்தது கையை வைத்து எடுத்தான்.  தேங்க்ஸ் டா என கூறிவிட்டு சென்றாள், அந்த முடியை ஒரு பேப்பரில் மடித்து வைத்துகொண்டான், அதுவும் அந்த பெட்டியில் இருந்தது. 

பொங்கல் விழா காலேஜில் நடைபெற்றது அதில் அவள் சேலை கட்டிக்கொண்டு வந்தாள். அவளின் கொலுசில் சேலை மாட்டிக்கொண்டது.  அந்த நூலை பத்திரமாக எடுத்து வைத்து கொண்டான். அவளுக்காக வாங்கி வைத்த மோதிரமும் அதில் இருந்தது. அதை கொடுக்க செல்லும்போது என் காதலை அர்ஜுன் ஏற்றுக் கொள்ளவில்லை என அவனின் மீது சாய்ந்து அழுதாள். அவளை தேற்றி வீட்டில் விட்டுவிட்டு வந்தான். அந்த சட்டையில் அவள் அழும்போது மையின் கரை  ஒட்டிக்கொண்டது, அதையும் வைத்து இருக்கிறான். இவ்வாறு  நிறைய பொருட்கள் இருக்கிறது அந்த பெட்டிக்குள். அனைத்தையும் மீண்டும் பெட்டியில் போட்டு மூடி தனது அறையில்  வைத்துக்கொண்டான்.

அவள் இவனை விரும்பாவிட்டால் என்ன, இவன் விரும்பிய ஒரு பெண் அவள் மட்டும் தான். அவளின் நினைவாக இவன் சேர்த்து வைத்திருக்கும் ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *